Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை தலைமைத் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

Posted: 08 Nov 2013 11:20 AM PST

சென்னை

சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் எச்சரித்துள்ளார்.

விளக்கம்

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

இடைத் தேர்தல் நடைபெறும் ஏற்காடு இடம்பெறும் சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு முகமை நிறுவனங்கள் மூலம் பொருட்கள் வழங்கப்படுவது அல்லது விற்பனை செய்யப்படுவது பற்றிய தேர்தல் நடத்தை விதி குறித்து பல்வேறு அமைப்பில் இருந்து விளக்கம் கோரப்பட்டது.

அரசு விளம்பரத்துக்கு தடை

ஒட்டுமொத்த மாவட்டத்துக்கும் பொதுவாக செயல்படுத்தப்படும் தேர்தல் நடத்தை விதியின்படி, அரசு பணச் செலவில் எந்தவொரு கட்சிக்கும், வேட்பாளருக்கும் தேர்தல் விளம்பரம் செய்யக் கூடாது. எனவே சேலம் மாவட்டம் முழுவதுக்குமே அரசு விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுபோல் அரசு மற்றும் அரசு முகமையின் மூலம் பொருட்கள் வழங்குவது அல்லது விற்பனை செய்வது, அந்த பொருட்களில் கட்சியின் சின்னத்தை பொறித்து வழங்குவது போன்றவற்றின் மூலம் குறிப்பிட்ட கட்சியை விளம்பரப்படுத்துவதும் இந்த விதியின் கீழ் வருகிறது.

கடும் நடவடிக்கை

இதுதொடர்பாக அரசின் அனைத்து செயலாளர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து கடந்த மாதம் அக்டோபர் 25–ந் தேதி தலைமைத் தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். அதில், தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும்வரை சேலம் மாவட்டம் முழுவதும் அரசு அல்லது அரசு முகமைகளின் மூலம் பொருட்கள் விற்பனை மற்றும் விநியோகம் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் எடுக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

category:

News Group Category:

சார்பதிவாளர் அலுவலகங்களை கேமரா மூலம் அதிகாரிகள் கண்காணிக்கும் திட்டம் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

Posted: 08 Nov 2013 11:02 AM PST

சென்னை,

ஆவணப் பதிவு மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சார்பதிவாளர் அலுவலக நடவடிக்கைகளை கேமரா மூலம் அதிகாரிகள் கண்காணிக்கும் திட்டத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இனி சொந்தக் கட்டிடம்

நில ஆவணங்கள் பதிவு செய்தல், வில்லங்கச் சான்று வழங்குதல், திருமணப் பதிவு போன்ற பணிகளுக்காக சார்பதிவாளர் அலுவலகங்களை பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் நாடி வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சார்பதிவாளர் அலுவலகங்கள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருவதோடு, பதிவு ஆவணங்களை பராமரிப்பதற்கும், பணியாளர்கள் பணியாற்றுவதற்கு போதிய இடவசதியின்றியும், சிறிய இடங்களுக்கு அதிக அளவில் வாடகை தரவேண்டிய நிலையையும் கருத்தில் கொண்டு, வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டித்தரப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

எந்தெந்த அலுவலகங்கள்?

அதன்படி, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் மற்றும் புதுச்சத்திரம்; வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, வாலாஜா, ஆற்காடு மற்றும் கலவை; திருவண்ணாமலை மாவட்டம் தூசி மற்றும் கீழ்கொடுங்காலூர்; காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர், பெரிய காஞ்சீபுரம் (இணை சார் பதிவாளர்–II அலுவலகம்); தூத்துக்குடி மாவட்டம் புதூர் மற்றும் கடம்பூர்; ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி; கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி; கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை; திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை; ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி; கடலூர் மாவட்டம் கம்மாபுரம்; புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர்; திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஆகிய 20 இடங்களில் ரூ.9 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்கள்; சென்னையில் ரூ.49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பதிவுத்துறை பயிற்சி நிலையத்திற்கு தங்கும் விடுதி, என மொத்தம் ரூ.10 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டிலான புதிய கட்டிடங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

சார்பதிவாளருடன் இணையதளம் மூலம் பொதுமக்கள் ஆவணப் பதிவிற்கு முன்பதிவு செய்து கொள்ளும் வகையில் இணையவழி பதிவு நேர ஒதுக்கீடு செய்யும் வசதியை தலைமைச் செயலகத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதன்மூலம் பதிவு நடைமுறை செம்மைப்படுத்தப்படுவதுடன், பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் காத்திருக்கும் நேரமும் வெகுவாக குறையும்.

கண்காணிப்பு கேமராக்கள்

பொதுமக்களுக்கு விரைவு மற்றும் வெளிப்படையான சேவைகள் அளித்திடவும், சார்பதிவாளர் அலுவலகங்களில் தரகர்களின் நடமாட்டத்தினை தடுத்திடவும், மோசடி பதிவு மற்றும் ஆள்மாறாட்டத்தினை தடுத்திடவும், தமிழ்நாட்டில் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இணைய நெறிமுறை புகைப்படக் கருவிகள் (இண்டர்நெட் புரோட்டாகால் கேமரா) நிறுவுதல் மற்றும் சார்பதிவகங்களில் அளிக்கப்படும் சேவைகளை 9 மண்டல அலுவலகங்களில் இருந்தும், பதிவுத்துறைத் தலைவர் அலுவலகத்தில் இருந்தும் தொலைக் கண்காணிப்பு (ரிமோட் மானிட்டரிங்) செய்யும் திட்டம் 3.5.12 அன்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்திற்காக வன், மென்பொருட்கள் வாங்குதல் மற்றும் உரிய சாதனங்கள் நிறுவுதல் ஆகியவற்றிற்கான முதலீட்டு செலவினமாக ரூ.3 கோடியே 46 லட்சத்து 92 ஆயிரத்து 705 தொகையும், குறுந்தகடுகள் கொள்முதல் மற்றும் இத்திட்டப் பணியினை மேற்கொள்வதற்காக பணியமர்த்தப்படும் நபர்களுக்கான சம்பளத்தொகை உள்ளிட்ட தொடர் செலவினமாக 9 கோடியே 30 லட்சத்து 90 ஆயிரத்து 280 ரூபாயும் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சி.டி.க்களிலும் பதிவு

மேலும், இத்திட்டத்தை சுயசார்பு உடையதாகவும், வருவாய் ஈட்டுவதாகவும் அமைத்திட ஆவணப்பதிவு மற்றும் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட ஒளிப்பதிவு குறுந்தகடுகளை சம்பந்தப்பட்ட ஆவணதாரர்களுக்கு ரூ.50 வழங்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் சார்பதிவகங்களில் நடைபெறும் ஆவணப்பதிவு மற்றும் திருமணப் பதிவுகளை ஒளி மற்றும் ஒலிப்பதிவு செய்யப்படுகிறது.

அவ்வாறு பதிவு செய்யப்படும் ஒளிப்பதிவுகள், ஆவணப் பதிவு மற்றும் திருமணப்பதிவிற்கு நல்ல அத்தாட்சியாகும். ஆவணப்பதிவு, திருமணப்பதிவுகளின்போது எடுக்கப்படும் ஒளிப்பதிவுகள் துறைக்கு மட்டுமின்றி சம்பந்தப்பட்டவர்களுக்கும் நல்ல சான்றாக அமையும்.

கண்காணிப்புத் திட்டம்

இதுதவிர, சார்பதிவாளர் அலுவலகங்களை மண்டல அலுவலகங்களிலிருந்தும் துறைத் தலைமை அலுவலகத்திலிருந்தும் தொலைக் கண்காணிப்பு செய்யப்படும். பதிவுகள் ஒளிப்பதிவு செய்யப்படுவதால் எதிர்காலத்தில் ஆள்மாறாட்டம், போலி ஆவணப்பதிவு ஆகியவை குறித்த விசாரணைக்கு சான்றாக அமையும். மேற்கண்ட சிறப்பம்சங்களைக் கொண்ட சுயசார்பு உடைய இந்தத் திட்டத்தினால் பொது மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.

பதிவுத்துறையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் இணைய நெறிமுறை புகைப்படக்கருவிகள் நிறுவிடும் திட்டத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

image: 

category:

News Group Category:

கர்நாடக அரசு, காவிரியில் 26 டி.எம்.சி. அளவுக்கு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் காவிரி கண்காணிப்பு குழு உத்தரவு

Posted: 08 Nov 2013 10:57 AM PST

புதுடெல்லி,

காவிரி நீரை தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்கள் பகிர்ந்து கொள்வது தொடர்பான இறுதித் தீர்ப்பை காவிரி நடுவர் மன்றம் 2007–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்டது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

இந்த தீர்ப்பை அமல்படுத்த ஏதுவாக இதனை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, கோர்ட்டு உத்தரவின்பேரில் தீர்ப்பு மத்திய அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை வழங்கி 6 ஆண்டுகள் ஆகியும், அந்த தீர்ப்பை அமல்படுத்த காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவும் அமைக்கப்படாததால் அவற்றை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

கண்காணிப்பு குழு

இவற்றை மத்திய அரசு அமைக்க காலதாமதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால், இடைக்கால ஏற்பாடாக காவிரி கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்த காவிரி கண்காணிப்புக் குழுவின் கூட்டம் ஏற்கனவே பலமுறை கூடி விவாதித்துள்ளது.

நேற்று மீண்டும் டெல்லியில் காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. மத்திய நீர்வளத் துறை செயலாளரும், காவிரி கண்காணிப்புக் குழு தலைவருமான அலோக் ராவத் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு கூடிய இந்தக் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் அரசு தலைமைச் செயலாளர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

26 டி.எம்.சி. வேண்டும்

தமிழகத்தின் சார்பில் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுப்பணித்துறை செயலாளர் சாய்குமார், காவிரி தொழில்நுட்பப் பிரிவு ஆலோசகர் சுப்பிரமணியன் ஆகியோரும் கர்நாடகம் சார்பில் தலைமைச் செயலாளர் கவுஷிக் முகர்ஜி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் இந்தக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தமிழகத்தின் சார்பில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புப்படி இந்த ஆண்டு நவம்பர் மாதம் 15 டி.எம்.சி. தண்ணீரும், டிசம்பர் மாதம் 8 டி.எம்.சி. தண்ணீரும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3 டி.எம்.சி. தண்ணீரும் என மொத்தம் 26 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலாண்மை வாரியம்

இந்த நதிநீர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று 8 மாதங்களுக்கு முன்பு காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. எனவே காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை மேலும் காலதாமதம் இன்றி உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

அவற்றை அமைக்கும்வரை காவிரி நீர்பிடிப்பு பகுதியில் எந்த ஒரு நீர் மின்திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழகம் எதிர்ப்பு

கர்நாடக அரசின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நீர் மின்திட்டம் அமைப்பது பற்றி நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதுவரை நாங்கள் 214 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு வழங்கியிருக்கிறோம். இது நடுவர் மன்ற தீர்ப்பில் கூறப்பட்ட அளவைவிட அதிகமாகும் என்று தெரிவித்தார்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அதிகாரிகள், மழைக்காலத்தில் கர்நாடக அணைகள் நிரம்பி உபரியாக திறக்கப்படும் தண்ணீரை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. அந்தந்த மாதத்துக்குரிய தண்ணீரை அந்த மாதத்திலேயே வழங்க வேண்டும் என்றனர்.

தண்ணீர் திறக்க உத்தரவு

தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று கர்நாடக அரசு காவிரியில் ஜனவரி மாதம் வரை 26 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி கண்காணிப்புக் குழுவின் தலைவர் அலோக் ராவத் உத்தரவிட்டார்.

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

ஆனந்தின் ஆதிக்கம் தொடருமா? பட்டத்தை தக்க வைக்க கார்ல்சென்னுடன் பலப்பரீட்சை

Posted: 08 Nov 2013 10:34 AM PST

சென்னை,

உலக சதுரங்க (செஸ்) போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. இதில் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொள்ள இந்திய வீரர் ஆனந்த், நார்வே வீரர் மாக்னஸ் கார்ல்சென்னுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

உலக சதுரங்க போட்டி

உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக சதுரங்க போட்டி சென்னையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. 12 சுற்றுகளை கொண்ட இந்த ஆட்டம் 26–ந் தேதி வரை நடக்கிறது. இருவரும் சமபுள்ளிகள் வகித்தால் சாம்பியனை நிர்ணயிக்க டைபிரேக்கர் ஆட்டம் 28–ந் தேதி நடைபெறும். 11, 14, 17, 20, 23, 25, 27 ஆகிய தேதிகள் ஓய்வு நாட்களாகும்.

இந்த போட்டியில், மூளையை மூலதனமாக கொண்ட சதுரங்க ஆட்டம் இந்தியாவில் மூலை முடுக்கெல்லாம் பரவ முக்கிய காரணியாக விளங்கும் இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டரும், 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று சதுரங்க சக்ரவர்த்தியாக விளங்கும் விசுவநாதன் ஆனந்தும், உலகின் நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்சென்னும் (நார்வே) மோதுகிறார்கள். போட்டிகள் தினசரி பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகும். இன்று நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில் கார்ல்சென் வெள்ளை நிற காயுடன் ஆட்டத்தை தொடங்குகிறார். ஆனந்த் கறுப்பு காயுடன் விளையாடுவார்.

வயதில் குறைந்த கார்ல்சென்

2000–ம் ஆண்டில் முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை உச்சி முகர்ந்த ஆனந்த் 2007–ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 முறை (2007, 2008, 2010, 2012) உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து வருகிறார். 43 வயதான தமிழகத்தை சேர்ந்த ஆனந்துக்கு, 22 வயதான கார்ல்சென் சவாலாக விளங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனந்தை விட 21 வயதுகள் குறைந்தவரான கார்ல்சென் 2011–ம் ஆண்டு முதல் உலக தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார். அவர் வியக்கும் வகையில் 2,870 இலோ ரேட்டிங் புள்ளியை பெற்று சர்வதேச சதுரங்க அரங்கில் இமயத்தை எட்டி இருக்கிறார். ஆனந்த் 2,775 இலோ ரேட்டிங் புள்ளியுடன் 8–வது இடத்தில் உள்ளார்.

6 வயதில் தனது தாயார் சுசீலாவிடம் செஸ் ஆட்டத்தை கற்க ஆரம்பித்த ஆனந்த், பிலிப்பைன்சில் தனது ஆட்ட திறனுக்கு பட்டை தீட்டினார். 15 வயதில் சர்வதேச மாஸ்டர் பட்டத்தையும், 16 வயதில் இந்திய செஸ் சாம்பியன் பட்டத்தையும் 17 வயதில் உலக ஜூனியர் சாம்பியன் பட்டத்தையும், 18 வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தையும், 19 வயதில் பத்மபூஷண் விருதை பெற்ற முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையையும் பெற்றவர் ஆனந்த். 1992–ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதை முதல் வீரராக பெற்ற பெருமைக்குரியவர். 6 முறை சதுரங்க ஆஸ்கார் விருதையும் பெற்றுள்ளார். நாக்–அவுட், ரவுண்ட் ராபின், நேருக்கு நேர் ஆகிய 3 வகையிலான உலக சாம்பியன் போட்டியிலும் வென்ற முதல் வீரர் ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது. உலக சதுரங்க அரங்கில் ரஷியாவின் ஆதிக்கத்துக்கு முடிவுரை எழுதிய பெருமை ஆனந்துக்கும் உண்டு.

25 ஆண்டுகளுக்கு மேல்...

கிரிக்கெட் ஆட்டத்தில் தெண்டுல்கர் 24 ஆண்டுகளாக கொடிகட்டி பறப்பது போல், ஆனந்தும் சர்வதேச சதுரங்க அரங்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வருகிறார். இதுவரை 2,695 சர்வதேச ஆட்டங்களில் விளையாடி இருக்கும் ஆனந்தின் வெற்றி சதவீதம் 61.9 ஆகும்.

ஆனந்தை எதிர்கொள்ளும் கார்ல்சென் வயதில் சிறியவர் என்றாலும் ஆட்டத்தில் அவரது வளர்ச்சி அபரீதமானது. தனது 5 வயதில் தந்தை ஹென்ரிக் கார்ல்சென்னின் கைப்பிடித்து சதுரங்க ஆட்டத்தை ஆரம்பித்த மாக்னஸ் கார்ல்சென் 13 வயதில் சர்வதேச மாஸ்டர் பட்டத்தையும், 14 வயதில் மிக குறைந்த வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் வீரர் என்ற பெருமையும் தனக்கு சொந்தமாக்கினார். 3 ஆண்டுகள் சதுரங்க ஆஸ்கார் விருதையும் பெற்றுள்ளார்.

பலத்த எதிர்பார்ப்பு

2005–ம் ஆண்டில் உலக சதுரங்க சாம்பியன் போட்டியின் தகுதி சுற்றுக்கு தேர்வான மிக இளம் வயது வீரர் ஆவார். ஆனால் அவர் தகுதி சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினார். 2012–ம் ஆண்டில் உலக தகுதி சுற்று போட்டிக்கு தேர்வானாலும், ஆட்ட விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து போட்டியில் இருந்து விலகினார். இந்த ஆண்டில் நடந்த உலக தகுதி சுற்றில் ரஷிய வீரர் விளாடிமிர் கிராம்னிக்கை டைபிரேக்கரில் வீழ்த்தி கார்ல்சென் இந்த உலக போட்டிக்கு தகுதி தேடினார்

1972–ம் ஆண்டில் பாபி பிஸ்செர்(அமெரிக்கா)–போரிஸ் ஸ்பாஸ்கி (ரஷியா) இடையே நடந்த ஆட்டத்துக்கு நிலவிய எதிர்பார்ப்பை விட இந்த உலக கோப்பை போட்டியின் முடிவை காண ரசிகர்கள் பலத்த ஆவலுடன் காத்து கிடக்கின்றனர். செஸ் ஆட்டத்தில் இருவர் நேருக்கு நேர் மோதினாலும், மோதும் வீரர்களுக்கு பின்னால் பக்கபலமாக ஒரு அணியே செயல்படும் என்பது அறியப்படாத உண்மையாகும். அதனை இந்த போட்டியில் ஆனந்த் பகிரங்கமாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் தனக்கு ஆலோசனையில் உதவிகரமாக இருக்கும் அணி குறித்து வாய் திறக்க கார்ல்சென் மறுத்துவிட்டார். கார்ல்சென்னை குழப்பவே ஆனந்த் தனக்கு உதவும் (இரண்டாம் கைகள்) அணியை ஆனந்த் அறிவித்து இருக்கலாம் என்றும் சதுரங்க ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

ஆனந்த் அதிக வெற்றி

ஆனந்தும், கார்ல்சென்னும் இதுவரை 62 ஆட்டங்களில் மோதி இருக்கின்றனர். இதில் ஆனந்த் வெள்ளை நிற காய்களுடன் 7 ஆட்டங்களிலும், கறுப்பு நிற காய்களுடன் 8 ஆட்டங்களிலும் வென்று இருக்கிறார். கார்ல்சென் வெள்ளை நிற காய்களுடன் 7 ஆட்டங்களிலும், கறுப்பு நிற காய்களுடன் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று உள்ளார். 36 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. ரய்லோபஸ் முறையிலான ஆட்டத்தில் ஆனந்த ஒரு முறை கூட கார்ல்சென்னிடம் தோல்வி கண்டதில்லை. கார்ல்சென் இதுவரை 1523 சர்வதேச ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார். அவரது வெற்றி விகிதம் 61.3 ஆகும்.

ஆனந்த் தாக்குதல் ஆட்டத்தில் தீவிரமாக ஈடுபடக்கூடியவர். ஆனால் கார்ல்சென் தடுப்பு ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்துபவர். எதிராளி தாக்குதலுக்காக காய் நகர்த்தும் போது செய்யும் தவறை தனக்கு சாதமாக திருப்புவதில் சாமர்த்தியமானவர் கார்ல்சென். அத்துடன் ஆட்டம் டிராவில் முடியும் என்று கருதினாலும் ஆட்டத்தை இழுத்தடித்து எதிரியை பலவீனப்படுத்த முயற்சி செய்வதில் கைதேர்ந்தவர். கறுப்பு நிற காயிலும் அதிரடி கைவண்ணத்தை காட்டும் திறமை படைத்தவர் ஆனந்த்.

இந்தியாவில் முதல்முறை

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தான் பெரும்பாலும் உலக சதுரங்க போட்டி நடைபெறும். உலக சதுரங்க போட்டி முதல் முறையாக இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் நடக்கிறது. இந்த போட்டியை நடத்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா காட்டிய ஆர்வத்தை பார்த்த உலக சதுரங்க கூட்டமைப்பு தனது வழக்கமான ஏல முறையில் போட்டியை நடத்த உரிமம் வழங்கும் நடைமுறையை கைவிட்டு நிபந்தனையின்றி தமிழகத்துக்கு போட்டியை நடத்தும் வாய்ப்பை அளித்தது குறிப்பிடத்தக்கது.

சதுரங்க பிரியர்களின் ஜூரத்தை அதிகப்படுத்தி இருக்கும் இந்த போட்டியில் முதல் 40 காய் நகர்த்தல்களுக்கு இரு வீரருக்கும் தலா 2 மணி நேரம் அளிக்கப்படும். அடுத்த 20 காய் நகர்த்தல்களுக்கு ஒரு மணி நேரம் வழங்கப்படும். இதனை அடுத்து 15 நிமிடங்கள் அளிக்கப்படும். 61–வது காய் நகர்த்தலில் இருந்து இரு வீரர்களுக்கும் காய் நகர்த்தலின் போது 30 வினாடி கூடுதலாக கிடைக்கும். இந்த வகையில் ஒரு சுற்று ஆட்டம் 7 மணி நேரம் கூட நீடிக்கும். இந்த தொடரில் முதலில் 6.5 புள்ளியை பெறுபவர் உலக மகுடத்தை கைப்பற்றுவார்.

ரூ.14 கோடி பரிசு

சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.14 கோடி பரிசுத்தொகையில் 60 சதவீதமும் (ரூ.8.40 கோடி), தோல்வி அடைபவருக்கு 40 சதவீதமும் (ரூ.5.60 கோடி) பரிசாக வழங்கப்படும். ஆட்டம் டைபிரேக்கருக்கு சென்றால் வெற்றி பெறுபவருக்கு 55 சதவீதம் பரிசாக கிடைக்கும். டை பிரேக்கர் ஆட்ட முறை குறித்து பிடே நடுவர்கள் முடிவு செய்வார்கள்.

அனுபவத்துக்கும், இளமைக்கும் இடையிலான போட்டியாக கருதப்படும் இந்த போட்டியில் சதுரங்கத்தில் முடிசூடா மன்னனாக விளங்கும் ஆனந்தின் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டை போட கார்ல்சென் முயற்சிப்பார் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது எனலாம்.

சொந்த மண்ணில் சாதிப்பாரா?

இந்தியாவின் சதுரங்க புலி என்று வர்ணிக்கப்படும் விசுவநாதன் ஆனந்த் சென்னையை சேர்ந்தவர். ஸ்பெயினில் அதிக நாட்கள் தங்கும் ஆனந்த் இதுவரை வென்றுள்ள 5 உலக சாம்பியன் பட்டத்தையும் அன்னிய மண்ணில் தான் வென்று இருக்கிறார். சொந்த ஊரில் அவர் பெரிய போட்டியில் வெற்றி வாகை சூடியதில்லை. சொந்த மண்ணில் முதல் முறையாக உலக போட்டியை எதிர்கொள்ளும் ஆனந்த் வெற்றி பெற்று சர்வதேச சதுரங்க அரங்கில் இந்தியாவின் பெருமையை தொடர்ந்து நிலைநாட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உலக சாம்பியன் போட்டியை ஆனந்த் வென்றால், 6 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று முதலிடத்தில் இருக்கும் இமான்வேல் லஸ்கர் (ஜெர்மனி), கேரி காஸ்பரோவ் (ரஷியா) அனடோலி கார்போவ் (ரஷியா) ஆகியோரின் சாதனையை சமன் செய்வார்.

category:

கொல்கத்தா டெஸ்ட் 3–வது நாளிலேயே முடிந்தது: இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி ஷமியின் மிரட்டலில் பணிந்தது வெஸ்ட் இண்டீஸ்

Posted: 08 Nov 2013 10:30 AM PST

கொல்கத்தா,

கொல்கத்தாவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 3–வது நாளிலேயே இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அஸ்வின் சதம்

இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் கடந்த 6–ந்தேதி தொடங்கியது. சச்சின் தெண்டுல்கரின் 199–வது டெஸ்ட் என்பதால் இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 234 ரன்னில் ஆல்–அவுட் ஆனது. தொடர்ந்த ஆடிய இந்திய அணி தனது முதலாவது இன்னிங்சில் 2–வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 354 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் ஷர்மா 127 ரன்களுடனும், அஸ்வின் 92 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3–வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து பேட் செய்த தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் தனது 2–வது சதத்தை பூர்த்தி செய்தார்.

ரோகித் 177 ரன்

அணியின் ஸ்கோர் 436 ரன்களை எட்டிய போது, ரோகித் ஷர்மா 177 ரன்களில் (301 பந்து, 23 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். இன்னும் 11 ரன்கள் எடுத்திருந்தால் அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் விளாசிய இந்தியர் (ஷிகர் தவான் 187 ரன்னுடன் முதலிடம்) என்ற பெருமையை பெற்றிருப்பார்.

இந்திய அணிக்கு புத்துயிர் தந்த ரோகித்–அஸ்வின் ஜோடி 7–வது விக்கெட்டுக்கு 280 ரன்கள் சேகரித்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும். சிறிது நேரத்தில் அஸ்வினும் 124 ரன்களில் (210 பந்து, 10 பவுண்டரி) வெளியேறினார். முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 453 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. இது வெஸ்ட் இண்டீசின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 219 ரன்கள் அதிகமாகும்.

மிரட்டிய ஷமி

219 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி கெய்லின் விக்கெட்டை (33 ரன், 35 பந்து, 7 பவுண்டரி) சீக்கிரம் இழந்தது. இதைத் தொடர்ந்து கீரன் பவெலும், டேரன் பிராவோவும் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார்கள். ஒரு கட்டத்தில் அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்திருந்ததை பார்த்த போது, எப்படியும் 4–வது நாளில் தான் முடிவு தெரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அகமதுவும், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும் ஆட்டத்தின் போக்கை தலைகீழாக மாற்றி விட்டனர். கீரன் பெவல் (36 ரன், 83 பந்து) அஸ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

இந்தியா வெற்றி

இதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. துல்லியமாக ரிவர்ஸ்ஸ்விங் வீசி மிரட்டிய முகமது ஷமி, அபாயகரமான பேட்ஸ்மேன் சாமுவேல்சை (4 ரன்) வந்த வேகத்தில் வெளியேற்றினார். மேலும் அவரது ஒரே ஓவரில் கேப்டன் டேரன் சேமி, ஷில்லிங்போர்டு ஆகியோருக்கு ஸ்டம்பு தகர்ந்தது.

மூத்த வீரர் சந்தர்பால் (31 ரன், நாட்–அவுட்) தாக்குப்பிடித்த போதிலும் அவருக்கு சக வீரர்களிடம் இருந்து சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2–வது இன்னிங்சில் 168 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய தரப்பில் புதுமுக பவுலர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். முன்னதாக முதலாவது இன்னிங்சிலும் ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ரோகித் ஷர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தெண்டுல்கருக்கு நினைவுப்பரிசு

டெஸ்டில் இந்திய அணி தொடர்ச்சியாக பதிவு செய்த 5–வது வெற்றி இதுவாகும். கடந்த பிப்ரவரி மாதத்தில் ஆஸ்திரேலியாவுடன் 4 டெஸ்டுகளில் வெற்றி கண்டிருந்தது. அதே சமயம் தொடர்ச்சியாக 6 டெஸ்டில் வெற்றி பெற்றிருந்த (நியூசிலாந்து, வங்காளதேசம், ஜிம்பாப்வேயுடன் தலா 2 டெஸ்டில் வெற்றி) வெஸ்ட் இண்டீசின் ராஜநடைக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது.

ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கொல்கத்தாவில் விளையாடிய கடைசி போட்டி இது தான். அவருக்கு மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி நினைவுப்பரிசு வழங்கினார். பெங்கால் கிரிக்கெட் சங்கமும் தெண்டுல்கரை கவுரவித்தது. முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெண்டுல்கருக்கு தலைப்பாகை அணிவித்தார்.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2–வது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் வருகிற 14–ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியுடன் தெண்டுல்கர் ஓய்வு பெற இருப்பது நினைவு கூரத்தக்கது.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்

வெஸ்ட் இண்டீஸ் 234

இந்தியா

தவான் (பி) ஷில்லிங் போர்டு 23

விஜய் (ஸ்டம்பிங்) ராம்டின் (பி) ஷில்லிங்போர்டு 26

புஜாரா (சி) ராம்டின் (பி) கோட்ரெல் 17

தெண்டுல்கர் எல்.பி.டபிள்யூ. (பி) ஷில்லிங்போர்டு 10

கோலி (சி) பவெல் (பி) ஷில்லிங்போர்டு 3

ரோகித் ஷர்மா எல்.பி.டபிள்யூ (பி) பெர்மால் 177

டோனி (சி) ராம்டின்(பி) பெஸ்ட் 42

அஸ்வின் (பி) ஷில்லிங்போர்டு 124

புவனேஷ்வர் (சி) கெய்ல் (பி) ஷில்லிங்போர்டு 12

முகமது ஷமி (ஸ்டம்பிங்) ராம்டின் (பி) பெர்மால் 1

ஓஜா (நாட்–அவுட்) 2

எக்ஸ்டிரா 16

மொத்தம் (129.4 ஓவர்களில் ஆல்–அவுட்) 453

விக்கெட் வீழ்ச்சி: 1–42, 2–57, 3–79, 4–82, 5–83, 6–156, 7–436, 8–444, 9–451

பந்து வீச்சு விவரம்

டினோ பெஸ்ட் 17–0–71–1

கோட்ரெல் 18–3–72–1

ஷில்லிங்போர்டு 55–9–167–6

பெர்மால் 23.4–2–67–2

டேரன் சேமி 12–1–52–0

சாமுவேல்ஸ் 4–0–12–0

2–வது இன்னிங்ஸ்

வெஸ்ட் இண்டீஸ்

கெய்ல் (சி) கோலி (பி) புவனேஷ்வர் 33

பவெல் எல்.பி.டபிள்யூ (பி) அஸ்வின் 36

டேரன் பிராவோ (சி) ரோகித் (பி) அஸ்வின் 37

சாமுவேல்ஸ் எல்.பி.டபிள்யூ (பி) முகமது ஷமி 4

சந்தர்பால் (நாட்–அவுட்) 31

ராம்டின் (சி) விஜய் (பி) முகமது ஷமி 1

டேரன் சேமி (பி) முகமது ஷமி 8

ஷில்லிங்போர்டு (பி) முகமது ஷமி 0

பெர்மால் (ரன்–அவுட்) 0

டினோ பெஸ்ட் (சி) ஓஜா (பி) அஸ்வின் 3

கோட்ரெல் (பி) முகமது ஷமி 5

எக்ஸ்டிரா 10

மொத்தம் (54.1 ஓவர்களில் ஆல்–அவுட்) 168

விக்கெட் வீழ்ச்சி: 1–33, 2–101, 3–110, 4–120, 5–125, 6–152, 7–152, 8–152, 9–159

பந்து வீச்சு விவரம்

புவனேஷ்வர்குமார் 6–1–20–1

முகமது ஷமி 13.1–0–47–5

அஸ்வின் 19–2–46–3

பிரக்யான் ஓஜா 13–3–27–0

தெண்டுல்கர் 3–0–18–0

category:

ரஞ்சி கிரிக்கெட் பத்ரிநாத் இரட்டை சதம்

Posted: 08 Nov 2013 10:25 AM PST

இந்தூர்,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு–மத்தியபிரதேச அணிகள் இடையிலான ஆட்டம் இந்தூரில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய தமிழக அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்து இருந்தது. பத்ரிநாத் 126 ரன்னுடனும், தினேஷ் கார்த்திக் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். நேற்று 2–வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய பத்ரிநாத் இரட்டை சதத்தை எட்டினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். பத்ரிநாத் 448 பந்துகளில் 28 பவுண்டரியுடன் 248 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். நேற்றைய ஆட்டம் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 532 ரன்கள் குவித்தது. அஸ்வின் கிறிஸ்ட் 44 ரன்னுடனும், அனுஷிக் ஸ்ரீனிவாஸ் 11 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

டெல்லி–குஜராத் அணிகள் இடையிலான ஆட்டம் சூரத்தில் நடந்து வருகிறது. இதன் முதல் நாள் ஆட்டம் முடிவில் குஜராத் அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்து இருந்தது. 2–வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய குஜராத் அணி முதல் இன்னிங்சில் 320 ரன்னில் ஆல்–அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய டெல்லி அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 76 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. கம்பீர் 31 ரன்னுடனும், ஷேவாக் ஒரு ரன்னுடனும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

category:

இந்தியாவில் உலக கோப்பை ஆக்கி போட்டி 2018–ம் ஆண்டு நடக்கிறது

Posted: 08 Nov 2013 10:23 AM PST

புதுடெல்லி,

2018–ம் ஆண்டுக்கான 14–வது உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்த உரிமம் கேட்டு பல்வேறு நாடுகள் விண்ணப்பித்து இருந்தன. இதில் ஆண்கள் உலக கோப்பை போட்டியை நடத்த வாய்ப்பு கேட்டு ஆக்கி இந்தியா அனுமதி கோரி இருந்தது. இந்த நிலையில் பல்வேறு நாடுகளின் விண்ணப்பங்களை ஆய்வு செய்த சர்வதேச ஆக்கி சம்மேளனம் 2018–ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்தும் நாடுகளை அறிவித்துள்ளது.

இதன்படி உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி 2018–ம் ஆண்டு டிசம்பர் 1–ந் தேதி முதல் 16–ந் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. உலக கோப்பை பெண்கள் ஆக்கி போட்டி இங்கிலாந்தில் ஜூலை 7–ந் தேதி முதல் 21–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 12–ல் இருந்து 16 ஆக உயத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஆக்கி சம்மேளனம் தெரிவித்துள்ளது.

category:

தேவைப்பாடு அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு சரிவால் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்களின் வருவாய் சிறப்பான அளவில் அதிகரிக்கும்

Posted: 08 Nov 2013 10:10 AM PST

மும்பை

வெளிநாடுகளில் தேவைப்பாடு அதிகரிப்பு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் நடப்பு 2013–14–ஆம் நிதி ஆண்டில் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்களின் வருவாய் சிறப்பான அளவில் அதிகரிக்கும் என இந்தியா ரேட்டிங்ஸ் – ரிசர்ச் நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.

அதிக ஆர்டர்கள்

இந்திய ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் ஆர்டர்கள் கிடைத்துள்ளன என்றும், இது நடுத்தர கால அடிப்படையில் தொடர்ந்து நீடிக்கும் எனவும் இந்தியா ரேட்டிங்ஸ் – ரிசர்ச் நிறுவனத்தின் அசோசியேட் டைரக்டர் (நிறுவனங்கள்) தனு சர்மா தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மேலும் ஆர்டர்கள் குவியும் என்ற எதிர்பார்ப்பினால் பெரும்பாலான ஆயத்த ஆடை நிறுவனங்கள் முழு உற்பத்தி திறனில் செயல்படுகின்றன.

ரூபாய் மதிப்பு

நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகமாக உள்ளதால், இந்த நிதி ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சுமார் 18 சதவீதம் குறைந்துள்ளது. இது, ஏற்றுமதியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு சாதகமான அம்சமாகும். மேலும், வெளிநாட்டு நிறுவனங்களின் போட்டிகளையும் எதிர்கொள்ள முடிகிறது.

சீனாவில் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு காரணமாக ஆயத்த ஆடை உற்பத்தி செலவினம் உயர்ந்துள்ளது. மேலும், டாலருக்கு நிகரான சீனாவின் யுவான் மதிப்பு உயர்ந்துள்ளது. எனவே, சீனாவின் போட்டியை இந்திய நிறுவனங்களால் எளிதில் முறியடிக்க முடிகிறது.

ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்திலும் தொழிலாளர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் அந்நாட்டில் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் விபத்து ஏற்பட்டது. இதனால், அந்நாட்டிலிருந்து ஆயத்த ஆடையை இறக்குமதி செய்த பல முன்னணி நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளன.

நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஏப்ரல்–செப்டம்பர்) டாலர் மதிப்பில் ஆயத்த ஆடை ஏற்றுமதி 13 சதவீதம் அதிகரித்து 650 கோடி டாலராக உயர்ந்தது. ரூபாய் மதிப்பில் 18 சதவீதம் அதிகமாகும்.

இந்தியாவின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்கு 60 சதவீதமாக உள்ளது. செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் அமெரிக்க பொருளாதாரத்தில் 12 மாதங்களில் இல்லாத அளவிற்கு 2.8 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார மந்தநிலையிலிருந்து மீளத் தொடங்கியுள்ளன.

புதிய சந்தைகள்

வளர்ச்சி அடைந்த நாடுகளை மட்டும் நம்பி இருக்காமல் லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற புதிய சந்தைகளில் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் இந்திய ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. எனவே, நடப்பு 2013–14–ஆம் நிதி ஆண்டில் ஆயத்த ஆடை ஏற்றுமதி 1,700 கோடி டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற 2012–13–ஆம் நிதி ஆண்டில் இது 1,292 கோடி டாலராக இருந்தது.

ஏற்றுமதி அதிகரிப்பதால் நடப்பு நிதி ஆண்டில் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களின் வருவாயில் அமோக வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பரில், தரைவிரிப்பு ஏற்றுமதி 5 சதவீதம் வளர்ச்சி

சீனா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற புதிய சந்தைகளில் விற்பனை அதிகரித்துள்ளதையடுத்து, செப்டம்பர் மாதத்தில் தரைவிரிப்பு ஏற்றுமதி, சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 5 சதவீதம் அதிகரித்து 7.35 கோடி டாலராக உயர்ந்துள்ளது. தரைவிரிப்பு ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் வாயிலாக இது தெரிய வந்துள்ளது.

சென்ற 2012–13–ஆம் நிதி ஆண்டில் தரைவிரிப்பு ஏற்றுமதி 100 கோடி டாலரை தாண்டியது. இந்நிலையில் நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஏப்ரல்–செப்டம்பர்) தரைவிரிப்பு ஏற்றுமதி 10.23 சதவீதம் அதிகரித்து 53 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

மொத்த தரைவிரிப்பு ஏற்றுமதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்கு 60 சதவீதமாக உள்ளது. அந்த நாடுகளின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. எனவே, இந்த நிதி ஆண்டில் தரை விரிப்பு ஏற்றுமதி 120 கோடி டாலரை தாண்ட வாய்ப்புள்ளது என நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

category:

கரடியின் பிடியில் பங்கு வியாபாரம் ‘சென்செக்ஸ்’ 157 புள்ளிகள் வீழ்ச்சி

Posted: 08 Nov 2013 10:07 AM PST

மும்பை

பங்கு வியாபாரம் தொடர்ந்து நான்காவது தினமாக மந்தமாக இருந்தது. வெள்ளிக்கிழமை அன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 157 புள்ளிகளை இழந்தது. ஆக, பங்கு வியாபாரம் கரடியின் பிடியில் சிக்கியுள்ளது.

அமெரிக்க பொருளாதாரம்

செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் அமெரிக்க பொருளாதாரத்தில் நிபுணர்களின் மதிப்பீடுகளையும் விஞ்சி 2.8 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. எனவே,  அமெரிக்க  ரிசர்வ் வங்கி சிறப்பு பண அளிப்பு நடவடிக்கையை விரைவில் குறைக்கும் என்ற அச்சப்பாடு மீண்டும் எழுந்துள்ளது.

அமெரிக்க ரிசர்வ் வங்கி பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாதந்தோறும் 8,500 கோடி டாலர் மதிப்பிற்கு கடன்பத்திரங்களை வாங்குகிறது. இதன் காரணமாக அன்னிய நிதி நிறுவனங்களுக்கு போதிய அளவு நிதி கிடைக்கிறது. இதனை இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் பங்குச் சந்தைகளில் இந்நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன. அமெரிக்க ரிசர்வ் வங்கி கடன்பத்திரங்கள் வாங்கும் அளவை குறைத்தால் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறைந்துவிடும்.

இதனால் இந்தியாவில் மட்டுமின்றி ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாக இருந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் நுகர்வோர்  சாதனம், வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குகள் பலத்த அடி வாங்கின. அதேசமயம் ரியல் எஸ்டேட், பொறியியல், மின்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த சில நிறுவனங்களின் பங்குகளுக்கு தேவைப்பாடு காணப்பட்டது.

'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் எச்.டீ.எஃப்.சி., மாருதி சுசுகி, ஓ.என்.ஜி.சி., பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட 21 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

சென்செக்ஸ் – நிப்டி

வர்த்தகம் முடியும்போது 'சென்செக்ஸ்' 156.62 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 20,666.15 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 20,821.01 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 20,600.90 புள்ளிகள் வரையிலும் சென்றது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிஃப்டி' 46.50 புள்ளிகள் சரிந்து 6,140.75 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 6,185.15 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 6,120.95 புள்ளிகளுக்கும் சென்றது.

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™