Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


ரூ.14,600 கோடியில் செயல்படுத்தப்படும் திட்டம் சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

Posted: 06 Nov 2013 11:28 AM PST

சென்னை,

விரைவான, வசதியான, நவீன போக்குவரத்து திட்டத்தினை வழங்குவதே சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் நோக்கமாகும்.சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் வழித்தடம் வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரையிலான 23.085 கிலோ மீட்டர் தூரமும், இரண்டாம் வழித்தடம் சென்னை சென்டிரல் முதல் பரங்கிமலை வரையிலான 21.961 கிலோ மீட்டர் தூரமும் செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.

சோதனை ஓட்டம்

இதற்கான சோதனை ஓட்டம் கோயம்பேடு பணிமனையில் நேற்று நடந்தது. இதனை தொடங்கி வைக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று பகல் 1.45 மணிக்கு கோயம்பேடுக்கு வருகை தந்தார். முதல்–அமைச்சரை, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.தனியாக அமைக்கப்பட்ட மேடையில் இருந்து ரெயிலை முதல்–அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் ரெயிலுக்கு உள்ளே சென்று என்ஜின் டிரைவர் அறையிலிருந்து 4–வது பெட்டி வரை முதல்–அமைச்சர் பார்வையிட்டார்.

கொடியசைத்து தொடக்கம்

ஜெயலலிதாவுக்கு ரெயிலின் செயல்பாடுகள், பயணிகளுக்கான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் எடுத்து கூறினர். பின்னர் ரெயிலை விட்டு இறங்கிவந்து, மெட்ரோ ரெயிலுக்கான 25 கிலோ வோல்ட் உயர் அழுத்த மின்சாரம் வழங்குவதற்கான பொத்தானை அழுத்தி கொடியசைத்து சோதனை ஓட்டத்தை முதல்–அமைச்சர் தொடங்கி வைத்தார்.உடனடியாக ரெயில் ஹாரன் அடித்தபடி புறப்பட்டு 800 மீட்டர் நீளம் கொண்ட சோதனை ஓட்டப்பாதையில் சென்று விட்டு, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தது.

42 ரெயில் பெட்டிகள்

இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:–

இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.14,600 கோடி ஆகும். இதில் மத்திய அரசு பங்கு மூலதனமாக 15 சதவிகிதமும் சார்நிலை கடனாக 5 சதவிகிதமும் வழங்குகிறது. தமிழ்நாடு அரசு பங்கு மூலதனமாக 15 சதவிகிதமும், சார்நிலை கடனாக 5.78 சதவிகிதமும் வழங்குகிறது. மீதமுள்ள 59.22 சதவிகிதத்தை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையிடமிருந்து கடனாக பெறப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக மொத்தம் 42 ரெயில் பெட்டித் தொடர்கள் இயக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக நான்கு பெட்டிகள் கொண்ட 9 ரெயில் பெட்டித்தொடர்கள் பிரேசில் நாட்டில் உள்ள ஆல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் மற்றும் ஆல்ஸ்டாம் பிராஜக்ட்ஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகின்றன.மீதமுள்ள 33 ரெயில் பெட்டி தொடர்கள், ஆந்திர மாநிலம் தடா அருகில் உள்ள ஸ்ரீசிட்டி என்ற இடத்தில் தொடங்கப்பட்ட அந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

ரெயிலில் பயணிகளுக்கான வசதிகள்

மெட்ரோ ரெயிலில் குளிர்சாதன வசதி, தானியங்கி ரெயில் பாதுகாப்பு, தானியங்கி ரெயில் இயக்கம், சிறப்பு இருக்கை வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள், பயணிகளுக்கு நிறுத்தம் குறித்த தகவல், அவசரகால வெளியேறும் வசதி, பயணிகளின் பாதுகாப்பிற்காக ஒவ்வொரு பெட்டியிலும் 4 கண்காணிப்பு காமிராக்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த ரெயிலில் 176 இருக்கைகளும், 1,100 பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்யும் வகையில், ஆக மொத்தம் 1,276 பயணிகள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.ரெயில் பெட்டியில் பயணம் செய்யும் பயணிகள் அவசரகாலத்தில் பேசுவதற்காக ''1860–425 1515'' என்ற எண் தரப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரெயில் டிரைவரை அழைத்து பேச முடியும். டிரைவர் அறையில் ஒரே ஒரு இருக்கை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் அமர்ந்தபடி ரெயில் முழுவதும் கண்காணிக்கும் வகையில் இரண்டு டி.வி.க்கள் உள்ளன. ரெயில் நிலையங்கள் வந்த உடன் ஒலிபெருக்கி மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது.

நவீன ரக கருவிகள்

ரெயில் செல்லும் பாதை குறித்த வரைபடமும் ரெயிலில் உட்புறத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. எளிதில் தீப்பிடிக்காத வகையில் எவர்சில்வரில் உதிரிபாகங்களும், பிளாஸ்டிக்கில் இருக்கைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. பயணிகளின் உடைமைகள் வைக்க தனியான இடவசதி, பெண்களுக்கும் தனி இடவசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 80 கிலோ மீட்டர் செல்லும் திறன் கொண்டிருந்தாலும், அருகருகே ரெயில் நிறுத்தங்கள் இருப்பதால் அதிகபட்சமாக 35 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது.ரெயிலை அவசரமாக நிறுத்துவதற்கும், கதவுகளை திறப்பதற்கும் தேவையான நவீன ரக கருவிகளும் அமைக்கப்பட்டு உள்ளது. ரெயில் இயக்கப்பட்டு பயணிகளின் வரவேற்பை பொறுத்து ரெயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் சேர்த்து 6 பெட்டிகளுடன் இயக்குவது குறித்தும் பரிசீலிக்கப்படும். சோதனை ஓட்டப்பாதையில் சுமார் 4 அல்லது 5 மாதங்கள் வரை 700 கிலோ மீட்டர் தூரத்திற்கு சோதனை ஓட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து 2014–ம் ஆண்டு மத்தியில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை ரெயில் இயக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

முதல்–அமைச்சருக்கு வரவேற்பு

முதல்–அமைச்சர் வருகையையொட்டி கோயம்பேட்டில் சாலையின் இருபுறமும் வரவேற்பு பேனர்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மேளதாளங்கள் முழங்கவும் கட்சி நிர்வாகிகள் முதல்–அமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். மெட்ரோ ரெயில் பணிமனையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாழைத்தார்கள் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.விழா முடிவடைந்ததும் பொதுமக்களுக்கும், ஒரு சில போலீசாருக்கும் இடையே வாழைத்தார்களை வெட்டி எடுத்து செல்வதில் போட்டா போட்டி ஏற்பட்டது. இதனை அனைவரும் வேடிக்கை பார்த்து சென்றனர்.

பங்கேற்றவர்கள்

நிகழ்ச்சியில், அமைச்சர் பி.தங்கமணி, தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச்செயலாளர் மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் மேலாண்மை இயக்குனர் க.ராஜாராமன், சென்னை மெட்ரோ ரெயில் இயக்குனர் (திட்டம்) ஆர்.ராமநாதன், இயக்குனர் (இயக்கம்) எல்.நரசிம் பிரசாத், இயக்குனர் (நிதி) விஜயாகாந்த், மெட்ரோ ரெயில் நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி க.இளந்திரையன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், பிரேசில் நிறுவன ரெயில் பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

சென்னையில் ஆனந்த்–கார்ல்சென் மோதும் உலக செஸ் போட்டியை ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்

Posted: 06 Nov 2013 11:21 AM PST

சென்னை

ஆனந்த்–கார்ல்சென் இடையிலான உலக செஸ் போட்டியை சென்னையில் இன்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் உலக செஸ்

உலக செஸ் போட்டி இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடத்தப்படுகிறது. இதில் 5 முறை உலக சாம்பியனான இந்திய கிராண்ட்மாஸ்டர் விசுவநாதன் ஆனந்த்–நார்வே கிராண்ட்மாஸ்டர் மாக்னஸ் கார்ல்சென் ஆகியோர் மோதுகிறார்கள்.

12 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி வருகிற 9–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை சென்னை அண்ணாசாலையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. 12 சுற்றுகள் முடிவில் இருவரும் சம நிலை வகித்தால், சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் டைபிரேக்கர் போட்டி 28–ந் தேதி நடைபெறும். இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.14 கோடியாகும்.

தமிழக அரசின் முழுமையான ஆதரவுடன் தமிழ்நாடு செஸ் சங்கம் இந்த போட்டியை நடத்துகிறது. இந்த போட்டியை நடத்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா ரூ.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் உலக செஸ் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமை விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். அத்துடன் இருவரும் எந்தநிற காயுடன் முதல் ஆட்டத்தில் விளையாட வேண்டும் என்பதை முதல்–அமைச்சர் ஜெயலலிதா குலுக்கல் மூலம் முடிவு செய்கிறார்.

உலக செஸ் சம்மேளன தலைவர் கிர்சான் இஸ்யும் சினோவ் தலைமை உரையாற்றுகிறார். பள்ளி கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் வீரமணி வரவேற்று பேசுகிறார். முடிவில் தமிழ்நாடு செஸ் சங்க தலைவர் வெங்கட்ராம ராஜா நன்றி கூறுகிறார். தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை செயலாளர் முகமது நசீமுத்தின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ராஜாராமன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

கலைநிகழ்ச்சி

ஆனந்த், கார்ல்சென் ஆகியோரை அவரவர் நாட்டு கொடி அணிவகுப்புடன் சர்வதேச வீரர்களால் விழா மேடைக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

தொடக்க விழா நிகழ்ச்சி முடிந்ததும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. வீணை காயத்ரியின் இசை நிகழ்ச்சி, நடிகை ஷோபனா மற்றும் ஊர்மிளா சத்யநாராயணா ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. கார்ல்செனின் சொந்த நாடான நார்வேயின் பாரம்பரிய இசை நிகழ்ச்சியும் இடம் பெறும்.

category:

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி 234 ரன்னில் ஆல்–அவுட் முகமது ஷமி அபார பந்துவீச்சு

Posted: 06 Nov 2013 11:18 AM PST

கொல்கத்தா

கொல்கத்தாவில் நேற்று தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 234 ரன்களுக்கு சுருண்டது.

கொல்கத்தா டெஸ்ட்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இதன்படி இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி புகழ் பெற்ற கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த டெஸ்ட் தொடருடன் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பதால், இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. தெண்டுல்கரின் 199–வது டெஸ்ட் இதுவாகும்.

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அகமது, ரோகித் ஷர்மா ஆகியோர் சர்வதேச டெஸ்ட் அரங்கில் அறிமுகம் ஆனார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணியில் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் கெமார் ரோச் தோள்பட்டை காயத்தால் அவதிப்படுவதால், அவருக்கு பதிலாக முதல்முறையாக ஷெல்டன் கோட்ரெல் சேர்க்கப்பட்டார்.

டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சேமி முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். கீரன் பவெலுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய அதிரடி நாயகன் கிறிஸ் கெய்ல் பவுண்டரியுடன் வெஸ்ட் இண்டீசின் இன்னிங்சை தொடங்கினார்.

ஆனால், தொடக்க ஜோடியை நமது பவுலர்கள் நீண்ட நேரம் நிலைக்க விடவில்லை. புவனேஷ்வர் குமாரின் ஓவரில் கெய்லுக்கு (18 ரன், 32 பந்து, 4 பவுண்டரி) பந்து பேட்டின் விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் நின்ற முரளிவிஜயின் கையில் கேட்ச்சாக தஞ்சம் புகுந்தது. சிறிது நேரத்தில் பவெலை (28 ரன், 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) பவுன்சராக பந்து வீசி முகமது ஷமி வெளியேற்றினார்.

மிரட்டிய முகமது ஷமி

இதன் பின்னர் டேரன் பிராவோவும், சாமுவேல்சும் இணைந்து, அணியை ஓரளவு சரிவில் இருந்து மீட்டனர். சாமுவேல்ஸ் அதிரடியான ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். ஓஜாவின் ஓவர்களில் அவர் 2 சிக்சர்களை பறக்க விட்டார். பிராவோ, அஸ்வினின் பந்து வீச்சில் ஒரு சிக்சரை தூக்கினார். உணவு இடைவேளை வரை இந்த ஜோடியை ஒன்றும் செய்ய முடிவில்லை.

உணவு இடைவேளைக்கு பிறகு 40–வது ஓவரில் நடுவர் பந்தை மாற்றம் செய்தார். புதிய பந்து எடுக்கப்பட்டது, இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. இலக்கை நோக்கி துல்லியமாக பந்து வீசிய முகமது ஷமி அகமது, சில அற்புதமான 'ரிவர்ஸ் ஸ்விங்' பந்து வீசி எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தார். குறிப்பாக அவர் வீசிய ஒரு 'ரிவர்ஸ் ஸ்விங்' வகை பந்தை கணிக்க முடியாமல் சாமுவேல்ஸ் (65 ரன், 96 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) நடு ஸ்டெம்பை பறிகொடுத்தார். இந்த ஜோடி 3–வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் திரட்டியது. இந்த கூட்டணி உடைந்ததும் வெஸ்ட் இண்டீசின் உத்வேகம் தடம் புரண்டது. டேரன் பிராவோ (23 ரன்) ரன்–அவுட்டில் வீழ்ந்தார்.

234 ரன்னில் சுருண்டது

இதைத் தொடர்ந்து இந்திய பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் தலைதூக்கியது. வெஸ்ட் இண்டீசின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. சச்சின் தெண்டுல்கரும் தனது பங்குக்கு ஒரு விக்கெட்டை சாய்த்தார். அனுபவம் வாய்ந்த சந்தர்பால் (36 ரன், 79 பந்து, 3 பவுண்டரி) அஸ்வின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 78 ஓவர்களில் 234 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. கடைசி 96 ரன்களுக்கு மட்டும் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய தரப்பில் ஷமி அகமது 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்திருந்தது. ஷிகர் தவான் 21 ரன்களுடனும் (27 பந்து, 4 பவுண்டரி), விஜய் 16 ரன்களுடனும் (45 பந்து, 2 பவுண்டரி) களத்தில் உள்ளனர்.

2–வது நாள் ஆட்டம் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

ஸ்கோர் போர்டு

வெஸ்ட் இண்டீஸ்

கெய்ல் (சி) விஜய் (பி) புவனேஷ்வர் 18

கீரன் பவெல் (சி) புவனேஷ்வர் (பி) முகமது ஷமி 28

டேரன் பிராவோ (ரன்–அவுட்) 23

சாமுவேல்ஸ் (பி) முகமது ஷமி 65

சந்தர்பால் (பி) அஸ்வின் 36

ராம்டின் (பி) ஷமி 4

டேரன் சேமி (சி) புவனேஷ்வர் (பி) ஓஜா 16

ஷில்லிங்போர்டு எல்.பி.டபிள்யூ (பி) தெண்டுல்கர் 5

வீராசாமி பெர்மால் (சி) அண்ட் (பி) அஸ்வின் 14

டினோ பெஸ்ட் (நாட்–அவுட்) 14

கோட்ரெல் (பி) ஷமி 0

எக்ஸ்டிரா 11

மொத்தம் (78 ஓவர்களில் ஆல்–அவுட்) 234

விக்கெட் வீழ்ச்சி: 1–34, 2–47, 3–138, 4–138, 5–143, 6–172, 7–192, 8–211, 9–233

பந்து வீச்சு விவரம்

புவனேஷ்வர்குமார் 14–6–33–1

முகமது ஷமி 17–2–71–4

அஸ்வின் 21–9–52–2

பிரக்யான் ஓஜா 24–6–63–1

தெண்டுல்கர் 2–1–5–1

இந்தியா

தவான் (நாட்–அவுட்) 21

விஜய் (நாட்–அவுட்) 16

மொத்தம் (12 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி) 37

பந்து வீச்சு விவரம்

டினோ பெஸ்ட் 2–0–15–0

கோட்ரெல் 5–2–13–0

ஷில்லிங்போர்டு 4–2–8–0

பெர்மால் 1–0–1–0

--–

இன்று ரசிகர்கள் கூட்டம் படையெடுக்கும்

கொல்கத்தா மைதானத்தில் கடைசியாக விளையாடும் சச்சின் தெண்டுல்கரின் ஆட்டத்தை பார்க்கவே ரசிகர்கள் விரும்புகிறார்கள். முதல் நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தொடங்கியதால் ரசிகர்கள் நேரில் சென்று ஆட்டத்தை பார்க்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் 70 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட மைதானத்தில் பெரும்பகுதி காலியாகவே காட்சி அளித்தது. சுமார் 40 ஆயிரம் ரசிகர்கள் முதல் நாள் ஆட்டத்தை பார்த்ததாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

போட்டியின் 2–வது நாளான இன்று நிச்சயம் சச்சின் தெண்டுல்கர் பேட் செய்ய களம் காணுவார். இதனால் இன்றைய நாளில் போட்டியை காண ரசிகர்கள் கூட்டம் படையெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

--–

விக்கெட் வீழ்த்திய தெண்டுல்கர்

*பேட்டிங்கில் அசுர பலம் வாய்ந்த சச்சின் தெண்டுல்கர் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளரும் கூட. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்த டெஸ்டில் அவர் 2 ஓவர் பந்து வீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அவரது 'கூக்ளி' வகை பந்து வீச்சில் ஷில்லிங் போர்டு எல்.பி.டபிள்யூ. ஆனார். அவர் விக்கெட் வீழ்த்தியதும் ரசிகர்கள் மைதானம் அதிரும் வகையில் கைதட்டியும், கரவொலி எழுப்பியும் உற்சாகப்படுத்தினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தெண்டுல்கர் வீழ்த்திய 46–வது விக்கெட் இதுவாகும். கடைசியாக அவர் 2011–ம் ஆண்டு ஜனவரி மாதம் கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் அவர் ஒரு விக்கெட் எடுத்திருந்தார். இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், அந்த கேப்டவுன் டெஸ்ட் தான் தெண்டுல்கர் கடைசியாக சதம் அடித்த ஆட்டமாகும்.

*கொல்கத்தா மைதானத்தில் 20 ஆண்டுகளாக விளையாடி தெண்டுல்கர் இதுவரை 5 டெஸ்ட் விக்கெட்டுகளை (13 டெஸ்ட்) எடுத்துள்ளார். ஓர் மைதானத்தில் அவரது அதிகபட்ச விக்கெட் எண்ணிக்கை இது தான்.

*தெண்டுல்கர் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ள போதிலும், இதுவரை எந்த ஒரு மைதானத்திலும் ஆயிரம் ரன்களை கடந்ததில்லை. அதிகபட்சமாக சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 970 ரன்கள் எடுத்திருக்கிறார். கொல்கத்தா ஈடன்கார்டனில் இதுவரை 862 ரன்கள் (13 டெஸ்ட்) சேர்த்துள்ளார். எனவே இந்த டெஸ்டில் அவர் 138 ரன்கள் எடுத்தால் ஒரு மைதானத்தில் ஆயிரம் ரன்களை கடந்த 3–வது இந்தியர் (வி.வி.எஸ்.லட்சுமண், சுனில் கவாஸ்கருக்கு பிறகு) என்ற சிறப்பை பெறுவார்.

மேலும் இந்த தொடரில் 163 ரன்களை சேர்த்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 16 ஆயிரம் ரன்கள் மைல்கல்லையும் தெண்டுல்கர் தொடுவார். இவை எல்லாம் நிகழ்ந்தால், தெண்டுல்கர் மனநிறைவுடன் விடைபெறுவார் என்பதில் சந்தேகமில்லை.

--–

மீண்டும் சர்ச்சையில் பெங்கால் கிரிக்கெட் சங்கம்

கொல்கத்தா மைதானத்தில் உள்பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒரு போர்டில், சச்சின் தெண்டுல்கரின் பெயர் ஆங்கிலத்தில் தவறாக இருந்ததை (ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சச்சின் பெயரில் கடைசியில் தேவையில்லாமல் 'இ' என்ற எழுத்து கூடுதலாக சேர்க்கப்பட்டிருந்தது) இந்திய கேப்டன் டோனி நேற்று முன்தினம் கோபமுடன் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து அதை உடனடியாக பெங்கால் கிரிக்கெட் சங்கம் சரி செய்தது.

இந்த நிலையில் நேற்றும் தெண்டுல்கர் விஷயத்தில் ஒரு தவறு நடந்தது. மதிய உணவு இடைவேளையின் போது தெண்டுல்கரின் மனைவி அஞ்சலியும், மகன் அர்ஜூனும் மைதானத்திற்கு வந்தனர். அப்போது ஸ்டேடியத்தில் இருந்த மின்னணு போர்டில் இவர்களை வரவேற்கும் விதமாக, 'மிஸ்டர் தெண்டுல்கரின் சிறப்பு மிக்க 199–வது டெஸ்டை பார்க்க வந்திருக்கும் மிஸ்டர் அஞ்சலி தெண்டுல்கர், மாஸ்டர் அர்ஜூன் தெண்டுல்கர் வருக... வருக' என்ற வாசகம் சுமார் 30 நிமிடங்கள் ஒளிபரப்பப்பட்டது. மனைவியை மிசஸ் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக, மிஸ்டர் என்று தவறாக காட்டப்பட்டதால், பெங்கால் கிரிக்கெட் சங்கம் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

--–

பந்து மாற்றப்பட்டதால் சாதிக்க முடிந்தது–முகமது ஷமி

இந்த டெஸ்டில் அறிமுகம் ஆன வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அகமது, இந்தியாவின் 279–வது டெஸ்ட் வீரர் ஆவார். 23 வயதான ஷமி, மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். சொந்த ஊர் ரசிகர்களில் முன்னிலையில் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி இருக்கும் அவர் முதல் நாளிலேயே அசத்தி விட்டார்.

ரிவர்ஸ்–ஸ்விங் பந்து வீசி எதிரணியை மிரட்டிய அவர் 71 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இந்திய அறிமுக பவுலர் ஒருவரின் சிறப்பான பந்து வீச்சு இதுவாகும். இதற்கு முன்பு 1948–ம் ஆண்டு வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் புதுமுக இந்திய சுழற்பந்து வீச்சாளர் குலாம் அகமது 94 ரன்னுக்கு 4 விக்கெட் கைப்பற்றியதே இந்த வகையில் சிறந்த பந்து வீச்சாக இருந்தது.

முதல் நாள் ஆட்டத்திற்கு பிறகு முகமது ஷமி கூறுகையில், 'இந்த டெஸ்டில் முதலில் பயன்படுத்தப்பட்ட பந்து மிருதுவாக இருந்தது. அதை வைத்து அதிகமாக ஸ்விங் செய்ய முடியவில்லை. ஆனால் அந்த பந்து (40–வது ஓவருக்கு பிறகு) மாற்றப்பட்ட பிறகு, பந்து ஸ்விங் மற்றும் ரிவர்ஸ் ஸ்விங் ஆக ஆரம்பித்தது. மாற்றப்பட்ட பந்துடன் பவுல் செய்தது மிகவும் மகிழ்ச்சி அளித்தது.

எல்லா விக்கெட்டும் முக்கியமானது என்றாலும், எனது முதல் டெஸ்ட் விக்கெட் (கீரன் பவெல்) எப்போதும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். கேப்டன் டோனி உள்ளிட்ட அனைத்து சீனியர் வீரர்களும், உங்களது திட்டப்படி பந்து வீசுங்கள் என்று கூறினர். அதைத் தான் செய்தேன்' என்றார்.

வெஸ்ட் இண்டீஸ் ஆல்–ரவுண்டர் சாமுவேல்ஸ் அளித்த பேட்டியில், 'உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்திய பந்து வீச்சாளர்கள் எங்களுக்கு எந்த வாய்ப்பும் வழங்காமல், ரொம்ப நேர்த்தியாக பந்து வீசினார்கள். ஸ்டம்பை குறி வைத்து தாக்குதல் நடத்தினர். ஆனால் தொடக்கத்தில் ஓரளவு எளிதாக ரன் எடுக்க முடிந்தது. பந்து மாற்றப்பட்ட பிறகு, மிகவும் கடினமாகி விட்டது. முகமது ஷமியின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. அவரை ஒரு நாள் தொடரில் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். தனக்கு கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது' என்றார்.

category:

உலக டூர் டென்னிசில் வெற்றி: ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்கவைத்தார், நடால்

Posted: 06 Nov 2013 11:06 AM PST

லண்டன்

ஏ.டி.பி. உலக டூர் இறுதி சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்று முன்னணி 8 வீரர்களும் ஏ, பி என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகிறார்கள்.

நேற்று 'ஏ' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் ஸ்பெயினின் ரபெல் நடால் 7–6 (5), 7–6 (6) என்ற நேர் செட் கணக்கில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவை தோற்கடித்தார். 2 மணி 13 நிமிடங்கள் இந்த ஆட்டம் நீடித்தது. தொடர்ந்து 2 வெற்றிகளை ருசித்த நடால் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளார். மேலும் இந்த வெற்றியின் மூலம் ஆண்டின் இறுதியில் 'நம்பர் ஒன்' இடத்தையும் உறுதி செய்து இருக்கிறார். 27 வயதான நடால் இதற்கு முன்பு 2008, 2010–ம் ஆண்டின் முடிவிலும் நம்பர் ஒன் ஆக இருந்துள்ளார். முன்னதாக 'பி' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் செர்பியாவின் ஜோகோவிச் 6–4, 6–7(2), 6–2 என்ற செட் கணக்கில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை வென்றார்.

இரட்டையர் பிரிவில் தங்களது (பி பிரிவு) தொடக்க ஆட்டத்தில் வெற்றி கண்ட இந்தியாவின் லியாண்டர் பெயஸ், செக்குடியரசின் ராடக் ஸ்டெபனக் ஜோடி 2–வது லீக்கில் 4–6, 6–7 (5) என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் டேவிட் மாரெரோ– பெர்னாண்டோ வெர்டஸ்கோ இணையிடம் வீழ்ந்தது.

category:

வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் நியூசிலாந்து அணி வெற்றி

Posted: 06 Nov 2013 11:03 AM PST

மிர்புர்

நியூசிலாந்து–வங்காளதேச அணிகள் இடையிலான ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முன்ரோ 39 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 73 ரன்னும் எடுத்தனர். வங்காளதேச அணி தரப்பில் அல் அமின் ஹூசைன் 2 விக்கெட்டும், சோஹக் காசி, அப்துர் ரசாக், ஜியார் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் 205 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்னே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக முஷிபுர் ரஹிம் 50 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சவுதி 3 விக்கெட்டும், கோரி ஆண்டர்சன் 2 விக்கெட்டும், மெக்லனகன், மில்ஸ், நாதன் மெக்கல்லம் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். வங்காளதேச தொடரில் நியூசிலாந்து அணி பெற்ற ஒரே வெற்றி இது தான்.

category:

பயன்படுத்தப்படாத இணைப்புகள் துண்டிப்பு செப்டம்பரில், செல்போன் இணைப்புகள் எண்ணிக்கை 87 கோடியாக குறைந்தது

Posted: 06 Nov 2013 10:22 AM PST

புதுடெல்லி

செப்டம்பர் மாதத்தில் செல்போன் இணைப்புகளின் (ஜி.எஸ்.எம் + சி.டீ.எம்.ஏ சேவை) எண்ணிக்கை ஆகஸ்டு மாதத்தை காட்டிலும் 0.7 சதவீதம் குறைந்து 87.06 கோடியாக குறைந்துள்ளது. அனில் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பயன்பாட்டில் இல்லாத 1.05 கோடி இணைப்புகளை துண்டித்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.

இரண்டாவது இடம்

உலக அளவில் செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை அடிப்படையில் சீனாவுக்கு அடுத்தபடியாக நம் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனாவில் செப்டம்பரில் செல்போன் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 0.9 சதவீதம் அதிகரித்து 121 கோடியாக உயர்ந்துள்ளது.

அதேசமயம், இந்தியாவில் செல்போன் இணைப்புகள் எண்ணிக்கை 61.40 லட்சம் குறைந்துள்ளது. ஐந்து மாதங்களுக்கு பிறகு செப்டம்பர் மாதத்தில்தான் சந்தாதாரர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அலைவரிசை ஒதுக்கீடு

கடந்த 2012–ஆம் ஆண்டிற்கு முன்னர் வாடிக்கையாளர் எண்ணிக்கை அடிப்படையில் செல்போன் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் நிறுவனங்களுக்கிடையில் கடும் போட்டி ஏற்பட்டு, இணைப்புகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 2012–ஆம் ஆண்டில் ஏல அடிப்படையில் அலைவரிசையை ஒதுக்கீடு செய்யும் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதனால், செல்போன் சேவை நிறுவனங்கள் செயல்பாட்டு செலவினத்தை கட்டுப்படுத்தும் வகையில் செயல்படாத நிலையில் உள்ள இணைப்புகளை துண்டிக்க தொடங்கின. இதனையடுத்து, இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரையிலான 10 மாதங்களில் 9 மாதங்கள் செல்போன் இணைப்புகள் எண்ணிக்கை சரிவடைந்தது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 2012–ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பயன்பாட்டில் இல்லாத 2.05 கோடி இணைப்புகளை துண்டித்தது. இந்நிறுவனம் ஜி.எஸ்.எம். மற்றும் சி.டீ.எம்.ஏ. ஆகிய இரண்டு தொழில்நுட்பங்களில் செல்போன் சேவை அளித்து வருகிறது. செப்டம்பர் மாதத்தில் இந்நிறுவனம் 1.05 கோடி இணைப்புகளை துண்டித்ததையடுத்து இதன் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 11.60 கோடியாக குறைந்தது. மொத்த வாடிக்கையாளர்களில் இந்நிறுவனத்தின் பங்கு 13.35 சதவீதமாக குறைந்தது.

இதன் காரணமாக வாடிக்கையாளர் எண்ணிக்கை அடிப்படையில் இந்நிறுவனம் மூன்றாவது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்கு சென்றுள்ளது. மூன்றாவது இடத்தை ஐடியா செல்லுலார் நிறுவனம் பிடித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இந்நிறுவனம் வழங்கிய இணைப்புகள் 12 லட்சம் அதிகரித்து மொத்த எண்ணிக்கை 12.72 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த செல்போன் வாடிக்கையாளர்களில் இது 14.6 சதவீதமாகும்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் செயல்பாட்டில் இல்லாத இணைப்புகளை ஒவ்வொரு மாதமும் துண்டித்து வருகிறது. இதன் காரணமாக இந்நிறுவனத்தின் வருவாயில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும், வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை வழங்க முடியும் எனவும் இந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சந்தாதாரர்கள் எண்ணிக்கை முக்கியமல்ல என்றும், லாபத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதே ஆக்கப்பூர்வமான அணுகுமுறை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பார்தி ஏர்டெல்

செல்போன் சந்தாதாரர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. செப்டம்பர் மாத நிலவரப்படி இந்நிறுவனத்தின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 19.33 கோடி ஆகும். இது, மொத்த செல்போன் வாடிக்கையாளர்களில் 22.21 சதவீதமாக உள்ளது.

வோடாபோன் நிறுவனம் 15.50 கோடி வாடிக்கையாளர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அதிவேக வளர்ச்சி

தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்த பிறகு அதிவேக வளர்ச்சி கண்டு வரும் துறைகளில் தொலைத் தொடர்பு துறையும் ஒன்றாகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இத்துறை ஓர் உந்துசக்தியாக உள்ளது.

category:

வங்கி, ரியல் எஸ்டேட் துறை பங்குகள் விலை வீழ்ச்சி ‘சென்செக்ஸ்’ 80 புள்ளிகள் சரிவு

Posted: 06 Nov 2013 10:18 AM PST

மும்பை

பங்கு வியாபாரம் தொடர்ந்து இரண்டு தினங்களாக மந்தமாக உள்ளது. புதன்கிழமை அன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 80 புள்ளிகளை இழந்தது.

முகூர்த்த வணிகம்

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீபாவளி முகூர்த்த வர்த்தகத்தில் 'சென்செக்ஸ்' வரலாறு காணாத அளவிற்கு 21,239.36 புள்ளிகளாக உயர்ந்து இருந்தது. இதனையடுத்து முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனர். எனவே, நேற்று பல துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. குறிப்பாக வங்கி, ரியல் எஸ்டேட், உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குகள் பலத்த அடி வாங்கின.

இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அன்னியச் செலாவணி வெளியேற்றத்திற்கும், வரவுக்கும் இடையில் உள்ள வித்தியாசமான நடப்பு கணக்கு பற்றாக்குறையை 6,000 கோடி டாலராக குறைக்க முடியும் என நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீண்டும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனையடுத்து மின்சாரம், மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த சில நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது.

சாஃப்ட்வேர் துறையைச் சேர்ந்த காக்னிஸன்ட் நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் நன்றாக இருந்தன. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் சரிவடைந்தது. இதுபோன்ற காரணங்களால் ஐ.டி. துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது. இல்லையென்றால் பங்கு வியாபாரத்தில் அதிக சரிவு ஏற்பட்டு இருக்கும்.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் பாரத ஸ்டேட் வங்கி, ஜிந்தால் ஸ்டீல், ஹிண்டால்கோ, எச்.டீ.எஃப்.சி., டாட்டா ஸ்டீல், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், பீ.எச்.இ.எல்., இந்துஸ்தான் யூனிலீவர், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 20 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

வர்த்தகம் முடியும்போது 'சென்செக்ஸ்' 79.85 புள்ளிகள் குறைந்து 20,894.94 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 21,045.38 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 20,861.42 புள்ளிகள் வரையிலும் சென்றது.

தேசிய பங்கு சந்தை

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிஃப்டி' 38 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 6,215.15 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 6,269.70 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 6,208.70 புள்ளிகளுக்கும் சென்றது.

category:

உயர்தர பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க வேண்டும் வீரப்ப மொய்லி வேண்டுகோள்

Posted: 06 Nov 2013 10:17 AM PST

புதுடெல்லி

உயர்தர (பிராண்டட்) பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி நிதி அமைச்சகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அறிமுகம்

எரிபொருள் செலவை மிச்சப்படுத்தும் வகையிலும், சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்பவும் மற்றும் மோட்டார் வாகனத் துறையில் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தை பயன்படுத்தும் வகையிலும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பிராண்டட் பெட்ரோல் மற்றும் டீசலை கடந்த 2002–ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தின. இந்நிலையில், 2009–ஆம் ஆண்டில் மத்திய அரசு இவ்வகை எரிபொருள்கள் மீது புதிய வரிகளை விதித்தது. இதன் காரணமாக இவற்றின் விற்பனை மிகவும் சரிவடைந்துள்ளது.

கடந்த 2007–08–ஆம் நிதி ஆண்டில் 59 லட்சம் கிலோ லிட்டர் உயர்தர டீசலும், 34 லட்சம் கிலோ லிட்டர் உயர்தர பெட்ரோலும் விற்பனையாகி இருந்தது. 2012–13–ஆம் நிதி ஆண்டில் உயர்தர டீசல் விற்பனை 4.50 லட்சம் கிலோ லிட்டராகவும், உயர்தர பெட்ரோல் விற்பனை 90,000 கிலோ லிட்டராகவும் குறைந்தது.

சாதாரண பெட்ரோலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.1.20 வரி விதிக்கப்படுகிறது. ஆனால், உயர் வகை பெட்ரோலுக்கான வரி ரூ.7.50–ஆக உள்ளது. உயர்தர டீசலுக்கான வரி ரூ.3.75–ஆக (லிட்டருக்கு) உள்ள நிலையில், சாதாரண டீசலுக்கான வரி ரூ.1.46 ஆகத்தான் உள்ளது.

புதுடெல்லியில்...

புதுடெல்லியில் ஒரு லிட்டர் சாதாரண பெட்ரோல் விலை ரூ.72.45 மற்றும் சாதாரண டீசல் விலை ரூ.52.54–ஆக உள்ள நிலையில், உயர்தர பெட்ரோல் விலை ரூ.81.88–ஆகவும், உயர்தர டீசல் விலை ரூ.67.93–ஆகவும் உள்ளது.

எனவே, உயர்தர பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை முறையே ரூ.6.30 (லிட்டருக்கு) மற்றும் ரூ.2.29 (லிட்டருக்கு) குறைக்க வேண்டும் என வீரப்ப மொய்லி கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் மத்திய அரசின் வருவாய்க்கு அதிக பாதிப்பு ஏற்படாது என்றும், மாறாக இந்த எரிபொருள்கள் பயன்பாட்டால் எரிபொருள் செலவினம் மிச்சமாகும் என தெரிவித்துள்ளார்.

ஏழு அம்ச திட்டம்

நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகமாக உள்ளதும் ஒரு முக்கிய காரணமாகும். எனவே, கச்சா எண்ணெய் இறக்குமதியை கட்டுப்படுத்தி 2,000 கோடி டாலரை சேமிக்கும் வகையில் ஏழு அம்ச திட்டம் ஒன்றை வீரப்ப மொய்லி சென்ற மாதம் அறிவித்தார். இதன் ஓர் அங்கமாக கடந்த மாதம் 9–ந் தேதி அவர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

category:

நிபுணர்களின் மதிப்பீடுகளை விஞ்சி காக்னிஸன்ட் ஈட்டிய வருவாய் 231 கோடி டாலராக அதிகரிப்பு

Posted: 06 Nov 2013 10:15 AM PST

பெங்களூர்

நடப்பு நிதி ஆண்டில், ஜூலை–செப்டம்பர் காலாண்டில் காக்னிஸன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் 231 கோடி டாலர் (ரூ.14,200 கோடி) வருவாய் ஈட்டியுள்ளது. முந்தைய காலாண்டுடன் (ஏப்ரல்–ஜூன்) ஒப்பிடும்போது இது 6.7 சதவீதம் அதிகமாகும். சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டை விட வருவாய் 21.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

எதிர்பார்ப்புகள்

நிபுணர்களின் மதிப்பீடுகளை விஞ்சி இந்நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ளது. செப்டம்பர் காலாண்டில் தனது வருவாய் 4.1 சதவீதம் அதிகரிக்கும் என காக்னிஸன்ட் நிறுவனம் மதிப்பீடு செய்திருந்தது. நிபுணர்கள் இந்நிறுவனத்தின் வருவாய் 4.5 சதவீதம் உயரும் என தெரிவித்திருந்தனர். எதிர்பார்ப்புகளை விஞ்சி வருவாய் 6.7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

இந்நிலையில் காக்னிஸன்ட் நிறுவனம் இரண்டாவது முறையாக தனது வருவாய் வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை மாற்றியமைத்துள்ளது. அதாவது, டிசம்பர் மாதத்துடன் நிறைவடையும் ஆண்டில் தனது வருவாய் குறைந்தபட்சம் 19 சதவீதம் அதிகரிக்கும் என இந்நிறுவனம் தெரிவித்திருந்தது. தற்போது இதனை 20.3 சதவீதமாக உயர்த்தியுள்ளது. அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப சேவைகளுக்கான தேவைப்பாடு அதிகரித்து வருவதே இதன் பின்னணியாக அமைந்துள்ளது.

பிற முன்னணி ஐ.டி. நிறுவனங்களை விட காக்னிஸன்ட் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. ஏப்ரல்–ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும்போது இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் 3.8 சதவீதம் உயர்ந்துள்ளது. டி.சி.எஸ். வருவாய் 5.4 சதவீதம் அதிகரித்துள்ளது. எச்.சி.எல். டெக்னாலஜிஸ் வருவாய் 3.5 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், விப்ரோவின் வருவாய் 2.7 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.

நிகர லாபம்

ஜூலை–செப்டம்பர் மாத காலத்தில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 31.96 கோடி டாலராக உயர்ந்துள்ளது. செயல்பாட்டு லாப வரம்பு 19 சதவீதமாக உள்ளது. இதே காலாண்டில் இந்நிறுவனம் 2,100 புதிய பணியாளர்களை இணைத்துள்ளது. நிறுவனத்தின் ரொக்க கையிருப்பு 340 கோடி டாலராக உள்ளது.

category:

அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியது பாரத ஸ்டேட் வங்கி வீடு, வாகன கடன் வட்டி உயர வாய்ப்பு

Posted: 06 Nov 2013 10:04 AM PST

புதுடெல்லி

நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் பேங்க் 'பேஸ் ரேட்' எனப்படுத் அடிப்படை வட்டி விகித்தை 0.20 சதவீதம் உயர்த்தி உள்ளது. இது, இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக வீடு, வாகனம் மற்றும் நுகர்வோர் கடனிற்கான வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளது.

10 சதவீதமாக உயர்வு

பாரத ஸ்டேட் பேங்க் அடிப்படை வட்டி விகிதத்தை 9.80 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்தி உள்ளது. மேலும், பீ.பி.எல்.எல். எனப்படும் பிரதான கடனிற்கான வட்டி விகிதத்தையும் 14.55 சதவீதத்திலிருந்து 14.75 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மேலும் பல பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள் கடனிற்கான வட்டியை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெப்போ ரேட்

பாரத ரிசர்வ் வங்கி அக்டோபர் 29–ந் தேதி வெளியிட்ட பண கொள்கை ஆய்வு அறிக்கையில் வங்கிகள் குறுகிய கால அடிப்படையில் பெறும் கடனிற்கான வட்டியை (ரெப்போ ரேட்) 7.50 சதவீதத்திலிருந்து 7.75 சதவீதமாக உயர்த்தியது. இதனால் வங்கிகளின் வட்டிச் செலவினம் அதிகரிக்க உள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா இது குறித்து கூறுகையில், ''எமது வங்கி இதற்கு முன்னர் அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகு ரெப்போ ரேட் மொத்தம் 0.50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வட்டிச் செலவினம் மிகவும் உயர்ந்துள்ளது. இந்த நிலையிலும், அடிப்படை வட்டி விகிதத்தை 0.20 சதவீதம் மட்டுமே உயர்த்தியுள்ளோம். இந்த உயர்வுக்கு பின்னரும் அடிப்படை வட்டி விகிதத்தை குறைவாக கொண்டுள்ள வங்கிகளுள் எமது வங்கியும் ஒன்றாகும்'' என்று தெரிவித்துள்ளார்.

பாரத ஸ்டேட் வங்கி சில வகை டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை அண்மையில் 0.20 சதவீதம் உயர்த்தியது.

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™