Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவர்கள், நாங்கள் தான் மு.க.ஸ்டாலின் பேச்சு

Posted: 29 Nov 2013 11:47 AM PST

சேலம்

ஏற்காடு தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவர்கள் நாங்கள் தான் என்று கூறினார்.

மு.க.ஸ்டாலின் பிரசாரம்

ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மாறனை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை பிரசாரத்தை தொடங்கினார். உடையாப்பட்டி, கக்கன் காலனியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து திறந்த வேனில் நின்றபடி மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–வருகிற 4–ந் தேதி நடைபெற உள்ள ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக மாறன் கலைஞரால் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நீங்கள் உதயசூரியனுக்கு ஆதரவு தந்து மாபெரும் வெற்றியை தேடித் தர வேண்டும் என்பதற்காக உங்களை நாடி, தேடி வந்திருக்கிறோம்.

உங்களோடு இருப்போம்

தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல, எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவர்கள் தான் நாங்கள். நேற்றைய தினம் இங்கு பிரசாரம் செய்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஏற்காடு தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை என்று கூறியுள்ளார். ஏற்காடு அ.தி.மு.க.விற்கு மட்டும் தான் கோட்டையா? ஏன் இதே ஏற்காடு தொகுதியில் 10 முறை நடத்தப்பட்ட தேர்தல்களில் 6 முறை அ.தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும், 4 முறை தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன.இந்த இடைத்தேர்தல் வரவில்லை என்றால் ஜெயலலிதா ஏற்காடு தொகுதிக்கு வருவாரா? இன்றைக்கு சென்னை கோட்டையே காலியாகி உள்ளது. அமைச்சர்கள், வாரிய தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அத்தனை பேரும் ஏற்காடு தொகுதியில் முகாமிட்டுள்ளனர். ஆட்சிக்கு வந்து 2¾ ஆண்டுகள் கடந்து 3–ம் ஆண்டு வர போகிறது. என்றைக்காவது இந்த தொகுதிக்கு ஜெயலலிதா வந்துள்ளாரா? அமைச்சர்கள் வந்துள்ளனரா? இல்லையே. இந்த தேர்தலில் உங்களை திசை திருப்பவே அவர்கள் வந்துள்ளார்கள்.

ஆட்சி மாற்றத்திற்காக அல்ல

இந்த இடைத்தேர்தல் ஏன் வந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் இறந்ததால் வந்துள்ளது. இங்கு நடைபெறுகிற தேர்தல் ஆட்சி மாற்றத்திற்காக நடக்கிற தேர்தல் இல்லை.

ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் தவறை திருத்திக் கொள்வதற்கான தேர்தல். எனவே மறவாமல் உங்கள் பொன்னான வாக்குகளை தி.மு.க. வேட்பாளர் மாறனுக்கு அளித்து பெருவாரியாக வெற்றி பெற வேண்டிக் கொள்கிறேன். ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் 1951–ம் ஆண்டு முதல் நடந்த தேர்தல் கண்ணோட்டத்தை எடுத்து பார்த்தால் யார் யார் எத்தனை முறை வெற்றி பெற்றுள்ளார்கள் என தெரியும்.

மின்தட்டுப்பாடு

1967–ம் ஆண்டு தி.மு.க. சார்பில் சின்னசாமியும், 1971–ம் ஆண்டு அதே சின்னசாமியும் 2 முறை வெற்றி பெற்றுள்ளார். அதன் பிறகு 1977, 80–ம் ஆண்டுகளில் அ.தி.மு.க.வும், 84–ம் ஆண்டு காங்கிரசும், 1989 மற்றும் 1991–ம் ஆண்டுகளில் அ.தி.மு.க.வும், 1996–ம் அண்டு தி.மு.க.வும், 2001–ம் ஆண்டு அ.தி.மு.க.வும், 2006–ம் ஆண்டு தி.மு.க.வும், 2011 தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரான பெருமாளும் வெற்றி பெற்று உள்ளனர். தி.மு.க. 4 முறை வெற்றி பெற்றுள்ளது. தற்போது 5–வது முறையாக நாம் தான் ஏற்காடு தொகுதியில் வெற்றி பெற போகிறோம்.முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்றைய தினம் பிரசாரத்தின் போது தமிழகத்திற்கு மின் தட்டுப்பாடு ஏற்படுத்துவதில் மத்திய அரசு சதி செய்துள்ளதாகவும், அதற்கு தி.மு.க.வும் கூட்டு சதி என பேசி உள்ளார்.

உண்மைகளையொல்லாம் மூடி மறைத்து விட்டு மத்திய அரசை குறை சொல்லி இருப்பதுடன், மத்திய அரசுடன் கருணாநிதி கூட்டுசதி செய்துள்ளதாகவும் சொல்லி உள்ளார்.

தக்க பாடம் புகட்டுங்கள்

சென்னை மதுரவாயல் பறக்கும் பாலம் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரூ.800 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருந்தது. அப்போது தி.மு.க. ஆட்சி நடந்தது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பறக்கும் பாலம் திட்டத்தை நிறுத்தியதுடன், நீதிமன்றத்திற்கும் சென்று விட்டார்.சென்னை – திருப்பதி சென்னை – பெங்களூர் மற்றும் தமிழகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை திட்டம் ரூ.14 ஆயிரம் கோடியில் தொடங்கப்பட்டது. இதில் சென்னை – திருப்பதி திட்டம் மட்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மற்ற திட்டங்களை ஜெயலலிதா நிறுத்தி விட்டார்.

சேதுசமுத்திர திட்டம்

 தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஆட்சியில் சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ரூ.800 கோடி வரையில் செலவு செய்த நிலையில், முதல்–அமைச்சர் ஜெயலலிதா நீதிமன்றத்திற்கு சென்று அந்த திட்டம் தேவையில்லை என்று வழக்கு தொடர்ந்துள்ளார். இது யார் செய்த சதி?இப்படி அபாண்டமாக குற்றச்சாட்டுகளை ஜெயலலிதா மத்திய அரசு மீதும், தி.மு.க. தலைவர் கருணாநிதி மீதும் கூறி வருகிறார். அவருக்கு இந்த இடைத்தேர்தல் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதைத் தொடர்ந்து அவர் அதிகாரிப்பட்டி, மாசிநாயக்கன்பட்டி, அயோத்தியாப்பட்டணம், ராமர்கோவில், மேட்டுப்பட்டி தாதனூர், தேவாங்கர் காலனி, குள்ளம்பட்டி, பாலாஜி காலனி, சந்தியா காலனி, வரட்டேரிக்காடு, முட்டைக்கடை, மின்னாம்பள்ளி, செல்லியம்பாளையம், அ.நா.மங்கலம், ஜலகண்டாபுரம், கூட்டாத்துப்பட்டி, விளாம்பட்டி, அனுப்பூர், எஸ்.என்.மங்கலம், கருமாபுரம், மேட்டுப்பட்டி என மொத்தம் 21 இடங்களில் மு.க.ஸ்டாலின் திறந்த வேனில் இருந்தவாறு தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்.தொடர்ந்து இன்று, நாளை, நாளை மறுநாள் என்று இன்னும் 3 நாட்கள் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க அனுமதி ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு அப்பீல் மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்

Posted: 29 Nov 2013 11:26 AM PST

புதுடெல்லி

கேரள மாநிலம், கொச்சியில் இருந்து குட்ட நாடு, மங்களூர் வழியாக, கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு குழாய்கள் வழியாக எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை மத்திய அரசின் கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

தமிழக அரசு உத்தரவு

ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டத்தின்படி, தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய 7 மாவட்டங்களில் விவசாய விளை நிலங்கள் வழியாக குழாய்கள் பதிக்கும் பணி தொடங்கியது.

அதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் கோரிக்கையில் நியாயம் இருப்பதை உணர்ந்த தமிழக அரசு, கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணியை கைவிட வேண்டும் என்று, கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. தேசிய நெடுஞ்சாலை ஓரமாக குழாய்களை பதிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.

ஐகோர்ட்டு அனுமதி

தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கெயில் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கெயில் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, விளை நிலம் வழியாக எரி வாயு குழாய்களை பதிக்க அனுமதி வழங்கி தீர்ப்பு கூறியது.

''இந்த பிரச்சினையில் மக்களின் விருப்பத்தைக்கேட்டு தமிழக அரசு எடுத்துள்ள முடிவு சரிதான் என்றாலும், பெரும்பான்மை மக்களின் நலனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும்'' என்றும், தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்

ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மேல் முறையீடு (அப்பீல்) மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாதபடி எரி வாயு குழாய்களை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக கொண்டு செல்ல உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

சவுராஷ்டிராவுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி 565 ரன்கள் குவிப்பு தினேஷ் கார்த்திக் சதம்

Posted: 29 Nov 2013 11:23 AM PST

சென்னை,

ரஞ்சி கிரிக்கெட்டில் சவுராஷ்டிராவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 565 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

தமிழக அணி மிரட்டல்

இந்த சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 'பி' பிரிவில் தமிழ்நாடு–சவுராஷ்டிரா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த தமிழக அணி முதல் நாளில் 2 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்திருந்தது. அபினவ் முகுந்த் 103 ரன்களுடனும், பாபா அபராஜித் 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2–வது நாளான நேற்றும் தமிழக பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நீடித்தது. அபராஜித் 50 ரன்களில் வெளியேற அடுத்து விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் களம் கண்டார். அதிர்ஷ்டவசமாக 25 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்தார். அவரும், முகுந்தும் நிலைத்து நின்று விளையாடி அணி இமாலய ஸ்கோரை நோக்கி பயணிக்க உதவினர்.

தனது 19–வது முதல்தர சதத்தை பூர்த்தி செய்த தினேஷ் கார்த்திக் 133 ரன்களில் (192 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். மறுமுனையில் அபாரமாக ஆடி 6–வது முதல்தர இரட்டை சதத்தை எட்டிய முகுந்த் 240 ரன்களில் (437 பந்து, 20 பவுண்டரி, ஒரு சிக்சர்) கிளீன் போல்டு ஆனார். முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 565 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. சவுராஷ்டிரா தரப்பில் ஜெயதேவ் உனட்கட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி 2–வது நாள் முடிவில் 5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 12 ரன்கள் எடுத்திருந்தது.

மும்பை மீண்டது

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியன் மும்பை–விதர்பா அணிகள் இடையிலான ஆட்டம் நடக்கிறது. இதில் முதல் இன்னிங்சில் மும்பை அணி 261 ரன்களில் ஆட்டம் இழந்ததை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி வெறும் 113 ரன்களில் சுருண்டது. மும்பை கேப்டன் ஜாகீர்கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 148 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய மும்பை அணி 2–வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 179 ரன்கள் சேர்த்துள்ளது. ஆதித்ய தாரே 110 ரன்களுடனும், ரஹானே 62 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள்.

யூசுப் பதான் சதம்

வதோதராவில் நடக்கும் மத்திய பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 92 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய பரோடா அணி 244 ரன்களில் ஆல்–அவுட் ஆனது. அதிரடி காட்டிய பரோடா கேப்டன் யூசுப் பதான் 104 ரன்கள் (101 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்) குவித்து களத்தில் இருந்தார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 337 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய மத்தியபிரதேச அணி 5 விக்கெட்டுக்கு 58 ரன்களுடன் தோல்வியின் பாதையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

3–வது நாள் ஆட்டங்கள் இன்று நடக்கின்றன.

category:

உலக கோப்பை கால்பந்தில் கால் இறுதிக்கு முன்னேறாவிட்டால் ஜெர்மனி அணியினருக்கு போனஸ் கிடையாது

Posted: 29 Nov 2013 10:55 AM PST

பெர்லின்,

நடப்பு சாம்பியன் ஸ்பெயின், பிரேசில் உள்பட 32 அணிகள் பங்கேற்கும் 20–வது உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் அடுத்த ஆண்டு ஜூன்–ஜூலையில் நடக்கிறது. இந்த போட்டிக்கு தகுதி பெற்றுள்ள அணிகளில் 3 முறை சாம்பியனான ஜெர்மனியும் (1954, 1974, 1990) அடங்கும். உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டியில் கோப்பையை வெல்லும் அணியினர் கோடியில் நனைவது சர்வசாதாரண விஷயமாகும்.

1990–ம் ஆண்டுக்கு பிறகு உலக கோப்பையை உச்சிமுகராத ஜெர்மனி அணி குறைந்தபட்சம் கால் இறுதிக்கு தகுதி பெற்றால் தான் அந்த அணியின் வீரர்களுக்கு போனஸ் தொகை வழங்கப்படும் என்று அந்த நாட்டு கால்பந்து சங்கம் நேற்று அறிவித்துள்ளது. வெற்றிக்கு தகுந்த படி போனஸ் என்ற கொள்கையை வீரர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். உலக கோப்பையை வென்றால் ரூ.2.5 கோடியும்,. கால் இறுதிக்கு தகுதி பெற்றால் ரூ.42 லட்சமும், அரை இறுதிக்குள் நுழைந்தால் ரூ.84 லட்சமும், இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தால் ரூ.1.25 கோடியும் ஒவ்வொரு வீரருக்கும் போனஸ் தொகையாக அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

category:

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பொருளாதாரத்தில் 4.8 சதவீத வளர்ச்சி

Posted: 29 Nov 2013 10:27 AM PST

புதுடெல்லி,

நிபுணர்களின் மதிப்பீடுகளுக்கு இணையாக, நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை–செப்டம்பர்) நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, முதல் காலாண்டு வளர்ச்சியை காட்டிலும் 0.4 சதவீதம் அதிகமாகும்.

நான்கு காலாண்டுகளாக...

2012 டிசம்பர் மற்றும் 2013 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி முறையே 4.7 சதவீதம் மற்றும் 4.8 சதவீதமாக இருந்தது. ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வளர்ச்சி 4.4 சதவீதமாக குறைந்தது. ஆக, தொடர்ந்து நான்கு காலாண்டுகளாக பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

கடந்த 2010 மற்றும் 2011–ஆம் ஆண்டுகளில் மொத்த விலை பணவீக்கம் சராசரியாக 10 சதவீதமாக இருந்தது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி 2010 மார்ச் மாதத்திலிருந்து 2011 அக்டோபர் வரையிலான 20 மாதங்களில் முக்கிய கடனிற்கான வட்டியை 13 முறை உயர்த்தியது.

வட்டிச் செலவினம்

இதன் காரணமாக நிறுவனங்களின் வட்டிச் செலவினம் அதிகரித்தது. மேலும், நிறுவனங்களும் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தயக்கம் காட்டி வந்தன. இதுபோன்ற காரணங்களால், கடந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5 சதவீதமாக குறைந்தது.

நடப்பு ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி 8 சதவீதம் அதிகரித்துள்ளது. அம்மாதத்தில் தொழில் துறையிலும் 2 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் தொழில்துறை உற்பத்தி 1.1 சதவீதம் குறைந்தது. இரண்டாவது காலாண்டில் உற்பத்தி 1.7 சதவீதம் உயர்ந்துள்ளது. பொருளாதாரத்தை கணக்கிடுவதில் தொழில்துறையின் பங்கு 26 சதவீதமாக உள்ளது. இரண்டாவது காலாண்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.

ஏற்றுமதி

முதல் காலாண்டில் சரக்குகள் ஏற்றுமதி 1.4 சதவீதம் குறைந்து இருந்தது. இந்நிலையில், மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தால் ஏற்றுமதியில் விறுவிறுப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. இரண்டாவது காலாண்டில் ஏற்றுமதியில் இரட்டை இலக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் செலவினம் முதல் காலாண்டைக் காட்டிலும் இரண்டாவது காலாண்டில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

வேளாண் துறை உற்பத்தி

நாட்டின் மக்கள் தொகையில் 60 சதவீதத்தினர் வேளாண்மை மற்றும் அது சார்ந்த தொழில்களை சார்ந்துள்ளனர். எனினும், பொருளாதார வளர்ச்சியை எடுத்துக்காட்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறையின் பங்கு 14.1 சதவீதமாகத்தான் உள்ளது. பருவமழை நன்றாக உள்ளதால் உணவு தானியங்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இரண்டாவது காலாண்டில் வேளாண் துறை உற்பத்தி 4.6 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலாண்டு வளர்ச்சியை (1.7 சதவீதம்) காட்டிலும் இரண்டு மடங்கிற்கு மேல் அதிகமாகும்.

அனுமதி பெறுதல், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் முடங்கி கிடக்கும் திட்டங்களை முடுக்கி விடும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரூ.3.50 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி அளித்தது.

இந்நிலையில், ஏற்றுமதி அதிகரித்து இறக்குமதி குறைந்து வருவதால் நடப்பு நிதி ஆண்டில் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில்) நடப்பு கணக்கு பற்றாக்குறை 2.5 சதவீதமாக குறையும் என சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர வாய்ப்புள்ளது.

நம்பிக்கை

இதுபோன்ற காரணங்களால் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டிலிருந்து நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என ப.சிதம்பரமும், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனவே, இந்த நிதி ஆண்டில் பொருளாதாரத்தில் 5.3 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசனைக் குழுவும், 5.5 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என நிதி அமைச்சகமும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

கடந்த 2005–06, 2006–07 மற்றும் 2007–08 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டிலும் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. உலக பொருளாதார சீர்குலைவால் 2008–09–ஆம் நிதி ஆண்டில் வளர்ச்சி 6.7 சதவீதமாக குறைந்தது. மத்திய அரசு பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் உற்பத்தி மற்றும் சேவை வரிகளை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கியது. இதன் காரணமாக 2009–10–ஆம் நிதி ஆண்டில் 8.4 சதவீதமாகவும், 2010–11–ஆம் நிதி ஆண்டில் 9.3 சதவீதமாகவும் பொருளாதார வளர்ச்சி உயர்ந்தது.

category:

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Posted: 29 Nov 2013 10:14 AM PST

திருமலை

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரம்மோற்சவ விழா

திருப்பதி அருகே உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 7–ந் தேதி வரை 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி நேற்று காலை 8 மணி முதல் 9 மணி வரை திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து காலை 9 மணி முதல் 9.15 மணிக்குள் கோவில் அர்ச்சகர்கள், வேதபண்டிதர்கள் கோவில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றினர்.

சின்ன சேஷ வாகனத்தில் வீதி உலா

கொடியேற்றத்தை தொடர்ந்து காலை 11 மணி வரை உற்சவர் பத்மாவதி தாயாருக்கு பேரி தாண்டவம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை கோவில் ஸ்ரீகிருஷ்ண மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஊஞ்சல் சேவையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரை சின்ன சேஷ வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்த கோவில் கொடியேற்றம் மற்றும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று(சனிக்கிழமை) 2–ம் நாள் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

 

category:

News Group Category:

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால் பணவீக்கத்தை அதிகம் கட்டுப்படுத்த முடியாது ப.சிதம்பரம் கருத்து

Posted: 29 Nov 2013 09:49 AM PST

பாரத ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை நடவடிக்கைகளால் விலைவாசி உயர்வை அதிகம் கட்டுப்படுத்த முடியாது என்றும், உணவு மற்றும் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால்தான் பணவீக்கம் உயர்ந்துள்ளது என்றும் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் 0.25 சதவீதம் அதிகரித்து 10.09 சதவீதமாக உயர்ந்துள்ளது. அம்மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு 7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

எனவே, ரிசர்வ் வங்கி டிசம்பர் 18–ந் தேதி வெளியிடும் பணக் கொள்கை ஆய்வு அறிக்கையில் பாரத ரிசர்வ் வங்கியிடமிருந்து குறுகிய கால அடிப்படையில் வங்கிகள் பெறும் கடனிற்கான வட்டியை (ரெப்போ ரேட்) உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ள நிலையிலும் சென்ற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ரெப்போ ரேட் மொத்தம் 0.50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 2014–15–ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதாரத்தில் 6 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மின் உற்பத்தி கடுமையாக பாதிப்பு: சென்னையில் மீண்டும் 2 மணி நேர சுழற்சி மின்தடை 2–ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது

Posted: 29 Nov 2013 09:49 AM PST

சென்னை

மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து, 5 மாதங்களுக்கு பிறகு சென்னையில் மீண்டும் 2 மணி நேர மின்தடை வரும் 2–ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மின் உற்பத்தி கடுமையாக பாதிப்பு

தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் அனல் மின்சார நிலையம், புனல் மின்சார நிலையம், காற்றாலைகள் மற்றும் டீசல் உட்பட பல்வேறு வழிகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, மின்நுகர்வோர்களுக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி அனல்மின்சார நிலையத்தில் 400 மெகாவாட் உற்பத்தி செய்யும் அலகு, வடசென்னை அனல்மின்சார நிலையத்தில் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் 2 அலகுகள் மற்றும் வல்லூர் அனல் மின்சார நிலையத்தில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அலகுகளில் ஏற்பட்ட பழுதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர நீர்மின்சாரம் உற்பத்தி செய்யும் மின்சார நிலையத்திலும் 885 மெகாவாட் என்ற அளவில் மின்சார உற்பத்தி குறைந்து உள்ளது. தொடர்ந்து காஸ் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் யூனிட்டிலும் 135 மெகாவாட் மற்றும் காற்றாலை மின்சாரம் மூலம் 12 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தியும் வெகுவாக குறைந்துவிட்டது.

2 ஆயிரத்து 500 மெகாவாட் பற்றாக்குறை

வடகிழக்கு பருவ மழை பெய்யும் காலத்தில்(தற்போது) 10 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் சராசரியாக தேவைப்படுகிறது. கல்பாக்கம், நெய்வேலி உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் ஒரே சமயம் பழுது ஏற்பட்டுள்ளதால், மின்சார உற்பத்தி குறைந்ததுடன், மொத்த உற்பத்தியும் தொடர்ந்து சரிந்து வருகிறது.

மின்சாரம் தயாரிக்க தேவையான நிலக்கரி மற்றும் நாப்தா ஆகியவற்றிற்கு கடுமையாக தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால், 2 ஆயிரத்து 500 மெகாவாட் அளவுக்கு மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

சராசரியாக 1,800 மெகாவாட் அளவுக்கு மின்சார உற்பத்திக்கும், தேவைக்கும் இடையே வித்தியாசம் ஏற்பட்டு உள்ளது. இதனால் சென்னை தவிர பிற மாவட்டங்களில் 4 முதல் 6 மணிநேரம் வரை மின்சாரம் தடை செய்யப்பட்டு வருகிறது.

2–ந்தேதி முதல் மின்தடை அமல்

இந்தநிலையில் உற்பத்திக்கும், தேவைக்குமான மின் உற்பத்தி தொடர்ந்து இழப்புடன் இருந்து வருகிறது. இதனால் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு வரும் 2–ந்தேதி(திங்கட்கிழமை) முதல் சென்னையில் மீண்டும் சுழற்சிமுறையில் 2 மணி நேரம் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் சுழற்சிமுறையில் மின்தடை ஏற்படும் இடங்கள் மற்றும் நேர விவரம் பின்வருமாறு:

காலை 8 மணி முதல் 10 மணி–

 புரசைவாக்கம் (ஒரு பகுதி), டவுட்டன். தேனாம்பேட்டை (ஒரு பகுதி), அண்ணா சாலை (ஒரு பகுதி), கேத்ரெல் ரோடு (ஒரு பகுதி). தியாகராய நகர், பாண்டி பஜார், தெற்கு உஸ்மான் ரோடு. எம்.ஆர்.சி. நகர், கற்பகம் அவின்யு, கிரீன்வேஸ் லேன், ராணிமெய்யம்மை டவர், கே.வி.பி. கார்டன், சீனிவாசா அவின்யு, அண்ணா சாலை (ஒரு பகுதி), கிரீம்ஸ் ரோடு, ஒயிட்ஸ் ரோடு (ஒரு பகுதி), ருக்மணி லட்சுமிபதி சாலை, எத்திராஜ் சாலை, ரஹேஜா வளாகம். மூர்த்திங்கள் லேன், காமராஜ் சாலை. மைலாப்பூர் (ஒரு பகுதி), பூக்கடை, பாரிமுனை, பிராட்வே, எசுஸ்பிளனேடு (ஒரு பகுதி), அண்ணா பூங்கா, மூலக்கடை, முத்தமிழ் நகர், கொளத்தூர், லட்சுமிபுரம், செம்பியம் (ஒரு பகுதி),

மணலி, ஜி.கே.எம். காலனி, எஸ்.ஆர்.பி. காலனி, வியாசர்பாடி தொழிற்பேட்டை, டி.எல்.எப். கிண்டி தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கலைமகள் நகர், ஜி.எஸ்.டி. சாலை (ஒரு பகுதி), நேரு நகர், கடப்பேரி, மெப்பஸ் பகுதி, கிழக்கு கடற்கரை சாலை, எம்.ஜி.ஆர். சாலை, வி.ஜி.பி. சிவார்டு ரோடு, மகேந்திரா சத்தியம் போரூர், ஆற்காடு ரோடு (ஒரு பகுதி), சோழிங்கநல்லூர், தரமணி தொழிற்பேட்டை, என்.எம்.எம். ரோடு, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி, பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஒரு பகுதி), சூளைமேடு (ஒரு பகுதி), 100 அடி சாலை (ஒரு பகுதி). கொரட்டூர், பாடி (ஒரு பகுதி), கோயம்பேடு மார்க்கெட், சின்மயா நகர், நடேசன் நகர். பாண்டேஸ்வரம். புழல், செங்குன்றம் (ஒரு பகுதி). சோத்துபெரும்பெடு., அலமாதி.

காலை 10 மணி முதல் 12 மணி–

அண்ணா சாலை (ஒரு பகுதி), ஜி.பி.ரோடு. ஓமந்தூர் அரசினர் தோட்டம், பாரதிச் சாலை, திருவல்லிக்கேனி, தாயார் சாஹிப் தெரு, பெரிய தெரு, வாலாஜா ரோடு. சைதாப்பேட்டை, சி.ஐ.டி. காலனி, இந்து இன்பரா டமேலோஸ் ரோடு, பிரூசி மில் பகுதி, புளியந்தோப்பு, ராயப்பேட்டை, லாய்ட்ஸ் ரோடு, பாலாஜி நகர், பீட்டர்ஸ் ரோடு, ஆயிரம்விளக்கு பகுதி, ஒயிட்ஸ் ரோடு, வடபெரும்பாக்கம், மணலி, நாப்பாளையம், டி.எச். ரோடு (ஒரு பகுதி), ஜி.எ.ரோடு, கும்மாளியம்மன் கோவில் தெரு, தாண்டவராயன் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை. ஜி.கே.எம். காலனி, எஸ்.ஆர்.பி. காலனி, திருவொற்றியூர். கோட்டூர்புரம், டேன்புள்ஸ் ரோடு, கஸ்தூரி நகர், மாடம்பாக்கம். குரோம்பேட்டை, கடப்பேரி, பம்மல். குரோம்பேட்டை (ஒரு பகுதி), பல்லாவரம், ராமசாமிச் சாலை, பா£க் வியூ ரோடு, எஸ்.ஆர்.எம். மெடிக்கல் காலேஜ், அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம் செட்டியார் அகரம் பெரும்பாக்கம், திருமுடிவாக்கம், விஜயா நகரம், வேளச்சேரி நெடுஞ்சாலை, தான்டீஸ்வரம். கீழ்கட்டளை, கோவிலம்பாக்கம், நன்மங்கலம். அண்ணா நகர் (ஒரு பகுதி), கீழ்பாக்கம் கார்டன் ரோடு, ராஜ் நாயக்கன் தெரு, புது ஆவடி ரோடு, மேடவாக்கம் டேங்க் ரோடு, வானகரம், மதுரவாயல், முகப்பேர் (கிழக்கு), பட்டாபிராம், திருநின்றவூர், வள்ளுவர் நெடுஞ்சாலை, அண்ணா நகர் (ஒரு பகுதி). திருவேற்காடு.

மதியம் 12 மணி முதல் 2 மணி–

 ராஜா அண்ணாமலைப் புரம், தேனாம்பேட்டை (ஒரு பகுதி), லஸ் (ஒரு பகுதி), இந்திரா நகர் (ஒரு பகுதி), மயிலாப்பூர் (ஒரு பகுதி). பெல்ஸ் ரோடு, சேப்பாக்கம். கொண்ணூர் நெடுஞ்சாலை, ஸ்ராஹென்ஸ் ரோடு, பட்டினப்பாக்கம், காமராஜ் சாலை, மந்தைவெளி (ஒரு பகுதி), ராஜா அண்ணாமலைப்புரம் (ஒரு பகுதி). உயர்நீதிமன்றம், என்.எஸ்.சி. போஸ் சாலை, குறளகம், ஆர்மீனியன் தெரு, 2வது லென், கடற்கரை, தம்புச் செட்டி தெரு, எர்ரபாலுச் செட்டி தெரு. கடற்கரைச் சாலை, ஏழு கிணறு பகுதி, மன்னடி. ஸ்பென்சர், அண்ணாசாலை (ஒரு பகுதி), மகாலிங்கபுரம் (ஒரு பகுதி), காம்தார் நகர், நுங்கம்பாக்கம் (ஒரு பகுதி). மேற்கு மாம்பலம், மேட்லி ரோடு, ஜூப்லி ரோடு, பிருந்தாவன் தெரு, அசோக் நகர் (ஒரு பகுதி), கே.கே.நகர் (ஒரு பகுதி). ஸ்பர்டாங்க் சாலை, மான்டியத் ரோடு, காசமேஜர் ரோடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஒரு பகுதி), எ.சி.ரோடு, ரெட் க்ராஸ் சோசைட்டி, பவுளடைன் பிளாசா, எல்.என்.டி. கோவில் தெரு, கெங்கு ரெட்டி கோவில் தெரு, டி.வி.நாயுடு தெரு, எண்ணூர், தண்டையார்பேட்டை (ஒரு பகுதி), மாத்தூர், சிட்கோ (வில்லிவாக்கம்). ஆர்.கே.நகர், தண்டையார்பேட்டை (ஒரு பகுதி), கோவூர், குன்றத்தூர், மாங்காடு, பெரிய பனிச்சேரி, கிருகம்பாக்கம், குமணன்சாவடி, கரையான்சாவடி, கோரிமேடு, பூந்தமல்லி டவுன், நொம்பல், காடுவெட்டி, புதுதாங்கல். ராஜ்பவன், கிளாசிக் மால், செயின்ட் தாமஸ் மவுன்ட்(பரங்கிமலை), ஆதம்பாக்கம் (ஒரு பகுதி), மீனம்பாக்கம். துரைப்பாக்கம். ஸ்பாஸ்டிக் சோசைட்டி, டி.டி.டி.ஐ., ஆர்.எம்.இசட். ஆவடி (ஒரு புகுதி), டாங்க் தொழிற்சாலை, திருமுல்லைவாயல் (ஒரு புகுதி) சேத்பெட், ஸ்டரான்லிங்க் சாலை, நுங்கம்பாக்கம் (ஒரு பகுதி), பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜ் நகர், ஆவடி (ஒரு பகுதி). அம்பத்தூர், பட்டரவாக்கம், அண்ணா நகர் 2,4,5,7–வது அவின்யு, டாஸ் காம்ப்ளக்ஸ், அம்பத்தூர் தொழிற்பேட்டை (ஒரு பகுதி), அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருமுல்லைவாயல், முகப்பேர் (ஒரு பகுதி). டி.ஐ.சைக்கிள்.

மதியம் 2 மணி முதல் 4 மணி–

 சிந்தாதிரிப்பேட்டை 110 கி.வோ., அண்ணாசாலை (ஒரு பகுதி), புதுப்பேட்டை, சிம்சன், எழும்பூர் (ஒரு பகுதி). புரசைவாக்கம் நெடுஞ்சாலை, செக்ரடேட் காலனி, டவுட்டன் (ஒரு பகுதி), ஆம்ஸ் ரோடு, பிளவர் ரோடு, பால்பர் ரோடு, டவர் ப்ளாக், பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஒரு பகுதி), அண்ணாசாலை (ஒரு பகுதி), எஸ்.எம்.நகர், கே.பி.தாசன்ரோடு, தியாகராயநகர் (ஒரு பகுதி), எல்டாமஸ்ரோடு, நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, கேத்ரல் ரோடு (ஒரு பகுதி), கே.என்.கே. ரோடு, ஜி.என்.செட்டி ரோடு (ஒரு பகுதி), அவ்வை சண்முகம் சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை. டாக்டர் பெசன்ட் ரோடு, மீர்சாகிப்பேட், ஷேக் தாவூத் தெரு, பேகம் சாகிப் தெரு, அமீர் மஹால், பெருமாள் முதலி தெரு, பாரதிச் சாலை (ஒரு பகுதி), வடக்கு உஸ்மான் சாலை முழுவதும், வள்ளலார் நகர், கொண்டிதோப்பு, ஜட்காபுரம், சின்னப்புரம், எஸ்பிளனேடு (ஒரு பகுதி), காலடிப்பேட்டை, பெரம்பூர் (ஒரு பகுதி), கொளத்தூர், அயனாவரம (ஒரு பகுதி), வில்லிவாக்கம் (ஒரு பகுதி, ஐ.சி.எப் (ஒரு பகுதி). அயனாவரம் (ஒரு பகுதி), வல்லிவாக்கம் (ஒரு பகுதி), ஜ.சி.எப்.,(ஒரு பகுதி, ஸ்டான்லி, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, பழைய சிறைச் சாலை, ராயப்புரம் (ஒரு பகுதி), கோபால் நாயக்கன் தெரு, ஆலந்தூர், கே.கே.நகர் (ஒரு பகுதி), அழகிரி சாலை, கோவிந்தன் சாலை, கிண்டி (ஒரு பகுதி), பொன்னம்பலம் சாலை, ராமச்சாமி சாலை, எம்.ஜி.ஆர். நகர், பாரதிதாசன் காலனி, மேற்கு மாம்பலம் (ஒரு பகுதி), அசோக் நகர் (ஒரு பகுதி), குரோம்பேட்டை, பல்லாவரம், கடப்பேரி (ஒரு பகுதி), மெப்ஸ் (ஒரு பகுதி), பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்குடி தொழிற்பேட்டை, பெருங்குடி, நங்கநல்லூர் (ஒரு பகுதி), பெசன்ட் நகர், ஜே.ஆர்.நகர், மாளவிய காலனி, தாம்பரம், இந்திரா நகர், பூந்தமல்லி (ஒரு பகுதி), நசரத் பேட்டை, நங்கநல்லூர் (ஒரு பகுதி), ஆதம்பாக்கம் (ஒரு பகுதி). விருகம்பாக்கம், தாசரதபுரம், வடபழனி (ஒரு பகுதி), ஆற்காடு ரோடு (ஒரு பகுதி),சத்யா கார்டன், அண்ணா நகர் (ஒரு பகுதி), செனாய் நகர், ஆர்.வி.நகர், டி.பி.சத்திரம், எஸ்.ஏ.எப். அய்யப்பாக்கம், மகாலிங்க புரம் (ஒரு பகுதி), காம்தார் நகர். கேம்ஸ் வில்லேஜ், சின்மயா நகர் (ஒரு பகுதி), ஜெகன்நாதன் நகர், 100 அடி ரோடு (ஒரு பகுதி), கோயம்பேடு, அண்ணாநகர் (மேற்கு), திருமங்கலம் (ஒரு பகுதி),அண்ணாநகர் (மேற்கு) எக்ஸ்டஷன்.

மாலை 4 மணி முதல் 6 மணி–

கல்லூரி சாலை, கிரீம்ஸ் ரோடு (ஒரு பகுதி). எழும்பூர், பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஒரு பகுதி), புரசைவாக்கம் (ஒரு பகுதி), ஸ்பர்டாங் ரோடு, எம்.எம்.டி.எ. என்.எஸ்.சி.போஸ் ரோடு, தம்புச் செட்டி தெரு (ஒரு பகுதி), பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஒரு பகுதி), மைலாப்பூர் (ஒரு பகுதி), லஸ் (ஒரு பகுதி), நந்தனம் குடியிருப்பு, லோட்டஸ் காலனி, டவர் ப்ளாக், சினிடாப் ரோடு, சேம்மியர்ஸ் ரோடு, சாதுல்லா தெரு, தியாகராய நகர் (ஒரு பகுதி), சி.ஐ.டி. நகர், மோத்திலால் தெரு, ராமஸ்வேரம் ரோடு, நடேசன் ரோடு, ஆர்.கே. சாலை, டி.டி.கே. சாலை, சி.ஐ.டி. காலனி, கோபாலபுரம் (ஒரு பகுதி), பி.எஸ்.சிவசாமி சாலை, சென்ட்ரல் ரோடு, ஜாப்பர்கான் பேட்டை, அயனாவரம், வில்லிவாக்கம், ஐ.சி.எப்., கே.கே.நகர் (ஒரு பகுதி), போஸ்டல் காலணி (மேற்கு மாம்பலம்), சைதாப்பேட்டை (மேற்கு), வி.எஸ்.எம்.கார்டன், பெருமாள் கோவில் தெரு, கொடுங்கையூர், எஸ்பிளனேடு (ஒரு பகுதி), கிழக்கு ஜார்ஜ் டவுன், ராயப்புரம் (ஒரு பகுதி), செம்பியம், மாதவரம், திரு.வி.க.நகர், வியாசர்பாடி (ஒரு பகுதி), பெரம்பூர் (ஒரு பகுதி). டோல்கேட், செர்ரி ரோடு, ஆற்காடு ரோடு (ஒரு பகுதி), வளசரவாக்கம். ஈஞ்சம்பாக்கம். இ.டி.எல். கிண்டி தொழிற்பேட்டை, சேலையூர், தாம்பரம் (ஒரு பகுதி), சூளைமேடு, கோடம்பாக்கம், வடக்கு உஸ்மான் சாலை (ஒரு பகுதி), வடபழனி (ஒரு பகுதி), அசோக் நகர், ட்ரஸ்ட் புரம். மடிப்பாக்கம். பெருங்களத்தூர். பாரதி சாலை, வள்ளுவர் சாலை, முகலிவாக்கம், மனப்பாக்கம், ராமப்புரம், சிறுச்சேரி தொழிற்பேட்டை. இந்திராநகர், கலாநேத்ரா காலணி, சீவார்டு ரோடு, வால்மிகீ நகர், அவ்வை நகர், கனபதி நகர், திருவள்ளுவர் நகர், வாசுதேவன் நகர், பாலவாக்கம். அம்பத்தூர் தொழிற்பேட்டை. முகப்பேர், திருமங்கலம் (ஒரு பகுதி).டியுப் பிராடட்டு நொளம்பூர். பாடி.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

News Group Category:

அளவின் அடிப்படையில் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி 20% உயர்வு

Posted: 29 Nov 2013 09:41 AM PST

பி.கே. கிருஷ்ணகுமார்

கொச்சி

நடப்பாண்டு ஏப்ரல்–செப்டம்பர் மாத காலத்தில் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி அளவின் அடிப்படையில் 20 சதவீதமும், ரூபாய் மதிப்பு அடிப்படையில் 43 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு இதற்கு சாதகமாக இருந்ததாக தெரிகிறது. இதே வேகம் நீடிக்குமானால் நடப்பு நிதி ஆண்டில் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி ரூ.15 ஆயிரம் கோடிக்கும் அதிகமான அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நிதி ஆண்டில் (2012–13) மொத்தம் ரூ.11,171 கோடி மதிப்பிற்கு 6.99 லட்சம் டன்னுக்கும் அதிகமாக நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி ஆகியிருந்தது.

2012 ஏப்ரல்–செப்டம்பர் மாத காலத்தில் ரூ.4,286 கோடிக்கு 3.15 லட்சம் டன் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதியாகியுள்ளன. 2013–ஆம் ஆண்டின் இதே காலத்தில் ரூ.6,118 கோடிக்கு 3.79 லட்சம் டன் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அளவின் அடிப்படையில் சரிவு கண்டிருந்தாலும், மதிப்பின் அடிப்படையில் மிளகாய், இஞ்சி, பூண்டு ஏற்றுமதி நன்கு அதிகரித்துள்ளது. நறுமணப் பொருள்கள் ஏற்றுமதியில் மிளகாயின் பங்கே அதிகமாக உள்ளது. தெலுங்கானா பிரச்சினையால் ஏற்றுமதி அளவு குறைந்திருந்தாலும் ஏற்றுமதியில் மிளகாயின் கணிசமான பங்களிப்பு நீடிக்கிறது.

image: 

category:

வெடிகுண்டு வீசி பெண் படுகொலை; உறவினர் கைது வீட்டில் இருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

Posted: 29 Nov 2013 09:18 AM PST

திருவாரூர்,

வெடிகுண்டு வீசி பெண் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது உறவினர் கைது செய்யப்பட்டார். அவர் வீட்டில் இருந்து மேலும் 4 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வெடிகுண்டு வீச்சு

திருவாரூர் மாவட்டம் பேரளம் தண்டத்தோப்பு தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 40). ஸ்டாலினுக்கும், அவரது மாமா ராமன் ஆகியோருக்கு இடையே சொத்து தகராறு இருந்துவந்தது. நேற்று இரவு ஸ்டாலினுக்கும், ராமனுக்கும் இடையே தகராறு நடந்தது.

இதில் ஸ்டாலின் தான் வைத்திருந்த கையெறி நாட்டு வெடிகுண்டை வீசினார். இதில் அந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில் சம்பவ இடத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு மாமா பன்னீரின் மருமகள் லதா (33) பரிதாபமாக உயிரிழந்தார்.

உறவினர் கைது

தகராறில் கூடியிருந்த கூட்டம் அருகே வெடிகுண்டு வீசப்பட்டதால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். வெடித்த வெடிகுண்டின் உதிரி பாகங்கள் சேகரிக்கப்பட்டன. வெடிகுண்டு வீசிய ஸ்டாலின் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

ஸ்டாலின் மீது ஏற்கனவே பேரளம் போலீஸ் நிலையத்தில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். ஸ்டாலினின் வீட்டில் போலீசார் அன்று இரவே அதிரடியாக சோதனை நடத்தினர்.

4 வெடிகுண்டுகள் பறிமுதல்

இதில் அவருடைய வீட்டு தோட்டத்தில் அபாயகரமான 4 வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அவை உள்ளூரில் தயாரிக்கப்படும் நாட்டு வெடிகுண்டுகள் என்பது தெரியவந்தது. வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் அந்த வெடிகுண்டுகளை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வெடிக்க செய்தனர்.

இந்த வெடிகுண்டு கோஷ்டி மோதலின்போது பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக பயன்படுத்துபவை. நக்சலைட்டுகளும் இந்த வகை வெடிகுண்டுகளை அதிகம் பயன்படுத்துவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

அவரே தயாரித்தாரா?

ஸ்டாலினுக்கு அந்த வெடிகுண்டுகள் எப்படி கிடைத்தன? அவரே தயாரித்தாரா? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். வெடிகுண்டை போல ஸ்டாலினிடம் வேறு சில பயங்கர ஆயுதங்கள் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததால் ஸ்டாலின் மற்றும் அவருடைய உறவினர் வீடுகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™