Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


மாநில அளவிலான கபடி போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

Posted: 25 Nov 2013 11:44 AM PST

நொய்யல்,

புன்னம் சத்திரத்தில் நடந்த மாநில அளவி லான கபடி போட்டியில் வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு பரிசு வழங்கப் பட்டது.

கபடி போட்டி

கரூர் மாவட்டம் புன்னம் சத்திரத்தில் மாநில அளவி லான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி தொடங்கியது. கபடி போட்டியை ராசமா கல்வி நிறுவனங்களின் தலைவர் கு.வடிவேல் மற்றும் புன்னம் ஊராட்சி தலைவர் வி.சுப்பிரமணியம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடக்க விழாவில் இளங் கோவன் வரவேற்றார். ஊராட்சி துணைத் தலைவர் மாலதி முருகேசன் முன்னிலை வகித்தார். விளையாட்டு ஒருங் கிணைப்பாளர்களாக செல்வ ராஜ், பழனிச்சாமி செயல் பட்டனர். நடுவர்களாக அண்ணாதுரை, திருமுருகன், ரமேஷ், முருகேசன், விஜய குமார், ராமசாமி, கோவிந்த ராஜ், ராஜா ஆகியோர் செயல்பட்டனர். கரூர், திண்டுக்கல், மதுரை, நாமக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கபடிக்குழுவினர் கலந்து கொண்டு விளையாடினர்.

இதையடுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது.

ஆண்கள் அணிக்கான பரிசு

ஆண்கள் பிரிவில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் அணி முதல் பரிசும், இந்தியன் மீண்டும் அணி 2-வது பரிசும், சென்னை ஹைடெக் அணி 3-வது பரிசும், வெங்கரை கரிகா லன் அணி 4-வது பரிசும் பெற்றன. சிறந்த விளையாட்டு வீரருக்கான பரிசு ஒரு கிராம் தங்கத்தை மத்திய மண்டல போலீஸ் அணியை சேர்ந்த வீரர் இளையராஜா பெற் றார்.

பெண்கள் அணிக்கான பரிசு

பெண்கள் பிரிவில் மேட்டூர் கரிகாலம் அணி முதல் பரிசும், சேலம் ஏ.வி.எஸ். அணி 2-வது பரிசும், கரூர் கொங்கு கல்லூரி அணி 3-வது பரிசும், கன்னியாகுமரி திருணை அணி 4-வது பரிசும் பெற்றன. சிறந்த விளையாட்டு வீராங் கனைக்கான பரிசை சேலம் ஏ.வி.எஸ். அணியை சேர்ந்த மணி மேகலை என்ற வீராங்கனை பெற்றார்.

ஆண்கள் பிரிவு அணிக்கு புன்னம் கூட்டுறவு வங்கி தலைவர் சுப்பிரமணியும், பெண்கள் பிரிவு அணிக்கு பரமத்தி ஒன்றிய கவுன்சிலர் வடிவேலும் பரிசுகளை வழங்கினர். விளையாட்டு போட்டிகளுக் கான ஏற்பாடுகளை பி.என்.ஆர். பிரதர்ஸ் கபடிக் குழுவினர் செய்துள்ளனர்.

கோமாரி நோயை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கருணாநிதி வலியுறுத்தல்

Posted: 25 Nov 2013 11:33 AM PST

சென்னை,-

கோமாரி நோயை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கோமாரி நோய்

கேள்வி:–கோமாரி நோய் காரணமாகப் பாதிக்கப்படும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறதே?

பதில்:– கடந்த ஒருமாத காலமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்தக் கோமாரி நோய் பற்றிய செய்திகள் தொடர்ந்து ஏடுகளிலே வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. கடும் வெப்பத்திற்குப் பின் மழை பெய்யும்போது, உண்டாகும் வைரஸ் கிருமியால் கோமாரி நோய் கால்நடைகளைத் தாக்குகிறதாம்.

தண்ணீர், காற்று மூலம் வேகமாகப் பரவும் இந்நோயின் தாக்கம் பத்து நாட்களுக்குப் பின்தான் வெளியிலே தெரியுமாம். நோய் தாக்கிய கால்நடைகளுக்கு தொடக்கத்தில் கால் குளம்புகளில் புண் ஏற்பட்டு, பின் வாய், நாக்கில் தொடருமாம். கோவை, ஈரோடு, நாமக்கல், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் ஏராளமான கால்நடைகள் இந்தநோய்க்கு உள்ளாகி மடிந்திருக்கின்றனவாம். கோமாரி நோய் காரணமாக மாநிலம் முழுவதிலும் சுமார் ஒரு லட்சம் கால்நடைகள் இறந்திருக்கின்றன. இறந்த கால்நடைகளுக்கான இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்கிட வேண்டும். மேலும் இந்நோய் பரவவிடாமல் தடுப்பதற்கான முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

லஞ்சம்

கேள்வி:–5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் ஒருவரைப் பிடித்துக் கொடுத்தவருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறதே?

பதில்:–பரிதாபத்திற்குரிய கிராம நிர்வாக அலுவலர்களும், மின் இணைப்புக்கொடுக்கும் சாதாரண நிலையில் உள்ளவர்களும் லஞ்சம் வாங்கும்போது பிடிபடுகிறார்கள். ஆனால் லட்சக் கணக்கில், கோடிக் கணக்கில் லஞ்சம் வாங்குபவர்கள் மட்டும் சுலபத்தில் தப்பித்துக்கொள்கிறார்களே? அவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?

கேள்வி:–தமிழ்நாட்டில் மாணவர் வருகை குறைவு எனக்கூறி, ஈராசிரியர் பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாகவும், ஓராசிரியர் பள்ளிகளை அறவே மூடிவிடவும் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறதே?

பதில்:–இதுபற்றி அரசாணை வெளியிட்டால் பெரிய எதிர்ப்பு வரும் என்பதால், அவ்வாறு ஆணையாக வெளியிடாமல் வாய்மொழி உத்தரவின் மூலமாக அரசு செயல்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அந்தப்பள்ளிகளில் பணிபுரிந்து வந்த ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே அரசு இந்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக்கொண்டு, மாணவர்களின் வருகையை அதிகரிக்கச்செய்ய வேண்டும் என்று கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவு

கேள்வி:–இந்தியத்தலைநகரில், கரும்பு விவசாயிகளின் பேரணியும், ஆர்ப்பாட்டமும் டிசம்பர் 12–ந்தேதி நடத்தவிருப்பதாக செய்தி வந்திருக்கிறதே?

பதில்:–அகில இந்திய கரும்பு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்கூட்டம் டெல்லியில் நடைபெற்றிருக்கிறது. அந்தக் கூட்டத்தில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தக் கூட்டத்தில் பல சர்க்கரை ஆலைகள் திறக்கப்பட்டும், கரும்புக்கான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும், இந்த ஆண்டு கரும்பு உற்பத்தி அதிகமாக இருப்பதால் சர்க்கரை இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டுமென்றும், அப்போதுதான் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரைக்கு உரிய விலை கிடைக்குமென்றும் கருத்துத்தெரிவித்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைகளை முன்வைத்துத்தான் மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக டிசம்பர் 12–ந்தேதி கரும்பு விவசாயிகள் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறார்கள். கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை தி.மு.க. முழு மனதோடு ஆதரிக்கின்றது.

கேள்வி:–தாமிரபரணி–பச்சையாறு–கருமேனியாறு திட்டப்பணிகளில் இந்த ஆட்சியில் தொய்வு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறதே?

கேள்வி:–மாநில அளவிலாவது நதி நீர் இணைப்புத் திட்டத்தைத்தொடங்கிட வேண்டும் என்னும் நோக்கில், 20–3–2008 அன்று நம்முடைய பேராசிரியர் நிதி அமைச்சராக இருந்து, சட்டப்பேரவையில் படித்த நிதிநிலை அறிக்கையில், பக்கம் 12–ல், ''தாமிரபரணி ஆற்றின் உபரி நீரை தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்கான தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டம் ரூ.369 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்'' என்று அறிவிக்கப்பட்டது.

21–2–2009 அன்று இதற்கான பணிகளும் தொடங்கின. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள வெள்ளாங்குழியில் இருந்து தூத்துக்குடி மாவட்டம், எம்.எல்.தேரி வரை 73 கி.மீ. தூரத்துக்கு வினாடிக்கு 3200 கனஅடி வீதம் தண்ணீர் செல்லக்கூடிய வெள்ளநீர் கால்வாய் வெட்டப்படுகிறது. இதுவரை வெள்ளாங்குழியிலிருந்து பாளையங்கோட்டை அருகே உள்ள மூலக்கரைப்பட்டி வரை சுமார் 25 கி.மீ. தூரத்துக்கு கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. மொத்தப்பணியும் முடிந்தால், வறண்ட பூமியான திசையன்விளை, சாத்தான்குளம் பகுதிகளில் 50–க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும். வெள்ளநீர்க்கால்வாயில் தாமிரபரணி ஆற்றின் உபரி நீரைத் திறந்துவிடும் போது, வழி நெடுகிலும் உள்ள கண்மாய்களில் தண்ணீர் நிரப்பப்படும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மொத்தம் 57,600 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இந்த திட்டம் அந்தப் பகுதியிலே உள்ள விவசாயிகளின் நல்வாழ்வு கருதி தொடங்கப்பட்ட திட்டம் என்பதை மனதிலே கொண்டு இனியாவது அரசு விரைந்து இத்திட்டத்தை முடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட முன்வர வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

category:

News Group Category:

ஆனந்த் ரூ.6 கோடி பரிசு பெற்றார் உலக சதுரங்க சாம்பியன் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

Posted: 25 Nov 2013 11:32 AM PST

சென்னை,

உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்ற நார்வே நாட்டு வீரர் மாக்னஸ் கார்ல்சென்னுக்கு, பரிசுத்தொகையாக ரூ.9.90 கோடியையும், 2–வது இடம் பெற்ற ஆனந்துக்கு ரூ.6 கோடியையும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

உலக சதுரங்க போட்டி

முதல்–அமைச்சர் ஜெயலலிதா 8–4–2013 அன்று, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 2013–ம் ஆண்டில் நடைபெறவுள்ள உலக சதுரங்க வாகையர் போட்டி, ஐந்து முறை உலக வாகையர் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், 2012–ஆம் ஆண்டிற்கான உலக சதுரங்க வாகையருமான கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் தற்போதைய உலகத்தர வரிசையில் முதல் சதுரங்க வீரராகவும், பிடே தரவரிசைப் பட்டியலில் இதுவரை உயர்ந்த அளவில் 2872 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ள நார்வே நாட்டைச் சார்ந்த மாக்னஸ் கார்ல்சென்னுக்கும் இடையே நவம்பர் மாதத்தில் சென்னையில் நடைபெறும் என்று அறிவித்தார்.

ரூ.29 கோடி

மேலும், இப்போட்டிக்காக 29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததோடு, போட்டியினைச் சிறப்பாக நடத்திட அனைத்து வழிகாட்டுதல்களையும், அறிவுரைகளையும் வழங்கினார்.

இந்தியாவில் முதன்முறையாக நடத்தப்படும் இப்போட்டி சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்தப்படும் வகையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உலக சதுரங்க வாகையர் விளையாட்டுப் போட்டியின் புரவலராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நார்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சென் மற்றும் அவருடைய குழுவினர் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் சென்னைக்கு வந்து, போட்டி நடைபெறும் இடத்தினைப் பார்வையிட்டதோடு, முன்னேற்பாடு பணிகளைக் கேட்டறிந்து, சென்னையில் உலக சதுரங்க வாகையர் போட்டி நடத்துவதற்குரிய பணிகள் சிறப்பாக நடைபெற்று வந்தது என்றும், இது அவர்களுக்கு மிகவும் திருப்திகரமாக இருந்தது என்றும் தெரிவித்திருந்தார்.

விழிப்புணர்வு போட்டிகள்

உலக சதுரங்க வாகையர் போட்டி சென்னையில் நடைபெற்றதையொட்டி கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில், சதுரங்க விளையாட்டு குறித்த விழிப்புணர்வை மாணாக்கர்களிடையே ஏற்படுத்தும் வகையில் தமிழகத்திலுள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நான்கு பிரிவுகளாக சதுரங்க போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், சென்னையில் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டி, உலக சதுரங்கக் கூட்டமைப்பின் தரவரிசைப் பட்டியலுக்கான போட்டி, தேசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி, சதுரங்க புதிர் விடுவிப்பு போட்டி, உலக சதுரங்கக் கூட்டமைப்பின் நடுவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான கருத்தரங்கம் ஆகியவை நடைபெற்றன. மேற்கண்ட போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன், பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சதுரங்க வீரர்களும் வீராங்கனைகளும் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள்.

கார்ல்சென் வெற்றி

சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 7.11.2013 அன்று 2013–ம் ஆண்டிற்கான பிடே உலக சதுரங்க வாகையர் போட்டியினை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

மாக்னஸ் கார்ல்சென் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோருக்கு இடையேயான உலக சதுரங்க வாகையர் போட்டியின், முதல் சுற்று 9.11.2013 அன்று தொடங்கியது. முதல் நான்கு சுற்றுகளில் சமநிலை ஏற்பட்டு தலா 0.5 புள்ளிகள் வீதம் இருவரும் 2 புள்ளிகள் பெற்றனர். ஐந்தாம் சுற்று மற்றும் ஆறாம் சுற்றுகளில் மாக்னஸ் கார்ல்சென் வெற்றி பெற்று 4–2 என்ற புள்ளிகள் அளவில் முன்னிலை பெற்றார்.

ஏழாம் சுற்று மற்றும் எட்டாம் சுற்றுகளில் சமநிலை ஏற்பட்டு 5–3 என்ற அளவிலும், ஒன்பதாம் சுற்றில் மாக்னஸ் கார்ல்சென் வெற்றி பெற்று 6–3 என்ற புள்ளிகள் என்ற நிலையிலும், பத்தாவது சுற்றில் இருவரும் சமநிலை பெற்றதன் அடிப்படையில் மாக்னஸ் கார்ல்சென் 6.5 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றார்.

கார்ல்சென்னுக்கு ரூ.9.90 கோடி

சர்வதேச அளவில் நமது நாட்டின் பெயரை நிலைநிறுத்தும் வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதலுடன் நடைபெற்ற உலக சதுரங்க வாகையர் போட்டியில் வென்ற நார்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சென்னுக்கு நீலகிரி மலைச் சரிவிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆலிவ் இலை மாலையுடன் வாகையர் தங்கக் கோப்பையினையும், 60 சதவீத பரிசுத் தொகையாக 9 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான காசோலையினையும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கி பாராட்டினார்.

மேலும், இந்தப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற விஸ்வநாதன் ஆனந்துக்கு வெள்ளிப் பதாகையும், 40 சதவீத பரிசுத் தொகையான 6 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையினையும் வழங்கி பாராட்டினார்.

கலந்து கொண்டவர்கள்

உலக சதுரங்கக் கூட்டமைப்பின் தலைவர் கிர்சான் இல்யும் ஷினோவ், மாக்னஸ் கார்ல்சென்னுக்கு தங்கப்பதக்கமும், விஸ்வநாதன் ஆனந்துக்கு வெள்ளிப்பதக்கமும் வழங்கினார்.

இந்த விழாவில், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் முகமது நசீமுத்தின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ராஜாராமன், அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், தமிழ்நாடு மாநில சதுரங்க கழகத்தின் தலைவர் பி.ஆர். வெங்கடராம ராஜா, பல்வேறு சதுரங்க சங்கங்களின் பிரதிநிதிகள், சதுரங்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

category:

‘பார்முலா1’ கார் பந்தயம்: வெட்டல் தொடர்ந்து 9–வது வெற்றி பிரேசில் கிராண்ட்பிரீயிலும் முதலிடம் பிடித்தார்

Posted: 25 Nov 2013 11:27 AM PST

நியூயார்க்,

'பார்முலா1' கார் பந்தயத்தின் கடைசி சுற்றான பிரேசில் கிராண்ட்பிரீயில் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் வெற்றி பெற்றார். இதன் மூலம் வெட்டல் தொடர்ந்து 9 பந்தயங்களில் வெற்றி கண்டுள்ளார்.

'பார்முலா1' கார் பந்தயம்

கார் பந்தயங்களில் மிகவும் பிரபலமான 'பார்முலா1' கார் பந்தயம் 19 சுற்றுகளை கொண்டதாகும். இதன் 19–வது மற்றும் கடைசி சுற்று பந்தயமான பிரேசில் கிராண்ட்பிரீ சா போலாவில் நேற்று முன்தினம் நடந்தது.

இந்த ஆண்டுக்கான பார்முலா1 சாம்பியன் பட்டத்தை ஏற்கனவே கைப்பற்றி விட்ட ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (ரெட்புல்) 1:32:36.30 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து கடைசி பந்தயத்திலும் முதலிடத்துடன் முடித்தார்.

வெட்டலுக்கு 13–வது வெற்றி

இந்த சீசனில் (2013) வெட்டல் பெற்ற 13–வது வெற்றியாகும். அவர் ஏற்கனவே மலேசியா, பக்ரைன், கனடா, ஜெர்மனி, பெல்ஜியம், இத்தாலி, சிங்கப்பூர், கொரியா, ஜப்பான், இந்தியா, அபுதாபி, அமெரிக்காவில் நடந்த பார்முலா1 பந்தயங்களில் வெற்றி கண்டு இருந்தார்.

இதன் மூலம் வெட்டல் ஒரு ஆண்டில் அதிக சுற்று பந்தயங்களில் வென்ற ஜெர்மனியை சேர்ந்த முன்னாள் வீரர் சூமாக்கரின் சாதனையை சமன் செய்தார். 2004–ம் ஆண்டில் சூமாக்கர் ஒரு ஆண்டில் 13 பந்தயங்களில் வென்றதே சாதனையாக இருந்தது.

சாதனை சமன்

வெட்டல் ஒரு ஆண்டில் தொடர்ந்து 9 பந்தயங்களில் வெற்றி பெற்று சரித்திரம் படைத்தார். அத்துடன் இத்தாலியை சேர்ந்த அல்பர்ட்டோ அஸ்காரி (1952–53) தொடர்ந்து 9 பந்தயங்களில் வென்று இருந்த சாதனையையும் சமன் செய்தார்.

26 வயதான வெட்டல் 2010–ம் ஆண்டு முதல் தொடர்ந்து பார்முலா1 சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து வருகிறார். இதுவரை 120 பந்தயங்களில் பங்கேற்று இருக்கும் வெட்டல் 39 வெற்றிகளை குவித்து இருக்கிறார்.

ரெட்புல் அணி முதலிடம்

பிரேசில் கிராண்ட்பிரீயில் ஆஸ்திரேலிய வீரர் மார்க் வெப்பர் 2–வது இடத்தையும், ஸ்பெயின் வீரர் பெர்னாண்டோ அலோன்சா 3–வது இடத்தையும் பெற்றனர். இந்த ஆண்டுக்கான டிரைவர்கள் பிரிவில் செபாஸ்டியன் வெட்டல் (ஜெர்மனி) 397 புள்ளிகளுடன் முதலிடத்தையும், பெர்னாண்டோ அலோன்சா (ஸ்பெயின்) 242 புள்ளிகளுடன் 2–வது இடத்தையும், மார்க் வெப்பர் (ஆஸ்திரேலியா) 199 புள்ளிகளுடன் 3–வது இடத்தையும் பெற்றனர்.

அணிகள் பிரிவில் ரெட்புல் அணி 596 புள்ளிகளுடன் முதலிடத்தையும், மெர்சிடஸ் 360 புள்ளிகளுடன் 2–வது இடத்தையும், பெராரீ 354 புள்ளிகளுடன் 3–வது இடத்தையும் பிடித்தன.

category:

தமிழகத்தில் 7 மாவட்ட விவசாய நிலம் வழியாக எரிவாயு குழாய் அமைக்க ஐகோர்ட்டு அனுமதி: விவசாய பாதுகாப்பு குழுவினர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய முடிவு

Posted: 25 Nov 2013 10:28 AM PST

சென்னை,-

கொச்சியில் இருந்து குட்டநாடு, மங்களூர் வழியாக பெங்களூருக்கு குழாய் வழியாக எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை ரூ.3 ஆயிரம் கோடி செலவில் மத்திய அரசு நிறுவனமான 'கெயில்' நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.இந்த திட்டத்தின்படி, தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக குழாய்கள் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் செய்து வந்தது.

விவசாயிகள் எதிர்ப்பால் தடை

இந்த 7 மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கப்பட்டதற்கு, விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை நடத்தினர்.இதனை அடுத்து விவசாயிகளை அழைத்து கருத்து கேட்கும் கூட்டத்தை கடந்த 2012–ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு நடத்தியது. இதன் பின்னர், விவசாயிகளின் தரப்பில் நியாயம் இருப்பதை அறிந்து, கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.அதில், 'விவசாய விளைநிலங்கள் வழியாக குழாய்களை பதிப்பதை கெயில் நிறுவனம் கைவிடவேண்டும். அதற்கு பதில் தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி குழாய்களை பதிக்க வேண்டும். விளை நிலங்களில் பதிக்கப்பட்ட குழாய்களை அகற்ற வேண்டும். இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.

உத்தரவை எதிர்த்து வழக்கு

இதையடுத்து, தமிழக அரசு பிறப்பித்த இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் கெயில் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி ராஜேஷ் குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர்.அப்போது, தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, கெயில் நிறுவனம் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன், மத்திய அரசு சார்பில் வக்கீல் கனகராஜ் உள்பட பலர் ஆஜராகி வாதம் செய்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசின் தடை உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு கூறினார்கள். அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:–

தொலைநோக்கு திட்டம்

மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, கெயில் நிறுவனம் மேற்கொள்ளும் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்துக்கு, தமிழக அரசு முதலில் தன்னுடைய முழு ஆதரவையும் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த, உயர் அதிகாரிகளை கொண்ட உயர்மட்ட கமிட்டியை அமைத்துள்ளது.தமிழக அரசின், 'தொலைநோக்கு திட்டம்–2023' என்ற ஆவணப்படங்களில் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் அனைத்து மாவட்டங்களிலும் எரிவாயு கிரீடுகளை அமைக்க திட்டம் வகுத்துள்ளது.

தமிழக அரசின் முடிவு சரியே...

எனவே, இந்த திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு ஆர்வம் காட்டியுள்ளது நன்றாக தெரிகிறது. இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள பல மின் உற்பத்தி நிலையங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் எரிவாயு விநியோகம் செய்யப்படும் நிலையில், மாநிலத்தின் தொழில் துறையும் வளர்ச்சி பெறும். மேலும் இந்த திட்டத்தால் மக்களுக்கும் பல பயன்கள் கிடைக்கும்.இந்த வழக்கில், மக்களின் விருப்பத்தை கேட்டு தமிழக அரசு எடுத்துள்ள முடிவு சரிதான். அதே நேரம், பெரும்பான்மையான மக்களின் நலனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும்.

முதல் திட்டம் அல்ல

தமிழகத்தில், எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் ஏற்கனவே மேற்கொள்ளப்படுகிறது. காவிரி டெல்டா மாவட்டத்தில், இயற்கை எரிவாயு எடுக்கும் பணிக்காக 200 கிலோ மீட்டருக்கு மேல் எரிவாயு குழாய் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், எரிவாயு தொழில் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வில், இது மாசு குறைவான பசுமையான திட்டம் என்று கூறப்பட்டு உள்ளது. என்றாலும் இந்த திட்டத்தை எதிர்த்து போராடும் மக்களை சமாதானம் செய்யும் நிலையில் தமிழக அரசு உள்ளது.

நீதிபதிகள் மறுப்பு

இருப்பினும் தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் எரிவாயு குழாய்களை விவசாய நிலத்தில் பதிக்கக்கூடாது என்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம்.இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்

இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டதும், கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் சார்பில் மூத்த வக்கீல் ஹேமா சம்பத் ஆஜராகி, 'இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால், தீர்ப்பை ஒரு மாத காலத்துக்கு நிறுத்தி வைக்க வேண்டும்' என்று கோரிக்கைவிடுத்தார். ஆனால், இவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.விவசாய சங்க நிர்வாகிகளும் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்தனர். இது தொடர்பாக விவசாயிகள் பாதுகாப்பு தலைவர் நாகராஜன் கூறும்போது, தமிழக விவசாயிகளுக்கு எதிராக ஐகோர்ட்டு தீர்ப்பு அமைந்து இருக்கிறது. இந்த தீர்ப்பு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்து இருப்பதாக தெரிவித்தார்.

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

பிரபாகரன் பிறந்த நாள் விழாவுக்கு இலங்கையில் தடை ராணுவம் அறிவிப்பு

Posted: 25 Nov 2013 10:16 AM PST

கொழும்பு

திங்கள் கிழமை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள். அதோடு இலங்கையில் 1982–ல் நடந்த தாக்குதலில் முதன்முதலாக விடுதலைப்புலிகளின் ஒரு குழுவினர் இறந்த நாள். இதனையொட்டி இலங்கையில் விடுதலைப்புலிகளின் நினைவு தினமாக இந்த நாளை கடைபிடித்து வந்தனர். 2009–ம் ஆண்டு விடுதலைப்புலிகளை இலங்கை ராணுவம் முறியடித்த பின்னர் இதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு நினைவு விழாவை கொண்டாட சிலர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

இதுதொடர்பாக இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் ருவான் வானிகசூரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இலங்கையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரிலோ பிரிவினைவாதிகளின் நோக்கத்தை ஊக்கப்படுத்துவதோ, பிரசாரம் செய்வதோ சட்டத்தை மீறுவதாகும். அதன்படி குறிப்பிட்ட அமைப்பினர் விடுதலைப்புலிகளை பெருமைப்படுத்துவதோ, நினைவு விழா நடத்துவதோ சட்டப்படி குற்றம்' என்று கூறியுள்ளார்.
 

category:

News Group Category:

டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பவர் கிரிட் நிறுவனத்தின் மூன்றாவது பங்கு வெளியீடு

Posted: 25 Nov 2013 09:37 AM PST

புதுடெல்லி,

வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (பி.ஜி.சி.ஐ.எல்) நிறுவனம் மூன்றாவது முறையாக பங்குகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு பங்குகள் விற்பனைக்கான சிறப்பு அமைச்சரவை குழு இம்மாதம் 29–ந் தேதி இது குறித்து முடிவு எடுக்க உள்ளது.

ரூ.7,400 கோடி

பவர் கிரிட் நிறுவனத்தின் பங்கு வெளியீடு டிசம்பர் 3–ந் தேதி தொடங்கி 5–ந் தேதி நிறைவடையும் என கூறப்படுகிறது. இந்நிறுவனத்தின் 78.70 கோடி பங்குகள் விற்பனை வாயிலாக ரூ.7,400 கோடி திரட்டப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு 18.51 கோடி பங்குகளை விற்பனை செய்து ரூ.1,740 கோடி திரட்டுகிறது. இந்நிறுவனம் 60.18 கோடி பங்குகளை வெளியிட்டு ரூ.5,660 கோடி திரட்டுகிறது. நிறுவனம் வெளியிடும் பங்குகளில் 2.4 சதவீதம் இந்நிறுவனத்தின் பணியாளர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்றுள்ள பவர் கிரிட் நிறுவனம் மின் பகிர்மான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் இதற்கு முன்னர் 2007 அக்டோபர் மாதத்தில் முதல் முறையாக புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்கியது. பின்னர் 2010 நவம்பரில் இரண்டாவது பங்கு வெளியீட்டை மேற்கொண்டது.

நிதி பற்றாக்குறை

வரி வசூல் வளர்ச்சி குறைந்துள்ள நிலையில், செலவினம் அதிகரித்துள்ளதால் மத்திய அரசின் நிதி பற்றாக்குறை மிகவும் உயர்ந்துள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் பொதுத் துறை நிறுவனங்களில் மத்திய அரசு கொண்டுள்ள பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக ரூ.40,000 கோடி திரட்ட மத்திய பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. நடப்பு நிதி ஆண்டில் இதுவரை ரூ.1,323 கோடி மட்டுமே திரட்டப்பட்டுள்ளது.

category:

ஈரான், வல்லரசு நாடுகளின் ஒப்பந்தத்தால் இந்திய பங்குச் சந்தைகளில் எழுச்சி: ‘சென்செக்ஸ்’ 388 புள்ளிகள் அதிகரிப்பு

Posted: 25 Nov 2013 09:32 AM PST

மும்பை,

அணுசக்தி திட்டம் தொடர்பாக வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் எழுச்சி ஏற்பட்டது. திங்கள்கிழமை அன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 388 புள்ளிகள் அதிகரித்தது.

பொருளாதார தடை நீங்கியது

மேற்கண்ட ஒப்பந்தத்தின்படி ஆறு மாத காலத்துக்கு அந்த நாட்டின் மீது மீண்டும் பொருளாதார தடை எதையும் விதிக்கப் போவதில்லை என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உறுதி அளித்துள்ளன. இதன் காரணமாக சுமார் 700 கோடி டாலர் மதிப்பிலான பொருளாதார தடையிலிருந்து ஈரானுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கம், பெட்ரோ ரசாயன பொருள்கள், கார், உலோகம் போன்றவற்றின் மீதான தடைகள் தளர்த்தப்பட உள்ளன.

ரூபாய் மதிப்பு உயர்ந்தது

இந்த ஒப்பந்தத்தால் ஈரானிலிருந்து இந்தியாவால் அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய முடியும். இதற்கான கட்டணத்தை இந்திய ரூபாயில் செலுத்தலாம். எனவே, டாலர் வெளியேறுவது குறைந்து அதற்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு உயரும்.

இதனை உறுதிப்படுத்துகின்ற வகையில், திங்கள்கிழமை அன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 37 காசு அதிகரித்து 62.50–ல் நிலைபெற்றது. இதன் காரணமாக கச்சா எண்ணெய், உரம், பருப்பு போன்றவற்றின் இறக்குமதி செலவினம் குறைந்து பணவீக்கம் குறையும்.

ஈரான் ஒப்பந்தத்தால் லண்டன் வர்த்தக சந்தையில் ஒரு பீப்பாய் 'பிரெண்ட்' கச்சா எண்ணெய் விலை கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவிற்கு 2 டாலருக்கும் அதிகமாக குறைந்து 111.05 டாலராக குறைந்தது. நியூயார்க் வர்த்தக சந்தையிலும் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 94.84 டாலராக குறைந்தது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைப்பாட்டில் சுமார் 75 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது.

வருவாய் இழப்பு குறையும்

கச்சா எண்ணெய் விலை குறைவதால் மத்திய அரசின் பெட்ரோலிய மானியச் சுமை குறைந்து நிதி பற்றாக்குறை ஓரளவிற்கு கட்டுக்குள் வரும். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் இழப்பும் குறையும். மேலும், நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்து டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயரும்.

அமெரிக்க ரிசர்வ் வங்கியும் பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளை வரும் மார்ச் மாதம் வரை நீடிக்கும் என செய்தியும் பரவியது. ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் இழப்பு குறையும் என்ற நிலைப்பாட்டால் இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை முறையே 2.6 சதவீதம் மற்றும் 6 சதவீதம் உயர்ந்தது. பாரத் பெட்ரோலியம் பங்கின் விலை 4.5 சதவீதம் அதிகரித்தது.

ஓ.என்.ஜி.சி.

மேலும் பொறியியல், வங்கி, ரியல் எஸ்டேட், நுகர்பொருள், மோட்டார் வாகனம், மின்சாரம், உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. மானியச் சுமை குறையும் என்பதால் ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களின் பங்கு விலையும் உயர்ந்தது.

'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எல்&டி, பாரத ஸ்டேட் வங்கி, பீ.எச்.இ.எல். உள்ளிட்ட 27 நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது.

வர்த்தகம் முடியும்போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 387.69 புள்ளிகள் அதிகரித்து 20,605.08 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 20,626.15 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 20,326.66 புள்ளிகள் வரையிலும் சென்றது.

தேசிய பங்குச் சந்தை

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிஃப்டி' 119.90 புள்ளிகள் உயர்ந்து 6,115.35 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 6,123.50 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 6,035.95 புள்ளிகளுக்கும் சென்றது.

பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட எழுச்சியால் மும்பை பங்குச் சந்தையில் முதலீட்டாளர் பங்குகளின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடி உயர்ந்தது.

category:

டிசம்பர் மாதம் வெளியிடும் ஆய்வு அறிக்கையில் முக்கிய கடன் வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்த வாய்ப்பு

Posted: 25 Nov 2013 09:21 AM PST

மும்பை,

ரிசர்வ் வங்கி டிசம்பர் மாதம் வெளியிடும் பணக் கொள்கை ஆய்வு அறிக்கையில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் முக்கிய கடனிற்கான வட்டியை மேலும் உயர்த்த வாய்ப்புள்ளது என்றும், 2014–ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டிலிருந்து இந்தியாவில் பணவீக்கம் குறையத் தொடங்கும் எனவும் பேங்க் ஆஃப் அமெரிக்கா மெர்ரில் லிஞ்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பணவீக்கம்

செப்டம்பர் மாதத்தில் ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜன் பொறுப்பு ஏற்றார். அதன் பிறகு பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு முறை முக்கிய கடன்களுக்கான வட்டியை உயர்த்தினார்.

இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் ஏழு மாதங்களில் இல்லாத அளவிற்கு மொத்த விலை பணவீக்கம் 7 சதவீதமாக உயர்ந்தது. அம்மாதத்தில் சில்லரை விலை பணவீக்கமும் 10.09 சதவீதமாக உயர்ந்தது. எனவே, ரிசர்வ் வங்கி டிசம்பர் மாதம் 18–ந் தேதி வெளியிடும் மூன்றாம் காலாண்டிற்கான இடைநிலை பணக் கொள்கை ஆய்வு அறிக்கையில் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து குறுகிய கால அடிப்படையில் திரட்டும் கடனிற்கான வட்டியை (ரெப்போ ரேட்) 0.25 சதவீதம் உயர்த்த வாய்ப்புள்ளது என பேங்க் ஆஃப் அமெரிக்கா மெர்ரில் லிஞ்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், பருவமழை நன்றாக உள்ளதால் உணவு தானியங்கள் உற்பத்தி சிறப்பான அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக 2014–ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் மொத்த விலை பணவீக்கம் 5 சதவீதமாக குறையும் என மெர்ரில் லிஞ்ச் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பு நிதி ஆண்டின் இறுதியில் சில்லரை விலை பணவீக்கம் 8.5 சதவீதமாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவைப்பாடு

பணவீக்கம் என்பது தேவைப்பாட்டை ஈடுகட்டும் வகையில் போதுமான அளவிற்கு பொருள்கள் கிடைக்காததாலும், அதிக பணப்புழக்கத்தாலும் ஏற்படுகிறது. எனவே, பணவீக்கம் அதிகமாக உள்ளதால் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி முக்கிய கடன்களுக்கான வட்டியை உயர்த்தி வந்துள்ளது.

category:

கச்சத்தீவு அருகே கடலில் சுற்றிவளைப்பு தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடித்தனர்

Posted: 25 Nov 2013 09:16 AM PST

ராமேசுவரம்

கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர்.

சுற்றிவளைத்து தாக்குதல்

ராமேசுவரத்தில் இருந்து  400–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. இந்த படகுகள் கச்சத்தீவு அருகே சென்றபோது அங்கு இலங்கை கடற்படையினர் 5 குட்டி கப்பல்களில் ரோந்து வந்தனர். அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகுகளை பார்த்ததும், 'மைக்' மூலம் இலங்கை கடல்பகுதிக்குள் வரக்கூடாது என்று எச்சரித்தனர்.இதனால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலுக்கு பயந்து மீன்பிடிப்பதை நிறுத்தி விட்டு தங்களது படகுகளை வந்த திசை நோக்கி திருப்பிக்கொண்டு இருந்தனர்.ஆனால் அதற்குள் இலங்கை கடற்படையினர் அந்த படகுகளைச் சுற்றி வளைத்தனர். ராமேசுவரத்தை சேர்ந்த 2 படகுகளையும், அந்த படகுகளில் இருந்த 10 மீனவர்களையும் சிறைபிடித்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

எச்சரித்து விடுவித்தனர்

அவர்களிடம், இனி எல்லை தாண்டி வரமாட்டோம் என்று மீனவர்கள் மன்றாடி கேட்டதைத் தொடர்ந்து இலங்கை கடற்படையினர் எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் மீன்பிடிப்பதை தவிர்த்து கடலில் வேறு இடத்துக்குச் சென்று மீனவர்கள் மீன்பிடித்தனர்.இதுகுறித்து மீனவ சங்கத் தலைவர் சேசு கூறியதாவது:–மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீண்டும், மீண்டும் தாக்கப்படுவதும், விரட்டியடிப்பதும் குறைந்தபாடில்லை. இலங்கை கடற்படையினரின் திடீர் தாக்குதலால் மீனவர்களின் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு நம்பகத்தன்மையை இழந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மீனவர்களுக்காக குரல் கொடுத்து இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™