Daily Thanthi |
- உலக சதுரங்க பட்டத்தை நெருங்கினார், கார்ல்சென் 9–வது சுற்றில் ஆனந்த் தோல்வி
- முதலாவது ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணி எளிதில் வெற்றி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசை தோற்கடித்தது
- இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் முதலாவது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம் ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட் வீழ்த்தினார்
- ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் 2–வது சுற்றில் சாய்னா தோல்வி
- 2015–ம் ஆண்டுக்கான உலக கோப்பை வரை மிஸ்பா கேப்டனாக நீடிப்பார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
- ரூ.1 கோடியே 33 லட்சத்து 37 ஆயிரம் செலவில் ‘அம்மா’ உணவகங்களில் 600 நவீன கேமராக்கள்: மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் இன்று தீர்மானம்
- களஞ்சியம் தொடர்ந்த வழக்கு: நடிகை அஞ்சலி நேரில் ஆஜராக விலக்கு; ஐகோர்ட்டு உத்தரவு
- பொருளாதார மந்தநிலையால் உருக்கு பொருள்கள் உற்பத்தி 2.8 சதவீதம் மட்டுமே அதிகரிப்பு
- அமெரிக்க நிலவரம், ரூபாய் மதிப்பு சரிவால் ‘சென்செக்ஸ்’ 406 புள்ளிகள் வீழ்ச்சி
- செப்டம்பர் மாதத்தில் கனிமங்கள் உற்பத்தி 9 சதவீதம் வளர்ச்சி
| உலக சதுரங்க பட்டத்தை நெருங்கினார், கார்ல்சென் 9–வது சுற்றில் ஆனந்த் தோல்வி Posted: 21 Nov 2013 11:02 AM PST சென்னை, சென்னையில் நடந்து வரும் உலக சதுரங்க போட்டியில் நேற்று நடந்த 9–வது சுற்று ஆட்டத்தில் கார்ல்சென், ஆனந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை நெருங்கி இருக்கிறார். உலக சதுரங்கம் தமிழக அரசின் ஆதரவுடன், நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் (இந்தியா), உலகின் நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) இடையிலான உலக சதுரங்க (செஸ்) சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது. 12 சுற்று கொண்ட இந்த போட்டியில் முதல் 4 சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. 5–வது மற்றும் 6–வது சுற்றில் கார்ல்சென் வெற்றி பெற்றார். 9–வது சுற்று ஆட்டம் இந்த நிலையில் 9–வது சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. ஆனந்த் வெள்ளை நிற காய்களுடன் தனது ராணிக்கு முன்பாக இருந்த சிப்பாயை இரண்டு கட்டங்கள் நகர்த்தி ஆட்டத்தை ஆரம்பித்தார். கார்ல்சென் முதல் காயாக தனது குதிரையை நகர்த்தினார். நிம்சோ–இந்தியன் முறையிலான இந்த ஆட்டத்தில் 5–வது காய் நகர்த்தலிலேயே தனது குதிரையை கொடுத்து கார்ல்சென்னின் பிஷப்பை ஆனந்த் கைப்பற்றினார். இந்த முறையில் வெள்ளை நிற காயுடன் ஆனந்த் ஆடியது இதுவே முதல் முறையாகும். ஆனந்த் தோல்வி 17–வது காய் நகர்த்தலில் கார்ல்சென் தனது குதிரையை இழந்து ஆனந்தின் பிஷப்பை வெட்டினார். இருவரும் தங்களது சிப்பாய்களை நகர்த்தி அதிரடி காட்டினார்கள். ஆனந்த் தனது சிப்பாய்களை கார்ல்சென்னின் ராஜாவை நோக்கி நகர்த்தி தாக்குதல் தொடுத்தார். இதனை கண்டு அசராத கார்ல்சென் தனது சிப்பாயை, இரண்டாவது ராணியாக்க முயற்சி செய்தார். ஆனந்த் தனது ராணியையும், யானையும் கொண்டு கார்ல்சென்னின் ராஜாவை வென்று விடலாம் என்று காய்களை நகர்த்தினார். அபாரமாக செயல்பட்ட கார்ல்சென் 'பி' வரிசையில் இருந்து முன்னெடுத்து வந்த தனது சிப்பாயை இரண்டாவது ராணியாக மாற்றியதுடன் ஆனந்தின் ராஜாவுக்கு செக் வைத்தார். ஆனந்த் தனது ராஜாவுக்கான செக்–ஐ, பிஷப்பால் தடுப்பதற்கு பதிலாக குதிரையை நகர்த்தி ஆடியதால் ஆட்டம் கார்ல்சென்னுக்கு சாதகமாக மாறியது. 28–வது காய் நகர்த்தலில் ஆனந்த் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். பட்டத்தை நெருங்கினார், கார்ல்சென் 9–வது சுற்று முடிவில் கார்ல்சென் 6 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை நெருங்கி விட்டார். ஆனந்த் 3 புள்ளிகளுடன் பின்தங்கிய நிலையில் உள்ளார். மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் வென்றால் தான் ஆனந்த் ஆட்டத்தை டைபிரேக்கருக்கு நகர்த்த முடியும். ஆனால் கார்ல்சென் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் 10–வது சுற்று ஆட்டத்தில் டிரா செய்தாலே, உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்ற 20–வது வீரர், முதல் நார்வேக்காரர் என்ற பெருமையை பெற்று விட முடியும். கார்ல்சென் இன்று டிரா கண்டால் எஞ்சிய 2 சுற்று ஆட்டங்கள் ரத்தாகும். கார்ல்சென் 6.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை சுவைத்து விடுவார். image: category: |
| Posted: 21 Nov 2013 10:59 AM PST கொச்சி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. முதலாவது ஒருநாள் போட்டி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் இரண்டு ஆட்டத்திலும் இன்னிங்ஸ் தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்ததாக 3 போட்டி கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன்படி இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நேரு மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. கெய்ல் டக்–அவுட் இதன்படி கிறிஸ் கெய்லும், ஜான்சன் சார்லசும் வெஸ்ட் இண்டீசின் இன்னிங்சை தொடங்கினர். முதல் ஓவரின் 2–வது பந்திலேயே ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு கெய்ல் விக்கெட்டை ரன்–அவுட்டில் தாரை வார்த்தார். இதன் பிறகு சாமுவேல்ஸ் களம் இறங்கினார். சார்லஸ் அதிரடி காட்டி ஸ்கோரை உயர்த்தினார். முதல் 10 ஓவர்களில் அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 63 ரன்கள் எடுத்திருந்தது. இந்த சூழலில் இந்திய கேப்டன் டோனி சுழற்பந்து வீச்சை அறிமுகம் செய்தார். சுழல் வந்ததும் வெஸ்ட் இண்டீசின் ஆக்ரோஷம் தணிய தொடங்கியது. சுழலுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தை சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜாவும், சுரேஷ் ரெய்னாவும் நேர்த்தியாக பயன்படுத்தி எதிரணியின் ரன்வேகத்தை முடக்கியதுடன், அவர்களின் விக்கெட்டுகளையும் மளமளவென சாய்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் 211 ரன் சார்லஸ் 42 ரன்னில் ( 34 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஜடேஜாவின் சுழலிலும், சாமுவேல்ஸ் 24 ரன்களில் ரெய்னாவின் சுழலிலும் சிக்கினர். இதன் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியால் வீழ்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. பிரதான சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும் அவர்களை வெகுவாக கட்டுப்படுத்தினார். டேரன் பிராவோ (59 ரன், 77 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) மட்டும் அரைசதம் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 48.5 ஓவர்களில் 211 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இந்திய தரப்பில் ரெய்னா, ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். ஷிகர் தவான் ஏமாற்றம் அடுத்து 212 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் (5) ஏமாற்றினாலும், 2–வது விக்கெட் ஜோடியான விராட்கோலியும், ரோகித் ஷர்மாவும் அசத்தினர். இருவரும் அணியை வெற்றிப்பாதையில் வேகமாக பயணிக்க வைத்தனர். ரோகித் ஷர்மா 72 ரன்னிலும், (81 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), விராட்கோலி 86 ரன்னிலும் (84 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன்) ஆட்டம் இழந்தனர். இதைத்தொடர்ந்து யுவராஜ்சிங்குடன் ஜோடி சேர்ந்த சுரேஷ் ரெய்னா ரன் கணக்கை தொடங்காமல் பெவிலியன் திரும்பினார். அடுத்து கேப்டன் டோனி களம் இறங்கினார். இந்திய அணி வெற்றி 35.2 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி கண்டது. யுவராஜ்சிங் 29 பந்துகளில் 2 பவுண்டரியுடன், 16 ரன்னும், டோனி 7 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 13 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய துணை கேப்டன் விராட்கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார். இரு அணிகள் இடையிலான 2–வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் வருகிற 24–ந் தேதி நடக்கிறது. ஸ்கோர் போர்டு வெஸ்ட் இண்டீஸ் கெய்ல்(ரன்–அவுட்) 0 சார்லஸ் (சி) அண்ட்(பி) ஜடேஜா 42 சாமுவேல்ஸ் (பி) ரெய்னா 24 டேரன் பிராவோ (பி) முகமது ஷமி 59 சிமோன்ஸ் எல்.பி.டபிள்யூ (பி) ரெய்னா 29 டியோநரின் (பி) ரெய்னா 4 வெய்ன்பிராவோ(ஸ்டம்பிங்) டோனி (பி) ஜடேஜா 24 டேரன் சேமி(சி)புவனேஷ்வர் (பி) ஜடேஜா 5 ஹோல்டர் (நாட்–அவுட்) 16 சுனில் நரின் (சி) அண்ட் (பி) அஸ்வின் 0 ராம்பால் (சி) தவான் (பி) அஸ்வின் 1 எக்ஸ்டிரா 7 மொத்தம் (48.5 ஓவர்களில் ஆல்–அவுட்) 211 விக்கெட் வீழ்ச்சி: 1–0, 2–65, 3–77, 4–142, 5–152, 6–183, 7–187, 8–204, 9–206 பந்து வீச்சு விவரம் புவனேஷ்வர்குமார் 5–0–26–0 உனட்கட் 6–0–39–0 முகமது ஷமி அகமது 6–0–28–1 ரவீந்திர ஜடேஜா 10–0–37–3 ரெய்னா 10–1–34–3 அஸ்வின் 9.5–0–42–2 ரோகித் ஷர்மா 2–0–4–0 இந்தியா ரோகித்ஷர்மா(சி)சிமோன்ஸ் (பி) ராம்பால் 72 ஷிகர் தவான் (சி) சார்லஸ் (பி) ஹோல்டர் 5 விராட் கோலி(சி)சுனில்நரின் (பி) ஹோல்டர் 86 யுவராஜ்சிங் (நாட்–அவுட்) 16 சுரேஷ்ரெய்னா(சி)ஹோல்டர் (பி) சுனில்நரின் 0 டோனி (நாட்–அவுட்) 13 எக்ஸ்டிரா 20 மொத்தம் (35.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு) 212 விக்கெட் வீழ்ச்சி: 1–17, 2–150, 3–192, 4–194. பந்து வீச்சு விவரம்: ராம்பால் 8–0–39–1 ஹோல்டர் 8–0–48–2 டேரன்சேமி 2–0–14–0 சுனில்நரின் 10–1–57–1 டியோநரின் 2–0–15–0 சிமோன்ஸ் 3–0–14–0 டேரன்பிராவோ 2.2–0–20–0 *** இந்த ஆண்டில் அதிக விக்கெட் வீழ்த்திய ஜடேஜா இந்திய ஆல்–ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நேற்று எடுத்த 3 விக்கெட்டுகளையும் சேர்த்து இந்த 2013–ம் ஆண்டில் மொத்தம் 49 விக்கெட்டுகளை (29 ஆட்டம்) கைப்பற்றி முதலிடத்தை பிடித்துள்ளார். 2–வது இடத்தில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் (48 விக்கெட், 25 ஆட்டம்) உள்ளார். ரிச்சர்ட்ஸ் சாதனையை சமன் செய்த கோலி இந்திய அணியின் துணை கேப்டன் விராட்கோலி நேற்றைய ஆட்டத்தில் 86 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவர் 81 ரன்களை தொட்ட போது ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்சின் சாதனையை சமன் செய்தார். ரிச்சர்ட்ஸ் 114 இன்னிங்சில் 5 ஆயிரம் ரன்னை கடந்ததே சாதனையாக இருந்தது. நேற்று 120–வது ஒருநாள் போட்டியில் களம் கண்ட விராட்கோலி தனது 114–வது இன்னிங்சில் 5,005 ரன்களை எட்டினார். image: category: |
| Posted: 21 Nov 2013 10:52 AM PST பிரிஸ்பேன், பிரிஸ்பேனில் நேற்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை சீக்கிரம் இழந்து தடுமாற்றத்திற்குள்ளானது. ஆஷஸ் டெஸ்ட் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டி கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதலாவது டெஸ்ட் பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் தடுமாறியது. அந்த அணியின் பேட்ஸ்மேன்களை இங்கிலாந்து ஆல்–ரவுண்டர் ஸ்டூவர்ட் பிராட் திணறடித்தார். கிறிஸ் ரோஜர்ஸ் (1 ரன்), ஷேன் வாட்சன் (22 ரன்), கேப்டன் மைக்கேல் கிளார்க் (1 ரன்), டேவிட் வார்னர் (49 ரன்) ஆகிய முதல் 4 வீரர்களையும் மின்னல் வேக பந்து வீச்சின் மூலம் பிராட் காலி செய்தார். பிராட் மீது தாக்குதல் மூன்று மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் ஆஷஸ் தொடர் நடந்த போது ஒரு போட்டியில் ஸ்டூவர்ட் பிராட், கேட்ச் என தெரிந்தும் வெளியேற மறுத்த விவகாரம் ஆஸ்திரேலியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எதிர்பார்த்தது போலவே அந்த பிரச்சினை இந்த டெஸ்டில் எதிரொலித்தது. ஆஸ்திரேலிய ரசிகர்கள் அவரை வெறுப்புக்குள்ளாக்கும் வகையில் தொடர்ந்து கேலி–கிண்டல் செய்து வசைப்பாடினர். ஆஸ்திரேலிய பத்திரிகை ஒன்று முதல் பக்கத்தில் அவரை விமர்சித்து செய்தி வெளியிட்டிருந்தது. இது போன்ற கேலிகோஷங்கள் தன்னை நோக்கி வருவதை தவிர்க்க முடியாது என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த பிராட், பந்து வீச்சின் மூலம் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்து விட்டார். ஒரு கட்டத்தில் 132 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த ஆஸ்திரேலிய அணியை விக்கெட் கீப்பர் பிராட் ஹேடினும், மிட்செல் ஜான்சனும் போராடி ஓரளவு சரிவில் இருந்து மீட்டனர். 7–வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் திரட்டிய இந்த ஜோடி 246 ரன்களை எட்டிய போது பிரிந்தது. ஜான்சன் 64 ரன்களில், ஸ்டூவர்ட் பிராட்டின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். அடுத்து வந்த சிடில் 7 ரன்னில் வெளியேறினார். 8 விக்கெட்டுக்கு 273 ரன் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. பிராட் ஹேடின் 78 ரன்களுடன் (132 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருக்கிறார். இங்கிலாந்து தரப்பில் பிராட் 5 விக்கெட்டுகளும், ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளும், டிரம்லெட் ஒரு விக்கெட்டும் சாய்த்தனர். பிராட் ஓர் இன்னிங்சில் 5 விக்கெட் கைப்பற்றுவது இது 11–வது முறையாகும். இந்த ஆண்டில் டெஸ்டில் 50 விக்கெட்டுகளை (11 டெஸ்ட்) எட்டிய முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். 2–வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது --– image: category:Tagging: |
| ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் 2–வது சுற்றில் சாய்னா தோல்வி Posted: 21 Nov 2013 10:39 AM PST ஹாங்காங், ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 17–21, 21–9, 15–21 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் பொர்ட்னிப்பிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் அஜய் ஜெயராம் 18–21, 12–21 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் சோனிட்வியிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார். image: category:Tagging: |
| 2015–ம் ஆண்டுக்கான உலக கோப்பை வரை மிஸ்பா கேப்டனாக நீடிப்பார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு Posted: 21 Nov 2013 10:38 AM PST கராச்சி, ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்ததால் கேப்டன் பதவியில் இருந்து 39 வயதான மிஸ்பா உல்–ஹக்கை மாற்ற வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் நஜம் சேதி கருத்து தெரிவிக்கையில், '2015–ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை மிஸ்பா உல்–ஹக் கேப்டனாக நீடிப்பார்' என்றார். image: category:Tagging: |
| Posted: 21 Nov 2013 10:34 AM PST சென்னை ரூ.1 கோடியே 33 லட்சத்து 37 ஆயிரம் செலவில், அம்மா உணவகங்களில் 600 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் சென்னை மாநகராட்சியின் மன்றக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. 600 நவீன கேமராக்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் பணி சுமையை குறைக்கும் வகையில், சென்னை மாநகராட்சியில் இயங்கும் 200 அம்மா உணவகங்களின் செயல்பாட்டை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் இருந்தே கண்காணிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, 200 அம்மா உணவகங்களிலும் தலா 3 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் வீதம் 600 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் மேயர் சைதை துரைசாமி தலைமையில், துணை மேயர் பா.பெஞ்சமின், கமிஷனர் விக்ரம் கபூர் ஆகியோர் முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் நடைபெறும் மாநகராட்சி மன்றக்கூட்டத்தில், 1 கோடியே 33 லட்சத்து 36 ஆயிரத்து 472 ரூபாய் மதிப்பீட்டில், 200 அம்மா உணவகங்களுக்கு தலா 3 நவீன கண்காணிப்பு கேமராக்கள் வாங்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. விளம்பர பலகைகள்... மேலும், சென்னையில் விளம்பர பலகைகள், தட்டிகள் வைப்பதற்கான முன் அனுமதியை சென்னை மாநகராட்சி ஆணையரிடம் பெற வேண்டும் என்பது தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற மன்றக்கூட்டத்திலும் அம்மா உணவகத்தில் கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது கூடுதலாக சுமார் ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. image: category:News Group Category: |
| களஞ்சியம் தொடர்ந்த வழக்கு: நடிகை அஞ்சலி நேரில் ஆஜராக விலக்கு; ஐகோர்ட்டு உத்தரவு Posted: 21 Nov 2013 10:21 AM PST சென்னை 'அங்காடி தெரு' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை அஞ்சலி. இவர், தன் சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட பிரச்சினையில், தமிழ்நாட்டை விட்டு வெளியேறி சொந்த மாநிலமான ஆந்திராவுக்கு சென்றுவிட்டார். அப்போது, பத்திரிகைகளுக்கு பேட்டியளித்த நடிகை அஞ்சலி, தன் சித்தி பாரதிதேவி, இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் மீது சில குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். இதையடுத்து, அஞ்சலி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை சைதாப்பேட்டை 18–வது குற்றவியல் கோர்ட்டில் இயக்குனர் களஞ்சியம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு நடிகை அஞ்சலி நேரில் ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, களஞ்சியம் தொடர்ந்த வழக்கையும், அந்த வழக்கில் தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவாரண்டையும் ரத்து செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் நடிகை அஞ்சலி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.தேவதாஸ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, 'சைதாப்பேட்டை கோர்ட்டில் 22–ந்தேதி (வெள்ளிக்கிழமை) வழக்கு விசாரணைக்கு வரும்போது, அன்று மட்டும் அஞ்சலி நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த மனுவுக்கு, எதிர்மனுதாரர் களஞ்சியம் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்' என்று உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை நீதிபதி அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார். category:Tagging:News Group Category: |
| பொருளாதார மந்தநிலையால் உருக்கு பொருள்கள் உற்பத்தி 2.8 சதவீதம் மட்டுமே அதிகரிப்பு Posted: 21 Nov 2013 10:01 AM PST புதுடெல்லி, பொருளாதார மந்தநிலையால் நடப்பு 2013–ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் (ஜனவரி–அக்டோபர்) இந்தியாவில் உருக்கு பொருள்கள் உற்பத்தி 2.8 சதவீதம் மட்டுமே அதிகரித்து 6.46 கோடி டன்னிலிருந்து 6.64 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் இந்த உற்பத்தி 5.6 சதவீதம் உயர்ந்து இருந்தது. ஆக, தற்போது உற்பத்தி வளர்ச்சி பாதியாக குறைந்துள்ளது. எனினும், உருக்கு பொருள்கள் உற்பத்தியில் நான்காவது மிகப் பெரிய நாடாக இந்தியா தொடர்ந்து நீடிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சீனா முதலிடம் முதல் 10 மாதங்களில் உலக அளவில் உருக்கு பொருள்கள் உற்பத்தி 3.2 சதவீதம் அதிகரித்து 132.10 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இதில், சீனா 88.40 கோடி டன் உருக்கு பொருள்களை உற்பத்தி செய்து முதலிடத்தில் உள்ளது அந்நாட்டில் உற்பத்தி 8.3 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது, இந்தியாவின் வளர்ச்சியை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும். பொருளாதார வளர்ச்சி வேகத்தில் இந்நாடு முதலிடத்தில் உள்ளது. ஜப்பான் 9 கோடி டன் உருக்கு பொருள்களை உற்பத்தி செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேசமயம், முதலிடத்தில் உள்ள சீனாவின் உற்பத்தி இதைக்காட்டிலும் ஒன்பது மடங்கு அதிகமாகும். இது, தொழில் துறையில் சீனா முன்னிலை வகித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்கா பொருளாதார வலிமையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா உருக்கு பொருள்கள் உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்நாடு முதல் 10 மாதங்களில் 7.30 கோடி டன் உற்பத்தி செய்துள்ளது. கணக்கீடு செய்வதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலத்தில் இந்தியாவின் உருக்கு பொருள்கள் உற்பத்தி வளர்ச்சி குறைந்ததற்கு பொருளாதார மந்தநிலையே காரணமாகும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். விரிவாக்க நடவடிக்கைகளில் நிறுவனங்கள் காட்டி வரும் தயக்கம், கடனிற்கான வட்டி விகிதம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் சென்ற 2012–13–ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5 சதவீதமாக குறைந்தது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 4.4 சதவீதமாக குறைந்தது. இரண்டாவது காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளி விவரத்தை மத்திய அரசு இம்மாதம் 29–ந் தேதி வெளியிடுகிறது. விற்பனை பொருளாதார வளர்ச்சிக்கும், உருக்கு பொருள்கள் விற்பனைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ள என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பொருளாதார வளர்ச்சியை காட்டிலும் இவற்றின் உற்பத்தி வளர்ச்சி 1.5 மடங்காக இருக்கும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. வட்டி விகித உயர்வு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பதால் அக்டோபர் மாதத்தில் உள்நாட்டில் கார் விற்பனை 3.9 சதவீதம் சரிவடைந்தது. மேலும், வர்த்தக வாகனங்கள் விற்பனையும் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. தனிநபர் செலவிடும் வருவாய் குறைந்துள்ளதால் தொலைக்காட்சி பெட்டிகள், ஏர்கண்டிஷனர்கள் போன்ற நுகர்வோர் சாதனங்கள் உற்பத்தி வளர்ச்சியும் குறைந்துள்ளது. மோட்டார் வாகனங்கள் மற்றும் நுகர்வோர் சாதனங்களை தயாரிக்க உருக்கு தகடுகள் பயன்படுத்தப்படுகின்றன. கட்டுமானப் பணிகள் வீட்டு கடனிற்கான வட்டி விகிதம் அதிகரிப்பால் ரியல் எஸ்டேட் துறையிலும் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளில் உருக்கு கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற காரணங்களால் உருக்கு பொருள்கள் விற்பனை குறைந்து உற்பத்தி வளர்ச்சி குறைந்துள்ளது. இந்நிலையில், மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தால் சென்ற மூன்று மாதங்களாக நாட்டின் ஏற்றுமதியில் இரட்டை இலக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால் இறக்குமதி குறைந்துள்ளது. எனவே, நடப்பு நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 5,600 கோடி டாலராக குறையும் என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்ற நிதி ஆண்டில் இது 8,820 கோடி டாலராக இருந்தது. வளர்ச்சிப் பாதை மேலும், இந்த நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டிலிருந்து பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனவே, இனிவரும் மாதங்களில் உருக்கு பொருள்கள் உற்பத்தி சிறப்பான அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. image: category:Tagging: |
| அமெரிக்க நிலவரம், ரூபாய் மதிப்பு சரிவால் ‘சென்செக்ஸ்’ 406 புள்ளிகள் வீழ்ச்சி Posted: 21 Nov 2013 09:55 AM PST மும்பை, அமெரிக்க ரிசர்வ் வங்கி சிறப்பு பண அளிப்பு நடவடிக்கையை குறைக்கலாம் என்ற அச்சப்பாடு மீண்டும் தலை தூக்கியதையடுத்து பங்கு வியாபாரம் மந்தமாக இருந்தது. வியாழக்கிழமை அன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 11 வாரங்களில் இல்லாத அளவிற்கு 406 புள்ளிகளை இழந்தது. ரூ.1 லட்சம் கோடி குறைந்தது நேற்று மும்பை பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் பங்குகளின் சந்தை மதிப்பு ஒரே நாளில் ரூ.1.18 லட்சம் கோடி குறைந்து ரூ.66.39 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. அமெரிக்க ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பொறுப்பு ஏற்க உள்ள ஜேனட் எல்லென் பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகள் தற்போது நிறுத்தப்படாது என்று அறிவித்து இருந்தார். இதனையடுத்து சென்ற சில தினங்களாக சர்வதேச அளவில் பங்கு வியாபாரம் நன்றாக இருந்தது. அமெரிக்க ரிசர்வ் வங்கி இந்நிலையில், அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வெளிச் சந்தை நடவடிக்கை கமிட்டி அமெரிக்க பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் நிலையில் சிறப்பு பண அளிப்பு நடவடிக்கை வரும் மாதங்களிலிருந்து குறைக்கப்படும் என நேற்று அறிவித்தது. இதன் காரணமாக இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறையும். அமெரிக்க ரிசர்வ் வங்கியின் மாறுபட்ட தகவல்களால் ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று 36 காசு சரிவடைந்து 62.94–ல் நிலைபெற்றது. தொடர்ந்து இரண்டாவது தினமாக ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கும். அக்டோபர் மாதத்தில் மொத்த விலை மற்றும் சில்லரை விலை பணவீக்கமும் மதிப்பீடுகளுக்கு மாறாக உயர்ந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் மொத்தமுள்ள 30 துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. குறிப்பாக வங்கி, பொறியியல், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குகள் பலத்த அடி வாங்கின. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. குறிப்பாக ஐ.டி.சி., எச்.டீ.எஃப்.சி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், எல்&டி, சேசா ஸ்டெர்லைட், பீ.எச்.இ.எல்., என்.டி.பி.சி. ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை மிகவும் குறைந்தது. வர்த்தகம் முடியும்போது 'சென்செக்ஸ்' 406.08 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 20,229.05 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 20,579.26 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 20,189.23 புள்ளிகள் வரையிலும் சென்றது. தேசிய பங்கு சந்தை தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிஃப்டி' 123.85 புள்ளிகள் குறைந்து 5,999.05 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 6,097.35 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 5,985.40 புள்ளிகளுக்கும் சென்றது. image: category:Tagging: |
| செப்டம்பர் மாதத்தில் கனிமங்கள் உற்பத்தி 9 சதவீதம் வளர்ச்சி Posted: 21 Nov 2013 09:51 AM PST புதுடெல்லி செப்டம்பர் மாதத்தில் நிலக்கரி, இரும்புத்தாது, இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், தங்கம் உள்ளிட்ட கனிமங்கள் உற்பத்தி சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 9 சதவீதம் அதிகரித்து ரூ.16,120 கோடியாக உயர்ந்துள்ளது. இது, 2012 செப்டம்பர் மாதத்தில் ரூ.14,785 கோடியாக இருந்தது. கச்சா எண்ணெய் செப்டம்பர் மாதத்தில், மொத்த கனிமங்கள் உற்பத்தியில் கச்சா எண்ணெய், நிலக்கரி, இரும்புத்தாது, இயற்கை எரிவாயு, பழுப்பு நிலக்கரி மற்றும் சுண்ணாம்புக்கல் ஆகிய 6 கனிமங்களின் பங்கு 95 சதவீதமாக உள்ளது. மொத்த கனிமங்கள் உற்பத்தியில் மதிப்பு அடிப்படையில் அதிகபட்சமாக கச்சா எண்ணெயின் பங்கு 35 சதவீதமாக உள்ளது. இதன் உற்பத்தி ரூ.5,625 கோடியாக உள்ளது. அதேசமயம் நிலக்கரி உற்பத்தி அளவு மற்றும் மதிப்பு அடிப்படையில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. நிலக்கரி உற்பத்தி அளவின் அடிப்படையில் 3.61 கோடி டன்னிலிருந்து 4.06 கோடி டன்னாகவும், மதிப்பு அடிப்படையில் ரூ.4,137 கோடியிலிருந்து ரூ.4,939 கோடியாகவும் அதிகரித்துள்ளது. இரும்புத்தாது உற்பத்தி ரூ.2,321 கோடியிலிருந்து ரூ.2,198 கோடியாக குறைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் அளவு அடிப்படையில் இரும்புத்தாது உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும் மதிப்பு அடிப்படையில் சரிவடைந்துள்ளது. இயற்கை எரிவாயு இயற்கை எரிவாயு உற்பத்தி மதிப்பு அடிப்படையில் ரூ.1,801 கோடியாக உள்ளது. சுண்ணாம்புக்கல் உற்பத்தி மதிப்பு அடிப்படையில் ரூ.355 கோடியாக உள்ளது. தங்கம் உற்பத்தி 124 கிலோவிலிருந்து 117 கிலோவாக குறைந்துள்ளது. வைரம் உற்பத்தி 2,515 காரட்டிலிருந்து 3,001 காரட்டாக அதிகரித்துள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் நம் நாடு நான்காவது இடத்தில் உள்ளது. மேலும், நிலக்கரி தேவையை பூர்த்தி செய்ய இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, உள்நாட்டிலேயே கனிமங்கள் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. image: category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |