Daily Thanthi |
- ஆனந்த்–கார்ல்சென் இடையிலான உலக சதுரங்கம்: 4–வது சுற்று ஆட்டம்
- இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் நியூசிலாந்து அணி வெற்றி
- இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் 2–வது டெஸ்ட்: கடைசி முறையாக களம் இறங்குகிறார், தெண்டுல்கர் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மும்பையில் இன்று தொடக்கம்
- நடப்பு 2013–14–ஆம் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 5,600 கோடி டாலராக குறையும் ரகுராம் ராஜன் நம்பிக்கை
- ஐந்து நாள் தொடர் சரிவுக்கு பின் முன்னேற்றம் ரூபாய் மதிப்பு 38 காசு உயர்வு
- அடுத்த ஓராண்டு காலத்திற்குள் இணையதள இணைப்புகள் 24.30 கோடியாக அதிகரிக்கும்
- அரசு மருத்துவ கல்லூரிகளில் டி.டி. கல்லூரி மாணவர் சேர்க்கையை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
- ஏப்ரல்–அக்டோபர் மாத காலத்தில் ரயில்வே துறை ஈட்டிய வருவாய் 12.53% வளர்ச்சி
- வங்கிகளுக்கான ‘ஸ்வாப்’ திட்டத்தால் அன்னியச் செலாவணி வரத்து 2,500 கோடி டாலராக உயரும்
- சில்லரை விலை பணவீக்கம் உயர்ந்துள்ளதால் ‘சென்செக்ஸ்’ 88 புள்ளிகள் சரிவு
| ஆனந்த்–கார்ல்சென் இடையிலான உலக சதுரங்கம்: 4–வது சுற்று ஆட்டம் Posted: 13 Nov 2013 11:59 AM PST சென்னை உலக சதுரங்கம் தமிழக அரசின் ஆதரவுடன் நடப்பு சாம்பியன் விசுவநாதன் ஆனந்த் (இந்தியா), உலகின் நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) இடையேயான உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது. 12 சுற்று கொண்ட இந்த போட்டியில் 6.5 புள்ளியை எட்டும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் செல்வார். இந்த போட்டியின் முதல் 3 சுற்று ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. இந்த நிலையில் 4–வது சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. ஆனந்த் வெள்ளை நிற காய்களுடன் ஆட்டத்தை தொடங்கினார். ராஜாவின் முன்னால் உள்ள சிப்பாயை 2 கட்டம் நகர்த்தி ஆட்டத்தை தொடங்கினார். அதாவது ரய் லோபஸ் முறையில் ஆனந்த் ஆட்டத்தை ஆரம்பித்தார். image: category: |
| இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் நியூசிலாந்து அணி வெற்றி Posted: 13 Nov 2013 11:53 AM PST ஹம்பன்டோட்டா, இலங்கை–நியூசிலாந்து அணிகள் இடையிலான 2–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹம்பன்டோட்டாவில் நடந்தது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் கருணரத்னே 4 ரன்னில் ஆட்டம் இழந்தார். இலங்கை அணி 20.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. மழையால் ஆட்டம் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டதால் ஆட்டம் 23 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இலங்கை அணி 23 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. தில்ஷன் 55 ரன்னுடனும், சங்கக்கரா 71 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் கேப்டன் மிஸ்ஸ் ஒரு விக்கெட்டு வீழ்த்தினார். பின்னர் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 23 ஓவர்களில் 198 ரன் வெற்றி இலக்காக நியூசிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர் லாத்தம், லுக் ரோஞ்ச், நாதன் மெக்கல்லம் ஆகியோரின் அதிரடியில் நியூசிலாந்து அணி வெற்றி இலக்கை எட்டியது. நியூசிலாந்து அணி 23 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லாத்தம் 68 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 86 ரன் எடுத்தும், லுக் ரோஞ்ச் 26 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 49 ரன் எடுத்தும் ஆட்டம் இழந்தனர். நாதன் மெக்கல்லம் 9 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 32 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் குலசேகரா 4 விக்கெட்டும், செனநாயகே 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இரு அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டம்புல்லாவில் வருகிற 16–ந் தேதி நடக்கிறது. image: category: |
| Posted: 13 Nov 2013 11:49 AM PST மும்பை உலக ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், சாதனை நாயகன் சச்சின் தெண்டுல்கர் இன்று தனது கடைசி போட்டியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக களம் இறங்குகிறார். தெண்டுல்கரின் கடைசி போட்டி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இது தான் இந்திய ஜாம்பவான் 40 வயதான சச்சின் தெண்டுல்கர் விளையாடப்போகும் கடைசி போட்டி என்பதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே இந்த போட்டியை காண தவமாய் தவமிருக்கிறது. தெண்டுல்கரின் 200–வது டெஸ்ட் இது என்பது இன்னொரு சிறப்பம்சமாகும். 200–வது டெஸ்ட் மைல்கல்லை எட்டப்போகும் முதல் வீரர் இவர் தான். தாயார் முன்னிலையில்... 1989–ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கிற்குள் நுழைந்த தெண்டுல்கர் 24 ஆண்டுகால தனது கிரிக்கெட் சகாப்தத்தை முடிக்க இருப்பதால் இந்த டெஸ்ட் உணர்ச்சிபூர்வமாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அவரது தாயார் ரஜ்னி, தெண்டுல்கரின் ஆட்டத்தை ஒரு முறை கூட நேரில் பார்த்தது இல்லை. மகனின் கடைசி சர்வதேச ஆட்டத்தை வீல்சேர் உதவியுடன் அவர் பார்க்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. இது அவரது சொந்த ஊர் என்பதால் மும்பை நகரமே தெண்டுல்கரின் மோகத்தால் மூழ்கி கிடக்கிறது. அது மட்டுமல்ல, இந்த டெஸ்டில் 2–வது விக்கெட் எப்போது சரியும், தெண்டுல்கர் எப்போது களம் இறங்குவார் என்று தான் ஒவ்வொருவரும் ஏங்குவார்கள். அவர் மைதானத்திற்குள் கால் பதிக்கும் போது போது இரு அணி வீரர்களும் வரிசையில் நின்று மரியாதை செலுத்துவார்கள். கேப்டன் டோனி, அவருக்கு கடைசி நாளிலோ அல்லது டெஸ்ட் முழுவதும் கேப்டன் பதவியை வழங்கி கவுரவிக்கலாம். இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்படும். இப்படி கிரிக்கெட்டின் கடவுளாக வர்ணிக்கப்படும் தெண்டுல்கரை சுற்றியே அனைத்து நிகழ்வுகளும் அரங்கேற இருப்பதால், அவர் இந்த போட்டியின் நெருக்கடியையும், எதிர்பார்ப்புகளையும் அந்த அளவுக்கு நிறைவேற்ற போகிறார்? என்ற ஏக்கமும் இல்லாமல் இல்லை. அவர் கடைசி டெஸ்டில் வெற்றியை ருசித்து, சதத்துடன் விடைபெற்றால் அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும். இதுவரை 31 வீரர்கள் தங்களது கடைசி டெஸ்டில் சதம் அடித்துள்ளனர். அந்த பட்டியலில் தெண்டுல்கரும் இணைவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மொத்தத்தில் இந்த ஆட்டத்தை நேரில் காண இருக்கும் 32 ஆயிரம் பேருக்கும் இது மறக்க முடியாத நிகழ்வாக அமையும். பதிலடி கொடுக்க தீவிரம் முதலாவது டெஸ்டில் 3–வது நாளிலேயே சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி சரிவில் இருந்து மீள கடுமையாக முயற்சிக்கும். தெண்டுல்கரின் பிரிவு உபசார டெஸ்ட் போட்டியில் பதிலடி கொடுக்க வேண்டும், தெண்டுல்கரை சீக்கிரம் காலி செய்ய வேண்டும் என்பது தான் வெஸ்ட் இண்டீசின் ஒரே இலக்காகும். வெஸ்ட் இண்டீஸ் வீரர் சந்தர்பாலுக்கு இது 150–வது டெஸ்ட் போட்டியாகும். வெற்றியை அவருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். இதனால் டெஸ்டில் முதல் நாளில் கடைசி நாள் வரை விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. தெண்டுல்கர் இந்த ஆட்டத்தில் எத்தனை ரன்கள் அடிப்பாரா? சதம் அடிப்பாரா? என்று ஒரு பக்கம் கோடிக்கணக்கில் சூதாட்டங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. வீரர்கள் விவரம் போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:– இந்தியா: முரளிவிஜய், ஷிகர் தவான், புஜாரா, சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி, ரோகித் ஷர்மா, டோனி (கேப்டன்), அஸ்வின், பிரக்யான் ஓஜா, முகமது ஷமி அகமது, புவனேஷ்வர்குமார். வெஸ்ட் இண்டீஸ்: கிறிஸ் கெய்ல், கீரன் பவெல், டேரன் பிராவோ, சாமுவேல்ஸ், சந்தர்பால், தினேஷ் ராம்டின், டேரன் சேமி (கேப்டன்), ஷில்லிங்போர்டு, டினோ பெஸ்ட், கோட்ரெல், பெர்மால் அல்லது நார்சிங் டியோநரின். காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. தெண்டுல்கரின் விக்கெட்டை வீழ்த்த ஆர்வம்–சேமி வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சேமி கூறுகையில், 'இது தான் தனது கடைசி டெஸ்ட் என்று சச்சின் தெண்டுல்கர் அறிவித்த தருணத்தில் இருந்து எங்களது பந்து வீச்சாளர்கள் அனைவரும் உத்வேகம் அடைந்து விட்டனர். ஏனெனில் அவரது விக்கெட்டை வீழ்த்த இது தான் கடைசி வாய்ப்பு என்பதால் எங்களது பந்து வீச்சாளர்களுக்குள் லேசான போட்டி ஏற்பட்டுள்ளது. அவர் கடைசியாக பேட் செய்ய இருக்கும் இருந்த நேரத்தில், அவரது விக்கெட்டை வீழ்த்தும் போது, கிரிக்கெட் சரித்திரத்தில் உங்கள் பெயரும் அதில் இடம் பெறும். எங்களது அனுபவம் வாய்ந்த வீரர் சந்தர்பாலுக்கு இது 150–வது டெஸ்டாகும். ஆனால் தெண்டுல்கரின் 200–வது டெஸ்ட் கொண்டாட்டத்தால் அது மறைக்கப்பட்டு விட்டது.' என்றார். தெண்டுல்கர் உற்சாகமாக விளையாடடோனி வேண்டுகோள் இந்திய கேப்டன் டோனி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'தனது கடைசி டெஸ்ட் போட்டியை தெண்டுல்கர் நெருக்கடியின்றி உற்சாகமாக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் சதம் அடிக்க வேண்டும் அல்லது இரட்டை சதம் அல்லது முச்சதம் அடிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். அதை நிச்சயம் செய்து காட்டுவார் என்று உத்தரவாதம் தர முடியாது. அவர் தனது கடைசி போட்டியை முழுமையாக அனுபவித்து விளையாட வேண்டும். சில விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தலாம். இது கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஆட்டமாக இருக்கும். ஆனால் நாங்கள் முடிந்தவரை தொடர்ந்து இயல்பாக இருப்பது அவசியமாகும். ஏனெனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கிரிக்கெட் மீது முழு கவனமும் இருக்க வேண்டும். வெளிநாட்டு வீரர்கள் பலர் களத்தில் வெற்றிகரமாக சாதித்து இருப்பதை பார்த்து இருக்கிறேன். ஆனால் களத்திற்கு வெளியே இருந்த நெருக்கடியை சமாளிப்பதில் அவர்கள் தோற்று இருக்கிறார்கள். ஆனால் இவை இரண்டிலும் சாதித்தவர் தான் தெண்டுல்கர். அது தான் அவரது சிறப்பு' என்றார். தெரியுமா உங்களுக்கு? தெண்டுல்கர் டெஸ்டில் 51 சதங்கள் அடித்து உலக சாதனை படைத்தவர் என்பதை அறிவோம். ஆனால் அவர் டெஸ்ட் விளையாடும் 10 நாடுகளில் ஜிம்பாப்வே மண்ணில் மட்டும் சதம் கண்டது கிடையாது. ஜிம்பாப்வே நாட்டில் அவர் இதுவரை 4 டெஸ்டில் விளையாடி 2 அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். ஆனால் இந்திய மண்ணில் ஜிம்பாப்வேக்கு எதிராக 3 சதங்கள் அடித்திருக்கிறார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் தெண்டுல்கர் விளையாடிய போட்டிகளில் இந்திய அணியில் அடிக்கப்பட்ட சதங்களின் எண்ணிக்கை 353. இதில் தெண்டுல்கரின் பங்களிப்பு 100 சதங்கள் (டெஸ்டில் 51, ஒரு நாள் போட்டியில் 49). மொத்தம் 38 சக நாட்டவர்கள் அவர் விளையாடிய ஆட்டங்களில் சதம் அடித்துள்ளனர். சச்சினுடன் இணைந்து விளையாடியதில் முதல் முதலாக சதம் அடித்தவர், சஞ்சய் மஞ்சரேக்கர். 1989–ம்ஆண்டு தெண்டுல்கர் கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகம் ஆன போது, 2–வது இன்னிங்சில் மஞ்சரேக்கர் 113 ரன்கள் எடுத்தார். இந்த வகையில் கடைசியாக சதம் அடித்தவர் அஸ்வின். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடந்த டெஸ்டில் அவர் 124 ரன்கள் விளாசினார். ராகுல் டிராவிட் (42 சதம்), அதிக சதங்கள் அடித்த தெண்டுல்கரின் சக அணி வீரர் என்ற சிறப்பை பெற்றிருக்கிறார். தெண்டுல்கர் இதுவரை 123 முறை 'கிளீன் போல்டு' முறையில் விக்கெட்டை பறிகொடுத்து இருக்கிறார். 100 பந்து வீச்சாளர்கள் அவரை 'கிளீன் போல்டு' ஆக்கி இருக்கிறார்கள். இதில் ஷான் பொல்லாக் (தென்ஆப்பிரிக்கா) அப்துல் ரசாக் (பாகிஸ்தான்), டொனால்டு (தென்ஆப்பிரிக்கா), குலசேகரா (இலங்கை) ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 முறை அவரது ஸ்டம்பை வீழ்த்தி இருக்கிறார்கள். சுழற்பந்து வீச்சு ஜாம்பவனாக திகழ்ந்த ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே ஒரு முறை கூட தெண்டுல்கரின் ஸ்டம்பை சாய்த்தது இல்லை. 21 வயதுக்குள் 7 டெஸ்ட் சதங்கள் அடித்த ஒரே வீரர் தெண்டுல்கர் தான். இது அசைக்க முடியாத சாதனையாக இந்த நாள் வரை நீடிக்கிறது. 21 வயதை தொடுவதற்குள் அதிக சதங்கள் அடித்தவர்களில் 2–வது இடத்தில் வெஸ்ட் இண்டீசின் ஜார்ஜ் ஹெட்லி (4 சதம்) உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தெண்டுல்கர் இதுவரை 41,113 நிமிடங்கள் பேட் செய்திருக்கிறார். அதாவது அவர் பேட் செய்வதற்காக செலவிட்ட காலம்: 28 நாட்கள் 13 மணி 13 நிமிடங்கள். சமரச நாயகனாக விளங்கிய தெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணி 2002–ம் ஆண்டு இங்கிலாந்தில் விளையாடிய போது அப்போது பயிற்சியாளராக இருந்த நியூசிலாந்தின் ஜான் ரைட் ஷேவாக்கின் கன்னத்தில் அறைந்ததாகவும், விசுவரூபம் எடுக்க இருந்த இந்த பிரச்சினையே தெண்டுல்கர் சாதுர்யமாக கையாண்டதால் விஷயம் அமுங்கியதாகவும் இந்திய கிரிக்கெட் வாரியத் துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். வீரர்களின் ஓய்வறையில் ஏற்படும் மோசமான பிரச்சினைகளையும் லாவகமாக தீர்ப்பதில் தெண்டுல்கர் கைதேர்ந்தவர் என்பதற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டாக அமைந்தது. இது பற்றி ராஜீவ் சுக்லா கூறியதாவது:– 2002–ம் ஆண்டு இங்கிலாந்து தொடரில், ஒரு ஆட்டம் முடிந்த பிறகு அறையில் ஷேவாக் கவலையுடன் இருப்பதை பார்த்தேன். ஏன் சோகமாக இருக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்ட போது, பயிற்சியாளர் ஜான்ரைட் தன்னை அறைந்து விட்டதாக கூறவே, பிரச்சினை பெரிதானது. ஜான்ரைட், ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்காவிட்டால், ஓய்வறையில் இருந்து யாரும் கிளம்பமாட்டோம் என்று கேப்டன் சவுரவ் கங்குலி போர்க்கொடி தூக்கினார். இதன் பின்னர் ஜான்ரைட்டை சந்தித்து, ஷேவாக்கை அறைந்தீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர், இந்த ஆட்டத்தில் ஷேவாக் சதம் அடிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் அவர் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து விக்கெட்டை இழந்து விட்டார். அவர் விளையாடிய விதம் எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. கோபத்தில் அவரை தள்ளி விட்டேன் என்றார். இதனால் வீரர்களின் அறையில் ஒரு வித பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்த நேரத்தில் தெண்டுல்கர் என்னிடம் வந்து, ஜான்ரைட் நிச்சயம் மன்னிப்பு கேட்க கூடாது. அப்படி நடந்தால் பயிற்சியாளர் தனது மரியாதையை இழந்து விடுவார். இதை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். பிரச்சினையை நான் கவனித்துக் கொள்கிறேன் என்றார். அதைத் தொடர்ந்து அவர், ஷேவாக்கிடம் சென்று, விரிவாக பேசினார். இது தந்தை–மகன் இடையே நடக்கும் சம்பவம் மாதிரி. ஜான்ரைட் தந்தை மாதிரி. தனது மகனிடம் நடந்து கொள்வது போல் தான் ஜான் ரைட் உங்களிடம் நடந்துள்ளார் என்று கூறினார். இதனை ஷேவாக்கும் புரிந்து கொண்டார். அத்துடன் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. இதே போல் 'நாட்வெஸ்ட்' கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்ற போது வீரர்கள் அனைவரும் தங்களது பனியனை கழட்டி சுழற்ற வேண்டும் என்று கேப்டன் கங்குலி விரும்பினார். பிளின்டாப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் இதனை செய்ய விரும்பியிருக்கலாம். ஆனால் தெண்டுல்கர், அப்படி செய்யக்கூடாது, இது ஜென்டில்மேன் விளையாட்டு. கங்குலி விரும்பினால் அதை அவர் செய்யட்டும் என்று கூறி விட்டார். இவ்வாறு ராஜீக் சுக்லா தெரிவித்தார். image: category:Tagging: |
| Posted: 13 Nov 2013 11:24 AM PST மும்பை நடப்பு நிதி ஆண்டில் (2013–14) நடப்பு கணக்கு பற்றாக்குறை 5,600 கோடி டாலராக குறையும் என்றும், ரூபாய் மதிப்பு சரிவு கட்டுக்குள் வரும் என்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அன்னிய செலாவணி நடப்பு கணக்கு பற்றாக்குறை என்பது அன்னியச் செலாவணி வெளியேற்றத்திற்கும், வரவுக்கும் இடையில் உள்ள வித்தியாசமாகும். கடந்த 2011–12–ஆம் நிதி ஆண்டில் இது 7,820 கோடி டாலராக இருந்தது. இது அப்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.2 சதவீதமாகும். இந்நிலையில் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மந்தநிலையால் நாட்டின் ஏற்றுமதி சரிவடைந்தது. தங்கம், கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பால் ஒட்டுமொத்த சரக்குகள் இறக்குமதியும் உயர்ந்தது. இதனையடுத்து, சென்ற 2012–13–ஆம் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 8,800 கோடி டாலராக அதிகரித்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதமாக உயர்ந்தது. தங்கம் இறக்குமதி இந்த நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 7,000 கோடி டாலராக குறையும் என மத்திய அரசு ஏற்கனவே மதிப்பீடு செய்திருந்தது. ஏற்றுமதியில் முன்னேற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், தங்கம் இறக்குமதி குறைந்து வருவதால் இந்த பற்றாக்குறை 6,000 கோடி டாலராக குறையும் என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அண்மையில் தெரிவித்தார். தற்போது இந்த பற்றாக்குறை மேலும் 400 கோடி டாலர் குறைந்து 5,600 கோடி டாலராக குறையும் என நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் ரகுராம் ராஜன் தெரிவித்தார். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்திற்கும் குறைவாகும். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தால் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அக்டோபர் மாதத்தில் சரக்குகள் ஏற்றுமதி 13 சதவீதம் அதிகரித்து 2,727 கோடி டாலராக உயர்ந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 6.32 சதவீதம் அதிகரித்து 17,938 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இந்த நிதி ஆண்டில் ஒட்டுமொத்த சரக்குகள் ஏற்றுமதி 35,000 கோடி டாலரை எட்டும் என இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. மத்திய அரசு நடவடிக்கை நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பிற்கு தங்கம் இறக்குமதியும் ஒரு முக்கிய காரணமாகும். எனவே, இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்க தொடங்கியுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் (ஏப்ரல்–அக்டோபர்) தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி சென்ற ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் 12.86 சதவீதம் குறைந்து 2,800 கோடி டாலரிலிருந்து 2,400 கோடி டாலராக குறைந்துள்ளது. சென்ற நிதி ஆண்டில் தங்கம் இறக்குமதி 845 டன்னாக இருந்தது. இது, நடப்பு நிதி ஆண்டில் 600 டன்னாக குறையும் என வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, நடப்பு கணக்கு பற்றாக்குறை கட்டுக்குள் வரும் என்பது பெரும்பாலான பொருளியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. சி.ரங்கராஜனின் மதிப்பீடு மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்றும், இந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சியை 5.3 சதவீதமாக நிலை நிறுத்த முடியும் என்று பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசனைக்குழு தலைவர் சி.ரங்கராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்ற நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5 சதவீதமாகவும், நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 4.4 சதவீதமாகவும் குறைந்தது. image: category:Tagging: |
| ஐந்து நாள் தொடர் சரிவுக்கு பின் முன்னேற்றம் ரூபாய் மதிப்பு 38 காசு உயர்வு Posted: 13 Nov 2013 11:23 AM PST ஐந்து நாள் தொடர் சரிவுக்குப் பின் புதன்கிழமை அன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு 38 காசு உயர்ந்து 63.32–ல் நிலைபெற்றது. டாலருக்கான தேவைப்பாடு அதிகரித்ததையடுத்து சென்ற ஐந்து தினங்களாக ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்தது. இந்நிலையில் ஏற்றுமதியாளர்களும், ரிசர்வ் வங்கி சார்பில் பொதுத்துறை வங்கிகளும் டாலர்களை விற்பனை செய்ததால் நேற்று ரூபாய் மதிப்பு உயர்ந்தது. மேலும் பவுண்டுக்கு எதிராகவும் ரூபாய் மதிப்பு 101.03–ஆக உயர்ந்தது. நடப்பு கணக்கு பற்றாக்குறை கட்டுக்குள் வரும் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு ரூபாய் வெளிமதிப்பு உயர்ந்ததற்கு ஒரு காரணமாக அமைந்தது. image: category:Tagging: |
| அடுத்த ஓராண்டு காலத்திற்குள் இணையதள இணைப்புகள் 24.30 கோடியாக அதிகரிக்கும் Posted: 13 Nov 2013 11:21 AM PST புதுடெல்லி இந்தியாவில், அடுத்த ஓராண்டு காலத்திற்குள் இணையதள இணைப்புகள் 24.30 கோடியாக உயரும் என இந்திய இணையதளம் மற்றும் மொபைல் சங்கம் தெரிவித்துள்ளது. இணையதளங்களை அணுகுவதற்கு செல்போன்கள் ஒரு முக்கிய சாதனமாக உருவெடுத்துள்ளதால் இணைப்புகளின் எண்ணிக்கை இந்த அளவிற்கு அதிகரிக்க உள்ளதாக இச்சங்கத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா முதலிடம் இன்றைய நிலையில் 30 கோடி இணையதள இணைப்புகளை வழங்கி சீனா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 21 கோடி இணைப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. எனினும் 2014–ஆம் ஆண்டிற்குள் இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்து விடும் என தற்போதைய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அக்டேபார் நிலவரப்படி நம் நாட்டில் 20.50 கோடி இணையதள இணைப்புகள் உள்ளன. இது, 2012 அக்டோபரை விட 40 சதவீதம் அதிகமாகும். இந்நிலையில் டிசம்பர் மாதத்திற்குள் இணையதள இணைப்புகள் 21.30 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டில் இணையதள இணைப்புகள் பத்து லட்சம் என்ற அளவிலிருந்து ஒரு கோடியை எட்டுவதற்கு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. எனினும் பத்து கோடியிலிருந்து 20 கோடியை எட்டுவதற்கு மூன்றே ஆண்டுகள்தான் ஆகியுள்ளன. இந்நிலையில் அடுத்த ஆண்டிற்குள் புதிதாக சுமார் மூன்று கோடி இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. செல்போன்களில் இணையதளம் அடுத்தகட்ட புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன. அக்டோபர் நிலவரப்படி செல்போன்களில் இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 11 கோடியாக உள்ளது. டிசம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 13 கோடியை எட்டி விடும் என தெரிகிறது. இ–மெயில் தொடர்ந்து இணையதளங்களை பயன்படுத்துவோரில் 90 சதவீதத்தினர் தகவல் தொடர்புகளுக்காக மட்டுமே இணையதளத்தை நாடுகின்றனர். அவர்களிலும் 78 சதவீதத்தினர் இ–மெயில் தொடர்புகளுக்காக மட்டுமே இணையதளத்தை பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. image: category:Tagging: |
| Posted: 13 Nov 2013 11:21 AM PST சென்னை அரசு மருத்துவ கல்லூரிகளில், டி.டி. மருத்துவ கல்லூரி மாணவர்களை சேர்ப்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அங்கீகாரம் கிடைக்கவில்லை திருவள்ளூர் மாவட்டத்தில் டி.டி. மருத்துவ கல்லூரி உள்ளது. இங்கு 2010–11–ம் ஆண்டில் எம்.பி.பி.எஸ். படிப்புக்காக 150 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இதற்கான அனுமதியை இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) வழங்கி இருந்தது.பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு அந்த கல்லூரிக்கு எம்.சி.ஐ.யின் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இது சம்பந்தமாக பல்வேறு வழக்குகள், மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன.பல்வேறு தீர்ப்புகளுக்கு பிறகு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அங்கு விசாரணை நிலுவையில் உள்ளது. சாதகமாக இல்லை அங்கீகாரம் பெறாத நிலையில் அந்த கல்லூரி மாணவர்களால் தேர்வு எழுத முடியாமல் போய்விட்டது. எனவே கோர்ட்டில் பல மாணவர்கள் வழக்கு தாக்கல் செய்தனர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னர் நீண்ட கால போராட்டங்களையும் மேற்கொண்டனர்.மேலும் தமிழக அரசு அதிகாரிகள், அமைச்சரையும் சந்தித்து மாணவர்கள், பெற்றோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எதுவுமே மாணவர்களுக்கு சாதகமாக அமையவில்லை. அரசு கல்லூரிகளில் இந்த சூழ்நிலையில், டி.டி. மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு 2010–11–ம் ஆண்டில் அளிக்கப்பட்ட அனுமதியையும் எம்.சி.ஐ. திரும்பப் பெற்றது. ஆனால் டி.டி. கல்லூரியில் அப்போது சேர்க்கப்பட்ட மாணவர்களை கூடுதல் இடங்களை உருவாக்கி அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ப்பதற்கு எம்.சி.ஐ. அனுமதி அளித்தது. அதன்படி அரசு கல்லூரிகளில் அந்த மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். கல்லூரி நிர்வாகம் மனு இதை எதிர்த்து ஐகோர்ட்டில் டி.டி. மருத்துவ கல்லூரி நிர்வாகம் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தங்கள் கல்லூரி மாணவர்களை அரசு சேர்த்துக்கொள்ளக்கூடாது என்று அதில் கூறப்பட்டது. இந்த மனுவை நீதிபதி கே.கே.சசீதரன் விசாரித்தார். இந்த மனுவுக்கு பதிலளித்த எம்.சி.ஐ., மாணவர்களின் தொடர் கல்வி நலன் கருதியே அரசு கல்லூரிகளுக்கு அவர்கள் மாற்றப்பட்டனர் என்று கூறியது.150 மாணவர்களில் 149 பேர் கல்லூரியில் சேர்வதற்கான கடிதத்தை வாங்கிவிட்டனர். தற்போது தடை விதித்தால் அந்த 150 மாணவர்களின் நலனும் பாதிப்புக்கு உள்ளாகும். எனவே மனுவை ஏற்க முடியாது என்று கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். மற்றொரு மனு தள்ளுபடி மேலும், இதே பிரச்சினையில் ஆர்.கோபாலகிருஷ்ணன் என்பவரும் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், நான் எப்.சி. வகுப்பைச் சார்ந்தவர். எனது மகள் அக்ஷயா, திருச்சியில் உள்ள சென்னை மருத்துவ கல்லூரியில் 3–ம் ஆண்டு படிக்கிறார்.எப்.சி. வகுப்பு என்பதால் எனது மகளுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் தரப்படவில்லை. ஆனால் தற்போது அரசு கல்லூரியில் டி.டி. கல்லூரியில் மாணவர் சேர்க்கும்போது, கட் ஆப் மதிப்பெண் எதையும் பார்க்காமலேயே சேர்த்துள்ளனர்.எனவே எனது மகளுக்கும் மார்க் அடிப்படையில் அரசு கல்லூரியில் இடம் அளிக்க வேண்டும், எம்.சி.ஐ.யின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். image: category:Tagging: |
| ஏப்ரல்–அக்டோபர் மாத காலத்தில் ரயில்வே துறை ஈட்டிய வருவாய் 12.53% வளர்ச்சி Posted: 13 Nov 2013 11:19 AM PST புதுடெல்லி ரயில்வே துறை, ஏப்ரல் – அக்டோபர் மாத காலத்தில், 12.53 சதவீத வளர்ச்சியுடன் ரூ.77,236 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் வருவாய் ரூ.68,634 கோடியாக இருந்தது. சரக்கு போக்குவரத்து கணக்கீட்டுக் காலத்தில் ரயில்வே துறையின் சரக்கு போக்குவரத்து வாயிலான வருவாய் 9.56 சதவீதம் உயர்ந்து ரூ.51,876 கோடியாக அதிகரித்துள்ளது. பயணிகள் வாயிலான வருவாய் 18 சதவீதம் அதிகரித்து ரூ.21,248 கோடியாக உயர்ந்துள்ளது. இதர கோச்சிங் சேவைகள் மூலம் ஈட்டிய வருவாய் 23 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.2,187 கோடியை எட்டியுள்ளது. இந்நிலையில் பயணச்சீட்டு விற்பனை சற்றே சரிவடைந்துள்ளது. அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில் மொத்தம் 497 கோடி பயணச்சீட்டுகள் விற்பனையாகி உள்ளன. இது சென்ற ஆண்டின் இதே காலத்தில் 500 கோடியாக இருந்தது. ஆக, விற்பனை 0.60 சதவீதம் குறைந்துள்ளது. ரயில்வே துறைக்கு ஏராளமாக நிதி தேவைப்படும் நிலையில் இந்த சிறு சரிவும் அதிருப்தி அளித்துள்ளதாக தெரிகிறது. நகர்ப்புற பகுதிகளில் சாதாரண ரயில்களுடன், மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவையளிக்கின்றன. ஏப்ரல்–அக்டோபர் மாத காலத்தில் நகர்ப்புற பகுதியில் 231 கோடி பயணச்சீட்டுகள் விற்பனையாகி உள்ளன. இது 3.79 சதவீத சரிவாகும். சென்ற ஆண்டின் இதே காலத்தில் 240 கோடி பயணச்சீட்டுகள் விற்பனையாகி இருந்தன. அதே சமயம் புறநகர்ப் பகுதிகளில் பயணச்சீட்டுகள் அதிகம் விற்பனையாகி உள்ளது. நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இப்பகுதிகளில் மொத்தம் 266 கோடி பயணச்சீட்டுகள் விற்பனையாகி உள்ளன. இது சென்ற நிதி ஆண்டின் இதே மாதங்களில் 260 கோடியாக இருந்தது. ஆக, விற்பனை 2.35 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. அன்னிய நேரடி முதலீடு ரயில்வே துறையில் இருப்புப்பாதை இணைப்புகளை விரிவுபடுத்துவதற்கு தேவையான நிதி இல்லாதது மிகப் பெரிய சவாலாக உள்ளது. எனவே ரயில்வே துறை தொடர்பான உள்கட்டமைப்பு திட்டங்களில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். நிதி நெருக்கடியால் ரயில்வே துறை சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கிடைத்தால் அது மிகப் பெரிய நிவாரணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. image: category:Tagging: |
| வங்கிகளுக்கான ‘ஸ்வாப்’ திட்டத்தால் அன்னியச் செலாவணி வரத்து 2,500 கோடி டாலராக உயரும் Posted: 13 Nov 2013 11:17 AM PST புதுடெல்லி வங்கிகளுக்கான 'ஸ்வாப்' திட்டம் மற்றும் வெளிநாடுகளில் கடன் திரட்டுவதற்கான உச்சவரம்பு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் இம்மாத இறுதிக்குள் 2,500 கோடி டாலர் அன்னியச் செலாவணி பெறப்படும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க நிலவரம் அமெரிக்க பொருளாதார நிலவரம் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பால் ஆகஸ்டு மாதத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு 68.85–ஆக வீழ்ச்சி அடைந்தது. இந்நிலையில், செப்டம்பர் 4–ந் தேதி ரிசர்வ் வங்கி கவர்னராக பொறுப்பு ஏற்ற ரகுராம் ராஜன் ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் ஓர் அங்கமாக டாலர் வரத்தை அதிகரிக்கும் வகையில் வங்கிகள் வெளிநாடுகளில் கடன் திரட்டும் உச்சவரம்பை உயர்த்தினார். வங்கிகள் வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து திரட்டும் அன்னியச் செலாவணி டெபாசிட்டுகளை 'ஸ்வாப்' எனப்படும் செலாவணி பரிமாற்றம் செய்வது வழக்கம். இந்த பரிமாற்றத்தின் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டது. இந்த சலுகை திட்டம் இம்மாதம் 30–ந் தேதி வரை அமலில் இருக்கும். மேற்கண்ட திட்டங்கள் வாயிலாக இதுவரை 1,750 கோடி டாலர் அன்னியச் செலாவணி பெறப்பட்டுள்ளது. இந்த வரத்து இம்மாத இறுதிக்குள் 2,500 கோடி டாலரை எட்டும் என பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அரவிந்த் மாயாராம் தெரிவித்துள்ளார். சிறப்பு பண அளிப்பு அமெரிக்க ரிசர்வ் வங்கி சிறப்பு பண அளிப்பு நடவடிக்கையை குறைக்கும் என்ற செய்தியால் இவ்வாண்டு மே 22–ந் தேதி முதல் ஆகஸ்டு 28–ந் தேதி வரையிலான காலத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 20 சதவீதம் சரிவடைந்தது. ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அக்டோபர் மாத இறுதி வரை ரூபாய் வெளிமதிப்பு சற்று உயர்ந்தது. இந்நிலையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அதிக அளவில் டாலர்களை வாங்கியதாலும், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறையும் என்ற நிலைப்பாட்டாலும் தொடர்ந்து ஐந்து தினங்களாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவடைந்து வந்தது. நேற்று இது 38 காசு உயர்ந்து 63.32–ல் நிலைபெற்றது. image: category:Tagging: |
| சில்லரை விலை பணவீக்கம் உயர்ந்துள்ளதால் ‘சென்செக்ஸ்’ 88 புள்ளிகள் சரிவு Posted: 13 Nov 2013 11:16 AM PST மும்பை பங்கு வியாபாரம் தொடர்ந்து ஏழாவது தினமாக மந்தமாக இருந்தது. புதன்கிழமை அன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு 'சென்செக்ஸ்' 88 புள்ளிகளை இழந்தது. பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 10.09 சதவீதமாக உயர்ந்துள்ளது என செவ்வாய்க்கிழமை அன்று பங்கு வியாபாரம் முடிந்ததும் மத்திய புள்ளியியல் துறை தெரிவித்தது. இது முந்தைய மாதத்தைக் காட்டிலும் (9.84 சதவீதம்) 0.25 சதவீதம் அதிகமாகும். ஏழு மாதங்களுக்கு பிறகு இந்த பணவீக்கம் 10 சதவீதத்தை தாண்டியுள்ளது. எனவே, ரிசர்வ் வங்கி முக்கிய கடனிற்கான வட்டியை மேலும் உயர்த்தும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அக்டோபர் 28–ந் தேதி வெளியிட்ட பணக் கொள்கை ஆய்வு அறிக்கையில் ரிசர்வ் வங்கி முக்கிய கடனிற்கான வட்டியை 0.25 சதவீதம் உயர்த்தியது. அமெரிக்க ரிசர்வ் வங்கி டிசம்பர் மாதத்திற்குள் சிறப்பு பண அளிப்பு நடவடிக்கையை குறைக்கும் என்ற அச்சப்பாட்டால் ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இதுபோன்ற காரணங்களால் ரியல் எஸ்டேட், நுகர்பொருள், வங்கி, பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதையடுத்து ஐ.டி. துறையைச் சேர்ந்த சில நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. அதேசமயம் மோட்டார் வாகனம், நுகர்வோர் சாதனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த சில நிறுவனங்களின் பங்குகளுக்கு தேவைப்பாடு காணப்பட்டது. இல்லையென்றால் பங்கு வியாபாரத்தில் அதிக சரிவு ஏற்பட்டு இருக்கும். கெயில் இந்தியா 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் கெயில் இந்தியா, சேசா ஸ்டெர்லைட், சிப்லா, எச்.டீ.எஃப்.சி. வங்கி, ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட 19 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. அதேசமயம் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டாட்டா ஸ்டீல், மகிந்திரா & மகிந்திரா, டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட 11 நிறுவனங்களின் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. வர்த்தகம் முடியும்போது 'சென்செக்ஸ்' 87.51 புள்ளிகள் சரிவடைந்து 20,194.40 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 20,365.59 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 20,161.64 புள்ளிகள் வரையிலும் சென்றது. தேசிய பங்கு சந்தை தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிஃப்டி' 28.45 புள்ளிகள் குறைந்து 5,989.60 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 6,042.25 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 5,972.45 புள்ளிகளுக்கும் சென்றது. image: category:Tagging: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |