Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


கேம்ப கோலா அடுக்குமாடி கட்டிடம் விவகாரம் அட்டார்னி ஜெனரலின் கருத்தை கேட்க முதல்–மந்திரி வலியுறுத்தல்

Posted: 12 Nov 2013 08:57 AM PST

மும்பை,

மும்பை கேம்ப கோலா அடுக்குமாடி கட்டிட விவகாரத்தில் அட்டர்னி ஜெனரலின் கருத்தை கேட்க மத்திய மந்திரி மிலின்டு தியோரேவை முதல்–மந்திரி பிரிதிவிராஜ் சவான் வலியுறுத்தினார்.

கேம்ப கோலா கட்டிடம்

மும்பை கேம்ப கோலா அடுக்குமாடி கட்டிடத்தில் 5 மாடிகள் வரை கட்டுவதற்கே அரசு அனுமதி அளித்தது. ஆனால் அங்கு 5–க்கும் மேற்பட்ட மாடிகள் கட்டப்பட்டன. அங்கு 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அந்த கட்டிடம் வாழ்வதற்கேற்ற சூழ்நிலையில் இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அங்கு வசிக்கும் பொதுமக்களின் உயிருக்கு எந்நேரமும் ஆபத்து நேரிடலாம். இதனை கருத்தில் கொண்டு அந்த கட்டிடத்தில் வசித்து வரும் பொதுமக்கள் கட்டிடத்தை விட்டு வெளியேறுமாறு ஐகோர்ட்டு கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது.

ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு, கேம்ப கோலா கட்டிடத்தில் வசிக்கும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சியினரும் போராட்டத்திலும் குதித்தனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

முதல்–மந்திரி வலியுறுத்தல்

இந்நிலையில் கேம்ப கோலா கட்டிடத்தை கட்டிக் காப்பதில் முதல்–மந்திரி பிரிதிவிராஜ் சவான் நடவடிக்கை எடுத்து வருகிறார். கட்டிட விவகாரம் தொடர்பாக, அட்வகேட் ஜெனரல் டேரியஸ் காம்பட்டாவின் கருத்து எதிர்மறையானது என்று பிரிதிவிராஜ் சவான் கூறினார். எனவே, இந்த குடியிருப்பை காப்பாற்றுவதற்காக மத்திய அரசு வக்கீல் அட்டர்னி ஜெனரல் வாகன்வதியின் கருத்தை கேட்குமாறு மத்திய மந்திரி மிலின்டு தியோராவை அவர் வலியுறுத்தினார். மேலும் அடுக்குமாடி கட்டிடத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க மாநில அரசு தயாராக இருப்பதாகவும், இது தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்கும் எண்ணம் இல்லை எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

5–வது மாடிக்கு மேல் கட்ட முறைப்படி அனுமதி எதுவும் இன்றி 1981–ம் ஆண்டு மற்றும் 1989–ம் ஆண்டுகளில் இந்த வளாகத்தில் 2 கட்டிடங்கள் கட்டப்பட்டது. 5 மாடி உயரத்திற்கு மட்டுமே கட்டிடங்கள் கட்டுவதற்காக அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறையை மீறி ஒரு கட்டிடம் 20 மாடியும், மற்றொரு கட்டிடம் 17 மாடியும் கட்டப்பட்டுள்ளது.
 

category:

News Group Category:

சட்டசபையின் அவசர கூட்டத்தில் சரத்குமார் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு

Posted: 12 Nov 2013 08:45 AM PST

சென்னை,

டாக்டர் கிருஷ்ணசாமி வெளியேற்றம்

சட்டசபையின் அவசர கூட்டத்தில், புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசும்போது சில கருத்துகளை முன்வைத்தார்.

இதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்து, ஒரு நல்ல தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்றும் வகையில் பேசுங்கள் என்று கூறினார். ஆனால், தொடர்ந்து டாக்டர் கிருஷ்ணசாமி தனது கருத்தை வலியுறுத்தும் வகையில் பேச முற்பட்டார்.

டாக்டர் கிருஷ்ணசாமியின் பேச்சுகள் அவை குறிப்பில் இடம்பெறாது என்று சபாநாயகர் தனபால் அறிவித்து, அடுத்து உறுப்பினர் ஜவஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி) பேசுங்கள் என்று கூறினார். ஆனால், அவர் பேச முற்பட்டபோதும், டாக்டர் கிருஷ்ணசாமி எழுந்து நின்றபடி தனது கருத்தை வலியுறுத்த முயன்றார்.

உறுப்பினர் ஜவஹிருல்லா தனது பேச்சை முடித்த பிறகும் டாக்டர் கிருஷ்ணசாமி நின்று கொண்டே, தனக்கு பேச அனுமதி கேட்டுக்கொண்டே இருந்தார். இதற்கிடையே உறுப்பினர் ரங்கராஜன் (காங்கிரஸ்) பேசத் தொடங்கினார். அப்போது, டாக்டர் கிருஷ்ணசாமி சபாநாயகர் முன்பு வந்து அமர முயன்றார்.

அதனைத் தொடர்ந்து, டாக்டர் கிருஷ்ணசாமியை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். அதன்பேரில், அவர் வெளியேற்றப்பட்டார்.

டாக்டர் கிருஷ்ணசாமி வெளியேற்றப்பட்டபோது, புதிய தமிழகம் கட்சியின் மற்றொரு உறுப்பினர் ராமசாமி (நிலக்கோட்டை) அவையில்தான் இருந்தார்.

சரத்குமார் பேச்சுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உறுப்பினர் சரத்குமார் பேசும்போது, பிரதமர் மன்மோகன்சிங்கை 'பேசாத பிரதமர்' என்று குறிப்பிட்டார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அந்த வாசகத்தை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதற்கு சபாநாயகர், ''நீங்கள் பேசும்போது, அவர் பேசும் பிரதமர்தான் என்று தெரிவியுங்கள். அதுவும் அவை குறிப்பில் ஏற்றுக்கொள்ளப்படும்'' என்று கூறினார்.

ஆனாலும், சரத்குமார் பேச்சுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய சரத்குமார், ''இலங்கை தமிழர்களுக்காகவும், தமிழக மீனவர்களுக்காகவும் பேசாத பிரதமர் என்று கூற முயன்றேன். அதற்குள் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவசரப்பட்டுவிட்டனர்'' என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சற்றுநேரத்தில் மீண்டும் கூட்டத்தில் வந்து கலந்துகொண்டனர்.

பிரதமர் புறக்கணிப்பு பற்றி காங்கிரஸ் விளக்கம்

சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் ரங்கராஜன் பேசியதாவது:–

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மதிப்பளித்து பிரதமர் மன்மோகன்சிங், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள போவதில்லை என்று அறிவித்தார். அதற்காக தமிழக காங்கிரஸ் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கை, இந்தியாவின் அண்டை நாடு. இந்திய அரசுக்கு பல்வேறு பொறுப்புகள் உள்ளன. வெளியுறவுக் கொள்கை உள்ளது.

இலங்கை உடனான உறவை துண்டித்து விட்டால், அங்குள்ள 8 லட்சம் தமிழர்களின் நிலை குறித்து யார் பேசுவது என்று எங்கள் தலைவர் கூறியுள்ளார். அங்கு வடக்கு மாகாணத்தில் இந்தியா கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே தேர்தல் நடத்தப்பட்டது. தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே பிரதமர் மன்மோகன்சிங் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்துள்ளார். வருங்காலத்தில் இலங்கை தமிழர்கள் நலமோடு இருக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை சரிதான்.

இவ்வாறு அவர் பேசினார்.
 

category:

News Group Category:

குஜராத் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மாயா கோட்னானிக்கு 3 மாதம் ஜாமீன்

Posted: 12 Nov 2013 08:35 AM PST

ஆமதாபாத்,

கடந்த 2002-ம் ஆண்டில், குஜராத் மாநிலம் நரோடா பாட்டியாவில் நடந்த கலவர வழக்கில், பா.ஜனதா கட்சியின் முன்னாள் பெண் எம்.எல்.ஏ. மாயா கோட்நானி, பஜ்ரங்க் தளம் தலைவர் பஜ்ரங்கி மற்றும் 29 பேருக்கு சிறப்பு கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இருதய நோய், மன அழுத்தத்துடன் குடல் பகுதி காச நோயினால் அவதிப்பட்டு வரும் மாயாவை மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக 6 மாதம் ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கோரி, குஜராத் மாநில ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் கே.எஸ்.ஜாவேரி, கே.ஜே.தாக்கல் ஆகியோரைக் கொண்டு குஜராத் ஐகோர்ட்டு அமர்வு, மாயா கோட்நானிக்கு மருத்துவ சிகிச்சைக்காக 3 மாதம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
 

category:

News Group Category:

தொடர்ந்து ஆறாவது தினமாக சரிவு ‘சென்செக்ஸ்’ 209 புள்ளிகள் வீழ்ச்சி

Posted: 12 Nov 2013 08:32 AM PST

மும்பை,

பங்கு வியாபாரம் தொடர்ந்து ஆறாவது தினமாக மந்தமாக இருந்தது. செவ்வாய்க்கிழமை அன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 209 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது.

ரூபாய் மதிப்பு சரிவு

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு செவ்வாய்க்கிழமை அன்று 46 காசு சரிவடைந்து 63.70–ல் நிலைபெற்றது. தொடர்ந்து ஆறாவது தினமாக ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய், உரம், சமையல் எண்ணெய் போன்றவற்றின் இறக்குமதி செலவினம் உயர்ந்து பணவீக்கம் மேலும் அதிகரிக்கும். எனவே ரிசர்வ் வங்கி முக்கிய கடன்களுக்கான வட்டியை தொடர்ந்து உயர்த்தும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.

அக்டோபர் மாதத்தில் கார் விற்பனை 3.9 சதவீதம் சரிவடைந்தது. ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாக இருந்தது. இதுபோன்ற காரணங்களால் உலோகம், மின்சாரம், வங்கி, மோட்டார் வாகனம் உள்ளிட்ட பலதுறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. அதேசமயம் நுகர்பொருள், மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த சில நிறுவனங்களின் பங்குகளுக்கு தேவைப்பாடு காணப்பட்டது.

'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் டாட்டா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.டீ.எஃப்.சி. பேங்க், எல்–டி, இன்ஃபோசிஸ், பாரத ஸ்டேட் வங்கி, ஓ.என்.ஜி.சி., டிசிஸ், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோ கார்ப் உள்ளிட்ட 26 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

வர்த்தகம் முடியும்போது 'சென்செக்ஸ்' 209.05 புள்ளிகள் குறைந்து 20,281.91 புள்ளிகளில் நிலைகொண்டது. அதிகபட்சமாக 20,584.22 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 20,262.22 புள்ளிகளுக்கும் சென்றது.

நிப்டி

தேசிய பங்குச் சந்தையிலும் வர்த்தகம் மந்தமாக இருந்தது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 60.75 புள்ளிகள் குறைந்து 6,018.05 புள்ளிகளில் நிலைபெற்றது.

அதிகபட்சமாக 6,108.70 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 6,011.75 புள்ளிகளுக்கும் சென்றது.

category:

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஜெயலலிதா ‘திடீர்’ ஆய்வு விலங்குகள் பராமரிப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்

Posted: 12 Nov 2013 08:23 AM PST

வண்டலூர்,

வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 'திடீர்' ஆய்வு செய்தார். விலங்குகள் பராமரிப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.

ஜெயலலிதா ஆய்வு

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பல்வேறு அரியவகை விலங்குகளும், பறவைகளும் உள்ளன. இதனை தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர்.

இந்த நிலையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சிறுதாவூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு வண்டலூர்–கேளம்பாக்கம் சாலை வழியாக வந்து கொண்டிருந்தார்.

மதியம் 1.05 மணி அளவில் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே வந்த போது 'திடீர்' என முதல் அமைச்சர் ஜெயலலிதா வண்டலூர் உயிரியல் பூங்காவின் முக்கிய நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றார். உள்ளே செல்லும் போது விலங்குகள் பற்றிய தகவல்கள் வைக்கப்பட்டு உள்ள அரங்கத்திற்கு சென்று அதனை பார்த்தார்.

பின்னர் அவரால் பெயர் வைக்கப்பட்ட புலிக்குட்டிகள் மற்றும் யானைக்குட்டி, வெள்ளைபுலி, மான் உலாவிடம், பாம்பு குடில், வரிகுதிரை, நீர்யானை, புலி உள்பட பல்வேறு விலங்குகள் பராமரிக்கும் இடத்திற்கு நேரில் சென்றார். அங்கு சில நிமிடங்கள் நின்று அந்த விலங்குகளை பற்றியும், அவை எப்படி பராமரிக்கப்படுகின்றன என்பது பற்றியும் அவற்றின் உணவு முறை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.

அம்மா உணவக கட்டிடம்

இதனை தொடர்ந்து மிக விரைவில் திறக்கப்பட உள்ள அம்மா உணவக கட்டிடத்தையும் ஜெயலலிதா பார்வையிட்டார். மேலும் கடந்த ஆண்டு பூங்காவில் முதல்– அமைச்சரின் பிறந்த நாளில் நடப்பட்ட மரக்கன்றுகளையும் பார்த்தார். பூங்காவை முதல்– அமைச்சர் ஆய்வு செய்த போது வனத்துறை உயர் அதிகாரிகள், பூங்கா இயக்குனர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மதியம் 1.05 மணிக்கு பூங்காவிற்கு சென்ற முதல்– அமைச்சர் ஜெயலலிதா மாலை 4.05 மணிக்கு ஆய்வை முடித்து விட்டு பூங்காவில் இருந்து வெளியே வந்தார். முதல்–அமைச்சரின் திடீர் வருகையை முன்னிட்டு வண்டலூர் பூங்காவை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

வெள்ளை புலிக்குட்டிகள்

முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த மார்ச் மாதம் 18–ந் தேதி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நேரில் சென்று 4 வெள்ளை புலிக்குட்டிகள் உள்பட 7 புலிக்குட்டிகளுக்கு பெயர் வைத்தார். முதல்–அமைச்சர் மார்ச் மாதம் பூங்காவிற்கு வந்த பிறகு அவர் பெயர் வைத்த சித்ரா என்ற 1 வயது வெள்ளை புலிக்குட்டி திடீர் என பரிதாபமாக இறந்து விட்டது. இதனை தொடர்ந்து பூங்காவில் தேவி என்ற 14 வயது வங்கபுலி, மேலும் 2 வெள்ளை புலிக்குட்டிகள், கடந்த வாரம் ஒரு பெண் சிங்கம் உள்பட 5–க்கும் மேற்பட்ட விலங்குகள் அடுத்தடுத்து இறந்து விட்டன.

இந்த நிலையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா  திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர் தமிழ்நாடு விலங்கியல் ஆணையத்தின் தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

category:

News Group Category:

சட்டசபை அவசர கூட்டத்தில் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானத்திற்கு தி.மு.க., தே.மு.தி.க. வரவேற்பு

Posted: 12 Nov 2013 08:12 AM PST

சென்னை,

சட்டசபை அவசர கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானத்தை தி.மு.க., தே.மு.தி.க. வரவேற்றுள்ளது.

தி.மு.க. வரவேற்பு

சட்டசபை அவசர கூட்டத்தில், 'காமன்வெல்த் மாநாட்டில் பெயரளவில்கூட இந்தியாவில் இருந்து யாரும் கலந்துகொள்ளக்கூடாது' என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானத்தை தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகள் வரவேற்றுள்ளன.

இது தொடர்பாக, சட்டசபையில் சட்டமன்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–

இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலையையும், போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் கண்டிக்கின்ற வகையிலும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், அவர்களுடைய உயிர்களையும், உடமைகளையும், உரிமைகளையும் பாதுகாக்கும் வகையிலும், ஈழத் தமிழர்கள், அவர்கள் விரும்பும் அரசியல் தீர்வை, அவர்களே முடிவெடுத்துக்கொள்ளும் வண்ணம், ஐ.நா. மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கின்ற வகையிலும், அதற்காக மத்திய அரசை வற்புறுத்துகின்ற வகையிலும் கொண்டுவரப்படும் அரசினர் தீர்மானத்தை தி.மு.க. சார்பில் வரவேற்று வழிமொழிகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

தே.மு.தி.க. ஆதரவு

தே.மு.தி.க. சார்பில் அக்கட்சியின் கொறடா சந்திரகுமார் பேசியதாவது:–

மாமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை தே.மு.தி.க. ஆதரிக்கிறது. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு பிரதமர் செல்லக்கூடாது, இந்தியாவில் இருந்து ஒரு துரும்புக்கூட செல்லக்கூடாது என்பதுதான் மாமன்றத்தின், உலக தமிழர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு தண்டனை கொடுப்பதற்கு பதிலாக ரிவார்டு கொடுக்கும் அளவுக்கு மத்திய அரசு வக்காலத்து வாங்குகிறது. இலங்கை தமிழர்கள் பிரச்சினையை காரணம் காட்டி 400–க்கு மேற்பட்ட தமிழக மீனவர்களையும் கொலை செய்ததுடன், பிடித்த படகுகளையும் இலங்கை அரசு நாட்டுடமையாக்கியுள்ளது. இது இந்திய அரசின் கையாளாகாத தனத்தை காட்டுகிறது.

போராட வேண்டும்

இலங்கையில் இனப்படுகொலை நடந்தது மட்டுமல்ல, மனித உரிமை மீறல்களும் அங்கு நடந்துள்ளது. உலகில் இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலை யாருக்கும் ஏற்படக்கூடாது என பிரார்த்திக்கிறோம். காமன்வெல்த் மாநாட்டை காரணம் காட்டி பல்லாயிரம் கோடி முதலீடு இலங்கைக்கு கிடைக்க போகிறது. இதற்கான வாய்ப்பை இந்தியா ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

காமன்வெல்த் மாநாடு பட்டியலில் இருந்து இலங்கையை நீக்க நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக போராட்ட வேண்டும். அதற்காக இந்த அரசு எப்படிப்பட்ட நடவடிக்கை எடுத்தாலும் தே.மு.தி.க. ஆதரவு அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
 

category:

News Group Category:

ஸ்ரீரங்கபட்டணத்தில் பரிதாபம்: காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் சாவு

Posted: 12 Nov 2013 08:06 AM PST

மண்டியா,

ஸ்ரீரங்கபட்டணத்தில் காவிரி ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

கல்லூரி மாணவர்கள்

மைசூரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மதன் (22), பிரசன்னா (21), ஹரீஷ் (21), சுந்தரேஷ், புனீத், பிரவீன், ரங்கசாமி. இவர்கள் 7 பேரும் நேற்று காலையில் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணத்துக்கு சுற்றுலா வந்தனர்.

பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த அவர்கள், காவிரி ஆற்றில் குளிக்க முடிவு செய்தனர்.

4 பேர் சாவு

7 பேரும் காவிரி ஆற்றில் ஆனந்தமாக நீந்தி குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது மதன், பிரசன்னா, ஹரீஷ், சுந்தரேஷ் ஆகிய 4 மாணவர்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அவர்களில் மதன், பிரசன்னா ஆகியோரின் உடல்கள், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடனடியாக மீட்கப்பட்டன. மற்ற 2 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடந்தது. இந்தநிலையில் நேற்று ஹரீஷ், சுந்தரேஷ் ஆகிய 2 மாணவர்கள் உடல்களும் மீட்கப்பட்டன.

பலியான மதன், மேட்டகள்ளி பி.எம்.ஸ்ரீ.நகரையும், பிரசன்னா மைசூர் மாவட்டம் ஹுன்சூர் தாலுகா தர்மபுரத்தையும், ஹரீஷ், மைசூர் மாவட்டம் டி.நரசிப்புராவையும், சுந்தரேஷ் சிக்மகளூரையும் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சோகத்தில் மூழ்கினர்

மற்ற 3 மாணவர்களும் நீந்தி கரை சேர்ந்தனர். சுற்றுலா சென்ற இடத்தில் 4 மாணவர்கள் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் சக மாணவர்களை சோகத்தில் மூழ்கடித்தது.

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கபட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

category:

News Group Category:

சர்வாதிகாரத்துடன் செயல்பட்டு மணல் அள்ள அனுமதி அளிப்பதா? திருவாரூர் கலெக்டருக்கு ஐகோர்ட்டு கண்டனம்

Posted: 12 Nov 2013 08:00 AM PST

சென்னை,

மணல் அள்ளும் விவகாரத்தில் திருவாரூர் கலெக்டருக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

அனுமதி கிடைத்தது

ரெயில்வே மற்றும் சில நிறுவனங்களுக்கான மண் தோண்டும் பணிக்கான ஒப்பந்ததாரர் ஆர்.மகேஷ். இந்த நிலையில் ரெயில்வே தண்டவாளம் அமைக்கும் பணிக்கு தேவைப்படும் சவுடு மண் அள்ளுவதற்காக, திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகத்தில் மகேஷ் 4.12 ஹெக்டேர் நிலம் வாங்கினார்.

இந்த நிலத்தில் சவுடு மணல் எடுப்பதற்கான அனுமதி கேட்டு தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு விண்ணப்பம் அளித்தார். அதற்கு பரிந்துரை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாநில சுற்றுப்புறசூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம் கடந்த மே மாதம் 20–ந் தேதி அனுமதி அளித்தது.

எதிர்ப்பு தெரிவித்தனர்

இதைப் பரிசீலித்த மாவட்ட கலெக்டர், அந்த குவாரிக்கான எதிர்ப்பையும் தாண்டி, அனுமதி அளித்து 27.7.13 அன்று உத்தரவிட்டார். அதன் பின்னர் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் 7.8.13 அன்று அனுமதி அளித்ததன் பேரில், அந்த குவாரிக்கான குத்தகையும் கடந்த ஆகஸ்டு மாதம் 14–ந் தேதி பெறப்பட்டது.

அதைத் தொடர்ந்து அந்த பகுதியில் மண் எடுக்கும் பணி தொடங்கியது. இதற்கு உள்ளூர் பஞ்சாயத்து உறுப்பினர் மதியழகன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ரவி, ராஜேந்திரன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து உள்ளூர் போலீசில் மகேஷ் புகார் கொடுத்தார்.

பதில் மனு இல்லை

ஆனால், கோர்ட்டில் உத்தரவு பெற்று வரும்படி போலீசார் கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் மகேஷ் மனு தாக்கல் செய்தார். அதில், சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதித்து கலெக்டர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த உத்தரவிட வேண்டும். மணல் அள்ளும்போது போலீஸ் பாதுகாப்பு அளிப்பதற்கும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி கே.கே.சசீதரன் விசாரித்தார். இந்த வழக்கில் கலெக்டர் சார்பில் பதில் மனுவோ அல்லது அரசு ஆவணங்களோ தாக்கல் செய்யப்படவில்லை. ராஜேந்திரன் தாக்கல் செய்த பதில் மனுவில், இந்த குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் பஞ்சாயத்து கடந்த ஏப்ரல் மாதம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஏற்கக்கூடாது

முன்னதாக அந்த பகுதி மக்களிடம் கருத்து கேட்கப்படவில்லை. இந்த குவாரிக்கு அருகில்தான் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் உள்ளது. எனவே மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்தின் அனுமதியைத்தான் பெற வேண்டும்.

அரை கிலோ மீட்டர் தூரத்தில் கோரயாறு உள்ளது. 7 கி.மீ. தூரத்தில் முத்துப்பேட்டை சதுப்புநில காடு உள்ளது. இந்த குவாரியால் இவற்றுக்கான நீர்வளம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது. எனவே மனுதாரரின் மனுவை ஏற்கக்கூடாது என்று கூறியிருந்தார்.

கருத்து கேட்கப்படவில்லை

அனைத்து தரப்பினரையும் விசாரித்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

இதுபோன்ற பிரச்சினையில் சரியான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். பொதுமக்கள் கருத்து கேட்பு நடக்கவில்லை. சுற்றுப்புறச்சூழல் விவகாரங்களை அலுவலகத்துக்குள் உட்கார்ந்து கொண்டு கணிக்க முடியாது. நேரில் சென்று அங்குள்ள பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்வது அவசியம்.

பாதிக்கப்படுவதாக கூறப்படும் மக்களின் கருத்துக்களை கேட்க வாய்ப்பளிக்க வேண்டும். அதன் பின்னரே அனுமதிக்கான உத்தரவை அளிக்க முடியும். மேலும், மணல் அள்ளுவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட விவகாரம், உள்ளூர் பஞ்சாயத்துக்கு கூறப்படவில்லை.

சர்வாதிகாரத்தனம்

இதற்கு ஆரம்பத்திலேயே பஞ்சாயத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் கலெக்டர் அதை கவனிக்கவில்லை. எதிர்ப்பு தெரிவித்து கொடுக்கப்பட்ட கடிதத்தை, அற்ப காரணங்களுக்காக கலெக்டர் தள்ளுபடி செய்துள்ளார். தள்ளுபடி செய்வதற்கு முடிவு எடுத்தது ஏன் என்பதை கலெக்டர் குறிப்பிடவில்லை.

அந்த பகுதியில் குடிநீர் மாசுபடும், நிலத்தடி நீர் உப்புத் தன்மைக்கு மாறிவிடும் என்றெல்லாம் காரணங்கள் கூறப்பட்டன. ஆனால் சர்வாதிகாரத் தனத்துடன் செயல்பட்டு அவற்றை நிராகரித்துள்ளார். பொதுமக்களின் நலனை கலெக்டர்தான் கவனிக்க வேண்டும். இதில் அவர் முக்கியத்துவம் காட்டவில்லை. சுற்றுப்புறசூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையமும் சரிவர செயல்படவில்லை.

மனு தள்ளுபடி

எனவே நடைமுறைகளை பின்பற்றாமல் கலெக்டர் பிறப்பித்த சட்ட விரோதமான உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. மேலும், போலீஸ் பாதுகாப்பு கிடைப்பதற்கான சட்டப்பூர்வமான உரிமை உள்ளது என்பதை மனுதாரர் நிரூபித்திருக்க வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

category:

News Group Category:

துணை ஜனாதிபதிக்கு வரவேற்பு

Posted: 12 Nov 2013 07:40 AM PST

தமிழகத்துக்கு வருகை தந்த இந்திய துணை ஜனாதிபதி முகமது ஹமீது அன்சாரியை, முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை விமான நிலையத்தில் பொன்னாடை போர்த்தி மலர்க்கொத்து வழங்கி வரவேற்றபோது எடுத்த படம். அருகில், கவர்னர் கே.ரோசய்யா உள்ளார்.

2

காமன்வெல்த் மாநாட்டில் குர்ஷித் பங்கேற்பு: மத்திய அரசு தமிழர்களை வஞ்சித்து விட்டது சட்டசபையில் ஜெயலலிதா பேச்சு

Posted: 12 Nov 2013 07:33 AM PST

சென்னை,

காமன்வெல்த் மாநாட்டில் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் பங்கேற்பதன் மூலம் மத்திய அரசு தமிழர்களை மீண்டும் வஞ்சித்து விட்டதாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

சிறப்பு கூட்டம்

தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

சட்டசபை கூட்டம் தொடங்கியவுடன், முதல்–அமைச்சர் ஜெயலலிதா, இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் அரசினர் தனி தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அந்த தீர்மானத்தின் மீது அவர் கூறியதாவது:–

''நெஞ்சு கொதிக்கும் அளவிலும், உள்ளம் எரிமலையாகும் விதத்திலும், ஓராயிரம் செய்திகள் வருகின்றன இலங்கை தமிழர் படும் அவதிகள் பற்றி'' என்று 1958–ம் ஆண்டே குறிப்பிட்ட பேரறிஞர் அண்ணா, உலகில் தமிழர்கள் எங்கு பாதிப்புக்கு உள்ளானாலும் அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு என்ற கருத்தையும் நமக்கு வழிகாட்டியாக விட்டுச்சென்றுள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் கருத்திற்கேற்ப, இலங்கை தமிழர்களின் நலன் காக்க தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் அரசு எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு.

2011–ம் ஆண்டு மே மாதம் நான் மூன்றாவது முறையாக முதல்–அமைச்சராக பொறுப்பேற்றவுடன், போர்க்குற்றங்களை, இனப்படுகொலையை நடத்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்துவதோடு, இலங்கை அரசின் மீது பொருளாதார தடையை விதிக்கவும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்னும் தீர்மானம் என்னால் 8.6.2011 அன்று இந்த மாமன்றத்தில் முன்மொழியப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

நட்பு நாடு

இதனை தொடர்ந்து, இலங்கை நாட்டை 'நட்பு நாடு' என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும்; இலங்கையில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும், இலங்கை நாட்டின் மீது பொருளாதார தடையை விதித்திடவும், 'தனி ஈழம்' குறித்து பொது வாக்கெடுப்பு நடத்திடவும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு குழுவில் தீர்மானத்தினை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய பேரரசை வலியுறுத்தி இந்த மாமன்றத்தில் என்னால் 27.3.2013 அன்று முன்மொழியப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு நவம்பர் மாதம், இலங்கை நாட்டில் நடைபெறவிருக்கும், காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்றும், பெயரளவிற்கு கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்றும், இது குறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கை நாட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும், இலங்கை தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தற்காலிகமாக நீக்கிவைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் இந்திய பேரரசை வலியுறுத்தி இந்த மாமன்றத்தில் என்னால் 24.10.2013 அன்று முன்மொழியப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

காமன்வெல்த் மாநாடு

இதுதவிர, இலங்கை நாட்டில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டினை வேறு நாட்டிற்கு மாற்றுவதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்றும், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்றும் 25.3.2013 அன்று பிரதமரை கடிதம் வாயிலாக கேட்டுக்கொண்டேன். இதனை தொடர்ந்து 17.10.2013 அன்று மீண்டும் ஒரு கடிதத்தினை பிரதமருக்கு எழுதினேன்.

ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வினை இந்திய பேரரசுக்கு தெரிவிக்கும் வகையில், கடந்த 2½ ஆண்டுகளில், இலங்கை அரசின் இனப்படுகொலை குறித்து மூன்று தீர்மானங்கள் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. உணர்வுப்பூர்வமான இலங்கை தமிழர்கள் பிரச்சினையை, அறிவுப்பூர்வமாக சிந்தித்து இந்த தீர்மானங்கள் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்டன. இவை உணர்ச்சிவயப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அல்ல. ஆனால், இதுநாள்வரை தமிழர்களுக்கு சாதகமான எந்தவொரு முடிவையும் மத்திய அரசு எடுக்கவில்லை.

இனப்படுகொலை

மாறாக, தமிழின படுகொலையை நிகழ்த்திய சிங்கள இனவாத அரசு கொழும்புவில் நடத்தும் காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமருக்கு பதிலாக, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி பங்கேற்பார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 1993–ம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற 10 காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாடுகளில், ஐந்து மாநாடுகளில் இந்தியாவின் சார்பில் பிரதமர் கலந்து கொள்ளாததை வைத்துப்பார்க்கும்போது, தற்போதைய மத்திய அரசின் முடிவு வழக்கமான ஒன்றாக இருக்கிறதே தவிர, தமிழர்களுக்கு ஆறுதல் தரக்கூடியதாகவோ, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடியதாகவோ இல்லை. மத்திய அரசின் இந்த முடிவு மிகுந்த மனவேதனை அளிக்கும் செயலாகும். இவ்வாறு, கலந்துகொள்வதன் மூலம், இலங்கை அரசின் மனிதாபிமானம் அற்ற செயலை மனிதநேயம் அற்ற செயலை இந்தியா ஏற்றுக்கொள்கிறது, அங்கீகரிக்கிறது என்ற நிலை தான் உருவாகும்.

உச்சகட்டப் போர் முடிந்து, நான்கு ஆண்டுகள் கடந்துள்ள சூழ்நிலையில், இலங்கை வாழ் தமிழர்களுக்கு எந்த உரிமையும் தரப்படவில்லை. இன்னமும், இலங்கை ராணுவம் அவர்களை கண்காணித்துக்கொண்டு இருக்கிறது. தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களர்கள் வசிக்கின்றனர். இடம் பெயர்ந்த தமிழர்கள், இன்னமும் இடம் பெயர்ந்த தமிழர்களாகவே இருக்கக்கூடிய அவல நிலை அங்கு நிலவுகிறது. தொடர்ந்து பல்வேறு இன்னல்களை இலங்கை தமிழர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண அரசுக்கு தேவையான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. போர்க்குற்றங்களை நிகழ்த்தியவர்கள், இனப்படுகொலையை நிகழ்த்தியவர்கள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை. அதற்காக, எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

தலைவர் பதவி

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வது போர்க்குற்றம் நிகழ்த்தியவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு சமம் ஆகும். இது மட்டுமல்லாமல், இந்த பங்கேற்பின் மூலம், காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவர் பதவியை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கை அதிபர் வகிக்கக்கூடிய நிலைக்கு ஆதரவு அளித்த அவப்பெயரையும் இந்தியா அடைந்துவிடும்.

காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாட்டில், இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி பங்கேற்க வழி வகுத்துள்ள மத்திய அரசின் முடிவு தமிழர்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பதற்கு சமம் ஆகும். மத்திய அரசின் இந்த முடிவை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது உறுதி.

வஞ்சித்துவிட்டது

தமிழினத்தை அழிப்பதற்காக சிங்கள இனவாத அரசுக்கு ஆயுதம் அளித்து, பயிற்சி அளித்து பல துரோகங்களை இந்திய பேரரசு இதுநாள் வரை செய்திருந்தாலும், இவற்றிற்கெல்லாம் பரிகாரம் தேடும் வகையில், போர்க்குற்றம் நிகழ்த்தியவர்களை, இனப்படுகொலை செய்தவர்களை, தண்டிக்க வழிவகுக்கும் வகையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியா சார்பில் ஒருவர்கூட கலந்து கொள்ளப்போவதில்லை என்ற திடமான, உறுதியான முடிவை இந்திய பேரரசு எடுக்கும் என்று உலகத் தமிழர்களும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர், இந்த மாமன்றமும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால், மத்திய அரசு மீண்டும் தமிழர்களை வஞ்சித்துவிட்டது.

இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

image: 

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™