puthiyathalaimurai.tv online |
- திருவண்ணாமலையில் ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம்
- வ.உ.சி.,யின் 142-வது பிறந்த நாள் கொண்டாட்டம்
- விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரேஷன் அரிசி பறிமுதல்
- கச்சத்தீவை மீட்க வேண்டும்: தமிழக எம்.பி,க்கள் வலியுறுத்தல்
- சென்னையில் சீனியர் டிவிஷன் ஹாக்கிப் போட்டி: ஐ.சி.எஃப். அணி வெற்றி
- திண்டுக்கல்லில் பேருந்து கவிழ்ந்து விபத்து
- அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் சானியா மிர்சா
- தமிழக அமைச்சர் ஆந்திராவில் ஆய்வு
- டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்க்கைக் குறிப்பு…..
- குரூப் 2 தேர்வு: விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 4
| திருவண்ணாமலையில் ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம் Posted: 04 Sep 2013 11:30 PM PDT சமூக தணிக்கை என்ற பெயரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தி, அத்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு பகுதிகளிலும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகக் கூறி திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதே போல் நாகையிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| வ.உ.சி.,யின் 142-வது பிறந்த நாள் கொண்டாட்டம் Posted: 04 Sep 2013 11:26 PM PDT கப்பல் ஒட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவரின் 142-வது பிறந்த நாளை யொட்டி சென்னை துறைமுகத்தில் உள்ள வ.உ.சியின் திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அமைச்சர்கள் வளர்மதி, சின்னையா, ரமணா, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் வ.உ.சிதம்பரனாருக்கு மரியாதை செலுத்தினர். அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதே போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வ.உ.சியின் 142 பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
வ.உ.சியின் வாழ்க்கை குறிப்பு:
பாரதியாரோடு நெருங்கி நட்பு கொண்டிருந்த சிதம்பரனார் ஆங்கிலேயரின் அடக்கு முறைகளுக்கு எதிர்த்து போராடியதோடு சிறந்த பேச்சாளராகவும் தொழிற்சங்க தலைவராக விளங்கினார்.தர்ம சங்க நெசவு சாலை,சுதேசி பண்டக சாலை என பல தேசிய நிறுவனங்களை தொடங்க காரணமாக இருந்த வ.உ.சி 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ம் நாள் சுதேசி நாவாய் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தை பதிவு செய்தார்.சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சியால் ஆத்திரம் அடைந்த ஆங்கிலேயேர்கள் 1908-ஆம் ஆண்டு சிதம்பரனாரை கைது செய்தனர்.
1908-ஆம் ஆண்டு முதல் 1912ஆம் ஆண்டு வரை கோவை சிறையிலும் பின்னர் கண்ணனூர் சிறையிலும் அடைக்கப்பட்டார்.சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் செக்கினை இழுக்கவைத்து ஆங்கிலேயர்கள் துன்புறுத்திய போதிலும் இறுதிவரை சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்தார் வ.உசி. |
| விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரேஷன் அரிசி பறிமுதல் Posted: 04 Sep 2013 11:24 PM PDT விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஆந்திராவுக்கு கடத்தப்பட இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. புதுச்சேரியில் இருந்து ஆந்திரா வழியாக புவனேஸ்வர் செல்லும் ரயிலில் ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த 30 மூட்டை ரேஷன் அரிசியை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. |
| கச்சத்தீவை மீட்க வேண்டும்: தமிழக எம்.பி,க்கள் வலியுறுத்தல் Posted: 04 Sep 2013 11:17 PM PDT மக்களவையில் இன்று பேசிய தமிழக எம்.பி.,க்கள் தம்பிதுரை, டி.ஆர்.பாலு கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
அவையில் பேசிய அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை : இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருகின்றனர். தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி. எனவே இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கச்சத்தீவு ராமநாதபுரம் ஜமீனுக்கு சொந்தமானது. கச்சத்தீவு குறித்து மத்திய அரசு தாக்கல் செய்த விளக்கத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. கச்சத்தீவு இந்தியாவின் பகுதி என்று திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக பேசிய தி.மு.க., எம்.பி., டி.ஆர்.பாலு : காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலங்கையில் நடைபெறவிருக்கும் காமனவெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார். இலங்கையில் போருக்குப் பின்னர் ஏராளமான தமிழர்கள் காணால் போய் இருக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டினார். |
| சென்னையில் சீனியர் டிவிஷன் ஹாக்கிப் போட்டி: ஐ.சி.எஃப். அணி வெற்றி Posted: 04 Sep 2013 11:10 PM PDT சென்னையில் நடைபெற்று வரும் சீனியர் டிவிஷன் ஹாக்கிப் போட்டியில், ஐ.சி.எஃப். அணி வெற்றி பெற்றுள்ளது. எழும்பூர் மேயர் ராதா கிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் ஐ.சி.எஃப். அணி, வருமான வரித்துறை அணியுடன் மோதியது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஐ.சி.எஃப். அணி வீரர்கள் அடுத்தடுத்து கோல்கள் அடித்தனர். இதற்கு ஈடு கொடுக்க முடியாத வருமான வரித்துறை அணியால் இறுதி வரை கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இறுதியில் 8-0 என்ற கோல்கள் கணக்கில் ஐ.சி.எஃப். அணி அபார வெற்றி பெற்றது. முன்னதாக நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் ஏ.ஜி.எஸ். அணி 3-1 என்ற கோல் கணக்கில் துறைமுக அணியை தோற்கடித்தது. சென்னை சீனியர் டிவிஷன் லீக் ஹாக்கிப் போட்டியில் 16 அணிகள் பங்கேற்றுள்ளன.
|
| திண்டுக்கல்லில் பேருந்து கவிழ்ந்து விபத்து Posted: 04 Sep 2013 10:57 PM PDT திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். திண்டுக்கல்லில் இருந்து கரூர் சென்று கொண்டிருந்த பேருந்து தொட்டணம்பட்டி அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில கவிழ்ந்தது. காயமடைந்தவர்கள் அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். |
| அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் சானியா மிர்சா Posted: 04 Sep 2013 10:50 PM PDT அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா முதன்முதலாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற காலிறுதி மகளிர் இரட்டையர் ஆட்டம் ஒன்றில் சீன வீராங்கனை ஜி செங்குடன் சேர்ந்து விளையாடிய சானியா, சீனத் தைபேயின் சவேய் மற்றும் சீன வீராங்கனை சுவாய் பெங் ஜோடியை எதிர்கொண்டது.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-4, 7-6 என்ற நேர் செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றது சானியா ஜோடி. சானியா ஜோடி போராடி வெற்றி |
| தமிழக அமைச்சர் ஆந்திராவில் ஆய்வு Posted: 04 Sep 2013 10:43 PM PDT மாமல்லபுரத்தில் கடற்சார் அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பாக விசாகப்பட்டினத்தில் உள்ள அருங்காட்சியகத்தை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதன் நேரில் ஆய்வு செய்தார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில், விசாகப்பட்டினத்தில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகத்தை ஆய்வு செய்ய வந்ததாக அவர் தெரிவித்தார். நீர்மூழ்கிக் கப்பலுக்குள் அமைக்கப்பட்டிருந்த அருங்காட்சியகத்தை பார்வையிட்ட அமைச்சர் சண்முகநாதன் தலைமையிலான குழுவினர், அங்குள்ள அதிகாரிகளிடம் அருங்காட்சியகத்தின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தனர். மாமல்லபுரத்தில் கடற்சார் அருங்காட்சியகம் அமைக்க இந்திய கடற்படை, தனது ஐ.என்.எஸ்.வாக்லி என்ற நீர்மூழ்கிக் கப்பலை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையிலும் பொதுமக்கள் அறிந்துகொள்ளவும் மாமல்லபுரத்தில் நீர்மூழ்கிக் கப்பலில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. |
| டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்க்கைக் குறிப்பு….. Posted: 04 Sep 2013 10:38 PM PDT ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, மற்ற ஆசிரியர்களுக்கு ஒரு முன்னுதாரணமாய்த் திகழ்ந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் வாழ்க்கைக் குறிப்புகள் இதோ உங்களுக்காக…
டாக்டர் ராதாகிருஷ்ணன் 1888ஆம் ஆண்டு திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் இதே தேதியில் பிறந்தார். தத்துவத்தை முதல் பாடமாகக் கொண்டு இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை முடித்த அவர்,அதன் பின்னர் சென்னை பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராக தனது ஆசிரியர் பணியை தொடங்கினார்.
1918ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட இவர்,1921-ல் கல்கத்தா பல்கலைக்கழகத்துக்கு தத்துவப் பேராசிரியராக பரிந்துரைக்கப்பட்டார்.1923ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட டாக்டர் ராதாகிருஷ்ணனின் இந்திய தத்துவம் என்ற அற்புத படைப்பு, தத்துவ இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாக போற்றப்பட்டது.ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் இந்துமத தத்துவங்கள் பற்றி விரிவுரை வழங்க, ராதாகிருஷ்ணனை அழைத்தது. பல மேடைகளில் தமது சொற்பொழிவுகளை இந்திய சுதந்திரத்துக்கு ஆயுதமாக பயன்படுத்திக்கொண்டார் ராதாகிருஷ்ணன்.
1946ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்ட அவர், சுதந்திரத்துக்குப்பின் 1948ல் பல்கலைக்கழக கல்வி ஆணையத் தலைவரானார்.பின்னர் 1952ஆம் ஆண்டு முதல் இந்திய துணைக் குடியரசுத்தலைவராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், 1962 முதல் 1967ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராகவும் இருந்தார். 1954ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது. 87 ஆண்டுகள் வாழ்ந்த அவர் 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் நாள் காலமானார். |
| குரூப் 2 தேர்வு: விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 4 Posted: 04 Sep 2013 10:32 PM PDT தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்விற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆயிரத்து 64 பணியிடங்களுக்கான இத்தேர்வுக்கு இன்று முதல் அக்டோபர் நான்காம் தேதி வரை டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வணிகவரி இணை ஆணையர், சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 19 வகையான பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான தேர்வுக் கட்டணத்தை செலுத்த அக்டோபர் 8-ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |