puthiyathalaimurai.tv online |
- வங்கிகளில் வாரிசுப்பணம் பெறும் நடைமுறை எளிதாகிறது
- துன்புறுத்தப்படும் துப்புரவுத் தொழிலாளர்கள்…
- இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் விற்பனை அதிகரிப்பு
- வங்கிகள் வீட்டுக்கடனை படிப்படியாக வழங்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
- திருச்செந்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: ஒருவர் பலி
- ஊழல் குற்றச்சாட்டின் எதிரொலி : லலித் மோடிக்கு வாழ்நாள் தடை?
- ரஞ்சித் மகேஸ்வரிக்கு அர்ஜூனா விருது?: இன்று முடிவு
- சிறையில் இருந்து கைதி தப்பிய விவகாரம்: 11 பேர் இடைநீக்கம்
- இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு
- டெல்லி பாலியல் வன்கொடுமை வழக்கு: வரும் 10ஆம் தேதி தீர்ப்பு
| வங்கிகளில் வாரிசுப்பணம் பெறும் நடைமுறை எளிதாகிறது Posted: 03 Sep 2013 11:01 PM PDT டெபாசிட்தாரர்கள் மரணமடையும்போது வாரிசுதாரர்களுக்கு பணத்தை திரும்பத் தருவதற்கான நடைமுறைகளை எளிதாக்க வேண்டும் என வங்கிகளை ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. உறவினர் மரணமடையும் பட்சத்தில் அவர் வங்கியில் சேமித்த பணத்தை திரும்பப் பெறுவது கடினமாக இருப்பதாக பொதுமக்கள் ரிசர்வ் வங்கியில் புகார் தெரிவித்திருந்தனர். |
| துன்புறுத்தப்படும் துப்புரவுத் தொழிலாளர்கள்… Posted: 03 Sep 2013 10:59 PM PDT திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள ஆயக்குடி பேரூராட்சியில் மனிதக் கழிவுகளை அள்ளுமாறு கட்டாயப் படுத்தப்படுவதாக துப்புரவு ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகமும், அங்குள்ள அரசியல் தலைவர்களும் இப்புகாரை மறுத்துள்ளனர். ஆனால் இந்த அவலத்தை படம் பிடித்து ஆதாரத்துடன் அவர்களை அணுகியது பதிய தலைமுறை.
ஆன்மீக தலமான பழனி அருகேயுள்ளது ஆயக்குடி பேரூராட்சி. இங்கு மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள பொதுக்கழிப்பிடங்களில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால், அருகேயுள்ள இடத்தையே பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றிவிட்டனர். இந்த கழிவுகளை அள்ளுவதற்காக பேரூராட்சியில் 25 துப்புரவுத் தொழிலாளர்கள் பணியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஒரு பெண்மணி, கடந்த 26 ஆண்டுகளாக இந்த பணியினை செய்து வருவதாகக் கூறுகிறார். இந்த பணியை செய்துவிட்டு, வீட்டுக்குச் சென்றால் சரியாக சாப்பிடக் கூட முடியவில்லை என்றும், இதனால் ஏராளமான உடல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அவர் கூறுகிறார்.
இதே பணியை தானும் செய்து வருவதாக மற்றொரு பெண்ணும் தெரிவிக்கிறார். தங்களுக்கு குப்பை கூட்டுதல் போன்ற மாற்றுப்பணி வழங்குமாறு பலமுறை தெரிவித்தும் பணி வழங்காமல் அலைக்கழிக்கப்படுவதாக இருவரும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இந்த புகார்கள் தொடர்பாக ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் முன்னாள் எம்.எல்.ஏ. பழனிவேல்.
இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து பேரூராட்சித் தலைவர் சுந்தரத்திடம் கேட்டபோது, தங்களது பகுதியில் அப்படி எதுவுமே நிகழ்வதில்லை என்று மறுத்துள்ளார். இந்த பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலத்திடம் பேசியபோது, திண்டுக்கல் மாவட்டத்தில் எந்த இடத்திலும் இதுபோன்று சம்பவங்கள் நடக்கவில்லை என்று தெரிவித்தார்.
|
| இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் விற்பனை அதிகரிப்பு Posted: 03 Sep 2013 10:54 PM PDT தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இணையதளம் மூலமான ரயில் டிக்கெட் விற்பனை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் இணையதளம் மூலம் 5 லட்சத்து 72 ஆயிரம் டிக்கெட்டுகளை ரயில்வே விற்றுள்ளது. ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் குறிப்பிட்ட ரயில்வே ஒரே நாளில் இவ்வளவு டிக்கெட்டுகள் விற்றிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. |
| வங்கிகள் வீட்டுக்கடனை படிப்படியாக வழங்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல் Posted: 03 Sep 2013 10:49 PM PDT வங்கிகள் வீட்டுக்கடன் வழங்கும்போது, முழு கடன்தொகையையும் ஒரே தவணையில் வழங்காமல், கட்டுமானப் பணி முன்னேற்றத்திற்கேற்ப படிப்படியாக வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இதன்மூலம், அக்கடனை திரும்ப வசூலிப்பதில் ஏற்பட வாய்ப்புள்ள சிக்கல் குறையும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. |
| திருச்செந்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: ஒருவர் பலி Posted: 03 Sep 2013 10:33 PM PDT திருச்செந்தூர் அருகே குலைக்கநாதபுரத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். தொழிலாளர்கள் மதிய உணவிற்காகச் சென்ற வேளையில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். |
| ஊழல் குற்றச்சாட்டின் எதிரொலி : லலித் மோடிக்கு வாழ்நாள் தடை? Posted: 03 Sep 2013 10:04 PM PDT நிதிமுறைகேடு புகாரில் சிக்கிய ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு வாழ்நாள் தடை விதிக்க பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பி.சி.சி.ஐ யின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வரும் 25 -ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இந்தக்கூட்டத்தில் லலித் மோடிக்கு வாழ்நாள் தடை விதிப்பது குறித்த தீர்மானம் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தால், லலித் மோடிக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும் என பி.சி.சி.ஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான விசாரணை அறிக்கையை, நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் பி.சி.சி.ஐ நன்னடத்தை குழு சமர்ப்பித்தது.
அதில், லலித் மோடிக்கு வாழ்நாள் தடை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.ல் கிரிக்கெட்டின் முதல் மூன்று சீசனில், நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக லலித் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மோடி தற்போது லண்டனில் வசித்து வருகிறார். |
| ரஞ்சித் மகேஸ்வரிக்கு அர்ஜூனா விருது?: இன்று முடிவு Posted: 03 Sep 2013 10:02 PM PDT தமிழகத்தை சேர்ந்த தடகள வீரர் ரஞ்சித் மகேஸ்வரிக்கு அர்ஜூனா விருது வழங்குவது குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இன்று முடிவெடுக்கிறது. இதுகுறித்து இந்திய தடகளசங்கம், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் சமர்பித்த அறிக்கையில், ஊக்க மருந்து புகார் தொடர்பாக ரஞ்சித் மகேஸ்வரி-க்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை என குறிப்பிட்டிருந்தது. தடை விதிக்கப்படாத பட்சத்தில் விருது வழங்குவதில் சிக்கல் இருக்காது என மத்திய விளையாட்டுத்துறை செயலாளர் ஆர்.கே.தேப் பதிலளித்திருந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஊக்க மருந்து புகாரில் சிக்கியதாக கூறி ரஞ்சித்திற்கு வழங்கப்படவிருந்த அர்ஜூனா விருதை நிறுத்தி வைப்பதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்தது. இதுகுறித்த விசாரணை முடிவுக்கு பின்னரே அவருக்கு விருது வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. |
| சிறையில் இருந்து கைதி தப்பிய விவகாரம்: 11 பேர் இடைநீக்கம் Posted: 03 Sep 2013 09:52 PM PDT பெங்களுரு மத்தியச் சிறையில் இருந்து ஜெய்சங்கரை என்ற கைதி தப்பியது தொடர்பாக, 11 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தரமையா தெரிவித்துள்ளார்.
ஜெய்சங்கர் தப்பிய விவகாரத்தில், காவல்துறையினருக்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக கூறிய அவர், இதுதொடர்பாக, விசாரணை நடத்த உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சிறையில் பாதுகாப்பற்ற சூழல் இருப்பது உண்மைதான் என்றும் அவர் கூறினார். இதனிடையே, தப்பியோடி ஜெய்சங்கரை கைது செய்யும் வகையில், நாட்டில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகியவை உஷார் படுத்தப்பட்டுள்ளதாக கர்நாடக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் இடைப்பாடி பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர் மீது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், 14 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. கர்நாடகத்திலும் ஜெய்சங்கர் மீது நான்கு பாலியல் வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கர்நாடகாவில், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குகளில் குற்றம் நிருபிக்கப்பட்டு ஜெய்சங்கர் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை அனுபவித்து வந்தார். |
| இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு Posted: 03 Sep 2013 09:46 PM PDT அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு நேற்று ஒரே நாளில் ஒரு ரூபாய் 63 காசுகள் சரிந்து 67 ரூபாய் 63 காசாக இருந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டெண் நிஃப்டி ஆகியவரை சரிந்து காணப்பட்டன. ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 22 ஆயிரத்து 920 ரூபாயாகவும் வெள்ளி விலை கிராம் 63 ரூபாய் 30 காசுகளாகவும் இருந்தது. |
| டெல்லி பாலியல் வன்கொடுமை வழக்கு: வரும் 10ஆம் தேதி தீர்ப்பு Posted: 03 Sep 2013 09:41 PM PDT டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில், வரும் 10ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. 4 பேர் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், டெல்லி சிறப்பு நீதிமன்றம் 10ஆம் தேதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்திருக்கிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 வயது நபருக்கு 3 ஆண்டு தண்டனை அளித்து சிறார் நீதிமன்றம் சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கியது. கடந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி டெல்லியில், ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இதையடுத்து பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட அந்த மாணவி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர், சிறையில் தற்கொலை செய்துகொண்ட நிலையில், மீதமுள்ளவர்கள் மீது விசாரணை நடந்தது. |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |