puthiyathalaimurai.tv online |
- டெல்லி மாணவி வழக்கு: அரசு தரப்பு வாதம் தொடங்கியது
- சிரியாவுக்கு ஒபாமா புதிய எச்சரிக்கை
- கவுதமாலா நாட்டில் பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்து: 43 பேர் பலி
- இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
- சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் புதிய தலைவர்: ஜெர்மனியின் தாமஸ் பேச் தேர்வு
- உலக கோப்பை கால்பந்துப் போட்டிக்கு இத்தாலி அணி தகுதி
- சென்னையில் இடியுடன்கூடிய கனமழை: தாழ்வான பகுதிகளில் வெள்ளம்
- நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் விவகாரம்: உச்சநீதிமன்றம் கருத்து
- நரேந்திர மோடிக்கு பெருகும் ஆதரவு: நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு?
- முசாபர்பூரில் உயர் நீதிமன்ற கிளை தேவை: மாயாவதி வலியுறுத்தல்
| டெல்லி மாணவி வழக்கு: அரசு தரப்பு வாதம் தொடங்கியது Posted: 10 Sep 2013 11:11 PM PDT டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், அரசு தரப்பு வாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் பேருந்தில் சென்றபோது மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. 5 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. தண்டனை விபரங்கள் இன்று வெளியாகிறது.
டெல்லி மாணவி வழக்கில் அரசு தரப்பு வாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
|
| சிரியாவுக்கு ஒபாமா புதிய எச்சரிக்கை Posted: 10 Sep 2013 10:52 PM PDT ரஷ்யாவின் யோசனையை ஏற்று, ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க சிரியா சம்மதம் தெரிவித்து இருப்பதை அமெரிக்க அதிபர் ஒபாமா ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும், சிரியா மீதான தாக்குதலை கைவிடத் தயார் என்றும் அவர் அறிவித்துள்ளார். அதேநேரத்தில், ரசாயன ஆயுதங்களை ஒப்படைப்பதால் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டு விடாது என்று கூறியுள்ள ஒபாமா, இதை தாக்குதலை தாமதிக்க செய்யும் யுக்தியாக சிரியா கடைபிடித்தால், ராணுவ தாக்குதல் நடவடிக்கை எடுப்பதில் மாற்றம் இருக்காது என்றும் எச்சரிக்கை விடுத்தார். அமெரிக்காவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த ஒபாமா, ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளில் இவ்வளவு தீவிரம் காட்டப்படாவிட்டால், சர்வதேச கட்டுப்பாட்டுக்குள் சிரியாவின் ரசாயன ஆயுதங்களை கொண்டு வரும் பேச்சே எழுந்திருக்காது என்றார். ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவ், சிரிய வெளியுறவுத்துறை அமைச்சர் வாலிட் அல் மோலம்-உடன் நடத்திய பேச்சுவார்த்தை போது, ரசாயன ஆயுதத்தை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைக்கும் யோசனையை தெரிவித்ததார். |
| கவுதமாலா நாட்டில் பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்து: 43 பேர் பலி Posted: 10 Sep 2013 10:46 PM PDT கவுதமாலா நாட்டில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர். சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர். அந்நாட்டின் சான் மார்ட்டின் ஜிலோடெபெக் என்னும் இடத்தில் பேருந்து பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்து நேரிட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. வெறும் 54 பேர் பயணிக்க வேண்டிய பேருந்தில், சுமார் 90 பேர் பயணித்ததாகவும், விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகளும் அடங்குவர் எனவும் மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர். |
| இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் Posted: 10 Sep 2013 10:40 PM PDT ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை யொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக பரமகுடியில் காவல் துறைஅதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஏடிஜிபி ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 12 காவல் துறை கண்காணிப்பாளர்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடடிவக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் போலீசார் பரமகுடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.12 இடங்களில் சிசி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பரமக்குடிக்குள் வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு கண்காணிப்புப் பணியில் தஸ்யா எனப்படும் சுழலும் கேமராக்கள் மற்றும் ஆளிலில்லா விமானம் மூலமும் காண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. |
| சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் புதிய தலைவர்: ஜெர்மனியின் தாமஸ் பேச் தேர்வு Posted: 10 Sep 2013 09:35 PM PDT சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் புதிய தலைவராக ஜெர்மனியை சேர்ந்த தாமஸ் பேச் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் வரலாற்றில், ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற வீரர் ஒருவர் அதன் தலைவராகியுள்ளது இதுவே முதல் முறை ஆகும். கடந்த 1976- ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கத்திச் சண்டை போட்டியில் ஜெர்மனி அணிக்காக தங்கம் வென்று கொடுத்த தாமஸ் பேச்தான் கடந்த 12 ஆண்டுகளாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் தலைவராக இருந்த ஜாகுஸ் ராக்கை தோல்வியடைய செய்துள்ளார். அர்ஜென்டினாத் தலைநகர் ப்யூனஸ்ஏர்ஸ் நகரில் 125-வது ஒலிம்பிக் பொதுக்குழு கூட்டம் கடந்த இரு நாட்களாக நடைபெற்று வந்தது. நேற்று புதியத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 59 வயது தாமஸ் பேச் உலகின் அதிகாரமிக்க விளையாட்டு மையத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
| உலக கோப்பை கால்பந்துப் போட்டிக்கு இத்தாலி அணி தகுதி Posted: 10 Sep 2013 09:24 PM PDT பிரேசிலில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாட இத்தாலி அணி தகுதி பெற்றுள்ளது. செக் குடியரசு நாட்டின் (TURIN) நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், அந்நாட்டு அணியுடன் இத்தாலி விளையாடியது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களமிறங்கிய செக் குடியரசு வீரர்கள் முதல் பாதியில் கோல் அடித்து அசத்தினர். இதற்கு பதிலடியாக இரண்டாவது பாதியில் இத்தாலி அணி கோல் அடித்தது. மேலும் 54வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பையும் அந்த அணி கோலாக மாற்றி, 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பாக இத்தாலி, பெல்ஜியம், ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட 8 அணிகள் உலக கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளன. |
| சென்னையில் இடியுடன்கூடிய கனமழை: தாழ்வான பகுதிகளில் வெள்ளம் Posted: 10 Sep 2013 09:03 PM PDT சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி 12ஆம் வகுப்புக்கான காலாண்டுத் தேர்வுகள் மட்டும் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் கடந்த இரண்டு தினங்களுக்கும் மேலாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருகிறது. இதன் காரணமாக நேற்று நள்ளிரவு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. சென்னையில் அடையாறு, சைதாப்பேட்டை, கோயம்பேடு, கிண்டி, மெரினா, ராஜா அண்ணாமலைபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், ஆவடி, எண்ணூர், உள்ளிட்ட பகுதிகளிலும், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இடங்களிலும் நல்ல மழை பெய்தது. இதனால் சாலையின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி எடுத்த நிலையில் திடீர் என்று கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருவதால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்த அளவில் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
| நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் விவகாரம்: உச்சநீதிமன்றம் கருத்து Posted: 10 Sep 2013 08:58 PM PDT நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் அரசு உயரதிகாரிகளை விசாரிக்க மத்திய அரசின் அனுமதியை பெறவேண்டும் என்ற நிலை இருந்தால் வழக்கு விசாரணை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சி.பி.ஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமரேந்தர், இணைச்செயலாளர்கள் மட்டத்திலான அதிகாரிகளை விசாரிக்க முழு சுதந்திரம் தேவை என வாதிட்டார். எனவே மத்திய அரசின் அனுமதி தேவையில்லை எனவும் தெரிவித்தார். இதற்கு மத்திய அரசின் வழக்கறிஞர் வழக்கின் இறுதித் தீர்பை நீதிமன்றம் வழங்கும், ஆனால் தொடக்கத்தில் மத்திய அரசின் அனுமதி நிச்சயம் தேவை என வாதிட்டார். உயர் அதிகாரிகளை விசாரிக்க மத்திய அரசிடம் அனுமதி கோரும் நிலையில் விசாரணை நேர்மையாக நடைபெறும் சாத்திக்கூறுகள் குறைய வாய்ப்புள்ளதாக நீதிபதிகள் தங்கள் கருத்தை தெரிவித்தனர். நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், விசாரணை நடத்த நியகிக்கப்பட்டுள்ள 3 அதிகாரிகளின் பட்டியலை உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ வழங்கியது. இந்த வழக்கின் விசாரணை இன்றும் தொடர்கிறது. |
| நரேந்திர மோடிக்கு பெருகும் ஆதரவு: நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு? Posted: 10 Sep 2013 08:36 PM PDT பாரதிய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியிருக்கும் நிலையில் அவருக்கு கட்சித் தலைவர்களிடம் ஆதரவு பெருகிவருகிறது. இதுகுறித்து வரும் 13 ஆம் தேதி நடைபெற உள்ள பாரதிய ஜனதாவின் நாடாளுமன்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் விருப்பத்தை கூறியிருக்கிறோம் பிரதமர் பதவிக்கு தாம் ஆசைப்படவில்லை என அண்மையில் கூறினார் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி. ஆனால் அவரை பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்துவதில் பாரதிய ஜனதா தீவிரமாக இருப்பதை அந்த கட்சியின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறது. இதனை ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் மறைமுகமாக தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி கருத்து நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக காங்கிரஸ் கட்சியும் கருத்து தெரிவித்துள்ளது. நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு? பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் அத்வானியை அந்த கட்சியின் முன்னாள் தலைவரான நிதின்கட்கரி நேற்று சந்தித்து பேசினார். அப்போது, மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது. விரைவில் நடைபெற உள்ள கட்சியின் நடாளுமன்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் குறித்து ஆதிகாரப்பூர்வ முடிவு எடுக்கும் நோக்கில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனிடையே ஜெய்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி வழக்கம் போல் பிரதமரையும் மத்திய அரசையும் கடுமையாக சாடினார். மோடிக்கு பெருகும் ஆதரவு இந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் பலரும் நரேந்திர மோடிக்கு முழு ஆதரவு தெரிவித்ததோடு காங்கிரஸ் கட்சியிடம் இருந்து நாட்டை மீட்க மோடியை விரைவில் பிரதமர் வேர்பாளராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். |
| முசாபர்பூரில் உயர் நீதிமன்ற கிளை தேவை: மாயாவதி வலியுறுத்தல் Posted: 10 Sep 2013 08:23 PM PDT உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த கலவரத்தில் 41 பேர் பலியான நிலையில், முசாபர்பூரில் உயர்நீதிமன்ற கிளை நிறுவப்படவேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி வலியுறுத்தி உள்ளார். பூகோள ரீதியாக உத்தரபிரதேச மாநிலத்தின் நிலபரப்பு அதிகம் என குறிப்பிட்டுள்ள அவர், மாநிலத்தின் மேற்கு பகுதியில் உயர்நீதிமன்ற கிளை அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |