Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


நாகை,காரைக்கால் மீனவர்கள் கடலில் இறங்கி கருப்புக்கொடி போராட்டம்

Posted: 09 Aug 2013 10:38 PM PDT


நாகை மற்றும் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் கடலில் இறங்கி கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாகையில் 70 மீனவ கிராமத்தினர் கடலில் இறங்கி கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்திவருகின்றனர். போரட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், தமிழக மீனவர்களை இலங்கை சிறையில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசை வலியுறுத்தியுள்ளனர். மேலும், கடலில் இறங்கியும் கருப்புக்கொடி காட்டியும் தங்களது போராட்டத்தை தீவிரபடுத்தியுள்ளனர். புதுக்கோட்டை மீனவர்கள் வேலைநிறுத்தம் புதுக்கோட்டை மீனவர்கள் இன்று தங்கள் ஒருவாரகால வேலைநிறுத்தப்போராட்டத்தை தொடங்கி உள்ளனர். மீனவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மானிய டீசலை 1500 லிட்டரில் இருந்து 3 ஆயிரம் லிட்டராக உயர்த்தி வழங்கக்கோரி இந்த போராட்டம் நடைபெறுகிறது. புதுக்கோட்டை மற்றும் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். காணொளி:நாகை,காரைக்கால் மீனவர்கள் கடலில் இறங்கி கருப்புக்கொடி போராட்டம்

ஜம்மு காஷ்மீரில் வகுப்பு கலவரத்தால் ஏற்பட்ட வன்முறை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted: 09 Aug 2013 10:08 PM PDT


ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் வகுப்பு கலவரத்தால் ஏற்பட்ட வன்முறையை தடுக்க தவறியது, சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாதது போன்றவற்றைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி முழு அடைப்பு போராட்டத்தை நடத்துகிறது. இதனால், கிஷ்த்வார் மாவட்டத்தில் அனைத்து வர்த்தக நிறுவனங்களும், கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவில்லை. பாதுகாப்பு பணியில் ஆயுதம் தாங்கிய போலீசார் மற்றும் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குலீத் பகுதியில் நேற்று இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையில் முடிந்தது. இதில், ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, கிஷ்த்வார் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டு, ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த கலவரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ஜம்மு – காஷ்மீர் மாநில முதலமைச்சர் ஒமர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார். காணொளி: ஜம்மு-காஷ்மீரில் முழு அடைப்பு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இந்திய எல்லைகளை குறிவைத்து பாகிஸ்தான் படைகள் மீண்டும் தாக்குல்

Posted: 09 Aug 2013 10:01 PM PDT


இந்திய எல்லையான பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் படைகள் மீண்டும் அத்துமீறி தாக்குல் நடத்தியுள்ளன. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (Khari Karmara) என்ற இடத்தில் இன்று அதிகாலை இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்திய எல்லைகளை குறிவைத்து தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தினர், தொடர்ந்து துப்பாக்கிச் சூடும் நடத்தியதாக ராணுவ வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. பதிலுக்கு இந்திய ராணுவமும் தாக்குதல் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது. ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த சண்டையில், எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த வாரத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குல் நடத்தியிருப்பது இது நான்காவது முறை. அண்மையில், இந்திய ராணுவனத்தினர் ஐந்து பேரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டுக்கொன்ற அதிர்ச்சி மீள்வதற்குள், இத்தகையை அத்துமீறலை நடத்தியுள்ளது. காணொளி:இந்திய எல்லைகளை குறிவைத்து பாகிஸ்தான் படைகள் மீண்டும் தாக்குல்  

சுங்கச்சாவடியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம்: அன்புமணி ராமதாஸ் முன்ஜாமீன் மனு

Posted: 09 Aug 2013 09:54 PM PDT


உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார். அன்புமணி சார்பாக வழக்கறிஞர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி ஆர்.கே. அகர்வாலை சந்தித்து, முன் ஜாமீன் கோரும் மனுவை அவரச மனுவாக கருதி விசாரிக்ககுமாறு கேட்டுக்கொண்டார். இதனை கேட்ட நீதிபதி, ஜாமீன் மனுக்களை விசாரிக்கும் நீதிபதி ராஜேந்திரன் இதனை விசாரிப்பார் என உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அன்புமணி ராமதாஸின் முன் ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மேல் விசாரணைக்கு வருகிறது.கடந்த வியாழக்கிழமை உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் நுழைவுச் சீட்டு பெறும் போது ஏற்பட்ட தகராறில் அன்புமணியோடு வந்திருந்த சிலர் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையின‌ர், நேற்று அன்புமணியின் வீட்டிற்கு விசாரணைக்கு சென்றனர். இந்நிலையில் முன் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. காணொளி:சுங்கச்சாவடியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம்: அன்புமணி ராமதாஸ் முன்ஜாமீன்

கோபிச்செட்டிப்பாளையம்- அந்தியூர் சாலை நடுவே பெரிய பள்ளம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Posted: 09 Aug 2013 09:09 PM PDT


ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம்- அந்தியூர் சாலையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பள்ளத்தால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் இருந்து அந்தியூர் செல்லும் சாலையில் கரங்காடு என்ற இடத்தில், சாலையின் நடுவே மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. கோவையில் இருந்து பெங்களூர் செல்லும் முக்கிய நெடுஞ்சாலையான இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்த பள்ளத்தை மூட நெடுஞ்சாலைத்துறை சார்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த பள்ளம் இருக்கும் இடத்தில் சாலையில் ஒருபுறம் வாய்க்காலும் மறுபுறம் ஆழமான பள்ளமும் உள்ளது. இதனால் உயிர்பலி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

திருத்தணியில் லாரி மோதி மாணவன் பலி

Posted: 09 Aug 2013 09:05 PM PDT


திருத்தணியில் லாரி மோதி 7 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் பலியானான். அங்குள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்த பிரேம்குமார் என்ற அந்த மாணவன், சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றபோது, சிமெண்ட் ஏற்றிவந்த லாரி ஒன்று மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவன் பலியானான். தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் லாரி ஓட்டுநர் பாஸ்கர் என்பவர் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் ஆர்.ரஹ்மானின் புதிய இசைக்கல்லூரி: ஏழை மாணவர்களுக்கு முன்னுரிமை

Posted: 09 Aug 2013 08:39 PM PDT


சென்னை அரும்பாக்கத்தில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய இசைக்கல்லூரியை தொழில் அதிபர் முகேஷ்அம்பானி தொடங்கிவைத்தார். தொடக்க விழாவையொட்டி மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு கலைஞர்கள் நடத்திய இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.இந்திய மற்றும் மேற்கத்திய இசையில் பகுதி நேர பட்டய மற்றும் பட்டப்படிப்புகள் இந்த கல்லூரியில் பயிற்றுவிக்கப்படும். பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் இசையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு கல்லூரியில் முன்னுரிமை வழங்கப்படும் என ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்தார். 2008-ஆம் கொடம்பாக்கத்தில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த இசை கல்லூரி தற்போது விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இங்கிலந்து அணி திணரல்

Posted: 09 Aug 2013 08:34 PM PDT


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலந்தின் செஸ்டர் லீ ஸ்ட்ரீட் பகுதியில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலந்து அணி, பேட் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக குக் மற்றும் ரூட் களமிறங்கினர். இதில் 16 ரன்கள் எடுத்த நிலையில் ரூட் ஆட்டமிழந்தார். எனினும் முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜொனாதன் ட்ராட் – குக் ஜோடி, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளித்து ரன்கள் சேர்த்தது. ஒரு விக்கெட் இழப்புக்கு நூறு ரன்களை கடந்த இங்கிலந்து அணி, அதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால், சரிவைச் சந்தித்தது. கெவின் பீட்டர்சன் 26 ரன்களும், மேட் ப்ரியார் 17 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலந்து அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்துள்ளது. பிரெஸ்னன் 12 ரன்களுடனும், ஆண்டர்சன் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியன் 4 விக்கெட் கைப்பற்றினார்.

ஆஸ்திரேலியா செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

Posted: 09 Aug 2013 08:30 PM PDT


நாகையில் இருந்து சட்ட விரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்ட 49 இலங்கை அகதிகளில், 32 பேர், மயிலாடுதுறை நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர்படுத்தப்படுகின்றனர். மீதமுள்ள 17 அகதிகளையும், அவர்களுடைய முகாம்களுக்கு திருப்பி அனுப்ப காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருநெல்வேலி, வேலூர், திண்டுக்கல், திருவண்ணாமலை அகதிகள் முகாம்களில் இருந்து தப்பிச் சென்ற அகதிகள், நாகை மாவட்டத்தில் தங்கியிருப்பதாக கியூ பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், நேற்று புத்தூர் பகுதியில் கியூ பிரிவு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தில், 29 ஆண்கள், 15 பெண்கள், 5 சிறுவர்கள் என 49 அகதிகள் இருந்தனர். அவர்கள் சட்டவிரோதமாக, வேளாங்கண்ணியில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் யார் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றனர் என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. காணொளி:ஆஸ்திரேலியா செல்ல முயற்சி:இலங்கை அகதிகளிடம் விசாரணை    

கடலூரில் 2ம் நிலை குவாரிகளுக்கு கிராக்கி: நீண்ட வரிசையில் 2,500 லாரிகள்

Posted: 09 Aug 2013 08:13 PM PDT


ஆறுகளில் மணல் அள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் புதிய கட்டுப்பாடுகளை விதித்ததை தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் இரண்டாம் நிலை குவாரியில் சுமார் 2500 லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. விருத்தாச்சலத்தை அடுத்த விளாங்காட்டூர் கிராமத்தில் செயல்படும் அந்த குவாரியில், மணல் சேமித்து வைத்து விற்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் மணல் தட்டுப்பாடு நிலவுவதால் சென்னை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் லாரிகள் இங்கு குவிந்துள்ளன. விருத்தாச்சலம் – சேலம் சாலையில் சுமார் 7 கிலோமீட்டர் நீளத்திற்கு இரண்டாயிரத்து 500க்கும் மேற்பட்ட லாரிகள் வரிசையில் நிற்கின்றன. இதனால், அப்பகுதியில் கடும் போககுவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காணொளி:கடலூரில் 2ம் நிலை குவாரிகளுக்கு கிராக்கி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™