puthiyathalaimurai.tv online |
- பேருந்துகளின் பேட்டரிகளை ரீசார்ஜ் செய்யும் சாலை
- ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் நிரம்பி வழியும் கழிவுநீர் தொட்டி
- திருவண்ணாமலையில் கிராமத்தினர் ஆர்ப்பாட்டம்
- திருப்பூரில் இந்துசமய அறநிலையத்துறை நிலம் மீட்பு
- விழுப்புரத்தில் கனமழை : மக்கள் அவதி
- இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியா செல்ல முயற்சி
- சென்னையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்திய கிறிஸ்தவ பள்ளியில் ரம்ஜான்
- விருதுநகரில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி காட்டுத் தீ அணைக்கப்பட்டது
- தாழ்த்தப்பட்டோர் பட்டியல் விவகாரம்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
- ரமலானை இஸ்லாமியர்களைப் போன்றே வரவேற்கும் பிற மதத்தினர்: மனித நேயத்தின் பாலம்
| பேருந்துகளின் பேட்டரிகளை ரீசார்ஜ் செய்யும் சாலை Posted: 08 Aug 2013 11:18 PM PDT பேருந்துகளின் பேட்டரிகளை ரீசார்ஜ் செய்யும் சாலை ஒன்றை தென்கொரியா அமைத்துள்ளது. அந்த நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தினால் இந்த சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சாலைக்கு அடியில் பதிக்கப்படும் மின்தகடுகளிலிருந்து பேருந்தில் உள்ள சாதனம் மின்னூட்டத்தை பெற்று பேட்டரிகளை சார்ஜ் செய்யவோ அல்லது பேருந்தை இயக்கவோ உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் நிரம்பி வழியும் கழிவுநீர் தொட்டி Posted: 08 Aug 2013 11:12 PM PDT அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில், கழிவு நீர் தொட்டி நிரம்பி வழிவதாகவும். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். மேலும் நிரம்பி வழியும் கழிவு நீர் தொட்டியால் துர்நாற்றம் வீசுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்வதால் மருத்துவமனை நிர்வாகம் இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| திருவண்ணாமலையில் கிராமத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 08 Aug 2013 11:08 PM PDT திருவண்ணாமலை அருகே குப்பைக்கிடங்கு அமைப்பதற்கான நிலத்தை பார்வையிடச் சென்ற நகராட்சி ஆணையர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நாயுடுமங்கலத்தை அடுத்த அகரம்சிப்பந்தி, பொற்குணம், தனகோட்டிபுரம் கிராமங்களை ஒட்டிய பகுதியில் 17 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. இதில் குப்பைக்கிடங்கு அமைத்தால் துர்நாற்றம் வீசி, குடிநீரும் மாசுபடும் என்று கிராமத்தினர் அதிருப்தி தெரிவித்தனர். |
| திருப்பூரில் இந்துசமய அறநிலையத்துறை நிலம் மீட்பு Posted: 08 Aug 2013 11:05 PM PDT திருப்பூர் விஜயாபுரத்தில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சுமார் 3.5 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டுள்ளனர். விசாலாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 40 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இடத்தை மயில்சாமி என்பவர் ஆக்ரமித்திருந்தார். இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் நடராஜ் உத்தரவின்பேரில் கோயில் செயல் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். |
| விழுப்புரத்தில் கனமழை : மக்கள் அவதி Posted: 08 Aug 2013 11:02 PM PDT விழுப்புரத்தில் நேற்று இரவு கனமழை பெய்தது. கனமழையால் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தண்ணீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், செஞ்சி, உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். |
| இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியா செல்ல முயற்சி Posted: 08 Aug 2013 11:00 PM PDT நாகையில் இருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 49 இலங்கை அகதிகள் பிடிபட்டுள்ளனர். ரகசிய தகவலின் பேரில், நாகை புத்தூர் பகுதியில் கியூ பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இலங்கை அகதிகளை ஏற்றி வந்த வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். 29 ஆண்கள், 15 பெண்கள், 5 சிறுவர்கள் என 49 பேரும் சட்டவிரோதமாக, வேளாங்கண்ணியில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள், புத்தூரில் உள்ள புனித ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் யார் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றனர் என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. |
| சென்னையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்திய கிறிஸ்தவ பள்ளியில் ரம்ஜான் Posted: 08 Aug 2013 10:49 PM PDT மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் சென்னை பாரிமுனையில் உள்ள டான்பாஸ்கோ கிறிஸ்தவ பள்ளியில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்த பள்ளியில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்க வந்த இஸ்லாமிய மக்களுக்கு மயிலைப் பேராயர் சின்னப்பா வரவேற்பு அளித்தார்.ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பாரிமுனை பகுதியை சேர்ந்த இஸ்லாமிய மக்கள், அங்குள்ள டான்பாஸ்கோ கிறிஸ்தவ பள்ளியில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட ஏற்பாடு செய்யப்படும். அதே போல், இந்த ஆண்டும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்த பள்ளியில் இஸ்லாமிய மக்கள் சிறப்புத் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் பங்கேற்ற இந்த சிறப்புத் தொழுகை முடிவடைந்ததும், பிற மதத்தை சேர்ந்த மக்கள் இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தது மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் அமைந்தது. |
| விருதுநகரில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி காட்டுத் தீ அணைக்கப்பட்டது Posted: 08 Aug 2013 10:44 PM PDT விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 3 நாட்களாக எரிந்து கொண்டிருந்த காட்டுத் தீ இன்று காலை அணைக்கப்பட்டது. இராஜபாளையம் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், அம்மன் கோயில் வனப்பகுதியில் திடீரென காட்டுத் தீ பற்றியது. இராஜபாளையம் வனச்சரக அலுவலர் பாலசுப்ரமணியம் தலைமையில் 40 பேர் கொண்ட குழுவினர் தீயை அணைக்க போராடி வந்தனர். அவர்களுக்கு உதவுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு வனச் சரகங்களைச் சேர்ந்த தீ தடுப்பு காவலர்கள் 20 பேர் கூடுதலாக அனுப்பப்பட்டனர். இருந்தும் அம்மன் கோயில் வனப்பகுதியிலிருந்து தெற்கே கோட்டைமலை வனப்பகுதி வரை காட்டுத்தீ வேகமாகப் பரவியது.கடந்த இரண்டு நாட்களாக போராடி வனத்துறையினர் காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த காட்டுத்தீயில் 10 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் உள்ள மரங்கள் தீயில் எரிந்து சாம்பலானதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். காட்டுத் தீ காரணமாக வனப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. |
| தாழ்த்தப்பட்டோர் பட்டியல் விவகாரம்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் Posted: 08 Aug 2013 10:41 PM PDT தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் தலித் கிறிஸ்தவர்களையும் சேர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதற்கான சட்டதிருத்தத்தை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான மத மற்றும் மொழிரீதியான சிறுபான்மையினர் ஆணையமும் இதே கருத்தை தெரிவித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தலித் கிறிஸ்தவர்களுக்கு தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்படும் சலுகைகளை மறுப்பதன் மூலம் அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வரப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். |
| ரமலானை இஸ்லாமியர்களைப் போன்றே வரவேற்கும் பிற மதத்தினர்: மனித நேயத்தின் பாலம் Posted: 08 Aug 2013 09:51 PM PDT ரமலானை இஸ்லாமியர்களைப் போன்றே பிற மதத்தினரும் இன்முகத்துடன் வரவேற்கின்றனர். உற்சாகத்தில் பங்கேற்பு இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி வரும் நிலையில், பிற மதத்தினரும் அந்த மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்கின்றனர். ரமலானை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கும் தங்களுக்கும் உள்ள உறவுகளை இந்த நேரத்தில் பெருமிதத்துடன் நினைவு கூறுகிறது இந்து மதம் சார்ந்த ஒரு குடும்பம். ரமலான் வந்து விட்டாலே தங்களுக்கும் குதூகலம் என்கின்றனர் பிற மதத்தினர். வாழ்த்துவதில் கிடைக்கும் மகிழ்ச்சி பண்டிகை நாளன்று வீட்டுக்கு வரும் இஸ்லாமியர்களை வாழ்த்துவதில் தங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி கிடைப்பதாகவும் தெரிவிக்கின்றனர் பிற மதத்தினர். ஒழுக்கம் தரும் மாதம் ரமலான் நோன்பு ஒழுக்கத்தை கற்றுத் தருவதாகவும், ரமலான் பண்டிகை மத நல்லிணக்கத்தையும் மனித நேயத்தையும் காப்பதற்கு பாலமாக விளங்குவதாகவும் பிற மதத்தினர் குறிப்பிடுகின்றனர். |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |