puthiyathalaimurai.tv online |
- இன்று ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டி
- கைதான சாமியார் அசாராம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்
- சென்னையில் இரவு நேரத்தில் என்ன நடக்கிறது?
- வேதாரண்யம் அருகே வங்கியில் கொள்ளை முயற்சி
- டீசல் விலையை திரும்பப்பெறாவிட்டால்… லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை
- தவறான சிகிச்சையால் சுயநினைவை இழந்த பெண் ?
- சவால்களை சந்திக்கத்தயார்: சிரியா
- சிரியா மீது ராணுவ நடவடிக்கை : ஒபாமா அறிவிப்பு
- விளையாட்டு வீரர்களுக்கு விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்
- சென்னை அருகே மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழப்பு
| இன்று ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டி Posted: 31 Aug 2013 11:08 PM PDT ஆசியக் கோப்பை ஹாக்கியில் சாம்பியன் பட்டம் வெல்வதற்கான இறுதிப் போட்டியில், இந்தியா- தென்கொரியா அணிகள் இன்று பலப்பரிட்சை நடத்துகின்றன. 9-வது ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள இபோ நகரில் நடைபெற்று வருகிறது. அரையிறுதி போட்டி ஒன்றில், இந்திய அணி, மலேசியாவை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, இந்த ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக தகுதிப்பெற்றுள்ளது. இதன் மூலம் அடுத்தாண்டு நெதர்லாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில், பாகிஸ்தானை 2-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியா அணி வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியா- தென்கொரியா இடையிலான இறுதிப்போட்டி இந்திய நேரப்படி மாலை 5-35 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக 3-வது இடத்துக்கான போட்டியில் மலேசியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. |
| கைதான சாமியார் அசாராம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் Posted: 31 Aug 2013 10:59 PM PDT பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சாமியார் அசாராம், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு கொண்டு செல்லப்படுகிறார். டெல்லிக்கு கொண்டுவரப்பட்ட அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டில் சாமியார் அசாராமை விசாரணைக்கு வருமாறு போலீசார் உத்தரவிட்டிருந்தனர். ஆனால், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இதைத் தொடர்ந்து அவர் தங்கியிருந்த மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூருக்கு மருத்துவ குழுவுடன் சென்ற போலீசார், அவரது உடல்நிலையை பரிசோதித்ததாக கூறப்படுகிறது. விசாரணைக்கு ஒத்துழைப்பு தரும் அளவிற்கு அவரது உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டதால், நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, சாமியார் அசாராமை கைது செய்ய வலியுறுத்தி வந்த சிறுமியின் தந்தை தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார். இதனிடையே அசாராமிற்கு பாரதிய ஜனதா ஆதரவளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக் விஜய்சிங் குற்றச்சாட்டியுள்ளார். பாலியல் குற்றங்களுக்கு எதிராக குரல்கொடுக்கும் சுஸ்மா சுவராஜ், இந்த விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன்? என்றும் திக்விஜய்சிங் கேள்வியுள்ளார். |
| சென்னையில் இரவு நேரத்தில் என்ன நடக்கிறது? Posted: 31 Aug 2013 10:48 PM PDT தமிழகத்தின் மற்ற நகரங்களைக்காட்டிலும், சென்னையில்தான் இரவு வாழ்க்கை என்பது அதிக பரிட்சயமான ஒன்றாக இருக்கிறது. மக்கள் கூட்டம் மற்றும் வாகன நடமாட்டம் அதிகமான இருக்கும் சென்னையில், இரவு நேரங்களில் நடக்கும் குற்றங்களை கட்டுப்படுத்த சென்னை போலீசார் என்ன நடவடிக்கை எடுத்துவருகிறார்கள் ? ரோந்துப்பணியில் போலீஸ் பகலில் மட்டுமல்லாமல், இரவு நேரத்திலும், சென்னையின் சாலைகளில் நூற்றுக்கணக்காண வாகனங்கள் வலம் வருகின்றன. மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குபவர்களை தடுத்து நிறுத்துதல், வாகனங்களை சோதனைக்குட்படுத்துவது ஆகியவை சென்னை போலீசாரின் முக்கிய இரவுப்பணியாக இருக்கிறது. சென்னையில் தினமும் சுமார் 240 இடங்களில் வாகனச்சோதனை நடத்தப்படுகிறது. இதில், சுமார் 1200 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் நடத்தப்படும் வாகனச் சோதனைகளினால் கிடைக்கும் பலன்கள் அதிகம் என்கிறார்கள் காவல்துறையினர். இரவில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் இரவு நேரங்களில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இரவு வாழ்க்கையில் சென்னை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது காவல்துறையின் கடமையாக இருக்கிறது. தூக்கம் இன்றி, விடியவிடிய நடத்தப்படும் இந்த சோதனைகள் சமூகவிரோதிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் என்பது காவல்துறையின் அசைக்க முடியாத நம்பிக்கை. |
| வேதாரண்யம் அருகே வங்கியில் கொள்ளை முயற்சி Posted: 31 Aug 2013 10:02 PM PDT நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தொடக்க வேளாண்மை வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு ஒடியம்புலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இன்று அதிகாலை முன்புறம் உள்ள கிரில் கேட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர். வங்கியின் எச்சரிக்கை மணி ஒலித்ததையடுத்து, கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் வங்கியின் இரும்பு லாக்கரில் இருந்த 3 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளும் 20 லட்ச ரூபாய் ரொக்கமும் கொள்ளைப் போகாமல் தப்பியது. இந்த கொள்ளை முயற்சி கொடுத்த புகாரின் பேரில் தப்பியோடிய கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். |
| டீசல் விலையை திரும்பப்பெறாவிட்டால்… லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை Posted: 31 Aug 2013 08:58 PM PDT டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெறாவிட்டால் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு லாரிகளை நிறுத்திப் போராட்டம் நடத்தப் போவதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி, டீசல் விலை உயர்வு, டயர் விலையேற்றம், காப்பீடு கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் லாரி தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு 30 சதவிகித லாரிகள் இயக்கப்படாமல் உள்ளதாக கூறினார். இதனால், எரிபொருள் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என நல்லதம்பி வலியுறுத்தினார். |
| தவறான சிகிச்சையால் சுயநினைவை இழந்த பெண் ? Posted: 31 Aug 2013 08:16 PM PDT திருச்சி அரசு மருத்துவமனையில் தைராய்டு பிரச்னையால் அவதிப்பட்ட பெண்ணுக்கு, தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், அவர் சுயநினைவை இழந்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. திருச்சி வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரஜினிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். தைராய்டு பிரச்னை காரணமாக அவதிப்பட்டு வந்த ரஜினி, கடந்த வாரம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அவரை மருத்துவர் பழனியப்பன் என்பவர் பரிசோதித்ததாக கூறப்படுகிறது. பின்னர், திருச்சியில் இயங்கி வரும் தனது சொந்த மருத்துவமனைக்கு வரும் படி ரஜினியை, அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த வாரம் அந்த மருத்துவமனைக்கு சென்ற ரஜினிக்கு, கழுத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சுயநினைவை இழந்து விட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தைராய்டு சிகிச்சைக்காக சென்ற பெண்ணிடம், புற்றுநோய் இருப்பதாகக் கூறி பீதியூட்டியதாகவும், தவறான சிகிச்சை அளித்ததாகவும், அரசு மருத்துவர் மீது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தற்போது தனியார் மருத்துவமனையில் உள்ள ரஜினிக்கு ஒரு வாரமாகியும் சுயநினைவு திரும்பவில்லை என குடும்பத்தினர் வேதனை தெரிவித்தனர். |
| சவால்களை சந்திக்கத்தயார்: சிரியா Posted: 31 Aug 2013 08:07 PM PDT மேற்கத்திய நாடுகளின் தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக சிரியா பிரதமர் அறிவித்துள்ளார். சிரிய நாட்டு அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மேலும், தங்கள் நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான சவால்களையும், எந்த சூழ்நிலையிலும் மன உறுதியுடனும், தைரியத்துடனும் எதிர்கொள்ளும் வகையில் ராணுவம் தயாராக உள்ளதாக பிரதமர் வேல் அல் ஹல்கி தெரிவித்துள்ளார். இக்கட்டான சூழ்நிலையில், பொது மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்து பொருட்கள் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாகவும் சிரிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், சிரியா ரசாயன ஆயுதங்களை வைத்திருந்ததாக கூறப்படுவதை மறுத்துள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புடின், தாக்குதல் நடத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என அமெரிக்காவை கேட்டுக்கொண்டுள்ளார். அடுத்த வாரம் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் சிரியா பிரச்னை குறித்து விவாதிப்பதே நல்லது என்றும் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். சிரியாவில் அதிபர் ஆசாத் படை ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி பொதுமக்கள் 1400 பேரை கொன்றதை ஐ.நா. ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து, சிரியாவின் மீது போர் தொடுக்க அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. |
| சிரியா மீது ராணுவ நடவடிக்கை : ஒபாமா அறிவிப்பு Posted: 31 Aug 2013 08:02 PM PDT ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்திய சிரியா அரசு மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கும் என அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார். இதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவும் அவர் முடிவு செய்துள்ளார். வெள்ளை மாளிகையில் உள்ள ரோஜாத் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஒபாமா, சிரியா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கைகளை எடுக்கும் என்றாலும், அந்நாட்டிற்கு அமெரிக்க வீரர்கள் அனுப்பப்பட மாட்டார்கள் என்று தெரிவித்தார். சிரியா நாட்டு மக்கள் மீதான ரசாயனத் தாக்குதல், ஒட்டுமொத்த மனித குலத்தின் மரியாதைக்கு எதிரான தாக்குதல் எனக் குறிப்பிட்ட ஒபாமா, இதற்காக ஆசாத் அரசு நிச்சயம் பதில் சொல்லியே தீர வேண்டும் என்று தெரிவித்தார். சிரியா மீது நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஆதரவு கோரப் போவதில்லை என்று தெரிவித்த ஒபாமா, இந்த விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் செயலற்ற நிலையில் இருப்பதாக குறிப்பிட்டார். |
| விளையாட்டு வீரர்களுக்கு விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் Posted: 31 Aug 2013 07:32 PM PDT மத்திய அரசு சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார் டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட்டன. விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது துப்பாக்கிசுடும் வீரர் ரஞ்சன் சோதிக்கு வழங்கப்பட்டது. கிரிக்கெட் வீரர் விராட் கோலி, செஸ் வீரர் அபிஜீத் குப்தா, பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கர் விளையாட்டு வீரர் ரூபேஷ் ஷா,ஹாக்கி விளையாட்டு வீரர் சபா அஞ்சும், மல்யுத்த வீரர் தர்மேந்தர் தலால், மாற்றுத்திறனாளி தடகள வீரர் அமித் குமார்,தமிழகத்தை சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா உள்ளிட்ட 14 பேருக்கு அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட்டன. பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் துரோணாச்சாரியார் விருதுகளை வில்வித்தை, ஹாக்கி, மல்யுத்தம் பயிற்சியாளர்கள் மூன்று பேருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். இவ்விழாவில் மத்திய அமைச்சர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
|
| சென்னை அருகே மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழப்பு Posted: 31 Aug 2013 07:15 PM PDT சென்னை புழல் அருகே புத்தகரத்தில் அழகு நிலைய பெயர் பலகையை பொருத்தும் போது மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர். |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |