puthiyathalaimurai.tv online |
- சிரியாவிலிருந்து தாயகம் திரும்பும் ரஷ்யர்கள்
- தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் திருச்சி மலைக்கோட்டை
- வெங்காயம் நடப்பாண்டில் விளைச்சல் குறையலாம்: மத்திய அரசு
- பெட்ரோல், டீசல் விலை விரைவில் உயர்த்தப்படும்
- பொருளாதார சிக்கலுக்கு பிரணாப் முகர்ஜியே காரணம்:சிதம்பரம் குற்றச்சாட்டு
- சென்னையில் வீடுகள் விலை குறைவு
- இந்தியாவில் 65 தீவிரவாத குழுக்கள்: உள்துறை அமைச்சகம் தகவல்
- தீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலி:ராமேஸ்வரத்தில் தீவிர கண்காணிப்பு
- காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க திருமாவளவன் வலியுறுத்தல்
- தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் மாற்றம்
| சிரியாவிலிருந்து தாயகம் திரும்பும் ரஷ்யர்கள் Posted: 27 Aug 2013 11:22 PM PDT அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் சிரியா மீது ஓரிரு நாட்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என தகவல் வெளியான நிலையில் சிரியாவில் இருந்த ரஷ்யாவை சேர்ந்தவர்கள் அவசரகால ராணுவ விமானத்தின் மூலம் ரஷ்யா வந்திறங்கினர். 30 குழந்தைகள் உள்பட 89 பேர் நாடு திரும்பியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே சிரியா மீது தாக்குதல் நடத்தும் மேற்கத்திய நாடுகளின் முடிவு சிரியாவில் மட்டுமல்லாது மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் மற்ற ஆப்ரிக்க நாடுகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக அமையும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. இதே போல் ஈரானும் சிரியா மீதான ராணுவ நடவடிக்கை எடுப்பதென்பது, சிரியாவில் மட்டுமல்லாது அந்த பிராந்தியத்திலும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது. |
| தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் திருச்சி மலைக்கோட்டை Posted: 27 Aug 2013 10:38 PM PDT தமிழகத்தின் முக்கிய சுற்றுலா இடமாகவும், வழிபாட்டுத் தலமாகவும் விளங்கும் திருச்சி மலைக்கோட்டையைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தினமும் வருகின்றனர். இந்த மலைக் கோட்டையில் இரண்டு குடவரைக் கோயில்களும் உள்ளன. மலைகளைக் குடைந்து அமைக்கப்படும் கோயில்களே குடவரைக் கோயில்கள் என்று அழைக்கப்படுகின்றன. திருச்சி மலைக்கோட்டையில் அமைந்துள்ள 2 குடவரைக் கோயில்களும், 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை என வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருச்சி மலைக்கோட்டை, நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டாலும், இந்த குடவரைக் கோயில்கள், பல்லர்வர்கள் மற்றும் பாண்டியர்கள் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டவை. லலிதாங்குரப் பல்லவ கிருகம் மலைக் கோட்டையில் உள்ள தாயுமானவர் கோயிலில் இருந்து உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குப் பிரியும் வழியில், லலிதாங்குரப் பல்லவ கிருகம் என்ற குடவரைக் கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலைக் கட்டிய மகேந்திரவர்மப் பல்லவனின், புனை பெயரான லலிதாங்குரன் என்ற பெயரிலேயே இது அழைக்கப்படுகிறது. இந்த கோயில் சுவரில் 900 ஆண்டுகளுக்கு முன்னர் பொறிக்கப்பட்ட கலித்துறை அந்தாதியும் காணப்படுகிறது. இந்த கோயிலின் முகப்பில் 4 தூண்களும், அங்குள்ள மண்டபத்தில் தாமரை இதழ்களும் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் கீழ்ப் பகுதியில் அமைந்துள்ள கருவறையில் தெய்வச் சிலைகள் எதுவுமில்லை என்ற போதிலும், பல்லவர் பாணியில் பல உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மற்றொரு இடத்தில் நான்கு கைகளுடன் சிவபெருமானின் உருவம் புதைச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. கீழ் குடவரைக் கோயிலின் சிறப்பம்சங்கள் திருச்சி மலைக் கோயிலின் தென்மேற்குப் பகுதியில் உள்ள இந்தக் குடவரைக் கோயில், மலையின் சரிவான பகுதியில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. குடவரையின் முன்பகுதியில் கல்லால் அமைந்துள்ள விட்டங்களின் நுனியில் பூத கணங்கள் செதுக்கப்பட்டுள்ளன. வாயில் காப்போர் உருவமும் பல்லவர் பாணியை பறைசாற்றம் வகையிலேயே அமைந்துள்ளது. இந்த கோயிலில் 2 கருவறைகளும் 2 மண்டபங்களும் உள்ளன. எனினும் கருவறைகளில் எந்த தெய்வச் சிலையும் இடம்பெறவில்லை. கீழ்ப் பகுதியில் உள்ள கருவறையில் திருமால் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். மண்டபத்தின் பின் சுவரில் 4 கைகளுடன் நின்ற நிலையில் விநாயகர் உருவமும் காணப்படுகிறது. இதற்கு அருகிலேயே சிவன் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது. |
| வெங்காயம் நடப்பாண்டில் விளைச்சல் குறையலாம்: மத்திய அரசு Posted: 27 Aug 2013 10:30 PM PDT நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், நடப்பாண்டில் வெங்காய விளைச்சல் குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜூன் முதல் மே வரையிலான நடப்பு சாகுபடி ஆண்டில் வெங்காய விளைச்சல் 5 சதவீதம்வரை குறைய வாய்ப்பிருப்பதாக மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் கூறினார். உள்நாட்டு வெங்காய தேவை ஆண்டுக்கு 10 லட்சம் டன்னாக இருக்கும் நிலையில் 15 முதல் 20 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்படுவதாக அமைச்சர் பவார் தெரிவித்தார். ஒரு லட்சம் டன் வெங்காயம் விதைப்பு நோக்கத்துக்காகவும் 3 லட்சம் டன் வெங்காயம் பதப்படுத்தலுக்கும் பயன்படுத்தப்படுவதாக பவார் தெரிவித்தார். |
| பெட்ரோல், டீசல் விலை விரைவில் உயர்த்தப்படும் Posted: 27 Aug 2013 10:23 PM PDT பெட்ரோல், டீசல் விலை விரைவில் உயர்த்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சிரியா மீது அமெரிக்கா போர் தொடுக்க தயாராகிறது என்ற தகவலால் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை முன் எப்போதும் இல்லாத வகையில் பீப்பாய்க்கு 7 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை விரைவில் உயரும் என கூறப்படுகிறது. ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதும் மத்திய அரசை கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. அரசு எதிர்கொள்ளும் இந்த இரு முனைத் தாக்குதல்களால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு சற்று அதிகமாகவே இருக்க வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் வரை உயரலாம் எனத் தெரிகிறது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடிந்ததும், விலை உயர்வு அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதாமாதம் 10 ரூபாய் உயர்த்த அரசு யோசித்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதனிடையே, சரக்கு ரயில் கட்டணம் விரைவில் உயர்த்தப்படலாம் என்றும் ரயில்வே இணையமைச்சர் தெரிவித்துள்ளார். |
| பொருளாதார சிக்கலுக்கு பிரணாப் முகர்ஜியே காரணம்:சிதம்பரம் குற்றச்சாட்டு Posted: 27 Aug 2013 10:16 PM PDT நாட்டில், தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார சிக்கலுக்கு, நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியே காரணம் என நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் பொருளாதார நிலவரம் குறித்த விவாதத்திற்கு ப.சிதம்பரம் பதில் அளித்து பேசினார். அப்போது, நெருக்கடியில் சிக்கியுள்ள பொருளாதார சிக்கலுக்கும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கும் வெளிநாட்டு தாக்கங்கள் மட்டுமே காரணம் என்று கூறமுடியாது என்றார். இதற்கு உள்நாட்டு காரணங்களும் உண்டு என்று தெரிவித்த சிதம்பரம், அதில் ஒன்றுதான் நிதிப் பற்றாக்குறையை வரம்பு மீற விட்டது என்று கூறினார். நடப்புக் கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்க விட்டுவிட்டதால், தற்போது பொருளாதார சிக்கல் நீடிப்பதாகவும் நிதியமைச்சர் கூறினார். 2009-2011 காலக்கட்டத்தில் அரசு எடுத்த சில குறிப்பிட்ட முடிவுகளால் இந்த விளைவுகள் ஏற்பட்டதாகவும் சிதம்பரம் விளக்கமளித்தார். இந்த காலத்தில் நிதியமைச்சராக இருந்தவர் தற்போது குடியரசுத் தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜி. 2008 ஆம் ஏற்பட்ட பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டெழுந்தாலும், அது நிதிப்பற்றாக்குறையும், நடப்பு பற்றாக்குறையும் அதிகரிக்க செய்துவிட்டது என்று ப.சிதம்பரம் தெரிவித்தார். |
| சென்னையில் வீடுகள் விலை குறைவு Posted: 27 Aug 2013 09:58 PM PDT சென்னை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் வீடுகளின் விலை குறைந்துள்ளது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. சென்னையில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை 3 மாதங்களில் வீடுகளின் விலை சராசரியாக 2.26 சதவீதம் குறைந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் அதிகபட்சமாக வீடுகள் விலை 5.64 சதவீதம் குறைந்துள்ளது. முக்கியமான 26 நகரங்களில் 22 நகரங்களில் வீடுகள் விலை சரிந்துள்ளதாக தேசிய வீட்டு வசதி வங்கியின் ஆய்வு தெரிவிக்கிறது. தேவைக்கும் அதிகமாக வீடுகள் கட்டப்பட்டதே அவற்றின் விலை குறைய காரணம் என்று தெரிவித்த வீட்டு வசதி வங்கியின் தலைவர் ஆர்.வி.வர்மா, இதனால் விலை குறைத்து வீடுகளை விற்க நிறுவனங்கள் முற்படுகின்றன என்று தெரிவித்தார். அதிகமான வட்டி வீதங்கள் உள்ளிட்ட காரணங்களாலும் வீடுகள் விற்பனை குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். |
| இந்தியாவில் 65 தீவிரவாத குழுக்கள்: உள்துறை அமைச்சகம் தகவல் Posted: 27 Aug 2013 09:55 PM PDT இந்தியாவில் 65 தீவிரவாத குழுக்கள் செயல்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் மணிப்பூரில் மட்டும் 34 தீவிரவாத அமைப்புகள் இருப்பதாக உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என்.சிங் மக்களவையில் கூறினார். பெரும்பாலான தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் இருந்து பணம் மற்றும் ஆயுத உதவிகள் வழங்கப்படுவதாகவும் ஆர்.பி.என்.சிங் தெரிவித்தார். |
| தீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலி:ராமேஸ்வரத்தில் தீவிர கண்காணிப்பு Posted: 27 Aug 2013 08:24 PM PDT தீவிரவாத அச்சுறுத்தலைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தில் மத்திய இருப்பு பாதை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாம்பன் ரயில் பாலம், பேருந்துநிலையம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. ராமேஸ்வரம் கோயிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் காமிரா மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். |
| காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க திருமாவளவன் வலியுறுத்தல் Posted: 27 Aug 2013 07:58 PM PDT காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக கனடா அறிவித்ததுபோல இந்தியாவும் புறக்கணிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஆலத்தூரில் நடைபெற்ற அவரது 50-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு பேசியபோது இதனை தெரிவித்தார். இலங்கையில் மனித உரிமை மீறலுக்கு காரணமாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சே சர்வதேச நீதிமன்றம் மூலம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். |
| தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் மாற்றம் Posted: 27 Aug 2013 07:47 PM PDT தமிழக அரசின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின்படி, வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளராக எஸ்.கே. பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளராக டி.கே.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆவின் மேலாண்மை இயக்குநராக சுனில் பாலிவால் நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையராக வெ. இறையன்பு நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையின் ஆணையராக அபூர்வாவும், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மாநில திட்ட இயக்குநராக பூஜா குல்கர்னியும் நியமிக்கப்பட்டுள்ளனர். எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் திட்ட இயக்குநராக டி.விவேகானந்தனும், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக சி.என்.மகேஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுபோல், செய்தித்துறை இயக்குநர் குமரகுருபரன், அரசு கேபிள் டிவி கழகத்தின் மேலாண்மை இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |