puthiyathalaimurai.tv online |
- மும்பை பாலியல் வன்கொடுமை சம்பவம்: 5-வது நபரும் கைது
- அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் அவசரநிலை பிரகடனம்
- பாகிஸ்தானியர்கள் எகிப்து செல்ல நுழைவு வாயில் திறப்பு
- அமெரிக்க ராணுவ வீரர்கள் ஆப்கனில் நீடிக்கும் விவகாரம்:ஹமித் கர்சாய் விளக்கம்
- சென்னையில் ஆட்டோ கட்டணத்தை நிர்ணயித்தது தமிழக அரசு
- டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு தொடங்கியது
- ஓமனை வீழ்த்தியது இந்திய அணி
- தங்கம் விலை உயர்வு
- ஓணம் பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள்
- விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி:தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முடிவு
| மும்பை பாலியல் வன்கொடுமை சம்பவம்: 5-வது நபரும் கைது Posted: 24 Aug 2013 11:20 PM PDT மும்பையில் பெண் பத்திரிகையாளர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 5 வது நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மும்பையில் உள்ள சக்தி மில் வளாகத்தில் கடந்த 22 ஆம் தேதி பெண் பத்திரிக்கையாளர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் 4-வது நபரை போலீசார் இன்று காலை செய்துள்ள நிலையில், தற்போது 5-வது நபரையும் கைது செய்யுள்ளனர். |
| அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் அவசரநிலை பிரகடனம் Posted: 24 Aug 2013 10:49 PM PDT அமெரிக்காவின் சான் ப்ரான்சிஸ்கோ வனப்பகுதி மற்றும் யோசெமிட்டி தேசிய பூங்காவில் பற்றி எரியும் காட்டு தீயால், கலிபோர்னியா மாகாணத்தில் அவசரநிலை பிரகடனம் படுத்தப்படுவதாக அம்மாநில ஆளுநர் ஜெர்ரி ப்ரோன் அறிவித்துள்ளார். இந்த தீயால் பெரும்பான்மை மின் உற்பத்தி மற்றும் மின் கடத்தும் தடவாளங்கள் பாழடைந்து விட்டதாகவும் 4 ஆயிரத்து 450 ஹெக்டேர் வனப்பரப்பு தீயில் எரிந்து சேதமாகி விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. |
| பாகிஸ்தானியர்கள் எகிப்து செல்ல நுழைவு வாயில் திறப்பு Posted: 24 Aug 2013 10:36 PM PDT பாலஸ்தீ்னியர்கள், காஸா வழியாக எகிப்திற்கு சென்று வர, 4 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரஃபா நுழைவு வாயில் எனப்படும் இந்தப் பகுதி, ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. பாலஸ்தீனியர்கள், மருத்துவ சிகிச்சை, கல்வி உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்காக எகிப்திற்கு செல்ல வேண்டிய நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன் இந்தப் பாதை மூடப்பட்டது. |
| அமெரிக்க ராணுவ வீரர்கள் ஆப்கனில் நீடிக்கும் விவகாரம்:ஹமித் கர்சாய் விளக்கம் Posted: 24 Aug 2013 10:22 PM PDT அமெரிக்க ராணுவ வீரர்கள் ஆப்கனிலேயே தொடர்ந்து நீடிப்பது என்பது குறித்த ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு, எவ்வித அவசரமும் ஏற்படவில்லை என்று அதிபர் ஹமித் கர்சாய் தெரிவித்துள்ளார். அவசியம் ஏற்பட்டால் இந்த ஒப்பந்தை ஏற்பது குறித்த முடிவை, அடுத்த ஆண்டு தேர்தெடுக்கப்படும் ஆப்கனின் புதிய அதிபர் மேற்கொள்வார் என்றும் ஹமித் கர்சாய் கூறியுள்ளார். |
| சென்னையில் ஆட்டோ கட்டணத்தை நிர்ணயித்தது தமிழக அரசு Posted: 24 Aug 2013 09:51 PM PDT சென்னையில் ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணமாக 25 ரூபாயை நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்த தமிழக அரசுக்கு, உச்சநீதிமன்றம் 4 வார கால அவகாசம் அளித்திருந்தது. இதனையடுத்து தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதன் முறையே 1.8 கிலோமீட்டர் தூரத்திற்கு குறைந்தபட்ச கட்டணமாக 25 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கிலோமீட்டருக்கு 12 ரூபாய் வீதம் நிர்ணயிக்கப்படுவதாகவும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 50 சதவிகிதம் கூடுதல் கட்டணம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட ஆட்டோ கட்டணம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் எனவும், திருத்தப்பட்ட கட்டண விகிதம் நாளிதழ்களில் பிரசுரிக்கப்படும் எனவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு தொடங்கியது Posted: 24 Aug 2013 09:40 PM PDT தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 5566 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு, இன்று தொடங்கியது. இதற்காக மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4755 தேர்வு மையங்களில், 14 லட்சம் பேர் தேர்வு எழுதி வருகின்றனர். இளநிலை எழுத்தர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் மற்றும் வரைவாளர் உள்ளிட்ட காலியிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-4 தேர்வுகளை நடத்துகிறது. இந்தத் தேர்வை எழுத குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்புத் தேர்ச்சி என்ற போதிலும், லட்சக்கணக்கான பட்டதாரிகளும் இந்தத் தேர்வை எழுதி வருகின்றனர். காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்த தேர்வு மதியம் ஒரு மணி வரை நடைபெறுகிறது. குரூப்-4 தேர்வை, 14 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதுவதால், இதன் முடிவுகள் அக்டோபர் அல்லது நவம்பரில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. |
| Posted: 24 Aug 2013 09:13 PM PDT மலேசியாவில் தொடங்கி உள்ள ஒன்பதாவது ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி, ஓமனை வீழ்த்தியது. கோலாலம்பூர் அருகேயுள்ள இபோவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில், பி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி ஓமானை எதிர்த்து விளையாடியது. ஆட்டம் தொடங்கியதிலிருந்தே இந்திய அணியின் கையே ஓங்கியிருந்தது. சிறப்பாக விளையாடிய இந்திய அணி 8 கோல்கள் அடித்தது. போராடிப் பார்த்த ஓமான் அணியால் கடைசி வரை கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் 4-வது, 40-ஆவது மற்றும் 44 -ஆவது நிமிடங்களில் மன்தீப் சிங் கோல்கள் அடித்தார். ரமன்தீப், வி.ஆர்.ரகுநாத், ருபிந்தர் பால் சிங், மலாக் சிங் மற்றும் எஸ்.கே.உத்தப்பா ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர். இதையடுத்து, வரும் 27-ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான தென்கொரிய அணியை எதிர்த்து விளையாடுகிறது இந்திய அணி. இந்ததொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினால் மட்டுமே உலக்கோப்பை போட்டிக்கு தகுதிபெறுவதை இந்திய அணியால் உறுதி செய்து கொள்ள முடியும். |
| Posted: 24 Aug 2013 09:07 PM PDT ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில், ஒரு சவரன் ஆபரண தங்கம் நேற்று 24384 ரூபாய்க்கு விற்பனையானது. 24 காரட் சுத்தத் தங்கம் கிராமுக்கு 58 ரூபாய் விலை உயர்ந்து 3260 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 54 ரூபாய் விலை அதிகரித்து 3048 ரூபாய்க்கும், சவரனுக்கு 432 ரூபாய் ஏற்றம் கண்டு 24,384 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை சில்லறை விற்பனையில் கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 58 ரூபாய் 40 காசுகளாக உயர்ந்தது. கட்டி வெள்ளி ஒரு கிலோவுக்கு ஆயிரத்து 35 ரூபாய் விலை உயர்ந்து 54,610 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. |
| ஓணம் பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் Posted: 24 Aug 2013 08:13 PM PDT ஓணம் பண்டிகை மற்றும் வேளாங்கன்னி தேவாலய திருவிழாவை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக, தென்னக ரயில்வே சார்பில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மங்களூரு வரை விரைவு ரயில் இயக்கப்படுகிறது. செப்டம்பர் 14 மற்றும் 21-ம் தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9 மணிக்கு மங்களூரு செல்லும் அந்த ரயில், காட்பாடி, ஈரோடு, கோவை, சோரனூர், கோழிக்கோடு, காசர்கோடு வழியாகச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மங்களூரில் இருந்து செப்டம்பர் 15 மற்றும் 22-ம் தேதிகளில் இரவு 7.45 மணிக்கு சென்னைக்கு விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு செப்டம்பர் 7-ம் தேதி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து மாலை 5.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், சென்னை எழும்பூர், தாம்பரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை, நெல்லை வழியாக, மறுநாள் காலை 9.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது. மறுமார்க்கமாக செப்டம்பர் 8-ம் தேதி நாகர்கோவிலில் இருந்து மதியம் ஒரு மணி 20 நிமிடத்திற்கு புறப்படும் சிறப்பு ரயில், செப்டம்பர் 9-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சென்னை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி:தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முடிவு Posted: 24 Aug 2013 08:01 PM PDT தர்மபுரியில் பாதாளச் சாக்கடை தூர்வாரும் பணியின்போது, விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு, தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க, அவர்களை பணியில் அமர்த்திய நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேற்று நேரில் சந்தித்த தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் எனவும் அவர் தெரிவித்தார். தர்மபுரி நான்கு சாலை சந்திப்பில் உள்ள பாதாளச் சாக்கடை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிந்த, லட்சுமண குமார், மாயன், ராஜா ஆகிய 3 பேரும், விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே நேற்று முன்தினம் உயிரிழந்தனர். அதனை சந்தேக மரணம் என காவல்துறை வழக்குப்பதிவு செய்ததாக புகார் எழுந்தது. இதனை கண்டித்தும், பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரியும் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக, குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற் பொறியாளர் ஜெயப்பிரகாசம் என்பவரை, மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |