Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக உயர்வு

Posted: 16 Aug 2013 10:44 PM PDT


தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக இன்று உயர்ந்தது. 22 காரட் தங்கம் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து 23,588 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தற்போது 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராமுக்கு 69 ரூபாய் உயர்ந்து 3150 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 65 ரூபாய் உயர்ந்து 2946 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் வெள்ளி ஒரு கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து 55.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி கிலோவிற்கு 800 ரூபாய் அத்கரித்து 51,630 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெங்காய விலை ஏற்றத்தை சமாளிக்க டில்லி அரசு நடவடிக்கை

Posted: 16 Aug 2013 09:18 PM PDT


நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெங்காய விலையை சமாளிக்கும் வகையில் டெல்லியில் ஒரு கிலோ ரூ.50-க்கு இன்று முதல் வெங்காயம் விற்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. 150 வேன்கள், 400 கடைகள் மூலம் 1000 இடங்களில் வெங்காயம் விற்க அரசு முடிவு செய்துள்ளது. இன்னும் 3 மாதங்களில், டில்லி சட்டசபைக்கு தேர்தல் வர இருக்கிறது. இந்நிலையில் பொதுமக்களை வெகுவாக பாதிக்கும் வெங்காய விலை ஏற்றம், தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் டில்லி முதல்வர் ஷீலா திட்சித், அம்மாநில உணவு வழங்கல் துறை அதிகாரிகளை, வெங்காயத்தை பதுக்கல் செய்பவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளாராம்.

அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் நரேந்திர மோடி

Posted: 16 Aug 2013 08:29 PM PDT


குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி செப்டம்பர் மாதம் கோவை வருகிறார். பாஜகவின் தமிழ் மாநில பொறுப்பாளர் முரளிதர ராவ் திருச்சியில் செய்தியாளர்களிடம் இத் தகவலை தெரிவித்தார். கோவையில் நடைபெற உள்ள பேரணியில் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார் என்றும் பாஜக குழு முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க உள்ளதாகவும் முரளிதரராவ் தெரிவித்தார். முதலமைச்சரை சந்திக்கும் போது ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வலியுறுத்த முடிவு செய்துள்ளதாகவும் முரளிதரராவ் கூறினார்.

ரூபாய் மதிப்பு சரிவு குறித்து ப.சிதம்பரம் விளக்கம்

Posted: 16 Aug 2013 07:53 PM PDT


ரூபாய் மதிப்பு சரிவு குறித்து கருத்து தெரிவித்த நிதியமைச்சர் சிதம்பரம், அடுத்த வாரம் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அந்நாட்டு அரசு அளித்து வரும் நிதியுதவி விரைவில் விலக்கிக் கொள்ளப்படலாம் என்ற அறிவிப்பால், இந்திய பங்குச் சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்தன. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அமெரிக்காவில் வெளியாகும் புள்ளி விவரங்களுக்கு, இந்திய சந்தைகள் எதற்காக பதற்றப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பினர். நம் நாட்டின் நிலவரத்தையே இந்திய சந்தைகள் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்றார். இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 62 ரூபாய் என்ற அளவை நேற்று தாண்டியது. இதேபோல், மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 769 புள்ளிகள் சரிந்து 18 ஆயிரத்து 598 என்ற அளவில் நிலைப்பெற்றது. காணொளி:ரூபாய் மதிப்பு சரிவு குறித்து ப.சிதம்பரம் விளக்கம்

புதுச்சேரியில் தடையை மீறி மணல் கொள்ளை: நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்

Posted: 16 Aug 2013 07:38 PM PDT


புதுச்சேரியில் சமீபகாலமாக மணல் கொள்ளை அதிகமாகி வருகிறது. இதனால், அரசுக்கும் பல கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் எந்த பகுதியிலும் மணல் அள்ளக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ள போதிலும், இதே நிலை நீடிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். புதுச்சேரி வழியாக செல்லும், தாமிரபரணி மற்றும் தென்பெண்ணை ஆற்றிலிருந்து சட்டத்திற்கு புறம்பாக மணல் அள்ளப்படுவது தொடர்ந்து வருவதாகவும், அதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் புதுச்சேரி மக்களின் நீண்ட நாள் புகராக உள்ளது. மணல் அள்ளப்படும் இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, கடல் நீர் உட்புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும், தடுப்பணைகளுக்கு அருகில் அதிக ஆழத்திற்கு மணல் அள்ளுவதால் தண்ணீரை தேக்கி வைக்க பயன்படும் தடுப்பணைகளும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். காணொளி;புதுச்சேரியில் தடையை மீறி மணல் கொள்ளை: நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்

விழுப்புரத்தில் விளைநிலங்களுக்குள் புகுந்த யானை கூட்டத்தை விரட்ட முயற்சி

Posted: 16 Aug 2013 07:36 PM PDT


விழுப்புரம் மாவட்டத்தில், விளைநிலங்களுக்குள் புகுந்து சேதம் விளைவித்து வரும் காட்டு யானைகளை காட்டுக்குள் விரட்ட வனதுறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சேலம் மாவட்டத்திலிருந்து கடந்த 15 நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைந்த 6 யானைகள் கல்லாநத்தம் பகுதியிலுள்ள விளைநிலங்களை சேதம் செய்தன. அதனை தொடர்ந்து வடபொன்பரப்பி வனப்பகுதி வழியாக திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் யானைகள் வந்தன. அங்கிருந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருப்பாலபந்தல் பகுதிக்கு சென்ற யானைகள் அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்தின. யானைகளை விரட்ட வெளிமாவட்டங்களிலிருந்து சிறப்பு வனத்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு யானை விரட்டும் பணியின் போது காணாமல் போன வனகாவலரின் சடலம், கிணறு ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஐஏஎஸ் அதிகாரி துர்கா பணிநீக்கம் விவகாரம் உ.பி., அரசுக்கு நோட்டீஸ்

Posted: 16 Aug 2013 07:31 PM PDT


உத்தரபிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரி துர்கா தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக, அந்த மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. துர்காவுக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த எழுத்தாளர் கன்வால் பாரதி கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்போரை கைது செய்ய அண்மையில் வெளியிட்ட விதிகளை உத்தரபிரதேச அரசு மீறியிருப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து, உடனடியாக பதிலளிக்குமாறு அந்த மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, சஸ்பெண்ட் தொடர்பாக உத்தரபிரதேச அரசு அளித்திருந்த நோட்டீசுக்கு ஐஏஎஸ் அதிகாரி துர்கா பதில் அளித்துள்ளார். அதில், தாம் குற்றமற்றவர் என்று தெரிவித்துள்ளார். காணொளி:ஐஏஎஸ் அதிகாரி துர்கா பணிநீக்கம் விவகாரம் உ.பி., அரசுக்கு நோட்டீஸ்

எகிப்தில் 3வது நாளாக வன்முறை: 700க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Posted: 16 Aug 2013 06:57 PM PDT


எகிப்தில் கடந்த 3 நாட்களாக பாதுகாப்புப் படையினருக்கும், முர்சி ஆதரவாளர்களுக்கும் இடையே நீடிக்கும் மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எகிப்து அரசு ஊடரங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ள நிலையிலும், தலைநகர் கெய்ரோ, அலெக்சாண்டிரியா, இஸ்மாயிலியா, டமிஎட்டா உள்ளிட்ட நகரங்களில் வன்முறை நீடிக்கிறது. முர்சியின் ஆதரவாளர்கள் அரசு கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்துவதும், அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்துவதும் குறையவில்லை. பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் முர்சியின் சொந்த ஊரான சர்கியாவில் அவரது ஆதரவாளர்களுக்கும், எதிர் தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. எகிப்து முழுவதும் நேற்று நடைபெற்ற மோதல்களில் 110க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் 30 பேர் உயிரிழந்தனர். முர்சியின் முஸ்லிம் சகோதரத்துவ கட்சிக்கு, பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள எகிப்து அரசு, தேச விரோத சக்திகளை தோற்கடிக்க ராணுவம் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து செயல்படுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி: பதக்கமின்றி திரும்புகிறது இந்தியா

Posted: 16 Aug 2013 06:55 PM PDT


ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் , இந்தியா பதக்கம் எதுவும் இன்றி ஏமாற்றத்துடன் திரும்பு உள்ளது. ஆடவருக்கான மும்முறை தாண்டுதலில் ரஞ்சித் மகேஸ்வரியும், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய மகளிர் அணியும் இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததன் மூலம் பதக்கம் வெல்லும் இந்தியாவின் கனவு தகர்ந்தது. மகளிர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்திற்கான தகுதிச் சுற்றில், இந்திய அணி ஏ பிரிவில் ஐந்தாவது இடத்தையே பிடித்தது. ஆடவருக்கான மும்முறை தாண்டுதல் தகுதிச் சுற்றில் இந்திய வீரர் ரஞ்சித் மகேஸ்வரி 13ஆவது இடம் பிடித்தார். இதன் மூலம் அவரால் இறுதிச் சுற்றுக்கு முன்னேற இயலவில்லை. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வரும் 14ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் 15 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். அதில் ஒருவர் கூட பதக்கம் வெல்லவில்லை.

உலக தடகளப் போட்டி 200மீ ஓட்டம்: ஜமைக்காவுக்கு தங்கம்

Posted: 16 Aug 2013 06:53 PM PDT


ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வரும் உலக தடகளப் போட்டியின் மகளிர் பிரிவு 200 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்கா வீராங்கனை ஷெல்லி ஆன் ஃப்ரேசரும், ஆடவருக்கான ஐந்தாயிரம் மீட்டர் ஓட்டத்தில் இங்கிலந்து வீரர் மோ ஃபாராவும் தங்கப்பதக்கம் வென்றனர். மாஸ்கோவில் நடைபெற்று வரும் உலகத் தடகளப் போட்டிகள் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று இரவு நடைபெற்ற மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில், ஜமைக்காவின் ஆன் ஃப்ரேசர் மற்றும் அமெரிக்காவின் அல்லிசன் ஃபெலிக்ஸ் உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றதால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதில், அல்லிசன் ஃபெலிக்ஸ் போட்டி தொடங்கிய சில விநாடிகளிலேயே தசைப் பிடிப்பு காரணமாக களத்திலேயே நிலை குலைந்து விழுந்தார். ஜமைக்காவின் ஆன் ஃப்ரேசர், சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு முன்னிலை பெற்றதுடன், இறுதி வரை அதனை தக்க வைத்துக் கொண்டார். முடிவில், 22 புள்ளி 17 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கம் வென்றார். ஐவரி கோஸ்ட் வீராங்கனை அஹூரி வெள்ளிப் பதக்கமும், நைஜீரியாவின் பிளஸிங் வெண்கலப் பதக்கமும் வென்றனர். ஆடவருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இங்கிலாந்து வீரர் மோ ஃபரா, 13 நிமிடம் 26 புள்ளி ஒன்பது எட்டு விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றார். இப்போட்டியின் இறுதிக்கட்டத்தில், எத்தியோப்பிய வீரர் ஹெகோஸ் பல வீரர்களை முந்திச் சென்று வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். கென்ய வீரர் கெப்லான்கட் வெண்கலப் பதக்கம் வென்றார். கடந்த வாரம் நடைபெற்ற 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும்  மோ ஃபரா தங்கம் வென்றார். தடகள வரலாற்றில், ஒலிம்பிக் மற்றும் உலக தடகளப் போட்டிகளில் 10 ஆயிரம் மற்றும் 5 ஆயிரம் மீட்டர் ஒட்டத்தில், தங்கப் பதக்கங்களை வென்ற 2வது வீரர் என்ற பெருமையும்  மோ ஃபராவுக்கு கிடைத்துள்ளது. ஆடவருக்கான ஆயிரத்து 600 மீட்டர் தொடர் ஓட்டத்தில், அமெரிக்க அணி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. வெர்பர்க், மெக் குவே, ஹால், மெர்ரிட் ஆகியோர் அடங்கிய அமெரிக்க அணி, பந்தய தூரத்தை 2 நிமிடம் 58 புள்ளி ஏழு ஒன்று விநாடிகளில் கடந்தது. வெள்ளிப் பதக்கம் வென்ற ஜமைக்கான அணி பந்தய தூரத்தை 2 நிமிடம் 59 புள்ளி எட்டு எட்டு விநாடிகளில் கடந்தது.ரஷ்ய அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. ஆடவருக்கான 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் இறுதிப் போட்டிக்கு உலகின் அதிவேக வீரரான ஜமைக்காவின் உசைன் போல்ட் தகுதி பெற்றுள்ளார். தகுதிப் போட்டியில், பந்தய தூரத்தை, 20 புள்ளி ஒன்று இரண்டு விநாடிகளில் அவர் கடந்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™