Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


தமிழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்

Posted: 11 Aug 2013 11:28 PM PDT


சுதந்திர தினத்தன்று சென்னை, கோவை, மதுரை ஆகிய தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தீவிரவாத அமைப்புகளிடையே நடந்த உரையாடலின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் கூடும் பகுதிகளான விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகிய பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கவும் புலனாய்வுத்துறை அறிவுரை வழங்கியுள்ளது. இந்த எச்சரிக்கையை அடுத்து, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கும் கூடுதலாக பாதுகாப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுதந்திர தினம் கொண்டாடப்படும் இடங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.  

திபெத் பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

Posted: 11 Aug 2013 11:22 PM PDT


சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. எல்லைப் பகுதியில் ஃஜோகாங் (Zogang) மற்றும் மர்கம் (Markam) பகுதியில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க ஆய்வகம் தெரிவித்துள்ளது. முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே 5.1 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. பாதிப்புகள் மற்றும் சேத விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. கடந்த மாதம் சீனாவின் கன்சு மாகாணத்தில் இதே போல அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 95 பேர் உயிரிழந்தனர்.

நீலகிரியில் பண்பாட்டு ஆதார மையம்: தமிழக அரசு உத்தரவு

Posted: 11 Aug 2013 11:19 PM PDT


பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், நீலகிரி மாவட்டத்தில், பழங்குடியினர் பண்பாட்டு ஆதார மையத்தை, 10 கோடி ரூபாய் செலவில் அமைக்க தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மையம் பழங்குடி மக்களின் நலனை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் அனைத்து பழங்குடி மக்களின் கலாசார நிகழ்ச்சிகளை நடத்திடும் அமைப்பாகவும் செயல்படும் என தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதகமண்டலத்தில் தாவரவியல் பூங்காவிற்கு அருகில் அமையவிருக்கும் இந்த மையத்தின் மூலம் மலைவாழ் மக்களின் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஒரே இடத்தில் நடத்தப்படும். கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக நவீன கலையரங்கம், பொருட்காட்சிக் கூடம், அருங்காட்சியகம் மற்றும் நிலையான விற்பனை அரங்குடன் கூடிய பழங்குடியினர் பண்பாட்டு ஆதார மையம் அமைக்கப்படும் எனவும் தமிழகஅரசு தெரிவித்துள்ளது.

கனிம மணல் முறைகேடு: சிறப்பு ஆய்வுக் குழு ஆய்வு

Posted: 11 Aug 2013 11:13 PM PDT


தூத்துக்குடி மாவட்டத்தில் கனிம மணல் அள்ளப்படுவதில் முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்பு ஆய்வுக் குழு, 6 தனியார் நிறுவனங்களுக்கு மணல் அள்ள உரிமம வழங்கப்பட்ட பகுதிகளை ஒரே நேரத்தில் ஆய்வு செய்யவுள்ளது.

அதேசமயம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்து வரும் புகார்கள் தொடர்பான நடவடிக்கைகள் பற்றி இதுவரை அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்காக இந்த குழு ஆறாக பிரிந்து, இன்று முதல் 14 ஆம் தேதி வரையிலும், 19 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலும் ஆய்வு நடத்த உள்ளன.

ஆய்வு செய்யும் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு மூத்த துணை ஆட்சியர், நில அளவைத்துறையின் உதவி இயக்குநர், கனிம அல்லது மண்ணியல் துறையைச் சேர்ந்த உதவி இயக்குநர், தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் சுரங்க மற்றும் மண்டல சுற்றுச்சூழல்துறை பொறியாளர் ஆகியோர் இடம்பெற்றிருப்பர்.

இதன் பின் சிறப்பு ஆய்வுக்குழுவிற்கு தலைமையேற்றுள்ள வருவாய்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி 22 முதல் 24 ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட இடங்களில் மீண்டும் ஆய்வு செய்யவுள்ளார்.

இந்த ஆய்வுகளுக்கு மாவட்ட ஆட்சியர் தேவைப்படும் உதவிகளை செய்து கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆய்வு அறிக்கையை ஒரு மாதத்திற்குள் தமிழக அரசிடம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் கனிம மணல் அள்ளப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, அதுகுறித்து சிறப்பு ஆய்வு குழுவை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

நாடாளுமன்றத்தில் அமளி : 12 மணி வரை ஒத்திவைப்பு

Posted: 11 Aug 2013 11:05 PM PDT


நாடாளுமன்ற இரு அவைகளும் உறுப்பினர்களின் கடும் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் இருபிரிவினருக்கு இடையே நடந்த மோதலால் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை கண்டித்து உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். கேரளாவில் நடைபெற்ற சூரிய சக்தி மின்தகட்டு ஊழல்,தெலுங்கானா பிரச்சனை உள்ளிட்டவற்றை எழுப்பி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  15 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் மாநிலங்களவை கூடியபோதும் உறுப்பினர்கள் இதே பிரச்னையை முன் நிறுத்தி முழக்கமிட்டனர். பாஜக உறுப்பினர்களின் தொடர் அமளியால் மாநிலங்களவையும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.  

முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் தொடக்க விழா

Posted: 11 Aug 2013 10:56 PM PDT


முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ரந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் கட்டுமானத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கான தொடக்க விழா நிகழ்ச்சி, கேரள மாநிலம் கொச்சியில் இன்று நடைபெறுகிறது. 260 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 2 விமான ஓடுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வானில் பறக்கும் இலக்குகளை தரையிலிருந்து தாக்கவல்ல ஏவுகணைகளும் இதில் இடம் பெற்றிருக்கும். 37 ஆயிரத்து 500 டன் எடை கொண்ட இந்த கப்பலின் முதல் கட்ட பணிகள், கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியது. தற்போது, கப்பலின் வெளிப்புற கட்டுமானம் மற்றும் பிறகட்டுமான பணிகளுக்காக ஐ.என்.எஸ். விக்ராந்த் அந்த தளத்தில் இருந்து வேறு தளத்திற்கு மாற்றப்படுகிறது. இதன் தொடக்க விழா கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இன்று நடைபெறுகிறது. இதில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணியின் மனைவி எலிசபெத் கலந்து கொண்டு இரண்டாம் கட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்சைத் தொடர்ந்து விமானம் தாங்கி போர்க் கப்பலை தயாரிக்கும் ஐந்தாவது நாடாக இந்தியா இணைந்துள்ளது. இந்த போர்க்கப்பலின் முழு கட்டுமான பணிகளும் முடிவடைந்து, 2018-ம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்படும்.  

வாடகை வீட்டில் இருப்போர் வரிச்சலுகை பெறுவது எப்படி?

Posted: 11 Aug 2013 10:51 PM PDT


இந்திய மக்களில் பெரும்பகுதி, சாமானிய, நடுத்தர வருவாய் பிரிவினர். அவர்கள் குடியிருக்கும் வீட்டைப் பொருத்து, சம்பாதிப்பதில் சிக்கனம் செய்ய அவர்களுக்கு தற்போதுள்ள சட்டப்பூர்வமான வாய்ப்புகளில் ஒன்று, வருமான வரி சலுகையைப் பயன்படுத்திக் கொள்வது. இதனால், செலவைக் குறைத்து, சிக்கனம் செய்ய முடியும். மாத சம்பளக்காரர்கள் பெரும்பாலோருக்கு, அலுவலகத்தில் தரப்படும் ஊதியத்தில் ஒரு பகுதி, வீட்டு வாடகைப்படி என்ற பெயரில் வழங்கப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டத்தின்படி, இந்தப் படியின் முழுத் தொகைக்கு வருமான வரிச்சலுகை இல்லை. ஒருபகுதிக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படுகிறது. அதன் பிறகுதான், வருமானவரிக்கு உட்படும், ஆண்டுமொத்த சம்பளத் தொகை கணக்கிடப்படுகிறது. எச்ஆர்ஏ என்ற பெயரில், மாதச் சம்பளதாரர்களுக்கு வழங்கப்படும் தொகைக்கான சலுகை எவ்வளவு என்பதை அறிய, தற்போது 3 விதமான கணக்கீடுகள் உள்ளன. இந்த மூன்றில் எந்த தொகை குறைவோ, அது உங்களது ஆண்டுமொத்த வருமானத்தில் இருந்து கழித்துக் கொண்டபின், மீதியுள்ள தொகைக்கு வருமான வரி விதிக்கப்படுகிறது. வீட்டு வாடகைப்படியில் தரப்படும் சலுகையைப் பெற, குடியிருக்கும் வீட்டு வாடகைக்கான ரசீதை, நீங்கள் அலுவலகத்தில் தர வேண்டும். கடந்த ஆண்டுவரை மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை, வீட்டுவாடகை அளித்து வந்தார்கள். இந்த நிலை இந்த ஆண்டு ‌மாற்றம் கண்டுள்ளது. அதன்படி, மாதம் ஒன்றுக்கு 15 ஆயிரம் வீட்டுவாடகை கொடுப்பவர்களும், தற்போது ரசீதைக் கொடுத்து இந்தச் சலுகையைப் பெற முடியும். ஆனால், அதற்கு மேல் வாடகை கொடுப்பவர்கள், ரசீது கொடுத்தால் மட்டும் போதாது. முறையான வாடகை ஒப்பந்த நகல் ஒன்றுடன், வீட்டு உரிமையாளரது, பான் பார்டு என்று குறிப்பிடப்படும் வருமான வரிக்கணக்கு எண்ணையும் சேர்த்துத்தர வேண்டும். அதை அளித்தால்தான், 15 ஆயிரத்துக்குமேல் வீட்டு வாடகை தருவோர், அதற்குரிய பலனைப் பெறமுடியும். இது மத்திய. மாநில அரசு ஊழியர், பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர், பிற தனியார் நிறுவன பணியாளர் என அனைவருக்கும் பொருந்தும்.

செல்போனில் விளம்பர எஸ்எம்எஸ்கள்: ட்ராய் நோட்டீஸ்

Posted: 11 Aug 2013 10:46 PM PDT


செல்ஃபோனில் தொல்லை அழைப்புகள் மற்றும் வேண்டாத விளம்பர எஸ்எம்எஸ்களை அனுப்பியதாக எழுந்த புகார் மீது 246 டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் இந்த நோட்டீசை அனுப்பியுள்ளது. விதிமுறைகளை மீறியதாக அந்த நிறுவனங்களின் முன்வைப்புத் தொகையில் 1 கோடியே 36 லட்ச ரூபாயை அபராதமாக ட்ராய் பிடித்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளரிடம் ஒப்புதல் பெற்ற பிறகே விளம்பர அழைப்புகள், மதிப்பு கூட்டு சேவைகளை தொலைபேசி நிறுவனங்களும், டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களும் அளிக்க வேண்டும் என்று ட்ராய் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வெங்காயம் விலை உயரும்: வணிகர்கள்

Posted: 11 Aug 2013 10:43 PM PDT


இந்தியாவில் வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது. டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 60 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால், வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மஹாராஷ்டிராவின் புனே மற்றும் டெல்லி ஆசாத்பூர் மொத்த விலை சந்தைக்கு வெங்காய வரத்து கணிசமாகக் குறைந்துள்ளது. டெல்லியில் வெங்காயம் விலை ஒரு கிலோ 60 ரூபாயைத் தாண்டியுள்ளது. மொத்த விலையில் வெங்காயம் கிலோ 45 ரூபாய்க்கு விற்கப்படுவதாக ஆசாத்பூர் வெங்காய சந்தை வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் 11,480 குவிண்டால் வெங்காயம் வந்த நிலையில், இப்போது அது 6 ஆயிரம் குவிண்டாலாக குறைந்ததே விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. வட மாநிலங்களில் வெங்காயம் விலை அதிகரித்து வருவதால், தமிழகத்திலும் அதன் விலை உயரும் எனத் தெரிகிறது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வெங்காய வரத்து அதிகரித்த பிறகே அதன் விலை குறைய வாய்ப்பு இருக்கும்.

தங்கம் விலை அதிகரிக்கும் வாய்ப்பு

Posted: 11 Aug 2013 10:38 PM PDT


பண்டிகைக் காலம் தொடங்குவதால், தங்கத்தின் தேவை வரும் நாட்களில் அதிகரிக்கத் தொடங்கும் என்று மும்பை பண்டகச் சந்தை வணிகர்கள் தெரிவித்தனர். அதனால், தங்கத்தின் விலை கணிசமான உயர்வை சந்திக்கும் என்று கூறப்படுகிறது. சனிக்கிழமையன்று மும்பை சந்தையில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 300 ரூபாய் வரை அதிகரித்திருந்தது. இந்த வாரமும் தங்கம் விலை அதிகரிக்கும் என தங்க நகை வணிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™