puthiyathalaimurai.tv online |
- மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினிக்கு பா.ம.க., முழு ஆதரவு: அன்புமணி ராமதாஸ்
- இந்திய -ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி
- இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்
- தஞ்சையில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி
- கன்னியாகுமரியில் மீன்பிடி துறைமுக பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
- தேனியில் சித்ரவதை செய்யப்பட்ட 5 வயது சிறுவன்: நலம் பெற வேண்டி சர்வமத பிரார்த்தனை
- தூத்துக்குடி காவல்நிலையங்களில் காவல்துறை கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு
- திருவள்ளூரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்
- பிரதமர் மன்மோகன் சிங் வருவதையொட்டி புதுக்கோட்டையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- தனித் தெலங்கானாவிற்கு எதிராக போராட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
| மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினிக்கு பா.ம.க., முழு ஆதரவு: அன்புமணி ராமதாஸ் Posted: 31 Jul 2013 10:00 PM PDT தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி கடந்த திங்கள் கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினிக்கு பா.ம.க., முழு ஆதரவு அளிப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில்: பூரண மதுவிலக்கு கோரி உண்ணாவிரதம் இருக்கும் நந்தினிக்கு எங்களது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். நந்தினிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இருக்கும் மற்ற மாணவ, மாணவிகள் முன் வர மதுவிலக்குக் எதிரான போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். மது என்பது அனைத்து சமுதாயப் பிரச்னைகளுக்கும் தாய் பிரச்னையாக இருக்கிறது. எனவே இந்தப் போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பூரண மதுவிலக்கு என்பதை படிப்படியாக அமல் படுத்த அரசு முன்வர வேண்டும். முதலில் நெடுஞ்சாலைகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும், அடுத்து மதுக்கடைகள் இயங்கும் நேரத்தை குறைக்கலாம், இப்படியாக படிப்படியாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். காணொளி: மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினிக்கு பா.ம.க., முழு ஆதரவு: அன்புமணி ராமதாஸ் |
| இந்திய -ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி Posted: 31 Jul 2013 08:23 PM PDT இந்திய -ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புலவாயோ நகரில் இன்று நடைபெறுகிறது. ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் இந்த 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-0 என்று கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்த தொடரில், விராத் கோஹ்லி தலைமையிலான இளம் அணியினர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் புலவாயோ நகரில் நடைபெறும், 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றிபெறும் முனைப்பில் இந்திய அணியினர் தீவிர பயிற்சி செய்தனர். இந்த போட்டியில் புஜாரா, மோஹித் ஆகியோர் அணியில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தற்போது இந்திய அணியில் விளையாடி வரும் வீரர்கள் சிலருக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. இதேபோல் ஜிம்பாப்வே வீரர்களும், தொடர் தோல்விகளை தவிர்க்கும் பொருட்டு, தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய நேரப்படி நண்பகல் 12.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. |
| இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் Posted: 31 Jul 2013 08:16 PM PDT இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி மேன்செஸ்டரில் இன்று தொடங்குகிறது. கடந்த 2 போட்டிகளிலும் வென்றுள்ள மகிழ்ச்சியுடன் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர் இங்கிலாந்து வீரர்கள். தொடர்ந்து மூன்றாவது வெற்றியையும் பதிவுச் செய்து, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்புடன் அந்த அணி வீரர்கள் உள்ளனர். இதற்காக சுழற்பந்து வீச்சாளர்கள் க்ரேம் ஸ்வான், மோன்டி பனேசர் ஆகியோரும், வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ட்ரம்லெட்-டும் இங்கிலாந்து அணியில் களமிறக்க வாய்ப்புள்ளது. இதேபோல் தொடர் தோல்விகளில் இருந்தும் மீளும் முனைப்புடன் ஆஸ்திரேலிய வீரர்களும் கடினப் பயிற்சி மேற்கொண்டனர்.குறிப்பாக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்-டுடன் மதுபான விடுதியில் தகராறில் ஈடுபட்டதால், முதல் இரண்டு டெஸ்ட்களில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் வார்னர்,மேன்செஸ்டர் டெஸ்டில் களமிறங்குகிறார். |
| தஞ்சையில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி Posted: 31 Jul 2013 08:12 PM PDT தஞ்சையில் நடைபெறும் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியை ஏராளமான ரசிகர்கள் ஆர்வமுடன் நேரில் கண்டு ரசித்து வருகின்றனர். தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில், மாநில அளவிலான இந்த கூடைப்பந்து தொடரில் சத்யபாமா பல்கலைக்கழகம், சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, சென்னை ஹிந்துதான் பொறியியல் கல்லூரி, உள்ளிட்ட பல்வேறு அணிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூடைப்பந்து தொடர் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டியில், சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரி அணியை எதிர்த்து கோவை சி.ஆர்.டி கோவை அணி பலப்பரீட்சை நடத்தியது. இதில் 10-8 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை ஜேப்பியார் பொறியியல் அணி வெற்றிபெற்றது. இந்த போட்டிகளை நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர். |
| கன்னியாகுமரியில் மீன்பிடி துறைமுக பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை Posted: 31 Jul 2013 08:09 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடி துறைமுக பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 1990 ஆம் ஆண்டு கட்டப்பட்ட சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் 250 படகுகளை நிறுத்துவதற்கு மட்டுமே வசதி உள்ள நிலையில், 325க்கும் அதிகமான படகுகள் நிறுத்தப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் குளச்சல், தேங்காய்பட்டினம் ஆகிய மீன்பிடித் துறைமுகங்களில் பணிகள் முடிவடையாததால், கேரள மீன்பிடித் துறைமுகங்களில் படகுகளை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். |
| தேனியில் சித்ரவதை செய்யப்பட்ட 5 வயது சிறுவன்: நலம் பெற வேண்டி சர்வமத பிரார்த்தனை Posted: 31 Jul 2013 08:01 PM PDT தேனி மாவட்டம் குமுளி அருகே தந்தை மற்றும் அவரது இரண்டாவது மனைவியால் சித்ரவதை செய்யப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் ஐந்து வயது சிறுவன் ஷபீக் பூரண நலம் பெற வேண்டி சர்வமத பிரார்த்தனை நடந்தது. குமுளி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற சர்வமத பிரார்த்தனையில், குமுளி ஊராட்சித் தலைவர், உறுப்பினர்கள் சர்வமத தலைவர்கள், பள்ளி மாணவர்கள், பொது மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதல் மனைவியின் குழந்தைகளை, இரண்டாவது மனைவி செரின் என்பவரோடு சேர்ந்து செரீப் என்பவர் துன்புறுத்தி வந்துள்ளார். இதில், ஐந்து வயது சிறுவன் ஷபீக் பலவாறு சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டு, தற்போது ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். சிறுவனை அடித்து உதைத்ததில் மூளையில் அடிப்படுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவனின் தந்தையும், அவரது இரண்டாவது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| தூத்துக்குடி காவல்நிலையங்களில் காவல்துறை கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு Posted: 31 Jul 2013 07:55 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களை நவீனப்படுத்தும் பணிகளை கூடுதல் டி.ஜி.பி. ஆசிஷ் பெங்கரா நேற்று ஆய்வு செய்தார். தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம், அனைத்து மகளிர் காவல்நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள நவீன கருவிகளின் பயன்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். தமிழக காவல்துறையை நவீனப்படுத்தும் பொருட்டு முதல் கட்டமாக 113 கோடி ரூபாயில் காவல்நிலையங்கள் அனைத்தும் கம்யூட்டர் மூலம் இணைக்கப்பட்டு, குற்ற ஆவணங்கள் புதிய முறையில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. |
| திருவள்ளூரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம் Posted: 31 Jul 2013 07:51 PM PDT அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு பள்ளியில் நடைபெற்றது. பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு உள்ளிட்ட இடங்களிலிருந்து 6 வயது முதல் 14 வயது வரையிலான மாற்றுத்திறன் கொண்ட சிறார்கள் இந்த முகாமில் பங்கேற்றனர். இவர்களுக்குத் தேவைப்படும் உதவி உபகரணங்கள் பற்றி அரசு மருத்துவர்கள் அளவெடுத்தனர். இந்த முகாமில் புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள் மற்றும் அரசு உதவித் தொகை பெற விரும்புபவர்கள் என மாற்றுத்திறன் கொண்ட ஏராளமானோர் பயனடைந்தனர். |
| பிரதமர் மன்மோகன் சிங் வருவதையொட்டி புதுக்கோட்டையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் Posted: 31 Jul 2013 07:45 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் போலீஸார் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளனர். திருமயத்தில் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள பி.ஹெச்.இ.எல். நிறுவனத்தை பிரதமர் மன்மோகன் சிங் நாளை திறந்து வைக்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் திருச்சி வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருமயம் செல்கிறார். பிரதமர் வருகையையொட்டி ஹெலிகாப்டர் தரையிறங்கும் சோதனை நேற்று நடைபெற்றது. இதனிடையே திருமயத்திற்கு வரும் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. |
| தனித் தெலங்கானாவிற்கு எதிராக போராட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு Posted: 31 Jul 2013 07:32 PM PDT தனித் தெலங்கானா மாநிலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கிணைந்த ஆந்திர ஆதரவாளர்கள் நடத்தி வரும் முழு அடைப்புப் போராட்டம் இன்று இரண்டாவது நாளை எட்டி உள்ளது. இது ஒருபுறம் இருக்க, ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதி அமைச்சர்களுடன் முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டி இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே தெலங்கானா மாநில அறிவிப்புக்கு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். கடைகள் அடைப்பு – பேருந்துகள் நிறுத்தம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைப் பிரித்து தெலங்கானா தனி மாநிலத்தை அமைப்பது என்ற ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முடிவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் நேற்று தொடங்கிய 72 மணி நேர முழு அடைப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. ஆந்திரா கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தின் காரணமாக சித்தூர், அனந்தபுரம், கர்னூல், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடைகள்- வர்த்தக நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. பேருந்துகளும் இயக்கப்படாததால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. தெலங்கானாவுக்கு எதிரான போராட்டம் காரணமாக, ஆந்திராவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அரசியல் ஆதாயம் பெறுவதற்காகவே தெலங்கானா மாநிலம் உருவாக்கப்படுவதாக திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதனிடையே, ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதி அமைச்சர்களுடன், இன்று மாலை, முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டி பேச்சுவார்த்தை நடத்துகிறார். முன்னதாக தனித் தெலங்கானாவிற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் தொடர்பாக பலராஜூ, சத்தியநாராயணா, ஸ்ரீநிவாச ராவ் உள்ளிட்ட அமைச்சர்கள், முதலமைச்சர்கள் கிரண் குமார் ரெட்டியை நேற்றிரவு சந்தித்து ஆலோசனை நடத்தினர். தெலங்கானா மாநிலத்தை ஏற்க வேண்டுமானால், ஆந்திராவுக்கான புதிய தலைநகர் ராயலசீமா பகுதியில் அமைய வேண்டும், கிருஷ்ணா நதியில் இருந்து உரிய நீர் பங்கீடு கிடைக்க உறுதி அளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். காணொளி:தனித் தெலங்கானாவிற்கு எதிராக போராட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |