puthiyathalaimurai.tv online |
- மகளிர் யூரோ கால்பந்து: ஜெர்மன் 6-வது முறையாக சாம்பியன்
- பட்டுக்கோட்டையில் மாணவ, மாணவிகளுக்கு செஸ்
- பழனியில் மாந்தோப்புக்குள் புகுந்த காட்டு யானைகள்: போராடி விரட்டிய வனத்துறையினர்
- ராமேஸ்வரத்தில் காவல்துறை அதிகாரியைக் கண்டித்து கடையடைப்புப் போராட்டம்
- வெடிபொருள்களை பதுக்கி வைத்திருந்தவர்களின் உறவினர்கள் போலீஸ் நடவடிக்கைக்கு எதிர்ப்பு
- கர்நாடக அணைகளில் கூடுதல் தண்ணீர் திறப்பு: ஒகேனக்கல் பகுதியில் வெள்ளப்பெருக்கு
- பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் பணிநீக்கம்…
- வேலூரில் ரயில் மோதி 3 பேர் பலி
- மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரம்: மத்திய அரசுக்கு ஜெயலலிதா எதிர்ப்பு
- சமுதாய சிற்பி: இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்….
| மகளிர் யூரோ கால்பந்து: ஜெர்மன் 6-வது முறையாக சாம்பியன் Posted: 28 Jul 2013 11:00 PM PDT மகளிர் யூரோ கால்பந்து போட்டியில் ஜெர்மன் 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஸ்வீடன் தேசிய கால்பந்து மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இறுதிச் சுற்றில் ஜெர்மன் மற்றும் நார்வே அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணியினரும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் 49-வது நிமிடத்தில் மாற்று வீராங்கனையாக களமிறங்கிய ஜெர்மன் அணியின் முன்கள வீராங்கனை அன்ஜா மிட்டாக் ஒரு கோல் அடித்தார். ஆட்டம் முடியும்வரை நார்வே வீராங்கனைகளால் இதற்கு பதிலடி கொடுக்கமுடியவில்லை. இறுதியில் ஜெர்மன் 1-0 என்ற கோல்கணக்கில் நார்வேயை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதனுடன் நார்வே 4-வது முறையாக ஜெர்மனியிடம் தோல்வியுற்றது. |
| பட்டுக்கோட்டையில் மாணவ, மாணவிகளுக்கு செஸ் Posted: 28 Jul 2013 10:57 PM PDT தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டியின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களுடன் பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோன்று செஸ் போட்டிகள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. |
| பழனியில் மாந்தோப்புக்குள் புகுந்த காட்டு யானைகள்: போராடி விரட்டிய வனத்துறையினர் Posted: 28 Jul 2013 10:54 PM PDT பழனியில் 7 காட்டு யானைகள் மாந்தோப்புக்குள் புகுந்தன. அவற்றை வனத்துறையினர் நள்ளிரவு வரை போராடி காட்டுக்குள் விரட்டினர். சனிக்கிழமை இரவு நீர்தேடி அணைப்பகுதிக்கு வந்த யானைக்கூட்டம், சம்சுதீன் என்பவரின் மாந்தோப்பில் முகாமிட்டிருந்தது. அங்கு வேலை செய்ய வந்தவர்கள் தோப்புக்குள் செல்லமுடியாமல் அச்சத்தில் இருந்தனர். இதையடுத்து அங்குவந்த 12 பேர் கொண்ட வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானைகளை விரட்ட முயற்சித்தனர். ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. அவர்களின் முயற்சி இரவு நேரத்திலும் தொடர்ந்தது. இந்நிலையில் இரவு 1 மணியளவில் யானைகள் இரு பிரிவாக காட்டுக்குள் விரட்டி அடிக்கப்பட்டன. |
| ராமேஸ்வரத்தில் காவல்துறை அதிகாரியைக் கண்டித்து கடையடைப்புப் போராட்டம் Posted: 28 Jul 2013 10:49 PM PDT ராமேஸ்வரத்தில் காவல்துறையினரைக் கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஆளும்கட்சி நீங்கலாக அனைத்து தரப்பினரும் பங்கேற்றுள்ளனர். பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. அனைத்து ஓட்டுநர் சங்கங்களும், போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதால், நகரத்தின் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. ராமேஸ்வரம் கோயிலின் நான்கு ரத வீதிகளில் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஆக்கிரப்புகளை அகற்றுவதிலும், பொய்வழக்குகள் போடுவதிலும், காவல்துறை துணை கண்காணிப்பாளர் மோகன்ராஜ் கவனம் செலுத்துவதாகவும், போலீசாரின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. |
| வெடிபொருள்களை பதுக்கி வைத்திருந்தவர்களின் உறவினர்கள் போலீஸ் நடவடிக்கைக்கு எதிர்ப்பு Posted: 28 Jul 2013 10:47 PM PDT நெல்லை அருகே வெடிபொருள்களை பதுக்கி வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், போலீசார் பொய்யான குற்றச்சாட்டை கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மேலப்பாளையத்தில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 கிலோ வெடிபொருள்கள் மற்றும் 141 ஜெலட்டின் குச்சிகளை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக தசிம், கட்டா ஷாகுல், குட்டி என்கிற நூருல் ஹமீது, சம்சு மற்றும் அன்வர் பிஸ்மி ஆகிய 5 பேர் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் வேலூரில் இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையன் கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும், சேலத்தில் பாஜக பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலையில் தொடர்புள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். |
| கர்நாடக அணைகளில் கூடுதல் தண்ணீர் திறப்பு: ஒகேனக்கல் பகுதியில் வெள்ளப்பெருக்கு Posted: 28 Jul 2013 10:43 PM PDT கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் ஒகேனக்கல் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி ஆற்றோரம் வசிக்கும் மக்களை தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் ராமர் தலைமையிலான குழுவினர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று அரசுப்பள்ளியில் தங்கவைத்துள்ளனர். மேலும் ஒகேனக்கலில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுள்ளது. வெள்ளப் பெருக்கை காணவரும் மக்களை அப்புறப்படுத்த ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. |
| பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் பணிநீக்கம்… Posted: 28 Jul 2013 10:28 PM PDT பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களை பணி நீக்கம் செய்யும் சட்டம் வரும் பிப்ரவரி மாதம் அமலுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான விதிமுறைகள் கொண்ட வரைவு மசோதாவை மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை தயாரித்து வருகிறது. பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நபரை பணி நீக்கம் செய்வது, பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வை நிறுத்தி வைப்பது, பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட விதிமுறைகள் மசோதாவில் இடம் பெற்றுள்ளன. அதே நேரத்தில் பொய்யான குற்றச்சாட்டு என தெரிய வந்தால் புகார் அளித்த பெண் மீதும் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்ககைகள் எடுக்கப்படும்.புகார் கொடுத்தவரையும் புகாருக்கு ஆளானவரையும் நேருக்கு நேர் வைத்து விசாரணை நடத்த கூடாது என்பன போன்ற பரிந்துரைகளும் மசோதாவில் உள்ளன. |
| வேலூரில் ரயில் மோதி 3 பேர் பலி Posted: 28 Jul 2013 10:17 PM PDT வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே, ரயில் மோதி 3 பேர் பலியாகினர். திருத்தணி முருகன் கோவிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள், வாலாஜா அருகே, ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. பலியான மூவரின் உடல்களும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. படுகாயமடைந்த நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதே இடத்தில் தண்டவாளத்தைக் கடந்தபோது இதற்கு முன்பும் விபத்து நிகழ்ந்துள்ளது. தொடரும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரம்: மத்திய அரசுக்கு ஜெயலலிதா எதிர்ப்பு Posted: 28 Jul 2013 09:55 PM PDT மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் நாடு முழுவதும் ஒரே நுழைத் தேர்வை நடத்த கூடாது என்று உச்ச நீதிமன்றம் அன்மையில் உத்தரவிட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என மத்திய சுகாதார அமைச்சர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளதை அவர் குறிபிட்டுள்ளார். இதனால் மீண்டும் குழப்பம் ஏற்படும் என தெரிவித்துள்ள முதலமைச்சர், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள கூடாது என வலியுறுத்தி உளளார். மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு நடத்தினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை ஏற்கெனவே எழுதிய கடிதம் மூலம் தெளிவுபடுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். |
| சமுதாய சிற்பி: இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்…. Posted: 28 Jul 2013 09:00 PM PDT பெற்ற சுவடு மறைவதற்குள் குழந்தையை தெருவில் வீசிச் செல்லும் அவலம் இன்னமும் ஆங்காங்கே நிகழ்கிறது. இதைக் கண்டு பலரும் வெறும் அதிர்ச்சி மட்டுமே அடையும் நிலையில் அக்குழந்தைகளுக்கு அடைக்கலம் அளிக்கும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வசிக்கும் மேரியம்மாள் வீட்டு வாசல் முன் கடந்த 2001 ம் ஆண்டு கைவிடப்பட்ட பெண் சிசு ஒன்று கிடந்தது. யார் கைவிட்டார்கள் என்ற விவரம்கூடத் தெரியாமல் பரிதவித்துப்போன மேரியம்மாள் அக்குழந்தையை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஒப்படைத்தார். அன்று தொடங்கிய அவரது சேவை இன்றுவரை பல சிசுக்களை மரித்துப்போகாமல் வைத்திருக்கிறது. சாலைகளில், குப்பைத் தொட்டிகளில், புதர் மறைவில் என பல இடங்களில் வீசியெறியப்பட்ட ஏராளமான பெண் சிசுக்களை மீட்டு, அரசு தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் ஒப்படைத்திருக்கிறார் மேரியம்மாள். பெற்ற குழந்தைகளையே பணத்துக்காக விற்கத்துணியும் பெற்றோரும் இருக்கும் இந்த உலகில் கைவிடப்பட்ட குழந்தைகளை கண்ணும் கருத்துமாக அரசுத் தொட்டிலுக்கு மட்டுமே ஒப்படைப்பது என்பதை உறுதியுடன் செய்துவருகிறார் இவர்.
கைவிடப்பட்ட சிசுக்களை அரசுத் தொட்டிலிடம் ஒப்படைத்து வரும் மேரியம்மாள். ஆதரவற்ற முதியோர்களைப் பராமரிக்கும் மகத்தான மற்றொரு பணியையும் செய்து வருகிறார்.
நடைமுறைச் சிக்கல்கள், சிரமங்களையும் தாண்டி குழநதைகள் உலகிற்கும், மூத்த குடிமக்களாய் மாறிய குழந்தை உள்ளம் கொண்டவர்களையும் அரவணைத்துச் செல்லும் மேரியம்மாளுக்கு விருதுகள் பல கிடைத்தாலும், அவரது சேவைக்கு கிடைக்கும் ஊக்கமும், உதவியுமே உயரிய விருதுகள் என்கிறார். மேரியம்மாள் ஒரு சமுதாயச் சிற்பி. |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

