Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


உலக கல்லீரல் அழற்சி பாதிப்பு தினம்: மும்பையில் விழிப்புணர்வு பேரணி

Posted: 26 Jul 2013 11:07 PM PDT


உலக கல்லீரல் அழற்சி பாதிப்பு தினத்தையொட்டி மும்பையில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. கடற்கரையில் உலக சாதனை முயற்சிக்காக நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். கல்லீரல் அழற்சி அல்லது வீக்கத்தால் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்படும். கல்லீரல் அழற்சியால் இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்.

வறுமைக்கோடு மதிப்பீடு தவறு: திட்டக்குழுவுக்கு கபில்சிபல் கண்டனம்

Posted: 26 Jul 2013 10:56 PM PDT


வறுமைக்கோடு குறித்த திட்டக்குழுவின் மதிப்பீட்டிற்கு மத்திய அமைச்சர் கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நிகழ்ச்சியொன்றில் பேசிய கபில் சிபல், மாதம் 5 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து எப்படி குடும்பம் ஒன்றால் வாழ முடியும் என கேள்வி எழுப்பினார். 5 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தால் வறுமைக்கோட்டிற்கு மேல் வாழ்வதாக திட்டக்குழு கூறியிருந்தால், அதன் மதிப்பீட்டு முறை தவறு என அமைச்சர் கபில் சிபல் குற்றம்சாட்டினார். 5 பேர் கொண்ட குடும்பத்திற்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் போதும் என்றும் நாட்டில் வறுமை குறைந்திருப்பதாகவும் சில நாட்களுக்கு முன் திட்டக்குழு அறிவித்தது. இதற்கு மத்திய அரசின் கூட்டணிக்கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய கபில் சிபலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

உணவு பாதுகாப்பு திட்டம்:மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை

Posted: 26 Jul 2013 10:43 PM PDT


உணவு பாதுகாப்பு திட்டம் தொடர்பாக அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர்களுடன், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று ஆலோசனை நடத்துகிறார். டெல்லியில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், உணவு பாதுகாப்பு திட்டம் குறித்து மக்கள் மத்தியில் எடுத்துரைக்குமாறு ராகுல் காந்தி வலியுறுத்துவார் என தெரிகிறது. மேலும், இத்திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அறிவுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, உணவு பாதுகாப்பு திட்டம் தொடர்பாக காங்கிரஸ் ஆளும் 13 மாநில முதலமைச்சர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். இந்த ஆண்டு இறுதியில் ஐந்து மாநிலங்களுக்கும், அடுத்த ஆண்டு மக்களவைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தல்களில் வாக்காளர்களை கவரும் வகையில் உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றி, அமல்படுத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முனைப்பு காட்டி வருகிறது.

அரியலூரில் தமிழக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆய்வு

Posted: 26 Jul 2013 10:31 PM PDT


அரியலூர் மாவட்டத்தில் தமிழக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார். அரியலூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குக்கு சென்ற அவர் அரிசி மூட்டைகள் பாதுகாப்பாக இருக்கிறதா என ஆய்வு செய்தார். மேலும் நியாயவிலைக் கடைக்கு சென்று அத்தியாவசியப் பொருள்கள் முறையாக வழங்கப்படுகிறதா என பொதுமக்களிடம் கேட்டறிந்தார். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுவிநியோகத் திட்ட ஆய்வுக் கூட்டத்தில் காமராஜ் கலந்துகொண்டார்.

அனைவரும் அர்ச்சகராகலாம் என்பதை வலியுறுத்தி 1-ம் தேதி தி.க போராட்டம்

Posted: 26 Jul 2013 10:27 PM PDT


அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை நிறைவேற்ற வலியுறுத்தி ஒன்றாம்தேதி அறவழிப் போராட்டம் நடைபெறும் என திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. காஞ்சிபுரத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இந்த போராட்டம் நடைபெறும் என்றார். இப்போராட்டத்தில் திக, திமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை பங்கேற்கும் என அவர் கூறினார்.

நாமக்கலில் போலி ரேஷன் அட்டைகள்: விலையில்லா வேட்டி, சேலைகள் பறிமுதல்

Posted: 26 Jul 2013 10:24 PM PDT


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஒரே வீட்டில் இருந்து 663 ரேஷன் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருச்செங்கோடு நகராட்சியில் மட்டும் 1539 ரேஷன் அட்டைகளுக்கு கூடுதலாக மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இருதினங்களுக்கு முன் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது. அவரது உத்தரவின்பேரில் ரேஷன் அட்டைகள் குறித்து அதிகாரிகள் நேற்று 18 குழுக்களாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, மகாலட்சுமி என்பவரின் வீட்டில் இருந்து பயன்பாட்டில் உள்ள 318 ரேஷன் அட்டைகளும், பயன்பாட்டில் இல்லாத 345 ரேஷன் அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விலையில்லா வேட்டி, சேலைகள் ரேஷன் அட்டைகளின் உள்தாள்களும் கண்டெடுக்கப்பட்டன. மகாலட்சுமிக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் இருந்து ரேஷனில் வழங்கப்படும் 100 கிலோ சர்க்கரை, 190 லிட்டர் மண்ணெண்ணெய், 5 லிட்டர் பாமாயில் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து மகாலட்சுமி மற்றும் அவரது சகோதரர் சரவணன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வட்ட வழங்கல் துறை தெரிவித்துள்ளது. காணொளி:நாமக்கலில் போலி ரேஷன் அட்டைகள்: விலையில்லா வேட்டி, சேலைகள் பறிமுதல்

பரமத்தி வேலூர் அருகே காட்டுத் தீயால் மரங்கள் நாசம்

Posted: 26 Jul 2013 10:23 PM PDT


பரமத்தி வேலூர் அருகே காட்டுத்தீயால் மரங்கள் எரிந்து சாம்பலாயின. நாமக்கல் மாவட்டம் குச்சிப்பாளையம் காவிரிக் கரையில் வறட்சி காரணமாக மரங்கள் காய்ந்த நிலையில் காணப்படுகின்றன. இந்நிலையில் நேற்று மாலை இக்காட்டில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பலாயின. இதுகுறித்து தகவல் அறிந்து கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் இருந்து வந்த தீயணைப்புப் படையினர், பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பரமத்தி வேலூர் பகுதியில் அடிக்கடி தீவிபத்து ஏற்படுவதால் இங்கு தீயணைப்பு நிலையம் ஒன்று அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காணொளி:பரமத்தி வேலூர் அருகே காட்டுத் தீயால் மரங்கள் நாசம்

வேலூர் நகைக்கடையில் கொள்ளையடித்தவர் பெங்களூரில் கைது

Posted: 26 Jul 2013 10:15 PM PDT


வேலூரில் நகைக்கடையில் 3 கிலோ தங்க நகைகளை கொள்ளைடித்தவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டார். நாகா ஜுவல்லர்ஸ் என்ற கடையில் 19-ம் தேதி இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெங்களூருவில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கக் கட்டியை விற்க முயன்றவர் குறித்து நகைக்கடை உரிமையாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து கர்நாடக போலீசார் நேற்று மாலை வேலூர் வந்தனர். அப்போது நாகா நகைக்கடையில் கொள்ளை நடந்த சம்பவத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த உருவமும், பெங்களூருவில் நகை விற்க முயன்றவரும் ஒரே நபர் எனத் தெரியவந்தது. இதையடுத்து ஆனந்த் என்ற அந்த நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

‘விக்கிலீக்ஸ்’ கட்சி தொடக்கம்:ஆஸ்திரேலிய தேர்தலில் அசாஞ்சே போட்டி

Posted: 26 Jul 2013 09:46 PM PDT


விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கே ‘விக்கிலீக்ஸ்’ என்ற பெயரிலேயே அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய செனட் சபை தேர்தலில் அவர் போட்டியிட உள்ளார். மேலும் விக்கிலீக்ஸ் கட்சி சார்பாக 7 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மனித உரிமைகளை பாதுகாப்பது, அரசின் செயல்பாடுகளை வெளிப்படையாக்குவது உள்ளிட்டவை விக்கிலீக்ஸ் கட்சியின் முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார். காணொளி:விக்கிலீக்ஸ்’ கட்சி தொடக்கம்:ஆஸ்திரேலிய தேர்தலில் அசாஞ்சே போட்டி

ஆகஸ்ட் 12ல் மேட்டூர் அணை திறப்பு: முதல்வர் அறிவிப்பு

Posted: 26 Jul 2013 09:45 PM PDT


காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொள்வதற்காக மேட்டூர் அணையிலிருந்து அடுத்த மாதம் 12ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிடப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், கர்நாடக அணைகளிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்படுவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 52.19 டி.எம்.சி அடியாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேட்டூர் அணையின் நீர் இருப்பு 60 முதல் 65 டி.எம்.சி. அடியாக இருக்கும்போது பாசனத்திற்காக நீர் திறந்து விடப்படுவது வழக்கம் என்றும், கர்நாடகத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளதையும், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதையும் பார்க்கும்போது, மேட்டூர் அணையின் நீர் மட்டம் வெகு விரைவில் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொள்வதற்காக மேட்டூர் அணையிலிருந்து அடுத்த மாதம் 12ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். காணொளி:ஆகஸ்ட் 12ல்  மேட்டூர் அணை திறப்பு: முதல்வர் அறிவிப்பு 


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™