puthiyathalaimurai.tv online |
- இந்திய-சீன எல்லைப் பிரச்னையைத் தவிர்க்க புதிய திட்டம்:அந்தோணி
- கார் உற்பத்தி வரி SEDAN கார்களுக்கு பொருந்தாது
- வரத்து அதிகரிப்பால் குறைந்துள்ள சர்க்கரை விலை
- திடீரென சரிந்த பருத்தி விலை
- கோழித் தீவனம் விலை குறையும்
- சர்வதேச சந்தையில் குறைந்துள்ள பாமாயில் விலை
- நகை ஏற்றுமதி அதிகரிக்கலாம்: ஆய்வு தகவல்
- மஞ்சள் விலை இரண்டு நாட்களாக சரிவு
- மலேசியாவின் புகழ்பெற்ற பத்துமலைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சி
- மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு: டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுமா?
| இந்திய-சீன எல்லைப் பிரச்னையைத் தவிர்க்க புதிய திட்டம்:அந்தோணி Posted: 25 Jul 2013 11:25 PM PDT இந்திய – சீன எல்லைப் பகுதியில் இரு நாட்டுப் படைகள் அத்துமீறி ஊடுருவதைத் தடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி தெரிவித்தார். டெல்லியில் இன்று நடைபெற்ற கார்கில் போரின் 14வது நினைவு தின அஞ்சலியில் பங்கேற்ற அந்தோனி, உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய – சீன எல்லைப் பகுதியில் ஊடுருவலைத் தடுப்பதற்கான புதிய நடைமுறையை உருவாக்க சீனாவுடன் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக கூறினார். தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு சீனத் தலைநகர் பீஜிங்கில், விரைவில் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அந்தோனி தெரிவித்தார். காஷ்மீரின் லடாக் பகுதிக்கு அருகே உள்ள தவுலத் பேக் ஓல்டி பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த சம்பவம், எல்லைப்புறப் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பியது. |
| கார் உற்பத்தி வரி SEDAN கார்களுக்கு பொருந்தாது Posted: 25 Jul 2013 11:03 PM PDT கடந்த மத்திய பட்ஜெட்டில் கார் உற்பத்தி மீது விதிக்கப்பட்ட 30 சதவீத வரி செடன்(SEDAN) எனப்படும் சிறிய மாடல் கார்களுக்கு பொருந்தாது என மத்திய வருவாய்த்துறை விளக்கம் அளித்துள்ளது. எஸ்யுவி எனப்படும், திறனில் பெரிய கார்களுக்கு 30 சதவீத உற்பத்தி வரி பொருந்தும் என்ற நிலையில் சிறிய கார்களின் உற்பத்தி வரி 27 சதவீதமாக இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதனால் சிறிய ரக கார் உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதுடன் அவற்றின் விலை சற்றே குறையலாம் என்பது கார் வாங்க விரும்பும நடுத்தர பிரிவினருக்கு ஆறுதலான செய்தியாகும். |
| வரத்து அதிகரிப்பால் குறைந்துள்ள சர்க்கரை விலை Posted: 25 Jul 2013 10:59 PM PDT பண்டிகைக் காலம் இன்னும் தொடங்காததால் சர்க்கரையின் தேவை உயராத நிலையில் ஆலைகளில் இருந்து வரத்து அதிகரித்திருப்பதால் சர்க்கரை விலை சிறிது குறைந்துள்ளது. சர்க்கரை விநியோகத்தில் மகாராஷ்டிரா முக்கிய இடம் வகிக்கிறது. அங்கு டன்னுக்கு 20 ரூபாய் வரை விலை சரிந்துள்ளதாகத் தெரிகிறது. நேற்று முன்தினம் 35 ஆயிரம் மூட்டை சர்க்கரை சந்தைக்கு வந்த நிலையில் 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை 2 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனையானது. இது முன்பு 2 ஆயிரத்து 940 ரூபாய் வரை விற்றது. என்றாலும், மொத்த விலையில் இச் சிறிய விலைச் சரிவால் சில்லறை விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு குறைவு எனினும் சர்க்கரை விலை உயராது என்பது ஆறுதலான விஷயம். |
| Posted: 25 Jul 2013 10:53 PM PDT ஈரோடு ஜவுளிச் சந்தையில் பருத்தி விலை திடீரென சரிந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அதிக விலையில் நீடித்துவந்த பருத்தி ஒரு குவிண்டாலுக்கு 500 ரூபாய் வரை குறைந்துள்ளதாக சந்தைக்குழு தெரிவித்துள்ளது. திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஜவுளி ஆலைகள் அதிகம் என்பதால் பருத்தி தேவையும் அதிகம். தற்போது விலை சரிந்துள்ளதால் பருத்தி ஆடை தயாரிப்பு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தின் தட்பவெப்ப நிலைக்கு பருத்தி ஆடைகளே சிறந்தது என்பது கவனிக்கத்தக்கது. |
| Posted: 25 Jul 2013 10:50 PM PDT கால்நடைத் தீவனங்களுக்கான மூலப் பொருள் விலை சரிவால் கோழிகளுக்கான தீவன விலை அடுத்த சில நாட்களில் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோயா, புண்ணாக்கு உள்பட சில பொருட்களின் விலை குறைந்துள்ளதால் தீவன விலை டன்னுக்கு 600 ரூபாய் வரை குறையும் என கால்நடைத் தீவன உற்பத்தி நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது. இது கால்நடை வளர்ப்பவர்கள், கோழிப் பண்ணையாளர்களை நிச்சயம் மகிழச் செய்யும் எனத் தெரிகிறது. |
| சர்வதேச சந்தையில் குறைந்துள்ள பாமாயில் விலை Posted: 25 Jul 2013 10:47 PM PDT குறைந்த வருவாய்ப் பிரிவினர் பயன்படுத்தும் உணவு எண்ணெயான பாமாயில் விலை, சர்வதேச சந்தையில் குறைந்துள்ளது. இந்த எண்ணெய் உற்பத்தி அதிகம் நடைபெறும் மலேசியாவில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது விலை குறைந்துள்ளது. மேலும் சர்வதேச அளவில் இதன் உற்பத்தி இந்த ஆண்டு 21 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் என சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் விலை குறைந்து அடித்தட்டு மக்களுக்கு நிம்மதி அளிக்கும் என நம்பலாம். |
| நகை ஏற்றுமதி அதிகரிக்கலாம்: ஆய்வு தகவல் Posted: 25 Jul 2013 10:43 PM PDT தங்கம் இறக்குமதி மீது ரிசர்வ் வங்கி புதிதாக விதித்திருக்கும் கட்டுப்பாடுகளால் நகை ஏற்றுமதி அதிகரிக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது. நகைத் தொழிலுக்காக மட்டுமே தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்த ரிசர்வ் வங்கி, இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 10 சதவீதத்தை கட்டாயமாக நகையாக்கி ஏற்றுமதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் 20 சதவீத தங்கத்தை அரசு கிடங்குகளில் இருப்பு வைத்து சான்று பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதுபோன்ற நிபந்தனைகளால் நகை ஏற்றுமதி இந்த நிதியாண்டில் 120 டன்னை எட்டும் என நகை ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு இது 70 சதவீதமாக இருந்தது. தற்போது 71 சதவீதமாக அதிகரித்துள்ளது. |
| மஞ்சள் விலை இரண்டு நாட்களாக சரிவு Posted: 25 Jul 2013 10:39 PM PDT மொத்த விலை சந்தையில் விரலி மஞ்சள் விலை கடந்த இரண்டு நாட்களாக சரிவு கண்டுள்ளது. மஞ்சள் ரகத்துக்கு ஏற்ப ஒரு குவிண்டாலுக்கு 100 முதல் 200 ரூபாய் வரை விலை சரிந்துள்ளதால் சில்லறை விலையில் சமையலுக்கான மஞ்சள் விலை சிறிதளவு குறைய வாய்ப்பு உள்ளது. அதேசமயம், மஞ்சள் விவசாயிகளுக்கு இப்போது கிடைக்கும் விலை கட்டுப்படியாகாத நிலை உள்ளதால் ஈரோடு சந்தைக்கு மஞ்சளைக் கொண்டுவராமல் விலை உயர்வதற்காக காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. விவசாயிகளின் உழைப்புக்கு ஏற்ற விலை கிடைப்பதுடன் நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய விலையும் மஞ்சளுக்கு கிடைத்தால் நன்று. |
| மலேசியாவின் புகழ்பெற்ற பத்துமலைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சி Posted: 25 Jul 2013 10:37 PM PDT மலேசியாவில் மிகவும் புகழ்பெற்ற பத்துமலை, இந்துக்களின் வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாமல், மலேசியாவுக்கே உரிய அடையாளமாகவும், முன்னணி சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. 1860ஆம் ஆண்டுகளில் வெள்ளையர்கள் தற்செயலாக இக்குகையைக் கண்டுபிடித்ததாகச் சொல்லப்பட்டாலும், அதற்கு முன்னதாகவே இந்தியர்களும், வேட்டையாடச் செல்லும் பூர்வ குடியினரும் இக்குகையைப் பற்றி அறிந்து வைத்திருந்ததாகவும் சில வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. சில ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய ஒப்பந்த தொழிலாளர்களின் தலைவராக இருந்த காயாரோகணம் பிள்ளையின் கனவில் அம்பாள் தோன்றியதாகவும் அதன் பின்னர் அவர் தம் புதல்வர் தம்புசாமி பிள்ளையிடம் கூற அவர்தம் சகாக்களுடன் குகையில் முருகன் ஆலயம் காணும் பணியில் இறங்கியதாகவும் வரலாறு கூறுகிறது. இன்று பல பரிணாம வளர்ச்சியைக் கடந்து வீற்றிருக்கும் பத்துமலைத் திருத்தலம், இன்னமும் அதன் மகத்துவத்தையும் தனித்துவத்தையும் இழந்துவிடவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பத்துமலைக்கு வருகை புரியும் பக்தர்களின் எண்ணிக்கை பல லட்சங்களையும் தாண்டி போய் கொண்டிருக்கிறது. பத்துமலையை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய அறிவிக்க வேண்டும் என்பதே மலேசிய இந்தியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்கான முயற்சிகளுக்கு அரசாங்கம் தனது முழு ஆதரவையும் வழங்கும் என்றும் மலேசியப் பிரதமர் அறிவித்திருந்தார். சுற்று வட்டார மேம்பாட்டுத் திட்டங்கள் குகைக் கோவிலை பாதிக்கக்கூடாது, என்பதே பத்து மலையைப் புராதன சின்னமாகப் பரிந்துரைப்பதின் நோக்கமாகும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில்தான், கடந்தவாரம் மலேசிய பாரம்பரிய இலாகா, உலக புராதன சின்னமாக அறிவிப்பதற்கான சில நிபந்தனைகளைப் பத்துமலைத் திருத்தலம் பூர்த்தி செய்யவில்லை என்பதால், அதனை புராதன சின்னமாகப் பரிந்துரைக்க முடியாது என அறிவித்தது. இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேல், பத்துமலை திருத்தலத்தின் சுற்றுச்சூழல், மற்றும் அதன் 400 ஆண்டு கால பழமை வாய்ந்த ஊசிப் பாறைகளின் தொன்மையைக் கருத்தில் கொண்டு அதனை உலகப் புராதன சின்னமாக அறிவிக்க பரிந்துரை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். பத்துமலை திருத்தலத்திற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்குமானால், அது, மலேசிய இந்தியர்கள் மட்டுமல்லாது, பத்துமலையின் வளர்ச்சிக்குத் தொடர் ஊக்குவிப்பு வழங்கி வரும் அரசாங்கத்திற்கும் உயரிய அங்கீகாரமாகவும் விளங்கும் எனில் மிகையில்லை. |
| மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு: டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுமா? Posted: 25 Jul 2013 10:14 PM PDT கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 85 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால், மேட்டூர் அணை இன்னும் ஓரிரு நாட்களில் 90 அடியை தாண்ட வாய்ப்புள்ளது. இதைத்தொடர்ந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கர்நாடகாவில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. கபினி அணைக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதே அளவு நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதேபோல், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்தும், வினாடிக்கு 45 ஆயிரத்து 598 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. மொத்தம் 124 புள்ளி 8 அடி உயரம் கொண்ட, கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர் மட்டம், தற்போது 124 புள்ளி 22 அடியாக உள்ளது. காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படும்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |