puthiyathalaimurai.tv online |
- சென்னை தண்டையார் பேட்டையில் நிலத்தடி நீரில் பெட்ரோல் கலந்திருப்பதாக புகார்
- தருமபுரி இளவரசன் உடலுக்கு இன்று மாலை இறுதிச் சடங்கு
- ஆஷஸ் முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா தடுமாற்றம்
- துருக்கியில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல்
- இன்றுடன் விடைபெறுகிறது ‘தந்தி சேவை’
- பூடானில் எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றி
- ஹிமாச்சலப் பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்
- போபர்ஸ் ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட குவாத்ரோச்சி மரணம்
- கூடங்குளத்தில் மின் உற்பத்தி: போராட்டத்துக்குத் தயாராகும் எதிர்ப்பாளர்கள்
- என்.எல்.சி விவகாரம்: முழு அடைப்புக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு
| சென்னை தண்டையார் பேட்டையில் நிலத்தடி நீரில் பெட்ரோல் கலந்திருப்பதாக புகார் Posted: 13 Jul 2013 10:10 PM PDT சென்னை தண்டையார் பேட்டை பகுதியில் புதைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாய்களில் ஏற்பட்டுள்ள கசிவு காரணமாக நிலத்தடி நீரில் பெட்ரோல், டீசல் போன்றவை கலந்துள்ளது என்று இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றார்கள். இதனால் கடந்த 6மாதமாக குடிப்பதற்கும், குளிப்பதற்கும் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை என்றும் இப்பகுதி நிலத்தடி நீரை பயன்படுத்துவதால் உடல் நலக் குறைவும் ஏற்ப்படுகிறது என்றும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள். தண்டையார் பேட்டை பகுதி நிலத்தடி நீரில் நனைத்த துணிகளை பற்றவைக்கும் போது அவை பற்றி எரிவதால் மக்கள் மேலும் பீதி அடைந்துள்ளனர். நிலத்தடி நீரில் பெட்ரோல் கலப்பதை தவிர்பதற்கும், சுத்தமான தண்ணீர் வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றார்கள். |
| தருமபுரி இளவரசன் உடலுக்கு இன்று மாலை இறுதிச் சடங்கு Posted: 13 Jul 2013 09:06 PM PDT தருமபுரி இளவரசனின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படும் என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். தற்போது இளவரசனின் உடல் நத்தம் காலனியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சி தலைவர்கள், மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மறு உடற்கூறி பரிசோதனைக்கு பிறகு நேற்று இளவரசனின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இளவரசின் மறு உடற்கூறி பரிசோதனையின் அறிக்கை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. |
| ஆஷஸ் முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா தடுமாற்றம் Posted: 13 Jul 2013 08:18 PM PDT ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது இன்னிங்சிலும் விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறுகிறது. நாட்டிங்காமில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற 311 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து. இதையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வாட்சன் மற்றும் ரோஜர்ஸ் சிறப்பாக விளையாடினர். வாட்சன் 46 ரன், ரோஜர்ஸ் 52 ரன்னில் ஆட்டமிழந்ததும் விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. 4-வது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்துள்ளது. கடைசி நாளான இன்று வெற்றிக்கு 137 ரன் தேவை உள்ள நிலையில் ஆஸ்திரேலியா கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளது. முன்னதாக 2வது இன்னிங்சில் அயன் பெல்லின் 109 ரன் உதவியுடன் இங்கிலாந்து 375 ரன் எடுத்தது. |
| துருக்கியில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் Posted: 13 Jul 2013 07:38 PM PDT துருக்கியின் இஸ்தான்புல் நகரில் போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கானோரை கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் காவல்துறையினர் கலைத்தனர். இஸ்தான்புல் கெஸி பூங்காவை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. கடந்த மாதம் தொடங்கிய அரசுக்கு எதிரான போராட்டங்கள், மாத இறுதியில் சற்று ஓய்ந்திருந்தன. இந்த நிலையில் தற்போது போராட்டங்கள் மீண்டும் தொடங்கியிருக்கின்றன. |
| இன்றுடன் விடைபெறுகிறது ‘தந்தி சேவை’ Posted: 13 Jul 2013 07:30 PM PDT 160 ஆண்டுகள் புழக்கத்தில் இருந்த தந்தி சேவை இன்றுடன் விடை பெறுகிறது. கடைசி நாளான இன்று தந்தி கொடுக்க வருபவர்களை வீடியோவில் படம்பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இண்டர் நெட்டும் , செல்போன்களும் இல்லாத காலத்தில் கொடி கட்டி பறந்த தந்தி சேவை தற்போது படிப்படியாக குறைந்து விட்டது. நஷ்டத்தில் இயங்கும் இந்த தந்தி சேவை இன்றுடன் நிறைவடைகிறது. கடைசி நாளான இன்று தந்தி கொடுக்க வருபவர்களை வீடியோ மூல்ம் படம் எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தந்தி சேவை நிறுத்தப்பட உள்ளதால் இந்த துறையில் பணியாற்றியவர்கள் தொலை தொடர்பு நிர்வாகத்தின் பல்வேறு பிரிவுகளில் மறு பணி நியமனம் செய்யப்பட இருப்பதாக தொலைத்தொடர்பு துறையின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
| பூடானில் எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றி Posted: 13 Jul 2013 07:28 PM PDT பூடானில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. பூடான் தேர்தலில், மொத்தமுள்ள 3 லட்சத்து 81 ஆயிரம் வாக்காளர்களில், 80 சதவிகிதம் பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கம் முதலே எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி முன்னணி வகித்தது. மொத்தமுள்ள 47 இடங்ளுக்கும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி 32 இடங்களில் வென்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. ஆளும் கட்சி 15 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்தக் கட்சி 45 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. |
| ஹிமாச்சலப் பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம் Posted: 13 Jul 2013 07:04 PM PDT ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. கங்ரா மாவட்டத்தை மையம் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.5 அலகுகளாகப் பதிவானது. 4 முதல் 5 வினாடிகள் வரை இந்த நிலநடுக்கம் நீடித்ததாகவும், தர்மசாலா, பலம்பூர், ஜுவாலாமுகி போன்ற நகரங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியிடப்பட்டவில்லை. |
| போபர்ஸ் ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட குவாத்ரோச்சி மரணம் Posted: 13 Jul 2013 06:58 PM PDT போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட இத்தாலியைச் சேர்ந்த தொழிலதிபரான குவாத்ரோச்சி மரணமடைந்தார். இத்தலியின் மிலன் நகரில் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது. ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது, ஸ்வீடன் நாட்டில் இருந்து வாங்கப்பட்ட போபர்ஸ் பீரங்கி பேரத்தில் 64 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. பீரங்கி பேரத்தில், இத்தாலி தொழிலதிபரான குவாத்ரோச்சி தரகராக செயல்பட்டதாக புகார் எழுந்தது. அவர் மூலம் லஞ்சப் பணம் கைமாறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. 1993 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறிய குவாத்ரோச்சியை இந்தியாவுக்கு கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. ஆனால், போதிய ஆதாரம் இல்லை என்று குவாத்ரோச்சி மீதான வழக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டது. |
| கூடங்குளத்தில் மின் உற்பத்தி: போராட்டத்துக்குத் தயாராகும் எதிர்ப்பாளர்கள் Posted: 13 Jul 2013 06:52 PM PDT பலத்த எதிர்ப்பைச் சந்தித்து வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நேற்று நள்ளிரவில் இருந்து மின்னுற்பத்தி தொடங்கி உள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட அணுமின் நிலையம், நெல்லை மாவட்டம் கூடங்குளம் கடலோர கிராமத்தில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. 1988-ம் ஆண்டு முதலே இதற்கெதிரான போராட்டங்களும் தொடங்கிவிட்டன. என்றாலும், இன்றைய அளவுக்கு ஊடகங்களின் வளர்ச்சி இல்லாத காரணத்தால், கூடங்குளம், இடிந்தகரை பகுதி மக்களின் போராட்டம் பெரியளவில் அறியப்படவில்லை. கடந்த2011 மார்ச் 9-ஆம் தேதி, ஜப்பானில் ஃபுகுஷிமா அணுஉலை, சுனாமியால் பாதிக்கப்பட்டு அங்கு கதிர்வீச்சு பரவியது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதை அடுத்து, கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டமும் தீவிரமடைந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் மின்னுற்பத்தி தொடங்கி உள்ளது. அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து அணு உலை எதிர்ப்பாளர்கள் தயாராகி வருகிறார்கள். |
| என்.எல்.சி விவகாரம்: முழு அடைப்புக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு Posted: 13 Jul 2013 06:27 PM PDT கடலூரில் நெய்வேலி அனல் மின் நிலைய தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வரும் 18ம் தேதி முழு அடைப்பிற்கு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நெய்வேலி அனல் மின் நிலையத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனல் மின் நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முதல் தங்கள் போராட்டத்தை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டமாக தொழிலாளர்கள் மாற்றியுள்ளனர். 177 ஊழியர்கள் தொடர்ந்து இன்றும் தங்கள் உண்ணாநிலையை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடலூரில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த முழு அடைப்புக்கு அனைத்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் நாளை ஆதரவு திரட்டப்போவதாகவும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனிடையே நெய்வேலி அனல் மின் நிலையத்தின் 5 சதவீத பங்குகளை தமிழக அரசு வாங்குவது தொடர்பாக வரும் 15ஆம் தேதி மும்பையில் செபி அதிகாரிகளுடன் தமிழக அரசு அதிகாரிகள் பேச்சு நடத்துவர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |