puthiyathalaimurai.tv online |
- கோவில்பட்டியில் தனியார் பள்ளி மேலாளர் கொலை
- விருதுநகர் அருகே குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
- விழுப்புரத்தில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் குழப்பம் ?
- தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்திற்கு சொந்தமான டாக் தொழிற்சாலையை அரசு ஏற்க கோரிக்கை
- கன்னியாகுமரியில் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
- விருதுநகரில் பட்டாசு ஆலை தொடங்கத் தடை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
- அமெரிக்காவில் 6 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
- ஃப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: போராடி வென்றார் ரஃபேல் நடால்
- தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா நேவால் தோல்வி
- தேசிய தடகளப் போட்டி: முதலிடத்தை தக்க வைத்த கேரள அணி
| கோவில்பட்டியில் தனியார் பள்ளி மேலாளர் கொலை Posted: 07 Jun 2013 11:13 PM PDT கோவில்பட்டியில் தனியார் பள்ளி மேலாளர் கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காமராஜர் சிலை அருகே நடைபயிற்சி சென்ற தனியார் பள்ளி மேலாளர் முருகேசன் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார். சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்த முருகேசனை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கைக் கோரி அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| விருதுநகர் அருகே குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியல் Posted: 07 Jun 2013 11:05 PM PDT விருதுநகர் மாவட்டம் சாத்துர் அருகே உள்ள சிலோன் காலனி மக்கள் சீரான குடிநீர் விநியோகம் கோரி இருக்கன்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் காவல்நிலையத்தையும் அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். சில தினங்களில் குடிநீர் விநியோகம் சீர் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டனர். |
| விழுப்புரத்தில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் குழப்பம் ? Posted: 07 Jun 2013 10:56 PM PDT விழுப்புரத்தில் ஆதி திராவிடர் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் குழப்பம் ஏற்பட்டது. ஆதி திராவிடர் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் 5 மணி நேரம் தாமதமாக தொடங்கிய கலந்தாய்வு கணினி பழுது காரணமாக சிறிது நேரத்திலேயே தடைபட்டது. விண்ணப்பித்த அனைவரையும் அழைக்காமல் குறைந்த நபர்களைக் கொண்டு கலந்தாய்வு நடத்தப்பட்டதாக ஆசிரியர்கள் புகார் கூறியுள்ளனர். |
| தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்திற்கு சொந்தமான டாக் தொழிற்சாலையை அரசு ஏற்க கோரிக்கை Posted: 07 Jun 2013 10:48 PM PDT தூத்துக்குடியில் ஸ்பிக் நிறுவனத்திற்கு சொந்தமான டாக் தொழிற்சாலையை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆலையின், தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று டாக் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், டாக் நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர், மின்சாரம், பேருந்து வசதி, ஆகிவற்றை நிறுத்தியதைக் கண்டித்து தொழிலாளர்கள் ஆலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| கன்னியாகுமரியில் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் Posted: 07 Jun 2013 10:42 PM PDT கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அடுத்துள்ள திருத்துவபுரம் அருகே அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு சேர்க்கையில் முறைகேடு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே பள்ளியில் 10ம் வகுப்பு படித்த மாணவர்களை பதினோராம் வகுப்பில் சேர்க்க மறுக்கும் பள்ளி நிர்வாகத்தின் இந்த செயல்பாட்டைக் கண்டித்து பெற்றோர்கள் மாணவர்களுடன் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வேறு பள்ளிகளில் பயின்று அதிக தொகை கொடுக்கும் மாணவர்களுக்கு இடம் கொடுக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டதற்கு, முறையாக பதிலளிக்கவில்லை. |
| விருதுநகரில் பட்டாசு ஆலை தொடங்கத் தடை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு Posted: 07 Jun 2013 10:12 PM PDT விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர் ஆகிய வருவாய் வட்டங்களில் பட்டாசு தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு தடையில்லாச் சான்று இனி வழங்கப்பட மாட்டாது என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த மூன்று வருவாய் வட்டங்கள் தவிர்த்து ஏனைய அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆகிய வருவாய் வட்டங்களில் தடையில்லாச் சான்று வழங்குவதற்கு தடை ஏதும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு ஆலைகளில் அடிக்கடி ஏற்படும் விபத்தைக் கருத்தில் கொண்டு பொது நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரால் பட்டாசு தயாரிப்பதற்கு உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. |
| அமெரிக்காவில் 6 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை Posted: 07 Jun 2013 09:56 PM PDT அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், 6 பேரை சுட்டுக் கொன்ற நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். சாண்டா மோனிகா பகுதியில் வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுமட்டுமல்லாமல் கல்லூரி நூலகம் ஒன்றில், ஒரு இளைஞர் துப்பாக்கியுடன் அனைவரையும் தாக்கி வருவதாகவும் காவல்துறையினருக்கு தகவல் வந்தது. அங்கு சென்ற காவல்துறையினருக்கும், துப்பாக்கி வைத்திருந்த நபருக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில், அந்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னதாக தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் 2 பேரும், அதற்கு வெளியில் 4 பேரும் துப்பாக்கி குண்டுகள் பட்டு இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் குறித்த விவரங்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டிற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். காணொளி:http://puthiyathalaimurai.tv/video-gallery?video=4888 |
| ஃப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: போராடி வென்றார் ரஃபேல் நடால் Posted: 07 Jun 2013 08:46 PM PDT ஃப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் விளையாட எட்டாவது முறையாக தகுதி பெற்றுள்ளார் ஸ்பெயினின் ரஃபேல் நடால். நான்கரை மணி நேரம் நீடித்த அரையிறுதி ஆட்டத்தில், ஜோகோவிச்சை வீழ்த்தினார் அவர். மற்றொரு ஸ்பெயின் வீரர் டேவிட் ஃபெரரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஃப்ரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வரும் ஃப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் , முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ரஃபேல் நடாலை எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின், முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் நடால் கைப்பற்றினார். 6-3 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை தனதாக்கினார் ஜோகோவிச். மூன்றாவது செட்டை 6-1 என்ற கணக்கில் நடாலும், நான்காவது செட்டை 7-6 என்ற கணக்கில் ஜோகோவிச்சும் கைப்பற்றினர். இதனால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது யார் என்பதைத் தீர்மானிக்கும் ஐந்தாவது செட் ஆட்டம் , கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. டை பிரேக்கர் வரை நீடித்த அந்த செட்டில் 9-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று, எட்டாவது முறையாக ஃப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினார் ரஃபேல் நடால். ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஃப்ரான்சின் சோங்காவும், ஸ்பெயினின் டேவிட் ஃபெரரும் விளையாடினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஃபெரர், 6-1, 7-6 , 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். |
| தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா நேவால் தோல்வி Posted: 07 Jun 2013 08:38 PM PDT தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வி அடைந்தார். ஆடவர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில், நடப்புச் சாம்பியனான சாய்னா நேவால் , சிங்கப்பூரின் ஜுவான் கூவை எதிர்கொண்டார். முதல் செட்டை 21 – 13 என்ற கணக்கில் சாய்னா கைப்பற்றினார். பின்னர் சுதாரித்து விளையாடிய ஜுவான் கூ, 21 – 12, 21 – 18 என்ற கணக்கில் அடுத்த இரண்டு செட்களைக் கைப்பற்றி, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், இந்தியாவின் ஸ்ரீகாந்த் , தென் கொரியாவின் வான் ஹோ சன்னை எதிர்கொண்டார். அதில் 21 – 17, 21 – 18 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று, ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு தகுதி பெற்றார். காணொளி:http://puthiyathalaimurai.tv/video-gallery?video=4886 |
| தேசிய தடகளப் போட்டி: முதலிடத்தை தக்க வைத்த கேரள அணி Posted: 07 Jun 2013 08:25 PM PDT சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான சீனியர் தடகளப் போட்டியில், கேரள அணி முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. தமிழக வீரர்கள் முதலிடம் பிடிக்கப் போராடி, 2ம் இடத்தையே அடைய முடிந்தது. 53வது தேசிய சீனியர் தடகளப் போட்டிகள் கடந்த நான்கு நாட்களாக சென்னை நேரு விளையாட்டரங்கில் களைகட்டி வந்தது. கடைசி நாளான நேற்று 13 பிரிவுகளில் பதக்கம் வெல்வதற்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயம் மகளிர் பிரிவில் தமிழக வீராங்கனை இளவரசி, பந்தய தூரத்தை ஒரு நிமிடம் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். கேரள வீராங்கனை அனு வெள்ளிப் பதக்கத்தையும், தமிழக வீராங்கனை பாப்பாத்தி வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர். இதே போல் மும்முறை தாண்டும் போட்டியில் தமிழக வீரர் ரெஞ்சித் மஹேஸ்வரி 16.98 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றதுடன் புதிய சாதனையும் படைத்தார். மாநிலங்களுக்கு இடையிலான போட்டியில் இவரது முந்தைய சாதனை 16.73 மீட்டர் என்பது குறிப்பிடதக்கது. இந்தப் போட்டியில் இளம் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த சலாஹூதின் வெண்கலப் பதக்கம் வென்றார். ஒட்டுமொத்தமாக கேரள அணி 172 புள்ளிகள் பெற்று முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. தமிழக அணி 147 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்தது. இருப்பினும் தமிழக அணியில் இடம் பெற்றிருந்த இளம் வீரர்களுக்கு இந்தப் போட்டி மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்தப் போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடத்தைப் பிடித்தவர்கள், அடுத்த மாதம் 3ம் தேதி புனேவில் நடைபெற உள்ள ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்க உள்ளனர். காணொளி:http://puthiyathalaimurai.tv/video-gallery?video=4880 |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

