Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


விம்பிள்டன் டென்னிஸ்: 2-வது சுற்றுக்கு ஜோகோவிச், செரினா முன்னேற்றம்

Posted: 25 Jun 2013 11:25 PM PDT


விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் மற்றும் நடப்பு சாம்பியன் செரினா வில்லியம்ஸ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதலிடம் வகிக்கும் நோவாக் ஜோகோவிச் முதல் சுற்றில் ஜெர்மனியின் ப்ளோரியன் மாயரை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், முதல் செட்டை 6-3 க்கு என்று கைப்பற்றிய ஜோகோவிச், இரண்டாவது செட்டையும் 7-5 என்று கைப்பற்றினார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் மூன்றாவது செட்டையும் 6-4 என வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். பெண்கள் பிரிவினருக்கான முதல் சுற்று ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான செரினா வில்லியம்ஸ், தரவரிசையில் 97-ஆவது இடத்தில் உள்ள லக்ஸ்சம்பர்க்கின் மான்டி மினேலாவுடன் மோதினார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செரினா 6-1, 6-3 என்ற நேர்செட்களில் எளிதில் வெற்றி பெற்றார்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு

Posted: 25 Jun 2013 10:33 PM PDT


தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.2481க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு சவரன் ரூ.19,848க்கு விற்கப்படுகிறது.24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.49 குறைந்து ரூ.2653க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.42.90க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ வெ்ளி ரூ.40,090க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் தமிழக வீரர் பலி

Posted: 25 Jun 2013 10:25 PM PDT


உத்தரகாண்டில், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில்,தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் என்ற வீரர் பலியானது தெரியவந்துள்ளது. இதற்கிடையில், உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய விமானப்படைக்கு சொந்தமான அந்த ஹெலிகாப்டர், கேதார்நாத்தில் இருந்து கோச்சார் விமான தளத்திற்கு திரும்பும் வழியில், கோரிகுண்ட் பகுதியில் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் விபத்து மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் விஜய் பகுகுணா, உயிர் இழந்த வீரர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என குறிப்பிட்டார். இதேபோல், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோதியும், விபத்தில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டு உயிர் நீத்த வீரர்களுக்கு தலை வணங்குவதாகவும் மோதி குறிப்பிட்டிருந்தார். இதனிடையே, ஹெலிகாப்டர் மூலமாக மீட்கும் பணி தொடரும் எனத் தெரிவித்துள்ள இந்திய விமானப் படை, இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இன்னும் 8 ஆயிரம் பேர் பாதுகாப்பற்ற பகுதிகளில் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் ஹர்சில் மற்றும் பத்ரிநாத் பகுதிகளில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தரகண்ட் வெள்ளப் பெருக்கில் இதுவரை 822 பேர் உயிர் இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விழுப்புரத்தில் குடிநீர் கேட்டு அரசு பேருந்து சிறைபிடிப்பு

Posted: 25 Jun 2013 10:17 PM PDT


விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆர்.நயம்பாடியில், கடந்த 10 நாட்களாக குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து, அரசுப் பேருந்தை, கிராம மக்கள் சிறைப்பிடித்தனர். ஏராளமான பெண்கள் காலிக் குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவறிந்த கிராம அலுவலர் உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. குடிநீர் வினியோகிக்கப்படாதது பெரும் பிரச்னை என்று தெரிவித்த மக்கள், குடிநீர் வினியோகிக்கப்படும் போது, ஒரு சிலர் மின் மோட்டாரைப் பயன்படுத்தி அதிகளவு தண்ணீரை பிடிப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

மூணாறில் தொடர்ந்து கனமழை: இடுக்கி ஆட்சியர் அவசர ஆலோசனை

Posted: 25 Jun 2013 10:05 PM PDT


தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மூணாறில் ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை நீடிக்கிறது. இதனால் மேலும் சில இடங்களில் நேற்று நிலச்சரிவுகள் ஏற்பட்டன. தொடர்மழையின் காரணமாக இடுக்கி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், மூணாறு பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெறவிருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இடுக்கி மாவட்ட ஆட்சியர் முக்கிய முடிவுகளை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், மக்கள் அநாவசியமாக சாலையாரங்களுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிலச்சரிவிற்குக் காரணம், மூணாறில் இருந்து கொச்சி செல்லும் வழியில் நீர்பிடிப்புப் பகுதிகளில் வணிகக் கட்டடங்கள் எழுப்பப்பட்டதே என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: மாணவர் பலி

Posted: 25 Jun 2013 09:14 PM PDT


சென்னை பல்லாவரத்தில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9ம் வகுப்பு மாணவர் தீபக் பலியானார். மேலும் 6 மாணவ, மாணவியர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானதில் 7 மாணவர்கள் பரிதாபமாக பலியாகினார். அந்தச் சம்பவத்தின் சோகம் மறைவதற்குள் சென்னையில் ஒரு விபத்து நடந்துள்ளது.  

மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Posted: 25 Jun 2013 08:43 PM PDT


நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உதகமண்டலத்தை அடுத்துள்ள அவலாஞ்சியில் நேற்று 251 மில்லி மீட்டர் மழையும், தேவாலா பகுதியில் 160 மில்லி மீட்டர் மழையும் பெய்தது. மாவட்டம் முழுவதும் 954 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மழை காரணமாக பல்வேறு சாலைகள் பழுதடைந்துள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. கடந்த 3 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே உதகை- குன்னூர் இடையேயான மலை ரயில் இன்று அதிகாலை முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் உபரிநீர் திறப்பு:மேட்டூர் அணையில் நீர் அதிகரிக்க வாய்ப்பு

Posted: 25 Jun 2013 08:25 PM PDT


கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதில், கபினி அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர் இருப்பு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. காணொளி:கர்நாடக அணைகளில் உபரிநீர் திறப்பு:மேட்டூர் அணையில் நீர் அதிகரிக்க வாய்ப்பு

விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு

Posted: 25 Jun 2013 07:22 PM PDT


ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி பகுதியில், சிறு விசைத்தறி உரிமையாளர்களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் இடையிலான கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி மருத்துவத் துணி உற்பத்தியாளர் சங்கத்தில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில், 16 மீட்டர் பாண்டேஜ் துணிக்கு முதலாம் ஆண்டு 20 காசுகளும், இரண்டாம் மற்றும் 3-ம் ஆண்டுக்கு நான்கரை காசுகள் வழங்கவும் ஏற்றுமதியாளர்கள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து, கூலி உயர்வு ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர். மருத்துவத்துணி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் சுப்ரமணியன், சிறு விசைத்தறி உரிமையாளர் சங்க துணைத் தலைவர் பாண்டிய ராஜன் உள்ளிட்டோர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். சம்பள உயர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, நேற்றிரவு முதலே விசைத்தறிகள் இயங்கத் தொடங்கின.

ஆன்மிக சுற்றுலாவை முறைப்படுத்த பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தல்

Posted: 25 Jun 2013 07:02 PM PDT


உத்தரகண்ட்டில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு, நாட்டில் ஆன்மிக சுற்றுலாவை முறைப்படுத்த வேண்டியதன் தேவையை உணர்த்தி இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். கஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார். எனினும் இதில் ஒருமித்த கருத்து எட்டப்படுவது மிகவும் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார். உத்தரகாண்ட் பாதிப்பை அடுத்து, அமர்நாத் யாத்திரையை முறைப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது பிரதமர் இதனைத் தெரிவித்தார். எனினும் தற்போதைய நிலையில் பாதிப்பக்குள்ளாகி இருக்கும் உத்தரகண்ட்டில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதும், புணரமைப்புப் பணிகளை முடுக்கிவிடுவதுமே மிகவும் முக்கியமானதாக உள்ளது என்றும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்கும் பக்தர்களின் முதல் குழு ஜூன் 27-ஆம் தேதி ஜம்முவில் இருந்து புறப்படுகிறது. இந்த யாத்திரைக்காக 3 லட்சம் மக்கள் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து அமர்நாத் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™