Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழக அரசு தீவிரம்

Posted: 22 Jun 2013 11:02 PM PDT


உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கித்தவித்த மேலும் 35 தமிழர்கள் இன்று சென்னை திரும்பினர். வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட தமிழர்களை மீட்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனையடுத்து இதுவரை 310 பேர் தமிழகம் திரும்பியுள்ளனர். தற்போது 35 பேர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மேலும் 315 தமிழர்களை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் சிக்கித் தவிக்கும் பகுதிகளில் ராணுவ வீரர்கள் தரையிறக்கப் பட்டிருப்பதாலும், ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருவதாலும், வெள்ளப் பகுதிகளில் சிக்கியுள்ளவர்கள் நலமுடனே இருப்பார்கள் என்றும், விரைவில் அவர்களும் மீட்கப் படுவார்கள் என்றும் தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

என்.எல்.சி. பங்குகளை விற்கக் கூடாது: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

Posted: 22 Jun 2013 10:57 PM PDT


நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஐந்து சதவிகிதப் பங்குகளை விற்கும் மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக, முதலமைச்சர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், என்.எல்.சி. நிறுவனத்தின் ஐந்து சதவிகித பங்குகளை விற்கும் முடிவு அவசர கதியில் எடுக்கப்பட்ட முடிவாகவே தோன்றுகிறது எனக் கூறியுள்ளார். கடந்த முறை தாங்கள் எழுதிய பதில் கடிதத்தில், பங்குகளை விற்பனை செய்யும் முடிவு பற்றி, தொழிற்சங்கங்களுடன், என்.எல்.சி. நிர்வாகம் ஆலோசனை நடத்தியதாக கூறியிருந்ததையும் ஜெயலலிதா தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், மத்திய அரசின் முடிவுக்கு எதிராக, ஏறத்தாழ அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், மத்திய அரசின் அவசர முடிவால், தமிழகத்தில் தொழிலாளர் பிரச்னை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.  

என்.எல்.சி., பங்கு விற்பனைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்த முடிவு

Posted: 22 Jun 2013 09:58 PM PDT


என்.எல்.சி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, தொழிற்சங்கள் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றன. அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான அண்ணா மற்றம் தொழிலாளர் முன்னேற்ற சங்கங்கள் ஆகியவை இணைந்து இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகின்றன. இதன் முடிவில், போராட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 சதவீத பங்குகளை விற்றால், 450 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும் என்றும், ஆண்டுக்கு ஆயிரத்து 400 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டும் என்.எல்.சி-யின் பங்குகளை விற்க வேண்டிய அவசியம் என்ன என்றும் தொழிற்சங்கங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. என்.எல்.சி-யின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகதான் பங்குகளை விற்று நிதி திரட்டப் படுவதாக மத்திய அரசு கூறுவது தவறான கருத்து என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் தற்போது போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் தடையை மீறி போராட்டம் நடத்தப் போவதாகவும் தொழிற் சங்கங்கள் தரப்பில் கூறப்படுகிறது. காணொளி:என்.எல்.சி., பங்கு விற்பனைக்கு எதிராக தொழிற்சங்கங்கள்  போராட்டம் நடத்த முடிவு

குஜராத் கலவரத்தை மறக்க வேண்டும்: ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

Posted: 22 Jun 2013 09:38 PM PDT


கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர் நிகழ்ந்த கலவர சம்பவங்களை இஸ்லாமியர்கள் மறக்க வேண்டும் என பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டுக்கு முன்னர் இதுபோன்ற 13 ஆயிரம் இனமோதல்கள் நாட்டில் நிகழ்ந்துள்ளதாக அவர் குறிப்பி்ட்டார். ராஜஸ்தானில் பாரதிய ஜனதா ஆட்சியின் போது சிறுபான்மையினருக்கு எதிராக எந்தவித பாரபட்சமும் காட்டப்படவில்லை என ராஜ்நாத் சிங் கூறினார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி கையாளப்பட்டதாக குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், சுதந்தரம் அடைந்து 66 ஆண்டுகள் கடந்துவி்ட்ட பின்னரும், இஸ்லாமியர்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே நட்புப் பாலம் ஏற்படுத்த அரசுகள் தவறிவி்ட்டதாக குறை கூறினார். பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை இனத்தவர் மீது பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் வந்தால், அது குறித்து தான் நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார். காணொளி:குஜராத் கலவரத்தை மறக்க வேண்டும்: ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

பள்ளி நேரத்தில் மாற்றம் இல்லை

Posted: 22 Jun 2013 09:03 PM PDT


தமிழகத்தில் அனைத்து உயர்நிலை பள்ளிகளுக்கும் வேலைநேரம் மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இதனை பள்ளி கல்வித்துறை மறுத்துள்ளது. பள்ளி நேர மாற்றம் தொடர்பாக தமிழகம் முழுவதும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாதிரி சுற்றறிக்கையை கல்வித் துறை அனுப்பியுள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை நடத்தி அதனை பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில், பள்ளி நேரம் மாற்றம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. எனவே, பள்ளி நேரம் மாற்றம் தொடர்பாக வெளிவந்த தகவல் தவறானது என பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது. அனைத்து கட்ட ஆலோசனைக்குப் பின்பே, பள்ளி நேர மாற்றம்‌ தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணொளி:பள்ளி நேரத்தில் மாற்றம் இல்லை

அமெரிக்க உளவு திட்டங்களை அம்பலப்படுத்திய ஸ்னோடெனுக்கு நெருக்கடி

Posted: 22 Jun 2013 08:16 PM PDT


அமெரிக்காவின் ரகசிய உளவுத் திட்டங்களை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடெனுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அவர் மீது சட்ட விரோதமாக வேவு பார்ப்பது, தகவல் திருட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ள அமெரிக்கா, அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு ஹாங்காக் அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் உறவில் சிக்கில் ஏற்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. சீனாவின் ஆட்சிக்கு உள்பட்ட பகுதியான ஹாங்காங், குற்றவாளிகளை பகிர்ந்து கொள்வது தொடர்பாக அமெரிக்காவுடன் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்கள், தொலைபேசிகள், வலையமைப்புகள் உள்ளிட்டவற்றில் அமெரிக்கா வேவு பார்ப்பதாக கார்டியன் இதழ் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த இதழுக்கு ஆவணங்கள் அளித்ததை ஸ்னோடென் ஒப்புக்கொண்டார்.

நாளை முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்

Posted: 22 Jun 2013 08:01 PM PDT


தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலை பள்ளிகளுக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இது நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. பள்ளி நேர மாற்றம் தொடர்பாக தமிழகம் முழுவதும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஆய்வு கூட்டம் அந்தந்த மாவட்டங்களின் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவின் படி 6,7,8,9 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் நாளை முதல் காலை 9 மணிக்கு பள்ளி தொடங்கும், இறைவணக்கம் முடிந்து 9.20 முதல் 12.40 வரை வகுப்புகள் நடைபெறும். உணவு இடைவெளிக்குப் பின்னர் 1.25-க்கு வகுப்புகள் மீண்டும் தொடங்கி 4.15 வரை நடைபெறும்.  

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து ரூ.47 கோடி மதிப்புள்ள கனிமம் கடத்தல்

Posted: 22 Jun 2013 07:23 PM PDT


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கடத்தப்பட்ட 47 கோடி ரூபாய் மதிப்பிலான ஆனோடு ஸ்லைம் தாதுவை போலீசார் பறிமுதல் செய்தனர். ஸ்டெர்லைட் ஆலையில் தாமிரத்தை பிரித்தெடுக்கும்போது வெளியேறும் ஆனோடு ஸ்லைம் எனும் தாமிரக் கழிவு, 12 ஆயிரத்து 500 டன் அளவு கொண்ட கண்டெய்னரில் அடைக்கப்பட்டு கடந்த 19 ஆம் தேதி கப்பல் மூலம் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டது. துபாய் சென்றடைந்த அந்த கப்பல் கண்டெய்னரை திறந்து பார்த்தபோது அதில் போலியான கனிமம் இருப்பது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து தூத்துக்குடி போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் எடை பிரிவில் பணிபுரிந்து வரும் மகேந்திர கார்த்திக் என்பவர் மூலமாக கனிமம் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் கார்த்திக் மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த ஐசக், முத்துக்குமார் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளி முகைதீன் காதரை தேடி வருகின்றனர்.

கர்நாடகாவில் கனமழை: அணைகள் வேகமாக நிரம்புகின்றன

Posted: 22 Jun 2013 07:11 PM PDT


கர்நாடகாவில் பெய்து வரும் கன மழையால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கிருஷ்ணராஜசாகர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 78 புள்ளி 70 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 2 ஆயிரத்து 420 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு ஆயிரத்து 177 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கபினி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையிலிருந்து விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த நீர் மைசூர், மாண்டியா மற்றும் பெங்களூரு மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் திறந்து விடப்படுவதாக கர்நாடக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இன்னும் மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. காணொளி:கர்நாடகாவில் கனமழை: அணைகள் வேகமாக நிரம்புகின்றன

உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கியவர்களில் மேலும் 28 பேர் தமிழகம் திரும்பினர்

Posted: 22 Jun 2013 06:55 PM PDT


உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கிய 90 தமிழர்கள் நேற்றிரவு சென்னை வந்து சேர்ந்த நிலையில் மேலும் ஒரு குழு, விமானம் மூலம் சென்னை வந்துள்ளது. 28 பேர் கொண்ட இந்த குழுவில் சென்னை, விழுப்புரம் மற்றும் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தோர் இடம் பெற்றிருந்தனர். தமிழக அரசின் உதவியுடன் தாங்கள் சென்னை திரும்பியதாக தெரிவித்துள்ள அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். இவர்களது சொந்த ஊர் வரை செல்லும் செலவை தமிழக அரசு ஏற்றுள்ளது. நாளை காலை ரயில் மூலம் 10 பேர் கொண்ட குழு சென்னை வரவுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™