Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


உத்தரகாண்டிலிருந்து தமிழர்கள் 45 பேர் சென்னை திரும்பினர்

Posted: 21 Jun 2013 10:28 PM PDT


உத்தரகாண்டில் சிக்கித் தவித்த தமிழர்களில் மேலும் 45 பேர் இன்று சென்னை திரும்பினர். இதில் 40 பேர் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். 5 பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள். வெள்ளப்பெருக்கு காரணமாக உத்தரகாண்டின் உத்தர்காசி பகுதியில் 5 நாட்களாக சிக்கித் தவித்த அவர்கள், பின்னர் டெல்லி அழைத்து வரப்பட்டனர். அங்கு தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த 45 பேரும் தமிழக அரசின் அதிகாரிகள் மூலம் விமானத்தில் சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை வந்த அவர்களை உறவினர்கள், கண்ணீர்மல்க வரவேற்றனர். இதையடுத்து சிறப்புப் பேருந்துகள் மூலம் 45 பேரும் சொந்த ஊர் செல்ல அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.   காணொளி:<உத்தரகாண்டிலிருந்து தமிழர்கள் 45 பேர் சென்னை திரும்பினர்>

புதுக்கோட்டையில் சிறுவனை கடத்தியவர்கள் கைது

Posted: 21 Jun 2013 09:15 PM PDT


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் பள்ளி மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 9 லட்சத்து 45 ரூபாய் ரொக்க பணம், மூன்று செல்போன்கள் மற்றும் ஒரு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், இருவரும், அரியாணிப்பட்டியைச் சேர்ந்த பிரேம்குமார், ராஜேஷ் கண்ணா என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு இவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்த விபரம் பெறப்படும் என்று காவல்துறையின் தெரிவித்தனர். கடந்த 15 ஆம் தேதி அருணாச்சலம் என்பவரது மகன் அழகேசன் கடத்தப்பட்டார்.

சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டி: நாளை இந்தியா- இங்கிலந்து பலப்பரீட்சை

Posted: 21 Jun 2013 09:05 PM PDT


சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில், இந்திய – இங்கிலந்து அணிகள் மோதுகின்றன. கடைசி மினி உலகக் கோப்பை என்பதால், இதில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. உலகக் கோப்பையை வென்ற கையோடு கடந்த 2011 ஆம் ஆண்டு இங்கிலந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, பல்வேறு பெருமைகளை இழந்து, படுதோல்வியுடன் நாடு திரும்பியது. ஆனால், தற்போது அதே மண்ணில் நம்பர் ஒன் அணியாக கால்பதித்துள்ள இந்திய அணி, சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் மூலம் மீண்டும் அனைத்து அணிகளுக்கும் மிரட்டலாக உருவெடுத்துள்ளது. இந்த தொடரின், முதல் போட்டியில் தென்னாப்ரிக்கா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததால், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 331 ரன்கள் குவித்து, 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்தடுத்த மூன்று போட்டிகளிலும் இரண்டாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி, எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு அவ்வளவாக வேலை கொடுக்கவில்லை. அதிகபட்சமாக வெற்றி இலக்கை எட்ட 40 ஓவர்கள் மட்டுமே எடுத்துக் கொண்டது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 40-வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டக்வொர்த் லுயீஸ் விதிப்படி 20-தாவது ஓவரிலும், இலங்கை அணிக்கு எதிரான அரையிறுதியில், 35-வது ஓவரிலும் வெற்றி இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டியில், இந்திய அணி இங்கிலந்து அணியை எதிர்கொள்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு 1983ம் ஆண்டு இங்கிலந்தில் இதே ஜூன் மாதம், கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, முதல் முறையாக உலகக் கோப்பைபையை வென்றெடுத்தது. கடைசி முறையாக நடக்கும் மினி உலகக் கோப்பையை, தோனி தலைமையிலான இந்திய அணி, முதன் முறையாக வெல்லும் உத்வேகத்துடனேயே உள்ளது.   காணொளி:<சாம்பியன்ஸ் கோப்பை:நாளை இந்தியா- இங்கிலந்து பலப்பரீட்சை>

தமிழக பக்தர்களை மீட்கும் பணி தீவிரம்

Posted: 21 Jun 2013 09:02 PM PDT


உத்தரகாண்டில் வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழக பக்தர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக டேராடூன் சென்றுள்ள தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜக்கையன் தெரிவித்துள்ளார். வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க தமிழக அரசு ‌அனுப்பி உள்ள சிறப்புக்குழு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகள் எந்த அளவில் இருக்கின்றன என்பதை  புதியதலைமுறைக்கு  தமிழக சிறப்புக்குழு பிரதிநிதி ஜக்கையன் அளித்த தொலைபேசி வழி தகவலில், இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பக்தர்களை தொடர்புக்கொண்டு அவர்களை டெல்லி கொண்டு செல்ல ஏற்பாடு நடந்து வருவதாகவும் கூறினார். மேலும், அவர்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். காணாமல் போனதாக கூறப்படும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 15 பக்தர்கள் குறித்து பதிலளித்த ஜக்கையன், அவர்களை தேடும் பணி நடந்து வருவதாகவும், வேலூர், கோவையை சேர்ந்த 40 தமிழர்கள் இந்திய சீன எல்லையில் உள்ள காளா ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.   காணொளி:<தமிழக பக்தர்களை மீட்கும் பணி தீவிரம்>

ஆசிய தடகளப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: தமிழக வீரர்கள் 14 பேருக்கு இடம்

Posted: 21 Jun 2013 08:26 PM PDT


ஆசிய தடகளப் போட்டி புனேவில் அடுத்த மாதம் 3 தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 14 வீரர்-வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படும் சுதா சிங், விகாஸ் கவுடா, கிருஷ்ண பூனியா, டிண்டு லுகா உள்ளிட்ட 110 வீரர், வீராங்கனைகள் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய தடகள சம்மேளனம் அறிவித்துள்ள இந்த அணியில் 57 வீரர்களும், 53 வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த நீளம் தாண்டுதல் வீரர் பிரேம்குமார், 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்ட வீராங்கனை காயத்ரி, 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் மீட்டம் ஓட்ட வீராங்கனை சூர்யா உள்ளிட்ட 14 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.   காணொளி:<ஆசிய தடகளப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு>

வெள்ளத்தால் உருக்குலைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தை மறுசீரமைக்க நீண்ட காலம் பிடிக்கும் : முதலமைச்சர் விஜய் பகுகுணா

Posted: 21 Jun 2013 08:17 PM PDT


வெள்ளத்தால் உருக்குலைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தை மறுசீரமைக்க நீண்ட காலம் பிடிக்கும் என முதலமைச்சர் விஜய் பகுகுணா தெரிவித்துள்ளார். டேராடூனில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பவும் நீண்ட காலம் ஆகும் என கூறினார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கேதர்நாத்திற்கு பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்ள சாத்தியமே இல்லை எனவும் அவர் கவலை தெரிவித்திருக்கிறார். இதுவரை 556 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி புதையுண்டு போயிருக்கக்கூடும் என கவலை தெரிவி்த்தார். ஹிமாலய வரலாற்றில் இதுபோன்ற பேரழிவு ஏற்பட்டதில்லை என விஜய் பகுகுணா தெரிவித்தார்.   காணொளி:<உத்தரகாண்ட் மாநிலத்தை மறுசீரமைக்க நீண்ட காலம் பிடிக்கும்:முதலமைச்சர்>

உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு

Posted: 21 Jun 2013 07:21 PM PDT


உத்தரகாண்டில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 550-ஐ தாண்டியுள்ளது. சிக்கித் தவிக்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அதனால் பெரிய அளவில் சேதம் ஏற்படக்கூடும் என்றும் அம்மாநில வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். பேரழிவு ஏற்பட்டுள்ள உத்தரகாண்டில்  மீண்டும் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்குள் மீட்புப் பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ராணுவத்தினர் உள்ளனர். உத்தரகாண்டில் உள்ளிட்ட வடமாநிலங்களில் பெய்த கனமழையால் கங்கை மற்றும் யமுனை நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதனால் உத்தரகாண்ட் மாநில மக்கள் மட்டும் அல்லாது கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு புனித பயணம் சென்ற யாத்ரீகர்களும் பாதிப்புக்கு உள்ளாகினர். மழை படிப்படியாக குறைந்ததைத் தொடர்ந்து, மலைப்பகுதிகளில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கும் பணி தொடங்கியது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 550 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ள்து. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 50 ஆயிரம் பேர் நடுவழியில் சிக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ள்து. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவது ஆறுதல் அளித்தாலும், வானிலை மையத்தின் வாயிலாக கிடைக்கும் மற்றொரு தகவல் அனைவரையும் கவலை அடையச் செய்கிறது. இன்னும் இரண்டு தினங்களில், அதாவது நாளை மாலை முதல், உத்தரகாண்டில் மீண்டும் மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் மழை வருவதற்குள் , அனைவரும் மீட்கப்படுவர் என்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய – திபெத் எல்லை பாதுகாப்புப்படையினர் தெரிவித்துள்ளனர். காணொளி:<உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு>

விவசாயம் மற்றும் குடிசைகளுக்கான மின்கட்டணம் உயர்வு

Posted: 21 Jun 2013 06:56 PM PDT


விவசாயம் மற்றும் குடிசைகளுக்கான மின் கட்டணத்தை, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்தியுள்ளது. எனினும், உயர்த்தப்பட்ட மின்கட்டணம், தமிழக அரசிடம் இருந்து மானியமாக பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், நடப்பு ஆண்டுக்கான மின் கட்டண உயர்வு குறித்த பரிந்துரையை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் கடந்த பிப்ரவரி 19ம் தேதி சமர்ப்பித்தன. இதன் மீது, சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய இடங்களில் கருத்து கேட்பு கூட்டங்களை கடந்த மே மாதம், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டணத்தை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, விவசாயத்துக்கான மின் கட்டணம், ஒரு குதிரைத் திறனுக்கு ஆயிரத்து 750 ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும், குடிசைக்கான மின் கட்டணம் 60 ரூபாயில் இருந்து 125 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு மூலம், மின் வாரியத்துக்கு 964 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. எனினும், உயர்த்தப்பட்ட கட்டணத் தொகை, தமிழக அரசிடம் மானியமாக பெறப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதுதவிர, விளம்பர தட்டிகள், பலகைகள் போன்றவற்றை பயன்படுத்துவோர், அலங்காரப் பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டு அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   காணொளி:<விவசாயம் மற்றும் குடிசைகளுக்கான மின்கட்டணம் உயர்வு>

இலங்கையில் 13 ஏ சட்டப்பிரிவில் திருத்தம் செய்ய குழுவை நியமித்தார் ராஜபக்சே

Posted: 21 Jun 2013 06:39 PM PDT


இலங்கையில் 13 ஏ சட்டப்பிரிவில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக விவாதித்து முடிவெடுக்க நாடாளுமன்ற குழுவை அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபட்ச நியமித்துள்ளார். 19 பேர் கொண்ட இக்குழுவின் தலைவராக நிர்மல் ஸ்ரீபாலா டிசில்வா நியமிக்கப்பட்டுள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் பெரீசும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் வரும் செப்டம்பர் மாதம் தேர்தல் நடத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு முன்னதாக வடக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாகாணங்களின் அதிகாரங்களையும் குறைக்கும் வகையில், அவசர சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அதிபர் ராஜபக்ச முடிவு செய்துள்ளார். அதன்படி, 13 ஏ சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அவர் கூறினார். எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியவை அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், அதிபர் ராஜபக்ச அமைத்துள்ள நாடாளுமன்ற குழு, மாகாணங்களுக்கு உள்ள நிலம் மற்றும் காவல் உரிமையை ‌பறிக்கும் சட்டமசோதா குறித்து ஆலோசிக்க உள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டும், அதை கண்டுகொள்ளாமல், குழு அமைக்கப்பட்டுள்ளது.   காணொளி:<மாகாண அதிகாரங்களை பறிக்க ராஜபக்சே அரசு திட்டம்>

மாநிலங்களவை தேர்தல்: அதிருப்தி எம்எல்ஏ.க்களுக்கு விஜயகாந்த் கடிதம்

Posted: 21 Jun 2013 06:21 PM PDT


மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று, அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். மாநிலங்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக பா.ம.க அறிவித்துவிட்டதால், தேமுதிக அதிருப்தி எம்எல்ஏ.க்களது வாக்குகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அந்த ஏழு பேரது வாக்குகளை பெற, திமுக, தேமுதிக இடையே போட்டி நிலவுகிறது. இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சியின் அதிருப்தி எம்எல்.ஏ.க்கள் ஏழு பேருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், கடந்த 16ம் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாகவும், அதன் பேரில், கட்சியின் பொருளாளர் இளங்கோவன் கடந்த 17ம் தேதி மனுத் தாக்கல் செய்ததாகவும் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார். எனவே, அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டியது, தேமுதிக எம்எல்.ஏ.க்களின் கடமை என்று தெரிவித்துள்ள விஜயகாந்த், எம்எல்.ஏ க்கள் தவறாமல் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்..   காணொளி:<மாநிலங்களவை தேர்தல்: அதிருப்தி எம்எல்ஏ.க்களுக்கு விஜயகாந்த் கடிதம்>


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™