Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: 2 வது அரையிறுதியில் இந்தியா-இலங்கை இன்று மோதல்

Posted: 19 Jun 2013 10:55 PM PDT


சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த இந்திய அணியை எதிர்த்து இலங்கை பலப்பரீட்சை நடத்துகிறது. கடந்த 2002 ஆண்டு நடந்த இறுதிப்போட்டி மழையால் தடைப்பட்டபோது சாம்பியன்ஸ் கோப்பையை இவ்விரு அணிகளும் பகிர்ந்து கொண்டன. இந்நிலையில் இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழையும் முனைப்பில் களமிறங்குகிறது தோனி தலைமையிலான இந்திய இளம் அணி. மினி உலகக்கோப்பை என வர்ணிக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் விறுவிறுப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதி ஆட்டத்திற்குள் நுழைந்த இந்திய அணியும், முட்டி மோதி அரைறுயிறுதிக்கு தகுதி பெற்ற இலங்கை அணியும் கார்டிஃப் மைதானத்தில் களம் காண்கின்றன. இந்திய அணியை பொறுத்தவரை பயிற்சியாட்டங்கள் தொடங்கி அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று பலம் வாய்ந்த அணியாக உள்ளது. ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராட் கோஹ்லி, தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா என பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. குறிப்பாக, தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் அசர வைக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இரண்டு சதங்கள் உட்பட 264 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருக்கிறார். இஷாந்த் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா, புவனவேஸ்வர் குமார் ஆகியோரின் பந்துவீச்சு குறிப்பிடும்படியாக உள்ளது. இலங்கை அணியை பொறுத்தவரை நியுசிலாந்து அணியுடன், தோல்வியடைந்த போதும், இங்கிலாந்து அணியையும், கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. திலகரத்னே தில்ஷன், குமார் சங்ககரா, ஜெயவர்த்தனே ஆகிய அனுபவ பேட்ஸ்மேன்கள் இருப்பது அந்த அணிக்கு பலமாக உள்ளது. லசித் மலிங்கா, நுவன் குலசேகரா, ரங்கனா ஹொராத் ஆகிய அனுபவ பந்துவீச்சாளர்களும் அந்த அணியில் உள்ளனர். இரு அணிகளையும் ஒப்பிடுகையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இந்திய அணிக்கு பிரகாசமாக இருப்பதாக விளையாட்டு ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலந்து

Posted: 19 Jun 2013 09:46 PM PDT


சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்ரிக்க அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இங்கிலந்து அணி. லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலந்து அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியை அளித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான இங்ரம் ரன் எதுவும் எடுக்காமலும், ஹாஷிம் ஆம்லா 1 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். பீட்டர்சன் 30 ரன்களும், டு ப்ளஸ்ஸி 26 ரன்களும் எடுத்து வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் டி வில்லியர்ஸ், டூமினி ஆகிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். பின்னர் க்ளைன்வெல்ட் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 39-ஆவது ஓவரிலேயே 175 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மில்லர் 56 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலந்து தரப்பில் ட்ரட்வெல், ப்ராட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர். 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலந்து அணியின் குக் 6 ரன்களிலும், பெல் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். எனினும் ஜோனதன் ட்ராட்டும், ஜோ ரூட்டும் இனைந்து சீரான வேகத்தில் ரன்கள் சேர்த்தனர். ரூட் 48 ரன்களில் விக்கெட்டை இழந்தார். சிறப்பாக விளையாடிய இங்கிலந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் 38-வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது. ட்ராட் 82 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தன்னை கொல்ல சதி செய்வதாக மாவோயிஸ்ட், மார்க்சிஸ்ட் மீது மமதா குற்றச்சாட்டு

Posted: 19 Jun 2013 07:37 PM PDT


மாவோயிஸ்டுகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிலரும் தன்னை கொல்ல சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து, அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த மகதோ மற்றும் மிரிகென் மைதி என்னும் இரு எம்.எல்.ஏ.,க்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள சாரந்தா வனப்பகுதியில் சுமார் 45 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கூடி சதித்திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறை தகவல் அளித்திருப்பதாக மேற்குவங்க காவல்துறை தெரிவித்துள்ளது. முக்கிய பிரமுகர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும், தாரா என்னும் பெண் மாவோயிஸ்ட் தலைமையில் அவர்கள் செயல்படுவதாகவும் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, மேற்குவங்கத்தில் உள்ள ஜங்கள்மஹால் வனப்பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காணொளி: தன்னை கொல்ல சதி செய்வதாக மாவோயிஸ்ட், மார்க்சிஸ்ட் மீது மமதா குற்றச்சாட்டு

விருதுநகரில் விசைத்தறிகளை இயக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்

Posted: 19 Jun 2013 07:32 PM PDT


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் விசைத்தறிகளை இயக்க வலியுறுத்தி, பேண்டேஜ் உற்பத்தி தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அய்யனாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள், உடனடியாக விசைத்தறிகளை இயக்காவிட்டால்,போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 50 நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பேண்டேஜ் உற்பத்தி தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து கடந்த 10-ஆம் தேதி இரு தரப்பினர் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.

கேரளாவில் மழைக்கு 17 பேர் பலி: பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி

Posted: 19 Jun 2013 07:29 PM PDT


கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், மழைக்கு இதுவரை 17 பேர் பலியாகி இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி குறிப்பிட்டுள்ளார். திருவனந்தபுரத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பேசும்போது அவர் இதனைத் தெரிவித்தார். உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்றும், முழுமையாக வீடிழந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் உம்மன் சாண்டி கூறினார். சிறிய அளவில் வீடு சேதம் அடைந்தவர்களுக்கு 35 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 2 வார காலத்திற்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்க அரசு திட்டமிட்டிருப்பதாகவும் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி கூறினார். காணொளி:கேரளாவில் மழைக்கு 17 பேர் பலி: பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி

பிரிவினைவாதிகளுக்கு இந்தியா உதவுகிறது: இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு

Posted: 19 Jun 2013 07:24 PM PDT


இலங்கையில் உள்ள பிரிவினைவாத சக்திகளுக்கு இந்தியா உதவுவதாக இலங்கை அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணி தலைவருமான விமல் வீரவன்ச குற்றம் சாட்டி உள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசியல் சாசன 13 ஆவது பிரிவை நீர்த்துப் போகச் செய்ய இலங்கை அரசு முயற்சி மேற்கொண்டு வருவது குறித்து, தமிழ் தேசிய கூட்டமைப்புப் பிரதிநிதிகள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரிடம் முறையிட்டதை அடுத்து விமல் வீரவன்ச இவ்வாறு கூறியுள்ளார். தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் மற்றும் நாடாளுமன்ற அமைப்புதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றும் இதனை மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் உணர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அரசு எதிர்த்தாலும், அரசியல் சாசனத்தின் 13 ஆவது பிரிவை திருத்தும் முடிவில் இலங்கை அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்றும் விமல் வீரவன்ச வலியுறுத்தி உள்ளார். காணொளி: பிரிவினைவாதிகளுக்கு இந்தியா உதவுகிறது: இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு

குறுவை சாகுபடிக்கு காவிரி நீர் குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதம்

Posted: 19 Jun 2013 07:20 PM PDT


குறுவை சாகுபடிக்கு காவிரியில் இருந்து தண்ணீர் பெறுவது குறித்து, தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம், நேற்று நடைபெற்றது. ஒரு மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில், விவசாயிகளுக்கு இலவச உரம் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகள் அளிப்பது குறித்தும், சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் பற்றியும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதுதவிர, குவைத் மற்றும் உத்தரகாண்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. காவிரி டெல்டா பகுதியில் மீதேன் வாயுவை தனியார் நிறுவனம் எடுப்பதை தடுத்து நிறுத்துவது குறித்தும் இக்கூட்டத்தி்ல் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், தமிழகத்தில், 3 ஆயிரத்து 410 கோடி ரூபாய் செலவில் புதிதாக மின் திட்டங்களை அமைப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, ஜப்பான் நாட்டின் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் தலைவர் அகிஹிகோ டனகா, முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அப்போது, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு தேவையான உதவிகளை ஜப்பான் அளிக்கும் என்று அவர் உறுதியளித்தார். காணொளி: காவிரி நீர் குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதம்

என்.எல்.சி. பங்குகள் விற்பனை: மத்திய அரசு இன்று முடிவெடுக்கும் என தகவல்

Posted: 19 Jun 2013 07:15 PM PDT


நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தனக்குள்ள பங்குளில் 5 சதவிகிதத்தை தனியாருக்கு விற்கும் முடிவினை மத்திய அரசு இன்று எடுக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் 460 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு முன்பு ஒத்திவைத்தது. இதனையடுத்து பங்குகளை விற்கும் தனது முடிவை அரசு கைவிட வேண்டும் என கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். அரசின் முடிவால் பணியாளர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படும் என்றும், இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். எனினும் பங்குகளை விற்பது என்ற தனது முடிவில் அரசு உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் 93.56 ஆக இருக்கும் அரசின் பங்கு, 88.56 ஆக குறையும்.

இடைநீக்கம் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு

Posted: 19 Jun 2013 07:11 PM PDT


தமிழக சட்டப்பேரவைத் தலைவரால் 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏ-க்கள் 6 பேரும் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலரும், சட்டமன்ற செயலாளருமான ஜமாலுதீன் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடைநீக்கம் செய்யப்பட்ட வி.சி. சந்திர குமார், பார்த்தசாரதி, முருகேசன், நல்லதம்பி, செந்தில்குமார், அருள்செல்வன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதன் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, தங்களின் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படலாம் என அஞ்சுவதாக தெரிவித்துள்ள இவர்கள், மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்கான இடைக்கால உத்தரவை வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து இது குறித்து பதில் அளிக்குமாறு பேரவைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பனை சட்டப்பேரவைக்குள் தாக்கியதாக சந்திர குமார் உள்ளிட்ட 6 பேரை 1 வருடத்திற்கு பேரவைத் தலைவர் தனபால் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி இடை நீக்கம் செய்திருந்தார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கையை அடுத்து பின்னர் அதனை 6 மாதமாக குறைத்தார். காணொளி: இடைநீக்கம் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு

ரூ.1,000 கோடி நிவாரண உதவி: பிரதமர் அறிவிப்பு

Posted: 19 Jun 2013 07:02 PM PDT


வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகாண்ட் மாநிலத்திற்கு வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கிற்கு பலியானோர் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. இயற்கையின் கோரதாண்டவத்தால் லட்சக்கணக்கானோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பெரும் சீரழிவைச் சந்தித்துள்ள பகுதிகளை பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டனர். பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை சீற்றம் மிகுந்த வேதனையளிப்பதாக தெரிவித்தார் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உத்தரகாண்ட் மாநிலத்திற்கு முதல் கட்டமாக 145 கோடி ரூபாய் நிவாரண உதவி உடனடியாக வழங்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். காணொளி: ரூ.1,000 கோடி நிவாரண உதவி: பிரதமர் அறிவிப்பு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™