puthiyathalaimurai.tv online |
- உணவு பாதுகாப்புச் சட்டம்: யாருக்கு சாதகம்…?
- துருக்கியில் அரசுக்கு எதிரான போராட்டம் நீடிப்பு
- பலாப்பழ விளைச்சல் குறைவு: விவசாயிகள் வேதனை
- பட்டு நூல் பாதிப்பு: பரிதவிக்கும் உடுமலைப்பேட்டை விவசாயிகள்
- வரி ஏய்ப்பு புகாரில் கால்பந்து வீரர் மெஸ்ஸி
- “இந்தியாவில் 160 ஆண்டுகள்…” தந்தி சேவையின் வரலாறு
- பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 5 மாணவர்கள் காயம்
- நாமக்கல்லில் இடிந்து விழும் நிலையில் மின் கம்பங்களை மாற்ற கோரிக்கை
- அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது: மு.க.ஸ்டாலின்
- விருதுநகர் பட்டாசு ஆலைகளில் தொடரும் விபத்து: சாலைகளை மேம்படுத்த கோரிக்கை
உணவு பாதுகாப்புச் சட்டம்: யாருக்கு சாதகம்…? Posted: 12 Jun 2013 10:16 PM PDT தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அளித்திடுவோம் என்றார் பாரதி. ஆனால், இந்தியாவின் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 42 சதவீதத்தினர் பட்டினியாலும் ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும் எடை குறைந்து அவதிப்படுவதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. உணவு தானியக் கிடங்குளில் எலிகளும், புழுக்களும், பூச்சிகளும் வயிறு புடைக்க தானியங்களை உண்டு கொழுக்க கோடிக்கணக்கான இந்திய மக்கள் இன்றும் இரவில் பட்டினியோடு படுக்கைக்குச் செல்லும் நிலைதான் இருக்கிறது. இந்நிலையில், உணவு பாதுகாப்பு மசோதாவை அவசர சட்டமாக கொண்டு வர ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது. இந்தச் சட்டத்தை, பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் அமளியால் நாடாளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஏழை, எளிய மக்கள் பயனடைவார்கள். நாட்டிலுள்ள 67 சதவீத ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவு தானியங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும். கிராமப்புறங்களில் இருக்கும் 75 சதவீத மக்களுக்கும், நகர்ப்புறங்களில் இருக்கும் 50 சதவீத மக்களுக்கும் மானிய விலையில் உணவுப் பொருள் கிடைக்கும். 80 கோடி மக்கள் இதன் மூலம் பயனடைவர் என்கிறது ஆளும் காங்கிரஸ் அரசு. 2ஜி ஊழல், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல், என பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் எதிர்கட்சிகளிடம் சிக்கித் தவிக்கும் காங்கிரஸ் கட்சி, இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்க முடியும் என்று நம்புவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மத்திய அரசின் இந்த முடிவு குறித்து அண்மையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க., மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்: தேசத்திற்கு மிக முக்கியமான ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் அவசரச் சட்டமாக நிறைவேற்றுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இது ஆளுங்கட்சியின் மோசமான விளம்பர யுத்தி என்றும் அவர் விமர்சித்திருந்தார். மேலும், உணவு பாதுகாப்பு மசோதா குறித்து ஆலோசிக்க ஒரு சிறப்பு கூட்டத்தைக் கூட்டினால் அதனை பா.ஜ.க., வரவேற்கும் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் அரசின் திட்டமோ வேறு என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள் : அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அதன் மீது நேரடியாக விவாதம் நடத்தலாம். அப்போது உணவுப் பாதுகாப்பு அவசர சட்டத்திற்கு பா.ஜ.க., எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அந்த எதிர்ப்பை தங்களுக்கு சாதகமாக மாற்றவும் பா.ஜ.க ஏழைகள் நலனுக்கு எதிராக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டவும் முடியும் என காங்கிரஸ் தரப்பு நம்புவதாக அவர்கள் கூறுகின்றனர். ![]() கோடிக்கணக்கான மக்களின் வாட்டத்தைப் போக்கும் நிவாரணியாக இந்தச் சட்டம் அமையுமா? இல்லை இதுவும் வெறும் அரசியல் கூச்சலாக எழுந்து பின்னர் அடங்கிப்போகுமா என்பதை கவலையுடன் கூர்ந்து கவனிக்கின்றனர் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் இந்தியர்கள். -பாரதி ஆனந்த் |
துருக்கியில் அரசுக்கு எதிரான போராட்டம் நீடிப்பு Posted: 12 Jun 2013 10:01 PM PDT துருக்கியில் கடந்த இரு வாரங்களாக நீடிக்கும் அரசுக்கு எதிரான போராட்டத்தை பலப்பிரயோகம் மூலம் ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பிரதமர் எர்டோகன். காவல்துறையினர் விரட்டியடிக்க முற்பட்டாலும், மீண்டும் மீண்டும் குழுமி போராட்டத்தை தொடர்கின்றனர் போராட்டக்காரர்கள். இஸ்தான்புல் நகரில் கெஸி பூங்காவை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தொடங்கிய போராட்டம், பிரதமர் எர்டோகனுக்கு எதிரான போராட்டமாக பரிணமித்துவிட்டது. இஸ்தான்புல் நகரில் தக்ஷிம் சதுக்கத்தில் பல ஆயிரம் போராட்டக்காரர்கள் கூடி, பிரதமர் எர்டோகன் பதவி விலக வலியுறுத்துகின்றனர். கடந்த இரு வாரங்களாக அங்கே முகாமிட்டுள்ள போராட்டக்காரர்களை அகற்ற எந்தவொரு முயற்சியையும் செய்யாத காவல்துறையினர், இன்று அதிகாலை தக்ஸிம் சதுக்கத்தில் திடீரென புகுந்தனர். கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். போராட்டக்காரர்கள் அருகில் உள்ள தெருக்களிலும், விடுதிகளிலும் ஓடி ஒளிந்தாலும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக இல்லை. இதையடுத்து, தக்ஸிம் சதுக்கம் உள்ள பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று இஸ்தான்புல் ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமருடன் இன்று பேச்சுவார்த்தை இதேபோல், தலைநகர் அங்காராவிலும் போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். கடந்த 2 வாரங்களாக நீடிக்கும் இப்போராட்டத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 5 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். போராட்டக் குழுக்களுடன் பிரதமர் எர்டோகன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். |
பலாப்பழ விளைச்சல் குறைவு: விவசாயிகள் வேதனை Posted: 12 Jun 2013 09:58 PM PDT பருவ மழையின்மை, விளைச்சல் குறைவு உள்ளிட்ட காரணங்களால் அதிக பாதிப்பு கண்ட உணவுப் பொருள் பட்டியலில் இப்போது பலாப்பழமும் சேர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், பலாப்பழ விளைச்சல் குறைந்துள்ளதால், அதன் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில், பலாப்பழம் அதிகம் விளைகிறது. மூலிகை வளம் மிகுந்தது கொல்லிமலை என்பதால், இங்கு விளையும் பலாப் பழங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல மவுசு உண்டு. பொதுவாக, ஜனவரி மாதத்தில் காய்பிடிப்பு துவங்கி, ஜூன், ஜூலை மாதங்களில் பலாப் பழ அறுவடை நடைபெறுவது வழக்கம். ஆனால், கடந்த 2 வருடமாக போதுமான அளவு மழை இல்லாததால், பலாப்பழ விளைச்சல் வழக்கத்தைவிட குறைவாக உள்ளதாகவும், பலாச்சுளைகள் சிறுத்து காய்த்து உள்ளதால், வியாபாரிகள் குறைந்த விலை கொடுத்தே அவற்றை வாங்குவதாகவும் கூறுகின்றனர் விவசாயிகள். கொல்லிமலை சுற்றுவட்டாரத்தில் விளையும் பலாப்பழங்கள் பெருமளவு அருகில் உள்ள சோளக்காட்டு சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. பழத்தின் அளவைப் பொறுத்து, இவற்றை 30 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை கொடுத்து வாங்கும் வியாபாரிகள், ஒரு சுளையை 50 காசுகளில் இருந்து 2 ரூபாய் வரை விற்பதாகவும் தெரிகிறது. இந்த போக்கால், இவ்வாண்டு தாங்கள் நஷ்டத்தை சந்திப்பதாகவும் கூறுகின்றனர் விவசாயிகள். விளைச்சல் குறைந்துள்ளதால், பலாப் பழத்தை கூடுதல் விலைக்கு விற்கும் வியாபாரிகள், விவசாயிகளுக்கும் லாபம் கிட்டும் வகையில் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. பருவ மழை பொய்ப்பதால், வேறு வழியின்றி, மலைப்பிரதேசத்தில் தலைச்சுமையாக பொருள் சுமந்து விவசாயம் செய்தும், தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதால், இனி விவசாயத்தையே கைவிடும் எண்ணத்திலும் உள்ளதாக பல விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், பலாப்பழ விளைச்சல் குறித்து அப்பகுதி வேளாண் அதிகாரிகளிடம் கேட்டபோது, இவ்வாண்டு மழை குறைந்திருந்தாலும், விளைச்சல் பெரிதாக பாதிக்கப்படவில்லை என்றே கூறுகின்றனர். ஆண்டு முழுக்க இல்லாவிட்டாலும், அவ்வப்போது வரும் சீசன் நேரத்திலாவது, லாபம் கிட்டும் என்ற நம்பிக்கையில் விவசாயத்தில் ஈடுபடுபவர்கள், அந்த நேரத்திலாவது நஷ்டத்தை சந்திக்காத அளவிற்கு நியாயமான விலை பெறுவதை உறுதி செய்யாவிட்டால், எல்லா உணவுப்பொருள் உற்பத்தியும் பாதிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நிலை மாறுமா?! |
பட்டு நூல் பாதிப்பு: பரிதவிக்கும் உடுமலைப்பேட்டை விவசாயிகள் Posted: 12 Jun 2013 09:51 PM PDT இந்திய பட்டாடை உற்பத்திக்கு தேவையான கச்சாப் பட்டு, போதுமான அளவு கிடைக்கவில்லை என்பதால், பலரும் சீனாவில் இருந்து கச்சா பட்டை இறக்குமதி செய்து வந்தனர். ஆனால் இந்த இறக்குமதியால் பட்டு நூல் உற்பத்தி செய்யும் இந்திய விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் எனக் கூறப்பட்டதால், மத்திய அரசு இதற்கு இறக்குமதி வரி விதித்தது. இந்நிலையில், தண்ணீர் இல்லாத காரணத்தாலும், உள்நாட்டு பட்டு நூல் உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் உடுமலைப்பேட்டை விவசாயிகள். திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை பகுதியில், ஆயிரத்து 500 விவசாயிகள் வெண்பட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி, 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், பட்டுப்புழுக்களுக்கு தேவையான மல்பெரி செடி வளர்க்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் உடுமலை பகுதியில் மட்டும் நாளொன்றுக்கு 2 ஆயிரம் கிலோ பட்டுக் கூடுகள் உற்பத்தியாகி வருகிறது. இப்பகுதியில் நிலவும் மிதமான தட்பவெப்ப சூழலே பட்டுத்தொழில் செழிக்க காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது நிலவும் கடும்வறட்சி காரணமாக மல்பெரி செடிகள் காய்ந்து கருகிவிட்டதாக தெரிகிறது. இதனால் மல்பெரி பயிரிடும் பரப்பளவு 500 ஏக்கராக, அதாவது 8ல் ஒரு பகுதியாக குறைந்துவிட்டது. இதனால், பாதிப்பு கண்டுள்ள தங்களையும், அரசின் வறட்சி நிவாரண உதவிக்கு தகுதியானவர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்கிறார்கள் இங்குள்ள பட்டு விவசாயிகள். மறுபுறம், வறட்சி காரணமாக, பட்டுத் தொழிலில் இருந்து விவசாயிகள் மாற்றுத் தொழிலுக்கு மாறும் போக்கும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பட்டுக் கூடுகள் உற்பத்தி குடோன்கள் பலவும் இழுத்து மூடப்பட்டு வருகின்றன. சீன இறக்குமதி பட்டுக்கு வரி உயர்வால், பட்டு நெசவாளிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வறட்சி காரணமாக உள்நாட்டு உற்பத்தியும் இவ்விதம் பாதிக்கப்பட்டுள்ளது கவலையளிப்பதாக உள்ளது. உள்நாட்டு பட்டு உற்பத்தித் தொழிலை ஊக்குவிப்பது மூலம், அரசின் அன்னியச் செலாவணியை மிச்சப்படுவதுடன், கிராமப்புற மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என்பதால், அரசு இவ்விஷயத்தில் தன் கவனத்தை திருப்ப வேண்டும் என்பதே உடுமலை பகுதி மக்களின் எதிர்பார்ப்பு. |
வரி ஏய்ப்பு புகாரில் கால்பந்து வீரர் மெஸ்ஸி Posted: 12 Jun 2013 09:41 PM PDT அர்ஜென்டினா அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் லயனல் மெஸ்ஸி 3 கோடி ரூபாய் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் அவர் மீது கட்டலான் மாகாண நீதிமன்றத்தில் ஸ்பெயின் வருமானவரித்துறை வழக்கறிஞர் ரேகுவெல் அமடோ (RAQUEL AMADO) வரி ஏய்ப்பு தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரை மெஸ்ஸிக்கு கிடைத்த விளம்பர வருமானத்திற்காக செலுத்த வேண்டிய வரியில் அவர் முறைகேடு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு ஃபேஸ்புக்கில் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ள மெஸ்ஸி, தமக்கு இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என்றும் வழக்கு தொடர்பாக ஊடகங்கள் மூலமே தெரிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். முன்னணி கால்பந்து வீரரான லயனல் மெஸ்ஸி விளையாட்டு மூலம் அதிக பணம் சம்பாதிக்கும் வீரர்களில் 10-வது இடத்தில் உள்ளார். அவரது ஆண்டு வருமானம் சுமார் 250 கோடி ஆகும்.இந்தக் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் மெஸ்ஸிக்கு 6 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க ஸ்பெயின் சட்டத்தில் இடம் இருக்கிறது. |
“இந்தியாவில் 160 ஆண்டுகள்…” தந்தி சேவையின் வரலாறு Posted: 12 Jun 2013 09:37 PM PDT இந்தியாவில் கடந்த 160 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட தந்தி சேவை விரைவில் நிறுத்தப்பட உள்ளது. தகவல் பரிமாற்றத்திற்காக பலராலும் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட தந்தி சேவை, அறிவியல் வளர்ச்சி மற்றும் கால சுழற்சியில் வெகுவாக குறைந்துவிட்டது. எதிர்கால சந்ததிகளுக்கு தந்தி சேவை என்றொரு சேவை இருந்தது பற்றி பள்ளிப் புத்தகங்களில் மட்டுமே தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. அமெரிக்காவின் சாமுவேல் மோர்ஸ் கடந்த 1837ம் ஆண்டு தந்தி முறையை கண்டறிந்தார். அதே கால கட்டத்தில் இங்கிலந்தின் குகி மற்றும் வீட்ஸ்டோன் ஆகியோரும் இதே முறையை உருவாக்கி, காப்புரிமை பெற்றனர். 1845ம் ஆண்டு இங்கிலந்தில் தந்தி சேவை தொடங்கப்பட்டது. பின்னர் 1850ம் ஆண்டில் கொல்கத்தாவுக்கும் அதன் புறநகர் பகுதியில் உள்ள டைமண்ட் துறைமுகத்திற்கும் இடையே பரீட்சார்த்த முறையில் தந்தி சேவை தொடங்கப்பட்டது. பின்னர் 1853ல் கொல்கத்தா, ஆக்ரா, மும்பை, சென்னை, ஊட்டி, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இடையே 6,400 கிலோ மீட்டர் தூரத்திற்கு தந்தி சேவைக்கான தொலைத்தொடர்புக் கம்பிகள் நிறுவப்பட்டன. அதற்கு அடுத்த ஆண்டே, தந்தி சேவைக்கான தனித்துறை இந்தியாவில் உருவாக்கப்பட்டது. பின்னர் 1870ல், இங்கிலந்துடன், கம்பி வடங்கள் மூலமாக இந்தியாவின் தந்தி சேவை இணைக்கப்பட்டது. 1882ம் ஆண்டு தொலைபேசி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. 1980களில் நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் தந்திகள் அனுப்பப்பட்டன. பின்னர் 1991-92ம் ஆண்டுகளில் மட்டும் அதிகபட்சமாக ஆறரை கோடி தந்திகள் அனுப்பப்பட்டன. இந்த எண்ணிக்கை 1995-96ல் ஐந்து புள்ளி ஆறு கோடியாகவும், 2000 முதல் 2001ம் ஆண்டுகளில் மூன்றரை கோடியாகவும் சரிந்தது. குறைந்த கட்டண தொலைபேசி சேவை மற்றும் இணையதள சேவை ஆகியவற்றின் அறிமுகம் காரணமாக முக்கியத்துவத்தை இழந்த தந்தி சேவை, காலத்தின் சுழற்சியில் இன்று முற்றிலுமாக மறைந்து போகும் நிலைக்கு வந்துள்ளது. |
பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 5 மாணவர்கள் காயம் Posted: 12 Jun 2013 09:03 PM PDT திருச்சி மாவட்டம் முசிறி அருகே பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் 5 மாணவர்கள் காயமடைந்தனர். தொட்டியம் தாலுக்காவிற்கு உட்பட்ட நாகையநல்லூர் கிராமத்தில் ஸ்ரீபிரம்மராம்பிகா வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி உள்ளது. இங்கு, எல்.கே.ஜி முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 15 மாணவர்களை மினி பேருந்தில் ஏற்றிக்கொண்டு, ஓட்டுநர் வசந்தகுமார் சென்றார். அப்போது களத்தூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5 சிறுவர்கள் காயமடைந்தனர். அவர்களில் படுகாயடைந்த சந்தோஷ் என்ற சிறுவன் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். பேருந்தை ஓட்டும் போது,வசந்தகுமார் குடிபோதையில் இருந்ததே விபத்திற்கு காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து, தமிழகத்தில் பள்ளிகள் தொடங்கிய 3-வது நாளே விபத்து நடந்துள்ளது. |
நாமக்கல்லில் இடிந்து விழும் நிலையில் மின் கம்பங்களை மாற்ற கோரிக்கை Posted: 12 Jun 2013 09:01 PM PDT நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பழுதான மின் கம்பங்களால் மின்சார டிரான்ஸ்பார்மர்கள் கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். உடனடியாக பழுதான மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. திருச்செங்கோடு அடுத்துள்ள குமரமங்கலம் பாண்டீஸ்வரர் கோயில் அருகே 220 கிலோ வோல்ட் திறன் கொண்ட உயர் மின்னழுத்த டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. 600 கிலோவிற்கும் மேல் எடை கொண்ட இந்த டிரான்ஸ்பார்மரை இரண்டு சிமெண்ட் கம்பங்களே தாங்கி நிற்கின்றன. இதே போல புதூர் காலனி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 4 மின் கம்பங்களும் முற்றிலுமாக சிதிலமடைந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது. மின் கம்பத்திற்கு அருகிலேயே குடியிருப்புகள் இருப்பதால் அச்சத்துடனே இருப்பதாக கூறுகின்றனர் அப்பகுதிமக்கள். பொதுமக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து மின் பொறியாளர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்ட போது, பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுவதற்கு திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய மின் கம்பங்கள் வந்த உடனே மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. |
அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது: மு.க.ஸ்டாலின் Posted: 12 Jun 2013 08:59 PM PDT அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கோவை மாவட்டம் சூலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியின் பல நல்ல திட்டங்களை அதிமுக அரசு ரத்து செய்திருப்பதாகவும் கூறினார். திமுக மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியால் சமச்சீர் கல்வியை கைவிட முதலமைச்சர் ஜெயலலிதா முயன்றதாகவும், நீதிமன்றத்தை அணுகியதன் மூலமாக,சமச்சீர் கல்வி தமிழகத்தில் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அண்ணாதுரை முதலமைச்சர் பதவி வகித்தபோதே,சேது சமுத்திர திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் என்றும்,இந்த திட்டத்தை எம்.ஜி.ஆர் ஆதரித்தார் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்த திட்டம் முழுமைப் பெற்றால்,முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பெயர் கிடைத்து விடும் என்னும் காரணத்தினால்தான், இந்த திட்டத்தை அதிமுக அரசு எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். காணொளி:<அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது: மு.க.ஸ்டாலின்> |
விருதுநகர் பட்டாசு ஆலைகளில் தொடரும் விபத்து: சாலைகளை மேம்படுத்த கோரிக்கை Posted: 12 Jun 2013 07:51 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு சாலைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. சீரற்ற சாலைகளால், விபத்துகள் ஏற்படுவதாகவும், மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். விருதுநகரில் ஏராளமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இவைகளில் பெரும்பாலான ஆலைகள் ஊருக்கு ஒதுக்கு புறமாகவே அமைந்துள்ளன. இந்த ஆலைகளுக்கு செல்ல ஒற்றையடி பாதை அல்லது மண் பாதைகளே பயன்படுத்தப்படுகின்றன. இதனால், பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற்படும் போது மீட்பு பணிகளில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. முதலிப்பட்டி பட்டாசு ஆலை விபத்தை தொடர்ந்து, சாலைகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து முதலிப்பட்டியின் ஒரு சில பகுதிகளில் மட்டும் சாலைகள் அமைக்கப்பட்டன. மற்ற பகுதிகள் இப்படி மண் தரையாகவே காட்சியளிக்கின்றன. இதுகுறித்து முதலிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாண்டியம்மாளை தொடர்பு கொண்டு கேட்டபோது, முதலிப்பட்டியில் இருந்து ஆலமரத்துபட்டி வரை 5 கிலோ மீட்டருக்கு சாலை அமைக்க ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், நாராயணாபுரம் வரை சாலை அமைக்க நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் கூறினார். |
You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |