விழியே பேசு... |
- புதிய பாதை' படம் மீண்டும் தயாராகிறது! பார்த்திபன் நடித்து இயக்குகிறார்! அப்ப சீதா
- அப்பாவாக இருந்து மகளை எப்படி ரசிக்க முடியும்! ஸ்ருதிஹாசன் பற்றி கமலஹாசன்!
- 'பஞ்சதந்திரம்-2' எடுக்கும் ரவிக்குமார், கமல்: சிம்ரன் உண்டா?
- ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி: ரிசர்வ் வங்கி கவர்னருடன் பிரதமர் ஆலோசனை
- காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: விரைவில் மின்வெட்டு தீரும்
- சென்னை சூப்பர் கிங்ஸ் பைனலில் நுழைந்தது... விசில் போடு!
- நரேந்திர மோடிக்கும் சஞ்சய் ஜோஷிக்கும் என்னதான் பிரச்சனை?
- பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியா விரைவில் மீளும்: அப்துல் கலாம்
- புதுக்கோட்டை: அதிமுக வேட்பாளரை எதிர்க்கும் அதிமுக அதிருப்தி வேட்பாளர்
- 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: எஸ்ஸார் மற்றும் லூப் நிறுவன அதிபர்களுக்கு ஜாமீன்
- ஆண்களை தகுதியில்லாதவர்களாக நினைக்கிறார் ஜெ: அன்புமணி
- பெட்ரோல் விலை உயர்வு எதிரொலி: மாநிலங்களில் பந்த் அறிவிப்பு
- அடுத்த சாவித்ரி.. எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த 'கீரோயின்'!
- மதுரை ஆட்சியர், எஸ்.பி. மாற்றத்தின் பின்னணி என்ன?
- விஜய்க்கு என்ன 17 வயசா? பிரபுதேவாவை கேட்ட அக்ஷய் குமார்
- உதயகுமார் கேள்விகளுக்கு இந்திய அணுமின்கழகம் பதில்
- நடிகர் திலீப் மாரடைப்பால் மரணம்
- தாண்டவம் எனக்கு இன்னொரு மங்காத்தா: லக்ஷ்மி ராய்
- ஆப்கானிஸ்தானில் பள்ளி மாணவிகள் மீது தீவிரவாதிகள் விஷவாயு தாக்குதல்: 125 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
- கார்த்திக்கு வயசு 35: தலைவர்கள் ரேஞ்சில் பிறந்தநாள் கொண்டாட்டம்
- மானபங்க விவகாரம்: கிரிக்கெட் வீரருக்கு எதிரான வழக்கு கோர்ட்டில் ரத்து
- தன்னைத் தானே எதிர்த்து 30-ம் தேதி திமுக போராட்டம்!
- முதுநிலை ஆசிரியர்களுக்கான 2800 காலி இடங்களுக்கு நாளை மறுநாள் தேர்வு
| புதிய பாதை' படம் மீண்டும் தயாராகிறது! பார்த்திபன் நடித்து இயக்குகிறார்! அப்ப சீதா Posted: 25 May 2012 09:08 PM PDT பார்த்திபன் நடித்து டைரக்டு செய்து, 20 வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம், புதிய பாதை.' தன்னை கெடுத்த ரவுடியை தேடிப்போய் அவனுடன் வாழ்ந்த ஒரு துணிச்சல் மிகுந்த பெண்ணை பற்றிய கதை இது. அதில், ரவுடியாக பார்த்திபனும், அவருடன் வாழ்கிற துணிச்சல் மிகுந்த பெண்ணாக சீதாவும் நடித்து இருந்தார்கள். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, பார்த்திபனே டைரக்டும் செய்திருந்தார். தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய படங்களில் இதுவும் ஒன்று. இந்த படத்தில் நடிக்கும்போதுதான் பார்த்திபன் சீதா இடையே காதல் மலர்ந்தது. படம் முடிந்ததும் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள். 20 வருடங்களுக்குப்பின், புதிய பாதை' படம் மீண்டும் தயாராகிறது. பார்த்திபனே நடித்து, தயாரித்து, டைரக்டு செய்கிறார். படத்துக்கு, மீண்டும் புதிய பாதை' என்று அவர் பெயர் சூட்டியிருக்கிறார். இதுபற்றி பார்த்திபன் கூறியதாவது: அந்தக்காலத்தில், பி.யு.சின்னப்பா நடித்த படங்கள் மீண்டும் தயாரானபோது எம்.ஜி.ஆர். நடித்தார். ரஜினிகாந்த் நடித்த படம் மீண்டும் தயாரானபோது அஜீத் நடித்தார். ஆனால், 20 வருடங்களுக்கு முன்பு ஒரு நடிகர் நடித்த படம் மீண்டும் தயாராகிறபோது, அதே நடிகர் நடிப்பது, உலக சினிமா வரலாற்றில் இதுதான் முதல்முறை. அந்த வகையில், இது உலக சாதனை. புதிய பாதை' படத்தின் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு, இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி மீண்டும் புதிய பாதை' படத்தின் கதையை எழுதியிருக்கிறேன். கதாநாயகியாக நடிக்க இரண்டு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஜுன் 15ந் தேதி, சென்னையில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.'' இவ்வாறு பார்த்திபன் கூறினார். |
| அப்பாவாக இருந்து மகளை எப்படி ரசிக்க முடியும்! ஸ்ருதிஹாசன் பற்றி கமலஹாசன்! Posted: 25 May 2012 08:51 PM PDT சென்னையில் ஏபிஸ்ரீதரின் கலைக் கண்காட்சியை நடிகர் கமலஹாசன் (25.05.2012) திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது ஸ்ருதிஹாசன் நடிப்பு பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், அப்பாவாக இருந்து ஸ்ருதிஹாசனை ரசிக்க முடியவில்லை. அவரது நடிப்பை ரசிகனாக ரசித்து பார்க்க முடியவில்லை. அப்பாவாக இருந்து மகளை எப்படி ரசிக்க முடியும் என்றார். தமிழ், தெலுங்கு முன்னணி கதாநாயர்களுடன் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். சமீபத்திய திரைப்படங்களில் அவர் கவர்ச்சியில் தாராளம் காட்டி நடிப்பது குறிப்பிடத்தக்கது. |
| 'பஞ்சதந்திரம்-2' எடுக்கும் ரவிக்குமார், கமல்: சிம்ரன் உண்டா? Posted: 25 May 2012 08:21 PM PDT கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வந்த பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவிருக்கிறார்களாம். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன், சிம்ரன், ஜெயராம், ஊர்வசி, ரம்யா கிருஷ்ணன், தேவயாணி, ரமேஷ் அரவிந்த், சங்கவி, யுகி சேது, ஐஸ்வர்யா, ஸ்ரீமன், நாகேஷ் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்த முழு நீள காமெடி படம் பஞ்சதந்திரம். 2002ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது எடுக்கவிருக்கிறார்களாம். ஆனால் ரவிக்குமார் சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் படத்தை மேற்பார்வையிடுவதில் பிசியாக உள்ளார். அதே போன்று கமல் விஸ்வரூபம் படத்தை முடிப்பதில் முனைப்பாக உள்ளார். இந்த இருவரும் அவரவர் படங்களை முடித்த பிறகு பஞ்சதந்திரம் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. பஞ்சதந்திரத்தில் கமல் ஜோடியாக சிம்ரன் நடித்தார். இரண்டாம் பாகத்தின் நாயகி யாரோ தெரியவில்லை. அதேபோல் அந்த படத்தில் நடித்த கமலின் ஆஸ்தான நடிகர் நாகேஷ் தற்போது உயிரோடு இல்லை. அவர் கதாபாத்திரத்திற்கு வேறு யாரையாவது தான் போட வேண்டும். பஞ்சதந்திரம்-2 படத்திற்கும் வசனங்கள் எழுதப்போவது கிரேஸி மோகன் தான். ஆக மனம் விட்டு சிரிக்க ஒரு படம் வரவிருக்கிறது. |
| ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி: ரிசர்வ் வங்கி கவர்னருடன் பிரதமர் ஆலோசனை Posted: 25 May 2012 08:18 PM PDT அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த மார்ச் மாதத்தில் இருந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. கடந்த புதன்கிழமை, முன் எப்போதும் இல்லாத அளவாக ஒரு டாலருக்கான ரூபாய் மதிப்பு 56 ரூபாயாக சரிவடைந்தது. இந்த வீழ்ச்சி காரணமாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற பொருட்களின் விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில், இப்பிரச்சினை குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ், திட்ட கமிஷன் துணைத்தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா ஆகியோருடன் பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது, பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் சி.ரங்கராஜனும் உடன் இருந்தார். இந்த ஆலோசனை குறித்து பேசிய சி.ரங்கராஜன், 'ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து பிரதமர் எங்களுடன் ஆலோசனை நடத்தினார். ஒட்டுமொத்த பொருளாதார சூழ்நிலை குறித்தும் விவாதித்தோம். ரூபாய் மதிப்பு சரிவடைவதை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி, எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்க டாலரை மொத்தமாக விற்று விடலாம். நான் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தபோது இப்படி செய்யப்பட்டது. ஆனால் இந்த யோசனையை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும்' என்றார். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்க டாலரை விற்கும் யோசனை பரிசீலனையில் இருப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ் தெரிவித்தார். |
| காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: விரைவில் மின்வெட்டு தீரும் Posted: 25 May 2012 08:14 PM PDT தமிழகத்தில் மின்சார தேவை அதிகரித்ததை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக மின்வெட்டு நிலவிவருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் காற்றின் வேகம் அதிகரித்ததை தொடர்ந்து, காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சார உற்பத்தி அதிகரிக்க தொடங்கியது. இதனால், சென்னை தவிர தமிழக கிராமங்களில் மின் வெட்டு நேரம் படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்த நிலையில், கடந்த 15 நாட்களாக காற்றின் வேகம் குறையத் தொடங்கியது. இதனால், காற்றாலை மின்உற்பத்தியும் 20 சதவீதமாக குறைந்தது. இதற்கிடையே கடந்த வாரம் மீண்டும் காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கியது. காற்றாலை மின் உற்பத்தியும் 2,500 மெகாவாட் அளவுக்கு உயரத் தொடங்கியது. நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த ஒரு நாளில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி 3,248 மெகா வாட்டாக அதிகரித்தது. அதாவது, தமிழகத்தில் உற்பத்தியாகும் மொத்த மின் உற்பத்தியில் 3-ல் ஒரு பங்கு காற்றாலை மூலம் கிடைத்தது. காற்றாலை மூலம் மின் உற்பத்தி இந்த அளவுக்கு அதிகமாக கிடைப்பது இதுவே முதல் முறையாகும். அதே நேரத்தில், நுகர்வோர்களால் 72.002 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்திய காற்றாலை சங்க தலைவர் கே.கஸ்தூரி ரங்கையன் கூறும்போது, '25-ந் தேதி காலை 8 மணி நிலவரப்படி, காற்றாலை மூலம் 33 சதவீத மின் உற்பத்தி கிடைத்துள்ளது. இதை ஒரு உலக சாதனை என்றே சொல்ல வேண்டும். எந்த ஒரு நாட்டிலும் காற்றாலை மூலம் இந்த அளவுக்கு மின் உற்பத்தி செய்தது கிடையாது. வரும் ஜுன், ஜுலை மாதங்களில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், காற்றாலை மின் உற்பத்தி மேலும் உயர வாய்ப்பு உள்ளது. எனவே, காற்றாலை மின்சார உற்பத்தியை சரியாக பயன்படுத்திய மின்வாரிய என்ஜினீயர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்' என்றார். கூடங்குளம் அணுமின் நிலையத்திலும் விரைவில் மின் உற்பத்தி தொடங்கப்பட இருப்பதால் தமிழ்நாட்டில் மின்வெட்டு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
| சென்னை சூப்பர் கிங்ஸ் பைனலில் நுழைந்தது... விசில் போடு! Posted: 25 May 2012 11:47 AM PDT ஐபிஎல் 5 தொடரின் இறுதிப் போட்டிக்கான தகுதிப் போட்டியில் 223 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை விரட்டிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 16.5 ஓவர்களில் 136 ரன்களில் சுருண்டது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 86 ரன்களில் வெற்றிப் பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஐபிஎல் 5 தொடரின் இறுதிப் போட்டிக்கான தகுதிப் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு துவக்க வீரர் முரளி விஜய் முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை அடித்து அதிரடி துவக்கம் அளித்து 28 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஆனால் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து பொறுமையாக ஆடிய மைக்கேல் ஹஸ்ஸி 20 ரன்களில் ஓஜாவிடம் கேட்சாகி வெளியேறினார். அதன்பிறகு வந்த சுரேஷ் ரெய்னா 17 பந்துகளில் 1 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 27 ரன்களில் பவான் நிகியின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் டோணி 10 பந்துகளில் 2 சிக்ஸ், 1 பவுண்டரிகள் அடித்து 23 ரன்களை எடுத்து வரூண் ஆரோன் பந்தில் அவுட்டானார். விக்கெட்கள் ஒருபுறம் சரிந்து கொண்டிருக்க துவக்க வீரர் முரளி விஜய் தொடர்ந்து அதிரடியாக ஆடி 51 பந்துகளில் சதமடித்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆல்பி மார்கல் டக் அவுட்டாக, கடைசிக் கட்டத்தில் பிராவோ 12 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 33 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். கடைசி பந்தில் ரன் அவுட்டான துவக்க வீரர் முரளி விஜய் 58 பந்துகளில் 4 சிக்ஸ், 15 பவுண்டரிகள் அடித்து 113 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்களை இழந்து 222 ரன்கள் குவித்தது. 223 ரன்கள் எடுத்த வெற்றிப் பெறலாம் என்ற இமாலய ஸ்கோரை விரட்டிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி துவக்கம் முதலே திணறியது. துவக்க வீரர் டேவிட் வார்னர் 3 ரன்கள் எடுத்த நிலையில் முரளி விஜய்யிடம் கேட்சாகி வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஷேவாக் 1 ரன் மட்டுமே எடுத்து ஹஸ்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதிரடியாக ஆடி வந்த ரோஸ் டெய்லர் 14 பந்துகளில் 2 சிக்ஸ், 1 பவுண்டரி அடித்து 24 ரன்களில் சுரேஷ் ரெய்னாவிடம் கேட்சாகி வெளியேறினார். விக்கெட்கள் ஒருபுறம் சரிய பொறுப்பாக ஆடி வந்த துவக்க வீரர் ஜெயவர்த்தனே அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார். ரஸல்(16), நாமன் ஓஜா(7) என்று அடுத்தடுத்து விக்கெட்கள் சரிய, அரைசதம் கடந்த ஜெயவர்த்தனே 55 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வினிடம் போல்டானார். அதன்பிறகு வந்த சன்னி குப்தா(0), உமேஷ் யாதவ்(1), வரூண் ஆரேன்(0) என்று வரிசையாக விக்கெட்கள் வீழ்ந்தன. 16.5 ஓவர்களில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 136 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 86 ரன்களில் அபார வெற்றிப் பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் அஸ்வின் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார். தகுதி போட்டியில் அபார வெற்றிப் பெற்றதன் மூலம் நாளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான இறுதிப் போட்டியில் மோத சென்னை சூப்பர் கிங்ஸ் தகுதிப் பெற்றது. |
| நரேந்திர மோடிக்கும் சஞ்சய் ஜோஷிக்கும் என்னதான் பிரச்சனை? Posted: 25 May 2012 10:44 AM PDT பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் குஜராத் முதல்வர் மோடியை பங்கேற்க வைப்பதற்காக தேசியச் செயலர் பொறுப்பிலிருந்து சஞ்சய் ஜோஷி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டிருந்தார். அப்படி என்னதான் சஞ்சய் ஜோடிக்கும் நரேந்திர மோடிக்கும் இடையே தகராறு? என்பதுதான் பலரது கேள்வி.. இதில் ஆச்சரியம் என்னவெனில் இருவரும் குஜராத் மாநிலத்தில் பாஜகவின் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இருந்தவர்கள் என்பதுதான்... சஞ்சய் ஜோஷி மஹாராஷ்டிர மாநில ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பணியாற்றியவர் சஞ்சய் ஜோஷி. 1988-89-ம் ஆண்டில் குஜராத்தின் அகமதாபாத்துக்கு ஜாகையை மாற்றிக் கொண்டு பாஜகவில் இணைந்து பணியாற்றுகிறார். 1990-ம் ஆண்டு குஜராத் மாநில பாஜக பொதுச் செயலாளராக இருந்தார் நரேந்திர மோடி. அப்போது கட்சியின் செயலாளர் பொறுப்பில் இருதவர் சஞ்சய் ஜோஷி. இருவரும் 5 ஆண்டுகாலம் இணைந்து பணியாற்றினர். இருவரும் இணைந்து பணியாற்றிய காலம் என்பது குஜராத் மாநிலத்தில் பாஜகவுக்கு அடித்தளம் போட்டுக் கொடுத்தது. இதனால் 1995-ம் ஆண்டு கேசுபாய் பட்டேல் தலைமையில் பாஜக முதல் முறையாக குஜராத்தில் ஆட்சியை அமைத்தது. ஆனால் பாஜகவின் மற்றொரு தலைவரான சங்கர்சிங் வகேலா கட்சிக்குள் போர்க்கொடி தூக்கியதால் கட்சி கலகலக்கிறது. அப்போது மாநில அரசியலில் மோடியின் பங்களிப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. 1995-ம் ஆண்டு 117 இடங்களை பாஜக பெற்றபோது மோடி இருந்தார். மோடி டெல்லி அரசியலுக்கு இடம் மாற்றப்பட்ட நிலையிலும், அவர் இல்லாமலேயே குஜராத்தில் 1998-ம் ஆண்டில் 121இடங்களை பாஜக கைப்பற்றியது. இந்த காலகட்டத்தில்தான் சஞ்சய் ஜோஷிக்கும் மோடிக்கும் இடையே முட்டல் ஏற்படத் தொடங்குகிறது. 1998-ல் மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்ப மோடி விருப்பம் தெரிவிக்கிறார். ஆனால் ஜோஷியோ இதை விரும்பவில்லை. அவரை மாநில அரசியலுக்கு வர விடாமல் தடுத்தார் ஜோஷி. நரேந்திர மோடி 1998-ம் ஆண்டு குஜராத்தில் கேசுபாய் பட்டேல் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார். அப்போது கேசுபாய் பட்டேலுக்கு எதிராக பாஜகவில் கலகக் குரல் எழுகிறது. மாநிலத்தில் நடைபெற்ற இரண்டு முக்கிய இடைத் தேர்தல்களில் ஆளும் பாஜக தோற்றுப் போக 2001-ல் மோடியை முதல்வராக்குகிறது பாஜக. குஜராத் முதல்வராக மோடி பதவியேற்க சஞ்சய் ஜோஷியை டெல்லிக்கு அழைக்கிறது பாஜக மேலிடம். பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பேற்கிறார் சஞ்சய் ஜோஷி. அடுத்த சில ஆண்டுகளில் தமக்கான செல்வாக்கை மேலிடத்தில் வளர்த்துக் கொண்டு விஸ்வரூபமெடுக்கிறார் சஞ்சய் ஜோஷி. ஆனால் 2005-ம் ஆண்டு சஞ்சய் ஜோஷிக்கு பலத்த அடி விழுகிறது. ஜோஷி ஒரு பெண்ணுடன் குஜாலாக இருப்பது போன்ற சர்ச்சைக்குரிய சிடி ஒன்று வெளியிடப்பட்டு கட்சிக்குள் அதிர்வலைகள் ஏற்படுகிறது. இதனால் கட்சிப் பொறுப்பிலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார் ஜோஷி. இந்த சிடி வெளியாக மோடியின் முகாம்தான் காரணம் என்று ஜோஷி கருதினார். இதனால் மோதல் மீண்டும் அதிகமானது. பின்னர் குஜராத்துக்குத் திரும்பி முதல்வர் பதவியைப் பிடித்தார் மோடி. ஒருவழியாக ஜோஷியை கட்சியில் ஓரங்கட்டியாச்சு என்று நிம்மதிப் பெருமூச்சுடன் வலம் வந்த நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளர் என்ற நிலைக்கும் உயர்ந்தார். ஆனால் மீண்டும் இப்போது மோடிக்கு குடைச்சலாக கேசுபாய் பட்டேல் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். அவருக்கு ஜோஷி ஆதரவும் தந்து வருகிறார். அதேபோல் சஞ்சய் ஜோஷியை அண்மையில் நடைபெற்ற உத்தரப்பிரதேச தேர்தல் பொறுப்பாளராக கத்காரி முன்னிறுத்தினார். இதனால் செம கடுப்பில் இருந்த மோடி அந்த மாநில தேர்தல் பிரச்சாரத்துக்குக் கூட செல்லவில்லை. சஞ்சய் ஜோஷியை மீண்டும் முன்னிறுத்திய கோபத்தை தேசிய செயற் குழுவை வைத்து பகிரங்கப்படுத்தினார் மோடி. வேறுவழியின்றி மோடிக்காக மீண்டும் ஒருமுறை ஜோஷியை செயற்குழுவில் இருந்து நீக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது பாஜக. மோடியின் தீவிர ஆதரவாளரான அருண் ஜேட்லியின் முயற்சியால் ஜோஷியை இப்போது ஓரம் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் கத்காரி. ஆனால், ஜோஷி-மோடி விவகாரம் இத்துடன் முடிந்துவிட்டதாக மட்டும் யாரும் நினைத்துவிட வேண்டாம். |
| பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியா விரைவில் மீளும்: அப்துல் கலாம் Posted: 25 May 2012 10:38 AM PDT அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஐ.ஐ.டியின் 14-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது:- இந்தியாவின் பொருளாதார நெகிழ்வுத்திறனால் விரைவில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து விரைவில் மீளும். இந்தியா 400 மில்லியன் நடுத்தர வர்க்கத்தினரை கொண்ட நாடு. பலம் வாய்ந்த நாடு. எனவே அதன் உள்ளார்ந்த பலம் காரணமாக மீண்டு வர வாய்ப்புள்ளது. விவசாயிகளின் கடின உழைப்பால் கடந்த ஆண்டைவிட 18 மில்லியன் டன் அதிகமாக உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். |
| புதுக்கோட்டை: அதிமுக வேட்பாளரை எதிர்க்கும் அதிமுக அதிருப்தி வேட்பாளர் Posted: 25 May 2012 10:35 AM PDT புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் சீட் கிடைக்காத முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரவிச்சந்திரன் இன்று சுயேட்சை வேட்பாளராக வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக கார்த்திக் தொண்டைமானை நிறுத்தியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இந் நிலையில் 1990ம் ஆண்டு முதல் அதிமுகவில் இருந்து வரும் ரவிச்சந்திரன் அவருக்குப் போட்டியாக சுயேச்சை வேட்பாளராக மனு செய்துள்ளார். கடந்த 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை ஊராட்சித் தலைவராக இருந்த இவருக்கு கடந்த ஒன்றியக் கவுன்சிலருக்கான தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் முடிந்தது: இந் நிலையில் இந்த இடைத் தேர்ததலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. இந்தத் தொகுதியில் அடுத்த மாதம் (ஜுன்) 12ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டைமான், தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் சீனிவாசன் உள்பட 24 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதில் 21 பேர் சுயேச்சைகள். வேட்பு மனுக்களை வாபஸ் பெற வரும் 28ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஜுன் 12ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 15ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். இந்தத் தேர்தலை திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துவிட்ட நிலையில், அதிமுக-தேமுதிக இடையே இரு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. சங்கரன்கோவிலைப் போலவே இந்தத் தொகுதியிலும் அமைச்சர்கள் அனைவருமே கூண்டோடு முகாமிட்டு 'வேலை' பார்த்து வருகின்றனர். |
| 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: எஸ்ஸார் மற்றும் லூப் நிறுவன அதிபர்களுக்கு ஜாமீன் Posted: 25 May 2012 10:24 AM PDT 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதாகி, திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எஸ்ஸார் மற்றும் லூப் நிறுவனங்களின் அதிபர்களுக்கு டில்லி சி.பி.ஐ. நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. தி.மு.க.வைச் சேர்ந்த ராஜா மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, பல்வேறு நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை வழங்கியதில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த ஊழல் காரணமாக அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமைத் தணிக்கை அதிகாரி அறிக்கை சமர்ப்பித்தார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதாகி, திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜா உள்ளிட்டோர் ஏற்கனவே ஜாமீனில் விடுதலையாகி விட்டனர். இந்த நிலையில், ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதாகி, திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எஸ்ஸார் குரூப் நிறுவன அதிபர்கள் ரவி ருயா, அன்ஷுமன் ருயா, இயக்குநர் விகாஷ் சராப் மற்றும் லூப் டெலிகாம் நிறுவன அதிபர்கள் ஐ.பி.கேதான், கிரண் கேதான் ஆகியோர் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி,டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஓ.பி.சைனி, ரவி ருயா, அன்ஷுமன் ருயா உள்ளிட்ட 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். |
| ஆண்களை தகுதியில்லாதவர்களாக நினைக்கிறார் ஜெ: அன்புமணி Posted: 25 May 2012 07:37 AM PDT தாலிக்கு தங்கத்தை இலவசமாகக் கொடுத்து ஆண்களை தகுதியில்லாதவர்களாக நினைக்கிறார் முதல்வர் ஜெயலலிதா என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறினார். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் திருமண விழா மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்ற நிகழ்ச்சிகளில் பேசிய அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. தனித்துப் போட்டியிட்டு 2016ம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சியை பிடிக்கும். அதற்கு லட்சக்கணக்கான இளைஞர்களை கட்சியில் சேர்க்க வேண்டும். விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கூடிய விரைவில் இல்லாமல் போய் விடும். தமிழ்நாட்டை வன்னியர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் தான் ஆள வேண்டும்.திராவிட கட்சிகள் 46 ஆண்டுகளாக நம்மை ஏமாற்றி வருகின்றன. தமிழ்நாட்டில் 3 கலாச்சாரங்கள் உள்ளது. ஒன்று சாராயம். இரண்டு சினிமா, மூன்று இலவசம். இலவசத்தால் தமிழக மக்கள் பிச்சைக்காரர்களாக மாறினார்கள். மக்கள் ஆடு, மாடு, மிக்சி, கிரைண்டருக்கு கையேந்தி நிற்கிறார்கள். தமிழர்கள் தன்மானத்தோடு வாழ வேண்டும். தாலிக்கு தங்கத்தை இலவசமாகக் கொடுத்து ஆண்களை தகுதியில்லாதவர்களாக நினைக்கிறார் ஜெயலலிதா. கரும்பு டன் ஒன்றுக்கு ஜெயலலிதா அரசு ரூ 2,500 வழங்குவதாக கூறினார். ஆனால் இதுவரை வழங்கவில்லை என்றார். |
| பெட்ரோல் விலை உயர்வு எதிரொலி: மாநிலங்களில் பந்த் அறிவிப்பு Posted: 25 May 2012 06:38 AM PDT இரண்டு தினங்களுக்கு முன் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வை கண்டித்து பல மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டங்கள் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளன. நேற்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 30-ந்தேதி முழு அடைப்புக்கு தி.மு.க. அழைப்பு விடுத்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சி சார்பிலும், ஒடிசாவில் ஆளும் பாரதீய ஜனதா தள கட்சி சார்பிலும் 31-ந்தேதி முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மே 26 முதல் 30-ந்தேதி வரை எதிர்ப்பு போராட்டங்களும் மே 31-ந்தேதி கண்டன பேரணி நடத்தப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. |
| அடுத்த சாவித்ரி.. எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த 'கீரோயின்'! Posted: 25 May 2012 05:32 AM PDT இசை' படத்திற்காக 'அடுத்த சாவித்ரியை' அழைத்து வந்துள்ளாராம் இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் எஸ்.ஜே. சூர்யா. இயக்குனர், நடிகர் எஸ்.ஜே. சூர்யா இசை படம் மூலம் இசையமப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவரது வாலி, நியூ படங்களில் நடித்த சிம்ரன் திருமணமாகி செட்டிலானவுடன் தனது அ, ஆ படத்திற்கு அலைந்து, திரிந்து நிலாவை அழைத்து வந்து 'கீரோயினாக' (இப்படித்தான் கோலிவுட்டில் பலர் சொல்லித் திரிகிறார்கள்) அறிமுகப்படுத்தினார். அவர் தான் அடுத்த சிம்ரன் என்றார். ஆனால் நிலா ஒரு சில படங்களில் நடித்துள்ள நிலையில் கள்ளக்காதல், கொலை வழக்கில் சிக்கினார். இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா தானே இயக்கி, இசையமைத்து, நடிக்கும் 'இசை' படத்திற்காக பெருநகரங்களில் எல்லாம் அலைந்து கடைசியாக சுலக்னா என்பவரை அழைத்து வந்துள்ளார். முதல் படத்திலேயே சுலக்னா நடிப்பில் பின்னி பெடல் எடுக்கிறாராம். அதனால் அவரை அடுத்த நடிகையர் திலகம் சாவித்ரி என்றே கூறலாம் என்கிறார் சூர்யா. பட போஸ்டரில் கூட 'எஸ்.ஜே.சூர்யா- எஸ்.சாவித்திரி இணைந்து கலக்கும்' என்று தான் போடப்போகிறாராம். சுலக்னா அடுத்த சாவித்ரியாவாரா அல்லது காணாமல் போவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இப்படி இசையமைக்கும் வினோத ஆசை எப்படி வந்தது என்று கேட்டதற்கு, உங்களால் இசையமைக்க முடியும் என்று என்னுள் இருந்த இசையமைப்பாளரை வெளியே கொண்டு வந்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் என்றார். ரஹ்மான் காரணமில்லாமல் சொல்லி இருக்க மாட்டார் என்று கூறியுள்ளார் சூர்யா. |
| மதுரை ஆட்சியர், எஸ்.பி. மாற்றத்தின் பின்னணி என்ன? Posted: 25 May 2012 05:12 AM PDT மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் மற்றும் எஸ்.பி. அஸ்ரா கார்க் ஆகியோருக்கு இடையே தொடங்கிய ஈகோ யுத்தம்தான் இப்பொழுது இடமாற்றம் வரைக்கும் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் சகாயம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை உளவுத்துறை மூலமாக முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு அஸ்ரா கார்க் கொண்டு சென்றதாகவும் இதைத் தொடர்ந்தே சகாயம் இடமாற்றம் செய்யப்பட்டு கோ ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் பதவிக்கு தூக்கியடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரை ஆதீனம் விவகாரத்தில், மதுரை ஆதீனத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என மதுரை ஆதீன மீட்பு குழுவினர் மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயத்திடம் மனு அளித்தனர். அதன் மீது விசாரணை நடத்த சகாயம் உத்தரவிட்டதாக கூறப்படுகின்றது. மேலும், நித்தியானந்தாவிற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற போது, அது குறித்து காவல்துறை தலைமையிடம் அஸ்ரா கார்க்கும், சகாயமும் விவாதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதில் இருவரும் இணைந்து செயல்படாமல் ஒருவருக்கொருவர் இஸ்டத்துக்கு செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் மதுரையைச் சுற்றியுள்ள அமைச்சர்கள் சிலர் சொல்வதை சகாயமும், மதுரை எஸ்.பி. அஸ்ரா கார்க்கும் கேட்பதே கிடையாது. அவர்களை வைத்துக் கொண்டு செயல்பட்டால் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயராக முடியாது என அதிமுக தலைமையிடம் அமைச்சர் ஒருவர் புகார் மனு வாசித்ததாகவும் ஒரு தகவல் உண்டு. இதனால்தான் இருவருக்கும் டிரான்ஸ்பர் கிடைச்சதாகவும் சொல்லப்படுகிறது.. நேர்மையாக தாம் உண்டு வேலை உண்டு என்றிருந்தாலும் பஞ்சாயத்து.. அய்யா ..சாமி என்று ஆமாம் சாமி போட்டாலும் பஞ்சாயத்து.. ! |
| விஜய்க்கு என்ன 17 வயசா? பிரபுதேவாவை கேட்ட அக்ஷய் குமார் Posted: 25 May 2012 04:36 AM PDT பிரபுதேவா இயக்கும் இந்தி படமான ரவுடி ரத்தோரில் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட வந்த இளைய தளபதி விஜயை பார்த்த அக்ஷய் குமார் அவருக்கு என்ன 17 வயதா என்று கேட்டுள்ளார். சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் பிரவுதேவா இயக்கி வரும் இந்தி படம் ரவுடி ரத்தோர். நம்ம கார்த்தி நடித்த சிறுத்தையின் ரீமேக். இதில் அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா நடிக்கின்றனர். இதில் ஒரு பாடலுக்கு இளைய தளபதி விஜய் நச்சுன்னு ஆடியுள்ளார் என்று நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டோம். ஆனால் கோலிவுட்டில் பெரிய ஹீரோவான விஜயை எப்படி ஒரு பாட்டுக்கு வந்து ஆடுங்க என்று சொல்வது என்று பிரபுதேவா முதலில் தயங்கினாராம். பிறகு சரி கேட்டுத் தான் பார்ப்போம் என்று விஜயிடம் கேட்டுள்ளார். பிரபுதேவா சற்றும் எதிர்பாராவிதமாக ஓ.கே. சொன்ன விஜய் அடுத்த 1 மணி நேரத்தில் ஷூட்டிங் ஸ்பாட் வந்துவிட்டாராம். விஜயை பார்த்தவுடன் படத்தின் ஹீரோ அக்ஷய்க்கு ஒரே ஆச்சரியமாம். உடனே வந்து விஜயை ஆரத் தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதன் பிறகு பிரபுதேவாவைப் பார்த்து விஜயக்கு என்ன 17 வயசா என்று அக்ஷய் கேட்டுள்ளார். இது குறித்து பிரபுதேவா கூறுகையில், இந்த பாடல் மூலம் விஜயை பாலிவுட்டில் அறிமுகம் செய்ய முயற்சிக்கவில்லை. அவரை யாரும் பாலிவுட்டுக்கு சிபாரிசு செய்யத் தேவையில்லை. பாலிவுட்டே அவரை வரவேற்கும் என்றார். |
| உதயகுமார் கேள்விகளுக்கு இந்திய அணுமின்கழகம் பதில் Posted: 25 May 2012 04:21 AM PDT கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்குவதற்கான இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் அணுமின்நிலையத்தை மூட வலியுறுத்தி எதிர்ப்பாளர்கள் நடத்தி வரும் போராட்டம் 7 மாதங்களாக நீடித்து வருகிறது. இதற்கிடையே போராட்டக்குழு சார்பாக ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூடங்குளம் அணுமின்நிலையத்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பல்வேறு கேள்விகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி கேட்டிருந்தார். இதற்கு தகுந்த பதில் அளிக்கும்படி தகவல் ஆணையம் இந்திய அணுமின் கழகத்துக்கு உத்தரவிட்டது. அதன்படி இந்திய அணுமின் கழகம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாருக்கு 13 பக்க தகவல் அறிக்கையை அனுப்பியுள்ளது. இதில் கூடங்குளம் அணுமின்நிலைய இடம் தேர்வு செய்த விபரம், அந்த இடத்தில் பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளதா? அணுமின் நிலைய பாதுகாப்பு அம்சங்கள்,அணுமின் நிலையத்துக்கு எங்கிருந்து தண்ணீர் பெறப்படுகிறது? அணுக்கழிவுகள் எந்த வகையில் கையாளப்படும்? பேரிடர் தடுப்பு முறைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து போராட்டக்குழு தலைவர் புஷ்பராயன், ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் ஆகியோர் கூறியதாவது:- தகவல் ஆணைய உத்தரவுப்படி இந்திய அணுமின்கழகம் அளித்துள்ள தகவல்கள் கண்துடைப்பு அறிக்கையாகும். கூடங்குளம் அணுஉலை இடம் தேர்வு சம்பந்தமாக நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு சிலவற்றுக்கு மட்டுமே பதில் அளித்துள்ளனர். பாதுகாப்பு குறித்து நாங்கள் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் இல்லை. பூகம்பம் குறித்த கேள்விக்கு அணுஉலையில் இருந்து 5 கி.மீ. சுற்றளவுக்கு மட்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர். தேவைப்பட்டால் பேச்சிப்பாறையில் இருந்து தண்ணீரை பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். அணுக்கழிவுகளை அகற்றி பாதுகாப்பாக வைப்பது குறித்து முறையான தகவல்கள் இல்லை.மொத்தத்தில் இந்த தகவல் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே எங்கள் போராட்டம் தொடரும் என்றனர். |
| நடிகர் திலீப் மாரடைப்பால் மரணம் Posted: 25 May 2012 03:50 AM PDT நடிகர் திலீப் உடல் நலக்குறைவால் இன்று மரணமடைந்தார். பாலச்சந்தரின் வறுமையின் நிறம் சிவப்பு, தூங்காதே தம்பி தூங்காதே உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர் நடிகர் திலீப். இயக்குனர் விசுவின் சம்சாரம் அது மின்சாரம் உள்பட அவரது பெரும்பாலான படங்களில் நடித்துள்ளார். மேலும் ரஜினியுடன் மாப்பிள்ளை, தர்மதுரை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ரஜினி தயாரித்த வள்ளி படத்திலும் நடித்தார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த திலீப் பின்னர் குடும்பத்தோடு தனது சொந்த ஊரான மைசூருக்கு குடிபெயர்ந்தார். அவருக்கு சிறுநீரக கோளாறு இருந்த நிலையில் மைசூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று உடல்நிலை மிகவும் மோசமானது, மாரடைப்பும் ஏற்பட்டது. இந் நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 52. திலீப்புக்கு ஹேமா என்ற மனைவியும், பவ்யா (20) என்ற மகளும், மவுரியா (16) என்ற மகனும் உள்ளனர். அவரது இறுதிச் சடங்கு மைசூரிலேயே நடக்கிறது. |
| தாண்டவம் எனக்கு இன்னொரு மங்காத்தா: லக்ஷ்மி ராய் Posted: 25 May 2012 03:39 AM PDT நடிகை லக்ஷ்மி ராய் தாண்டவம் ஷூட்டிங்கில் பங்கேற்க நேற்று லண்டன் புறப்பட்டு சென்றார். ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா, ஏமி ஜாக்சன் நடிக்கும் படம் தாண்டவம். படத்தின் பெரும்பகுதி இங்கிலாந்தில் தான் படமாக்கப்படுகிறது. இதற்காக தாண்டவம் குழுவினர் இங்கிலாந்து முகாமிட்டுள்ளனர். அவர்களை சோதிக்கும் விதமாக அங்கு மழை பெய்து வருகிறதாம். இருப்பினும் குறிப்பிட்ட நேரத்தில் ஷூட்டிங்கை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் அனுஷ்கா, ஏமி தவிர லக்ஷ்மி ராயும் உள்ளார். அடேங்கப்பா விக்ரமுக்கு 3 ஜோடியா என்று தானே நினைக்கிறீர்கள். ஆனால் லக்ஷ்மி ராய் என்ன சொல்கிறார் என்பதை படியுங்கள், தாண்டவம் படத்தில் நான் விக்ரமையோ, அவர் என்னையோ காதலிக்கவில்லை. ஆனால் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. படம் முழுக்க நான் வருவேன். எப்படி மங்காத்தாவில் நான் வில்லியாக நடித்தாலும் எனது கதாபாத்திரம் பேசப்பட்டதோ அதேபோன்று இந்த படத்திலும் எனது நடிப்பு பேசப்படும் என்று நம்புகிறேன் என்றார். தாண்டவம் ஷூட்டிங்கிற்காக அவர் நேற்று லண்டன் புறப்பட்டுச் சென்றார். |
| ஆப்கானிஸ்தானில் பள்ளி மாணவிகள் மீது தீவிரவாதிகள் விஷவாயு தாக்குதல்: 125 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி Posted: 25 May 2012 03:24 AM PDT ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி பயில தலிபான் தீவிரவாதிகள் தடையாக உள்ளனர். பெண்கள் பள்ளிகளை குண்டு வீசி தகர்த்து வருகின்றனர். அதையும் மீறி அங்கு பெண்கள் கல்வி கற்கின்றனர். எனவே சில மாதங்களுக்கு முன்பு பெண்கள் பள்ளியில் குடிநீரில் விஷம் கலந்தனர். அதை குடித்த மாணவிகள் வாந்தி- மயக்கத்தால் அவதிப்பட்டனர். பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமாகினர். தற்போது மீண்டும் தங்கள் கொடூர நடவடிக்கையை தலிபான் தீவிரவாதிகள் அரங்கேற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாக்கர் மாகாணத்தில் உள்ள ஒரு பெண்கள் படிக்கும் பள்ளியில் தீவிரவாதிகள் புகுந்தனர். அங்குள்ள வகுப்பறைகளில் விஷவாயுவை தெளித்தனர். இதை தொடர்ந்து அந்த வகுப்பறைகளில் இருந்து படித்த 122 மாணவிகள் மற்றும் 3 ஆசிரியைகளுக்கு மூச்சு திணறலும், மயக்கமும் தலைவலி போன்றவை ஏற்பட்டது. உடனே 125 பேரும் தாக்கரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அவர்களில் 30 பேர் மட்டும் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த தகவலை போலீசார் தெரிவித்தனர். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை தொடர்ந்து சுமார் 600 பெண்கள் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. |
| கார்த்திக்கு வயசு 35: தலைவர்கள் ரேஞ்சில் பிறந்தநாள் கொண்டாட்டம் Posted: 25 May 2012 03:15 AM PDT கார்த்தி சிவகுமார் இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நடிகர் சிவகுமாரின் இளைய மகன், சூர்யாவின் தம்பி என்பதையும் தாண்டி திரையிலகில் கார்த்தி தனக்கென்று ஒரு பெயரை எடுத்துள்ளார். அவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் அவரது நடிப்பு பேசப்படுகிறது. இப்படி நடிப்பில் வெளுத்து வாங்கி ரசிகர்கள் மனதில் நாற்காலி போட்டு உட்கார்ந்திருக்கும் கார்த்தி இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திருமணத்திற்கு பிறகும் வரும் முதல் பிறந்தநாள் இது. அதனால் அவர் மனைவியுடன் ஸ்பெஷலாக பிறந்தநாள் கொண்டாடுகிறார் என்று எதிர்பார்க்க வேண்டாம். அவர் சாலக்குடியில் அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பில் உள்ளார். சின்சியரான கார்த்திக்கு இன்று இரவு கேக் வெட்டி பிரம்மாண்டமான பிறந்தநாள் பார்ட்டி கொடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அது மட்டுமி்ன்றி அவரது பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். புளியந்தோப்பில் ரத்ததான முகாம் நடத்தப்படுகிறது. வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு, உடை வழங்கப்படுகிறது. மேலும் வட சென்னையில் கால்பந்து போட்டி மற்றும் கபடி போட்டி ஆகியவை நடத்தப்படுகின்றன. கார்த்தி ரசிகர்களுக்காக அவரது சகுணி படத்தில் இருந்து 2 காட்சிகள் இன்று வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சகுணி அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது. அலெக்ஸ் பாண்டியன் படத்தை அடுத்து அவர் ஆல் இன் ஆல் அழகு ராஜாவில் நடிக்கிறார். பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்தி... |
| மானபங்க விவகாரம்: கிரிக்கெட் வீரருக்கு எதிரான வழக்கு கோர்ட்டில் ரத்து Posted: 25 May 2012 02:42 AM PDT ஐ.பி.எல். பெங்களூர் அணி வீரர் லூக் மீது அமெரிக்காவைச் சேர்ந்த ஜோஹல் என்ற பெண் பாலியல் புகார் கூறினார். அவரது வருங்கால கணவரை லூக் தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு விசாரணை டெல்லி கோர்ட்டில் நடந்தது. இதனிடையே நீதிமன்றத்துக்கு வெளியே இருவரும் சமரசம் செய்து கொண்டனர். எனவே லூக் மீதான புகாரை ஜோஹல் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதன்படி டெல்லி ஐகோர்ட்டில் ஜோஹல் தரப்பில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது இன்று விசாரணை நடந்தது. இறுதியில் லூக் மீதான வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். |
| தன்னைத் தானே எதிர்த்து 30-ம் தேதி திமுக போராட்டம்! Posted: 25 May 2012 02:30 AM PDT பெட்ரோல் உயர்வை வாபஸ் பெறக் கோரி வரும் 30ம் தேதி தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. மத்தியில் அரசில் இருந்து கொண்டே மத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்துகிறார்களாம். அதாவது, தங்களை தாங்களே எதிர்த்துப் போராட்டம் நடத்துவது மாதிரி!. வரும் 31ம் தேதி பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து பாஜக பாரத் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ள நிலையில், ஒரு நாள் முன்னதாக 30ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறது. இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், வரலாற்றியிலேயே இல்லாத அளவிற்கு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 7.50 அளவுக்கு மத்திய அரசு உயர்த்தி அறிவித்திருப்பதற்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு தோன்றியுள்ளது. முன்னறிவிப்பு எதுவுமின்றி மக்களே அரசை எதிர்த்துப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரையில் இங்கே ஆளுகின்ற அதிமுக அரசு ஏற்கனவே பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு என்று அடுக்கடுக்கான துன்பங்களை பொது மக்கள் தலையிலே சுமத்தி, அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசும் மேலும் ஒரு சுமையாக பெட்ரோல் விலையை உயர்த்தியிருக்கிறது. பண வீக்கம், விலைவாசி உயர்வு ஆகிய துன்பங்களுக்கு ஆளாகியிருக்கும் இந்திய நாட்டு மக்களை மேலும் வாட்டி வதைத்திடும் இந்த பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு அடியோடு ரத்து செய்யாவிட்டாலும், பெருமளவுக்குக் குறைத்து மக்களுக்கு உதவிட வேண்டுமென்று வலியுறுத்துவதோடு அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக பாதிக்கும் இந்த விலை உயர்வினைச் செய்துள்ள மத்திய, மாநில அரசுகளைக் கண்டிக்கின்ற வகையிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்தக் கோரிக்கையை வலியுறுத்திடும் வகையிலும், வரும் 30-5-2012 அன்று காலை 10 மணி அளவில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மத்திய அரசு அலுவலகம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் வெற்றிகரமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்றும், கழகத் தோழர்கள் அனைவரும் இதிலே கலந்து கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. |
| முதுநிலை ஆசிரியர்களுக்கான 2800 காலி இடங்களுக்கு நாளை மறுநாள் தேர்வு Posted: 25 May 2012 02:27 AM PDT அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2800 இடங்களை நிரப்ப போட்டித்தேர்வு நடத்தி ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டது. அதன்படி ஆசிரியர் தேர்வு வாரியம் பாடம் வாரியாக காலி இடங்களை அறிவித்து ஆசிரியர்களை தேர்வு செய்கிறது. இதற்கான போட்டித்தேர்வு தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இத்தேர்வினை ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுத விண்ணப்பித்துள்ளனர்.அவர்களுக்கு ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் கணிதம் பாடத்திற்கான ஆசிரியர் பணிக்கு அதிக அளவில் தேர்வு எழுதுகிறார்கள்.தமிழகம் முழுவதும் 441 மையங்களில் முதுநிலை ஆசிரியர் தேர்வு நடக்கிறது. சென்னை மாவட்டத்தில் 37 மையங்களில் 13 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர். சூளை செயின்ட் ஜோசப் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு நடத்துவதில் சில இடர்பாடுகள் இருப்பதால் அந்த மையத்திற்கு பதிலாக அதே பகுதியில் ராட்லர் தெருவில் உள்ள ஸ்ரீ முத்துக்குமாரசாமி தேவஸ்தானம் வேணு கோபால செட்டி மேல்நிலைப்பள்ளிக்கு தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது. செயிண்ட் ஜோசப் பள்ளியில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த தேர்வாளர்கள் அனைவரும் ராட்லர் தெருவில் உள்ள பள்ளிக்கு சென்று தேர்வு எழுத வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவா தமிழ்மணி தெரிவித்துள்ளார். இந்த தேர்வு காலை 10 மணி முதல் 1 மணி வரை 3 மணி நேரம் நடைபெறுகிறது.எந்த தவறுக்கும் இடம் அளிக்காமல் முறையாக தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முழு கவனம் செலுத்தி வருகிறது. |
| You are subscribed to email updates from விழியே பேசு... To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |






















