Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





விழியே பேசு...

விழியே பேசு...


இலங்கையில் தமிழர் பகுதியில் ராணுவம் குவிப்பு: இங்கிலாந்து தூதர் தகவல்

Posted: 26 May 2012 10:12 PM PDT


ஈழத் தமிழர்களுக்கு எதிராக கொடூரங்களை நிகழ்த்துவதாக இலங்கை அரசின் மீது ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், இலங்கைக்கான இங்கிலாந்து தூதர் வெளியிட்டுள்ள தகவல் மேலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.  
 
இது தொடர்பான வீடியோவில் இங்கிலாந்து தூதர் ஜான், 'இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் ராணுவத்தினரின் நடமாட்டம் அதிகம் உள்ளது. நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள ராணுவத்தினர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு, நாட்டின் பிற பகுதிகளில் ராணுவத்தினர் குறைவாக உள்ளது போன்ற நிலையே தமிழர்கள் பகுதிகளில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம்' என்று கூறியுள்ளார்.  
 
தூதரின் பேச்சை இங்கிலாந்து வெளியுறவுத் துறை அதிகாரிகள் கருத்தில் கொண்டுள்ளதாக டெய்லி மிரர், ஐ லேண்ட் போன்ற பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. 'வெளிநாடுகளின் நெருக்குதல்களை ஏற்று இலங்கையில் குறிப்பிட்ட இடங்களில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற முடியாது. பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ராணுவம் நிலைகொள்ள வேண்டியுள்ளது அவசியமாகிறது' என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
அதேபோல் இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் பள்ளி மாணவர்களைக் கடத்தும் சம்பவமும் அதிகரித்துள்ளது. சமீபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபரால் அக்‌ஷய் (15) என்னும் தமிழ் மாணவர் கடத்தப்பட்டார். பின்னர் அவரை கிளிநொச்சி அருகே விடுவித்துள்ளனர்.  
 
இது தொடர்பாக பேசிய சிறுவனின் தந்தை பிரபாகரன், 'பணத்துக்காக இந்த சம்பவம் நடந்ததாகத் தெரியவில்லை. இதில் வேறு உள்நோக்கம் உள்ளது' என்று கூறியுள்ளார். முன்னதாக மே 19-ம் தேதி இதே பகுதியில் வேறொரு சிறுவன் கடத்தப்பட்டுள்ளார். ஆனால் இதுவரை அவர் மீட்கப்படவில்லை. கடந்த ஆண்டிலும் இதே போன்ற கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்துள்




இலங்கைக்கு விசிட் அடித்த தேமுதிக எம்.எல்ஏ. அருண்பாண்டியன் - அதிர்ச்சியில் உளவுத்துறை!

Posted: 26 May 2012 10:04 PM PDT


தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் இலங்கை விவகாரத்தை வைத்து அரசியல் செய்து வரும் நிலையில், தேமுதிக தனது சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண்பாண்டியனை இலங்கைக்கு சத்தம் போடாமல் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கைக்கு பயணம் செய்யும் தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் போன்றவர்கள், மத்திய அரசு அனுமதி பெற்று தூதுக்குழுக்களில் இணைந்து செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தேமுதிகவைச் சேர்ந்த பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக ரகசியமாக இலங்கை சென்று அங்கு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தாக கூறப்படுகின்றது.

இது குறித்து கொழும்பில் உள்ள பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது,

தேமுதிக வைச் சேர்ந்த பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், யாழ்ப்பாணம் வந்துள்ளது உண்மை.

ஆனால், அருண் பாண்டியன் தனிப்பட்ட முறையில் ஒரு மாத விசிட் விசாவில், வந்துள்ளதாக தெரிய வருகிறது. குறிப்பாக, திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஐங்கரன் இன்டர்நேஷனல் தலைவர் கருணாமூர்த்தியுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார். கருணாமூர்த்தி ஈழத் தமிழர் ஆவார் என்பது நினைவிருக்கலாம். பல சூப்பர் ஹிட் தமிழ்ப் படங்களைத் தயாரித்துள்ளவர் கருணாமூர்த்தி.

யாழ்ப்பாணம் வந்த, அருண் பாண்டியன், இணுவில் என்ற கிராமத்தில் தங்கியிருந்தார். அப்போது, பொது மக்கள் பலரையும் அவர் சந்தித்துப் பேசினார்.

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மிக முக்கியமான புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார். தமிழ் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் இருவர், அவரைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகின்றது என்கின்றனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இலங்கை விவகாரத்தில் மிக ஆர்வமாக உள்ளதாகவும், அதனால் தான் தனது நம்பிக்கைகுரிய நட்சத்திரம் அருண்பாண்டியன் மூலம் சில தகவல்களை பெற்று வர பணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அருண் பாண்டியன் தமிழகம் வந்த பின்பு, இலங்கையில் ஈழ தமிழர்களின் நிலையை புதுக்கோட்டை இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் புட்டுவைக்கப் போவதாகவும் ஒரு தகவல் உலா வருகின்றது.

இதை லேட்டாக மோப்பம் பிடித்த தமிழக உளவுத்துறை , கடும் அதிர்ச்சி அடைந்து அது குறித்த தகவல்களை விரைவாக சேகரித்து வருகின்றது.



பிறந்த நாள் ஸ்பெஷல் : மனோரமா

Posted: 26 May 2012 09:58 PM PDT


'மாலையிட்ட மங்கை' படத்தில் கவிஞர் கண்ணதாசனால் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார் மனோரமா.

காமெடியா ஓகே.. குணசித்திர நடிப்பா ஓகே.. பாட்டு பாடணுமா.. வில்லன்களோட சண்டை போடணுமா.. பக்கம் பக்கமா வசனம் பேசணுமா.. ஒரு வார்த்தை  கூட பேசாம நடிக்கணுமா.. எதுவாயிருந்தாலும் ஆச்சி 'ஆல்வேஸ் ரெடி!'

நடிகன், சின்னக் கவுண்டர், சம்சாரம் அது மின்சாரம், பாட்டி சொல்லைத் தட்டாதே 'தில்லானா மோகனாம்பாள்' ஜில் ஜில் ரமாமணி எவர்கிரீன் ஹிட்.

நடித்த படங்களின் எண்ணிக்கை 1,500-ஐத் தாண்டும். எம்.ஜி.ஆர், சிவாஜி, அவரது மகன் பிரபு,   ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ஆர், முத்துராமன், அவர் மகன் கார்த்திக், ரஜினி, கமல், சத்யராஜ், அஜீத், விஜய் என தலைமுறைகள் தாண்டி நடித்துக் கொண்டிருக்கும் ஆச்சிக்கு 'கின்னஸ்' பட்டியலில் பெயர் என்பது, மேலும் ஒரு மகுடம்.

அவர் பாடிய ' வா வாத்யாரே ஊட்டாண்டே..' அந்த காலத்தில் பட்டிதொட்டி எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்.

அண்ணா, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா 5 மாநில முதல்வர்களோடு நடித்த ஒரே சினிமா பிரபலம் மனோரமா தான்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளில்  நடித்திருக்கிறார்.

ஆச்சிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது கலிஃபோர்னியா யூனிவர்சிட்டி. நாம் வழங்கி மகிழ்ந்தது 'கலைமாமணி'.



எதிரி விமானங்களை தாக்கும் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி

Posted: 26 May 2012 09:53 PM PDT


எதிரிநாட்டு விமானங்களை தாக்கி அழிக்கும் திறனுடைய ஆகாஷ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஆகாஷ் ஏவுகணை ஒரிசாவின் பலசோர் பகுதியை அடுத்த சந்திபூர் சோதனை தளத்தில் இருந்து இன்று காலை 11 மணி அளவில் ஏவப்பட்டது.
 
வாகனத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை விண்ணில் நிறுவப்பட்டிருந்த மாதிரி விமானத்தை வெற்றிகரமாக தாக்கியதாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 25 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள இலக்கை வீழ்த்தும் ஆகாஷ் ஏவுகணை, 60 கிலோ எடையுள்ள ஆயுதங்களை சுமந்துசெல்லும் திறன் கொண்டது.
 
மேலும் எதிரிநாட்டு விமானங்கள் இந்தியாவுக்குள் நுழைந்தால் ரேடாரின் உதவியுடன் உடனே தாக்கும் வகையில், இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டிருப்பதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்‌. இதே ஆகாஷ் ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் நேற்று முன்தினமும் சோதனை செய்தது.




திருமணம் லேட்டாகுதா? பரிகார பூஜைக்கு அழைத்து செல்கிறது தமிழக சுற்றுலாதுறை!

Posted: 26 May 2012 09:46 PM PDT


திருமணம் ஆகாமல் கோவில் கோவிலாக பரிகாரம் செய்து கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. தமிழக சுற்றுலாத்துறையினர் திருமண பரிகார தலங்களுக்கு பேக்கேஜ் அமைத்து பரிகார பூஜைகளுக்கு அழைத்து செல்கின்றனர். அங்கு சென்று சிறப்பு பரிகார பூஜைகளில் பங்கேற்கலாம்.

திருமணம் என்பது மனித வாழ்க்கையில் அவசியமான ஒன்று அனைவருக்கும் அது எளிதில் கிடைப்பதில்லை. காதலிப்பவர்கள் போராட்டங்களுக்கிடையே தங்கள் திருமணத்தை வெற்றிகரமாக நடத்துகிறார்கள். அதேசமயம் பெண் கிடைக்காமல் ஆணும், மாப்பிள்ளை கிடைக்காமல் பெண்ணும் ஆயிரக்கணக்கானோர் அல்லாடிக்கொண்டிருக்கின்றனர்.

ஜோசியரிடம் சென்றால் அந்த கோவிலுக்குப் போங்க இந்த கோவிலுக்குப் போங்க என்று பரிகாரம் சொல்லுவார்கள். சிவனுக்கு மாலை மாத்திப்போடுங்க விஷ்ணுவுக்கு பரிவட்டம் கட்டுங்க என்பார்கள். தனியாக ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று பரிகாரம் சென்று திரும்புவதற்குள் செலவு பழுத்துவிடும்.

இந்த சிரமத்தைப் போக்கவே தமிழ்நாட்டில் உள்ள திருமண பரிகார தலங்களுக்கு பேக்கேஜ் டூர் அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாடு சுற்றுலாத்துறை. திருமணமாகாமல் கவலைப்படுபவர்கள் இந்த சுற்றுலாவில் பங்கேற்று பரிகாரங்களை எளிதாக செய்யலாம்.

ஜூன் 1ம் தேதி முதல் வார விடுமுறை நாட்களில் இந்த சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறது. வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு சனி, ஞாயிறு கிழமைகளில் கோவில்களுக்கு சென்று பரிகாரம் செய்யலாம். இந்த சுற்றுலாவில் முடிச்சூர், திருவிடந்தை, திருமணஞ்சேரி, திருவீழிமழிசை, நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர், உப்பிலியப்பன் கோவில், மதுரை மீனாட்சி சுந்தர்ரேஸ்வரர், திருவேடகம் ஏடகநாதர், மற்றும் திருக்கருகாவூர் போன்ற தலங்களுக்கு சென்று பரிகாரம் பூஜை செய்யப்படுகிறது. திங்கட்கிழமை காலையில் மறுபடியும் கிளம்பிய இடத்திற்கு வந்து விடலாம்.

இந்த ஆலயங்களில் திருமணம் ஆகாதவர்கள் தங்கள் கழுத்தில் மாலையை அணிந்து அதை இறைவன் கழுத்தில் மாற்றிப் போட்டு பரிகார பூஜை செய்யப்படுகிறது. பின்னர் அந்த மாலையை வீட்டிற்கு எடுத்து வந்து பத்திரப்படுத்தி வைக்கவேண்டும். நல்ல முறையில் திருமணம் முடிந்த உடன் மீண்டும் அந்த தலங்களுக்குச் சென்று பரிகாரத்தை நிறைவேற்றலாம்.

தமிழக சுற்றுலாத்துறை அழைத்துச் செல்லும் அனைத்து கோவில்களும் பிரசித்தி பெற்றவை. திருவிடந்தை தலம் மகாபலிபுரம் அருகில் அமைந்துள்ளது. அங்கே விஷ்ணு நித்திய கல்யாண பெருமாளாக காட்சியளிக்கிறார். அதேபோல் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவில் குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை வரம் அருளும் கோவிலாகும்.

இந்த பேக்கேஜ் சுற்றுலாவிற்கு ஒரு நபருக்கு உணவு, தங்குமிடம் பரிகார செலவு சேர்த்து 2600 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு தமிழக சுற்றுலாத்துறையை அணுகவும்.



உல்பா தீவிரவாதிகள் விடுத்த 'பந்த்' அழைப்பை புறக்கணித்தனர்

Posted: 26 May 2012 09:42 PM PDT


தருண் கோகாய் தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக பதவியேற்று  முதலாம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் பங்கேற்க சோனியா அஸ்ஸாம் மாநிலத்திற்கு வந்திருந்தார்.
 
உல்பா தீவிவாதிகள் விடுத்திருந்த 12மணி நேர பந்த்திற்கு விடுத்த அழைப்பையும் புறக்கணித்து அக்கூட்டத்தில் சுமார் 10,000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
 
ஆனால், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், நீதி மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. போக்குவரத்தும் மிக சொற்ப அளவிலேயே இருந்தது. அஸ்ஸாம் மாநிலத்தில் விடுமுறை தினமானதால் அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்பட்டிருந்தது.
 
ஆனால் ரயில் மற்றும் விமான போக்குவரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அஸ்ஸாம் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் தொண்டர்களை பேருந்துகளில் மாநாடு நடைபெறும் இந்திரா காந்தி மைதானத்திற்கு அழைத்து வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



பாரதீய ஜனதாவில் எடியூரப்பா ஒரு 'மனித வெடிகுண்டு': பால் தாக்கரே

Posted: 26 May 2012 09:37 PM PDT


சிவ சேனா தலைவர் பால் தாக்கரே, பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் நிதின் கட்கரியின் பாதை கண்ணிவெடிகள் நிறைந்ததாகவும், முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பா பாரதீய ஜனதா கட்சியின் 'மனித வெடிகுண்டு' என்றும் விமர்சனம் செய்துள்ளார்.
 
நிதின் கட்கரி இரண்டாவது முறையாக பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக பொறுப்பேற்கும் வகையில் கட்சியின் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. மும்பையில் கூடிய மாநாட்டில் குஜாத் முதல்வர் மோடி கலந்து கொள்வதற்கு சஞ்சய் ஜோஷி ராஜினாமா செய்ய வேண்டும் என கோரியிருந்தார். இதற்கு தன் ஆதரவை தெரிவிப்பதாக சாம்னா பத்திரிகையில் வெளியிட்டுள்ள கட்டுரையில் பால் தாக்கரே கூறியிருந்தார்.
 
அக்கட்டுரையில் எடியூரப்பா பாரதீய ஜனதாவில் ஒரு வெடிகுண்டு என வர்ணித்த பால் தாக்கரே, தென் இந்தியாவில் பாரதீய ஜனதா ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமான கர்நாடகாவில் லிங்காயத்து மக்களிடையே செல்வாக்கு பெற்ற தலைவராக எடியூரப்பா விளங்குவதாகவும் இவர் கட்சிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் அக்கட்டுரையில் தெரிவித்திருந்தார்.
 
தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இணைந்து அடுத்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டும் எனவும் அக்கட்டுரையில் பால் தாக்கரே தெரிவித்துள்ளார்.




ஐ.பி.எல்.5: ஹாட்ரிக் சாதனை படைக்குமா சென்னை சூப்பர்கிங்ஸ்?

Posted: 26 May 2012 09:32 PM PDT


கிரிக்கெட் ரசிகர்களை கடந்த 2 மாதமாக கட்டிப் போட்டு வைத்திருந்த நடப்பு ஐ.பி.எல்.5வது தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. தொடர்ந்து 2 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ள சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

அதிர்ஷ்ட சென்னை

சென்னை சூப்பர்கிங்ஸ் அணியானது அனைத்து ஐ.பி.எல். தொடர்களிலுமே லீக் போட்டிகளில் தட்டுத் தடுமாறுவதும் அதிர்ஷ்டவசமாக தகுதிச் சுற்றில் நுழைந்து இறுதிப் போட்டியில் கோப்பையை தட்டுவதுமே ஒரு பாணியாக இருந்து வருகிறது.

நடப்பு ஐ.பி.எல்.5வது தொடரும் விதிவிலக்கு அல்ல. சென்னை அணியில் ஆல்ரவுண்டர்கள் நிறையப் பேர் இருக்க வலுவான அணியாகவே சென்னை சூப்பர்கிங்ஸ் இருந்து வருகிறது. சென்னை அணியைப் பொறுத்தவரை வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் இறங்குகிறது.

நடப்பு தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தமது வலுவை முழுவீச்சில் வெளிப்படுத்தியிருக்கிறது. கொல்கத்தாவின் கவுதம் காம்பீர், சுனில் நரீன் ஆகியோர்தான் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார். பாலாஜி, காலிஸ், பாடியா என பெளலர்கள் படையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கொண்டிருக்கிறது.

வலுவான கொல்கத்தா

கொல்கத்தா அணி ஏற்கனவே சேப்பாக்கத்தில் நடந்த லீக் சுற்றில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை தோற்கடித்துள்ளது. அந்த நம்பிக்கையுடன் முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வெறியுடன் களம் இறங்குகிறது.

இன்றைய போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.11 கோடியும், 2-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.8 1/4 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.



நக்சல் தலைவர் கைது

Posted: 26 May 2012 09:25 PM PDT


பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள மதானா கிராமத்தில் இருந்து மக்கள் போர்ப்படை குழுவை சேர்ந்த மாவட்ட கமாண்டர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
நேற்று இரவு கைது செய்யப்பட்ட அந்த நக்சல் தலைவரின் பெயர் கமல்காந்த் என்றும் அவர் காவல் துறையினர் தேடுதல் வேட்டையின்போது அவரை கைது செய்ததாக காவல் துறை அதிகாரி மனோஜ் குமார் தெரிவித்தார்.
 
மகாத் டிவிசன் பகுதியில் பல்வேறு மாவோயிஸ்ட் செயல்களின் தொடர்பாக தேடப்பட்டு வந்தவர் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
 
நக்சல் தலைவரிடம் இருந்து காவல்துறையினர் 68,000 ரூபாய் பணமாகவும், மாவோயிஸ்டுகளின் கொள்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் போன்றவைகள் கைப்பற்றபட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.




15 ஊழல் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டது ஹசாரே குழு!

Posted: 26 May 2012 09:22 PM PDT


பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட 15 மத்திய அமைச்சர்களுக்கு எதிராக  ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ள அன்னா ஹசாரே குழு,இது தொடர்பாக விசாரிக்க  சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம்  எழுதியுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங்,நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி,உள்துறை அமைச்சர்  ப.சிதம்பரம் உள்ளிட்டவர்களின் பெயர்கள் அன்னா குழு தெரிவித்துள்ள புகார் பட்டியலில்  இடம்பெற்றுள்ளது.

இவர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களை 6 பேர் கொண்ட நீதிபதிகள் விசாரிக்க  வேண்டும் என வலியுறுத்தியுள்ள அக்குழு,நீதிபதிகளின் பெயர்களையும் தெரிவித்து,இது  தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளது.

இத்தகவலை செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்த ஹசாரே குழு உறுப்பினர்களில்  ஒருவரான பிரசாந்த் பூஷண்,2006 முதல் 2009 ம் ஆண்டு வரையிலான  காலக்கட்டத்தில், விதிமுறைகளுக்கு மாறாக மிகக்குறைந்த விலையில் நிலக்கரி  சுரங்கங்களை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சிஏஜி  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியதோடு, அந்த காலக்கட்டத்தில்  நிலக்கரி இலாகாவை தம் வசம் வைத்திருந்தவர் என்ற முறையில் பிரதமர்தான் இதற்கு  பொறுப்பாவார் என்று குற்றம்சாட்டினார்.

தற்போதைய நிதியமைச்சரான பிரணாப் முகர்ஜி,பாதுகாப்புத் துறை அமைச்சராக  இருந்தபோதுதான்,ஸ்கோர்பென் நீர்மூழ்கி கப்பல் வாங்கும் பேரத்திற்காக 4 சதவிகித  கமிஷன் பெறப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள ஹசாரே குழு, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு  மற்றும் வோடாபோன் நிறுவனத்திற்கான அனுமதி வழங்குவதில் நடைபெற்ற ஊழலில்  உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஹசாரே குழு ஊழல் குற்றம்சாட்டியுள்ள அமைச்சர்கள் பட்டியலில் சரத்  பவார்,எஸ்.எம்.கிருஷ்ணா,கமல் நாத்,பிரபுல் படேல், விலாஸ்ராவ் தேஷ்முக்,வீர்பத்ர  சிங்,கபில் சிபல்,சல்மான் குர்ஷித்,ஜி.கே.வாசன்,மு.க. அழகிரி,பரூக் அப்துல்லா  மற்றும் எஸ்.கே. ஷிண்டே ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றுள்ளது.

இந்த அமைச்சர்கள்தான் லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக  குற்றம்சாட்டியுள்ள பிரசாந்த் பூஷண், இவர்கள் 15 பேர் மீது அரசு உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும்  ஜூலை 4-ந்தேதி முதல் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமருக்கு  எழுதப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.  



எண்ணெய் நிறுவனங்கள் சேவை நிறுத்தம்: டீசல் இல்லாமல் தமிழகம் தவிப்பு

Posted: 26 May 2012 09:15 PM PDT


தமிழகத்தில் கடுமையான டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டீசல் இல்லாததால் கனரக வாகனங்கள் ஆங்காங்கு நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன. நீண்ட தொலைவு செல்லும் லாரிகள் வழியில் டீசல் இல்லாமல் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நாளில் சரக்குகள் செல்லாததால் கோடி கணக்கில் இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.டாக்சிகள் ஓடாமல் நிறுத்தப்பட்டுள்ளன.
 
மங்களூர், எண்ணூர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் டீசல் உற்பத்தியை குறைத்ததே திடீர் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. சென்னை நகருக்கு ஒரு நாளைக்கு 70 லட்சம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. கடந்த 3 நாட்களாக இந்த அளவுக்கு சப்ளை இல்லை என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 
பெரும்பாலான பங்க்குகளில் 'டீசல் ஸ்டாக் இல்லை' போர்டு வைத்துவிட்டு பங்க்குகளை மூடிவிட்டனர்.  டீசல் பற்றாக்குறையால் தனியார் பேருந்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. அவர்களிடம் 3 நாட்களுக்குத் தேவையான ஸ்டாக் உள்ளது. அது தீர்ந்து சப்ளை வராவிட்டால் அரசு பேருந்து சேவையும் முடங்கும் அபாயம் உள்ளது.
 
மின்வெட்டை சமாளிக்க கைகொடுத்த ஜெனரேட்டர் இயக்கமும் டீசல் கிடைக்காததால் முடங்கி விட்டது. இதனால், தொழிற்சாலைகளின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் ஜவுளித் தொழில், கோவையில் ஸ்பின்னிங் மில்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. குளுகுளு ஏசியில் இருக்கும் வணிக வளாகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
 
ஜெனரேட்டர் உதவியுடன் இயங்கி வந்த கணிணி நிறுவனங்களுக்கும் இப்போது டீசல் பற்றாக்குறையால் கட்டாய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை இழப்பும், வருவாய் பாதிப்பும் பலரை பாதித்துள்ளது.
 
இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்க தலைவர் கண்ணன் கூறுகையில், 'டீசலை பதுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. பற்றாக்குறைக்கு எண்ணெய் நிறுவனங்களே காரணம். சேவை நிறுத்தத்திற்கான காரணத்தை எண்ணெய் நிறுவனங்கள்தான் விளக்க வேண்டும் என்றார்.



பிரபு யார்..? கார்த்திக் யார்..?

Posted: 26 May 2012 08:22 PM PDT


மணிரத்னம் இயக்கத்தில் 1988ம் ஆண்டும் வெளிவந்த 'அக்னி நட்சத்திரம்' படம் பெரும் வரவேற்பை பெற்றது. பிரபு, கார்த்திக், விஜயகுமார், அமலா, நிரோஷா மற்றும் பலர் நடிக்க இளையராஜா இசையமைத்து இருந்தார்.

இப்படத்தினை மீண்டும் தமிழில் எடுக்க பல்வேறு தயாரிப்பாளர்கள் போட்டியிட்டு வந்த நிலையில், தயாரிப்பாளர் டி.ரமேஷ் இப்படத்தினை தமிழ் மற்றும் தெலுங்கில் மீண்டும் தயாரிக்கும் உரிமையை வாங்கி இருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாரிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உள்ள முன்னணி நடிகர்களிடம் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

பிரபு, கார்த்திக் வேடத்தில் தமிழ், தெலுங்கில் உள்ள முன்னணி நாயகர்கள் ஆளுக்கொருவரை நடிக்க வைத்தால் ஒரே சமயத்தில் இரண்டு மொழிகளிலும் வெளியிடலாம் என்பது தான் இவரது எண்ணம்.

இது குறித்து ரமேஷ் " அக்னி நடசத்திரம் படத்தினை தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ரீமேக் உரிமையை வாங்கி இருக்கிறோம். இது குறித்து முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து விரைவில் வெளியிடப்படும் " என்று தெரிவித்து இருக்கிறார்.



அமெரிக்காவின் முடிவுக்கு சீனா கண்டனம்

Posted: 26 May 2012 08:18 PM PDT


ஐ.நா.வின் கடல்சார் சட்ட உடன்படிக்கையில் கையெழுத்திட அமெரிக்கா எடுத்துள்ள முடிவு குறித்து சீனா கேள்வியெழுப்பியுள்ளது. இது தென்சீனக் கடல் பிராந்தியத்தில் நிலவிவரும் பிரச்னைகளில் சட்டரீதியில் தலையிட அமெரிக்கா மேற்கொண்டுள்ள முயற்சி எனவும் சீனா விமர்சித்துள்ளது.   அப்பிராந்தியத்தைச் சுற்றி அமைந்துள்ள நாடுகளுடன் சீனாவுக்கு கடல்சார் உரிமையில் பிரச்னை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
160 நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் கையெழுத்திட்டுள்ள இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது.   இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா நீண்ட காலமாக புறக்கணித்து வந்த அமெரிக்கா, இதில் கையெழுத்திட திடீரென எடுத்துள்ள முடிவு தென்சீனக் கடல் பிரச்னையில் தலையிட விரும்பும் அதன் சுயநல நோக்கத்தைக் காட்டுகிறது என்று சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா விமர்சித்துள்ளது.  
அரசியல், பொருளாதார மற்றும் ராணுவ தளங்களில் உலகம் முழுவதும் தனது நோக்கத்தை அடையவே இந்த முடிவை அமெரிக்கா எடுத்துள்ளதாகவும் ஜின்ஹுவா தெரிவித்தது.  
மேலும் 'சீனா உள்ளிட்ட சில நாடுகள் தென்சீனக் கடலிலும், மற்ற கடல்பகுதிகளிலும் சட்டவிரோதமாக உரிமை கொண்டாடுகின்றன. அதற்கு எதிராகவும், நமது வர்த்தக மற்றும் போர்க் கப்பல்கள் பயணம் செய்ய சட்ட விரோதமாக விதிக்கப்படும் தடைக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க இந்த உடன்படிக்கை உதவும்' என்று கூறியிருந்த வெளியுறவுக்கான செனட் குழுவின் தலைவர் ஜான் கெர்ரியும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.



பிரஸ்சல்ஸ் ஓபன் டென்னிஸ்: மகளிர் இரட்டையரில் சானியா ஜோடி சாம்பியன்

Posted: 26 May 2012 08:06 PM PDT



பிரஸ்சல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி பெல்ஜியத்தில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா-அமெரிக்காவின் பெதானி மடேக் சாண்ட்ஸ் ஜோடி, ரோசோல்கா (போலந்து)-ஷாங் (சீனா) ஜோடியை சந்தித்தது.
70 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சானியா மிர்சா-பெதானி மடேக் சாண்ட்ஸ் ஜோடி 6-3, 6-2 என்ற நேர்செட்டில் ரோசோல்கா-ஷாங் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. ஏற்கனவே நடந்த அரையிறுதிப் போட்டியின் சானியா-மடேக் ஜோடி,ஆஸ்திரேலியாவின் அனாஸ்டாசியா ரொடினோவா-கேஸீ டெல்லாக்வா ஜோடியை வீழ்த்தியது.
மடேக்குடன் இணைந்து இரண்டாவது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய சானியா தற்போது பட்டத்தை வென்றுள்ளார். இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு இவர்கள் இருவரும் இணைந்து சின்சினாட்டி ஓபனில் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த சீசனில் சானியா வெல்லும் 2-வது பட்டம் இதுவாகும். மேலும் சானியாவின் டென்னிஸ் வாழ்க்கையில் 14-வது பட்டமாகவும் இது அமைந்துள்ளது.



முதலிரவுடன் 'விளையாடிய' ஜோசியர்...தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை!

Posted: 26 May 2012 11:44 AM PDT


ஜாதகத்தில் கட்டம் சரியாக இல்லை என்றுகூறி முதலிரவை தள்ளிப் போடுமாறு ஜோசியர் கூறி வந்ததால் அதிருப்தி அடைந்த புது மாப்பிள்ளை ஒருவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து விட்டார்.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் பாலாஜி. 22 வயதேயான இவர் மின்சார ரயிலில் முறுக்கு விற்று வந்தார். அதே போல ரயிலில் முறுக்கு விற்று வந்த ஒரு பெண்ணுக்கு பாலாஜியைப்ப பிடித்துப் போக தனது மகள் சித்ராவை அவருக்கு மணமுடித்து வைக்க விரும்பினார். பாலாஜியும் சம்மதம் தெரிவிக்கவே, சித்ராவுக்கும் அவருக்கும் கடந்த 18ம் தேதி கல்யாணம் நடந்து முடிந்தது.

கல்யாணம் முடிந்ததும் வழக்கமான புது மாப்பிள்ளைகள் போல முதலிரவுக்கு ஆர்வத்துடன் தயாரானார் பாலாஜி. ஆனால் ஜோசியர் ரூபத்தில் அவருக்கு டென்ஷன் வந்து சேர்ந்தது. பாலாஜியின் ஜாதகத்தைக் கணித்த அவர், அதில் கட்டம் சரியாக இல்லை என்று கூறிய ஜோசியர் முதலிரவைத் தள்ளிப் போடுமாறு கூறியுள்ளார். இப்படியே 2 நாட்களாகி விட்டது.

கல்யாணமாகி 2 நாளாகியும் முதலிரவு நடக்கவில்லையே என்று டென்ஷனிலும், கவலையிலும் இருந்து பாலாஜிக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தும் வகையில் மறுபடியும் கட்டம் சரியில்லை, முதலிரவு வேண்டாம் என்று ஜோசியர் கூறிய தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனால் விரக்தியில் தனது வீட்டு உத்தரத்தில் தூக்குப் போட்டுக் கொண்டு விட்டார். தான் கட்டியிருந்த கல்யாண பட்டு வேஷ்டியிலேயே அவர் தூக்கில் தொங்கிப் பிணமானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.



சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா!

Posted: 26 May 2012 11:34 AM PDT


அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு கேபிள் டிவியை மீண்டும் துவங்க நடவடிக்கை எடுத்ததையடுத்து சன் டிவியின் லாபம் சுமார் ரூ. 50 கோடி சரிந்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு காலத்தில் சன் டிவியின் லாபம் ரூ. 208.34 கோடியில் இருந்து ரூ. 159.03 கோடியாக சரிந்துள்ளது.

இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணம் அரசு கேபிள் டிவி வந்ததும், விளம்பர வருவாய் குறைந்ததும், சன் பிக்சர்ஸ் திரைப்பட பிரிவின் லாபம் குறைந்ததுமே ஆகும்.

கடந்த ஆண்டு ஜனவரி-மார்ச் காலாண்டுடன் ஒப்பிடுகையில் சன் டிவியின் விளம்பர வருவாய் 9 சதவீதம் சரிந்து ரூ. 235 கோடி என்ற அளவுக்குக் குறைந்துள்ளது.

இதற்கு இரு முக்கிய காரணங்கள் இருப்பதாக சன் குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி எஸ்.எல்.நாராயணன் கூறியுள்ளார். முதலாவது அரசு கேபிள் டிவி அறிமுகமானது. இதன்மூலம் சன் டிவியின் வருவாய் ரூ. 77 கோடியும், லாபம் ரூ. 48 கோடியும் சரிந்துவிட்டது.

அடுத்ததாக கடந்த ஆண்டு ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவான எந்திரன் படத்தைத் தயாரித்ததன் மூலம் ரூ. 24 கோடி சன் டிவிக்கு லாபம் கிடைத்தது. ரூ. 132 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், சன் டிவிக்கு ரூ. 179 கோடி வருமானத்தைத் தந்தது. இந்தப் படத்தை வைத்து ரூ. 47 கோடி வருவாயை ஈட்டிய சன் டிவிக்கு நிகர லாபமாக ரூ. 24 கோடி தேறியது.

ஆனால், இந்த ஆண்டு பெரிய படம் எதையும் சன் டிவி தயாரிக்கவில்லை. இந்த இரு காரணங்களால் லாபம் சரிந்துள்ளது.

அரசு கேபிள் டிவி வந்தது முதல் சன் டிவியின் சுமங்கலி கேபிள் விஷனுக்கு பெரும் அடி விழுந்துள்ளது. கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பல்வேறு தொலைக்காட்சிகளின் சிக்னல்களை ஏந்திச் செல்லும் சுமங்கலி கேபிள் விஷன் கட்டணத்தைவிட அரசு கேபிளில் கட்டணம் மிக மிகக் குறைவு. இதனால், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசு கேபிளை நாட ஆரம்பித்துவிட்டனர்.

மேலும் அரசு கேபிள் டிவியில் சன் டிவியின் எந்த சேனலும் இடம் பெறாததும் அந்த நிறுவனத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சன் டிவியின் மார்க்கெட் ஷேர் சரிய ஆரம்பித்துள்ளது.

அரசு கேபிளில் சன் டிவி சேனல்களையும் சேர்க்கக் கோரி மாநில அரசுடன் அந்த நிறுவனம் தொடர்ந்து பேசி வந்தாலும், அரசியல் மோதலால் அது இன்னும் சாத்தியமாகவில்லை.

கடந்த ஆண்டு தமிழ் பொழுதுபோக்குப் பிரிவு சேனல்களில் (General entertainment channel - GEC) சன் டிவியின் மார்க்கெட் ஷேர் 69 சதவீதம் என்ற நிலையில் இருந்தது. அது இப்போது 62 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

அதே நேரத்தில் மிகச் சிறந்த நிகழ்ச்சிகள் மூலம் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் மார்க்கெட் ஷேர் இரு மடங்காகியுள்ளது. கடந்த ஆண்டு 6.4 சதவீத பார்வையாளர்களைக் கொண்டிருந்த விஜய் டிவியின் ரசிகர்கள் எண்ணிக்கை 12 சதவீதமாக உயர்ந்துவிட்டது.

அதே நேரத்தில் தேசிய அளவில் தமிழ் சேனல்களின் மார்க்கெட் ஷேர் 6.64 சதவீதத்தில் இருந்து இந்த ஆண்டு 5.84 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதற்கான காரணம், நீண்ட நேர மின் வெட்டுகள். இதனால் மக்கள் டிவி பார்ப்பது கூட 0.8 சதவீதம் குறைந்துவிட்டது.

இந் நிலையில் ஒரு மணி நேரத்துக்கு 12 நிமிடங்களுக்கு மேல் விளம்பரங்கள் இடம் பெறக் கூடாது என்று மத்திய தொலைத் தொடர்பு ஆணையமான டிராய் புதிய விதிமுறையை விரைவில் அமலாக்கவுள்ளது. இதனால் சன் டிவி உள்பட எல்லா டிவிக்களின் வருவாயும் மேலும் பாதிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சன் டிவியின் மொத்த வருவாயில் 63 சதவீதம் விளம்பரங்கள் மூலமே வருகிறது.

சன் டிவியின் பங்குகள் மதிப்பும் கடந்த ஓராண்டில் 34 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளன.

ஸ்பெக்ட்ரம் விவகாரம், சிபிஐ-அமலாக்கப் பிரிவு நடவடிக்கைகள், திமுக ஆட்சி போனது, தயாநிதி மாறனுக்கு மத்திய அமைச்சர் பதவி போனது, அதிமுகவின் அரசு கேபிள், விளம்பர வருவாய் சரிவு, டிராய் போடவுள்ள கட்டுப்பாடுகள் என சன் டிவியின் முன் உள்ள சவால்கள் மிக மிக அதிகம்.

இந் நிலையில் டிடிஎச் சேவைகள் மீது 30 சதவீத வரி போடவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



பில்லா 2 இடைவேளையில் வாலை விடும் சிம்பு

Posted: 26 May 2012 09:17 AM PDT


அஜீத் குமாரின் பில்லா 2 பட இடைவேளையில் தனது மற்றும் தல ரசிகர்களுக்கு சிம்பு ஒரு சர்பிரைஸ் கொடுக்கப் போகிறார்.

நடிகர் சிலம்பரசன் ஒரு தீவிர அஜீ்த் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அஜீத்தின் பில்லா 2 விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இந்நிலையில் தல மற்றும் தனது ரசிகர்களுக்கு ஏதாவது சர்பிரைஸ் கொடுக்க வேண்டுமே என்று நினைத்த சிம்பு தனது மண்டையைப் போட்டு உடைத்து ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.

சிம்பு தற்போது ஹன்சிகாவுடன் சேர்ந்து வாலு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அல்லவா அந்த படத்தின் டீசர் அண்மையில் தான் எடுக்கப்பட்டது. அந்த டீசரை பில்லா 2 இடைவேளையில் திரையிட அவர் திட்டமிட்டுள்ளாராம். இது சிம்பு ரசிகர்களுக்கு வேண்டுமானால் சர்பிரைஸ் என்று சொல்லலாம் ஆனால் தல ரசிகர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ?

சிம்பு, ஹன்சிகா, சந்தானம், வி.டி.வி. கணேஷ் நடிக்கும் வாலு படத்தை புதுமுக இயக்குனர் விஜய் இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார்.

பில்லா 2 இடைவேளையில் 'வாலு' வந்தால் உங்களுக்கு எல்லாம் ஓ.கே.வா?



ராமேசுவரத்தில் பரபரப்பு 500 மீட்டர் தூரத்திற்கு உள் வாங்கியது கடல்

Posted: 26 May 2012 09:04 AM PDT

ராமேசுவரத்தில் இன்று அதிகாலை திடீரென கடல் உள்வாங்கியது. இதனால் நாட்டு படகுகள் தரை தட்டி நின்றன. 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு ராமேசுவரத்தில் அடிக்கடி கடல் உள் வாங்குவது, கடல் கொந்தளிப்பு என கடலில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இன்று அதிகாலை ராமேசுவரத்தில் திடீரென சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கடல் உள் வாங்கியது. அக்னி தீர்த்த கடற்கரை, துறைமுக கடற்கரை, சங்கு மால் கடற்கரை ஆகிய இடங்களில் கடல் உள்வாங்கியதால் 500 மீட்டர் தூரத்திற்கு பாறைகளாக காட்சியளித்தது. 

இன்று காலை மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக வந்து பார்த்தபோது நாட்டு படகுகள் தரை தட்டி நின்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் 50-க்கும் மேற்பட்ட நாட்டு படகில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. 

இது குறித்து ராமேசுவரம் மீனவர்கள் கூறும்போது, அடிக்கடி இதுபோன்று ராமேசுவரத்தில் கடன் உள்வாங்குகிறது. இதனால் மீனவர்களாகிய எங்களுக்கு ஒரு வித அச்சமாக உள்ளது. எனவே மத்திய அரசு விஞ்ஞானிகளை அனுப்பி ராமேசுவரம் கடல் பகுதியில் ஆய்வு செய்து எங்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று கூறினர். 

அக்னி தீர்த்த கடல் பகுதியில் கடல் உள் வாங்கி இருந்தாலும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் எந்தவித பதட்டமும் இன்றி குளித்து மகிழ்ந்தனர். வழக்கத்தைவிட இன்று ராமேசுவரத்தில் அதிக அளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.





பெட்ரோல் 'குண்டைத்' தொடர்ந்து மக்களை தாக்க ஜூன் மாதத்தில் வருகிறது டீசல், காஸ் குண்டு

Posted: 26 May 2012 08:58 AM PDT


மக்கள் மீது பெட்ரோல் விலை உயர்வு குண்டை வீசி இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்துள்ள நிலையில் அடுத்து டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையையும் உயர்த்த மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும் ஜூன் முதல் வாரத்தில் இந்த விலை உயர்வு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

உடனடியாக டீசல், காஸ் விலை உயர்வையும் மத்திய அரசு அறிவிப்பதாக இருந்தது. ஆனால் பெட்ரோல் விலை உயர்வுக்கு கடும் கண்டனமும், கொதிப்பும், கொந்தளிப்பும் கிளம்பியுள்ளதால் டீசல், காஸ் விலை உயர்வை தற்போதைக்குத் தள்ளி வைத்து ஜூன் மாதத்திற்கு அதைக் கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற முடியாது என்று ஏற்கனவே பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதையடுத்து டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு தயாராகி விட்டது.

டீசல் விலை உயர்ந்தால் விலைவாசி மிகக் கடுமையாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பணவீக்கம் அதிகரித்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பைச் சந்திக்கும். அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி உள்ளிட்டவற்றின் விலை மிகப் பெரிய அளவில் உயரும் அபாயமும் உள்ளது. ஆனால் விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று எண்ணை நிறுவனங்களும், அரசுத் தரப்பும் கூறி வருகின்றன.

மே 31ம் தேதி பாரத் பந்த் நடத்த பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த பந்த் முடிந்த பின்னர் டீசல் விலை உயர்வை மத்திய அரசு அறிவிக்கலாம் என்று தெரிகிறது.



புதுக்கோட்டையில் ஆளுக்கு 1000 மில்லி ரம், விஸ்கி, 1300 மில்லி பீர் மட்டுமே!

Posted: 26 May 2012 08:49 AM PDT


புதுக்கோட்டையில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து ஒரு தனிமனிதருக்கு இவ்வளவுதான் என்று மது விற்பனைக்கு டாஸ்மாக் நிறுவனம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இந்தப் புதிய கட்டுப்பாட்டின்படி பீர், விஸ்கி, ஒயின் போன்றவற்றை ஒரு தனி மனிதர் அதிகபட்சம் தலா 2 பாட்டில்களை மட்டுமே வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வெளியிட்டுள்ள உத்தரவு:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளுக்கும் ஒரு தனிநபருக்கு அதிகபட்சமாக எவ்வளவு மதுபானங்கள், பீர் வகைகள் விற்பனை செய்யலாம் என்று ஆணையிடப்பட்டு உள்ளது. அதன்படி, அதிகபட்சமாக மதுபானம், அயல்நாட்டு மதுபான வகை, ஒயின் ஆகியவை தலா ஆயிரம் மில்லி லிட்டரும், பீர் 1,300 மில்லி லிட்டரும் விற்பனை செய்யலாம்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் தனிநபர்களுக்கு மேற்கண்ட குறிப்பிட்ட அளவு மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 186 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தினசரி ரூ.1 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் விற்பனையாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணையுங்கள்: மமதாவுக்கு பாஜக அழைப்பு

Posted: 26 May 2012 08:36 AM PDT


தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைய வருமாறு மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பாரதிய ஜனதா கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

மும்பையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மம்தா பானர்ஜி முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியிலும் இடம் பெற்று இருந்தார். வாஜ்பாய் தலைமையிலான மந்திரி சபையில் இடம் பெற்று இருந்தார். எங்களுடன் அவர் பணியாற்றியபோது, அவருக்கு உரிய முக்கியத்துவம், மதிப்பு, மரியாதையை நாங்கள் கொடுத்தோம்.

இப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்று இருந்தாலும், அங்கு வெளியில் சொல்ல முடியாத அதிருப்தியில், கிட்டத்தட்ட மூச்சு திணறும் நிலையில் இருக்கிறார். முதலில் அவர் எங்களை அணுகட்டும் என்றார் அவர்.



தண்டவாளத்தில் ஏறும் தமிழக ஐ.டி. அமைச்சரின் வண்டவாளம்

Posted: 26 May 2012 07:11 AM PDT


தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியம் பொய்யாக தாம் பி.ஏ. படித்திருப்பதாக அரசுக் குறிப்பில் இடம்பெறச் செய்திருப்பது தவறு என்று சில நாட்களுக்கு முன்பு திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவினரும் இது தொடர்பாக போயஸ் தோட்டத்துக்கு புகார் மேல் புகார் அனுப்பி வருகின்றனர்.

உண்மையில் முக்கூர் சுப்பிரமணியம் படித்திருப்பதுதான் என்ன?

சட்டப்பேரவைத் தேர்தலின் போது செய்யார் தொகுதி வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியன் பி.ஏ. என்று ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார். பேரவைத் தேர்தல் வேட்பு மனுத்தாக்கலின் போது பி.ஏ. இரண்டாம் ஆண்டு என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது 6-ம் வகுப்பு பெயில் என்று குறிப்பிட்டிருந்தார்.

முக்கூர் சுப்பிரமணியம் வெற்றி பெற்ற பின்னர் அரசின் குறிப்புகளில் பி.ஏ. என்றே இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாக சர்ச்சை எழுந்தவுடன் பி.ஏ. என்பதை அடைப்புக் குறிக்குள் போட்டு அனைவரது வாயையும் அடைத்தனர்.

இது தொடர்பாக முக்கூர் சுப்பிரமணியத்திடம் கேட்கும் பத்திரிகையாளர்களிடம் தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. படிப்புக்கு சேர்ந்ததற்கான ரசீது, ஐ.டி.கார்டு, ஹால் டிக்கெட் ஏன் மார்க் ஷீட் எல்லாம் கூட இருக்கிறதே என்று காலரைத் தூக்கிவிடுகிறார். சரி என்று வாங்கிப் பார்த்தவர்கள்தான் வாய் பிளந்து போய் நின்றனர். பி.ஏ. பொலிடிக்கல் சயின்ஸ் பாடம் எடுத்திருக்கும் இவரது மார்க் ஷீட்டில் ஒரு பாடத்தில் கூட பாஸ் இல்லை. எல்லாமே பெயில்தான்..

ஆக முக்கூர் சுப்பிரமணியம் பி.ஏ.க்கு டிரை பண்ணியிருக்கிறார். அதை முடிக்கலை. ஆனால் பி.ஏ. படித்தாக "முதலமைச்சரை ஏமாற்றி, அரசின் குறிப்புகளில் போர்ஜரி" செய்திருக்கிறார் என்று அவரது ஆதாரங்களை வைத்தே ஆப்பு அடிக்கக் கிளம்பிவிட்டனர் அதிமுக உடன்பிறப்புகள்.

இது மட்டுமல்ல இவர் மீது ஏகப்பட்ட வழக்குகளும் இருக்கிறதாம். இதில் திருட்டு கேஸூம் அடக்கம். ஆனால் இதைப்பற்றியெல்லாம் வேட்பு மனுத்தாக்கலின் போது எதுவும் தெரிவிக்காமல் மறைத்துவிட்டாராம்..

அம்மா அமைச்சரவை மாற்றியமைச்சு நாளாச்சு... முக்கூரார்தான் திருஷ்டி கழிப்பார் போல..



மக்கள் எங்களிடம் ஒப்படைத்துள்ள பொறுப்பை நாங்கள் உணர்ந்துள்ளோம்: சோனியா காந்தி

Posted: 26 May 2012 07:05 AM PDT

வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. அசாம் அரசின் ஓராண்டு நிறைவு விழா இன்று கவுகாத்தியில் நடைபெற்றது. 

இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: 

அசாம் மாநிலத்தில் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும்,  காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசும் மேற்கொண்ட முயற்சிகள் ஆக்கபூர்வமாக அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 

வன்முறையால் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது என்பதை பல தீவிரவாத அமைப்புகளும் உணர்ந்துள்ளன. எனவே, இதுவரை பேச்சுவார்த்தையில் பங்கேற்காத தீவிரவாத அமைப்புகளும் இனி அரசின் அமைதி முயற்சியில் இணைவார்கள் என்று நம்புகிறேன். 

அசாம் மாநிலத்தில் ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெறும் இன்று காங்கிரஸ் கட்சிக்கு கொண்டாட்ட நாள் ஆகும். அதே சமயம், மக்கள் எங்களிடம் ஒப்படைத்துள்ள பொறுப்பை நாங்கள் உணர்ந்துள்ளோம். அவர்களுக்குத் தொடர்ந்து சேவையாற்ற உறுதி பூண்டுள்ளோம். 







பாலியல் புகாரில் சிக்கினால் ஆசிரியர்கள் இனி டிஸ்மிஸ்: பள்ளிக் கல்வித்துறை

Posted: 26 May 2012 06:35 AM PDT


பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இனி இத்தகைய புகார்களில் சிக்கும் ஆசிரியர்களுக்கு கட்டாய பணி ஓய்வு அல்லது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபிதா வெளியிட்டுள்ள உத்தரவு:

மாணவர்களுக்கு முன் உதாரணமாகவும், வழி காட்டியாகவும் இருக்க வேண்டிய ஆசிரியர்களில் சிலர் மாணவ- மாணவிகளிடம் ஒழுக்க கேடான முறையில் நடந்து கொள்கின்றனர். இதனால் மாணவர் சமுதாயம், குறிப்பாக பெண் குழந்தைகள் மோசமாக பாதிக்கப்படுவது குறித்து சமீப காலமாக ஊடகங்களில் செய்திகள் அதிக அளவில் வெளி வருகின்றன.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குனர் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இந்த அவல நிலையை உடனடியாக களையவும், மாணவ- மாணவியரிடம் ஆசிரியர் தவறான முறையில் நடந்து கொள்ளும் நிலையை முற்றிலும் தவிர்ப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்க பள்ளிக்கல்வி இயக்குனர் அரசுக்கு பரிந்துரைத்தார்.

டிஸ்மிஸ் நடவடிக்கை

பரிசீலனைக்கு பின் தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. அதன்படி தவறான நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு கடும் தண்டனையாக கட்டாய ஓய்வு, பணி நீக்கம் மற்றும் பணியறவு (டிஸ்மிஸ்) போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.

அரசு பள்ளி ஆசிரியரை பொறுத்தவரை, அரசுப் பணியாளர் நடத்தை விதி 19(2) இதற்கு பொருந்தும். இவ்விதியை மீறுபவர்களுக்கு மேற்குறிப்பிட்ட தண்டனைகளுள் ஒன்று வழங்கப்படும். அத்துடன் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்வி சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். பள்ளி குழந்தைகளுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் பிற நபர்களின் தவறான நடவடிக்கைகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஆலோசனை மையங்கள்

மாணவ-மாணவியரின் மனநிலை பிரச்சினைகளை களைய உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கென, பள்ளிக் கல்வித்துறை மூலம் உளவியல் ஆலோசகர், உதவியாளர் மற்றும் அனைத்து வகை வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தி மாணவ- மாணவியருக்கு விழிப்புணர்வு, ஆசிரியருக்கு ஆலோசனைகளும் வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



காதலன் ராஜேஷ் உடன் ஜோடியாக நடிக்கிறார் மீரா ஜாஸ்மின்

Posted: 26 May 2012 06:27 AM PDT



நடிகை மீரா ஜாஸ்மினும் மண்டோலின் இசைக் கலைஞர் ராஜேசும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கிசு கிசு பரவியது. ஆனால் அதை இருவரும் மறுத்தனர்.

மீரா ஜாஸ்மின் படப்பிடிப்பு அரங்குகளில் ராஜேஷை அடிக்கடி காண முடிகிறது. மீரா ஜாஸ்மினும் சென்னை வரும் போதெல்லாம் ராஜேஷ் வீட்டுக்கு செல்கிறார். காதலரின் மண்டோலின் இசை கச்சேரி நிகழ்ச்சிகளிலும் முதல் வரிசையில் உட்கார்ந்து ரசிக்கிறார்.

இந்த நிலையில் தெலுங்கு படமொன்றில் இருவரும் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இதுகுறித்து மீரா ஜாஸ்மினுக்கு நெருக்கமான ஒருவர் கூறும்போது, முதல் தடவையாக ராஜேசும் மீரா ஜாஸ்மினும் இணைந்து சினிமாவில் நடிக்கின்றனர். இருவருக்குமே கதை பிடித்துள்ளது என்றார். இந்த படம் வெளியான பின் திருமணம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என தெரிகிறது.





Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™