Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





விழியே பேசு...

விழியே பேசு...


பெட்ரோல் விலை உயர்வில் தி.மு.க.வுக்கு பங்கு உண்டு: பிருந்தா காரத் பேச்சு

Posted: 24 May 2012 09:36 PM PDT

கோவை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கோவை காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் பேசியதாவது:- 

பெட்ரோல் விலை உயர்வு என்பது மக்களுக்கு எதிரான முடிவாகும். மத்தியில் ஆட்சிப்பொறுப்பு ஏற்றுள்ள காங்கிரஸ் கட்சி மூன்று ஆண்டு காலம் நிறைவு செய்துள்ள நேரத்தில் பெட்ரோல் விலை உயர்வை மக்களுக்கு பரிசாக அளித்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வு என்பது நாடு முழுவதும் உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை 15 சதவீதம் குறைந்துள்ள நிலையில் பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்களுக்காக மத்திய அரசு செயல்படாமல் எண்ணைய் நிறுவனங்களுக்கும், பெரிய நிறுவனங்களுக்கான அரசாகவே செயல்படுகிறது. பெட்ரோலுக்காக அதிக தொகை மானியமாக கொடுப்பதாக கூறும் மத்திய அரசு பெட்ரோல் விலையில் 50 சதவீதத்தை வரியாக பெற்று வருவாய் ஈட்டி வருகிறது. 

கடந்த ஓராண்டில் மட்டும் பெட்ரோல் மீதான வரி மூலம் ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் மத்திய அரசு வருவாய் ஈட்டியுள்ளது. பெட்ரோல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும். இதனால் நாடு முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவர். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணியில் உள்ள தி.மு.க.வுக்கும் பெட்ரோல் விலை உயர்வில் பங்கு உண்டு. 

இவ்வாறு அவர் கூறினார். 





ஆருஷியை கொன்றது பெற்றோரே: நீதிமன்றத்தில் சி.பி.ஐ வாதம்

Posted: 24 May 2012 09:16 PM PDT

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த சிறுமி ஆருஷியும், அவரது வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் என்பவரும், கடந்த 2008-ம் ஆண்டில், ஆருஷியின் வீட்டில் மர்மமான முறையில் கொல்லப்பட்டடு கிடந்தனர். இவ்வழக்கில் ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வார், தாயார் நூபுர் தல்வார் ஆகியோர் மீது புகார் கூறப்பட்டது. 

இந்த வழக்கை, சி.பி.ஐ விசாரித்து வருகிறது. சமீபத்தில் நூபுர் தல்வார் சி.பி.ஐ போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், நூபுர் மற்றும் ராஜேஷ் தல்வார் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்வது தொடர்பான வாதம், காசியாபாத் நீதிமன்றத்தில் நடந்தது. 

அப்போது, சி.பி.ஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.கே.சைனி, 'சம்பவத்தன்று, ஆருஷியின் பெற்றோர், நள்ளிரவில் தான் வீடு திரும்பினர். அப்போது படுக்கையறை உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. ராஜேஷ் தல்வார், தன்னிடம் இருந்த மற்றொரு சாவியை பயன்படுத்தி, அந்த அறையை திறந்தார். அங்கே ஆருஷியும், வேலைக்காரர் ஹேம்ராஜும், தகாத உறவில் ஈடுபட்டிருந்ததை பார்த்து, அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் 'கோல்ப்' விளையாடும் குச்சியால் இருவரையும் தாக்கினார். இருவரும் மயக்கம் அடைந்ததும், மருத்துவர்களான ராஜேஷ் தல்வாரும், நூபுரும் சேர்ந்து அறுவை சிகிச்சை செய்யும் கத்தியால், இருவரின் தொண்டையையும் அறுத்து கொலை செய்தனர். இருவரது கழுத்திலும் உள்ள காயங்கள், நேர்த்தியாக அறுக்கப்பட்டதை உறுதிப்படுத்துகிறது' என்று வாதிட்டார். 

மேலும், 'இருவரும் சேர்ந்து ரத்தம் படிந்திருந்த அந்த அறையை சுத்தம் செய்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையையும் மாற்ற முயற்சித்தனர். கவுரவம் கருதி, இந்த கொலைகளைச் செய்துள்ளனர்' எனவும் சி.பி.ஐ வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால் ராஜேஷ் தல்வார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதை மறுத்தார். 

ஆருஷியின் தாயார் நூபுர் கூறுகையில், "சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள், பாலியல் உறவு குறித்த விஷயத்தை பெரிதாக கருத மாட்டார்கள். பாலியல் உறவில் ஈடுபட்டதற்காக, யாரையும் கொலை செய்ய மாட்டார்கள். வலுவான ஆதாரங்கள் எதுவுமின்றி, சூழலை அடிப்படையாக வைத்து, சி.பி.ஐ தனது வாதத்தை முன் வைக்கிறது' என்றார்.





மும்பைத் தாக்குதலில் உண்மை குற்றவாளிகள் விசாரிக்கப்படவில்லை: இந்தியா

Posted: 24 May 2012 08:59 PM PDT

கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி மும்பையில் பல்வேறு இடங்களில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் தொடர்புள்ள லஷ்கர் இயக்கத்தினர் பலர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. லஷ்கர் இயக்க தளபதி ஸக்கியுர் ரஹ்மான் லக்வியும் வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறார். 

லஷ்கர் இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி வெளிப்படுத்திய தகவலின் அடிப்படையில் பாகிஸ்தான் ராணுவத்தில் இப்போதும் பணியிலிருக்கும் அதிகாரிகளும், ஓய்வு பெற்ற அதிகாரிகளும் இந்தத் தாக்குதலை நடத்த சதித் திட்டம் தீட்டியதாக இந்தியா கூறி வருகிறது. இது பற்றிய முழுமையான விசாரணையை பாகிஸ்தான் மேற்கொள்ளவில்லை என்றும் இந்தியா குறை கூறி வருகிறது. லஷ்கர் இயக்க நிறுவனர் ஹபீஸ் முகமது சயீத் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கும் பாகிஸ்தான் செவி சாய்க்கவில்லை. இந்தியா தந்திருக்கும் ஆதாரங்கள் நடவடிக்கை எடுக்கப் போதுமானதல்ல என்பது பாகிஸ்தானின் வாதமாக இருந்து வருகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்களின் குரல் மாதிரிகளைத் தருவதற்கும் பாகிஸ்தான் மறுத்து வருகிறது. 

இந்தியாவில் இந்த வழக்கை விசாரித்து வந்த அதிகாரிகளை சந்தித்து தகவல் சேகரிக்க பாகிஸ்தான் அதிகாரிகள் மார்ச் மாதத்தில் மும்பை வந்திருந்தனர். இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பயண நடைமுறைகளை எளிதாக்குவது, மும்பைத் தாக்குதல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தானில் நடைபெறும் வழக்கை மும்முரப்படுத்தவும் வலியுறுத்தி இந்திய அதிகாரிகள் குழு இரண்டு நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளது. 

இதற்கான பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னதாக தலைநகர் இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங்,   'மும்பை தாக்குதலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ளவர் மீதான வழக்கு விசாரணை மிக மெதுவாகவே நடக்கிறது. தாக்குதலில் உண்மையாக ஈடுபட்டவர்கள் நீதிமன்றத்தின் முன்பு கொண்டு வரப்படவில்லை. இவர்கள் விரைவில் நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும்' என்றார். 

விசா விதிமுறைகள், பாகிஸ்தான்-இந்தியா இடையே பயணம் மேற்கொள்வோருக்கு உதவியாக விசா நடைமுறைகளை எளிமையாக்குவது குறித்தும் உள்துறைச் செயலர் தலைமையிலான இந்திய அதிகாரிகள் குழு பேச்சு நடத்துகிறது. கடந்த ஒரு வருட காலமாக இரு நாடுகளிடையே இது பற்றிய பேச்சுகள் நடைபெற்று வருகின்றன. 

வருடத்தில் பல முறை நாட்டினுள் வந்து செல்ல அனுமதிக்கும் சிறப்பு விசா, மூத்த குடிமக்கள், குழந்தைகள் நாட்டினுள் வந்த பின்பு விசா வழங்குதல் போன்ற அம்சங்களை இரு தரப்பு அதிகாரிகளும் விவாதிப்பார்கள். இதற்கான உடன்படிக்கை வெள்ளிக்கிழமை கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதம், போதை மருந்து கடத்தல், பாகிஸ்தானிலுள்ள இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள், நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் குறித்தும் இரு நாட்டு உள்துறை அதிகாரிகள் பேச்சு நடத்துவார்கள்.





ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதில் 3 ஆயிரம் பேருக்கு விலக்கு

Posted: 24 May 2012 08:35 PM PDT

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதிலிருந்து பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர்கள் உள்பட சுமார் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் விலக்கு அளித்துள்ளது. அதன்படி, இப்போது ஆசிரியர்களாகப் பணியாற்றுவோரில் 2010, ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு முன்னதாகவே ஆசிரியர் நியமனத்துக்கான பணிகள் தொடங்கியிருந்தால், அவர்களுக்கு இந்தத் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.  

ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையின்படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் அறிவிப்பாணை வெளியான 2010, ஆகஸ்ட் 23-ம் தேதிக்குப் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் தகுதித் தேர்வு எழுத வேண்டும். இதை எதிர்த்து வட்டார வள மைய ஆசிரியர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கினால் ஆசிரியர் நியமனப் பணிகள் பாதிப்படையக் கூடாது என்பதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த முடிவால், வட்டார வள மைய ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் என சுமார் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்குக் கிடைக்கும். 

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு இம்மாதம் 27-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வில் பங்கேற்பதற்காக சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு ஹால் டிக்கெட்டுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பியுள்ளது.





பிரதமர் பதவிக்கு நரேந்திரமோடி தகுதியானவர்: எடியூரப்பா

Posted: 24 May 2012 08:24 PM PDT

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பெங்களூரில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது, 'குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி சிறந்த நிர்வாகத்தை அளித்து வருகிறார். ஆட்சியை நல்ல முறையில் நடத்துகிறார். மேலும் நாட்டிலேயே புகழ்பெற்ற மனிதர் என்று அவரை பற்றி ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நிலையில் பிரதமர் பதவிக்கு மோடி பொருத்தமானவர், தகுதியானவர். எனவே, அவரை பற்றிய தகவல்களை அடிப்படையாக கொண்டு பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை பா.ஜனதா அறிவிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக மும்பையில் நடைபெறும் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கட்சியின் மேலிடத்தை கேட்டுக்கொள்கிறேன். அதே வேளையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி ஆகியோருடன் மோடியை ஒப்பிட்டு பேசக்கூடாது' என்று எடியூரப்பா கூறினார். 

மும்பையில் நடைபெறும் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று எடியூரப்பா ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், `வழக்குகள் நிலுவையில் இருப்பதால் என்னால் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க செல்ல முடியவில்லை. முடிந்தால் வெள்ளிக்கிழமை (இன்று) மும்பை சென்று செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்வேன்' என்று தெரிவித்தார்.







குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீலின் மாளிகையில் திருட்டு

Posted: 24 May 2012 07:54 PM PDT


கடந்த ஒரு மாதமாக குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீலின் அதிகாரபூர்வ மாளிகையில் இருந்து மர்ம நபர்கள் பொருட்களை திருடி சென்றுள்ளதாக பாட்டீலின் பத்திரிகை துறை அதிகாரி காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
பாட்டீலின் சிறப்பு அதிகாரி அர்ச்சனா தத்தா, நேற்று பாராளுமன்ற தெரு காவல் நிலையத்தில் இப்புகாரை தெரிவித்துள்ளார். அப்புகாரில் கடந்த ஒரு மாதமாக சோலார் மோட்டார், மூன்று பாதுகாப்பு விளக்குகள், இன்டர்நெட் கேபிள் மற்றும் தொலைபேசி கேபிள் போன்றவைகள் குடியரசுத்தலைவர் மாளிகை  எண்.6 லிருந்து திருடப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக இன்டர்நெட் கேபிள் மற்றும் தொலைபேசி கேபிள்கள் இரண்டு முறை  திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது போன்ற திருட்டு சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் இருக்க காவல் துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இப்புகார் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



அடங்கொப்புரானே... கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!

Posted: 24 May 2012 07:32 AM PDT


சிவகங்கையில் நேற்று ஒரு பெரிய கூத்து நடந்து விட்டது. அதாவது அங்குள்ள சிவன் கோவிலில் நடந்த ஒரு திருமணத்தின்போது கூட்ட நெரிசலால் தனது மணப்பெண் யார் என்று தெரியாமல் அருகில் நின்றிருந்த இன்னொரு மணப்பெண்ணுக்குத் தாலி கட்டி விட்டார் மாப்பிள்ளை.

வைகாசி மாதம் என்றாலே தமிழகத்தில் திருமணங்கள் தடபுடலாக நடப்பது வழக்கம். நேற்றும் முகூர்த்த நாள். இதனால் சிவகங்கையில் ஏகப்பட்ட திருமணங்கள் அலைமோதியபடி இருந்தன. அங்குள்ள சிவன் கோவிலில் நேற்று 30க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்குத் திருமணம் நடந்தது.

ஒவ்வொரு ஜோடிக்கும் ரசீது கொடுத்து, திருமணத்தைப் பதிவு செய்து முறைப்படி நடத்தினர்.

அப்போது இரு ஜோடி மணமக்கள் அருகருகே அமர்ந்திருந்தனர். கூட்டம் கட்டி ஏறிக் கொண்டிருந்தது. தாலி கட்டும் நேரத்தில் பெரும் குழப்பமாகி விட்டது. ஒரு மாப்பிள்ளை, தனது மணமகளுக்குக் கட்டுவதற்குப் பதில், அருகில் இருந்த இன்னொரு மணமகளுக்குத் தாலி கட்டி விட்டார். இதனால் இரு தரப்பு உறவினர்களுக்கும் இடையே கடும் மோதலாகி விட்டது. சூடான வாதங்கள் பாய்ந்தன.

இந்த நிலையில் தாலி கட்டப்பட்ட மணப்பெண் எழுந்து, தெரிந்தோ தெரியாமலோ எனது கழுத்தில் தாலி கட்டி விட்டார். இதை பிரிப்பது சரியாக முறையாக இருக்காது. இவருடனேயே வாழ்ந்து விடுகிறேன், எங்களைப் பிரித்து விடாதீர்கள் என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து வேறு வழியில்லாமல் நான்கு குடும்பத்தினரும் அமைதியடைந்தனர். அதன் ஜோடி மாறிப் போன பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் திருமணம் செய்து வைத்து அழைத்துச் சென்றனர்.



விவேகானந்தரும், நித்தியானந்தாவும் ஒன்று :டிராபிக் ராமசாமி

Posted: 24 May 2012 06:32 AM PDT


சுவாமி விவேகானந்தரும், நித்தியானந்தாவும் ஒன்று என்று கூறியுள்ளார் டிராபிக் ராமசாமி.

டிராபிக் ராமசாமியைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சென்னையைச் சேர்ந்தவரான டிராபிக், பல நல்ல பொது நலன் மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து மக்களுக்கு பல பேருதவிகளைச் செய்தவர்.

இவர் மீது எப்போதும் கொந்தளிப்புடனும், கொதிப்புடனும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அந்த அளவுக்கு மற்றவர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டவர், ஆனாலும் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்.

அப்படியாப்பட்ட டிராபிக் ராமசாமி தற்போது நித்தியானந்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். சமீபத்தில் மதுரை ஆதீன மடத்திற்கு விசிட் அடித்த அவர் அங்கு நித்தியானந்தாவை புகழ்ந்து பேசியுள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவரிடம் கேட்டால், விவேகானந்தவர் மிகவும் தைரியமானவர். அவருக்குப் பிறகு அந்தத் தைரியத்தை நித்தியானந்தாவிடம்தான் பார்க்கிறேன். 100 இளைஞர்களைக் கொடுங்கள், இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்று கூறியவர் விவேகானந்தர். அதேபோல நித்தியானந்தவிடம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். அவரது செயல்களில் நம்பிக்கை ஏற்பட்டதால்தான் அவரை விவேகானந்தருடன் ஒப்பிட்டுப் பேசினேன் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், மதுரை ஆதீனத்திற்கு பல கோடி சொத்துக்கள் உள்ளன. அதை சில சுயநலவாதிகள் அனுபவித்து வருகிறார்கள். அவர்களிடமிருந்து சொத்துக்களை நித்தியானந்தா மீட்டு விடுவார் என்று பயந்துதான் அந்த சுயலவாதிகள் தூண்டுதலின் பேரில் நித்தியானந்தாவுக்கு எதிரான போராட்டங்கள் தூண்டி விடப்படுகின்றன என்று கூறுகிறார் டிராபிக்.

சரி நித்தியானந்தா மீது பாலியல் வழக்குகள் உள்ளனவே என்ற கேள்விக்கு, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மீதும்தான் இருக்கிறது. மேலும் நித்தியானந்தா மீதான பாலியல் புகார்கள் நிரூபிக்கப்படவே இல்லையே என்றார் டிராபிக்.

மேலும், நித்தியானந்தாவுக்கு ஆதரவாக பேசுவதற்காக தான் பணம் வாங்கி விட்டதாக கூறப்படுவதையும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.



பெட்ரோல் விலை குறைக்கப்படமாட்டாது: இந்தியன் ஆயில் நிறுவன தலைவர்

Posted: 24 May 2012 06:10 AM PDT


பெட்ரோல் விலை இதுவரை இல்லாத அளவாக லிட்டருக்கு ரூ. 7.50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.வரலாறு காணாத இந்த விலை உயர்வு நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
காங்கிரஸின் கூட்டணி கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போன்றவை இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. உயர்த்தப்பட்ட பெட்ரோலின் விலையை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
விலை உயர்வு குறைப்பது குறித்து நாளை மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதன் முடிவில் பெட்ரோலின் விலை குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் பெட்ரோலின் விலையை குறைக்க முடியாது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் சூசகமாக தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து  இந்நிறுவனத்தின் தலைவர் புட்லா கூறியதாவது:
 
சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை உயர்ந்ததால் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். பெட்ரோல் விலையை உயர்த்தாமல் இருந்த ஒவ்வொரு நாளும் 50 கோடி ரூபாய் இழப்பினை எண்ணை நிறுவனங்கள் சந்தித்து வந்தன.
 
கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் இன்று வரை, எண்ணை நிறுவனங்களுக்கு 4500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை ஈடுகட்டும்படி கேட்டதற்கு மத்திய அரசு மறுத்துவிட்டது. அதனாலேயே விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை குறைந்தால், பெட்ரோலின் விலை குறைக்கப்படும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.























ஷங்கரின் நாயகியான அசின்!

Posted: 24 May 2012 06:04 AM PDT


இயக்குனர் ஷங்கர் விக்ரமை வைத்து எடுக்கும் தேர்தல் படத்தின் நாயகி அசின் தானாம்.

இயக்குனர் ஷங்கர் படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் பேரார்வம் காட்டுவார்கள். அதற்கு காரணம் ஷங்கர் இயக்கும் படங்கள் அனைத்தும் ஹிட் தான். 3 இடியட்ஸ் படத்தை தமிழில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்து அதுவும் ஹிட்டாகிவிட்டது. அதில் நடித்த விஜய் கூட தான் நடித்ததால் படம் ஹிட்டாகவில்லை, கதை அப்படி என்றார்.

இந்நிலையில் அடுத்த படத்தை இயக்க சங்கர் தயாராகிவிட்டார். ஹீரோவாக சீயான் விக்ரமை தேர்வு செய்துள்ளார். இவர்கள் ஏற்கனவே இணைந்து பணியாற்றிய அந்நியன் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த கூட்டணி சேரும் படத்திற்கு தேர்தல் என்று பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் நாயகியாக பிரியங்கா சோப்ரா அல்லது அசின் நடிக்கலாம் என்று கூறப்பட்டது.

மும்பை பக்கம் சென்ற ஷங்கரை அசின் நேரில் சந்தித்து இந்த வாய்ப்பை தனக்கே தருமாறு கேட்டுக் கொண்டாராம். (இது பிரியங்காவுக்கு தெரியுமா?) ஆனால் இலங்கை சென்று அதிபர் ராஜபக்சேவை சந்தித்த அசினை ஷங்கர் தனது படத்தில் நடிக்க வைக்கக் கூடாது என்று இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை எல்லாம் தாண்டி தற்போது படத்தின் நாயகி அசின் என்பது உறுதியாகிவிட்டதாம்.

இந்த படத்தின் மூலம் முதன் முறையாக சங்கருடன் இணைகிறார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். மேலும் தேர்தல் தெலுங்கிலும் தயாராகவிருக்கிறது. அங்கு கப்பார் சிங் நாயகன் பவன் கல்யாண் நடிக்கிறார்.

ஆடிய கூத்து ஆடினாலும் அசின் காரியத்தில் கண்ணாகத் தான் இருக்கிறார்.



ஜூனியர் ஆட்டிஸ்டுகளை விபச்சாரத்தி்ல் தள்ளிய 'கோலங்கள்' துணை இயக்குனர் கைது

Posted: 24 May 2012 05:22 AM PDT


கோலங்கள் மெகா சீரியலின் துணை இயக்குனர் அன்பு ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடிக்கும் இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் வெள்ளித்திரை மற்றும் சின்னதிரையில் சிறு, சிறு கதாபாத்திரங்களில் வந்து போகும் இளம் பெண் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் பணத்திற்காக பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இந்த தொழில் ஈடுபடுபவர்களை தொடர்பு கொண்டனர். அவர்களும் போலீசாரை வடபழனி சரவணபவன் ஹோட்டல் அருகே வந்து பெண்ணை அழைத்துச் செல்லுமாறு தகவல் கொடுத்துள்ளனர்.

யூனிபார்மில் போனால் வேலைக்கு ஆகாது என்று நினைத்து மஃப்டியில் சென்ற போலீசார் குறிப்பிட்ட இடத்தை அடைந்தனர். அங்கு இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக அவரை அன்பு என்பவர் அங்கு அழைத்து வந்துள்ளார்.

போலீசார் அந்த இளம் பெண்ணை மீட்டு, அன்புவை கைது செய்தனர். அன்புவிடம் நடத்திய விசாரணையில் அவர் கோலங்கள் உள்ளிட்ட மெகா தொடர்களில் துணை இயக்குனராகவும், மேடை கச்சேரிகளில் நடன இயக்குனராகவும் பணியாற்றியது தெரிய வந்தது.



பிளஸ் டூ தேர்வு எழுதிய மகள் பாஸ், தந்தை ஃபெயில்

Posted: 24 May 2012 04:53 AM PDT


சீர்காழி அருகே தந்தையும், மகளும் பிளஸ் டூ தேர்வு எழுதினர். அதில் மகள் தேர்ச்சியடைந்துவிட்டார். ஆனால் தந்தை பெயிலாகிவிட்டார்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து(39). சாலை பணியாளர். அவரது மகள் சுபஸ்ரீதேவி (17). அவர் சீர்காழியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாரிமுத்துவும், சுபஸ்ரீதேவியும் ஒன்றாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு அவர்கள் இருவரும் பிளஸ் டூ தேர்வு எழுதினர். இதில் சுபஸ்ரீதேவி 1,200க்கு 869 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார். ஆனால் தந்தை மாரிமுத்து தமிழை தவிர அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்துள்ளார்.

மாரிமுத்துவின் மதிப்பெண் விவரம்,

தமிழ்- 78, ஆங்கிலம்-52, பொருளியல்-16, வணிகவியல்-17, வரலாறு-51, கணக்குப்பதிவியல்-54.

மகள் சுபஸ்ரீதேவி மதிப்பெண் விவரம்,

தமிழ்-174, ஆங்கிலம்-163, இயற்பியல்-147, வேதியியல்-147, உயிரியல்-105, கணிதம்-133.

தனி தேர்வராக எழுதிய மாரிமுத்து கூறுகையில்,

நான் புதுவையில் 9ம் வகுப்பு படித்தேன். ஆனால் 9ம் வகுப்பில் தோல்வி அடைந்தேன். இதையடுத்து தான் சீர்காழிக்கு வந்து மண்பாண்டம் செய்யும் தொழில் செய்தேன். அதன் பிறகு சாலை பணியாளர் வேலை கிடைத்தது.

நான் கஷ்டப்பட்டு படித்து எனது மகளுடன் சேர்ந்து 10ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சியும் பெற்றேன். எனது மகளுடன் சேர்ந்து படிப்பது உற்சாகத்தை தந்தததால் பிளஸ் டூ தேர்வும் எழுதினேன்.

பிளஸ் டூ தேர்வுக்காக வேலை நேரம் போக மீதி நேரத்தில் முழு கவனத்துடன் படித்தேன். ஆனால் என்னால் ஒரு பாடத்தில் மட்டுமே தேர்ச்சி பெற முடிந்தது. என்னைப் போன்று ஏதோ சந்தர்ப்பத்தில் படிக்கும் வாய்ப்பை இழந்தவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டும். இதை வலியுறித்தவே பிளஸ் டூ தேர்வு எழுதினேன்.

அடுத்த முறை முயற்சி செய்து தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நான் ஒரு பட்டதாரியாக வேண்டும் என்பதே எனது லட்சியம் என்றார்.



பெட்ரோல் விலை ரூ. 7.50 உயர்வு: மக்கள் ஏமாந்தவர்களா?- வாகன ஓட்டிகள் குமுறல்

Posted: 24 May 2012 04:16 AM PDT

பெட்ரோல் விலை நேற்று இரவு அதிரடியாக லிட்டருக்கு ரூ. 7.50 உயர்த்தப்பட்டது மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லிட்டருக்கு ரூ.1, ரூ. 2 என்று உயர்த்தப்பட்ட நிலை மாறி தற்போது வரலாறு காணாத வகையில் ரூ. 7.50 உயர்த்தப்பட்டு உள்ளது.

சாதாரண நடுத்தர மக்கள் தலையில் விழுந்த இடியாக உள்ளது. பெட்ரோல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் என்று மக்கள் கவலைப்படுகிறார்கள். இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கிய நிலையில் நடுத்தர வர்த்தகத்தினர் உள்ளனர். 

மத்திய அரசு மக்களை ஏமாந்தவர்களாக நினைக்கிறது என்று பொதுமக்கள் ஆதங்கப்பட்டனர். அவர்களின் சிலரது குமுறல்கள் இதோ..... 

ஆட்டோ டிரைவர் நந்தகுமார் (அயனாவரம்):- இப்படி பெட்ரோல் விலை உயர்த்தியது கடும் கஷ்டத்தை தருகிறது. இந்த உயர்வால் ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். இப்போது வாங்கும் கட்டணத்தை விட கூடுதலாக 10 ரூபாய் கேட்பேன். 

சீனிவாசன் (தனியார் நிறுவன ஊழியர், புரசைவாக்கம்):- மக்களால் இந்தவிலை உயர்வை தாங்கி கொள்ள முடியாது. வாங்கும் சக்தி அதிகரித்தால் விலை உயர்வு பெரிதாக தெரியாது. இதனால் மிகவும் பாதிக்கப்படுவது மாத சம்பளக் காரர்கள்தான். 

ஆட்டோ டிரைவர் கதிரவன் (புரசைவாக்கம்):- மக்கள் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை. ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி கேட்டால் பயணிகளுக்கும், எங்களுக்கும் தகராறு ஏற்படுகிறது. இதனால் சவாரிகள் கைவிட்டு போகிறது. இப்படியே விலையை உயர்த்தி கொண்டே போனால் என்ன செய்வது என்றே தெரியவில்லை. 

ஷபி (தோல் கம்பெனி ஊழியர்):- பெட்ரோல் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும். மாத பட்ஜெட்டில் பெட்ரோலுக்கு கணிசமான அளவு ஒரு தொகை செலவாகிறது. இதனால் மாத பட்ஜெட்டில் துண்டு விழும். 

கந்தன் (நுங்கம்பாக்கம்):- பொதுமக்களை ஏமாந்தவர்கள் என்று நினைக்கிறார்கள். சிலநாள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து விட்டு அமைதியாகி விடுவார்கள் என்று கருதுகிறார்கள். அதனால்தான் இப்படி ஒரேடியாக ரூ. 7.50 உயர்த்தி உள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். இப்படி எல்லா சுமையையும் மக்கள் தலையிலேயே சுமத்துவது என்ன நியாயம். 

மோட்டார் சைக்கிளை எடுக்கவே பயமாக இருக்கிறது. வண்டியை வீட்டில் விட்டு விட்டு பஸ்சிலோ அல்லது நடந்தோ தான் செல்ல வேண்டும். உடனே பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும்.






புதுக்கோட்டை தேர்தலில் போட்டியிடக் கூடாது...ரஜினி உத்தரவு?

Posted: 24 May 2012 04:01 AM PDT


புதுக்கோட்டை இடைத் தேர்தலில் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் போட்டியிடும் புதுக்கோட்டை மாவட்ட ரசிகர் மன்றச் செயலாளர் ஸ்ரீதர் மீது நடிகர் ரஜினிகாந்த் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் மன்றம் சார்பில் போட்டியிடக் கூடாது, தேர்தலிலிருந்து வாபஸ் பெற வேண்டும் என்று ரஜினி சார்பில் உத்தரவு போயுள்ளதாக கூறப்படுகிறது.

புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடுகிறது, தேமுதிக போட்டியிடுகிறது, இந்திய ஜனநாயகக் கட்சியும் போட்டியிடுகிறது. இதேபோல புதுக்கோட்டை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றச் செயலாளர் ஸ்ரீதர் என்பவரும் போட்டியிட மனு செய்துள்ளார்.

இவர் ரஜினி மன்றம் சார்பில் போட்டியிடுகிறார். மேலும் மன்றக் கொடியையும் பயன்படுத்தி வாக்கு சேகரித்து வருகிறார். வேட்பு மனு தாக்கலின்போது ரஜினி ரசிகர்கள் புடை சூழ, மன்றக் கொடி, பேனருடன் ஊர்வலமாக சென்று பரபரப்பையும் ஏற்படுத்தினார்.

இது ரஜினிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மன்றத்தின் பெயரில் ஸ்ரீதர் போட்டியிடுவதை அவர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே போட்டியிலிருந்து வாபஸ் பெறுமாறு ஸ்ரீதருக்கு அறிவுரை போயிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் ரஜினி அப்படி உத்தரவிட்டுள்ளாரா என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.

இந்த விவகாரம் குறித்து ரஜினி ரசிகர் மன்றப் பொறுப்பாளரான சுதாகர் என்பவர் கூறுகையில், ரசிகர்கள் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம், எந்தக் கட்சிக்காகவும் தேர்தல் வேலை செய்யலாம். அதை ஒருபோதும் ரஜினிகாந்த் தடுத்ததில்லை.

ஆனால் தேர்தல் பணியில் ஈடுபடும் யாரும் ரஜினியின் பெயரையோ, மன்றக் கொடியையோ பயன்படுத்தக் கூடாது. முதலில் ரசிகர்கள் தங்களது குடும்பங்களைத்தான் கவனிக்க வேண்டும். இதைத்தான் எப்போதும் ரஜினி சொல்லி வருகிறார், ஆசைப்படுகிறார்.

ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ஸ்ரீதர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள தகவலை பத்திரிகை மூலம் அறிந்தோம். நான் அவரிடம் ரஜினி பெயரையோ ரசிகர் மன்றத்தின் பெயரையோ மன்ற கொடியையோ பயன்படுத்தி தேர்தலில் நிற்கக் கூடாது என்று கூறி இருக்கிறேன் என்றார்.

ஆனால் தான் ரஜினி மன்றம் சார்பில் போட்டியிடுவது என்று அனைத்து ரசிகர்களும் கூடி எடுத்த முடிவு என்று ஸ்ரீதர் கூறுகிறார். இதனால் இவர் வாபஸ் பெறுவாரா, மாட்டாரா என்பது குழப்பமாகியுள்ளது.





Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™