விழியே பேசு... |
- பெட்ரோலைத் தொடர்ந்து டீசல்- சமையல் கேஸ் விலையும் உயர்கிறது!
- மும்பையில் நடைபெற்ற ஜனாதிபதியின் கப்பல்படை ஆய்வுக்கு ரூ.23 கோடி செலவு
- பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
- என்னைக் கொல்ல மாவோயிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள், 6 நாடுகள் கூட்டு சதி: மமதா பானர்ஜி
- என் தந்தையால் என் உயிருக்கு ஆபத்து: பிசிசிஐ தலைவர் மகன் பரபரப்பு புகார்!
- ராமஜெயம் ஸ்டைலில் இன்னொரு கொலை
- புதுமணத்தம்பதியர் தூக்குப்போட்டு தற்கொலை: திருமணமான மூன்றே மாதத்தில் பரிதாபம்
- வெளிநாட்டுப் பெண் என்று கூறியதற்காக சோனியா என்னை மன்னிக்க வேண்டும்-சங்மா
- பீகாரில் முதல்-மந்திரி யாத்திரையில் சென்ற வாகனங்கள் மீது கல்வீச்சு
- ஏழைகள் விடும் கண்ணீர் மத்திய அரசை அழித்து விடும்-ஜெ. ஆவேசம்
- ஐ.பி.எல். பிளே ஆப் சுற்று போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
- பின்லேடனை காட்டிக் கொடுத்த பாக். டாக்டருக்கு 33 ஆண்டு சிறை
- இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
- மத்தியில் அரசு செயல்படுதா? என்று மக்கள் கேட்கின்றனர் : ஜெ. பொளேர்!
- ஜனாதிபதி தேர்தல்: காங்கிரசுக்கு முலாயம்சிங் ஆதரவு
- இறுதிப் போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறுவது முட்டாள்தனமாது: பொன்சேகா
- ஐ.பி.எல்.போட்டிகளில் சூதாட்டம்: புனே அணியின் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை
- ஐ.பிஎல்.5: பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் : ஐ.பி.எல். வெப்சைட்டில் அறிவிச்சுட்டாங்க
- முன்னாள் வீரர்களுக்கு ஊக்கத்தொகை: கபில்தேவ், அசாருதீனுக்கு ஊக்கத்தொகை மறுப்பு
| பெட்ரோலைத் தொடர்ந்து டீசல்- சமையல் கேஸ் விலையும் உயர்கிறது! Posted: 23 May 2012 10:46 PM PDT வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 7.50 உயர்த்திவிட்ட மத்திய அரசு அடுத்தபடியாக டீசல் விலையிலும் சமையல் கேஸ் விலையும் விரைவிலேயே 'கை' வைக்கவுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தான் டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணெயின் விலைகள் உயர்த்தப்பட்டன. இதையடுத்து ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் வந்ததால் இவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை. ஆனால் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துவிட்டதால், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மத்திய எண்ணெய் நிறுவனங்கள் செலவிடும் டாலரின் அளவு அதிகரித்துவிட்டது. எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது விலையை உயர்த்தக் கோரி மத்திய அரசிடம் அழுதபோதும், அரசியல் காரணங்களுக்காக விலையை அரசு உயர்த்த விடவில்லை. இப்போது, எண்ணெய் வாங்க காசு இல்லை என்ற நிலை உருவாகி வருவதால், கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றியிருக்க வேண்டிய விலையை ஒரேயடியாக உயர்த்த வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது. இதில் பெட்ரோலின் விலையை உயர்த்தியாகிவிட்டது. ஆனால், மத்திய அரசுக்கு பெரும் நஷ்டத்தைக் கொடுத்து வருவது டீசல், சமையல் எண்ணெய், மண்ணெண்ணெய் ஆகியவை தான். ஒரு லிட்டரை டீசலை விற்றால் மத்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 5 முதல் ரூ. 7 வரை நஷ்டம் ஏற்பட்டு வருவதாகத் தெரிகிறது. அதே போல ஒரு சமையல் சிலிண்டரை விற்றால் ஏற்படும் நஷ்டம் கிட்டத்தட்ட ரூ. 200 ஆகும். இந்த நஷ்டத்தில் முக்கால்வாசியை மத்திய அரசு மானியமாகத் தந்துவிடுகிறது. ஆனாலும், எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டமே. பெரும் நஷ்டம் தருவது மண்ணெண்ணெய் தான். இதையடுத்து இவற்றின் விலைகளையும் மத்திய அரசு விரைவிலேயே உயர்த்தவுள்ளதாகத் தெரிகிறது. இந்த விலைகளை நிர்ணயிக்கும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான எரிபொருள் விவகாரத்துக்கான அமைச்சர்கள் குழுவில் திமுகவும், மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரசும் இடம் பெற்றுள்ளன. இவர்களின் எதிர்ப்பால் டீசல், மண்ணெண்ணெய், கேஸ் விலையை உயர்த்த முடியாத நிலை உள்ளது. இதனால் இந்தக் கமிட்டியின் கூட்டம் நடந்தே கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. இந் நிலையில், வரும் வெள்ளிக்கிழமை இந்தக் கமிட்டியின் கூட்டத்தைக் கூட்டி விலை உயர்வு குறித்து ஆலோசிக்க பிரணாப் முகர்ஜி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 5 வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசை நெருக்கி வருகின்றன. திமுக, திரிணமூல் ஏற்றால் இந்த விலை உயர்வு அமலுக்கு வரலாம். அதே சமயம் சமையல் கேஸ், மண்ணெண்ணெய் விலையில் கை வைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகத் தெரிகிறது. அவரை சமாதானப்படுத்தி விலையை உயர்த்த பிரதமர் மன்மோகன் சிங் முயற்சித்து வருகிறார். இதனால் மண்ணெண்ணெய்யை மட்டும் விட்டுவிட்டு டீசல், கேஸ் விலைகளும் விரைவில் உயரலாம் என்கிறார்கள். |
| மும்பையில் நடைபெற்ற ஜனாதிபதியின் கப்பல்படை ஆய்வுக்கு ரூ.23 கோடி செலவு Posted: 23 May 2012 10:37 PM PDT மும்பையில் கடந்த ஆண்டு ஜனாதிபதி கலந்து கொண்ட கப்பல்படை ஆய்வு நிகழ்ச்சிக்காக மட்டும் ரூ.23 கோடி செலவிடப்பட்டுள்ளது. முப்படைகளின் தளபதி என்ற முறையில், ஜனாதிபதி ஆண்டுதோறும் முப்படைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்வது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பரில், மும்பையில் கப்பல் படையின் ஆய்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் கப்பல்படை கப்பல்கள், விமானங்கள் அணிவகுத்தன. ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் அலங்கரிக்கப்பட்ட கப்பலில் சென்று பிற கப்பல்களை ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சி மிகவும் ஆடம்பரமாக நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான செலவு விவரங்களை கேட்டு, தகவல் உரிமை ஆர்வலர் சுபாஷ் அகர்வால் மனு தாக்கல் செய்தார். அதற்கு கப்பல் படையின் தலைமையகம் பதில் அளித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:- ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கலந்து கொண்ட கப்பல் படை ஆய்வு நிகழ்ச்சிக்கான மொத்த செலவு ரூ.23.24 கோடியாகும். கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பராமரிப்பு, கட்டிடங்களின் வெளிப்புறம் மற்றும் கூரை ஆகியவற்றில் பெயிண்ட் அடித்தது - இந்த வகையில் மட்டும் ரூ.11.67 கோடி செலவிடப்பட்டது. மறு சாலை அமைத்தல் மற்றும் ஆப்கான் சர்ச் முதல் ஆர்.சி. சர்ச் வரையிலான ரோட்டை சீரமைத்தல் இவற்றுக்காக ரூ.1.43 கோடி செலவு செய்யப்பட்டது. வி.ஐ.பி.களுக்காக 30 சாப்பாட்டு மேஜைகள், 60 இருக்கைகள், புதிய மரச்சாமான்கள் ரூ.26.96 லட்சத்துக்கு வாங்கப்பட்டன. சாப்பாட்டுக்காக மட்டும் ரூ.17.57 லட்சம் செலவிடப்பட்டது. ஜனாதிபதியின் கப்பல் படை ஆய்வில் 4 நீர்மூழ்கி கப்பல்கள் உள்பட 81 கப்பல்கள், கப்பல் படை மற்றும் இந்திய கடலோர காவல் படையை சேர்ந்த விமானங்கள் பங்கேற்று அணிவகுத்தன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. |
| பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி Posted: 23 May 2012 10:17 PM PDT மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்து வந்த டாக்டர் தம்பதி அந்த பெண் சிசுக்களை நாயக்கு உணவாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் மருத்துவமனை வைத்துள்ளவர்கள் டாக்டர் தம்பதியான சுந்தம் முண்டே, சரஸ்வதி முண்டே. சுந்தம் முண்டே அறுவை சிகி்ச்சை நிபுணர். அவரது மனைவி சரஸ்வதி மகப்பேறு மருத்துவர். அவர்கள் தங்கள் மருத்துவமனையில் சட்டவிரோதமாக வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து தெரிவித்து வந்துள்ளனர். அது மட்டுமின்றி அவ்வாறு பரிசோதனை செய்யும்போது அது பெண்ணாக இருந்தால் அந்த கருவைக் கலைத்தும் வந்தனர். ஆதாரங்கள் எதுவும் இருக்கக் கூடாது என்பதற்காக கலைக்கப்பட்ட கருக்களை தாங்கள் வைத்திருக்கும் நாய்களுக்கு கொடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 18ம் சந்தம் முண்டே விஜய்மாலா (28) என்ற பெண்ணின் கர்ப்பத்தில் இருந்த 6 மாத பெண் சிசுவை கலைக்க முயன்றபோது அந்த பெண் இறந்தார். விஜயமாலாவுக்கு ஏற்கனவே 4 பெண் குழந்தைகள் இருப்பதால் அவர் 5வதும் பெண் வேண்டாம் என்று கருவைக் கலைக்க வந்துள்ளார். விஜயமாலா இறந்ததையடுத்து டாக்டர் தம்பதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் வழக்கறிஞர் ஷீலா யாதவ் என்பவர் அளித்த வாக்குமூலத்தில், கடந்த 2010ம் ஆண்டு டாக்டர் முண்டே ஆதாரங்களை அழி்க்க கலைக்கும் பெண் சிசுக்களை தாங்கள் வளர்க்கும் நாய்களுக்கு கொடுப்பதை என்னிடம் காட்டினார் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த 2010ம் ஆண்டு கருவி்ல் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் சோனோகிராபி பரிசோதனை செய்யும் உரிமம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் கடந்த 2011ம் ஆண்டு அவர்கள் மருத்துவமனைக்கு வெளியே உள்ள குப்பைத் தொட்டியில் 12 பெண் சிசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த 2 வழக்குகளிலுமே அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். உரிமம் ரத்தான பிறகும் அவர்கள் தொடர்ந்து கருகலைப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு கிரைம் பிரிவு போலீசாருக்கு மாநில சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. |
| என்னைக் கொல்ல மாவோயிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள், 6 நாடுகள் கூட்டு சதி: மமதா பானர்ஜி Posted: 23 May 2012 10:05 PM PDT மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி தம்மை கொல்ல வெளிநாட்டு சக்திகளுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் மாவோயிஸ்டுகளும் கை கோர்த்து இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேற்குவங்கத்தில் 34 ஆண்டுகால இடதுசாரி சாம்ராஜ்யத்தை சாய்த்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அரியணையில் ஏற்றியிருக்கிறார் மமதா பானர்ஜி. ஆட்சிக்கு முன்பு மாவோயிஸ்டுகளுடன் கை கோர்த்த மமதா பானர்ஜி இப்போது மார்க்சிஸ்டுகளுடன் மாவோயிஸ்டுகளை இணைத்துப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். இடதுசாரி தத்துவவாதி இல்லை என்றாலும் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, மாநில உரிமைகள் போன்ற விவகாரங்களில் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில்தான் மமதா பானர்ஜியை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அண்மையில் சந்தித்துப் பேசியிருந்தார். அமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கும் சில்லறை வர்த்தகத்தை இந்தியாவுக்குள் குறிப்பாக கொல்கத்தாவில் நிலை நிறுத்த அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. ஹிலாரியின் பயணத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் கடந்த சில நாட்களுக்கு மமதா பானர்ஜியைப் பற்றிய சிறப்பு கட்டுரை ஒன்றை வெளியிட்டு அவரது நேர்காணலையும் பதிவு செய்திருந்தது. அந்தக் கட்டுரையின் தொடக்கத்திலேயே வாழ்நாளெல்லாம் இடதுசாரிகளுக்கு எதிராகவே போராடி வரும் மமதாதான் இந்தியாவின் பொருளாதார தாரளமயமாக்கலுக்கும் முட்டுக்கட்டையாகவும் இருப்பவர் என்றும் ஒரு சிறிய மாநிலக் கட்சியின் தலைவர் என்றாலும் இந்தியப் பிரதமரை விட அதிக அதிகாரம் படைத்தவர் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்த கட்டுரையில் மமதா அளித்த நேர்காணலில் இடம்பெற்றிருப்பதாவது: நாங்கள் மார்க்சிஸ்ட்டும் அல்ல முதலாளித்துவவாதியும் அல்ல. நாங்கள் ஏழை எளிய மக்களுக்கானவர்கள். மக்களின் வாழ்கை மேம்பாட்டுக்கு எந்த கொள்கை உகந்ததோ அதுதான் எங்கள் கொள்கை என்பதில் தெளிவாக இருக்கிறோம். மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி என்னைக்கொல்ல சதி செய்துள்ளது. இந்த திட்டத்துக்கு வடகொரியா, வெனிசுலா, ஹங்கேரி போன்ற வெளிநாட்டு சக்திகள் நிதியுதவி அளித்துள்ளன. இந்த சதி திட்டத்தை நிறைவேற்ற உதவுமாறு, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் பேரம் நடந்துள்ளது. இந்த சக்திகள் அனைத்தும் சேர்ந்து எனக்கு மரண தண்டனை விதித்துள்ளன. பேஸ் புக், இணைய தளம், இ-மெயில் வாயிலாக தினமும் என்னைப்பற்றி அவதூறு செய்திகளையும், போட்டோக்களையும், பொய்யான பெயர்களில் வெளியிட்டு வருகின்றனர் என்று அதில் மமதா கூறியுள்ளார். அண்மைக்காலமாக மமதா பானர்ஜி தமக்கு எதிராக கருத்து சொல்பவர்கள் அனைவரையுமே மாவோயிஸ்டுகள் மார்க்சிஸ்டுகள் என்று கூறிவரும் நிலையில் ஒருசர்வதேச சதி தமக்கு எதிராக தீட்டப்பட்டிருக்கிறது என்று பெரிய குண்டையே போட்டுள்ளார். |
| என் தந்தையால் என் உயிருக்கு ஆபத்து: பிசிசிஐ தலைவர் மகன் பரபரப்பு புகார்! Posted: 23 May 2012 09:44 PM PDT இந்தியா சிமெண்ட்ஸ் அதிபரும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சீனிவாசன் மீது அவரது மகன் அஸ்வின் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இந்தியா சிமெண்ட்ஸ் அதிபராகவும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராகவும் இருப்பவர் என். சீனிவாசன். அவரது மகன் அஸ்வின் (48). அவர் ஓரின சேர்க்கை பழக்கம் உடையவர் என்று கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவி முகர்ஜி என்பவருடன் அஸ்வின் மும்பையில் குடித்தனம் நடத்தி வருகிறார். அவர்கள் இருவரும் கடந்த 1998 ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டதாகவும் அறிவித்தனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி மும்பையில் பார் ஒன்றில் தகராறு செய்ததாக அஸ்வினும், அவியும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், ஜாமீனில் வெளியே வந்துள்ள அஸ்வின் தனது தந்தை மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார். இது குறித்து அவர் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, அவி முகர்ஜி பைலட்டாக இருந்தார். நான் ஒரு முறை விமானத்தில் பயணம் செய்த போது எனக்கும் அவி முகர்ஜிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களானோம். நாங்கள் இருவரும் 1998ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். இந்த திருமணம் எனது தந்தை சீனிவாசனுக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக அவி முகர்ஜி மீதான என் காதலுக்கு பிறகு அவரது கொடுமைகள் அதிகமாகியுள்ளது. நாங்கள் உடலாலும் மனதாலும் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளோம். 2002ம் ஆண்டு நாங்கள் சென்னைக்கு வந்த போது, எங்களை என் தந்தையின் ஆட்கள் கடத்திக் கொண்டு சென்று ஓரிடத்தில் அடைத்து வைத்து கடுமையாக தாக்கினார்கள். சமீபத்தில் மும்பை பாரில் நாங்கள் எந்த தகராறிலும் ஈடுபடவில்லை. நானும் அவியும் பாரில் இருந்தபோது 12 போலீசார் திடிரென உள்ளே நுழைந்தனர். அவர்கள் அவியை கடுமையாகத் தாக்கினர். நான் சத்தம் போட்ட பின்பு எங்களை அவர்கள் கைது செய்து பந்த்ரா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் எங்ளை தாக்கினார்கள். எனது தந்தையால் எனக்கு எந்த நேரமும் ஆபத்து நேரலாம். அவர் தனது என்.ஆர்.ஐ. அந்தஸ்தை முறைகேடாக பயன்படுத்தி நிதி முறைகேடுகளை செய்து வருகிறார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதை தேவைப்படும் போது வெளியிடுவேன் என்று கூறியுள்ளார். அஸ்வின் புகார் குறித்து அவரது தந்தை சீனிவாசன் இதுவரை விளக்கம் ஏதும் கொடுக்கவில்லை. அஸ்வினின் இந்தப் புகாரால் பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது. |
| ராமஜெயம் ஸ்டைலில் இன்னொரு கொலை Posted: 23 May 2012 09:29 PM PDT பெங்களூரில் எச்.பி. நிறுவனத்தில் பணியாற்றிய சாப்ட்வேர் என்ஜினியர் காரில் கை, கால்கள் டேப்பால் கட்டப்பட்ட நிலையில், வாயில் துணி நுழைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். கிட்டத்தட்ட ராமஜெயம் உடல் கிடந்ததைப் போலவே இவரது உடலும் டேப்பால் கட்டப்பட்டுக் கிடந்தது. கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஸ்ரீராஜ் (24), பெங்களூரில் ஐடிபிஎல் அருகே உள்ள எச்.பி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஒயிட்பீல்ட் அருகே உள்ள புரூக்பீல்ட் பகுதியில் எஇசிஎஸ் லே அவுட்டில் 6வது கிராசில் வசித்து வந்தார். இந் நிலையில் நேற்று காலை இவர் தனது வோல்க்ஸ்வேகன் போலோ காரின் பின் பகுதியில் பிணமாகக் கிடந்தார். முகம் 4 பிளாஸ்டிக் கவர்களால் மூடப்பட்டு, கழுத்தில் கவரோடு சேர்த்து பிளாஸ்டிக் டேப் சுற்றப்பட்டிருந்தது (பேக்கேஜிங் செய்ய பயன்படுத்தப்படும் டக்ட் டேப்). கிட்டத்தட்ட 20 முறை இந்த டேப் கழுத்தில் சுற்றப்பட்டுள்ளது. உயிரோடு இருக்கும்போதே முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி டேப்பை போட்டு சுற்றியுள்ளதாகத் தெரிகிறது. இதனால், அவர் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. காரில் இருந்து தப்பிவிடாமல் இருக்க, அவரது கையையும் காலையும் சுமார் 50 மீட்டர் டேப்பால் சுற்றிக் கட்டியுள்ளனர். பின்னர் அவரது உடலை காரின் சீட் மற்றும் பிற பகுதிகளோடு சேர்த்து தப்பவே முடியாத அளவுக்கு டேப்பால் கட்டிப் போட்டுள்ளனர். அவர் சத்தம் போடாமல் இருக்க அவரது வாய்க்குள் துணி நுழைக்கப்பட்டிருந்தது. இந்தக் கார் எஇசிஎஸ் லே-அவுட் அருகே உள்ள மாருதி லே-அவுட் பகுதியின் டி பிளாக் அருகே உள்ள ஏரியை ஒட்டிய பார்க் அருகே நின்றிருந்தது. அதாவது இவரது வீட்டிலிருந்து 1 கி.மீ. தூரத்தில் கார் நின்றிருந்தது. காரின் டிக்கியில் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் இருந்தது. அந்த நீரில் தூக்க மாத்திரைகள் கலக்கப்பட்டிருந்தது. காலையில் அந்தப் பகுதியில் குப்பை பொறுக்கச் சென்றவர்கள் இதைப் பார்த்துவிட்டு பொது மக்களுக்குத் தெரிவிக்கவே, போலீசாருக்குக் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடலில் இருந்த டேப்பை அகற்றவே போலீசாருக்கு 15 நிமிடம் பிடித்தது. அவ்வளவு சுற்று சுற்றப்பட்டிருந்தது. ஸ்ரீராஜ் பணத்துக்காக கொலை செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. அவரது பர்ஸ் மற்றும் விலை உயர்ந்த செல்போன் காருக்குள்ளேயே கிடந்தன. அவர் காருக்குள்ளேயோ அல்லது வீட்டிலேயோ கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து தான் இந்தக் கொலையை செய்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர். காரில் இருந்த விரல் ரேகைகளையும் டேப்பில் இருந்த ரேகைகளையும் போலீசார் பதிவு செய்துள்ளனர். தூக்க மாத்திரை கலந்த நீரை குடிக்க வைத்து, மயங்கிய பின், அவரது தலையை 4 பிளாஸ்டிக் கவர்களுக்குள் நுழைத்து டேப்பைப் போட்டு கட்டி, மூச்சுத் திணற வைத்து இந்தக் கொலை செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீராஜின் செல்போனை போலீசார் கைப்பற்றி, அதிலுள்ள எண்களை வைத்து விசாரணையைத் துவக்கியுள்ளனர். சிவாஜிநகர் பெளரிங் மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடந்தது. 4 ஆண்டுகளுக்கு முன் பெங்களூர் வந்த ஸ்ரீராஜ் முதலில் ஐபிஎம் நிறுவனத்திலும் பின்னர் எச்.பி நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார். ஓராண்டாக தனது நண்பர் விவேக் என்பவருடன் எஇசிஎஸ் லே-அவுட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று முன் தினம் இரவு பன்னரகட்டா சாலையில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிய ஸ்ரீராஜ் பின்னர் மீண்டும் வெளியே சென்றார் என்று, அவரது ரூம் மேட்டான விவேக் கூறியுள்ளார். இந் நிலையில் தான் நேற்று காலை அவர் பிணமாகக் கிடந்தார். இதனால் நள்ளிரவிலோ அல்லது அதிகாலையிலோ அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக ஒரு பெண்ணை ஸ்ரீராஜ் காதலித்து வந்துள்ளார். ஆனால், அவருக்கு லண்டனில் ஒரு மாப்பிள்ளையைப் பார்த்துவிட்டதோடு திருமண ஏற்பாடுகளும் நடந்து வந்துள்ளன. இதனால் ஸ்ரீராஜ் மனமுடைந்த நிலையில் இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந் நிலையில் இவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். ராமஜெயமும் இதே போலத்தான் வாயில் துணி நுழைக்கப்பட்டு உடல் முழுக்க டேப்பால் சுற்றப்பட்டு கொலையாகிக் கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. |
| புதுமணத்தம்பதியர் தூக்குப்போட்டு தற்கொலை: திருமணமான மூன்றே மாதத்தில் பரிதாபம் Posted: 23 May 2012 09:17 PM PDT மதுரை பெத்தானியாபுரம், மேட்டுத்தெரு, அன்புவீதி பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ்(வயது 23). இவர் மதுரை ரெயில்வே பார்சல் நிலையத்தில் லோடுமேனாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், ஈரோட்டை சேர்ந்த சந்திரா(வயது 18) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களது இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. மதுரை செல்லூர் கீழத்தோப்பை சேர்ந்த காசிப்பாண்டியின் மனைவி வசந்தி (22). வசந்தியின் சித்தப்பா மகள் தான் சந்திரா. நேற்று காலை சந்திராவின் அப்பா, வசந்திக்கு போன் செய்து, தன் மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவரை பார்த்து விட்டு வந்து தகவல் தெரிவிக்குமாறும் கூறினார். அதைத்தொடர்ந்து வசந்தி, அவருடைய கணவருடன் சந்திரா வீட்டிற்கு சென்றார். வீட்டின் கதவு உள்புறம் பூட்டியிருந்தது. வெகு நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்ற போது சத்தியராஜும், சந்திராவும் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தனர். இதனை கண்ட வசந்தி அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து அவர் கரிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தூக்கில் தொங்கிய கணவன், மனைவி இருவரின் உடலையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அக்கம்பக்கத்தினரை போலீசார் விசாரித்த போது இரண்டு பேரும் மகிழ்ச்சியாக தான் வாழ்க்கை நடத்தி கொண்டிருந்ததாக தெரிவித்தனர். திருமணமாகி 3 மாதத்தில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்னவென்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். |
| வெளிநாட்டுப் பெண் என்று கூறியதற்காக சோனியா என்னை மன்னிக்க வேண்டும்-சங்மா Posted: 23 May 2012 09:13 PM PDT வெளிநாட்டுப் பெண் என்று தான் கூறியதற்காக தன்னை சோனியா காந்தி மன்னிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டு களத்தில் குதித்துள்ள முன்னாள் லோக்சபா சபாநாயகர் பி.ஏ.சங்மா கோரிக்கை விடுத்துள்ளார். தன்னை சந்திக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மறுத்து விட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ள சங்மா இப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஆனால் சங்மாவுக்கு இப்போதைக்கு சோனியா காந்தியின் கதவு திறக்காது என்றே கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதில் காங்கிரஸும், பாஜகவும் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகின்றன. ஆனால் அவசரம் அவசரமாக தான் போட்டியிடப் போவதாக சங்மா அறிவித்தார். அதை விட படு வேகமாக முதல்வர் ஜெயலலிதாவும், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கும் சங்மாவை ஆதரித்துக் குரல் கொடுத்தனர். மேலும் தொலைபேசி மூலமாக சங்மாவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார் ஜெயலலிதா. டெல்லிக்கும் போகப் போகிறார். இந்த நிலையில், சங்மா ஒரு பெரிய பல்டி அடித்துள்ளார். அதாவது சோனியா காந்தி தன்னை மன்னிக்க வேண்டும் என்று பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு ஒரு காரணம் உண்டு. 1999ம் ஆண்டு சோனியா காந்தி ஒரு வெளிநாட்டுப் பெண், அவர் இந்தியப் பிரதமர் பதவியில் அமர ஆசைப்படக் கூடாது என்று முதல் முறையாக கூறி பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியவர். அப்போது அவர் காங்கிரஸில் இருந்தார். இதை சரத் பவாரும், தாரிக் அன்வரும் ஆமோதித்தனர். பின்னர் இந்த மூவரும் காங்கிரஸிலிருந்து வெளியேறி தேசியவாத காங்கிரஸை நிர்மானித்தனர். சங்மா அப்போது எழுப்பிய இந்த வெளிநாட்டுப் பெண் என்ற எதிர்ப்புக் குரல்தான் சோனியா காந்தி, பிரதமர் பதவியில் அமர முடியாமல் போனதற்கு ஒரு முக்கியக் காரணம் என்று கூட கூறலாம். இதை சோனியா காந்தி இந்த விநாடி வரை மறக்கவில்ல. இந்த நிலையில், இதுகுறித்து சற்றும் கவலைப்படாமல், வெட்கப்படாமல், சோனியா காந்தியை சந்தித்து தான் போட்டியிடுவதற்கு ஆதரவு தருமாறுகோர விரும்பினார் சங்மா. சோனியாவை சந்திக்கவும் நேரம் கேட்டிருந்தார். ஆனால் சந்திக்க மறுத்து விட்டார் சோனியா. மேலும் சரத் பவாரும், தாரிக் அன்வரும் கூட சங்மாவின் ஆசையை குழி தோண்டிப் புதைத்து விட்டனர். இதனால் சங்மா சற்றே ஆடிப் போயுள்ளார். இருப்பினும் காங்கிரஸின் ஆதரவைப் பெற பழங்குடியினர் என்ற கார்டை களம் இறக்கியுள்ள அவர், சோனியா தன்னை மன்னிக்க வேண்டும் என்று பகிரங்கமாகவே கோரிக்கை விடுத்து தடாலடியாக பேசியுள்ளார். இவரது இந்த பகிரங்க மன்னிப்பு கோரிக்கைக்கு முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவு கிடைக்குமா என்பது கேள்விக்குரியது. |
| பீகாரில் முதல்-மந்திரி யாத்திரையில் சென்ற வாகனங்கள் மீது கல்வீச்சு Posted: 23 May 2012 09:08 PM PDT பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் 'சேவா யாத்திரை' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார். நேற்று, பக்சார் மாவட்டத்தில் யாத்திரை சென்றார். சவ்சா என்ற கிராமத்தின் வழியாக அவர் செல்ல இருக்கிறார் என்பதை அறிந்த அந்த கிராம மக்கள், அவரை சந்திக்க சாலையில் திரண்டு நின்றனர். தங்களது ஊரில் நிலவும் குடி தண்ணீர் பற்றாக்குறை, மின்சார பற்றாக்குறை ஆகியவை பற்றி அவரிடம் முறையிட அவர்கள் காத்து இருந்தனர். நிதிஷ்குமார் வந்ததும், அவரது காரை நிறுத்தும்படி பொதுமக்கள் மறித்தனர். ஆனால் அவரது காரும், அவருடன் வந்த அதிகாரிகளின் கார்களும் நிற்காமல் சென்றன. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அந்த கார்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் சில கார்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. ஆனால், முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் கார் எந்த சேதமும் இல்லாமல் பத்திரமாக சென்றது. ஆனாலும், கல்வீசி தாக்கியவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. ஆனால், இந்த கல்வீச்சு சம்பவத்தை டி.ஜி.பி. அபயானந்த் மறுத்தார். அவர் கூறியதாவது:- முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் கார் சம்பவம் நடந்த கிராமத்துக்கு வந்தபொழுது, பொது மக்கள் அந்த காரை மறித்து முற்றுகையிட்டனர். முதல்-மந்திரி நிதிஷ் குமாரும் காரை விட்டு இறங்கி பொது மக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டார். அவரிடம் கிராமவாசிகள் தங்களது குறைகளை தெரிவித்தனர். அவர்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக கூறி விட்டு நிதிஷ் குமார் புறப்பட்டுச் சென்றார். அவருடன் பாதுகாப்புக்கு வந்த வாகனங்களும், அதிகாரிகளின் கார்களும் வரிசையாக சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென ஒரு சிறுமி ஒரு போலீஸ் வாகனத்தின் மீது விளையாட்டாக ஒரு சிறிய கல்லை வீசினாள். அதில் அந்தக் காரின் கண்ணாடி உடைந்தது. மற்றபடி கல்வீச்சு தாக்குதலோ, வேறு எந்த அசம்பாவிதமோ நடக்க வில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். |
| ஏழைகள் விடும் கண்ணீர் மத்திய அரசை அழித்து விடும்-ஜெ. ஆவேசம் Posted: 23 May 2012 08:49 PM PDT ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பாதிக்கும் இந்த பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில், மக்கள் விடும் கண்ணீர் மத்தியில் ஆளும் மக்கள் விரோத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விரைவில் வீழ்ச்சி அடைய செய்யும் ஆயுதமாக மாறிவிடும் என்பதையும் இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். பெட்ரோல் விலை உயர்வுக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: விலைவாசி உயர்ந்து வருவதற்கும், இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதற்கும், நாட்டில் தற்போது நிலவும் மந்தமான பொருளாதார நிலைக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான பொருளாதார கொள்கைதான் காரணம் ஆகும். இந்த நிலையில் விலைவாசி ஏற்றத்திற்கு மேலும் வித்திடும் வகையில் பெட்ரோல் விலையை நேற்று (23-ந் தேதி) நள்ளிரவு முதல் லிட்டர் ஒன்றுக்கு 7 ரூபாய் 50 காசு என்று வரலாறு காணாத அளவில் விலையை உயர்த்தி மக்களை வஞ்சித்து இருக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் செயல் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் செயலாக அமைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதை காரணம் காட்டி, அடிக்கடி பெட்ரோல் விலையை உயர்த்தி வரும் திமுக அங்கம் வகிக்கும், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது ஆகும். பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.7.50 என்ற அளவுக்கு உயர்த்தியது ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது தாங்கொணா சுமையை சுமத்தி மக்களை வஞ்சிக்கும் செயலாகும். மூன்றாண்டுகள் நிறைவு செய்துள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மூன்றாண்டுகள் நிறைவு அடைந்ததற்கு மக்களுக்கு அளிக்கும் பரிசாக இத்தகைய ஒரு விலை உயர்வினை அறிவித்துள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது ஆகும். பெட்ரோலிய பொருள்களின் விலையை உயர்த்தும் போது எல்லாம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற எடுபடாத வாதங்களை மத்திய அரசு எடுத்து வைத்து விலை ஏற்றத்தை நியாயப்படுத்துவதை எவராலும் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதன் மூலம் பெறப்படுவதில்லை. உள்நாட்டிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த சூழ்நிலையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கும் சர்வதேச சந்தை விலையை அடிப்படையாக கொள்வது நியாயமற்ற செயல். இதே போன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், அதன் காரணமாக பெட்ரோல் விலையை ஏற்றுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. மத்திய அரசின் இந்த மக்கள் விரோத செயல் காரணமாக இரு சக்கர வாகனங்கள் மற்றும் சிற்றுந்துகளைப் பயன்படுத்தும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மாத வருமானத்தில் பெருமளவு பற்றாக்குறை ஏற்படும். ஏற்கனவே வங்கிக்கடன்கள் மூலம் வாகனங்களை வாங்கியோர் கூடுதல் சுமைக்கு ஆளாக்கப்படுவர். பெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டி தனியார் வாகன உரிமையாளர்கள் வாடகையை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் உருவாகும். இதன்மூலம் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாங்கும் சக்தியும், பொருளாதார நிலையும் மேலும் வீழ்ச்சி அடையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. மேலும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் அதிக அளவில் லாபம் ஈட்டி, மத்திய அரசு உள்பட அதன் பங்குதாரர்களுக்கு அதிக அளவு ஈவுத்தொகையினை அளித்து வருகின்றது. எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தை குறைப்பதன் மூலமும், பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரிகளை குறைப்பதன் மூலமும், இந்திய ரூபாயின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தும் வகையில் பொருளாதார நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும் பெட்ரோல் விலை உயர்வை நிச்சயம் தவிர்க்கலாம். பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்காமல் ஆண்டுக்கு பல முறை பெட்ரோலின் விலையினை உயர்த்துவது என்பது மக்களை அல்லல்படுத்தும் செயலாகும். எனவே ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பாதிக்கும் இந்த பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில், மக்கள் விடும் கண்ணீர் மத்தியில் ஆளும் மக்கள் விரோத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விரைவில் வீழ்ச்சி அடைய செய்யும் ஆயுதமாக மாறிவிடும் என்பதையும் இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். |
| ஐ.பி.எல். பிளே ஆப் சுற்று போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Posted: 23 May 2012 11:47 AM PDT ஐபிஎல் தொடரில் நேற்றைய 2வது பிளே ஆப் போட்டியில் 188 ரன்களை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து, முடிவில் 38 ரன்களில் தோல்வியை தழுவியது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் சுற்றின் அடுத்த போட்டிக்கு முன்னேறியது. ஐபிஎல் 5 தொடரின் பிளே ஆப் சுற்றின் 2வது போட்டி நேற்று பெங்களூரில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது. இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரராக களமிறங்கிய முரளி விஜய் வழக்கம் போல தடுமாற்றத்துடன் பேட்டிங் செய்தார். குல்கர்னி வீசிய 2வது ஓவரின் முதல் பந்தில் முரளி விஜய் 1 ரன் மட்டுமே எடுத்து கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த பந்தில் துணை கேப்டன் ரெய்னா டக் அவுட்டானார். அதன்பிறகு துவக்க வீரர் டேவிட் ஹஸ்ஸியுடன் ஜோடி சேர்ந்த பத்ரிநாத் பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தார். அதிரடியாக ஆடிய பத்ரிநாத் 39 பந்துகளில் 1 சிக்ஸ், 6 பவுண்டரிகள் அடித்து 47 ரன்களை எடுத்து ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். டேவிட் ஹஸ்ஸி 39 பந்துகளில் 1 சிக்ஸ், 6 பவுண்டரிகள் அடித்து 49 ரன்கள் எடுத்து சிக்ஸ் அடிக்க முயன்று பவுண்டரி லைனில் கேட்சாகி வெளியேறினார். அதன்பிறகு வந்த ஜடேஜா 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். அதன்பிறகு வந்த டோணி அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். அவருக்கு பிராவோ ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். கடைசி வரை அதிரடியாக ஆடிய இந்த ஜோடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோர் இமாலய உயர்வில் எட்ட உதவியது. கேப்டன் டோணி 20 பந்துகளில் 2 சிக்ஸ், 6 பவுண்டரிகள் அடித்து 51 ரன்களை குவித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய 14 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகள் 33 ரன்களை குவித்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்களை இழந்து 187 ரன்களை குவித்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் குல்கர்னி 3 விக்கெட்களை வீழ்த்தினார். 188 ரன்களை எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க வீரர்கள் சச்சின், ஸ்மித் ஜோடி சிறப்பான துவக்கம் அளித்தது. ஆனால் சச்சின் அழைக்கும் முன்பே ஸ்மித் ரன் ஓடி வர, சச்சின் கெளரமாக வெளியேறினார். அதன்பிறகு அதிரடியாக ஆடி வந்த ஸ்மித் 22 பந்துகளில் 2 சிக்ஸ், 5 பவுண்டரிகள் அடித்து 38 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 6 ரன்கள் எடுத்த நிலையில் மார்கல் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பொறுப்பாக ஆடி வந்த ரோஹித் சர்மா 14 ரன்கள் எடுத்து டோணியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அணியின் பரிதாப நிலையை மாற்ற அதிரடிக்கு முயன்ற ராயுடு 11 ரன்களில் முரளி விஜய்யிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஒரு சிக்ஸ் அடித்து நம்பிக்கை அளித்த ஜேம்ஸ் பிராங்க்ளின் 13 ரன்களில் டோணியிடம் கேட்சாகி வெளியேறினார். கேப்டன் ஹர்பஜன் சிங் 1 ரன்னில் ஏமாற்றினார். அதன்பிறகு அணியின் வெற்றிக்காக போராடிய போல்லார்டு 16 ரன்கள் எடுத்து ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் மலிங்காவும்(17) அவுட்டாக, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட்களை இழந்து 149 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 38 ரன்களில் அபார வெற்றிப் பெற்றது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை சென்னையில் நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை சந்திக்க உள்ளது. |
| பின்லேடனை காட்டிக் கொடுத்த பாக். டாக்டருக்கு 33 ஆண்டு சிறை Posted: 23 May 2012 07:17 AM PDT பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.க்கு காட்டிக் கொடுத்ததில் முக்கியப் பங்கு வகித்த பாகிஸ்தான் மருத்துவருக்கு 33 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கபப்ட்டுள்ளது. இஸ்லாமாபாத் அருகே அபோதாபாத்தில் பதுங்கியிருந்த பின்லேடனின் ரத்த மாதிரியை எடுத்துக் கொடுத்து பின்லேடன்தான் என்று அமெரிக்காவிடம் உறுதி செய்து காட்டிக் கொடுத்தவர் டாக்டர் ஷகில் அப்ரிதி. தங்களது நாட்டின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்தியது என்பது பாகிஸ்தானின் வாதம். இதற்கு உடந்தையாக பாகிஸ்தான் மருத்துவர் இருந்தார் என்பதால் அவரை சிறையிலடைத்தது. ஆனால் ஷகில் அப்ரிதியை விடுதலை செய்ய அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் நாட்டுக்கு எதிராக சதி செய்த வழக்கில் அப்ரிதிக்கு 33 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. |
| இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு Posted: 23 May 2012 06:55 AM PDT இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ7.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இப்புதிய பெட்ரோல் விலை இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ரூபாய் மதிப்பில் ஏற்பட்டு வரும் பெரும் சரிவைத் தொடர்ந்து பெட்ரோலிய பொருட்களின் பொருட்கள் விலை உயர்த்தப்படக் கூடும் என்று கூறப்பட்டது. மேலும் நாட்டின் பொருளாதார சிக்கலை சமாளிக்க கடினமான முடிவுகளை எடுக்கப் போவதாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுவரையில் இல்லாத வகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ஒரே நாளில் ரூ7.50 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இப்புதிய உயர்வின் மூலம் தமிழ்நாட்டில் 1 லிட்டர் பெட்ரோல் விலையின் ரூ80 ஆக இருக்கும். இருப்பினும் டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. |
| மத்தியில் அரசு செயல்படுதா? என்று மக்கள் கேட்கின்றனர் : ஜெ. பொளேர்! Posted: 23 May 2012 05:48 AM PDT மத்தியில் அரசாங்கம் ஒன்று செயல்படுகிறதா? என்று சாதாரண மக்கள் கேட்கும் நிலையில்தான் கடந்த 3 ஆண்டுகால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயல்பாடு இருந்திருக்கிறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சாடியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 3 ஆண்டுகாலம் நிறைவு செய்திருக்கிறது. ஆனால் அப்படியான ஒரு அரசு மத்தியில் இருக்கிறதா? என்று பொதுமக்கள் கேட்கும் நிலைதான் இருக்கிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் சங்மாவை நாங்கள் முன்னிறுத்தியுள்ளோம். அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆதரவையும் கோரியுள்ளோம். பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார் அவர். |
| ஜனாதிபதி தேர்தல்: காங்கிரசுக்கு முலாயம்சிங் ஆதரவு Posted: 23 May 2012 04:58 AM PDT ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் ஜூலை மாதம் 25-ந்தேதி முடிவடைவதால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி மற்றும் விவரங்களை தலைமை தேர்தல் கமிஷன் விரைவில் அறிவிக்க உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் தன்னிச்சையாக வெற்றிபெற இயலாது என்பதால் பிரதான கட்சிகளான காங்கிரசும், பாரதீய ஜனதாவும் மாநில கட்சிகளின் முடிவைப் பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளன. இந்த நிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பாராளுமன்ற முன்னாள் சபாநாயகரும், பழங்குடி இனத்தலைவருமான பி.ஏ.சங்மாவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தார். இதற்கு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஆதரவு தெரிவித்தார். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பால் ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அவர் சங்மாவுக்கு ஆதரவாக பா.ஜ.க. தலைவர் அத்வானி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பஞ்சாப் முதல்-மந்திரி பாதல் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்களிடம் போனில் பேசி ஆதரவு திரட்டினார். முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் இந்த துணிச்சலான நடவடிக்கை தேசிய அரசியலில் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே சங்மா முக்கிய தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். சோனியாவை சந்திக்க பல தடவை அவர் முயன்றார். அதற்கு வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து பேச சங்மா திட்டமிட்டுள்ளார். பா.ஜ.க. சங்மாவை ஆதரிக்குமா? என்று தெரியவில்லை. பா.ஜ.க. என்ன முடிவு எடுக்கும் என்பது இன்னமும் தெளிவாகாமல் உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். காங்கிரஸ் சார்பில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி, பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார், பிரதமரின் ஆலோசகர் சாம் ஆகியோரில் ஒருவர் நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க இயலாது என்று காங்கிரஸ் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் சூசகமாக அறிவித்துள்ளது. மேலும் பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதியாக்கி ஒதுக்க காங்கிரஸ் மூத்த தலைவர்களில் பலர் விரும்பவில்லை. எனவே அவருக்கு ஜனாதிபதி பதவிக்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. என்றாலும் பிரணாப் முகர்ஜி பெயரை சோனியா தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. பிரணாப் முகர்ஜியை திரிணாமுல் காங்கிரஸ் ஆதரிக்க தயங்குவதால் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, சபாநாயகர் மீராகுமார் இருவருக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. மீராகுமாரை ஜனாதிபதியாக்க பிரதமர் மன்மோகன்சிங் விரும்புவதாக தெரிகிறது. இதற்கிடையே மாநில கட்சிகளிடம் ஆதரவு திரட்டும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் முடிவை ஏற்போம் என்று கூறி உள்ளன. லல்லு பிரசாத் யாதவும் காங்கிரசை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் காங்கிரசுக்கு உற்சாக டானிக் கொடுக்கும் வகையில், ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கப்போவதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் சூசகமாக கூறியுள்ளார். டெல்லியில் நேற்று நடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 3-ம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட அவர் இதை தெரிவித்தார். அவரிடம் நிருபர்கள், 'காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்பீர்களா?' என்று கேட்டனர். அதற்கு முலாயம் சிங் யாதவ் கூறியதாவது:- ஒரே ஒரு நிபந்தனைதான். அவர் அதிகாரியாக இருக்கக்கூடாது. மேலும் அரசியல்வாதியாக இல்லாதவரையும் ஜனாதிபதி பதவிக்கு பரிசீலனை செய்யக்கூடாது. இவ்வாறு முலாயம்சிங் யாதவ் கூறினார். முலாயம்சிங் யாதவின் இந்த அறிவிப்பால் காங்கிரஸ் தலைவர் சோனியா உற்சாகம் அடைந்துள்ளார். உத்தரபிரதேசத்தில் கணிசமான வாக்குகளை வைத்திருக்கும் மாயாவதியும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க தீர்மானித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து இடதுசாரிகள் முடிவை சோனியா எதிர்நோக்கியுள்ளார். இன்று டெல்லியில் கூடி ஆலோசனை நடத்திய இடதுசாரிகள் ஜனாதிபதி தேர்தல் பற்றி விரிவாக விவாதித்தனர். சங்மாவை ஆதரிக்கலாமா? வேண்டாமா? என்று பேசப்பட்டது. இன்னும் இடதுசாரிகள் தங்கள் முடிவை வெளியிடவில்லை. மாநில கட்சிகளிடம் ஓரளவு ஆதரவை திரட்டியபிறகு அடுத்த வாரம் வேட்பாளர் பெயரை வெளியிட காங்கிரஸ் தலைவர் சோனியா முடிவு செய்துள்ளார். அதன்பிறகு தேர்தல் களம் விறுவிறுப்பை எட்டும். |
| இறுதிப் போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறுவது முட்டாள்தனமாது: பொன்சேகா Posted: 23 May 2012 04:46 AM PDT தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் குற்றம்சாட்டுவது முட்டாள்தனமானது என்று இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொன்சேகா விடுதலையான பிறகு தமது விட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இறுதிப் போரின் போது அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படவில்லை. போர்க் குற்றம் தொடர்பான எந்த ஒரு கேள்விக்கும் சந்தேகத்துக்கும் பதிலளிக்க தாம் தயாராக இருக்கிறேன் என்றார். மேலும் ஐ.நா. உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகள் இறுதிப் போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது பற்றிய கேள்விக்கு, அதை நான் ஏற்க முடியாது. அப்படிச் சொல்வது முட்டாள்தனமானது என்றார். தமது விடுதலைக்கு நெருக்கடி கொடுத்த சர்வதேச நாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பொன்சேகா கூறியுள்ளார். |
| ஐ.பி.எல்.போட்டிகளில் சூதாட்டம்: புனே அணியின் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை Posted: 23 May 2012 03:54 AM PDT ஐ.பி.எல். போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஐ.பி.எல்., வீரர்கள் 5 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 5 வீரர்களுக்கும் வரிமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், வீரர்கள் அனைவரும் ஒருவாரத்திற்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, புனே வாரியர்ஸ் அணியின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| ஐ.பிஎல்.5: பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் : ஐ.பி.எல். வெப்சைட்டில் அறிவிச்சுட்டாங்க Posted: 23 May 2012 02:46 AM PDT பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் வாழ்வா சாவா? பழிதீர்க்குமா தீர்க்காதா? என்ற கேள்விகளுடன் இன்று இரவு 8 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது அதிர்ஷ்டத்தில் அடுத்த சுற்றுக்குள் நுழைந்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இன்று இரவுதான் போட்டியே தொடங்குகிறது...ஆனால் ஐ.பி.எல். நிர்வாகம் என்ன நினைத்ததோ தெரியவில்லை...இன்றைய போட்டியிலும் சென்னை சூப்பர்கிங்ஸ் வென்று பைனலுக்கே போய்விட்டது என்று ஐ.பி.எல். வெப்சைட்டில் போட்டுவிட்டனர். நடப்பு ஐ.பி.எல்.5வது தொடரானது சர்ச்சை மேல் சர்ச்சைகளால் ரணகளப்பட்டுப் போய் கிடக்கிறது. ஸ்பாட் பிக்சிங்கில் சிக்கிய வீரர்கள், மதுபோதையில் ஷாருக்கான் ரகளை, அமெரிக்கப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது, மும்பை போதை விருந்தில் கலந்து கொண்டது என சர்ச்சைகளுக்கு தீனிபோட்டுக் கொண்டிருக்கிறது ஐ.பி.எல். ஒட்டுமொத்த ஐ.பி.எல். போட்டிகளையே நடத்த தடை விதிக்க வேண்டும் என்று இன்னொரு புறம் அரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஐ.பி.எல். நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முக்கியமான போட்டிகளில் யார் வெல்வார்கள் என்று இப்போதே அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையை வெடிக்க வைத்திருக்கிறது. இன்றைய மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் என்ன பாடுபடப்போகிறதோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்றிருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் சென்னை வென்று மே 25-ந் தேதி நடைபெற உள்ள போட்டியில் டெல்லி டேர்வில்ஸூடன் மோதப் போகிறதாம்.. அதேபோல் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வென்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை மே 27-ந் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளப் போகிறதாம்.. இப்படித்தான் ஐ.பி.எல். வெப்சைட்டில் போட்டிருக்கின்றனர். அடக் கொடுமையே என்கிறீர்களா? இது உண்மையில் கவனக்குறைவால் போடப்பட்டதா? அல்லது சென்னைக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது என்று ஜோசியம் பார்த்து போட்டார்களா? அல்லது இப்பொழுதே போட்டிகளின் வெற்றியைத் தீர்மானிக்கும் மேட்ச் பிக்சிங் விளைவா? என்பது ஐ.பி.எல். நிர்வாகத்துக்குத்தான் வெளிச்சம். |
| முன்னாள் வீரர்களுக்கு ஊக்கத்தொகை: கபில்தேவ், அசாருதீனுக்கு ஊக்கத்தொகை மறுப்பு Posted: 23 May 2012 02:31 AM PDT ஐ.பி.எல். போட்டி மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பி.சி.சி.ஐ.) கோடிக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது. உபரியாக இருக்கும் வருமானத்தை முன்னாள் வீரர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. 2003-04-ம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் 65 பேர் உள்பட 160 வீரர்களுக்கு ரூ.70 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. கிரிக்கெட் வாரியத்தின் இந்த ஊக்கத்தொகை திட்டத்தின்படி 100 டெஸ்டுக்கு மேல் விளையாடுபவருக்கு ரூ.1 1/2 கோடி கிடைக்கும். 75-99 டெஸ்டுக்கு ரூ.1 கோடி என்பது உள்பட விளையாடிய போட்டிக்கு தகுந்தவாறு ஊக்கத்தொகை விவரம் அறிவிக்கப்பட்டது. ஐ.பி.எல். பிளே-ஆப் போட்டியின் போது ஊக்கத் தொகையை வழங்க முடிவு செய்து கிரிக்கெட் வாரியம் வீரர்களின் பெயர்களை அறிவித்தது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் கபில்தேவ், அசாருதீன் ஆகியோரது பெயர் ஊக்கத் தொகை பட்டியலில் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக கபில்தேவ் ஐ.சி.எல். அமைப்பை தொடங்கினார். தொடர்ந்து கிரிக்கெட் வாரியத்துடன் மோதல் போக்கை கடைபிடித்ததால் அவரது பெயர் இடம் பெற வில்லை என்று கூறப்படுகிறது. 1983-ம் ஆண்டு உலக கோப்பையை பெற்றுக் கொடுத்த கபில்தேவ் ரூ.1 1/2 கோடி ஊக்கத்தொகை பெற தகுதியானவர். அசாருதீன் தற்போது காங்கிரஸ் எம்.பி.யாக உள்ளார். சூதாட்டத்தல் ஈடுபட்டதற்காக 2000-ம் ஆண்டு இவருக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனு கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. இதனால் அவரது பெயரையும் கிரிக்கெட் வாரியம் பரிசீலிக்க வில்லை என்று கூறப்படுகிறது. அசாருதீன் 99 டெஸ்டில் விளையாடி இருப்பதால் ரூ.1 கோடி பெற தகுதியானவர். |
| You are subscribed to email updates from விழியே பேசு... To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


















