Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





விழியே பேசு...

விழியே பேசு...


கேரளாவில் வசிப்பதற்கே பயமாக உள்ளது: மோகன்லால் அச்சம்

Posted: 22 May 2012 08:23 PM PDT


கேரளாவில் வசிப்பதற்கே தனக்கு பயமாக இருப்பதாகவும், அம்மாநிலம், பைத்தியக்காரர்களின் வாழ்விடமாக மாறி வருகிறதோ என, பிரபல மலையாள நடிகர் மோகன்லால் அச்சம் தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாள திரைப்பட நடிகர் மோகன்லால். இவர் தமிழ், இந்தி, மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தேசிய விருதுகளை குவித்துள்ள இவர், இந்திய ராணுவத்தின் கவுரவ லெப்டினன்ட் கர்னலாகவும் இருந்து வருகிறார். இவரது தாய் சாந்தகுமாரி மூளையில் ஏற்பட்ட அடைப்பால் மூன்று மாதமாக, சிகிச்சை பெற்று வருகிறார்.தாயின் அருகில் இருந்து கவனித்து வருகிறார் மோகன்லால். இந்நிலையில், கோழிக்கோடு அருகே ஒஞ்சியம் பகுதியைச் சேர்ந்த புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த, டி.பி.சந்திரசேகரன் என்பவர் நடுரோட்டில் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம், மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனால், மே 21 ல், தன், 52வது பிறந்த நாளை மோகன்லால் கொண்டாடவில்லை.

அதற்கு அவர், "த கம்ப்ளீட் ஆக்டர்' என்ற வலை தளத்தில், தன் கைப்பட எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

எனக்கு ஒரு கஷ்டம் வந்தால், என் தாயின் மனது துடிப்பதை என்னால் உணரமுடியும். சிறிய காயம்பட்டாலும், துடித்துப்போகும் என் தாயைப் போலத்தானே, உடலில் பல வெட்டுக்காயங்களை பெற்று கொலையான சந்திரசேகரனின் தாயின் மனதும் துடித்துப் போயிருக்கும்.

அந்தத் தாயின் கண்ணீர் கடலில், என் பிறந்தநாள் கொண்டாட்டம் மூழ்கி விட்டது. சந்திரசேகருடன் எனக்கு பழக்கமில்லை. இருந்தாலும், அவர் தற்போது உயிருடன் இருந்திருந்தால், கிட்டத்தட்ட என்னுடைய வயது தான் அவருக்கும் இருந்திருக்கும். அவருடைய தாய்க்கும் எனது தாயின் வயது தான் இருக்கும்.கொலை செய்ய தூண்டுபவர்களும், கொலை செய்பவர்களும் அதிகரித்து வரும் கேரளாவில் வசிப்பதற்கே எனக்கு தயக்கமாகவும், அச்சமாகவும் உள்ளது. பைத்தியக்காரர்களின் மாநிலமாக, கேரளா மாறி வருகிறதோ என, எண்ணத் தோன்றுகிறது.இவ்வாறு மோகன்லால் வலை தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.



ஹஜ் பயண மானியம் ரத்தா? அமைச்சர் கிருஷ்ணா பதில்

Posted: 22 May 2012 08:04 PM PDT


ஹஜ் பயணத்துக்கு வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்வது குறித்த விஷயத்தில், சுப்ரீம் கோர்ட்டின் இறுதி உத்தரவு வந்தபின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறினார்.
அகில இந்திய ஹஜ் கமிட்டி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில், வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஹஜ் பயணத்துக்கு வழங்கப்படும் மானியத்தை படிப்படியாக குறைத்து, பத்து ஆண்டுகளுக்குள் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என, கடந்த சில தினங்களுக்கு முன், சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இது, இடைக்கால உத்தரவு தான். சுப்ரீம் கோர்ட்டின் இறுதி உத்தரவு வந்தபின், இந்த விஷயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்தாண்டு ஹஜ் பயணத்துக்கான கொள்கை, பயண ஏற்பாட்டாளர்கள், ஹஜ் கமிட்டி, சட்ட நிபுணர்கள் ஆகியோருடன் விரிவான ஆலோசனை நடத்திய பின்பே, உருவாக்கப்பட்டது. இந்த விஷயத்தில் வெளிப்படையான அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தாண்டு ஹஜ் பயண ஏற்பாடுகளில், குறிப்பிடத் தக்க அளவில் மாற்றம் செய்யப்பட்டது. ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு பாஸ்போர்ட் கட்டாயம் என, அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தியும் கூட, கடந்தாண்டை விட, இந்தாண்டு அதிகமானோர், பயணத்துக்கு விண்ணப்பித்தனர். இது மகிழ்ச்சியான விஷயம். இவ்வாறு கிருஷ்ணா கூறினார்.



பிரதமர் அளித்த விருந்தில் முதல் வரிசையில் இடம் பிடித்தார் முலாயம்சிங்

Posted: 22 May 2012 07:56 PM PDT

சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் மற்றும் ராஷ்டிரீய லோக் தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகிய இருவரும் மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறார்கள். ஆனால், சமீப காலமாக இந்த இரு தலைவர்களும் ஆளும் கூட்டணியில் இடம் பிடிக்கும் அளவுக்கு நெருங்கி வருகிறார்கள்.
 
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 3-ம் ஆண்டு நிறைவையொட்டி, பிரதமர் மன்மோகன்சிங் நேற்று கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து அளித்தார். இந்த விழாவில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
 
இந்த விழா நிகழ்ச்சியில்,முலாயம்சிங் யாதவ் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகிய இருவரும் மூத்த மத்திய மந்திரிகள் மற்றும் கூட்டணி கட்சி மந்திரிகளுக்கு அருகே முதல் வரிசையில் அமர்ந்து இருந்தனர். அது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் வட்டாரத்தில் கேட்டதற்கு, அவர்கள் இருவரும் முதலிலேயே வந்துவிட்டதால், பார்வையாளர்களுடன் அமர வைப்பது பொருத்தமாக இருக்காது. மற்றபடி வேறு கோணத்தில் இதைப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.
 
விருந்தின்போது சோனியா காந்தியின் மேஜையில் முலாயம், லாலுவுடன் ராகுல் காந்தி, காஷ்மீர் முதல்&மந்திரி உமர் அப்துல்லா, டி.ஆர்.பாலு (தி.மு.க.) மற்றும் பலர் அமர்ந்து இருந்தனர். பிரதமர் மன்மோகன்சிங் மேஜையில், பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூத்த மந்திரிகள் லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்டோர் அமர்ந்து இருந்தனர்.



அமெரிக்க பாகிஸ்தானிடம் மன்னிப்பு கோருவதற்கு தைரியம் வேண்டும் -பிலாவல்

Posted: 22 May 2012 07:48 PM PDT


கடந்த ஆண்டு நேட்டோ படையினர் எல்லை தாண்டி நடத்திய விமான தாக்குதலில் 24 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா பாகிஸ்தானிடம் மன்னிப்பு கோருவதற்கு தைரியம் வேண்டும் என பாகிஸ்தான் ஆளும் கட்சியின் சேர்மன் பிலாவல் பூட்டோ சர்தாரி தெரிவித்துள்ளார். 

இந்த விசயத்தில் ஒபாமா தைரியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். அதிபர் ஒபாமா மீண்டும் அடுத்த தேர்தலுக்கு தயாராகிவரும் நிலையில் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளின் நோக்கம் முக்கியமானது என்று தெரிவித்த அவர், பாகிஸ்தானிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்பதற்கு பாகிஸ்தான் தகுதியானது எனவும் பிலாவல் தெரிவித்தார். 

பாகிஸ்தான் எல்லை பகுதியை நேட்டோ படைகளுக்கு பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி வழங்காததால் சிகாகோ மாநாட்டில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.















ஜேம்ஸ்பாண்டின் புதியபடமான 'ஸ்கை பால்' டிரெய்லர் வெளியீடு

Posted: 22 May 2012 07:38 PM PDT

இங்கிலாந்து நாட்டின் ரகசிய ஏஜெண்ட் கேரக்டாரான ஜேம்ஸ்பாண்ட் கேரக்டர் உலக சினிமாவில் தனி இடத்தை பிடித்துள்ள கேரக்டராகும். தற்போது இந்த கேரக்டரில் டேனியல் கிரெய்க் நடித்து வருகிறார். இவருக்கு முன்னதாக பியர்ஸ் பிராஸ்னன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டேனியல் கிரெய்க் நடித்திருந்த 'குவாண்டம் ஆப் சோலாஸ்' வெளியாகி வசூலில் பெரும் சாதனை படைத்தது. அதன்பிறகு இந்த ஆண்டுதான் ஜேம்ஸ்பாண்ட்டின் புதிய படம் வெளிவர இருக்கிறது.

ஸ்கை பால் (SKY FALL) என பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஜேம்ஸ்பாண்ட் படவரிசையில் 23 -வது படமாகும். அதுமட்டுமின்றி ஜேம்ஸ்பாண்ட் கேரக்டர் உருவாகி 50 ஆண்டுகள் துவங்குவதும் இந்த ஆண்டுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகுந்த பொருட் செலவில் உருவாகி வரும் 'ஸ்கை பால்' படத்தை சாம் மெண்டிஸ் இயக்கி வருகிறார். ஜேவியர் பார்டெம் வில்லானாக நடிக்கிறார். இவர்களுடன் ஜூடி டென்ச், ரால்ப் பெயின்னஸ், ஆல்பர்ட் பின்னர் ஆகியோர் நடிக்கின்றனர். கதாநாயகிகளாக கறுப்பழகி நவோமி ஹாரிஸ், பெர்னிஸ் மர்லோகே ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவில் உள்ள கோவா, அஹமதாபாத், டெல்லி உள்ளிட்ட இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இத்திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. இப்படம் வரும் அக்டோபர் 26-ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.





கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார பந்துவீச்சு-டெல்லி டேர்டெவில்ஸ் படுதோல்வி

Posted: 22 May 2012 11:17 AM PDT


ஐபிஎல் 5 தொடரின் நேற்றைய முதல் பிளே ஆப் போட்டியில் 163 ரன்களை சேஸ் செய்து வந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி துவக்கத்தில் இருந்தே விக்கெட்களை இழந்து தவித்தது. இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 18 ரன்களில் வெற்றிப் பெற்றது.

ஐபிஎல் 5 தொடரில் நேற்று பிளே ஆப் சுற்றின் முதல் போட்டி புனேயில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் கம்பிர், மெக்கல்லம் ஜோடி அணிக்கு சிறப்பான துவக்கத்தை அளித்தது. ஆனால் கேப்டன் கம்பிர் 16 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 32 ரன்களை குவித்து ரன் அவுட்டானார்.

அதன்பிறகு காலிஸ், மெக்கல்லம் ஜோடி பொறுப்பாக ஆடி ரன்களை சேர்த்தது. ஆனால் மெக்கல்லம் 1 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து 31 ரன்கள் எடுத்த நிலையில் டேவிட் வார்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த சாகிப் அல் ஹசன் 1 ரன்களில் ஏமாற்றினார்.

பொறுப்பாக ஆடி வந்த காலிஸ் 30 ரன்கள் எடுத்து அதிரடிக்கு முயன்ற போது, பவுண்டரி லைனில் கேட்சாகி வெளியேறினார். அதன்பிறகு யூசுப் பதான், லட்சுமி சுக்லா ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர்.

யூசுப் பதான் 21 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 40 ரன்களை குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். லட்சுமி சுக்லா 11 பந்துகளில் 1 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 24 ரன்களை சேர்த்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்களை இழந்து 162 ரன்களை குவித்தது.

163 ரன்கள் எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு கேப்டன் ஷேவாக், டேவிட் வார்னர் ஜோடி அதிரடி துவக்கத்தை அளித்தது.

ஆனால் துவக்க வீரர் டேவிட் வார்னர் 1 சிக்ஸ் அடித்து 7 ரன்கள் எடுத்து மெக்கல்லமிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்த பந்தில் கேப்டன் ஷேவாக் 10 ரன்கள் எடுத்த நிலையில் மெக்கல்லமிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அதன்பிறகு ஜெயவர்த்தனே, நாமன் ஓஜா ஜோடி அணியை வெற்றிப் பாதையில் அழைத்து சென்றனர். ஆனால் நாமன் ஓஜா 1 சிக்ஸ், 4 பவுண்டரிகள் அடித்து 28 ரன்களை எடுத்து, கம்பிரிடம் கேட்சாகி வெளியேறினார். பொறுப்பாக ஆடி வந்த ஜெயவர்த்தனே 40 ரன்கள் எடுத்து ஸ்டேம்பிங் செய்யப்பட்டார். கடைசிக் கட்டத்தில் சொதப்பிய வேணுகோபால் ராவ் 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

கடைசி 2 ஓவர்களில் 33 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரோஸ் டெய்லர், பாவன் நாகி ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினர். ஆனால் ரோஸ் டெய்லர் ஒரு சிக்ஸ் அடித்து 11 ரன்களில் அவுட்டானார். சுனில் நரேன் பந்தில் பாவன் நாகியும் 14 ரன்களில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். அடுத்த வந்து மோனி மார்கலும் டக் அவுட்டானார்.

இதனால் 20 ஓவர்களின் முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 8 விக்கெட்களை இழந்து 144 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 ரன்களில் அபார வெற்றிப் பெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் ஜாக் காலிஸ், சுனில் நரேன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு உதவினர்.



ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தொடங்கி மூன்று வருடங்கள் நிறைவு: பிரதமர் தலைமையில் விருந்து

Posted: 22 May 2012 10:01 AM PDT


காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சி செய்து வருகிறது.  இந்த கூட்டணி தலைமையிலான ஆட்சி தொடங்கி 3 வருடங்கள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் பிரதமர் தலைமையில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இன்று இரவு நடைபெற இருக்கும் இந்த விருந்துக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முக்கிய கூட்டணிக் கட்சியான தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி இந்த விருந்தில் கலந்துகொள்ள இயலாது என கூறியிருக்கிறார். தமக்கு உடல்நிலை சரியில்லாததால் டெல்லி வரை பயணம் செய்ய முடியாது என கூறியுள்ளார்.
 
இதேபோல் மற்றொரு முக்கிய கூட்டணி கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியும் இந்த விருந்தில் கலந்து கொள்ளமாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து மம்தா காரணம் ஏதும் கூறவில்லை.
 
இந்நிலையில், மத்திய ரெயில்வே துறை அமைச்சர் முகுல் ராய் இதுகுறித்து கூறுகையில்:
 
இன்றைய விருந்துக்கு மம்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் முன்னரே முடிவு செய்யப்பட்ட சில நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டி இருப்பதால் இந்த விருந்தில் அவர் கலந்து கொள்ள இயலாது என கூறியுள்ளார்.
 
காங்கிரஸ் கட்சிக்கும் திரிணாமூல் காங்கிரசுக்கும் இடையே சில கருத்து வேறுபாடு இருந்து வருவதும் மேற்குவங்கத்துக்கு மாநில மேம்பாட்டுக்காக கோரப்பட்ட நிதி இதுவரை ஒதுக்கப்படாததும் குறிப்பிடத்தக்கது.
 
எனினும் தங்களது பிரதிநிதிகள் இந்த விருந்தில் கலந்து கொள்வார்கள் என காங்கிரஸ் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விருந்தின்போது மூன்று வருட சாதனை அறிக்கை ஒன்று வெளியிடப்படுகிறது.



கார்த்தியின் 'சகுனி' அரசியல்வாதிகளுக்கு எதிரான படமா?: இயக்குனர் விளக்கம்

Posted: 22 May 2012 08:30 AM PDT


கார்த்தி நாயகனாக நடிக்கும் 'சகுனி' படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதன் பாடல் சி.டி. வெளியீட்டு விழாவை வருகிற 31-ந் தேதி பிரமாண்ட விழா நடத்தி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

'சகுனி' முழுநீள அரசியல் படமாக தயாராகியுள்ளது. அரசியல்வாதிகளுக்கு எதிரான படம் என்றும் கூறப்படுகிறது. அரசியல் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் கடுமையாக விமர்சித்து காட்சிகளும் வசனங்களும் வைத்திருப்பதாக தகவல் பரவியுள்ளது.

இதுகுறித்து 'சகுனி' படத்தின் இயக்குனர் சங்கர் தயாளிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

தற்போதைய அரசியலை அலசும் படமாக இதை எடுத்துள்ளோம். அதை காமெடியுடன் சொல்லியுள்ளோம். எந்தவொரு அரசியல் கட்சியையோ அரசியல்வாதியையோ 'குறி'வைத்து படத்தை எடுக்கவில்லை. வருகிற 31-ந் தேதி இசை வெளியீடு நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.



இன்றைய செய்திகள் (22-05-2012)(செய்தி,சினிமா, விளையாட்டு செய்திகள்)

Posted: 22 May 2012 07:30 AM PDT


நடிகர் சங்கத் தேர்தல்... ராதாரவிக்கு எதிராக குமரிமுத்து போட்டி!






















நடிகர் சங்கத் தேர்தல்... ராதாரவிக்கு எதிராக குமரிமுத்து போட்டி!

Posted: 22 May 2012 05:16 AM PDT


நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் நடக்கும் தேர்தலில் போட்டியிடும் ராதாரவியை எதிர்த்து களமிறங்கப் போவதாக காமெடி நடிகர் குமரிமுத்து கூறினார்.

நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் (ஜூன்) 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. மனுக்களை வாபஸ் பெற 30-ந்தேதி கடைசி நாள்.

இதில் தலைவர் பதவிக்கு சரத்குமாரும், செயலாளர் பதவிக்கு ராதாரவியும் மீண்டும் போட்டியிடுகின்றனர். நடிகர் சங்க பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடப் போவதாக சிரிப்பு நடிகர் குமரிமுத்து அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நடிகர் சங்க தேர்தலில் நான் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறேன். நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன். நடிகர் சங்கத்தில் ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் நிற்கிறேன். ராதாரவிக்கு போட்டியாகவோ அவரை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலோ நான் நிற்கவில்லை.

ராதாரவி எனக்கு சகோதரர் போன்றவர். அவரது தந்தையான நடிகவேல் எம்.ஆர்.ராதா எனக்கு மானசீக குரு. திரையுலகில் மட்டுமின்றி அரசியலிலும் புரட்சி ஏற்படுத்தியவர் எம்.ஆர்.ராதா. பெரியார் சொல்லும் கருத்துக்களை அப்படியே மேடையில் பேசி மக்களிடம் கொண்டு சென்றவர். அவரது மகன் ராதாரவி எனது மரியாதைக்கு உரியவர்.

நடிகர்-நடிகைகளுக்கு நிறைய உதவிகள் செய்ய என்னிடம் திட்டம் உள்ளது. நடிகர் சங்கத்தின் மூலம்தான் அதை நிறைவேற்ற முடியும். எனவேதான் களத்தில் இறங்கியுள்ளேன். வெற்றி பெறுவேனா, தோல்வி அடைவேனா என்பது முக்கியம் அல்ல. எந்த முடிவு வந்தாலும் ஏற்பேன். வேட்புமனு தாக்கல் செய்த பிறகு நிச்சயம் வாபஸ் பெறமாட்டேன்," என்றார் குமரிமுத்து.

இந்த இரு நடிகர்களில் ராதாரவி அதிமுககாரர். குமரிமுத்து பரம்பரை திமுககாரர் என்பது குறிப்பிடத்தக்கது.



கடும் 'பசியில்' மத்திய அரசு.. 'டயட்டில்' திமுக! விருந்துக்கு போகாத அழகிரி!!

Posted: 22 May 2012 04:33 AM PDT


ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிறைவு விழாவையொட்டி பிரதமர் அளிக்கும் விருந்தில் மத்திய அமைச்சர் முக அழகிரி கலந்து கொள்ளவில்லை. டயட்டில் இருப்பதால் விருந்துக்கு போகவில்லை என்று அழகிரி தெரிவி்த்துள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பேற்று இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகிறது. பல ஊழல்கள், விலைவாசி உயர்வு என கடும் பிரச்சனைகளுக்கு இடையே 3 வருடத்தை ஓட்டியுள்ளது இந்த அரசு.

இப்போது ஜனாதிபதி தேர்தலில் தனது வேட்பாளரை கூட முடிவு செய்ய முடியாத அளவுக்கு 'பலமிக்க' அரசாக விளங்குகிறது. கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து வாரி விட்டு வருவதால், எத்தனை கட்சிகள் ஆதரித்தாலும் போதாது என்ற அளவுக்கு கடும் 'பசியில்' உள்ளது மத்திய அரசு.

இந் நிலையில் 3 ஆண்டுகள் முடிவடைந்து 4வது ஆண்டில் மத்திய அரசு காலடி எடுத்து வைப்பதையொட்டி பிரதமர் மன்மோகன் சிங் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தலைவர்கள், எம்.பி.க்கள் ஆகியோருக்கு இன்று இரவு விருந்து அளிக்கிறார். இந்த விருந்து நிகழ்ச்சியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி, திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி ஆகியோர் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விருந்தில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியும் கலந்து கொள்ளவில்லையாம். அவர் கூறுகையில், பிரதமர் அளிக்கும் விருந்துக்கு என்னை யாரும் தனிப்பட்ட முறையில் அழைக்கவில்லை. ஆனால் விருந்தில் கலந்து கொள்ளுமாறு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து ஒரு கடிதம் வந்துள்ளது.

ஆனால், நான் டயட்டில் இருப்பதால் பிரதமர் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றார்.



பிளஸ்டூவில் தேர்வில் கலக்கிய பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!

Posted: 22 May 2012 04:49 AM PDT




தமிழகத்தில் 12வது பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. வேலூர் மத்திய சிறையில் உள்ள ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தூக்குதண்டனை கைதியான முருகன், பேரறிவாளன் இருவரும் இந்த ஆண்டு தனித்தேர்வராக சிறையில் இருந்தபடியே படித்து 12வது தேர்வு எழுதினர்.

வணிகவியல் பாடத்திட்டத்தை முதல்நிலை பாடமாக எடுத்து தேர்வு எழுதியிருந்தார்கள். இன்று முடிவுகள் வெளியிடப்படும் என்றதும் தேர்வு முடிவுகளை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருந்தார்கள். இன்றைய தேர்வு முடிவுகளை அவர்களுக்கு சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


பேரறிவாளன், தமிழில் 185, ஆங்கிலத்தில் 169, வரலாறு 183, பொருளாதாரம் 182, வணிகவியல் 198, அக்கவுண்டன்சி 179 என மொத்தம் 1096 மார்க் எடுத்துள்ளார்.

முருகன் 986 மார்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளார். இதில் முருகன் வணிகவியல் பாடத்திட்டத்தில் 200க்கு 200 மார்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளார்.

இவர்களைப்போல் சிறையில் இருந்தபடி தேர்வு எழுதிய மேலும் 4 கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிறையில் தண்டனை கைதியாக உள்ள படிக்காதவர் களுக்கு ஆசிரியராக இருந்து பாடங்களை நடத்தி வரு கிறார் பேரறிவாளன் என்பது குறிப்பிடதக்கது.



ஆந்திராவில் இரு ரயில்கள் மோதி, தீப் பிடித்து 25 பேர் பலி

Posted: 22 May 2012 02:41 AM PDT


ஆந்திராவின் அனந்தப்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் நடந்த கோர விபத்தில் பெங்களூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹம்பி எக்ஸ்பிரஸ், பென்னிகொண்டா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியதில், 25 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்தனர்.

இந்த ரயிலில் இருந்தவர்கள் ஹூப்ளியிலிருந்து பெங்களூர் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தனர். அதிகாலை 3.15 மணியளவில் பென்னிகொண்டா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது ஹம்பி எக்ஸ்பிரஸ் மோதி விபத்துக்குள்ளானது.

காயமடைந்தவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனற். 3 பெட்டிகள் விபத்து காரணமாக தடம் புரண்டுள்ளன. அதில் ஒரு பெட்டி தீப்பிடித்து எரிந்து விட்டது. மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடந்து வருகின்றன.

சிக்னலைக் கவனிக்காமல் ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் டிரைவர் சென்றதே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.



வயிறு வலின்னு வந்த மூதாட்டிக்கு ஆண் குழந்தை பிறந்தது

Posted: 22 May 2012 02:32 AM PDT


விழுப்புரம் மாவட்டத்தில் வயிற்று வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு வந்த 58 வயது மூதாட்டிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

வி்ழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு 58 வயது மூதாட்டி தனது 65 வயது கணவருடன் நேற்று காலை 9 மணி அளவில் வந்தார். வயிறு வலிப்பதாகவும், அதனால் மருத்துவரை காண வந்ததாகவும் மூதாட்டி தெரிவித்துள்ளார். அப்போது மருத்துவர் அங்கு இல்லாததால் அவர் வரும் வரை இருவரும் காத்திருந்தனர்.

அப்போது மூதாட்டி கழிவறைக்கு சென்றார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் இது குறித்து அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் தான் கர்ப்பமாக இருந்த விஷயமே தெரியாது என்றும், வயிற்று வலிக்கு சிகிச்சை பெற வந்ததாகவும் தெரிவித்தார்.

மூதாட்டிக்கு குழந்தை பிறந்த விவரம் அறிந்ததும் அவரது கணவர் ஆட்டோவை அழைத்து வர சென்றார். மூதாட்டி ஒருவர் குழந்தை பெற்றுள்ளது பற்றி அறிந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் அந்த குழந்தையை தனக்கு கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

அதற்குள் ஆட்டோவுடன் வந்த முதியவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அங்கிருந்து அவசரமாகக் கிளம்பிவிட்டார். அந்த வயதான தம்பதி யார், எந்த ஊர் என்ற எந்த விவரமும் தெரியவில்லை. இந்த சம்பவத்தால் செஞ்சியில் பரபரப்பு ஏற்பட்டது.



+2 தேர்வில் நாமக்கல் சுஷ்மிதா முதலிடம்-3 இடங்களும் நாமக்கல்லுக்கே!!

Posted: 22 May 2012 01:20 AM PDT


பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியாகியது. இதில் நாமக்கல்லைச் சேர்ந்த எஸ்.கே.வி மேல்நிலைப்பள்ளி மாணவி சுஷ்மிதா 1189 மதிப்பெண்களுடன் மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

2வது இடமும் நாமக்கல்லுக்கே

அதே நாமக்கல்லைச் சேர்ந்த எஸ்.கே.வி மேல்நிலைப்பள்ளி கார்த்திகா, நாமக்கல் கிரீன்பார்க் பள்ளி மாணவர் அசோக்குமார், நாமக்கல் விவேகானந்தா பள்ளி மாணவர் மணிகண்டன் ஆகியோர் 1188 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

3வது இடமும் நாமக்கல்லுக்கே

அதேபோல மூன்றாவது இடத்தையும் நாமக்கல் மாணவர்களை பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த வித்யா விகாஷ் பள்ளி மாணவி மகேஸ்வரி, நாமக்கல் எஸ்.கே.வி. பள்ளி மாணவி பிரபாசங்கரி ஆகியோர் 1187 மதிப்பெண்களுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

முதல் மூன்று இடங்களையும் நாமக்கல் மாணவர்களேப் பிடித்து புதிய சாதனையை படைத்துள்ளனர்.

பிளஸ் டூ தேர்வு கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி தொடங்கி 30ம் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8.22 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 3.53 லட்சம் பேர் மாணவர்கள். 4.07 லட்சம் பேர் மாணவிகள். 61,319 பேர் தனித் தேர்வர்களாகவும் தேர்வு எழுதினர்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 40 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்தது. இந்தப் பணியில் சுமார் 35,000 ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இந்தப் பணி ஏப்ரல் 30ம் தேதி முடிவடைந்தது.

இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டது.

இந்த ஆண்டு முதல் முதலாக மாணவ- மாணவிகளுக்கு போட்டோவுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.



ஃபேஸ்புக்கில் ஆசிரியைகளை விலைமாதுகளாக சித்தரித்த மதுரை மாணவன்

Posted: 22 May 2012 01:00 AM PDT


மாணவி ஒருவர் சரியாக படிக்காததால் அவரைக் கண்டித்த ஆசிரியைகளின் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் போட்டு தேவைக்கு அழைக்கலாம் என்று விளம்பரம் செய்த பிளஸ் டூ மாணவனை போலீசார் கைது செய்தனர்.

மதுரையில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்தவர் சந்தியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் ஆண் நண்பருடன் சேர்ந்து ஊர் சுற்றுவதாகவும், ஒழுங்காக படிப்பதில்லை என்றும் கூறி ஆசிரியை ஒருவர் அவரை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சந்தியா அந்த ஆசிரியை பழிவாங்க தீர்மானித்தார். இது குறித்து அதே பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் தனது ஆண் நண்பரிடம் தெரிவித்தார். பள்ளி சுற்றுலா சென்றபோது தனது செல்போனில் எடுத்த போட்டோக்களில் தன்னை கண்டித்த ஆசிரியை மற்றும் இன்னொரு ஆசிரியையின் போட்டோக்கள் உள்ளன என்று சந்தியா தெரிவித்துள்ளார்.

உடனே அந்த மாணவன் அந்த 2 ஆசிரியைகளின் போட்டோக்களையும் வாங்கி தேவைக்கு அழைக்கலாம் என்று குறிப்பிட்டு ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். அந்த ஆசிரியைகளின் இமெயில் முகவரிகளையும் வெளியிட்டுள்ளார். இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அந்த மாணவரை நேற்று கைது செய்தனர்.



நியூயார்க் சர்வதேச பட விழாவுக்கு ‘3’ படம் தேர்வானது

Posted: 22 May 2012 12:43 AM PDT


தனுஷ்-ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்த '3' படம் சமீபத்தில் ரிலீசானது. தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் இப்படம் வந்தது. '3' படத்துக்கு எதிர்பார்த்த வசூல் இல்லாததால் நஷ்டமடைந்து விட்டதாக தெலுங்கு விநியோகஸ்தர் நட்டிகுமார் குற்றம் சாட்டினார். போலீசிலும் புகார் செய்தார்.

இந்த சர்ச்சையால் மனம் உடைந்து இருந்த ஐஸ்வர்யாவுக்கு '3' படம் நியூயார்க்கில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் திரையிட தேர்வானது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவ்விழாவில் ஆடுகளம், அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட மேலும் சில தமிழ் படங்களும் திரையிடப்படுகிறது. திரைப்பட விழாவில் பங்கேற்க ஐஸ்வர்யா நியூயார்க் செல்கிறார். அவர் கூறியதாவது:-

நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் '3' படம் திரையிடப்படுவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புது இயக்குனரான என்னை அவ்விழாவில் கவுரவிக்க இருக்கிறார்கள். சர்வதேச அளவுக்கு '3' படம் போய் இருப்பது பெருமை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.



ப்ளஸ் டூ தேர்வில் 86.7% பேர் தேர்ச்சி - மாணவியரே வழக்கம் போல அதிகம்!

Posted: 22 May 2012 12:30 AM PDT


பிளஸ்டூ தேர்வில் வழக்கம் போல மாணவியரே அதிக அளவில் தேர்ச்சியடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 86.7 சதவீதமாகும்.

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 86.7 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் அதிகமாகும்.

இந்த ஆண்டும் வழக்கம் போல மாணவியரே அதிக அளவில்தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 89.7 சதவீத மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 83.2 சதவீதமாகும்.

அதிக அளவில் தேர்ச்சி அடைந்ததோடு இல்லாமல், முதல் 3 இடங்களிலும் மாணவிகளின் ஆதிக்கமே அதிகம் உள்ளது. முதலிடத்தை நாமக்கல் மாணவி சுஷ்மிதா பிடித்துள்ளார்.

2வது இடத்தில் கார்த்திகா என்ற மாணவி உள்ளார். 3வது இடத்தை இரண்டு மாணவிகள் பிடித்துள்ளனர்.





Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™