விழியே பேசு... |
- பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால்...! : கருத்து கணிப்பு முடிவு
- வழக்கு எண் படத்தை பார்க்கத்தான் உயிரோடு இருந்திருக்கிறேன்! பாலுமகேந்திரா பெருமிதம்!!
- போதை, குடி, கும்மாளம்: புனே வாரியர்ஸின் ராகுல் ஷர்மா, வெய்ன் பார்னல் கைது
- இன்னொரு 'கண்டத்தையும்' தாண்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்...!
- அரசு நேர்மையான அதிகாரிகளை பாதுகாக்க வேண்டும்: நாராயண மூர்த்தி
- அனைவரும் ஏற்றுக்கொள்ளும் குடியரசுத்தலைவருக்கான வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்க வேண்டும்: ராஜ் நாத் சிங்
- முதியோர் ஓய்வூதியம் ரூ. 200 வழங்குவது அவமானபடுத்துவதாக இருக்கிறது: ஜெய்ராம் ரமேஷ்
- பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியாகிறது
- இன்றைய செய்திகள் (20-05-2012)
- ஐபிஎல் 5: சச்சின், ஸ்மித் அதிரடி ஆட்டம்-மும்பை 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்ற
- வாக்காளர்களுக்கு பணம்: துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு: கமிஷன்
- அனுஷ்கா கர்ப்பிணி ஆகிறார்....!
- ஏழை விவசாயியின் 12 வயது மகன் ஐ.ஐ.டி. தேர்வில் சாதனை
- ராமஜெயம் கடத்தப்பட்டது எப்போது?: கே.என்.நேருவிடம் விசாரணை
- அமெரிக்காவில் அதிபர் ஒபாமாவை கொல்ல சதி: 3 பேர் கைது
- நயன்தாராவா? த்ரிஷாவா? தப்பித்த பிரபுதேவா!
- விசா மறுத்த அமெரிக்கா- வீடியோ கான்பரன்சிங்கில் பேசும் நரேந்திர மோடி
- ஐபிஎல் 5: பெங்களூரை வீழ்த்தியது டெக்கான் சார்ஜர்: ஸ்பிளே ஆப் சுற்றில் சென்னை
- பி.ஏ. சங்மாவை ஆதரியுங்கள்: அத்வானி, பரதனுக்கு ஜெயலலிதா கோரிக்கை
- புதுக்கோட்டை தேர்தலில் காங்கிரஸ் போட்டியில்லை: ஞானதேசிகன் பேட்டி
- ஐ.பி.எல்.போட்டிகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தி கீர்த்தி ஆசாத் எம்.பி. உண்ணாவிரதம்
- காங்கிரசின் தயவாழ் ஷாருகானால் எதையும் சாதிக்க முடியும்: சிவசேனா குற்றச்சாட்டு
- உதட்டில் "இச்" கொடுக்க வந்த நிருபர்: பளார் விட்ட ஹாலிவுட் நடிகர்
- மதுரை ஆதீன மடத்தில் ஆதீன பாதுகாப்பு குழு ஆலோசனை கூட்டம்
- தமிழகத்தையே நான்காக பிரித்து ஆண்ட கருணாநிதியின் வாரிசுகள்: ஓ.பி
| பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால்...! : கருத்து கணிப்பு முடிவு Posted: 20 May 2012 10:28 PM PDT பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால், பாரதீய ஜனதா வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. மத்தியில் ஆட்சி நடத்தி வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி, அதை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கிறது. விலைவாசி உயர்வு, ஊழல்கள், கூட்டணியில் மோதல், மூத்த தலைவர்கள் மீது செக்ஸ் புகார் இப்படி பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொண்டுள்ளது. இந்நிலையில், தற்போது மத்தியில் தேர்தல் நடந்தால் எந்த கூட்டணி வெற்றி பெறும் என்பதை அறிய, ஏ.பி.பி. நியூஸ்- ஏசி நீல்சன் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது. நாடு முழுவதும் மொத்தம் 28 நகரங்களில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது. கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ள விவரங்கள் வருமாறு:- பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பாரதீய ஜனதா ஆட்சியை பிடிக்கும். பெரிய அளவில் வெற்றி வித்தியாசம் இருக்காது. பாரதீய ஜனதாவுக்கு 28 சதவிகிதமும் காங்கிரசுக்கு 20 சதவிகிதமும் ஓட்டுக்கள் கிடைக்கும். கடந்த 2009-ல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தவர்கள் மீண்டும் அக்கட்சிக்கே வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். ஆனால், நடுநிலை வாக்காளர்களில் 31 சதவிகிதம் பேர், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலையை எடுத்துள்ளனர். அவர்களில் 12 சதவிகிதத்தினர் பாரதீய ஜனதாவுக்கு ஓட்டுப் போட தீர்மானித்துள்ளனர். அதே சமயம், கடந்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு ஓட்டுப்போட்ட நடுநிலை வாக்காளர்களில் 2 சதவிதம் பேர் மட்டுமே இந்த முறை காங்கிரசுக்கு ஓட்டுப்போட இருப்பதாக கூறியுள்ளனர். மொத்தத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 8 சதவிகிதம் ஓட்டிழப்பு ஏற்படும். ஆனால், அந்தப் பலன் முழுமையாக பாரதீய ஜனதாவுக்கு போகாது. ஒரு சதவிகிதம் மட்டுமே பாரதீய ஜனதாவுக்கு கிடைக்கும். மீதி ஓட்டுக்கள் மாநில கட்சிகளுக்கு செல்லும். பிரதமர் பதவிக்கு யார் வரவேண்டும்? என்ற கேள்விக்கு, குஜராத் முதல்- மந்திரி நரேந்திரமோடிக்கு 17 சதவிகிதம் பேரும், மன்மோகன் சிங்குக்கு 16 சதவீகிதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நடந்த கருத்துக்கணிப்பில் நரேந்திர மோடிக்கு 12 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்து இருந்தனர். கடந்த ஆண்டு சர்வேயில் மன்மோகன்சிங் 21 சதவிகிதம் ஆதரவை பெற்றிருந்தார். ராகுல் காந்திக்கு 19 சதவிகிதம் பேரும், சோனியாவுக்கு 14 சதவிகிதம் பேரும் ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தனர். தற்போதைய கருத்துக் கணிப்பில் இவர்கள் இருவரின் செல்வாக்கு குறைந்துள்ளது. ராகுலுக்கு 13 சதவிகிதம் பேரும், சோனியாவுக்கு 9 சதவிகிதம் பேரும் வாக்களித்துள்ளனர். விலை உயர்வு, ஊழல் போன்ற விஷயங்கள் காங்கிரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி உள்ளன. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், உலக அரங்கில் இந்தியாவின் மரியாதையை சீர்குலைத்து விட்டதாக 54 சதவிகிதம் பேர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த ஊழலில் ப.சிதம்பரத்துக்கு பங்கு இருக்காது என்று 10 சதவீகிதம் பேர் மட்டுமே நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இவ்வாறு கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. |
| வழக்கு எண் படத்தை பார்க்கத்தான் உயிரோடு இருந்திருக்கிறேன்! பாலுமகேந்திரா பெருமிதம்!! Posted: 20 May 2012 09:57 PM PDT தமிழ் சினிமா தற்போது மிக ஆரோக்கியமான பாதையில் பயணிக்கிறது என்றே சொல்லலாம். புதிய கதை களங்கள், யதார்த்த சினிமா என்று இயக்குநர்கள் தன்னை அடையாளப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் வெளியான வழக்கு எண் திரைப்படம், பல பாராட்டுகளை பெற்று வருகிறது. காதல் பட இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில், முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் உருவான படம் வழக்கு எண் 18/9. காதலின் வலியையும், குழந்தைகள் வளர்ப்பு பற்றி பெற்றோருக்கும் ஒரு பாடம் சொல்லி தரும் படமாக இப்படத்தை எடுத்த இயக்குநருக்கு பாராட்டுகள் குவிகின்றது. இந்நிலையில் இயக்குநர்கள் சங்கம் சார்பில் மாற்று சினிமாவிற்கான கலந்துரையாடல் என்று வழக்கு எண் 18/9 படம் பற்றி பேசப்பட்டது. இயக்குநர்கள் வசந்தபாலன், சமுத்திரகனி, ஜனநாதன், அமீர், பாக்யராஜ், பாலுமகேந்திரா, சுசீந்திரன், பாண்டியராஜ் உள்ளிட்ட பலரும், உதவி இயக்குநர்கள் மற்றும் வழக்கு எண் படக்குழுவினர் கலந்து கொண்டனர். விழாவில் பாலுமகேந்திரா தலைமை உரை ஏற்று பேசும்போது, சமீபத்தில் நான் பார்த்த படங்களில் வழக்கு எண் படம் என்னை ரொம்ப பாதித்தது. படம் பாத்து விட்டு பாலாஜியை போன் செய்து பேசினேன், நல்ல வேலை நீங்கள் இப்போது இங்கு இல்லை, இருந்திருந்தால் உங்கள் காலை தொட்டு வணங்கி இருப்பேன் என்றேன். அவ்வளவு நேர்த்தியான படம் இது. இப்படி ஒரு படத்தை பார்க்க தான் இன்னும் இந்த உயிர் இருந்திருக்கும் போல, படம் எல்லா வகையிலும் என்னை பாதித்தது. கதை, இயக்கம், நட்சத்திர தேர்வு என்று அருமையாக ஒரு சிற்பம் போல செதுக்கி இருக்கார் பாலாஜி. தமிழில் இப்படி ஒரு படம் வந்ததை கர்வமாக நினைக்கிறேன். முன்பெல்லாம் என் தனிப்பட்ட ஆர்வத்தால் இயக்குநர்கள் சங்கம் சென்று உதவி இயக்குநர்களுக்கு வகுப்பு எடுத்திருக்கேன். அப்போது பலமுறை சண்டை போட்டு வெளியே வந்திருக்கேன், இயக்குநர்கள் சங்கம் வெறும் பணம் பட்டுவாடா செய்ய மட்டும் இருக்க கூடாது. ஆரோக்கியமா ஏதும் செய்ங்க என்று சொல்வேன். இப்போது இது நடந்திருக்கிறது. இங்கு அனைவரும் வியாபாரிகள் தான். மாற்று சினிமா, மாமூல் சினிமா ரெண்டும் இருக்கு. வணிக சினிமாவுக்குள் இருந்து கொண்டே பல அற்புதங்களை நிகழ்த்தலாம். நான் எடுத்த அழியாத கோலங்கள், ஜூலி கணபதி, தனுஷ் படம் எல்லாமே இந்த ரகம் தான். எல்லோரும் ஈரானிய படங்களை பற்றி பெருமையாக பேசுகிறார்கள். ஆனால் அந்த மொழி படங்களிலும் பாட்டே இல்லாத படங்கள் நிறைய வந்திருக்கு. அதுபோன்ற பாட்டே இல்லாத படங்களை எடுக்க அந்த தெம்பும், தைரியமும் வீடு, சந்தியா ராகம் போன்ற படங்கள் பண்ணும் போது வந்தது. முதலில் சினிமாவை கற்றுக் கொள்ளுங்கள். வழக்கு எண் படத்தை டிஜிட்டல் ரூட் காமிராவில் எடுத்திருக்கிறார்கள். அடுத்து இனி டிஜிட்டல் தான் என்கிறார்கள். நாளைய சினிமா மாற்றம் இது. இப்போதும் கூட நான் சூட்டிங் போய்விட்டு தான் வரேன். முதல்ஷாட் காலை 6.30 மணிக்கு வைத்தேன். இப்ப எனக்கு ரொம்ப கர்வமாய் இருக்கு. இந்த வயசுலேயும் எனக்கு வேலை ஈஸியா முடிகிறது. எனக்கு கும்பல் வேண்டாம், கோடி வேண்டாம், வெறும் 5 பேரை என் உதவியாளர்களை வைத்து இப்போது படம் பண்ணி வருகிறேன். இங்கு திறமை இருந்தால் போதும், நல்ல சினிமா பண்ணலாம் என்று பேசியவர் படக்குழுவினரையும் பாராட்டினார். பாலுமகேந்திராவுக்கு இயக்குநர்கள் கையெழுத்திட்ட புகைப்படம் ஒன்றையும் பரிசாக வழங்கப்பட்டது. இதனை பாக்யராஜ் முன்னின்று எல்லா டைரக்டர்களும் சேர்ந்து வழங்கினர். நிகழ்ச்சியில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும் படம் பற்றியும், நடிகை ரோகிணி படத்தில் நடித்த பெண் நடிகைகள் ஆகியோரை பற்றியும் பாராட்டி பேசினார்கள். |
| போதை, குடி, கும்மாளம்: புனே வாரியர்ஸின் ராகுல் ஷர்மா, வெய்ன் பார்னல் கைது Posted: 20 May 2012 09:45 PM PDT மும்பை ஜுஹு கடற்கரை அருகே உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் நடந்த மது, போதை விருந்தில் கலந்து கொண்ட வெளிநாட்டவர்கள் உள்பட 96 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புனோ வாரியர்ஸ் அணி வீரர்கள் ராகுல் ஷர்மா மற்றும் வெய்ன் பார்னல், பிரபலங்களின் வாரிசுகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பை ஜுஹு கடற்கரை அருகே உள்ள ஓக்வுட் பிரீமியர் ஹோட்டலின் மொட்டை மாடியில் நேற்றிரவு மது, போதை விருந்து நடந்தது. அதில் வெளிநாட்டவர்கள், ஐபிஎல் வீரர்கள், பிரபலங்களின் வாரிசுகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மது அருந்தி, போதை பொருள் உட்கொண்டு கும்மாளம் போட்டனர். இது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் நேற்று இரவு 8 மணி அளவில் அந்த ஹோட்டலுக்கு சென்று அங்கு கும்மாளம் போட்ட வெளிநாட்டவர்கள் உள்பட 96 பேரை கைது செய்தனர். மேலும் புனே வாரியர்ஸ் வீரர்கள் ராகுல் ஷர்மா மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வெய்ன் பார்னல் மற்றும் பிரபலங்களின் வாரிசுகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விருந்து ஏற்பாட்டாளர் விஜய் ஹண்டாவும் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர்களின் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. கைதானவர்களில் அடையாளம் காணப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். பரிசோதனையில் அவர்கள் போதைப் பொருட்கள் உட்கொண்டது தெரிய வந்தால் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். விருந்து நடந்த இடத்தில் இருந்து கொக்கைன், எக்ஸ்டசி மற்றும் சாராஸ் ஆகிய போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான 96 பேரில் 58 ஆண்கள் மற்றும் 38 பெண்கள் அடக்கம். |
| இன்னொரு 'கண்டத்தையும்' தாண்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்...! Posted: 20 May 2012 09:31 PM PDT டோணிக்கு ஒரு ராசி உண்டு. எப்படியாவது இறுதிப் போட்டிக்கு வந்து விடும் அவரது தலைமையிலான அணி. அப்படித்தான் இப்போதும் ஐபிஎல் இறுதிச் சுற்றுக்கு அது வந்து நிற்கிறது - தட்டுத் தடுமாறி. ஆரம்பத்திலிருந்தே அபசகுணமாகத்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஐந்தாவது ஐபிஎல் பயணம் தொடங்கியது. தனது முதல் போட்டியிலேயே, அதுவும் சென்னையில் நடந்த போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸிடம் செமத்தியாக அடி வாங்கியது. இப்போது மீண்டும் மும்பை இந்தியன்ஸுடன் பிளே ஆப் போட்டியில் மோதப் போகிறது சென்னை. நான்கு ஐபிஎல் தொடர்களில் மூன்று முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஒரே அணி சென்னைதான். அதில் இரண்டு முறை கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது. அந்த இரண்டு முறையும் தொடர்ச்சியாக அது வென்றது. தற்போது நடப்புச் சாம்பியனாக உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 3வது முறையாக கோப்பையை வெல்ல இன்னும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது - டெக்கான் சார்ஜர்ஸ் நேற்று நடந்த தனது இறுதி லீக் போட்டியில் வென்றதன் மூலம். இறுதிச் சுற்றுக்கு வருவார்களா என்பதே கேள்விக்குறியாக இருந்த நிலையில், சென்னை அணி முற்றிலும் அதிர்ஷ்டத்தை நம்பியே இருந்தது. தனக்குக் கீழ் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் கண்டிப்பாக தங்களது கடைசி லீக் போட்டிகளில் தோற்றாக வேண்டும். அப்போதுதான் சென்னையால் இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை. அதுபோலவே நடந்ததால், சென்னைக்கு லக்கி பிரைஸ் அடித்து இப்போது பிளே ஆப் பிரிவுக்கு வந்து நிற்கிறது. ரன் ரேட் அடிப்படையில் தற்போது தனக்கு சமமான புள்ளிகளைப் பெற்றிருந்த பெங்களூர் அணியை பின்னுக்குத் தள்ளி விட்டு நான்காவது இடத்தைப் பிடித்து எலிமினேட்டர் பிரிவுக்கு போய் விட்டது சென்னை. இறுதிப் போட்டிக்கு முன்பு 3 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகளுக்கு குவாலிபையர் மற்றும் எலிமினேட்டர் எனப் பெயர். முதல் குவாலிபையர் போட்டியில் கொல்கத்தாவும், டெல்லியும் மோதவுள்ளன. அடுத்து நடைபெறவுள்ள எலிமினேட்டர் போட்டியில் சென்னையும், மும்பை இந்தியன்ஸும் சந்திக்கவுள்ளன. இதில் வினோதம் என்னவென்றால் முதல் குவாலிபையர் போட்டியில் வெல்லும் அணி இறுதிக்குத் தகுதி பெறும். அதேசமயம், தோற்கும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது. அதாவது எலிமினேட்டர் போட்டியில் வெல்லும் அணியுடன் அது 2வது குவாலிபையர் போட்டியில் பங்கேற்கும். அதில் வெல்லும் அணியே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் 2வது அணியாக இருக்கும். எனவே அந்த வகையில் சென்னைக்கு இன்னொரு சோதனை காத்திருக்கிறது. இந்த அணி, எலிமினேட்டர் பிரிவில் இருக்கிறது. எனவே இதில் தோற்றால் வீட்டுக்குப் போக வேண்டியதுதான். ஒரு வேளை ஜெயித்தாலும், 2வது குவாலிபையர் போட்டியிலும் அது வென்றாக வேண்டும். அப்போதுதான் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியும். எனவே சென்னை அணிக்கு இன்னும் சோதனை போகவில்லை, கண்டத்தைத் தாண்டவில்லை. இதுவரை சொதசொதப்பாக ஆடி வந்த சென்னை அணி இனியாவது விஸ்வரூபம் காட்டி விளாசித் தள்ளினால் மட்டுமே இறுதிப் போட்டிக்குப் போக முடியும். இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது சென்னை என்பதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அங்கு வர வேண்டும் என்ற பெரும் ஆவலுடன் சென்னை ரசிகர்கள் காத்துள்ளனர். |
| அரசு நேர்மையான அதிகாரிகளை பாதுகாக்க வேண்டும்: நாராயண மூர்த்தி Posted: 20 May 2012 09:02 PM PDT முறைகேடாக அரசு நிலம் ஒதுக்கியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறித்திய அரசு அதிகாரி மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி நேர்மையான அதிகாரிகளை பாதுகாப்பது அரசின் கடமை என்று தெரிவித்தார். மேலும் நேர்மையான அதிகாரிகளுக்கு அரசின் மீதும் காவல் துறையினர் மீதும் நம்பிக்கை இல்லை என்றால் அவர்கள் தங்கள் கடமையை செய்யமுடியாது என்றும் நாம் நீதியை எதிபார்க்க முடியாது என்றும் தெரிவித்தார். நிர்வாக சேவை அதிகாரி எஸ்.பி.மகந்தேஷ் (48) மர்ம நபர்களால் தாக்கப்பட்டு நேற்று மருத்துவமனையில் இறந்து விட்டார். மகந்தேஷ் மாநில கோ-ஆபரேட்டிவ் டிபார்ட்மெண்டில் ஆடிட் பிரிவில் பணியாற்றி வந்தார். தன் துறையில் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சேர்ந்து ஈடுபட்ட முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. |
| அனைவரும் ஏற்றுக்கொள்ளும் குடியரசுத்தலைவருக்கான வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்க வேண்டும்: ராஜ் நாத் சிங் Posted: 20 May 2012 08:56 PM PDT குடியரசுத்தலைவர் தேர்தல் ஜாதி, மதம் கடந்ததாக இருக்கவேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களுள் ஒருவரான ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மேலும் ஆளும் காங்கிரஸ் கட்சி அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுகொள்ளும் ஒருவரை குடியரசுத்தலைவருக்கான வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். குடியரசுத்தலைவர் பதவி என்பது அரசியல் சாசனத்தில் மிக உயர்ந்த பதவி எனவும், அதனால் குடியரசு தலைவர் தேர்தலில் ஆளும் கட்சியும் எதிர்கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் வகையில் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் எனவும், இதில் ஜாதி, மதத்திற்கு இடமில்லை எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரணாப் முகர்ஜி குடியரசுதலைவருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் ஆதரிப்பீர்களா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ராஜ் நாத் சிங் முதலில் காங்கிரஸ் தன் வேட்பாளரை அறிவிக்கட்டும் என்று கூறினார். |
| முதியோர் ஓய்வூதியம் ரூ. 200 வழங்குவது அவமானபடுத்துவதாக இருக்கிறது: ஜெய்ராம் ரமேஷ் Posted: 20 May 2012 08:38 PM PDT முதியோர்களுக்கு மாதம் 200 ரூபாய் ஓய்வுதியம் வழங்குவது என்பது அவர்களை அவமானப்படுத்தும் செயல் என விமர்சித்த கிராமப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இத்தொகையை உயர்த்தி தர வேண்டுமென பிரதமரை கேட்டுக்கொண்டார். 60 வயதிற்கு மேற்பட்ட சுமார் மூன்று கோடி ஏழை முதியோர்களுக்கு மாதம் 200 ரூபாய் ஓய்வூதியம் இந்திரா காந்தி தேசிய முதியோர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்திருந்தார். இந்நிலையில், இத்தொகை முதியோர்களை இழிவுபடுத்தும் விதமாக இருக்கிறது என்றும் இதை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென கடந்த மே 16 ம் தேதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஜெயராம் ரமேஷ் தெரிவித்திருந்தார். சில நாட்களுக்கு முன் ஓய்வூதிய திட்ட கன்வீனர் பரிஷத் பாபா அத்தவ் மற்றும் அருணா ராய் போன்றோர்களை ஜெய்ராம் ரமேஷ் சந்தித்து பேசினார். அப்போது பரிஷத் இத்திட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் என்ற வறைமுறையை நீக்க வேண்டும், 200 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும், வயது வரம்பு 60 லிருந்து ஆண்களுக்கு 55 என்றும் பெண்களுக்கு 50 என்றும் குறைக்கவேண்டும் என்கிற கருத்தை தானும் ஏற்றுகொள்வதாக தெரிவித்தார். |
| பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியாகிறது Posted: 20 May 2012 08:14 PM PDT பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 22 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இவர்களில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 6 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 7 ஆயிரத்து 969 பேர் மாணவிகள். பள்ளி மாணவ-மாணவிகளை தவிர 61,319 பேர் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதினார்கள். தேர்வு மார்ச் மாதம் 30-ந் தேதி முடிவடைந்ததை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி உடனடியாக தொடங்கியது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 40 மையங்கள் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. இந்த பணியில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டனர். மதிப்பீட்டு பணி ஏப்ரல் 30-ந் தேதி முடிவடைந்தது. பின்னர் மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு முதல் முதலாக மாணவ-மாணவிகளுக்கு போட்டோவுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, தேர்வுத்துறை மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் பணியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், பிளஸ்-2 தேர்வு முடிவு மே 22-ந் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் முடிவுகள் வெளியிடப்படுகிறது என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். தேர்வு முடிவு அரசு மற்றும் தனியார் இணையதளங்களில் தெரிந்துகொள்ள அரசு தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. முக்கிய இணையதள முகவரிகள் வருமாறு:- |
| Posted: 20 May 2012 11:31 AM PDT |
| ஐபிஎல் 5: சச்சின், ஸ்மித் அதிரடி ஆட்டம்-மும்பை 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்ற Posted: 20 May 2012 11:15 AM PDT ஐபிஎல் 5 தொடரின் நேற்றைய 2வது போட்டியில் 163 ரன்களை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, துவக்க வீரர்கள் சச்சின், ஸ்மித் ஜோடி அபார துவக்கத்தை அளித்தது. கடைசி வரை இந்த ஜோடி அபாரமாக ஆடி இருவரும் அரைசதம் கடந்து 18வது ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அபார வெற்றியை பெற்று தந்தது. ஐபிஎல் 5 தொடரின் நேற்றைய 2வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ராகுல் டிராவிட் 2வது ஓவரிலேயே 5 ரன்களை எடுத்து அவுட்டானார். மற்றொரு துவக்க வீரரான ரஹானே 13 ரன்களில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பிறகு ஷேன் வாட்சன், பின்னி ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது. இந்த நிலையில் பின்னி 17 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 30 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். அதன்பிறகு அதிரடியை தொடர்ந்த வாட்சன், 36 பந்துகளில் 2 சிக்ஸ், 4 பவுண்டரிகள் அடித்து 45 ரன்கள் எடுத்து போல்லார்டு பந்தில் வெளியேறினார். அதன்பிறகு வந்த அசோக் மெனாரியா 21 ரன்களில் குல்கர்னியின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். கடைசி ஓவரில் மலிங்கா ஒரு விக்கெட் வீழ்த்த, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்களை இழந்து 162 ரன்களை குவித்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் குல்கர்னி அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார். 162 ரன்களை எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, துவக்க வீரர்களான சச்சின், ஸ்மித் ஜோடி அபார துவக்கத்தை அளித்தது. அதன்பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சை தொடர்ந்து அடித்து விளாசினர். ஸ்மித் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். ஆனா்ல் சச்சின் துவக்கம் முதலே பொறுமையாக ஆடி அரைசதம் கடந்தார். கடைசி வரை இருவரும் அவுட்டாகாமல் ஆடி அணிக்கு 18வது ஓவரில் வெற்றியை பெற்று தந்தனர். ஸ்மித் 58 பந்துகளில் 3 சிக்ஸ், 10 பவுண்டரிகள் அடித்து 87 ரன்களை எடுத்தார். சச்சின் 51 பந்துகளில் 6 பவுண்டரிகள் அடித்து 58 ரன்கள் எடுத்தார். மும்பை இந்தியன்ஸ் ஏற்கனவே பிளே ஆப் சுற்றில் நுழைந்துவிட்டு நிலையில், இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டி வீரர்களுக்கு பயிற்சி ஆட்டம் போல இருந்தது. |
| வாக்காளர்களுக்கு பணம்: துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு: கமிஷன் Posted: 20 May 2012 09:51 AM PDT ஆந்திராவில் 18 சட்டசபை தொகுதி மற்றும் ஒரு எம்.பி. தொகுதிக்கு ஜூன் மாதம் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது. பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் இதுவரை ரூ.15 கோடி சிக்கியது. இந்த நிலையில் ஆந்திர தலைமை தேர்தல் அதிகாரி பன்வர்லால் ஐதராபாத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் பணம் பெரிதும் நடமாடுவதாக பேசப்படுகிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு பரிசு வழங்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக தனி செல்போன் நம்பர் வெளியிடப்படுகிறது. அந்த போனில் பணம் பட்டுவாடா செய்பவர்கள் பற்றி தகவல் சொல்லலாம். அல்லது எஸ்.எம்.எஸ். செய்யலாம். துப்பு கொடுப்பவர்களின் பெயர் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும். பிடிபட்ட பணத்தில் 5 சதவீதம் அல்லது ரூ.5 லட்சம் துப்பு கொடுப்பவர்களுக்கு பரிசாக வழங்கப்படும். வருமான வரித்துறையில் இந்த திட்டம் அமுலில் உள்ளது. அதே நடைமுறை தேர்தல் துறையிலும் அமல்படுத்த உள்ளோம். பணத்தை ஒழித்து ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்த முடிவு எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். |
| அனுஷ்கா கர்ப்பிணி ஆகிறார்....! Posted: 20 May 2012 09:38 AM PDT இந்தி நடிகை வித்யாபாலன் மற்ற கதாநாயகிகள் நடிக்க தயங்கும் வேடங்களில் துணிச்சலாக நடித்து புகழ் சம்பாதிக்கிறார். ' தி டர்டி பிக்சர்' படத்தில் ஆபாச கேரக்டரில் நடிக்க பல நடிகைகள் தயங்கினர். ஆனால் வித்யாபாலன் அந்த கேரக்டரில் நடித்து தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதை தட்டிச் சென்றார். அதன் பிறகுதான் மற்ற நடிகைகள் அந்த கேரக்டரில் நடிக்காமல் விட்டதற்காக மனம் வெதும்பினர். அதன்பிறகு 'கஹானி' என்னும் இந்தி படத்தில் கர்ப்பிணி வேடத்தில் வித்யாபாலன் நடித்தார். படம் முழுக்க வயிறை தள்ளிக் கொண்டு கர்ப்பிணிபோல் நடந்து சிரமப்பட்டு நடித்திருந்தார். வித்யாபாலன் நடித்த கஹானி படத்தை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்தால் வித்யாபாலனின் கர்ப்பிணி வேடத்தில் தான் நடிக்க தயாராக இருப்பதாக அனுஷ்கா கூறியிருந்தார். இந்நிலையில் தெலுங்கில் ரீமேக் ஆகும் இப்படத்தில் நடிக்க அனுஷ்காவை ஒப்பந்தம் செய்துள்ளனர். வானம் படத்தில் அனுஷ்கா விலை மாது கேரக்டரில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்தியிருந்தது. ஆகையால் இந்தப் படத்தின் கதாபாத்திரத்திற்கும் அவர் பொருத்தமாக இருப்பார் என தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. |
| ஏழை விவசாயியின் 12 வயது மகன் ஐ.ஐ.டி. தேர்வில் சாதனை Posted: 20 May 2012 09:03 AM PDT ஐ.ஐ.டி தேர்வில் 12 வயது சிறுவன் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளான். பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டம் பகோராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்நாத்சிங். ஏழை விவசாயி. இவரது மகன் சத்யம்குமார். 1999-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி பிறந்தவன். தற்போது இவனுக்கு 12 வயது முடிந்து 9 மாதங்கள் ஆகின்றன. சமீபத்தில் அகில இந்திய அளவில் நடந்த ஐ.ஐ.டி. நுழைவு தேர்வில் இவன் தேர்ச்சி பெற்று வரலாற்று சாதனை படைத்தான். அகில இந்திய அளவில் 8,137-வது 'ரேங்க்' எடுத்துள்ளான். மும்பை மண்டலத்தில் இருந்து ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் சேர தகுதி பெற்றுள்ள இவன் +2 தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறான். குழந்தை பருவத்தில் இருந்தே தனது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி வந்தான். எனவே சிறு வயதிலேயே அவன் பாட்னாவில் உள்ள சென்ட்ரல் பப்ளிக் ஸ்கூலில் 9-ம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டான். ஆனால் பண வசதி இல்லாத காரணத்தால் பாதியிலேயே படிப்பை நிறுத்தினான். அதே சமயம் ராஜஸ்தான் சென்று கோடா என்ற இடத்தில் செயல்படும் கோச்சிங் சென்டரில் சேர்ந்து படித்தான். இவனது திறமையை அறிந்த கோச்சிங் சென்டரின் இயக்குனர் ஆர்.கே. வர்மா, பண உதவி செய்தார். இதையடுத்து, அங்குள்ள பள்ளியில் மீண்டும் 9-ம் வகுப்பில் சேர்ந்தான். 10-ம் வகுப்புவரை படித்தான். பின்னர் மும்பை மண்டலத்தில் ஒரு பள்ளியில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படித்தான். பிளஸ்-2 தேர்வு எழுதிய கையோடு, ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வையும் எழுதினான். மிகவும் கடினமான இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளான். தற்போது பிளஸ்-2 தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறான். இதுபற்றி சிறுவன் சத்யம்குமார் கூறுகையில், ஐ.ஐ.டி. நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றது மகிழச்சி அளிக்கிறது. அதே நேரத்தில் அகில இந்திய அளவில் குறைவான ரேங்க் பெற்றிருப்பதால், இந்தாண்டு ஐ.ஐ.டி.யில் சேரமுடியாது. எனவே, அடுத்த ஆண்டு இதே தேர்வை மீண்டும் எழுதி நல்ல 'ரேங்க்' எடுக்க முயற்சி செய்வேன். ஒரு சாப்ட்வேர் நிறுவனம் தொடங்க திட்டமிட்டுள்ளேன் என்றான். சிறுவன் சத்யம்குமார் ஐ.ஐ.டி. நுழைவு தேர்வில் வெற்றி பெற்றதை அவனது கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். |
| ராமஜெயம் கடத்தப்பட்டது எப்போது?: கே.என்.நேருவிடம் விசாரணை Posted: 20 May 2012 08:48 AM PDT ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக அவரது சகோதரரான முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவிடம் திருச்சி போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் மீண்டும் விசாரணை நடத்தினார். நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த மார்ச் 29ம் தேதி கை, கால்களை கட்டப்பட்ட நிலையில், கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுகி கிடந்தார். அவரது உடல் திருச்சி கல்லணை ரோட்டில் பொன்னுரங்கபுரம் என்ற இடத்தில் ஒரு முட்புதரில் கிடந்தது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கொலை நடந்ததாக கூறப்பட்ட மார்ச் 29ம் தேதி காலை 11 மணிக்கு ராமஜெயத்தின் மனைவி தில்லைநகர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், அதிகாலை 5 மணியளவில் வீட்டில் இருந்து நடைபயிற்சிக்குச் சென்ற தனது கணவர் ராமஜெயம் திடீரென்று மாயமாகி விட்டதாக கூறியிருந்தார். ஆனால், அவர் கொல்லப்பட்ட நேரம் நள்ளிரவு 2 மணியளவில் இருக்கலாம் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் காலை 5 மணிக்குக் கடத்தப்பட்டவர் எப்படி முதல் நாள் நள்ளிரவில் கொலை செய்யப்பட்டிருக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை அவர் அதிகாலையில் தான் கடத்தப்பட்டார் என்று விசாரித்து வந்த போலீசார், தற்போது கிடைத்துள்ள தகவலால் குழப்பமடைந்துள்ளனர். இது குறித்து கே.என்.நேருவிடம் போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினார். நேருவிடம் ஏற்கனவே 2 முறை இந்தக் கொலை தொடர்பாக விசாரணை நடத்திய நிலையில், தற்போது மீண்டும் கமிஷனர் விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. |
| அமெரிக்காவில் அதிபர் ஒபாமாவை கொல்ல சதி: 3 பேர் கைது Posted: 20 May 2012 08:37 AM PDT ஆப்கானிஸ்தான் பிரச்சினை குறித்து விவாதிக்க அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் 2 நாள் நேட்டோ மாநாடு இன்று தொடங்குகிறது. இதில் ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய், பாகிஸ்தான் அதிபர் சர்தாரி உள்ளிட்ட 60 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். ஆப்கானிஸ்தானில் நேட்டோ ராணுவம் நீடிப்பதற்கு அமெரிக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, சிகாகோவில் நேட்டோ மாநாடு நடத்த எதிர்ப்பு கிளம்பியது. எனவே, அங்கு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடந்து வருகின்றன. இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையில் அதிபர் ஒபாமாவை கொல்ல சதி நடப்பது தெரிய வந்தது. இதையடுத்து சிகாகோவில் சதிகாரர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் ஒரு அப்பார்ட்மெண்டில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. எனவே, அங்கு முற்றுகையிட்ட போலீசார் நேட்டோ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது தேர்தல் பிரசாரத்தின்போது வாஷிங்டனில் வைத்து அதிபர் ஒபாமாவை கொல்ல சதி திட்டம் தீட்டியது தெரிய வந்தது. மேலும், சிகாகோ நகர மேயர் ரக்ம் இமானுவேல், போலீஸ் நிலையம் மற்றும் ஒபாமா பாதுகாப்பு படையினரின் கார்களில் தாக்குதல் நடத்தவும் முடிவு செய்திருந்தனர். இதற்காக இவர்கள் 3 பேரும் தீவிரவாதிகளுக்கு வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களை கைது செய்ததன் மூலம் அதிபர் ஒபாமாவை கொல்ல நடந்த சதி முறியடிக்கப்பட்டது. |
| நயன்தாராவா? த்ரிஷாவா? தப்பித்த பிரபுதேவா! Posted: 20 May 2012 08:31 AM PDT நடிகர் பிரபுதேவா இந்தியில் 'ரவுடி ரத்தோர்' என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தியில் இது தான் பிரபுதேவாவிற்கு முதல் படம். இப்போது பிரபுதேவா மும்பையிலேயே தங்க முடிவெடுத்துள்ளார். இது பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பிரபுதேவா " நான் இயக்கும் 'ரவுடி ரத்தோர்' படம் தமிழில் வெளிவந்த 'சிறுத்தை' படத்தின் ரீமேக். அந்த படத்தில் வரும் 'ஜிந்தாத்தா ஜிந்தாத்தா' பாடலுக்கு விஜய் நடமாடினால் நன்றாக இருக்கும் என விரும்பி விஜய்யை அழைத்தேன். என் அழைப்பை மறுக்காமல் வந்து விஜய் நடனமாடினார். இந்தி படத்தில் விஜய் நடிக்க விரும்பினால் அந்த படத்தை இயக்க நான் தயார். மும்பையில் வீடு பார்த்தது இனி அங்கேயே தங்கி விட முடிவு செய்ததால் தான். அடுத்தடுத்து அதிக கமிட்மெண்ட்ஸ் இருக்கிறது. தொடர்ந்து நிறைய படங்களை இயக்குகிறேன். தமிழ் படங்களை இயக்கவும் ஆர்வம் இருக்கிறது. ஆனால் அதற்கு குறைந்தது 15 வருடங்கள் ஆகும். உண்மையாகத்தான் சொல்கிறேன். தமிழுக்கு வர 15 வருடங்கள் ஆகும். ஏனென்றால் இங்கு நிறைய வேலைகள் இருக்கிறது" என்று கூறினார். அதன் பிறகு பிரபுதேவாவிடம் நயன்தாரா அளித்துள்ள ஒரு பேட்டியில், அவர் உங்களுக்கு உண்மையாக இருந்ததாகவும், நீங்கள் தான் உண்மையாக இல்லை எனவும் கூறியுள்ளாரே? த்ரிஷாவுடன் நீங்கள் நெருக்கமாக இருப்பது போல் வெளியிட்டுள்ள போட்டோ யாரையோ கஷ்டப்படுத்ததான் என்கிறார்களே? நயன்தாரா, த்ரிஷா, ஹன்ஸிகா, சோனாக்ஷி ஆகியோருடன் உங்களை இணைத்து வரும் கிசுகிசுக்களை கேட்கும் போது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? என்று கேட்டதற்கு "போது வேறு கேள்விகள் வேண்டாம்" என்று கூறிவிட்டாராம். எவ்வளவோ வற்புறுத்தி கேட்டும் கூட அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தப்பித்து சென்றுவிட்டார் பிரபுதேவா. |
| விசா மறுத்த அமெரிக்கா- வீடியோ கான்பரன்சிங்கில் பேசும் நரேந்திர மோடி Posted: 20 May 2012 08:26 AM PDT குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அமெரிக்கா மற்றும் கனடா வாழ் குஜராத்தியர்கள் மத்தியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்ற உள்ளார். குஜராத் மதக் கலவரத்தைத் தொடர்ந்து நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதில்லை என்ற முடிவில் அமெரிக்கா உறுதியாக இருந்து வருகிறது. தொடர்ந்தும் அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டையே மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க இந்திய குஜராத்திகள் அசோசியேசன் குஜராத் தினத்தையொட்டி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் குஜராத் முதல்வர் மோடி அகமதாபாத்திலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றுகிறார். அமெரிக்காவின் முக்கிய 12 நகரங்களில் இந்த உரை ஒளிபரப்பப்படுகிறது. |
| ஐபிஎல் 5: பெங்களூரை வீழ்த்தியது டெக்கான் சார்ஜர்: ஸ்பிளே ஆப் சுற்றில் சென்னை Posted: 20 May 2012 07:39 AM PDT ஐபிஎல் 5 தொடரில் இன்றைய முதல் போட்டியில் 133 ரன்களை சேஸ் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து, முடிவில் 9 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றிப் பெற்றது. இதனால் ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நுழைந்தது. ஐபிஎல் 5 தொடரில் இன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெக்கான் சாரஜ்ர்ஸ் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய டெக்கான் சார்ஜர்ஸ் அணி களமிறங்கியது. துவக்க வீரராக களமிறங்கிய ஷிகார் தவன் 5 ரன்கள் எடுத்து போல்டான நிலையில், அடுத்து வந்த அக்ஷத் ரெட்டி 7 ரன்களில் டி வில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கேமரூன் ஒயிட் 1 ரன்னில் ஏமாற்றினார். அணியின் ஸ்கோரை உயர்த்த கடுமையாக போராடிய கேப்டன் சங்கக்காரா 15 ரன்கள் எடுத்த நிலையில், முரளிதரனின் சுழலில் சிக்கினார். இந்த நிலையில் பொறுப்பாக ஆடி வந்த டுமினி, பார்த்திவ் பட்டேல் உடன் ஜோடி சேர்ந்து 43 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதன்பிறகு முரளிதரன் வீசிய 17வது ஓவரில் டுமினி 3 சிக்ஸ் அடித்து வானவேடிக்கை காட்டினர். ஆனால் 53 பந்துகளில் 5 சிக்ஸ், 4 பவுண்டரிகள் அடித்து 74 ரன்களை எட்டிய டுமினி ஜாகிர் கான் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசி ஓவரில் பார்த்திவ் பட்டேல் 16 ரன்கள் எடுத்து கிறிஸ் கெய்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த பந்தில் ஆஷிஸ் ரெட்டி 4 ரன்களில் போல்டானார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 7 விக்கெட்களை இழந்து 132 ரன்களை எடுத்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தரப்பில் வினய் குமார் 3 விக்கெட்களும், ஜாகிர் கான் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 133 ரன்களை எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு துவக்க வீரர் கிறிஸ் கெய்ல் அதிரடி துவக்கத்தை அளித்தார். 2வது ஓவரில் அதிரடியாக 2 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்த கிறிஸ் கெய்ல் 10 பந்துகளில் 27 ரன்களை குவித்து போல்டானார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடி வந்த தில்ஷன் 4 ரன்களில் எல்.பி.டபில்யூ ஆனார். 2 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய திவாரி காயம் காரணமாக ஓய்வெடுக்க சென்றார். அப்போது அமித் மிஸ்ராவின் ஓவரில் டி வில்லியர்ஸ் 4 ரன்கள் எடுத்து டுமினியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதே ஓவரில் அகர்வால் 1 ரன்னில் போல்டானார். இதனால் ஓய்விற்கு சென்ற திவாரி திரும்ப களமிறங்கினார். அதன்பிறகு விராத் கோஹ்லி, திவாரி ஜோடி சிறப்பாக ஆடி அணியை வெற்றிப் பாதையில் அழைத்து சென்றனர். இந்த நிலையில் பொறுப்பாக ஆடி 2 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்த கோஹ்லி 42 ரன்கள் எடுத்த நிலையில் கோணியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஜாகிர் கான் 4 பந்துகளை சந்தித்து டக் அவுட்டாகினார். விக்கெட்கள் ஒருபுறம் சரிந்த நிலையில் திவாரி மட்டும் பொறுப்பாக 30 ரன்கள் எட்ட, சங்கக்காராவிடம் கேட்சாகி ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட்டம் விறுவிறுப்பை எட்டியது. வினய் குமார் அதிரடியாக ஆட முயன்று அவுட்டானார். அடுத்து வந்த முரளிதரனும் அவுட்டாக, 20 ஓவர்களின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தோல்வியை தழுவியது. இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் தோல்வியை தழுவியதால், ஐபிஎல் 5 தொடரின் புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றிற்குள் சென்னை சூப்பர் கிங்ஸ் நுழைந்தது. |
| பி.ஏ. சங்மாவை ஆதரியுங்கள்: அத்வானி, பரதனுக்கு ஜெயலலிதா கோரிக்கை Posted: 20 May 2012 06:30 AM PDT குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ள மக்களவை முன்னாள் தலைவர் பிஏ.சங்மாவை ஆதரிக்குமாறு பாஜக தலைவர் அத்வானி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் பரதன், தெலுங்குதேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டுக் கொண்டார். இது குறித்து அதிமுக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மக்களவையின் முன்னாள் தலைவர் பி.ஏ. சங்மா தமிழக முதல்வர் ஜெயலலிதாவை 15.5.2012 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ள தன்னை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டதையடுத்து, பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் இதுவரை குடியரசுத் தலைவர் பதவியை வகித்ததில்லை என்பதைக் கருத்தில் கொண்டு, அவரை ஆதரிப்பதாக ஜெயலலலிதா 17.5.2012 அன்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, இவரை ஆதரிக்குமாறு அனைத்து அரசியல் கட்சியினருக்கும் 18.5.2012 அன்று வேண்டுகோள் விடுத்தார். தொலைபேசியில் லாபி சங்மா அவர்களுக்கு ஆதரவு திரட்டும் தீவிர முயற்சியின் ஒரு பகுதியாக இன்று (20.5.2012) பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் எல்.கே. அத்வானி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஏ.பி. பரதன், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், சிரோன்மணி அகாலிதள் கட்சியின் தலைவரும், பஞ்சாப் மாநில முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல் ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, மக்களவை முன்னாள் தலைவரும், வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்தவரும், பழங்குடியினத்தைச் சார்ந்தவருமான பி.ஏ. சங்மாவை நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரிக்குமாறு ஜெயலலிதா கேட்டுக் கொண்டார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| புதுக்கோட்டை தேர்தலில் காங்கிரஸ் போட்டியில்லை: ஞானதேசிகன் பேட்டி Posted: 20 May 2012 04:48 AM PDT தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் எம்.பி. சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் கூறியதாவது:- புதுக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை. இந்த தொகுதியில் எங்களது கூட்டணி கட்சியான தி.மு.க. கடந்த தேர்தலில் போட்டியிட்டது. இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை என்று தி.மு.க. அறிவித்துள்ளதால் கூட்டணி கட்சி தொகுதி என்பதால் நாங்களும் அங்கு போட்டியிடவில்லை. கே:- புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தே.மு.தி.க. தனியாக நிற்கிறதே? காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கேட்டால் ஆதரவு கொடுக்கப்படுமா? ப:- இதுகுறித்து கட்சி தலைமைதான் முடிவெடுக்க முடியும். கொள்கை ரீதியாக எடுக்க வேண்டிய முடிவு என்பதால் மேலிடத்தில் கேட்டுதான் முடிவு எடுக்க முடியும். கே:- அ.தி.மு.க.வுக்கு எதிராக புதுக்கோட்டையில் பொது வேட்பாளர் இல்லையே? ப:- அந்த சூழ்நிலை உருவாகவில்லை. நாங்கள் எடுத்துள்ள முடிவு தற்காலிக முடிவு. எங்கள் கூட்டணி கட்சியான தி.மு.க. போட்டியிட்ட தொகுதி என்பதால் நாங்கள் இப்போது அங்கு போட்டியிடவில்லை. கே:- உங்கள் கூட்டணி கட்சியான தி.மு.க. இலங்கையில் தனி ஈழம் அமைய வேண்டும் என்பதற்காக 'டெசோ' அமைப்பு ஆரம்பித்துள்ளதால் கூட்டணி உறவு பாதிக்குமா? ப:- இதனால் தி.மு.க. -காங்கிரஸ் உறவு பாதிக்காது. இலங்கை பிரச்சினையில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு அணுகுமுறையை கையாள்கிறது. இலங்கையில் தமிழ் ஈழம் கேட்பதை கைவிடவேண்டும் என்று இங்குள்ள தலைவர்களை கெஞ்சி கேட்கிறேன். ஏனென்றால் இலங்கையில் தற்போது தமிழர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வேகமாக ராஜபக்சே அரசு செய்து வருகிறது. தனி ஈழம் கோரிக்கை மீண்டும் வலுப்பெறும்போது அது தமிழர்களுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்காது என்பதுதான் எனது கருத்தாகும். தமிழர்களுக்கு பாதகமாகத்தான் இந்த கோரிக்கை அமைகிறது. கே:- சட்டமன்றத்தில் அ.தி.மு.க. ஆட்சியை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாராட்டி பேசி உள்ளார்களே? ப:- அவர்கள் எந்த பிரச்சினைக்காக பாராட்டி பேசினார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் எதிர்க்கட்சியினர் முழுமையாக பேச அங்கு அனுமதிப்பதில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச அனுமதிக்க வேண்டும். ஒரு எம்.எல்.ஏ. பேச ஆரம்பிக்கும் போதே 4 அமைச்சர்கள் குறுக்கிட்டு பேசுகிறார்கள். இது நல்ல நிர்வாகத்துக்கு இடையூறாகத்தான் அமையும். ஆட்சியின் குறைபாடு முதல்-அமைச்சருக்கு தெரியாமல் போய்விடும். குற்றம் குறைகளை அறிய முடியாது. மாவட்ட நிர்வாகங்களில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுகள் கொஞ்ச நாளாவது நீடிக்க வேண்டும். அடிக்கடி அவர்கள் மாற்றப்படுவதால் சட்டம்- ஒழுங்கை செம்மையாக கவனிக்க முடியாது. எனவே ஆளும் கட்சியின் தவறை சுட்டிக் காட்டும் வகையில் காங்கிரசார் பேசுவார்கள். தமிழ்நாட்டில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும். கே:- கூடங்குளம் அணுமின் நிலைய உற்பத்தி தமிழகத்திற்கு முழுமையாக கிடைக்க பிரதமரிடம் வலியுறுத்துவீர்களா? ப:- கூடங்குளம் அணுமின் உற்பத்தியில் 925 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு மத்திய அரசு தருவதாக ஏற்கனவே கூறி உள்ளது. மேலும் மின்சாரம் தருவது பற்றி பிரதமர் முடிவெடுப்பார். நான் தமிழகத்துக்கு மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் கிடைக்க சுசில் ஹிண்டேவிடம் பேசி உள்ளேன். வட மாநிலங்களில் உபரியாக உள்ள மின்சாரத்தை தமிழகத்துக்கு கொண்டுவர முடியாத சூழலில் மின்பாதைகள் மோசமாக உள்ளன. அவற்றை சரி செய்து தருமாறு கேட்டுள்ளேன். கே:- தமிழகத்துக்கு நிதி உதவி வழங்குவதில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாக சட்டசபையில் குற்றம்சாட்டி பேசி இருக்கிறார்களே? ப:- மத்திய அரசு தேவையான உதவிகளை தமிழகத்துக்கு வழங்கி கொண்டுதான் இருக்கிறது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது குறை சொல்லக்கூடாது. இவ்வாறு ஞானதேசிகன் எம்.பி. கூறினார். |
| ஐ.பி.எல்.போட்டிகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தி கீர்த்தி ஆசாத் எம்.பி. உண்ணாவிரதம் Posted: 20 May 2012 04:23 AM PDT தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கி வரும் ஐ.பி.எல். போட்டிகளை தடுக்க வலியுறுத்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பாஜகவின் எம்.பியுமான கீர்த்தி ஆசாத் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை டெல்லியில் இன்று தொடங்கியுள்ளார். டெல்லி பெரோஷா மைதானத்திற்கு வெளியே உண்ணாவிரதம் இருந்து கீர்த்தி ஆசாத் கூறியதாவது: ஐ.பி.எல். போட்டிகளை யார் கண்காணிப்பது...? அனைத்துமே வெளிப்படையானதாகத்தானே இருக்க வேண்டும்..விளையாட்டுப் போட்டிகளைப் பொறுத்தவரையில் அளவுக்கதிகமான அரசியல் தலையீடுகள் இருக்கின்றன.. கிரிக்கெட் என்பது இந்தியாவின் மதம். ஆனால் இந்த நாட்டுக்காக விளையாட விரும்பாமல் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட இளைஞர்கள் விரும்புகின்றபோது என்னை அது காயப்படுத்துகிறது என்றார் அவர். கீர்த்தி ஆசாத்துடன் மற்றொரு கிரிக்கெட் வீரரான விவேக் ரஸ்தானும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஸ்பாட் பிக்சிங், ஷாருக்கான் ரகளை, லூக் கைது என தொடர்ச்சியான சர்ச்சைகளால் ஐ.பி.எல்.போட்டிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வரும் நிலையில் கீர்த்தி ஆசாத் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. |
| காங்கிரசின் தயவாழ் ஷாருகானால் எதையும் சாதிக்க முடியும்: சிவசேனா குற்றச்சாட்டு Posted: 20 May 2012 04:04 AM PDT ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த அணியின் உரிமையாளரும் நடிகருமான ஷாருக்கான் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடனும், பாதுகாவலர்களுடனும், சமீபத்தில் குடிபோதையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதை அவர் மறுத்தார். ஷாருக்கானின் செயலுக்காக அதுவரை மும்பை கிரிக்கெட் சங்கம் வான்கடே மைதானத்தில் நுழைய 5 ஆண்டு தடை விதித்தது. ஷாருக்கானின் செயலுக்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே கூறியதாவது:- மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடன் ஷாருக்கான் நடந்துகொண்ட விதம் அநாகரீகமானது. இதுமாதிரிதான் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க விமான நிலையத்தில் நடந்து கொண்டார். ஷாருக்கான் மாதிரி சாதாரன குடிமகன் அப்படி செய்தால் மும்பை கிரிக்கெட் சங்கமும், கிரிக்கெட் வாரியமும் எப்படி நடந்து கொள்ளும் என்பதே எனது கேள்வி. மும்பை கிரிக்கெட் சங்கம் ஷாருக்கானுக்கு விதித்த 5 ஆண்டு தடையை ரத்து செய்து விடலாம். ஏனென்றால் அவர் டெல்லியில் செல்வாக்கு பெற்றவர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் முக்கிய பிரமுகர்களுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. காங்கிரசின் தயவில் அவரால் எதையும் சாதிக்க முடியும். அதோடு இந்திய கிரிக்கெட் வாரியத்திடமும் ஷாருக்கானுக்கு செல்வாக்கு உள்ளது. இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். |
| உதட்டில் "இச்" கொடுக்க வந்த நிருபர்: பளார் விட்ட ஹாலிவுட் நடிகர் Posted: 20 May 2012 03:35 AM PDT மென் இன் பிளாக் 3 என்ற ஹாலிவுட் படம் ரஷ்யாவில் பிரபலங்களுக்காக திரையிடப்பட்டபோது நாயகன் வில் ஸ்மித்தை உதட்டில் முத்தமிட வந்த நிருபரின் கன்னத்தில் அவர் அறைந்தார். மென் இன் பிளாக் 3 என்னும் ஹாலிவுட் படம் பிரபலங்களுக்காக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் திரையிடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த படத்தின் நாயகன் வில் ஸ்மித் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தார். அப்போது உக்ரைனைச் சேர்ந்த தொலைக்காட்சி சேனல் ஒன்றின் நிருபர் விட்டாலி செட்யுக் என்பவர் வில் ஸ்மித்தின் உதட்டில் முத்தமிட முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத ஸ்மித் நிருபரை தள்ளிவிட்டு அவர் கன்னத்தில் ஒரு அறைவிட்டார். அந்த நிருபர் பிரபலங்களை முத்தமிடும் வழக்கம் உள்ளவராம். செட்யுக் தனது உதடுகளை ஸ்மி்த்தின் உதடுகளைத் தொடும் அளவிற்கு நெருங்கி வந்ததால் தான் அவர் அறைந்துவிட்டார் என்று இந்த கூத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். நிருபரை அறைந்தாலும் ஸ்மித் எதுவும் காட்டிக்கொள்ளாமல் வழக்கம் போல் தனது ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டார், நிருபர்களுக்கு பேட்டியும் கொடுத்தார். |
| மதுரை ஆதீன மடத்தில் ஆதீன பாதுகாப்பு குழு ஆலோசனை கூட்டம் Posted: 20 May 2012 03:16 AM PDT மதுரை ஆதீன மடத்துக்கு இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள், ஆதீனங்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆதீன மீட்பு குழு என்ற பெயரில் அமைப்பு ஏற்படுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை ஆதீன பாதுகாப்பு குழு என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த அமைப்பின் முதல் ஆலோசனை கூட்டம் மதுரை ஆதீன மடத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் ஆதீன பாதுகாப்புக்குழுவில் இடம் பெற்று உள்ள பொள்ளாச்சி ஆதீனம், ஆத்ம சைதன்ய சுவாமி, இந்து தர்மா சக்தி, இந்து மக்கள் கட்சி (ஸ்ரீதர் அனுமன் சேனை) தேவர் பேரவை, அம்பேத்கார் அமைப்பு உள்பட 50 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மதுரை ஆதீன மடத்தை காப்பது, மடத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவது, மக்களிடம் ஆன்மீக சிந்தனையை எவ்வாறு பரப்புவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. |
| தமிழகத்தையே நான்காக பிரித்து ஆண்ட கருணாநிதியின் வாரிசுகள்: ஓ.பி Posted: 20 May 2012 02:59 AM PDT இலங்கை தமிழர்களுக்கு டெசோ மூலம் உதவுவதாக கருணாநிதி நாடகம் ஆடுகிறார் என்று தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். கொடைக்கானல் கே.ஆர்.ஆர். கலையரங்கம் அருகில் அதிமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொது கூட்டம் நகர் மன்றத் தலைவர் கோவிந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது, கடந்த திமுக ஆட்சியில் தமிழக மக்கள் சொல்ல முடியாத துயரத்தற்கு ஆளானார்கள். குறிப்பாக அவரது வாரிசுகள் தமிழகத்தையே 4 மாநிலமாக பிரித்து ஆட்சி செய்தனர். இதற்கு முடிவு கட்டவே தமிழக மக்கள் ஜெயலலிதாவை முதல்வர் என்ற அரியணையில் அமர வைத்தனர். கடந்த ஓராண்டு காலமாக அதிமுக அரசின் பல்வேறு சாதனைகள் தமிழகத்தின் பல்வேறு துறைகளிலும் வெற்றிக்கொடி கட்டி பறக்கின்றது. எதிர்காலத்தினரும் பயன்பெறும் வகையில் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஜெயலலிதாவின் சிறப்பான நிர்வாகத் திறமையே காரணம். ஜெயலலிதா அறிவித்துள்ள 2023ம் ஆண்டு தொலைநோக்கு திட்டம் என்ற திட்டத்தின் மூலம் தமிழகம் ஆசியாவிலேயே முதல் 3 இடத்தில் வரும். மத்திய அரசு தமிழகத்திற்கு எந்தவித நிதியுதவியும் செய்யாத போதிலும் தமிழகத்தை முன்னேறிய மாநிலமாக்க ஜெயலலிதா பாடுபட்டு வருகிறார். இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது மத்திய அரசும், அப்போதைய முதல்வர் கருணாநிதியும் எதுவும் செய்யவில்லை. ஆனால் இன்று தனி ஈழம் அமைக்கப் போவதாக டெசோ என்ற அமைப்பை உருவாக்கி கருணாநிதி நாடகமாடி வருகிறார். இந்தியாவில் இருந்து தான் இலங்கைக்கு ஆயுதங்கள் சென்றன. ராணுவ வீரர்கள் சென்றனர். இலங்கையில் ஒரே இடத்தில் 45,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதை எதிர்த்து குரல் கொடுத்ததோடு மட்டும் அல்லாது சட்டசபையில் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே. 23 ஆண்டுகளாக தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. சுதந்திரம் அடைந்த பின்பு வேறு எந்த கட்சிக்கும் கிடைக்காத அறிய சாதனையாகும். அதே போல் 1.50 கோடி உறுப்பினர்களைக் கொண்ட மாபெரும் இயக்கம் அதிமுக மட்டுமே. இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றார். |
| You are subscribed to email updates from விழியே பேசு... To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |























