Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





விழியே பேசு...

விழியே பேசு...


லண்டன் நாடாளுமன்றத்தில் படப்பிடிப்பு நடத்திய ஷங்கரின் வலது கரம்

Posted: 17 May 2012 09:54 PM PDT


வசூல் இயக்குநர் என்று கோடம்பாக்கத்தால் பாராட்டப்படும் இயக்குநர் ஷங்கரே, எனது வலது கரம் மாதேஷ் தான் என்று ஒரு காலத்தில் இயக்குநர் மாதேஷை பாராட்டினார். அந்த அளவுக்கு விறுவிறுப்பான காட்சிகள் அமைப்பதில் திறமை வாய்ந்த மாதேஷ், இயக்கும் படம் தான் 'மிரட்டல்'

தலைப்பில் மட்டும் இன்றி படத்தில் இடம்பெறும் பல காட்சிகளை மிரட்டும் அளவுக்குதான் படமாக்கியிருக்கிறார். அதேபோல இதுவரை எந்த சினிமாவிலும் இடம்பெறாத லோக்கேஷன்களையும் இப்படத்திற்காக தேடி பிடித்திருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் லண்டன் பார்லிமென்ட். இங்கு இதுவரை எந்த படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றதில்லையாம். அத்துடன் நடிகர் சிவாஜி வீட்டிலும் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார் மாதேஷ்.

அசல் படத்தில் சிவாஜி சார் வீட்டின் வெளிப்புறத்தை காட்டியிருப்பாங்க. நான் வீட்டிற்குள் எடுக்கணும்னு நினைச்சேன். பிரபு சாரிடம் தயங்கி தயங்கி கேட்டேன். அவர் எடுத்துக்கோங்க என்று கூறிவிட்டார். என்ற மாதேஷ், "இப்படத்திற்காக ஹீரோயினின் தேதி அதிக அளவில் தேவைப்பட்டது. அதனால் தான் புதுமுகத்தை தேடினேன். அப்போதுதான் ஷர்மிளா, புகைப்படத்தைப் பார்த்தேன். திருப்தியாக இருந்தது. இரண்டு பயிற்சி கொடுத்து அதை செஞ்சிட்டு வாம்மா என்று அனுப்பினேன். திரும்பி வரமாட்டாரு என்று தான் நினைத்தேன். ஆனால், ஒரு மாதம் கழித்து வந்து நான் சொன்னதை அப்படியே செய்தார். இந்த படத்திற்காக அவர் இரண்டு வருடங்கள் காத்திருந்தார்.

ஹீரோவும் அதேபோலதான். இமேஜ் இல்லாத ஒரு ஆளாக இருக்கனும் என்று நினைத்தேன். சட்டென்று என் மனதுக்குள் வினய் வந்தார். அவர் இதுவரை ரொமண்ட்டிக்கான ஹீரோவாகத்தான் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவரை அப்படியே மாற்றியிருக்கிறேன். அவருடைய தோற்றத்தையே முழுமையாக மாற்றி ஒரு ஆக்ஷன் ஹீரோவாக இப்படத்தில் அவர் அறிமுகமாகிறார்." என்று கூறினார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் சென்னை, பிரசாத் லேப்பில் வெளியிடப்பட்டது. இதில் திரையிடப்பட்ட இரண்டு பாடல்களும், டிரைலரும் உண்மையில் மிரட்டலாக தான் இருந்தது.

வினயின் ஆக்ஷன் ஓகே தான் என்றாலும், பிரவின் மணியின் அதிரடியான இசைக்கு ஷர்மிளாவின் ஆட்டம் தான் கொஞ்சம் சுமார்.

ஹீரோயினுக்கு நடிப்பு, தமிழ் போன்ற பயிற்சிகளை கொடுத்த மாதேஷ், அப்படியே நடன பயிற்சியையும் கொஞ்சம் கொடுத்திருக்கலாம்.



இணையதள கட்டுப்பாடு விதிகளுக்கு மாநிலங்களவையில் எதிர்ப்பு

Posted: 17 May 2012 09:19 PM PDT



இணையதள தகவல்கள் தொடர் பான அரசின் கட்டுப் பாட்டு விதிகளை ரத்து செய்யக்கோரி மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் ராஜீவி தீர்மானம் கொண்டு வந்தார். பிரபல இணையதளங்களில் முக்கிய தலைவர்கள் பற்றி சர்ச்சைக்குரிய தகவல்கள் இடம்பெற்றதற்கு இந்தியா அரசு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இணையதள தகவல்களை கட்டுப்படுத்த தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் புதிய விதிமுறைகள்(2011) சேர்க்கப்பட்டன. இந்த விதிமுறை அரசு கெஜட்டில் கடந்த மாதம் 13ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த விதிமுறையின் படி, அவதூறு, ஆபாச, கண்டனத்துக்குரிய, சட்டவிரோதமான, மைனர்களை பாதிக்கும் தகவல்களை, ஒருவரின் தனிப்பட்ட விஷயங்கள் ஆகியவை இணையதளங்கள் வெளியிடக் கூடாது. 

இந்நிலையில் இணையதளங்களை கட்டுப்படுத்தும் அரசின் விதிமுறைக்கு மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கட்சி நேற்று எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விதிமுறைகளை நீக்கக்கோரி மார்க்சிஸ்ட் உறுப்பினர் ராஜீவி தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது: இணையதளங்களை கட்டுப்படுத்தும் தகவல் தொழில்நுட்ப சட்டம், பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. இயற்கை நீதிக்கு எதிரானது. எனவே இணையதளங்களை கட்டுப்படுத்தும் அரசின் விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு ராஜீவி பேசினார்.

இது குறித்து மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் அருண் ஜேட்லி பேசுகையில், ''தகவல்களை தடுத்து நிறுத்தும் காலம் எல்லாம் போய்விட்டது. இணையதளத்தில் தகவல்களை கட்டுப்படுத்துவது மிகவும் கஷ்டம். 1970ம் ஆண்டுகளில் இணையதளம் இருந்திருந்தால், அவசரநிலை பிரகடனம் தோல்வியில் முடிந்திருக்கும்.

அதே நேரத்தில் இணையதளத்தில் வெளியாகும் வெறுப்பு பேச்சுக்கள், கலவரத்தை தூண்டும் அபாயம் உள்ளது. இது குறித்து, அரசு பரிசீலனை செய்ய வேண்டும்'' என்றார்.
இதற்கு பதில் அளித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபல், ''இணையதளங்களின் தணிக்கை, ஒழுங்குமுறை போன்றவற்றில் அரசுக்கு நம்பிக்கை இல்லை. சம்பந்தப்பட்ட குழுவின ரின் ஆலோசனை, அனுமதி பெற்றபின்பே இந்த விதிமுறை கொண்டுவரப்பட்டது'' என்றார்.

1970ம் ஆண்டுகளில் இணையதளம் இருந்திருந்தால், அவசரநிலை பிரகடனம் தோல்வியில் முடிந்திருக்கும்




மேடம்.. பேச்சைக் குறைங்க முதல்ல....:காங்கிரஸ் அட்வைஸ்

Posted: 17 May 2012 09:05 PM PDT


மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தமது பேச்சைக் குறைத்துவிட்டு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தியுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக மமதா பானர்ஜி பொறுப்பேற்று ஓராண்டாவதையொட்டி செய்தியாளர்களின் கேள்விக்கு செய்தியாளர்களிடம் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் கூறியதாவது:

மேற்குவங்க மாநிலத்தில் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது. மாநிலத்தில் பல திட்டங்களை அவர் அறிவித்திருந்தார். ஆனால் அந்தத் திட்டங்கள் எதுவுமே நடைமுறைக்கு வந்த மாதிரி தெரியவில்லை.

இதனால் மமதா பானர்ஜி பேச்சைக் குறைத்துக் கொண்டு நடவடிக்கைகளை செயலில் காட்ட வேண்டும் என்றார் அவர்.

காங்கிரஸ் எம்.பி.யின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ககோலி கோஷ், தேர்தலின் போது தங்களால் எதையுமே சாதிக்க முடியாதவர்கள் எல்லாம் இப்படிப் பேசுகின்றனர் என்றார் அவர்.



திருமணத்திற்குப் பிறகு சினேகா-பிரசன்னா ஜோடி கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி

Posted: 17 May 2012 08:48 PM PDT



காதல் ஜோடிகளாக வலம் வந்த சினேகா-பிரசன்னா ஜோடி இப்போது தம்பதி ஜோடியாகியிருக்கிறார்கள். திருமணம் முடிந்த கையோடு குலதெய்வ கோயிலுக்குச் சென்று வந்த இந்த தம்பதிகள் பிறகு கலந்துகொண்ட நிகழ்ச்சி நடிகர் யுவா திருமண வரவேற்பு நிகழ்ச்சி.

இயக்குநர் சரண், வினயை ஹீரோவாக வைத்து இயக்கிய 'மோதி விளையாடு' படத்தில் கலாபவன் மணியின் மகனாக நடித்தவர் தான் இந்த யுவா. இவருக்கும் சென்னையைச் சார்ந்த பாரதிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மே 13ஆம் தேதியன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நடிகர்கள் ரிச்சர்ட், சிபிராஜ், பிரேம்ஜி, நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான திரைநட்சத்திரங்கள் கலந்துகொள்ள, அந்த நிகழ்ச்சியை பரபரப்பாக்கியது சினேகா-பிரசன்னா தம்பதி ஜோடி தான். அதுமட்டும் இன்றி சினேகாவின் மொத்த குடும்பமும் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை கோலாகலமாக்கியது



இப்படியெல்லாமா ரயில் பயணிகளை மோசடி செய்வது?

Posted: 17 May 2012 08:46 PM PDT


சென்னை அண்ணா சாலையில் அமெரிக்க தூதரக நேர்காணலுக்கு செல்வதற்காக முதல்நாள் இரவே நடுத்தெருவில் படுத்துறங்கிய பட்டதாரிகள் பலரும் உண்டு.. இப்படி இடம்பிடித்து தங்களது வாழ்க்கைத் தொடங்கிய தொழிலதிபர்களும்கூட நம்மில் உண்டு... காலம் மாறிப்போய்விட்ட காலத்திலும் தட்கல் ரயில் டிக்கெட் எடுக்கவும் இப்படி ஒரு நிலைமை உருவாகிக் கிடக்கிறது..ஆனால் இங்கே புரோக்கர்களாக செயல்படுவது பயணிகளுக்கு பாதுகாப்பு தர வேண்டிய ரயில்வே பாதுகாப்புப் படையினர்தான் என்பது கொடுமையிலும் கொடுமை!

எப்படி நடக்கிறது?

ரயில்வே பாதுகாப்புப் படையினர் ரொம்பவும் நல்லவர்கள் போல முதல் நாள் இரவே வந்து முகாமிட்டுவிடும் பயணிகளிடம் ஒரு தாளில் பெயரை எழுதச் சொல்லிவிடுகின்றனர். இப்படித்தான் ரூபன் என்கிற பயணியும் நேற்று தாம்பரம் ரயில் நிலையம் சென்று பாதுகாப்புப் படையினர் கொடுத்த தாளில் பெயரைப் பதிவு செய்தார். அவரது பெயர் 6-வது இடத்தில் இருந்தது.

பின்னர் அங்கேயே காத்திருக்கவும் செய்தார். அப்போது இரவு நேரத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் மளமளவென்று ரூபனின் பதிவு செய்திருந்த தாளில் மேலிருந்து கீழாக 10-15 பேரை எழுதத் தொடங்கிவிட்டனர். அவர்கள் யார் என்று பாதுகாப்புப் படையினர் கேட்க ரயில் நிலையத்தில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்கள் பலரையும் அழைத்து வந்து இவர்கள்தான் என்று கூறியிருக்கின்றனர்.

அப்போதுதான் ரூபனுக்கு விஷயமே புரிந்திருக்கிறது.. தட்கல் டிக்கெட்டுகளை கவுண்ட்டரில் இருந்து ரயில்வே பாதுகாப்புப் படையினரே ஒட்டுமொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு தரகு வேலை பார்க்கின்றனர். கிடைக்கும் பணத்தை அனைவரும் பங்கு போட்டுக் கொள்கின்றனர்..

இதை ரூபனும் மற்றவர்களும் தட்டிக் கேட்க.. சென்ட்ரல் கவர்மெண்ட் ஸ்டாப்.. எங்களையே தட்டிக் கேட்கிறீங்களா? ஆள் மாறாட்ட டிக்கெட் வாங்கின குற்றத்துக்கு ஜெயிலுக்குப் போங்கள் என்று தாக்கி இழுத்துச் சென்றிருக்கின்றனர்.

பயணிகளைப் பாதுகாக்க வேண்டிய கடமைக்குரிய மனிதர்களே புரோக்கர்களாக மாறிப்போன கொடுமைக்கு முடிவில்லையோ?



‘ராட்டினம்’ படத்துக்கு வரிவிலகளிக்க திரையுலக பிரபலங்கள் வேண்டுகோள்

Posted: 17 May 2012 08:42 PM PDT


புதுமுகங்கள் நடிக்கும் 'ராட்டினம்' படத்தின் பிரத்யேக காட்சி இன்று பழம்பெரும் நடிகர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இதில், சினிமாத் துறையைச் சார்ந்த பழம்பெரும் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, நடிகர் வி.எஸ்.ராகவன், நடிகை ராஜ சுலோச்சனா, நடிகர் செந்தில் ஆகியோர் பார்த்தனர்.

படம் பார்த்துவிட்டு அவர்கள் கூறுகையில்,

படம் மிகவும் நன்றாக இருந்தது. படத்தின் திரைக்கதையில் வேகமும், விறுவிறுப்பும் கூட்டியிருக்கிறார் இயக்குனர். புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் யதார்த்தமான கதையை ஆபாசம் இல்லாமல் சொல்லியிருப்பதற்காக இயக்குனருக்கு எங்களது பாராட்டுக்கள்.

இதுபோன்ற தரமான படங்களுக்கு தமிழக அரசு கட்டாயம் வரிவிலக்கு அளிக்க வேண்டும். வரிவிலக்கு அளிக்கும் பட்சத்தில் இதுபோன்ற நல்ல கருத்துக்களைக் கொண்ட திரைப்படங்கள் எடுக்க இயக்குனர்களும், அவர்களுக்கு உறுதுணையாக தயாரிப்பாளர்களும் முன்வருவார்கள்.

இதனால் தமிழக அரசு இப்படத்துக்கு வரி விலக்கு அளித்து தமிழ் சினிமாவை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்



முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

Posted: 17 May 2012 08:25 PM PDT

முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு உள்ளிட்ட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வத்தலக்குண்டு அருகே உள்ள ஐ.பெரியசாமிக்கு சொந்தமாக நூற்பாலையிலும் சோதனை நடந்து வருகிறது. 

ரவுண்ட் ரோட்டில் உள்ள ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா வீட்டிலும், திண்டுக்கல் பாண்டி நகரில் உள்ள மகன் செந்தில் வீட்டிலும் இந்த சோதனை நடந்து வருகிறது. திண்டுக்கல் அசோக்நகரில் உள்ள ஐ.பெரியசாமி வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. தற்போது ஐ.பெரியசாமி திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வாக உள்ளார்.







பணக்காரர்களுக்கும் நடிகை, நடிகர்களுக்கும் முக்கியத்துவம்

Posted: 17 May 2012 08:20 PM PDT


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணக்காரர்களுக்கும், நடிகை, நடிகர்களுக்கும் தான் தேவஸ்தானம் முக்கியத்துவம் அளிக்கிறது என பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி கடந்த வாரம் வந்தார். அங்குள்ள ஸ்ரீகிருஷ்ணா விடுதியில் தங்கினார். இவரை ஏழுமலையான் கோயில் பிரதான அர்ச்சகராக உள்ள ரமண தீட்சிதர் நேரில் சென்று பிரசாதம் வழங்கி ஆசிர்வாதம் செய்தாராம். இதுகுறித்து தகவல் அறிந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கூறுகையில், சாதாரண ஏழை மக்களை தேவஸ்தானம் கண்டுகொள்ளவில்லை. ஆனால் கோடீஸ்வரான ஆனந்த் அம்பானி யை நேரில் சென்று சந்தித்து பிரதான அர்ச்சகர் பிரசாதம் வழங்கி உள்ளார். தொழில் அதிபர்களுக்கும், நடிகை, நடிகர்களுக்கும் தான் தேவஸ்தானம் மரியாதை கொடுக்கிறது. சாதாரண மக்களை கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து தலைமை செயல் அலுவலர் எல்.வி. சுப்பிரமணி கூறியதாவது: தேவஸ்தான பணியாளர்கள், கீழ்மட்டம் முதல் பிரதான அர்ச்சகர் வரை கோயில் புனித தன்மையை காப்பாற்றுவதில் அக்கறையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும். பிரதான அர்ச்சகரின் இதுபோன்ற நடவடிக்கை தவறானது.  மேலும் தேவஸ்தானம் அவரை அர்ச்சகராக நியமிக்கவில்லை. அவர் பரம்பரையான மிராசு முறைப் படி அர்ச்சகராக இருந்து வருகிறார். மிராசு முறை நியமனம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டது. ஆனால் ஒய்எஸ்ஆர் முதல்வராக இருந்தபோது மீண்டும் மிராசு முறை கொண்டு வரப்பட்டது. அதன்படி ரமண தீட்சிதர் பணி செய்து வருகிறார். பரம்பரை நியமனம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இதனால் அவர் மீது நாங்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது.  இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமலிருக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரமண தீட்சிதர் அம்பானி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆசி வழங்கியுள்ளார். அப்போது இருந்த தலைமை செயல் அலுவலர் கிருஷ்ணாராவ், ரமண தீட்சிதருக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.
இப்பிரச்னை குறித்து ரமண தீட்சிதர் கூறுகையில், எனது தந்தை காலத்தில் இருந்தே அம்பானி குடும்பத்தினருடன் நட்பு உள்ளதால், நான் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து வாழ்த்தி வந்தேன் என்றார்.



காதல் இல்லாத ஒரு காதலை சொல்லும் படம்

Posted: 17 May 2012 08:18 PM PDT


சின்சியர் கிரியேஷன் சார்பில் ராஜேஷ்ராகவ், நாசர், ரஷீது ஆகியோர் தயாரிக்கும் புதிய படம் நாடோ டிக் கூட்டம்.

எப்படியாவது வாழ வேண்டும்; வழியா இல்லை உலகில்; என்று வறுமையின் விளிம்பில் உள்ளவர்கள் பிழைப்புத் தேடி வெவ்வேறு ஊர்களிலிருந்து செல்வ செழிப்புள்ள ஒரு ஊருக்கு வருகிறார்கள். இதில் நாட்டு மருந்து விற்பவருக்கும், முத்து மாலை செய்து விற்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள நட்பை காதல் என்று கொளுத்தி விடுகிறார்கள் அந்த ஊர் மக்கள். இப்படி காதலிக்காத காதல் கதையையும், பிழைப்புக்காக ஊர் ஊராக திரியும் மக்களின் வாழ்வியலையும் சொல்லும் கதைதான் 'நாடோ டிக் கூட்டம்'.

இப்படத்தில் பிரினு, திலோத்தம்மாள் நாயகன், நாயகியாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் கஸ்தூரி, கீதா, பாலாசிங், முத்துக்காளை, கிரேன் மனோகர், சலீல் சாகுல் ஆகியோர் நடிக்கிறார்கள்.



இலங்கையில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு மிரட்டல் கடிதம்

Posted: 17 May 2012 08:59 PM PDT


இலங்கையின் புனித தளமான தம்புள்ளை பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களை, உடனடியாக வெளியேற சொல்லி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சிங்கள மற்றும் புத்த நாட்டுப் பற்றாளர்கள் என்று குறிப்பிடப்பட்டு அனுப்பபட்டுள்ள மிரட்டல் கடிதத்தில், தம்புள்ளை பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களை கடுமையாக சாடி உடனடியாக அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு: இலங்கையில் தம்புள்ளை புனித பிரதேசத்திலிருந்து அங்கு வசித்துவரும் முஸ்லிம்கள்  உடனடியாக வெளியேறுமாறு தபால் மூலம் கடிதங்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மூன்று பக்கங்களைக் கொண்ட அந்த கடிதத்தில், அனுப்புபவர் பெயர் குறிப்பிடப்படப்படாமல் சிங்கள, புத்த நாட்டுப்பற்றாளர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முஸ்லிம்களை ஆவேசமூட்டும் வகையிலும், அவர்களது சகவாழ்வை விமர்சித்தும் அந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் தம்புள்ளை பிரதேச அரசியல்வாதியான அமைச்சர் ஜனக பண்டாரவின் பெயரும் சேர்க்கப்பட்டு, அவர் முஸ்லிம்களுக்கு புத்த தனித்துவத்தை காட்டிக் கொடுத்துள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



நாசரின் தம்பி நடிக்கும் 'பானு'

Posted: 17 May 2012 07:48 PM PDT


இந்து வாலிபனுக்கும், முஸ்லிம் பெண்ணுக்கும் நடக்கும் காதல் போராட்டத்தை உணர்த்தும் வகையில் உருவாகியிருக்கும் படம் 'பானு'. பசவா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், நடிகர் நாசரின் தம்பி ஜவஹர், ஹீரோயினின் தந்தையாக, இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்தவராக நடித்திருக்கிறார்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஜி.வி.சீனு இயக்குகிறார். திரைப்பட கல்லூரி மாணவரான இவர் இப்படத்தை இயக்குவதோடு இதில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராகவும் நடிக்கிறார். மற்றொரு ஹீரோவாக ராஜ் அறிமுகமாகிறார். ஹீரோயினாக ஐஸ்வர்யா சந்த் நடிக்கிறார். இவர் ஏற்கனவே 'முதன் முதலாய்', 'வைதேகி' ஆகியப் படங்களில் நடித்திருக்கிறார். இவர்களுடன் கவிப்ரியா, நதிஷா மற்றும் கலைஞர் டிவி புகழ் காமெடி தினேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு ராஜ் இசையமைக்க, ஜி.வி.சீனு, புரட்சிகனல் ஆகியோர் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு ஏ.கே.அப்துல் ரகுமான், படத்தொகுப்பு ராஜ்கீர்த்தி, தயாரிப்பு ஜி.பசவம்மாள், வி.தர்ஷத்குமார்.

மும்பை மற்றும் சென்னையில் படமாக்கப்படவுள்ள இப்படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.



ஆருஷி கொலை வழக்கு பெண் போலீஸ் சிரிப்பு நீதிபதி கடும் கோபம்

Posted: 17 May 2012 07:31 PM PDT


ஆருஷி கொலை வழக்கு விசாரணையின் போது பெண் போலீஸ் ஒருவர் தொடர்ந்து சிரித்து கொண்டேஇருந்ததால் நீதிபதி கடும் கோபம் அடைந்து. அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார். ஆருஷி கொலை வழக்கு விசாரணை, காஜியாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நீதிபதி ஷியாம் லால் முன் விசாரணை நடந்து கொண்டிருந்தது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆருஷி தாய் நுபுரை நீதிமன்றத்தக்கு போலீசார் அழைத்து வந்திருந்தனர். அவருக்கு பாதுகாப்பாக பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நரேந்திரி தேவி வந்திருந்தார். விசாரணையின் போது நுபுர் அருகே அமர்ந்திருந்த நரேந்திரி தேவி, விசாரணையை கவனிக்காமல் தொடர்ந்து சிரித்து கொண்டே இருந்தார். இதை பார்த்த நீதிபதி ஷியாம் லால் மிகவும் கோபம் அடைந்தார்.

விசாரணை முடிந்தபின், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளருக்கு நீதிபதி ஷியாம்லால் எழுதிய கடிதத்தில், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட நரேந்திரி தேவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது பற்றிய விவரத்தை ஒரு வாரத்துக்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.



ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்: அடுத்த வாரம் ஆட்டத்தை துவக்குகிறது காங்கிரஸ்

Posted: 17 May 2012 07:15 PM PDT


ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, அடுத்த வாரம் டில்லியில் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தரவுள்ள விருந்துக்கு பிறகு தான், ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு, முக்கிய தலைவர்களுடன் இறுதி சுற்றுப் பேச்சுவார்த்தையை, சோனியாவே நடத்துவார் என, காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.

இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடருக்காக கடந்த மார்ச் 12ம் தேதி, பார்லிமென்ட் கூடி மார்ச் 30ம் தேதி வரை நடைபெற்றது. பின்னர் சிறிய இடைவெளிக்கு பிறகு, கடந்த ஏப்ரல் 24ம் தேதி ஆரம்பித்து தற்போது நடைபெற்று வருகிறது. பட்ஜெட், மானியக் கோரிக்கைகள், நிதி மசோதா நிறைவேற்றங்கள் என, எல்லா முக்கிய அலுவல்களும் முடிந்துவிட்ட நிலையில், அடுத்த வாரம் செவ்வாய் கிழமையோடு பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடையவுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரை முடித்த கையோடு ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்ட, காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.


விருந்து: 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இரண்டாம் முறையாக மன்மோகன் சிங் தலைமையில் பதவியேற்று வரும் 22ம் தேதியுடன் மூன்றாண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி, கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தனது இல்லத்தில் வைத்து விருந்து அளிக்கவுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா உட்பட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும், இந்த விருந்து நிகழ்ச்சி மிகுந்த முக்கியத்துவத்தை பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் இருந்து தான், ஜனாதிபதி தேர்தலுக்கான தனது நிஜ ஆட்டத்தை காங்கிரஸ் துவக்கவுள்ளது.


வேறு பெயர் இல்லை: 

காங்கிரஸ் சார்பில் இதுவரை எந்த ஒரு பெயரையும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், பிரணாப் முகர்ஜி, ஹமீத் அன்சாரி ஆகியோரின் பெயர்களே முன்னிலையில் இருக்கின்றன. ஊடகங்களில் அடிபடும் இந்த பெயர்களை காங்கிரஸ் ஒப்புக் கொள்ளவோ, மறுக்கவோ செய்யாமல், வெறுமனே ஆழம் பார்த்து வருகிறது. இந்நிலையில், இவர்களைத் தவிர வேறு பெயர்கள் எதுவும் காங்கிரஸ் தரப்பில் இல்லையெனத் தெரிகிறது. காங்கிரஸ் யாரை நிறுத்தினாலும், அந்த நபரை மம்தா பானர்ஜி, முலாயம் சிங், மாயாவதி என, அரசை ஆதரவு தரும் முக்கிய கட்சிகள் ஆதரிக்கும் சூழலே உள்ளது.


நேரடியாக பேச்சு: 

எனவே, ஏற்கனவே ஊடகங்களில் அடிபடும் பெயர்களைத் தவிர, புதிதாக வேறு யாராவது ஒருவர் முன் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. ஏற்கனவே அரசை ஆதரிக்கும் குட்டிக் கட்சிகளின் தலைவர்கள், சுயேச்சைகள் ஆகியோரை வரவழைத்து நேரடியாக பேசி, ஆதரவை சோனியா கேட்டு முடித்து விட்டார். தி.மு.க., திரிணமுல் போன்ற கூட்டணிக் கட்சிகளிடம் பிரதிநிதிகளை அனுப்பி வெள்ளோட்டப் பேச்சை முடித்துள்ள நிலையில், அந்த தலைவர்களிடம் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையை நேரடியாக சோனியாவே நடத்தவும் திட்டமிட்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தைகள் அனேகமாக இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்திலோ நடக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கருணாநிதி வருவாரா? 

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில், கூட்டணிக் கட்சிகளான தி.மு.க., திரிணமுல் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர்கள் பங்கேற்பர். இம்முறை ஜனாதிபதி தேர்தலும் சேர்ந்து கொண்டுள்ளதால், அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் முலாயம் சிங், மாயாவதி ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தவிர, இந்த விருந்து நிகழ்ச்சிக்காக தி.மு.க., தலைவர் கருணாநிதி டில்லி வரும் வாய்ப்பையும் மறுப்பதற்கில்லை. உடல்நிலை ஒத்துழைத்தால், அவரது டில்லி விஜயம் சாத்தியமே. தவிர ஜாமினில் வெளிவந்துள்ள ராஜாவை சென்னைக்கு செல்லக்கூடாது என்ற உத்தரவு இருப்பதால், இந்த விருந்து சந்தர்ப்பத்தை வைத்து கருணாநிதி, டில்லி வந்து ராஜாவை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.



மண முறிவிற்கு பிறகும் கணவனின் சொத்தில் மனைவிக்கு பங்கு

Posted: 17 May 2012 07:07 PM PDT


மண முறிவு என்பது பெண்களுக்கு சாதகமானதாக இருக்க வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கைக்கிடையில், ராஜ்ய சபாவில் மற்றொரு மசோதா ராஜ்ய சபாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
 
அம்மசோதாவின்படி டைவர்ஸ் ஆன பிறகும் கணவனின் அசையா சொத்தில் பங்கு உண்டு என்று தெரிவிக்கின்றன.
 
 'டைவர்ஸ்' ஆவதற்கு முன் உள்ள ஆறு மாத கால அவகாசத்தை அம்மசோதாவிலிருந்து நீக்கவில்ல என்றும்,  'டைவர்ஸ்' கோரி விண்ணப்பிக்கும் போது இரு தரப்பினரும் சேர்ந்து தாக்கல் செய்ய வேண்டும் அம்மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது.
 
ஒரு வேளை கணவன் மனைவி பிரிய நேரிட்டால் கணவனின் அசையா சொத்தில் இருந்து மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் பங்கு வழங்கவேண்டும் என அம்மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இம்மசோதா குறித்தான உறுப்பினர்களின் கருத்துக்களை தெரிந்த பின் மே 2 ம் தேதி பதிலளிக்கப்படும் எனவும் வேண்டுமென்றால் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.



இன்றைய செய்திகள் (17-05-2012)

Posted: 17 May 2012 10:50 AM PDT





ராம்தேவ் அறக்கட்டளைக்கு வருமான வரித்துறை நோட்டீசு


































ராம்தேவ் அறக்கட்டளைக்கு வருமான வரித்துறை நோட்டீசு

Posted: 17 May 2012 10:32 AM PDT


யோகா குரு பாபா ராம்தேவ் ஹரித்துவாரை தலைமையிடமாக கொண்டு 4 அறக்கட்டளைகளை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளைகள் மூலம் அவர் ஆயுர்வேத மருந்துகள் தயாரித்து நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறார்.
 
அவரது அறக்கட்டளைக்கு இதுவரை வருமான வரிச்சலுகை அளிக்கப்பட்டு இருந்தது. இப்போது அந்த சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சிறப்பு தணிக்கை நடத்தியது.
 
இந்தநிலையில் அவரது 4 அறக்கட்டளைகளில் இருந்து 2009-2010 ஆண்டு ரூ.120 கோடிக்கு வருவாய் கிடைத்து உள்ளது. அதற்கு அந்த அறக்கட்டளைகள் வருமான வரியாக ரூ.58 கோடி செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை அவரது அறக்கட்டளைக்கு நோட்டீசு அனுப்பி உள்ளது.



கலகலப்பு - பாகம் 2!

Posted: 17 May 2012 07:25 AM PDT


ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வெளியான முழுநீள நகைச்சுவைப் படம் 'கலகலப்பு'.

'உள்ளத்தை அள்ளித்தா', 'உனக்காக எல்லாம் உனக்காக', 'வின்னர்' போன்ற முழுநீள காமெடி படங்கள் மட்டுமல்லாமல் சுந்தர்.சி படம் என்றாலே காமெடி காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது.

'கலகலப்பு' படத்தில் சுந்தர்.சி உடன் முதன் முறையாக இணைந்தார் சந்தானம். நகைச்சுவை நாயகர்களாக விமல், மிர்ச்சி சிவா, கிளாமரான கதாபாத்திரங்களில் அஞ்சலி, ஓவியா, இவர்களுடன் இணைந்து சந்தானத்தின் காமெடி இருப்பதால், இப்படம் பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு இடையே வெளியானது.

'ஜாலியாக வாங்க... ஜாலியாக போங்க' என்ற கலகலப்பாக வெளியான படம் மக்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது.

இது குறித்து தனஞ்செயன் " கலகலப்பு படத்தின் தியேட்டர்கள் எண்ணிக்கை 18ம் தேதி முதல் அதிகரிகப்பட இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

'கலகலப்பு' படத்தின் இரண்டாம பாகத்தினை அதே படக்குழுவினரை கொண்டு உருவாக்கலாமா என்று யோசித்து வருகிறோம். " என்று தெரிவித்து இருக்கிறார்.



சென்னை சூப்பர் சொதப்பல் ஆட்டம்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அபார வெற்றி

Posted: 17 May 2012 07:13 AM PDT


ஐபிஎல் 5 தொடரின் இன்றைய முதல் போட்டியில் 121 ரன்களை சேஸ் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி துவக்கம் முதலே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 16.3 ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. கேப்டன் கில்கிறிஸ்ட் சிறப்பாக ஆடி 64 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

ஐபிஎல் 5 தொடரில் இன்று தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் துவக்கம் முதலே சொதப்பலாக பேட்டிங் செய்தது. துவக்க வீரராக களமிறங்கிய முரளி விஜய் 2 பவுண்டரிகளை அடித்து 10 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மற்றொரு துவக்க வீரரான மைக்கேல் ஹஸ்ஸி 7 ரன்களில் பிரவீண் குமார் பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா வந்த வேகத்தில் 2 சிக்ஸ் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால் 17 ரன்களில் எடுத்த ரெய்னா அவுட்டானார். கேப்டன் டோணி 6 ரன்களில் ஏமாற்றினார்.

சற்றுநேரம் நிலைத்து நின்று ஆடிய ஜடேஜா 13 ரன்கள் எடுத்து நிதின் சைனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன்பிறகு அல்பி மார்கல், பிராவோ ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர். ஆனால் 14 ரன்கள் எடுத்த மார்கல், பிரவீண் குமாரிடம் கேட்சாகி வெளியேறினார். 3 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து 48 ரன்களை சேர்த்து அரைசதத்தை நெருங்கிய பிராவோ, ஹாரீஸ் பந்தில் அவுட்டானார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்களை இழந்து 120 ரன்கள் எடுத்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பிரவீண் குமார், அசார் மகமூது, அவானா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர்.

121 ரன்கள் எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்ற எளிய இலக்கை சேஸ் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டன் கில்கிறிஸ்ட், மன்தீப் சிங் ஜோடி சிறப்பான துவக்கத்தை அளித்தது. ஆனால் மன்தீப் சிங் 5 பவுண்டரிகள் அடித்து 24 ரன்களை எடுத்த நிலையில், மார்க்கலின் பந்தில் போல்டானார். அடுத்து வந்த நிதின் சைனி 1 ரன் எடுத்து பிராவோ பந்தில் அவுட்டானார். சற்றுநேரம் நிலைத்து நின்று ஆடிய டேவிட் ஹஸ்ஸ் 9 ரன்கள் எடுத்து பிராவோவின் பந்தில் அவுட்டானார்.

விக்கெட்கள் ஒருபுறம் சரிய, துவக்க வீரரும் கேப்டனுமான கில்கிறிஸ்ட் மறுபுறம் நின்று பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்து வந்தார். அவருக்கு சித்தார்த் ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். 14வது ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரிகள் உட்பட 22 ரன்களை சேர்த்த கில்கிறிஸ்ட் அரைசதம் கடந்து, அதிரடியை தொடர்ந்தார். 15வது ஓவரில் 11 ரன்கள் எடுத்த சித்தார்த், டோணியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த கேப்டன் கில் கிறிஸ்ட் 46 பந்துகளில் 2 சிக்ஸ், 9 பவுண்டரிகள் அடித்து 64 ரன்களை குவித்தார். கடைசி கட்டத்தில் அசார் மகமூது உதவியுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 16.3 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.




அன்னாஹசாரே கார் மீது கல்வீச்சு

Posted: 17 May 2012 07:01 AM PDT

பிரபல சமூக சேவகரும், ஊழலை ஒழிக்க போராடி வருபவருமான காந்தியவாதி அன்னாஹசாரே நேற்று மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். 

முன்னதாக அவர் கூட்டத்துக்கு வந்தபோது அவர் கார் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. இது தொடர்பாக நாக்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த 15 பேரை கைது செய்தனர். 

அன்னாஹசாரே ஆதரவாளர்கள் வினியோகித்த நோட்டீசில் ராகுல்காந்தியை விமர்சித்திருந்ததால் கல்வீசியதாக அவர்கள் போலீசாரிடம் கூறினார்கள்.







தமிழ் ஈழம் மலர உலக தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்: சீமான் பேட்டி

Posted: 17 May 2012 06:38 AM PDT


நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- 
ஈழப்போர் முடிந்து 3 ஆண்டுகளாகிறது. மே 17-ந் தேதியான இதே நாளன்று 50 ஆயிரம் பேர் இறந்தனர். மொத்தத்தில் ஈழத்தில் 1 1/2 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இன்னும் முள் வேலிக்குள் தமிழர்கள் அடைபட்டிருப்பது வேதனை தருகிறது. 

இந்த வேதனைகள் ஒருபோதும் அழியாது. ஈழத்தில் பலியானவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் மே மாதம் அஞ்சலி செலுத்தி வருகிறோம். தமிழினப் படுகொலை நடந்து முடிந்த 3-வது ஆண்டு நினைவு நாளான நாளை(18-ந் தேதி) தமிழின படுகொலைக்கு நியாயம் கோரும் வகையில் கோவையில் நாம் தமிழர்கட்சி மாபெரும் பேரணியையும், பொதுக்கூட்டத்தையும் நடத்துகிறது. 

கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் சிலை அருகே கூடி அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு சிவானந்தா காலனியை அடைவோம். அங்கு பொதுக்கூட்டம் நடைபெறும். நாம் தமிழர் கட்சி 2010-ம் ஆண்டு மே 18-ந் தேதி தொடங்கப்பட்டது. நாளை 3-ம் ஆண்டு தொடங்குகிறது. 

ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததால் எந்த பிரயோஜனமும் இல்லை. தமிழ் ஈழம் தான் நிரந்தர தீர்வாகும். ஈழம் பெற உலகில் உள்ள 12 கோடி தமிழர்களும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.

மேற்கண்டவாறு சீமான் கூறினார்.






















துப்பாக்கியில் நான் நடிக்கவே இல்லை!-சரத் மறுப்பு

Posted: 17 May 2012 06:31 AM PDT


நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் துப்பாக்கியில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், அதை விஜய்யே இயக்குகிறார் என்கிற ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி வருகின்றன கடந்த சில தினங்களாக.

ஆனால் இதெல்லாம், பத்திரிகை / இணையதளங்களைப் பார்த்துதான் தானே தெரிந்து கொண்டதாகக் கூறியுள்ளார் சம்பந்தப்பட்ட நடிகரான சரத்குமார்.

இதுகுறித்து சரத்குமார் கூறுகையில்,

 "எனது அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு இப்போதுதான் சென்னை திரும்பினேன். உடனே ஏகப்பட்ட போன்கால்கள், துப்பாக்கியில் நடிப்பது குறித்து.

கடந்த சில தினங்களாக வெளியான செய்திகளைப் பார்த்துதான் துப்பாக்கியில் நான் முக்கிய வேடத்தில் நடிப்பதே தெரிந்தது! இதில் எந்த உண்மையும் இல்லை. தவறான செய்தி. குறைந்தபட்சம் விசாரிக்காமல் கூட வெளியிட்டுவிடுவதா?

மல்டி ஹீரோ சப்ஜெக்டில் நடிப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால் இன்றைய தேதிக்கு தமிழில் ரஜினி சாருடன் கோச்சடையான், மலையாளத்தில் சில படங்கள், கன்னடத்தில் படங்கள் என நான் ரொம்ப பிஸி. விரைவில் சினேகாவும் நானும் நடித்த விடியல் படம் வெளியாகவிருக்கிறது," என்றார்.



நான் குடிக்கவில்லை, குழந்தையை தள்ளிவிட்டதால் தான் எரிச்சலானேன்..:ஷாருக்

Posted: 17 May 2012 06:00 AM PDT


நான் ஒன்றும் குடிபோதையில் வான்கடே ஸ்டேடிய பாதுகாவலர்களுடன் தகராறு செய்யவில்லை என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும், பாலிவுட் நடிகருமான ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐ.பி.எல். 5வது தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் கொல்கத்தா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பிறகு கொல்க்ததா அணி உரிமையாளர் ஷாருக்கான் அரங்க பாதுகாவலர்களுடன் குடிபோதையில் தகராறு செய்தார் என்று கூறப்பட்டது. மேலும் அவருக்கு வான்கடே அரங்கில் நுழைய வாழ்நாள் தடைவிதித்து மும்பை கிரிக்கெட் சங்கம் இன்று உத்தரவிட்டது.

இந்நிலையில் இது குறித்து ஷாருக் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நான் போட்டியைப் பார்க்கவே செல்லவில்லை. போட்டியைக் காணச் சென்ற எனது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் செல்லவே வான்கடே அரங்கிற்கு சென்றேன். அப்போது அங்கிருந்த வீரர்களை பாராட்டினேன். அப்போது அங்கு மும்பை கிரிக்கெட் சங்கம் அதிகாரிகள் பாதுகாப்பு என்ற பெயரில் எனது குழந்தைகளைப் பிடித்து தள்ளினர். அதைப் பார்த்தவுடன் எனக்கு கோபம் வந்துவிட்டது. பாதுகாவலர்கள் தான் என்னிடம் மோசமாக நடந்தனர். நான் ஒன்றும் குடித்துவிட்டு ரகளை செய்யவில்லை.

குழந்தைகளைப் பிடித்து தள்ளினால் எந்த பெற்றோருக்குத் தான் கோபம் வராது. இப்படித் தான் அவர்கள் நடந்து கொள்வார்கள் என்றால் அந்த அரங்கிற்கே நான் செல்ல மாட்டேன். இந்த சம்பவத்திற்காக மும்பை கிரிக்கெட் சங்கம் தான் என்னிடம் மன்னிப்ப கேட்க வேண்டும் என்றார்.



அஜித் சிபாரிசு செய்த நடிகர்! மீடியாக்களுக்கு அஜித் கொடுக்கபோகும் ஆச்சரியம்!!

Posted: 17 May 2012 05:53 AM PDT


அஜித் நடித்துக்கொண்டிருக்கும் பில்லா -2 படம் என்னைக்கு ரிலீஸாகும் என்று ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் அஜித். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தில் நயன்தாரா தான் அஜித்துக்கு ஜோடி என்பது கன்ஃபார்ம் செய்யப்பட்டுவிட்டதாம்.

அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் இந்த படத்தில் ஆர்யாவும், டாப்ஸியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். டாப்ஸி தமிழ் படங்களுக்காக இத்தனை நாட்கள் காத்திருந்தது வீணாகவில்லை.

ஒவ்வொரு கேரக்டருக்கும் நடிகர்களை தேர்வு சேய்து கொண்டிருந்த இயக்குனருக்கு அஜித் ஒருவரை சிபாரிசு செய்ததாக தெரிகிறது. அஜித் நடித்த மங்காத்தா படத்தில் போலிஸாக நடித்த அஸ்வின் தான் சிபாரிசு செய்யப்பட்ட நபர்.

இதற்கு முன் இது போன்ற செயல்களில் ஆர்வம் செலுத்தாத அஜித் சமீபமாக இது போன்ற அதிரடி செயல்களை செய்து வருகிறார். அஜித்குமாரிடம் இருந்து எந்த பத்திரிக்கையும் எதிர்பாராத மற்றொரு விஷயம்,பில்லா-2 படத்திற்காக அஜித் PRESS MEET வைக்கப்போகிறார் என்ற செய்தி தான்.

 அசல் படத்திற்காக 2010-ம் வருடம் பிப்ரவரி மாதம் அஜித் பத்திரிக்கைகளை சந்தித்து பேசியது தான் கடைசி.



ஷங்கருக்கு ரஜினியா? விக்ரமா?

Posted: 17 May 2012 05:45 AM PDT


நண்பன் படத்திற்குப் பிறகு பொறுமையாக அடுத்த கதையை எழுதி இப்போது ஹீரோவுக்காக காத்திருக்கிறார். ஷங்கரின் அடுத்த படத்தில் விக்ரம் தான் ஹீரோ எனவும் படத்திற்கு 'தென்றல்' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் பரவினாலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

ஆனாலும் ஷங்கரின் அடுத்த படத்தை தயாரிக்கவிருப்பதாக கூறப்படும் AGS தயாரிப்பு நிறுவனதிற்கு, ரஜினி ஹீரோவாக நடிப்பதில் தான் உடன்பாடாம்.

அதனால் ஷங்கரும், தயாரிப்பு நிறுவனமும் ரஜினியை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறுகிறார்கள்.

கோச்சடையான் படப்பிடிப்பு முடிந்ததும் 'ராணா' துவங்கப்படும் என கே.எஸ்.ரவிகுமார் கூறியிருப்பதால், ஷங்கர் தரப்பு முயன்றாலும் நல்ல பதில் கிடைக்காது என்கிறார்கள்.



எடியூரப்பா மகனுடன் தொடர்பா? -நடிகை ஹரிப்ரியா

Posted: 17 May 2012 05:30 AM PDT

பிரபல கன்னட நடிகை ஹரிப்ரியா. இவர் தமிழில் அர்ஜுனுடன் 'வல்லக்கோட்டை' படத்தில் நடித்தார். கரணுடன் 'கனகவேல் காக்க' படத்திலும், சேரனுடன் 'முரண்' படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து உள்ளார்.

ஹரிப்ரியா வீடு பெங்களூரில் உள்ளது. அந்த வீட்டில் சி.பி.ஐ. போலீசார் நேற்று அதிரடியாக புகுந்து சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது. சுரங்க ஊழல் புகாரில் சிக்கிய கர்நாடக முன்னாள் முதல்- மந்திரி எடியூரப்பா வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் ஒரு குழுவினர் ஹரிப்ரியா வீட்டில் புகுந்து சோதனை போட்டதாக கூறப்பட்டது.

எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா வீட்டிலும் சோதனை நடந்தது. விஜயேந்திராவுக்கும், ஹரிப்ரியாவுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாகவும் எனவே தான் ஹரிப்ரியா வீட்டில் இந்த சோதனை நடந்ததாகவும் தகவல் வெளியானது.

ஆனால் இந்த செய்தியை ஹரிப்ரியா அடியோடு மறுத்தார். அவர் கூறியதாவது:-

என் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடந்தததாக டெலிவிஷனில் வெளியான செய்தியை பார்த்து அதிர்ச்சியானேன். அப்படி எந்த சோதனையும் நடக்கவில்லை. எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவது வதந்திதான்.

அவரைப் பற்றி இதற்கு முன் கேள்விப்பட்டதே இல்லை. நேரில் சந்தித்ததும் இல்லை. அவருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன் என்பது மனதை புண்படுத்துகிறது. என்னைப் பற்றி இதுபோன்ற வதந்திகள் ஏன் கிளம்புகின்றன என்று புரியவில்லை. ஏற்கனவே இதுபோல் என்னைப் பற்றி வதந்திகள் பரப்பப்பட்டன. இப்போது மீண்டும் வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீஸ் தரப்பிலும் ஹரிப்ரியா வீட்டில் சோதனை நடக்கவில்லை என மறுத்தனர்.





Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™