விழியே பேசு... |
- யாராலும் என்னை வசியப்படுத்த முடியாது: மதுரை ஆதீனம் பேட்டி
- ஷாருக்கான் செமரகளை..மும்பை மைதானத்துக்குள் நுழைய வாழ்நாள் தடை?(வீடியோ)
- வீரபாண்டி ஆறுமுகம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
- அண்ணா அறிவாலயம் மதுரை ஆதீனம் தலைமையில் திறக்கப்படதா!: கலைஞர் விளக்கம்
- அணு சக்தியை முழுவதும் கைவிடுவது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல: பிரதமர் மன்மோகன் சிங்
- சோனியா கொடும்பாவி எரிப்பு: சபாநாயகருக்கு சிறை
- புதுக்கோட்டை இடைத்தேர்தல் : வாக்குசாவடியை புறக்கணிக்க திமுக முடிவு?
- சீனாவின் எச்சரிக்கைக்கு பணிந்தது இந்தியா ...!!
- விஜய் பட விவகாரம் சந்திரசேகரன் தலையீட்டால் இயக்குனருக்கு சிக்கல்
- தாய்மார்கள் மரணம், உலக அளவில் இந்தியாவில் தான் அதிகம்: ஐக்கிய நாடுகள்
- இன்றைய செய்திகள் (16-05-2012)
- அஜித்தை பின்பற்றிய விஷால்
- டர்ட்டி பிக்சரில் கவர்ச்சியாக நடிக்க ரூ 2.5 கோடி சம்பளமா?- நயன்தாரா
- ஜாமீனில் விடுதலை: ஆ.ராசா மீண்டும் அரசியலில் ஈடுபடுவாரா?
- ரேகா பதவியேற்பில் நடந்த விவகாரம் : டிவி மீது ஜெயாபச்சன் புகார்
- சரத்குமார் பேச்சால் விஜயகாந்த் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆவேசம்
- நடிகை உதயதாரா திருமணம்: கேரளாவில் நடந்தது
- ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை திரைப்படமாகிறது
- விவசாயிகள் கடனைத் தீர்க்க ரூ.30 லட்சம் கொடுத்த அமிதாப் பச்சன்
- 7ஆம் அறிவு டாங்லியின் ப்ளாக் டிராகன் தமிழில் ரிலீஸ்
- ரூ 12 லட்சத்துக்கு ஏலம் போன மடோனா நிர்வாண படம்!(இணைப்பு)
- உடல் எடை குறைக்க அமெரிக்காவில் ஹன்சிகா சிகிச்சை
- குழந்தை நட்சத்திரம் பலியாகிவிட்டாரே - இயக்குநர் உருக்கம்!
- கடும் மின் தட்டுப்பாட்டில் மக்கள்.. அதிமுக அரசின் ஓராண்டு சாதனைக்கு ரூ.25 கோடியில் விளம்பரம்!
- 52 நாட்களாக நடைபெற்று வந்த தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவுற்றது
| யாராலும் என்னை வசியப்படுத்த முடியாது: மதுரை ஆதீனம் பேட்டி Posted: 16 May 2012 10:11 PM PDT மதுரை ஆதீனம் அருணகிரி சுவாமிகள் கும்பகோணம் அருகே கஞ்சனூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆதீனத்தில் வாரிசு நியமிப்பதற்கு எங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. தகுதியானவரை நியமிக்கும் பட்சத்தில் மற்றவர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டியதில்லை. மதுரை ஆதீனம் பழமை வாய்ந்த ஆதீனமாகும். இந்தியாவிலேயே முதன் முதலாக உருவாக்கப்பட்ட குருமகாசன்னிதானம். மதுரை ஆதீனத்திற்கு இளைய சன்னிதானமாக தகுதியானவரை தேடி பிடித்து நியமித்துள்ளோம். இதில் மரபு ஏதும் மீறவில்லை. அதேபோல் அவருக்கு தீட்சை உள்பட எல்லாம் முறையாக செய்யப்பட்டுவிட்டது. இவரை தேர்ந்தெடுத்தால் பிரச்சினை வரும் என்று முன்பே தெரியும். தெரிந்தே தேர்ந்தெடுத்தோம். ஆங்கிலப்புலமை, தியானபீடம் வைத்துள்ளார். 10 ஆண்டுகளில் உலக நாடுகளுக்கு சென்று பல சீடர்களை உருவாக்கியுள்ளார். அவர் தகுதியானவர்தான். நான் தொடக்கத்தில் தி.மு.க.வில் இருந்தது உண்மையானதுதான். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை பொறுத்தவரை மரியாதைக்குரியவர். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி எனது தந்தை போன்றவர். அவர் எனக்கு எந்த சிறப்பும் செய்யவில்லை. அவரிடம் நாங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. மரியாதை மட்டுமே எதிர்பார்த்தோம். திருவள்ளுவர் சிலையை மதுரை ஆதீனம் திறந்துவைத்தால் மரியாதை இருக்கும். அது போன்ற மரியாதையை நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அந்த மரியாதை கிடைக்கவில்லை. அ.தி.மு.க. என்பது நெருப்பாற்றில் நீந்தி வந்த சிங்கம். கடந்த ஓர் ஆண்டில் 100 ஆண்டில் செய்யவேண்டிய பல சாதனைகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா செய்துள்ளார். இந்தியாவின் பிரதமராக வருவதற்கு அவர் எல்லா தகுதியும் பெற்றுள்ளார். அவர் பிரதமராக வருவது உறுதி. நான் இளைய சன்னிதானம் பிடியில் இருப்பதாக கூறுகிறார்கள். மந்திரத்தாலோ, மாயையாலோ, கருப்புமையாலோ என்னை யாரும் வசியப்படுத்த முடியாது. எதுவும் என்னை கட்டுப்படுத்தாது. இவவாறு மதுரை ஆதீனம் கூறினார். முன்னதாக மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள நித்தியானந்தா கூறியதாவது:- காஞ்சி ஜெயேந்திரர் சார்பில் சுந்தரேச அய்யர் வருவதாக போன் மூலம் தகவல் வந்தது. அது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் வரவில்லை. கருத்தை வாபஸ் பெறவில்லை என்றால் வழக்கு தொடரப்படும். முறையாக 7 தீட்சை பெற்ற பிறகே இளைய சன்னிதானமாக அறிவிக்கப்பட்டுள்ளேன். என் மீது போடப்பட்டுள்ள வழக்கு தானாக இயற்கை எய்திவிடும். திருவாவடுதுறை போன்ற ஆதீனங்கள் என்னை மனிதனாக கூட பார்க்கவில்லை. என்னிடம் தன்னிலை விளக்கம் கூட பெறவில்லை. என்னை நிற்கவைத்து பேசினால் கூட சொல்ல தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. ஆதீனங்கள் 10 நாட்களுக்குள் வாபஸ் பெற தெரிவித்திருந்தேன். ஆனால் அவர்கள் எதுவும் தெரிவிக்காததால் சட்டபூர்வ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆன்மிக புனித பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. வரவேற்கத்தக்கது. இவ்வாறு நித்தியானந்தா கூறினார். |
| ஷாருக்கான் செமரகளை..மும்பை மைதானத்துக்குள் நுழைய வாழ்நாள் தடை?(வீடியோ) Posted: 16 May 2012 09:42 PM PDT மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடன் நடிகரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளருமான ஷாருக்கான் மோதலில் ஈடுபட்டார். இதனால் அவர் வான்கடே மைதானத்துக்குள் நுழைய வாழ்நாள் தடை விதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. நடப்பு ஐ.பி.எல்.5வது தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் கொல்கத்தா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் வெற்றிக் களப்பில் மிதந்த ஷாருக்கான் தமது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மும்பை கிரிக்க்ட் சங்கத் தலைவர் விலாஸ்ராவ் தேஷ்முக் பற்றி அவதூறாகப் பேசியுள்ளார். ஷாருக்கானின் பாதுகாவலர்கள் மைதான காவலர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இதையடுத்த் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு ஷாருக்கான் மீது புகார் பதிவு செய்து எச்சரித்து அனுப்பினர். ஷாருக்கானின் இந்த அடாவடி நடவடிக்கையால் அனேகமாக மும்பை வான்கடே மைதானத்துக்குள் இனி வாழ்நாள் முழுவதும் நுழைய முடியாது என்று தடை விதிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது. மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். மும்பை கிரிக்கெட் சங்க பொருளாளர் ரவிஷாவந்த் இச்சம்பவம் பற்றி கூறுகையில், ஷாருக்கான் மும்பை கிரிக்க்ட் சங்க பாதுகாவலர்கள், நிர்வாகிகள், தலைவர் வ்லாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோரை அவதூறாகவும் அவமதித்துப் பேசினார். அவரை வாழ்நாள் முழுவதும் இந்த மும்பை வான்கடே மைதானத்துக்குள் நுழைய தடை விதிக்க முடிவு செய்திருக்கிறோம் என்றார் அவர். |
| வீரபாண்டி ஆறுமுகம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை Posted: 16 May 2012 09:27 PM PDT முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். சேலம், சென்னை மற்றும் தருமபுரி உள்ளிட்ட 16 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். வீரபாண்டி ஆறுமுகம் மகன் வீடு மற்றும் உதவியாளர் வீடுகளிலும் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சேலம் அருகே பூலாவரியில் உள்ள வீடு மற்றும் தொழில் சாலைகளில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக கூறி போலீசார் சோதனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. பழிவாங்கும் நோக்கில் இந்த சோதனை நடைபெறுவதாக அரசு மீது திமுகவினர் புகார் கூறியுள்ளனர். |
| அண்ணா அறிவாலயம் மதுரை ஆதீனம் தலைமையில் திறக்கப்படதா!: கலைஞர் விளக்கம் Posted: 16 May 2012 09:20 PM PDT அண்ணா அறிவாலயத் திறப்பு விழா தனது தலைமையில் நடைபெற்றதாக மதுரை ஆதீனம் கூறியுள்ளதற்கு திமுக தலைவர் கலைஞர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை: மதுரை ஆதினத்தைப் பற்றி நீங்கள் விமர்சனம் செய்ததாக, அவர் தனது பேட்டியிலே சொல்லியிருக்கிறாரே? அவரது பேட்டியைப் படித்தேன். "கருணாநிதி முழுநேர அரசியல்வாதி. மூதறிஞர். அவர் என்னைப் பற்றி அவதூறாக எழுதியிருப்பது தந்தையானவர் பிள்ளையைத் திட்டுவதுபோலத்தான். ஆகவே கருணாநிதியின் அவதூறான எழுத்தைப் பொறுத்துக் கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார். ஆனால் அவர் கூறியிருப்ப தைப்போல நான் அவரைப் பற்றி அவதூறாக எதையும் கூறவில்லை. கடந்த 4-5-2012 அன்று செய்தியாளர்கள் என்னைச் சந்தித்த போதுகூட, "மதுரை ஆதீனம் குறித்து உங்கள் கருத்து என்ன?" என்று கேட்டபோது, "இதுபற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை" என்றுதான் நான் பதில் அளித்தேன். ஆனாலும் அவர் தேவையில்லாமல் நான் அவரைப் பற்றி அவதூறாக எழுதியதாகச் சொல்லியிருக்கிறார். மேலும் மதுரை ஆதினம் அந்தப் பேட்டியின்போது 1987இல் அவருடைய தலைமையில்தான் அண்ணா அறிவாலயத் திறப்பு விழா நடைபெற்றது என்று சொல்லியிருக்கிறார். அதுவும் தவறான செய்தியாகும். அண்ணா அறிவாலயத் திறப்பு விழா பேராசிரியர் தலைமையில் என்னால் திறந்து வைக்கப்பட்டது. அந்த விழாவில் மதுரை ஆதினம் கலந்து கொண்டார் என்பது மட்டுமே உண்மை. |
| அணு சக்தியை முழுவதும் கைவிடுவது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல: பிரதமர் மன்மோகன் சிங் Posted: 16 May 2012 08:58 PM PDT அணு சக்தி உலைகளுக்கு முழு பாதுகாப்பு வழங்குவது தனது அரசின் தலையாய கடமை என்று தெரிவித்த பிரதமர் மன் மோகன் சிங், அணுசக்தி முழுவதும் கைவிடுவது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று கூறினார். அணு உலை பாதுகாப்பு விசயத்தில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என தெரிவித்த பிரதமர், நாட்டில் தற்போது 19 அணு உலைகள் இயங்கி வருவதாகவும் இதுவரை எந்த விபத்தும் ஏற்பட்டதில்லை என்றும் தெரிவித்தார். புகுசிமா விபத்திற்கு பின் நாட்டில் உள்ள அனைத்து அணு உலைகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மீண்டும் ஆய்வு நடத்தி அறிக்கை தயார் செய்ய செய்ததாகவும் அவ்வறிக்கை அணு சக்தி கார்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட் (என்.பி.சி.ஐ.எல்.) இணைய தளத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். கூடுதல் மின் சக்தி, அணு சக்தி மூலம் பெறலாம் எனவும், இந்தியா ஜப்பான் நாட்டைப்போன்று இல்லை என்றும் கூறினார். ஜப்பான் நாடு பெரும்பாலான மின் சக்தியை அணு உலையிலிருந்து பெறுகிறது என்றார். மேலும் பிரான்ஸ் நாட்டிலும் நிறைய அணு உலைகள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். |
| சோனியா கொடும்பாவி எரிப்பு: சபாநாயகருக்கு சிறை Posted: 16 May 2012 08:54 PM PDT கோவாவில் பா.ஜ.க. அரசு 2005-ம் ஆண்டு கலைக்கப்பட்டது. இதை கண்டித்து ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பா.ஜனதா சார்பில் போராட்டம் நடைபெற்றது. போலீஸ் அனுமதியின்றி நடைபெற்ற இப்போராட்டத்தின் போது காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்துக்கு தலைமை தாங்கிய சி.பி.சிங் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். அப்போது சிங் மாநில சட்டசபை பா.ஜனதா தலைமை கொறடாவாக இருந்தார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி வி.கே.மிஷ்ரா நேற்று தீர்ப்பு கூறினார். சி.பி.சிங்கிற்கு 1 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்ட சி.பி.சிங் தற்போது ஜார்கண்ட் சட்டசபை சபாநாயகராக இருக்கிறார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சிங் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மிஷ்ரா அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கினார். |
| புதுக்கோட்டை இடைத்தேர்தல் : வாக்குசாவடியை புறக்கணிக்க திமுக முடிவு? Posted: 16 May 2012 08:16 PM PDT புதுக்கோட்டை இடைத்தேர்தலில் வாக்கு சாவடியை புறக்கணித்து தங்கள் எதிர்ப்பை காட்ட தி.மு.க வினர் முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. இடைத் தேர்தலில் அ.தி.மு.க தங்கள் கட்சி வேட்பாளரை அறிவித்த அடுத்த சில மணி நேரங்களில் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்தது. இதனால் ஆளும் கட்சிக்கு துணையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று விமர்சனங்கள் கிளம்பியது. இந்த நிலையில் அ.தி.மு.க வை எதிர்த்து எம்.எல்.ஏ முத்துக்குமரனை இழந்து தொகுதியையும் இழந்துள்ள சி.பி.ஐ போட்டிக்கு வரும் என்றும், அப்படி போட்டியிட்டால் சி.பி.ஐ க்கு ஆதரவளித்து வெற்றி பெற செய்து அ.தி.மு.க வை தோற்கடிக்க எதிர்கட்சிகளான தி.மு.க, தே.மு.தி.க, ம.தி.மு.க, சி.பி.எம், பா.ம.க, வி.சி. பா.ஜ.க போன்ற எதிர்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. ஆனால் மற்ற கட்சிகளின் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் விதமாக சி.பி.ஐ போட்டி இல்லை என்று மாநில செயலாளர் தா.பாண்டியன் அறிவித்தார். இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று காரணம் சொல்லி தி.மு.க தலைவர் கலைஞர் தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவித்தார். அதே போல ம.தி.மு.க, சி.பி.எம், பா.ம.க, வி.சி. பா.ஜ.க போன்ற கட்சிகள் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்து விட்டன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகம் படும்பாடு என்று தி.மு.க பொது கூட்டத்தில் பேசிய மாஜி அமைச்சர் ரகுபதி தேர்தல் புறக்கணிப்பு என்பதை பதிவு செய்யும் விதமாக 49- 0 போட வேண்டும் என்று பேசினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், தி.மு.க இன்னும் சில நாளில் முக்கிய முடிவு அறிவக்க உள்ளது. அந்த அறிவிப்பில் ஜனநாயகத்திற்கு விரோதமாக நடக்கும் இந்த தேர்தலை புறக்கணிக்கும் விதமாக தி.மு.க தொண்டர்களும், அவர்களை சார்ந்தவர்களும் வாக்கு சாவடிக்கு போகாமல் வாக்களிக்காமல் புறக்கணிக்க வேண்டும் என்ற அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வரும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. |
| சீனாவின் எச்சரிக்கைக்கு பணிந்தது இந்தியா ...!! Posted: 16 May 2012 08:10 PM PDT வியட்நாமுடன் கடந்த 2006-ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, தென் சீனக்கடல் பகுதியில் பெட்ரோலிய எண்ணை வளம் குறித்த ஆய்வை இந்தியா மேற்கொண்டு வந்தது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. சீனாவின் எதிர்ப்புக்கு பணியாமல் இந்தியா தொடர்ந்து ஆய்வை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் இந்த ஆய்வை கைவிடுவதாக இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் திடீரென்று அறிவித்துள்ளது. வர்த்தகம் மற்றும் பொருளாதார நிலை கருதி இந்த ஆய்வை கைவிடுவதாக இதற்கு விளக்கம் கூறியுள்ளது. இந்த ஆய்விற்காக இந்திய அரசு ரூ. 244 கோடி முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வை கைவிடப்பட்டது குறித்து பெட்ரோலியத் துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறது என்று டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக இந்த தென் சீன கடல்பகுதி முழுவதும் தங்களுக்கே சொந்தம் என சீனா உரிமை கொண்டாடியது. ஆனால் அதற்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே மற்றும் தைவான் ஆகிய நாடுகள் தங்களுக்கும் அந்த பகுதியில் பங்கு உண்டு என்று சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் வியட்நாம் கடல் பகுதிகளில் எண்ணை வளம் குறித்து ஆய்வை இந்தியா மேற்கொள்ளக்கூடாது என்று கடந்த மார்ச்சி்ல், இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. தென் சீனக் கடல் பகுதியானது உலக நாடுகள் அனைத்துக்கும் சொந்தமானது எனவும், வர்த்தக வழித்தடமான அப்பகுதியில் எந்த நாட்டின் தலையீடும் இருக்கக் கூடாது எனவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. |
| விஜய் பட விவகாரம் சந்திரசேகரன் தலையீட்டால் இயக்குனருக்கு சிக்கல் Posted: 16 May 2012 08:04 PM PDT தயாரிப்பாளர் தலையீட்டால் புதுமுக இயக்குனருக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. விஜயகாந்த் நடிப¢பில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய படம் 'சட்டம் ஒரு இருட்டறை. இப்படத்தை சந்திரசேகரின் உறவினர் தயாரிக்க, அவரது மகள் சினேகா இயக்குவதாக இருந்தது. பின்னர் நடிகர் விஜய் தயாரிப்பார் என அறிவிக்கப்பட்டது. விக்ரம் பிரபு, பியா, ரீமா சென் நடிக்கின்றனர். ஷூட்டிங் தொடங்குவதற்கான வேலைகள் நடைபெற்று வந¢தபோது, இப்படத்தின் ஸ்கிரிப்ட்டில் மாற்றம் செய்ய வேண்டும் என விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினாராம். இதனால் இயக்குனர் சினேகாவுக்கு சிக்கல் ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் மாற்றங்களை செய்தார். ஏற்கனவே தேர்வான நடிகர், நடிகைகளிடம் இப்படத்தின் கதை சொல்லப்பட்ட நிலையில் கதை, காட்சியில் திடீர் மாற்றம் செய்துள்ளது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள நட்சத்திரங்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சந்திரசேகரன் கூறும் மாற்றங்கள் ரீமேக் ஆகவுள்ள படத்துக்கு பிளஸ்ஸாக இருக்குமா அல்லது இப்போதுள்ள கதையை கெடுத்துவிடுமா என்ற சந்தேகம் பட குழுவினர் மத்தியில் எழுந்துளளது. கோலிவுட்டில் பெரிய அளவில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் களத்தில் குதித்திருக்கும் விக்ரம் பிரபுவுக்கும் ஸ்கிரிப்ட் மாற்றத்தால் பலன் இருக்கமா என்று முடிவு செய்ய முடியாமல் தவிக்கிறார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே படத்தின் முதல் ஷெட்யூல் சமீபத்தில் தொடங்கியது. ஷூட்டிங் ஸ்பாட்டில் தவறாமல் ஆஜராகும் சந்திரசேகரன், இந்த காட்சியை இது போல் படமாக்க வேண்டும் என உத்தரவிடுகிறாராம். இயக்குனரின் வேலையில் அவர் தலையீடுவதால் இயக்குனர் சினேகா வருத்தத்தில் இருக்கிறாராம். |
| தாய்மார்கள் மரணம், உலக அளவில் இந்தியாவில் தான் அதிகம்: ஐக்கிய நாடுகள் Posted: 16 May 2012 08:25 PM PDT இந்தியாவில் சுகாதார திட்டம் மற்றும் பெண்களின் கல்வியறிவு அதிகரிப்பு போன்ற சூழலிலும் கற்பம் அடைந்த பெண்கள் மரணமடைவதில் உலக அளவில் இந்தியாவில் தான் அதிகம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தெரிவிக்கிறது. 2010 ம் ஆண்டு உலகஅளவில் 2,87,000 பெண்கள் கற்பகாலத்தின் போதும் குழந்தைபெரும்போதும் மரணமடைவதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது. இதில் இந்தியாவில் 19 சதவீத மரணமும் (56,000 பேர்கள்), நைஜீரியாவில் 14 சதவீத மரணமும் (40,000 பேர்கள்) ஏற்படுவதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இம்மரண விகிதம் (எம்.எம்.ஆர்.) 1990 ம் ஆண்டில் 10,00,000 குழந்தை பிறப்பிற்கு 400 மரணங்கள் என்ற நிலையில் இருந்து 2010 ம் ஆண்டு 10,00,000 குழந்தைகள் பிறப்பிற்கு 210 மரணங்கள் என்று குறைந்துள்ளதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது. ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் ஒரு பெண் மரணம், குழந்தை பிறந்த பின் ஏற்படும் அதிக ரத்த போக்கு, கற்பகாலத்தின்போது ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், பாதுகாப்பற்ற கர்ப்ப கலைப்பு போன்ற காரணங்களால் ஏற்படுவதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது. இருந்தபோதிலும், கடந்த இருபது வருடங்களில் மரண விகிதம் பாதியாக குறைந்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 16 May 2012 11:46 AM PDT |
| Posted: 16 May 2012 08:41 AM PDT அஜித்தை ரசிகர்கள் அல்டிமேட் ஸ்டார் என அழைத்து வந்தனர். அவரது படங்களில் அஜித் பெயருக்கு முன்னால் இப்பட்ட பெயர் பயன்படுத்தப்பட்டது. போஸ்டர்களிலும் அல்டிமேட் ஸ்டார் அஜித் என்றே குறிப்பிடப்பட்டன. ஆனால் அஜித் திடீரென்று அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டப்பெயரை பயன்படுத் தக்கூடாது என தடை விதித்து விட்டார். இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடமும் படங்களில் அதை பயன்படுத்த வேண்டாம் என்று கூறிவிட்டார். இதையடுத்து வெறும் அஜித் என்ற பெயரே இடம் பெற்று வருகிறது. அவரது வழியில் விஷாலும் புரட்சித் தளபதி என்ற பட்டத்தை திடீரென உதறிவிட்டார். சமீபத்தில் ரிலீசான அவரது படங்களின் டைட்டில்களில் புரட்சித் தளபதி விஷால் என்றே குறிப்பிடப்பட்டன. ரசிகர்களும் புரட்சித்தளபதி என போஸ்டர்கள் ஒட்டினர். ரசிகர்கள் அந்த பட்டத்தை சூட்டியதாக விஷால் கூறினார். இந்த நிலையில் திடீரென புரட்சித் தளபதி என்ற பட்டத்தை தனது பெயரில் இருந்து நீக்கிவிட்டார். சமீபத்தில் அவர் நடிக்கும் சமர் படம் பற்றி போஸ்டர்களும் விளம்பரங்களும் வெளியாயின. அவற்றில் புரட்சித் தளபதி இடம் பெறவில்லை. வெறும் விஷால் என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது. |
| டர்ட்டி பிக்சரில் கவர்ச்சியாக நடிக்க ரூ 2.5 கோடி சம்பளமா?- நயன்தாரா Posted: 16 May 2012 08:31 AM PDT போன வருஷம் முழுவதும் நயன்தாராவுக்கு பெரிதாக படங்கள் இல்லை. அவர் நடித்த ஒரே படம் தெலுங்கு ஸ்ரீராமராஜ்யம்தான். ஆனால் இந்த ஆண்டு நயன்தாராதான் டாப் இடத்தில் இருக்கிறார். இந்திப் பட நடிகைகளுக்கு இணையாக கோடிகளில் சம்பளம். இந்தியில் பெரும் வெற்றி பெற்ற தங்கள் டர்ட்டி பிக்சர் படத்தை தமிழில் ஏக்தா கபூர் ரீமேக் செய்கிறார். இந்தப் படத்தில் நயன்தாராதான் நடிக்கப் போவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்தப் படத்தில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக இருக்கும் என்பதால், அதற்காக ரூ 2.5 கோடியை சம்பளமாக நயன்தாராவுக்குத் தர ஏக்தா கபூர் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து நயன்தாரா தரப்பில் இதுவரை எதுவும் கூறப்படவில்லை. இப்போது மறுப்பு தெரிவித்துள்ளார். "டர்ட்டி பிக்சர் படத்தை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு ரொம்பப் பிடித்த படம். அதில் நடிக்க எனக்கும் ஆர்வமாக உள்ளது. ஆனால் இதுபற்றி யாரும் என்னிடம் பேசவில்லை என்பதுதான் உண்மை. அதற்குள் எனக்கு எவ்வளவு சம்பளம் என்றெல்லாம் செய்தி வெளியானது எப்படி என்றுதான் தெரியவில்லை," என்றார் நயன்தாரா. பெரிய படங்களில் நடிகைகள் இப்படித்தான் கமிட் ஆகிறார்கள் போலிருக்கிறது! |
| ஜாமீனில் விடுதலை: ஆ.ராசா மீண்டும் அரசியலில் ஈடுபடுவாரா? Posted: 16 May 2012 08:06 AM PDT ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் தொலை தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. முன்னாள் நிர்வாக இயக்குனர் சரத்குமார், தொழில் அதிபர் ஷாகித் பல்வா, பட அதிபர் கரீம் மொரானி மற்றும் தனியார் டெலிபோன் நிறுவன உயர் அதிகாரிகள் அனைவரும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்பு ஒவ்வொருவராக ஜாமீனில் விடுதலையாகி திகார் ஜெயிலை விட்டு வெளியே வந்தனர். ஆனால் ஆ.ராசா மட்டும் ஜாமீனில் விடுதலையாக மறுத்து விட்டார். ஜாமீன் மனுவும் தாக்கல் செய்யவில்லை. வழக்கு விசாரணைக்காக அவர் தினமும் திகார் ஜெயிலில் இருந்து போலீஸ் வேனில் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப் பட்டு வந்தார். தற்போது இந்த வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் ஆ.ராசா டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது ஆ.ராசாவுக்கு நீதிபதி ஓ.பி.சைனி நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதனால் ஆ.ராசா குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். டெல்லி கோர்ட்டுக்கு வந்திருந்த ராசா ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். ராசா கோர்ட்டு அறையில் இருந்து வெளியே வந்தபோது ஆதரவாளர்கள் அவருக்கு சால்வை அணிவித்தனர். கோர்ட்டு மற்றும் ஜெயில் நடைமுறை முடிந்ததும் இரவு 7.15 மணிக்கு ராசா திகார் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தார். அவரை தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு வரவேற்று அழைத்து வந்தார். அப்போது ஜெயில் முன் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. பின்னர் ராசா ஜெயில் வாசலில் இருந்து காரில் ஏறி நேராக டெல்லியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். வீட்டு வாசலில் அவரை உறவினர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். முன்னதாக ராசா விடுதலையானதால் அவரது மனைவி பரமேஸ்வரி மகிழ்ச்சி தெரிவித்தார். கோர்ட்டுக்கு வந்திருந்த அவர் ஜாமீன் கிடைத்ததும் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு சென்றார். ஆ.ராசா ஜாமீனில் விடுதலையானதால் அவர் மீண்டும் அரசியலுக்கு வருவாரா? என்று தொண்டர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இதுபற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் கேட்டபோது, ஆ.ராசா விடுதலையானதால் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் எப் தும் தி.மு.க.வில் தீவிரமாக இருப்பவர். கட்சியில் எல்லோரும் அவரை ஆதரிக்கிறோம் என்றார்.எனவே ராசா மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவார் என்று தெரிகிறது. ராசா தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வருகிறார். சிறையில் இருந்த போதும் அவருக்கு பதில் வேறு யாரும் நியமிக்கப்படவில்லை. தொடர்ந்து கொள்கை பரப்பு செயலாளராக இருக்கிறார். ராசா கைதான போது தி.மு.க. நிர்வாக குழு கூட்டம் கூடி அவருக்கு முழு ஆதரவு தெரிவித்தது.தி.மு.க. எப்போதும் ராசாவுக்கு ஆதரவாக இருக்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோர்ட்டு அனுமதியின்றி ராசா தமிழ்நாட்டுக்கு செல்லக்கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது. இதனால் ராசா டெல்லியிலேயே தங்கி இருக்கிறார். சில நாட்கள் கழித்து அவர் நிபந்தனையை தளர்த்தக் கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்து டெல்லியை விட்டு வெளியே வரலாம்.ஏற்கனவே கனிமொழி எம்.பி. ஜாமீனில் விடுதலையானதும் மீண்டும் அரசியலில் கவனம் செலுத்தினார். கட்சி கூட்டங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்றார். அவரைப் போல் ஆ.ராசாவும் தீவிர அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. |
| ரேகா பதவியேற்பில் நடந்த விவகாரம் : டிவி மீது ஜெயாபச்சன் புகார் Posted: 16 May 2012 07:59 PM PDT உத்தரப்பிரதேசத்திலிருந்து சமாஜ்வாடி கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நடிகை ஜெயா பச்சன். இவர் பாலிவுட்டின் பிரபல நடிகர் அமிதாப்பச்சனின் மனைவி ஆவார். இவருக்கும் இந்தி நடிகை ரேகாவுக்கும் ஏற்கனவே மோதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ரேகா மாநிலங்களவை எம்.பி.யாக காங்கிரஸ் கட்சியால் பரிந்துரைக்கப்பட்டார். அவர் நேற்று மாநிலங்களவையில் எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவர் பதவியேற்கும் போது ராஜ்யசபா டிவியில் ஜெயா பச்சனையும் காட்டியுள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயா பச்சன், ராஜ்யா சபா டிவி நிகழ்ச்சி ஒளிபரப்பு செயலாளர் மீது குற்றம் சாட்டியுள்ளார். அதில், ரேகா மேல்சபை எம்.பி.யாக பதவி ஏற்றபோது தன்னை தேவையில்லாமல் ராஜ்யா சபா டிவியில் காட்டியுள்ளனர் என கூறி உள்ளார். முன்னதாக, மாநிலங்களவைக்கு ரேகா தேர்ந்தெடுக்கும்போது அவருக்கு ஜெயா பச்சன் அருகே இருக்கை ஒதுக்கப்பட்டது. ஆனால், ஜெயா பச்சன் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேறு இடத்தில் இருக்கையை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. |
| சரத்குமார் பேச்சால் விஜயகாந்த் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆவேசம் Posted: 16 May 2012 07:41 PM PDT தமிழக சட்டப்பேரவையில் இன்று அதிமுக முதல்வர் பொறுப்பேற்ற ஓராண்டுச்சாதனை குறித்து பல்வேறு கட்சியின் பாராட்டி பேசினர். அகில இந்திய சமத்துவ மக்கள்கட்சித்தலைவர், அதிமுக கூட்டணியில் இருக்கும் எம்.எல்.ஏவுமான சரத்குமார் பேசும்போது, ஒரு பழமொழியைச்சொல்லி, அதற்கு உதாரணம் சொன்னார். அதாவது, எதிர்கட்சியினர் மக்கள் குறைகளை வெளியே சொல்லிக்கொண்டிருக்கின்றனர். வாக்களித்த மக்களுக்கு கடமையாற்றும் விதமாக எங்கே வந்து பேசவேண்டுமோ அங்கே வந்து அவர்கள் பேசவில்லை என்று கூறினார். சரத்குமார் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே விஜயகாந்த் கட்சியான தேமுதிக எம்.எல்.ஏக்கள் எழுந்து கூச்சல் போட்டனர். சரத்குமாரை நோக்கி கையை நீட்டி ஆவேசமாக கத்தினர். இதனால் அவையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. தேமுதிக எம்.எல்.ஏ. சந்திரகுமார் ஆவேசமாக கத்தினார். அவரை நோக்கி பேரவைத்தலைவர் ஜெயக்குமார் சமாதானம் செய்து பேசினார். ஆனால், சந்திரகுமார் தொடர்ந்து கூச்சல் எழுப்பினார். இதையடுத்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, பேரவை உறுப்பினர் சரத்குமார், ஒரு பழமொழியைச்சொல்லி பெயர் குறுப்பிடாமல்தான் பேசினார். இதற்காக தேமுதிகவின ஏன் கொந்தளிக்கின்றனர் என்று தெரியவில்லை. எதிர்க்கட்சி என்றால் இங்கே தேமுதிக மட்டும்தான் உள்ளதா? எத்தனையோ கட்சிகள் உள்ளது. அப்படியிருக்க, தேமுகவினர் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்று சொன்னார். இதையடுத்து உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி எழுந்து, ''எதிர்க்கட்சி என்றால் தேமுதிக மட்டும் இல்லை. 5 முறை ஆண்டவரும் இருக்கிறார், அவர் மகனும் இருக்கிறார். அப்பயிருக்க தேமுதிகவினரின் செய்கை மோசமானது'' என்று கூறிவிட்டு அமர்ந்தார். அப்போதும் தேமுதிகவினர் கூச்சல் எழுப்பியதால், சபாநாயகர் ஜெயக்குமார், நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் ஒவ்வொரு முறையும் தேவையில்லாமல் பிரச்சனை செய்கிறீர்கள். இது சரியல்ல சந்திரகுமார் என்று கூறினார். பின்னர் பேசிய சரத்குமார், ''நான் யாரையும் பெயர் குறிப்பிட்டுச்சொல்லவில்லை. அப்படியிருந்தும் கொந்தளிக்கிறார்கல் என்றால் குற்றம் உள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் என்பார்கள். அப்படி எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். என்னை நோக்கி கை நீட்டி பேசுகிறார்கள். அதனால் எனக்கு கோபம் வராது. நான் மனிதாபிமான பண்பு உள்ள மனிதன்'' என்று கூறினார். இதையடுத்து ஜெயக்குமார், உறுப்பினர் சரத்குமாரே சொல்லிவிட்டார். யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லையாம் என சமாதானம் செய்தார். |
| நடிகை உதயதாரா திருமணம்: கேரளாவில் நடந்தது Posted: 16 May 2012 06:40 AM PDT தமிழில் தீ.நகர், மலையன் படத்தில் கரண் ஜோடியாக நடித்தவர் உதயதாரா. பிரசன்னாவுடன் கண்ணும் கண்ணும் மற்றும் விலை, பயமறியான் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மலையாள படங்களிலும் நடித்துள்ளார். உதயதாராவுக்கும் துபாயில் விமான பைலட்டாக பணியாற்றும் ஜுபின் ஜோசப்புக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயமானது. உதயதாரா-ஜுபின் ஜோசப் திருமணம் இன்று காலை கேரளாவில் உள்ள கொச்சின் அருகே நடந்தது. திருமணத்தில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்தினார்கள். திருமணத்துக்கு பின் தொடர்ந்து நடிப்பேன் என்று உதயதாரா கூறி இருந்தார். தற்போது கைவசம் இருந்த இரண்டு மலையாள படங்களை முடித்து விட்டார். அடுத்த வாரம் இருவரும் தேனிலவுக்காக வெளிநாடு செல்கின்றனர். ஓரிரு மாதங்களுக்கு பின் மீண்டும் சினிமாவில் நடிப்பார் என தெரிகிறது. |
| ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை திரைப்படமாகிறது Posted: 16 May 2012 06:09 AM PDT கம்ப்யூட்டர் உலகில் மட்டுமின்றி ஐபாட், ஐபேட் உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவராவார். இவர் கடுமையான உழைப்பாளியாக இருந்தது மட்டுமின்றி புதுமையான சிந்தனைகளை கொண்டவராக இருந்தார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி புற்றுநோயால் இறந்து போனார். இவரின் வாழ்க்கை வரலாறு குறித்து புத்தகம் வெளிவந்திருக்கிறது. ஆனால் இவரைப்பற்றி எந்த ஒரு சினிமாவும் வெளிவந்ததில்லை. தற்போது ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாறு ஹாலிவுட்டில் படமாக்கப்பட இருக்கிறது. 'ஸ்டீவ் ஜாப்ஸ்' என்ற பெயரில் கடந்த 2011-ம் ஆண்டு வால்டர் ஐசக்சன் என்பவர், ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி வெளியிட்டார். இப்புத்தகம் விற்பனையில் சாதனை படைத்தது. இந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்த ஹாலிவுட் படம் உருவாக இருக்கிறது. இப்படத்தை சோனி பிக்சர்ஸ் எண்டெர்டெயிண்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தினை ஆஸ்கார் விருதுபெற்ற திரைக்கதையாசிரியரான ஆரோன் சோர்க்கின் எழுதி இயக்குவார் எனத் தெரிகிறது. இவர் கடந்த ஆண்டு வெளியான 'தி சோஷியல் நெட்வொர்க்' என்ற ஆங்கில படத்திற்கு திரைக்கதை எழுதியமைக்காக ஆஸ்கார் விருது பெற்றிருக்கிறார். அதுமட்டுமின்றி 2012-ம் ஆண்டு 'மணிபால்' என்ற ஆங்கிலப்படத்திற்கு திரைக்கதை எழுதியமைக்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. |
| விவசாயிகள் கடனைத் தீர்க்க ரூ.30 லட்சம் கொடுத்த அமிதாப் பச்சன் Posted: 16 May 2012 05:48 AM PDT மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 114 விவசாயிகளின் கடனை அடைக்க பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ரூ.30 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஏராளமான விவசாயிகள் கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து வருகின்றனர். இந்நிலையில் விதர்பா பகுதியில் உள்ள வர்தா மாவட்டத்தில் உள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த 114 விவசாயிகளின் கடன்களை அடைக்க பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ரூ.30 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். வர்தாவில் நடந்த விழாவில் அந்த காசோலைகளை உள்ளூர் எம்.பி. தத்தா மேகே விவசாயிகளிடம் வழங்கினார். அந்த விவசாயிகளுக்கு யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் வர்தா மாவட்ட கூட்டுறவு வங்கிகள் ஆகியவை கடன் வழங்கியுள்ளன. இந்த காசோலை வழங்கும் விழாவில் 90 விவசாயிகள் கலந்து கொண்டனர். விழாவுக்கு வராத 24 விவசாயிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கு சென்று காசோலைகள் வழங்கப்பட உள்ளன. விதர்பா பகுதி விவசாயிகளின் கடன் தொகையை செலுத்த காசோலைகள் வழங்கியது போன்று தங்களுக்கும் வழங்குமாறு உத்தர பிரதேச மாநில பண்டல்கண்ட் விவசாயிகள் அமிதாப் பச்சனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். விதர்பா பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நேரத்தில் அமிதாப் பச்சன் விவசாயிகளுக்கு பணம் கொடுத்து உதவியது அவர்களுக்கு பெருமகிழ்ச்சியாக உள்ளது. அமிதாபின் இந்த செயலை விதர்பா ஜன் அன்டோலன் சமிதி என்னும் என்.ஜி.ஓ. வரவேற்றுள்ளது. |
| 7ஆம் அறிவு டாங்லியின் ப்ளாக் டிராகன் தமிழில் ரிலீஸ் Posted: 16 May 2012 05:42 AM PDT ![]() சூர்யா நடித்த 7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்தவர் டாங்லி ஹாங்காங்கை சேர்ந்தவர். இவர் குங்பூ கலையில் பிளாக் பெல்ட் பெற்றவர். சீன மொழி படங்களில் நடித்து வருகிறார். டாங்லி நடித்த பிளாக் டிராகன் படம் சமீபத்தில் ரிலீசாகி சீனா ஹாங்காங்கில் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரி குவித்தது. ஜேம்ஸ்பாண்ட் பட பாணியில் கடத்தல் கும்பலை மடக்கி பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். படத்தில் வரும் மூன்று சண்டை காட்சிகள் குங்பூ ஸ்டைலில் பார்ப்போரை பிரமிக்க வைக்கும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளன. இந்த படத்தை நாக் ஸ்டூடியோ தமிழில் டப்பிங் செய்து வெளியிடுகிறது. விரைவில் இப்படம் தமிழகமெங்கும் ரிலீசாகிறது. |
| ரூ 12 லட்சத்துக்கு ஏலம் போன மடோனா நிர்வாண படம்!(இணைப்பு) Posted: 16 May 2012 05:25 AM PDT பிரபல கவர்ச்சி பாப் பாடகி மடோனாவின் கறுப்பு வெள்ளை நிர்வாணப் படம் ரூ 12 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பாப் பாடகி, நடிகை மடோனா. இவருக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தற்போது செக்ஸ் புக் என்ற ஆல்பம் தயாரித்துள்ளார். அதிலிருந்து தனது ஒரு நிர்வாண போட்டோவை நியூயார்க்கில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் ஏலம் விட்டார். அந்த போட்டோ ரூ.12 லட்சத்துக்கு ஏலம் போனது. அதை விலைக்கு வாங்கியவர் யார்? என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. அதிக விலைக்கு ஏலம் போன இந்த போட்டோ கடந்த 1990-ம் ஆண்டில் அவர் 30 களில் உச்சத்தில் இருந்தபோது எடுக்கப்பட்டது. கருப்பு, வெள்ளையில் எடுக்கப்பட்ட இந்த போட்டோவில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் மடோனா படு கவர்ச்சியாக உள்ளார். படுக்கையில் படுத்து சிகரெட் பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ 55 செ.மீட்டர் உயரமும் 48.செ.மீட்டர் அகலமும் கொண்டது. இதை போட்டோ கிராபர் ஸ்டீவன் மிசெல் எடுத்துள்ளார். மடோனாவின் செக்ஸ் புக் ஆல்ப புகைப்படக்காரர் இவர்தான். |
| உடல் எடை குறைக்க அமெரிக்காவில் ஹன்சிகா சிகிச்சை Posted: 16 May 2012 05:18 AM PDT 'மாப்பிள்ளை' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா மோட்வானி. ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், விஜய்யுடன் வேலாயுதம், உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களில் நடித்தார். சேட்டை, வாலு, வேட்டை, மன்னன் என நான்கு படங்களில் தற்போது நடித்து வருகிறார். ஹன்சிகா குண்டாக இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. இதனால் நடனம் ஆட வரவில்லை என்றும் கிசுகிசு பரவியது. இதையடுத்து உடல் எடையை நவீன சிகிச்சை மூலம் குறைப்பதற்கு முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு சில நாட்கள் தங்கி உடல் எடை குறைப்புக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளப் போகிறாராம். உடம்பை ஒல்லியாக்கி விட்டு இந்தியா திரும்புகிறார். இந்த சிகிச்சைக்கு பின் ஹன்சிகா இன்னும் அழகாக பிரகாசிப்பார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். |
| குழந்தை நட்சத்திரம் பலியாகிவிட்டாரே - இயக்குநர் உருக்கம்! Posted: 16 May 2012 05:14 AM PDT நேபாளத்தில் நடந்த விமான விபத்தில், 13 வயது குழந்தை நட்சத்திரம் தாருணி சச்தேவ் தன் தாயாருடன் பலியானார். அவர் ரஸ்னா விளம்பரத்திலும், அமிதாப்புடன் பா என்ற இந்திப் படத்திலும் நடித்துப் புகழ் பெற்றவர். அந்த குழந்தை நட்சத்திரம் வெற்றிச்செல்வன் என்ற தமிழ் படத்தில் நடித்து வந்தார். நேபாளத்தில் பக்தி சுற்றுலா சென்ற 21 பேர் பயணம் செய்த விமானம் மலையில் மோதி, விழுந்து நொறுங்கியது. அதில், 4 தமிழர்கள் உள்பட 15 பேர் பலியானார்கள். 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். பலியானவர்களில், 13 வயது குழந்தை நட்சத்திரம் தருணி சச்தேவும் ஒருவர். ரஸ்னா விளம்பரம், பா இந்திப் படம் தவிர, 'வெள்ளி நட்சத்திரம்', சத்யம் போன்ற மலையாள படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் ஷாருக்கானின் குரோர்பதி வினாடி வினா டி.வி. நிகழ்ச்சியிலும் தருணி பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் படம் 'வெற்றிச் செல்வன்' அதைத் தொடர்ந்து, `வெற்றிச் செல்வன்' என்ற தமிழ் படத்தில் கதாநாயகி ராதிகா ஆப்தேயின் தங்கையாக நடிக்க, தருணி சச்தேவ் ஒப்பந்தமானார். இந்த படத்தை ருத்ரன் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. தருணி சச்தேவ் 3 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். இதுபற்றி படத்தின் இயக்குநர் ருத்ரன் கூறுகையில், "தருணி சச்தேவ், சிறிய குழந்தை நட்சத்திரமாக இருந்தபோதே எனக்கு தெரியும். என்னுடைய விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார். அதை வைத்துதான் 'வெற்றிச்செல்வன்' படத்தில், கதாநாயகிக்கு தங்கையாக அவரை ஒப்பந்தம் செய்தேன். மிக திறமையான குழந்தை நட்சத்திரம் அவர். எதிர்காலத்தில் அவர் மிகப்பெரிய நடிகையாக வருவார் என்று எதிர்பார்த்தேன். கோடை விடுமுறையை கழிப்பதற்காக தருணி சச்தேவ் தனது தாயாருடன் நேபாளம் போவதாக, என்னிடம் சொல்லி விட்டுத்தான் சென்றார். அவர் சம்பந்தப்பட்ட அடுத்த கட்ட படப்பிடிப்பு வருகிற 25-ந் தேதி முதல் ஊட்டியில் நடக்கவிருக்கிறது. அதற்குள் திரும்பி வந்து விடுகிறேன் என்று சொன்னார். ஆனால், தருணி சச்தேவ் தன் தாயாருடன் திரும்பி வர முடியாத இடத்துக்கு போய்விட்டார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படத்தில் இருந்து நீக்கப்போவதில்லை. அப்படியே பயன்படுத்தப் போகிறேன்,'' என்றார். அமிதாப்பச்சன் அதிர்ச்சி நடிகை தருணி சச்தேவின் திடீர் மரணம் அமிதாப்பச்சனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. "கடவுளே இந்த துயரமான செய்தி உண்மையாக இருக்கக்கூடாது,'' என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அவருடைய மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனும் தருணியின் மறைவுக்கு அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்து இருக்கிறார். காட்மாண்டில் உடல்கள் விபத்தில் பலியான 15 பேரில், 13 இந்தியர்களின் உடல் விமானம் மூலம் நேபாள தலைநகர் காட்மாண்டு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள மணிபால் மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளன. பிரேத பரிசோதனைக்குப்பின் இந்திய தூதரகத்தின் மேற்பார்வையில் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது. |
| கடும் மின் தட்டுப்பாட்டில் மக்கள்.. அதிமுக அரசின் ஓராண்டு சாதனைக்கு ரூ.25 கோடியில் விளம்பரம்! Posted: 16 May 2012 05:05 AM PDT அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழக முதல்வராக பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஓராண்டு நிறைவு விழா விளம்பரங்களுக்காக மட்டும் அரசு ரூ.25 கோடி செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். ஓராண்டு நிறைவு விழாவையொட்டி அதிமுக அரசு நாட்டின் அனைத்து நாளிதழ்களின் முதல் பக்கத்தில் பெரிய விளம்பரத்தைக் கொடுத்துள்ளது. அரசின் சாதனைகளை விளக்கிக் கூறும் இந்த விளம்பரங்களுக்காக மட்டும் அதிமுக அரசு ரூ.25 கோடி செலவு செய்துள்ளது என்று கூறப்படுகிறது. நூறாண்டு பேசும் ஓராண்டுச் சாதனை என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அந்த விளம்பரத்தின் விவரம் வருமாறு, எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்- இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் இதுதான் என்னுடைய இலட்சியம்! -செல்வி ஜெ. ஜெயலலிதா தமிழக முதல்வர் என்று விளம்பரம் துவங்குகிறது. இதையடுத்து, மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் துரித நடவடிக்கைகளால் செயலற்றுக்கிடந்த தமிழகம் மீண்டும் புதுப்பொலிவுடன் புத்தெழுச்சி பெற்றுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிமுக அரசின் சாதனைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்: பசியாறி மகிழ விலையில்லா அரிசி, பெண்களுக்குத் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம், மகளிர் மனம்குளிர விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, எளியோர் ஏற்றம் பெற விலையில்லா கறவை மாடுகள்/ஆடுகள், மாணவ, மாணவியர் கல்வியில் சிறக்க விலையில்லா மடிக்கணினி, சூரிய மின்சக்தியுடன் பசுமை வீடுகள், தரமான மருத்துவ சேவைக்கு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஓராண்டு சாதனைகளை விளம்பரப்படுத்த ஒரே நாளில் ரூ.25 கோடி செலவு செய்திருப்பதும் ஒரு சாதனை தானே! |
| 52 நாட்களாக நடைபெற்று வந்த தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவுற்றது Posted: 16 May 2012 04:54 AM PDT கடந்த மார்ச் 26-ந் தேதி தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கியது. கூட்டத்தொடரின் துவக்கத்திலேயே நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்நிலையில் 52 நாட்களாக நடைபெற்று வந்த இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் முடிவுற்றது. இன்றுடன் அ.தி.மு.க. அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவு பெறுவதால், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களுக்கு தொண்டர்களும், அ.தி.மு.க. கூட்டணிக் கட்சியினரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் காவல் துறை அதிகாரிகளுக்கு சொந்த வீடு திட்டம், உயர்த்தப்பட்ட மின்கட்டணம் விசைத்தறி உரிமையாளர்களுக்காக குறைக்கப்பட்டது, தி.மு.க. எம்.எல்.ஏக்கள் 4 பேர் சஸ்பெண்டைத் தொடர்ந்து கடந்த ஏப்.20-ந் தேதி முதல் தி.மு.க. சட்டசபை நிகழ்ச்சிகளை புறக்கணித்தது என பல நிகழ்வுகள் நடந்தேறியது குறிப்பிடத்தக்கது. |
| You are subscribed to email updates from விழியே பேசு... To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
























