Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





விழியே பேசு...

விழியே பேசு...


பாதுகாப்பாளர்கள் 2 பேர் சுட்டுக்கொலை அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை: கலெக்டர் அலெக்ஸ் பேட்டி

Posted: 05 May 2012 10:20 PM PDT


சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டராக பணி புரிந்து வந்த அலெக்ஸ் பால்மேனன் கடந்த மாதம் 21-ந் தேதி, மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். அப்போது கலெக்டரை காப்பாற்ற முயன்ற அவரது பாதுகாவலர்கள் இருவரை மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொன்றனர். 13 நாள் பிணைக் கைதியாக இருந்த அலெக்ஸ் பால்மேனன், மாவோயிஸ்டுகளின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக சத்தீஸ்வர் அரசு உறுதி அளித்ததை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டு, வீடு திரும்பினார். 

மாவோயிஸ்டுகளின் பிடியில் இருந்த அனுபவத்தை அலெக்ஸ் பால்மேனன், இணைய தளத்தில் `பேஸ் புக்'கில் எழுதி இருப்பதாவது:- 

சுக்மா மாவட்டத்தில் மஞ்சிபாரா என்ற இடத்தில் சாதாரண ஏழை பழங்குடியின மக்கள் என்னை சூழ்ந்து நிற்க, திடீரென ஒரு கும்பல் என்னை கடத்த முயன்றது. அவர்கள் மாவோயிஸ்டுகள் என்பதை பின்புதான் தெரிந்து கொண்டேன். என்னை அவர்களிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் எனது பாதுகாவலர்கள் ஈடுபட்டனர். 

பாதுகாவலர்கள் இருவரையும் மாவோயிஸ்டுகள் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றனர். இதுபோன்ற மோசமான ஆள் கடத்தல் நிகழும் என்று நான் கற்பனை கூட செய்து பார்த்தது கிடையாது. எனது பாதுகாவலர்கள் அம்ஜத், கிஸுன் ஆகியோர் என் கண் முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இன்னும் மனதை விட்டு அகல வில்லை. அது ஒரு வலிகள் நிறைந்த நினைவுகள் ஆகும். 

அந்த நினைவுகள் என்னை தூங்க விடாமல் செய்கின்றன. இயல்பு நிலைக்கு திரும்பிய உடன் அந்த பாதுகாவலர்களின் குடும்பத்துக்கு என்ன செய்ய முடியும்ப என யோசித்து, அதை செய்து கொடுக்க முயற்சி எடுப்பேன். 

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.








மறுபடியும் அமைச்சரவை மாற்றமா? அதிர்ச்சியில் அமைச்சர்கள்

Posted: 05 May 2012 10:05 PM PDT


தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்ததும் அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதலமைச்சர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக வெளியாகும் செய்திகளால் பல அமைச்சர்கள் கலக்கமடைந்து போயுள்ளனர்.

அதிமுகவில் சசிகலா, ராவணன் உள்ளிட்டோர் அதிரடியாக நீக்கப்பட்டனர். பின்னர் சசிகலா மட்டும் போயஸ் கார்டன் திரும்பியுள்ளார். அப்போதே அமைச்சரவை மாற்றம் என்று பேச்சு அடிபட்டது. ஆனால் சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்காக அமைச்சரவையை மாற்றியமைக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நடப்புக் கூட்டத்தொடர் மே 10-ந் தேதி முதல் மே 13-ந் தேதிக்குள் முடிவடைய உள்ளது.

கூட்டத்தொடர் முடிந்த கையோடு ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து அமைச்சரவை மாற்ற லிஸ்ட்டை ஜெயலலிதா கொடுப்பார் என்று கூறப்படுகிறது. அனேகமாக பல அமைச்சர்கள் பத வி இழக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் அமைச்சரவை எண்ணிக்கையை 27 ஆகக் குறைத்துக் கொள்ளவும் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரைத் தவிர மற்ற அமைச்சர்கள் அனைவருக்குமே கல்தா கொடுத்துவிடுவார் ஜெயலலிதா என்கிறது கோட்டை வட்டாரம். இதனால் பல அதிமுக எம்.எல்.ஏக்கள் அமைச்சர் கனவில் மிதந்து கொண்டிருக்கின்றனர். அமைச்சர்களோ பதவி பறிபோகிறதே என கலங்கிப் போய் கிடக்கின்றனர்.

தற்போது அமைச்சரவையை ஜெயலலிதா மாற்றினால் கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்படும் 7-வது அமைச்சரவை மாற்றமாக இருக்கும்.



மணமகன் வர தாமதம்: மணப்பெண்ணுக்கு, மணமகனின் சகோதரி தாலி கட்டினார்

Posted: 05 May 2012 10:02 PM PDT


கேரள மாநிலம் காயங்குளம் பகுதியை சேர்ந்த கமலேஷ், கடந்த 3 ஆண்டுகளாக துபாயில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்.
 
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அவருக்கு சாரிகிரிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், திருமணத்திற்குச் செல்ல கமலேஷின் கடை உரிமையாளர் அவருக்கு விடுமுறை அளிக்க மறுத்துவிட்டார்.
 
அங்குள்ள தொழிலாளர் துறை அமைச்சகத்தின் மூலம் சமரசம் பேசியும், குறிப்பிட்ட நேரத்தில் கமலேஷின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க அவர் மறுத்துவிட்டார்.
 
இதனால் விமான நிலையத்தில் காத்திருந்த மாப்பிள்ளை கமலேஷ், குறிப்பிட்ட நேரத்தில் ஊருக்கு வர முடியவில்லை. என்றாலும், சுபமுகூர்த்த நேரத்தை தவறவிட விரும்பாத இரு வீட்டாரும் துணிச்சலான முடிவை எடுத்தனர்.
 
அதன்படி, கமலேஷின் சகோதரி தகவிதா மணமகன் சார்பில் மணப்பெண்ணுக்கு தாலி கட்டினார். திருமண விருந்து முடிந்ததும், புதுப்பெண் சாரி கிரிஷா, மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.



கமலின் ஆசியுடன் விஜயின் 'துப்பாக்'கிக்கு வந்த சோதனை

Posted: 05 May 2012 09:47 PM PDT


விஜய்யின் துப்பாக்கி படம் இன்னும் ஒரு தலையாய சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளது. இது தலைப்பு சர்ச்சை.

பல மாதங்களுக்கு முன்பே கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பை பதிவு செய்து படப்பிடிப்பையும் தொடங்கியவர் சி ரவிதேவன் மற்றும் முருகேசன். இந்தப் படத்தை இயக்குபவர் லோகியாஸ்.

நடிகர் கமல் ஹாஸனிடம் உதவியாளராக இருந்தவர் தயாரிப்பாளர் ரவிதேவன்.

படத்தையே, பத்மஸ்ரீ கமல்ஹாஸன் ஆசீர்வாதத்துடன்' என்றுதான் ஆரம்பித்தார். கமல் அட்வைஸ்படி ஒத்திகையெல்லாம் பார்த்துதான் படப்பிடிப்பைத் தொடங்கினாராம்.

படம் குறித்த விளம்பரங்கள், செய்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன கடந்த இரு ஆண்டுகளாக. இந்தத் தலைப்பை 2009-லேயே அவர்கள் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதனைப் புதுப்பித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், நண்பன் படத்துக்குப் பிறகு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு துப்பாக்கி என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தலைப்பை இந்த ஆண்டுதான் விஜய் மற்றும் முருகதாஸ் முடிவு செய்துள்ளனர்.

துப்பாக்கி டைட்டில் டிஸைனும் கிட்டத்தட்ட 'கள்ளத்துப்பாக்கி' பாணியில் உள்ளது. மே முதல் நாள் அன்று துப்பாக்கி மற்றும் கள்ளத்துப்பாக்கி போஸ்டர்கள் கோடம்பாக்கம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன. அதுவும் இரண்டும் அடுத்தடுத்து ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பைக் கிளப்பியது.

இன்னொரு பக்கம் தங்கள் பட போஸ்டர் ஒட்டப்பட்ட இடத்தில் அதற்கு மேலேயே விஜய் பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாக குற்றச்சாட்டியிருந்தனர் கள்ளத்துப்பாக்கி குழுவினர்.

விஜய்யின் துப்பாக்கி தலைப்பு அறிவிக்கப்பட்ட போதே, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார்களாம் ரவிதேவனும் அவரது குழுவினரும். ஆனால் அப்போது சங்கத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் எஸ் ஏ சந்திரசேகரனும் துப்பாக்கி தயாரிப்பாளர் தாணுவும். இவர்கள் புகாரை யாரும் கண்டுகொள்ளவில்லையாம்.

ஆனால் சங்கம் இப்போது உடைந்துள்ள நிலையில், இப்ராகிம் ராவுத்தரிடம் போய் முறையிட்டுள்ளார்களாம்.

இதுகுறித்து கள்ளத்துப்பாக்கி தயாரிப்பாளர் ரவிதேவன் நம்மிடம் கூறுகையில், "விஜய்யின் துப்பாக்கி படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே எங்கள் கள்ளத்துப்பாக்கி படத்துக்கு பிரச்சினை வந்துவிட்டது.

மே 1-ம் தேதி எங்கள் படத்தின் போஸ்டர்களை ஒட்ட திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதை ஒட்டவிடாமல் சதி நடந்திருக்கிறது. நாங்கள் போஸ்டர் ஒட்டவிருந்த இடத்தில், அதே தேதியில் 'துப்பாக்கி' போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

எனவே அடுத்த நாள் நாங்கள் போஸ்டர் ஒட்டினோம். உடனே, அன்று இரவே மீண்டும் போஸ்டர் அடித்து எங்கள் கள்ளத்துப்பாக்கி போஸ்டர் மீது ஒட்டி எங்கள் படத்தை மறைத்துவிட்டனர்.

ஆரம்பத்தில் நாங்கள் விஜய் படத்தை எங்களுக்கு எதிராக நினைக்கவில்லை. ஆனால் இப்போது மிகப் பெரிய அச்சுறுத்தலாகப் பார்க்கிறோம். துப்பாக்கி என்ற தலைப்பை அவர்கள் பயன்படுத்துவதற்காக, எங்கள் படத்துக்கு எந்த அளவுக்கு போயும் பிரச்சினை செய்வார்கள் என நாங்கள் பயப்படுகிறோம். எனவே விஜய் படத்துக்கு துப்பாக்கி என்ற தலைப்பை பயன்படுத்தக் கூடாது," என்றார்.

இந்தப் பிரச்சினை இப்போது தயாரிப்பாளர் சங்கத்துக்கு போயுள்ளது.



தி.மு.க. தூண்டுதலால் சோதனை நடந்தது: மதுரை ஆதீன மடம் அறிவிப்பு

Posted: 05 May 2012 09:37 PM PDT


பழம்பெருமை வாய்ந்த மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கி உள்ளனர். பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட நித்யானந்தாவை மதுரை ஆதீனமாக நியமித்தது சரியல்ல என்று மற்ற தமிழக ஆதீனங்களும் இந்து அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டு கிளையிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் மத்திய வருமான வரித்துறை மதுரை துணை ஆணையர் சுந்தரேசன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் மதுரை ஆதீன மடத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு மடத்தின் ஆதீனம் மட்டும்தான் இருந்தார். நித்யானந்தா இல்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் ஆதீன மடத்தின் வரவு-செலவு கணக்குகளை கேட்டு அதற்கான ஆவணங்களையும் சரிபார்த்ததாக கூறப்படுகிறது.

ஆதீன மடத்துக்குரிய வங்கி கணக்குகள் குறித்து விசாரிக்கப்பட்டது. மேலும் ஆதீன மடத்தில் பணியாற்றும் ஊழியர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது வங்கி கணக்கு பரிமாற்றம் ஆதீன மடத்தின் சார்பில் வாடகைக்கு விடப்பட்டுள்ள கடைகள் விவரம், அதன்மூலம் வரும் மாத, ஆண்டு வருமானம் எவ்வளவுப என அதிகாரிகள் கேட்டு அதற்கான ஆவணங்களை பெற்றனர்.

இங்கு இருந்த தங்க ஆபரணங்கள், தங்க கிரீடம், செங்கோல் மற்றும் பொருட்களின் விவரங்களையும் கேட்டு அறிந்தனர். இந்த சோதனை மதியம் 1.45 மணி வரை 6 மணி நேரம் நடைபெற்றது. இந்த சோதனையின்போது ஆதீன மடத்தில் இருந்து பல்வேறு ஆவணங்களை சேகரித்து 4 பெட்டிகளையும் அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

மதுரை ஆதீன மடத்தில் நடந்த சோதனை குறித்து மடத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி பாண்டிசெல்லம் கூறியதாவது:-

கடந்த தி.மு.க. ஆட்சியில் நித்யானந்தா மடம் குறித்து அவதூறு பரப்பப்பட்டது. தற்போது ஆட்சி மாறிவிட்டது. ஆனால் தி.மு.க.வை சேர்ந்த பிரமுகர்கள் சிலர் அக்கட்சியின் மத்திய மந்திரி மூலம் மதுரை ஆதீன மடத்தில் சோதனை நடத்தி நித்யானந்தாவுக்கு எதிராக செயல்படுகிறார்கள். இந்த சோதனை எதிர்பார்க்கப்பட்டது தான்.

சோதனையின்போது எவ்வித ஆவணங்களும் எடுத்து செல்லப்படவில்லை. மடத்தில் உள்ள அனைத்து பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சட்டரீதியாக ஆதீன மடத்தின் வரவு-செலவுகள் செயல்படுத்தப்படுகிறது.

தற்போது ஆதீன மடத்துக்கு பாதுகாப்பாற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாநில அரசு ஆதீன மடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



மதுரை ஆதீன மடத்தில் வருமான வரித்துறை சோதனை ஏன்?: பரபரப்பு தகவல்கள்

Posted: 05 May 2012 04:26 AM PDT


மதுரை ஆதீன மடத்தில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைக்கு முக்கிய காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.
 
மதுரை ஆதீனம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்ட்ட இந்த ஆதீனத்துக்கு பல ஆயிரம் கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளன. ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக கடந்த வாரம் நித்யானந்தா நியமிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடந்த விழாவில் மதுரை ஆதீனத்துக்கு, நித்யானந்தா தங்க மூலாம் பூசப்பட்ட செங்கோலை பரிசாக வழங்கினார். ஆதீனமும் நித்யானந்தாவுக்கு தங்க கீரிடம் சூட்டினார். இதே போல் பெங்களூரில் இளைய ஆதீனமாக நித்யானந்தா முடிசூட்டிக் கொண்ட விழாவிலும் மதுரை ஆதீனத்துக்கு, நித்யானந்தா தங்க செங்கோல், கீரிடங்களை வழங்கினார்.
 
கடந்த சனிக்கிழமை மதுரை வந்த நித்யானந்தாவும், மதுரை ஆதீனமும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அதற்கு முன் நடந்த நிகழ்ச்சியில் 2 பேரும் அதிகமான விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை அணிந்திருந்தனர். சித்ரா பவுர்ணமி தினமான இன்று இரவு (5-ந்தேதி) திருவண்ணாமலையில் நித்யானந்தாவுக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் இன்று மதியம் புறப்பட திட்டமிட்டு இருந்தார். இந்த விழாவிலும் தங்க செங்கோல், தங்க கீரிடம், தங்க சிம்மாசனம், பாதுகைகள் ஆகியவற்றை மதுரை ஆதீனத்துக்கு அணிவிக்கப்படும் என நித்யானந்தா அறிவித்து இருந்தார்.
 
அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன. மதுரை ஆதீனத்துக்கு பல கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல்களும் அடிக்கடி உலா வந்தன. மதுரை ஆதீனத்துக்குட்பட்ட சொத்துகளுக்கு வரி செலுத்தாமல் ஆதீனம் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றது. இந்நிலையில் இன்று காலை 2 கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் மதுரை ஆதீனமடத்தில் அதிரடியாக புகுந்தனர். அவர்கள் மடத்தின் அனைத்து கதவுகளை உள் புறமாக பூட்டி கொண்டு மடத்தின் அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தினர். சோதனையில் அறைகளில் இருந்து பல கோடிகள் மதிப்புள்ள தங்க நகை, பணம் ஆகியவை ஒரே இடத்தில் குவித்து வைத்து அதனை அதிகாரிகள் வீடியோவில் பதிவு செய்தனர்.
 
மேலும் நகை, பணத்துக்கு முறைப்படி வருமானவரி கட்டப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொண்டனர். ஆதீனத்தின் சொத்துக்களின் ஆவணங்களை சோதித்து விசாரணை நடத்தினர். ஆதீனத்துக்குட்பட்ட சொத்துக்கள், மடத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அவர்களின் சம்பளம் ஆகிய விபரங்களை மதுரை ஆதீனத்திடம் கேட்டு பெற்றனர். சமீப காலமாக மதுரை ஆதீனமும், நித்யானந்தாவும் அதிகளவு ஆபரணங்களை அணிந்து வருகின்றனர். மேலும் மதுரை ஆதீனத்துக்கு பல கோடி ரூபாய் கைமாறி உள்ளதாக என அடிக்கடி வந்த தகவல்களை அடுத்து வருமான வரித்துறை சோதனை நடத்தி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் சோலைக் கண்ணன் கூறுகையில், மதுரை ஆதீனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருப்பதன் மூலம் மத்திய அரசு விழித்துக் கொண்டுள்ளது.
 
ஆனால் மாநில அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநில அரசு இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து ஆதீன சொத்துக்களை மீட்க வேண்டும் என்றார்.



லெனினை விஷம் கொடுத்து கொன்றாரா ஸ்டாலின்?

Posted: 05 May 2012 03:38 AM PDT


ரசிய புரட்சியாளர் விளாடிமிர் லெனினை அவரது தோழரான ஜோசப் ஸ்டாலின்தான் விஷம் கொடுத்து கொலை செய்ததாக புதுகதை ஒன்று கிளம்பி உள்ளது.

கம்யூனிச சித்தாந்தத்தின் மூலம் புரட்சியை உருவாக்கியவர் விளாடிமிர் லெனின். ரசியாவில் வீரஞ்செறிந்த புரட்சியை நடத்தியவர். ரசிய அதிபராக லெனின் இருந்த காலத்தில் அவருக்குப் பின் அதிபர் பொறுப்பேற்கக் கூடிய வகையில் செல்வாக்குமிக்க மனிதர்களாக இருந்தவர்கள் ஸ்டாலின் மற்றும் டிராட்ஸ்கி.

தொடக்க காலத்தில் லெனின், ஸ்டாலினை ஆதரித்ததாகவும் பின்னர் டிராட்ஸ்கிதான் தமக்குப் பின்னர் சரியான நபர் என முடிவு செய்ததாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல் ஸ்டாலினின் சர்வாதிகாரத்தனத்தை அவர் விமர்சித்தும் வந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ஸ்டாலினை நீக்கவும் லெனின் முடிவு செய்திருந்ததாகவும் கூறுகிறார் ரசிய வரலாற்று ஆய்வாளர் லெ லுரி.

இதனால் அதிருப்தி அடைந்த ஸ்டாலின், விஷத்தைக் கொடுத்து லெனினை கொலை செய்ததாகவும் எப்பொழுதுமே தமது எதிரிகளை ஒழித்துக் கட்ட ஸ்டாலின் விஷத்தைத்தான் கையிலெடுப்பார் என்றும் சுட்டிக்காட்டுகிறார் அவர்.

இத்தோடு விட்டுவிடாத லுரி, இந்த சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளவும் வழி இருக்கிறது.. ஏனெனில் லெனினின் பதப்படுத்தப்பட்ட மூளை இன்றும் மாஸ்கோவில்தானே இருக்கிறது என்றும் ஒரே போடாய் போடுகிறார். இதற்கெல்லாம் ஆதாரமாக அவர் பேசுவது லெனினின் பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்துத்தான்! லெனின் பிரேத பரிசோதனை அறிககையில் மூளை மிகவும் கடினமாகிப் போயிருந்தது என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளதாகவும் இதுவரை எப்படிக் கடினமாகிப் போனது என எவரும் சொல்லவில்லை என்பதாலே மர்மம் நீடிக்கிறது என்றும் லுரி சொல்கிறார்.

புரட்சியாளர்களுக்கு எப்பொழுதும் சகாக்களே சங்கட கர்த்தார்க்கள் என்பதே நிதர்சனம் போல...





Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™