விழியே பேசு... |
- பின்லேடன் உடல் இந்தியாவில் அடக்கம் செய்யப்பட்டது: அமெரிக்கர் பரபரப்பு தகவல்
- நகைகள், பல கோடி ரொக்கத்துக்கு கணக்கு எங்கே? - மதுரை ஆதீனத்திடம் அதிகாரிகள் விசாரணை
- ஜனாதிபதி தேர்தல்: பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு பெருகுகிறது
- மதுரை ஆதீனத்தில் வருமானவரித்துறை திடீர் ரெய்டு!!
- பின்லேடனை கொல்லச் சென்ற அமெரிக்க படைக்கு ஒபாமா பிறப்பித்த உத்தரவு என்ன?: புதிய தகவல்
- அபிஷேக் சிங்வியை தூக்கில் போட வேண்டும்: அன்னாஹசாரே
- அஜித்ன்னா பயமா! விஜய்ன்னா இளக்காரமா...!!
- புதுக்கோட்டை இடைத்தேர்தல்: தே.மு.தி.க.வுக்கு தி.மு.க ஆதரவா?
- ஜனாதிபதி தேர்தலும் சில 'சாஸ்திரங்களும்'!
- எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் ; சினிமாவுக்கு ஐஸ்வர்யாராய் டாட்டா
- ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தை சேர்ந்தவருக்கு 38-வது இடம்
- எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம் முதலிடம்
- பிரபு மகனுக்காக தன் 'பாலிஸியை' தளர்த்திய சூப்பர் ஸ்டார்!
- புதிதாக கட்டப்பட்ட சாய்பாபா கோவிலில் அஜித்
- இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் இந்தியா நாடகமாடுகிறது: நாஞ்சில் சம்பத் பேச்சு
- பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 20 பேர் பலி
- குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடி இனத்தவரை நிறுத்த தீவிரம்
- கோச்சடையானுக்காக தீபிகாவுடன் பரத நாட்டியம் ஆடிய ரஜினி!
| பின்லேடன் உடல் இந்தியாவில் அடக்கம் செய்யப்பட்டது: அமெரிக்கர் பரபரப்பு தகவல் Posted: 04 May 2012 11:19 PM PDT அல்கொய்தா தீவிரவாதிகளின் தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த ஆண்டு மே 2-ந் தேதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் சுட்டு கொல்லப்பட்டார். அமெரிக்காவின் நேவிசீல் ராணுவ பிரிவினர் இந்த ஆபரேசனை வெற்றிகரமாக முடித்தனர். பின்லேடன் உடலை புதைத்தால் அந்த இடத்தில் அவரது ஆதரவாளர்கள் நினைவு சின்னம் அமைக்க கூடும் என கருதி அவரது உடலை உறவினர்களிடம் அமெரிக்கா வழங்கவில்லை. மாறாக போர்க்கப்பலில் உடலை எடுத்து சென்று ஆழ் கடலில் புதைத்து விட்டனர். ஆனால் எந்த கடலில் உடல் புதைக்கப்பட்டது என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. இதற்கிடையே பின்லேடன் கொல்லப்பட்ட ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி சமீபத்தில் பின்லேடன் அடக்கம் செய்யப்பட்ட படம் வெளியிடப்பட்டது. இருந்தாலும் உடல் புதைக்கப்பட்ட கடல் எது என்று கண்டறிய முடிய வில்லை. இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பில் வார்ரென் என்பவர் பின்லேடன் உடல் அரபிக்கடலில் அடக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் அருகே 320 கி.மீட்டர் தூரத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார். ஏனெனில் இவர் கடலில் மூழ்கி கிடக்கும் கப்பல்களில் இருந்து புதையல் வேட்டை நடத்தி வருகிறார். இது குறித்து ஸ்பெயின் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:- பின்லேடன் உடலை கடலில் அடக்கம் செய்த போட்டோவை அமெரிக்க ராணுவம் சமீபத்தில் வெளியிட்டது. அதை வைத்து பார்க்கும் போது அது அரபிக்கடல் போன்று தெரிகிறது. மேலும் குஜராத் மாநிலம் சூரத் கிழக்கே 320 கி.மீட்டர் ஆழத்தில் அவர் ஜலசமாதி செய்யப்பட்டிருக்கலாம். அவரது உடலையும் அது வைக்கப்பட்டிருந்த பெட்டியையும் நான் மீட்பேன். அதற்கான நடவடிக்கையை வருகிற ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறேன். இதற்கு ரூ.1 கோடி வரை செலவாகும். நான் அமெரிக்காவின் தேச பக்தன். பின்லேடன் உடல் புதைக்கப்பட்ட இடத்தை தெளிவாக காட்டுவதில் ஒபாமா தோல்வி அடைந்தார். எனவேதான் அந்த முயற்சியில் நான் ஈடுபட்டு இருக்கிறேன். இப்பணியில் 3 மாதங்கள் ஈடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார். |
| நகைகள், பல கோடி ரொக்கத்துக்கு கணக்கு எங்கே? - மதுரை ஆதீனத்திடம் அதிகாரிகள் விசாரணை Posted: 04 May 2012 11:17 PM PDT மதுரை ஆதீன மடத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மடத்தில் உள்ள பல கோடி மதிப்புள்ள நகைகள், தங்க கிரீடங்கள், செங்கோல்கள் மற்றும் ரொக்கப் பணத்துக்கு கணக்கு தருமாறு மதுரை ஆதீனம் அருணகிரியிடம் விசாரணை நடந்து வருகிறது. மண்டல இணைக் கமிஷனர் தலைமையில் 5 அதிகாரிகள் குழு இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட சென்றபோது மதுரை ஆதீனம் ஸ்ரீஅருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரம்மாச்சார்யா மட்டுமே இருந்தார். இளைய ஆதீனம் நித்யானந்தா இல்லை. நித்யானந்தா பெங்களூர் சென்று விட்டதால், அவரது சீடர்கள் சிலர் மட்டுமே ஆதீன வளாகத்தில் இருந்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள், ஆதீனத்தில் இருந்த யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. அதுபோல வெளியில் இருந்து யாரும் உள்ளே வர அனுமதிக்கவில்லை. எல்லா கதவுகளையும் மூடிக்கொண்டு சோதனை நடத்தினார்கள். மதுரை ஆதீனம் 2 மாடி கட்டிடம் மற்றும் வளாகத்தை கொண்டது. அந்த வளாகம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் சோதனை செய்து கொள்ளுங்கள் என்று அருணகிரி அனுமதி கொடுத்தார். இதையடுத்து ஆதீனம் முழுக்க ஒவ்வொரு அறையாக சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அதிகாரிகள் 2 குழுவாகப் பிரிந்து இந்த சோதனையை மேற்கொண்டனர். நித்யானந்தா இளைய ஆதீனமாக பொறுப்பு ஏற்றபோது அவருக்கு தங்க கிரீடம் சூட்டப்பட்டது. கையில் தங்க செங்கோல் கொடுக்கப்பட்டது. அதுபோல பெரிய ஆதீனமும் தங்க கிரீடம் மற்றும் கையில் தங்க செங்கோலுடன் காணப்பட்டார். ஸ்ரீஅருணகிரி ஞானசம்பந்தரும், நித்யானந்தாவும் ஏராளமான தங்க ஆபரணங்களும் அணிந்திருந்தனர். அந்த நகைகள் குறித்து வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். நகைகள் தவிர ஆதீனத்தில் பல கோடி பணம் கையிருப்பு உள்ளது. அந்த பணத்துக்கு முறையாக கணக்கு உள்ளதா? என்றும் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர். இது தவிர ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றுக்கு மதுரை ஆதீனம் சார்பில் முறைப்படி வருமான வரி கட்டப்பட்டுள்ளதா? எவ்வளவு வரி ஏய்ப்பு நடந்துள்ளது? என்று கணக்குகள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. |
| ஜனாதிபதி தேர்தல்: பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு பெருகுகிறது Posted: 04 May 2012 11:10 PM PDT பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க ஜூலை மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஜனாதிபதியாகும் வாய்ப்பு யாருக்கு இருக்கிறது என்பதில் இன்னமும் தெளிவான சூழ்நிலை உருவாகவில்லை. காங்கிரஸ், பா.ஜனதா இரண்டுமே மாநில கட்சிகளை நம்பி இருக்க வேண்டியதிருப்பதால் தற்போது ஒருமித்த கருத்தை உருவாக்கும் முயற்சிகள்தான் நடந்து வருகின்றன. பா.ஜனதா மற்றும் சில மாநில கட்சிகள் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை மீண்டும் ஜனாதிபதி ஆக்க நினைத்தன. ஆனால் பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பால் அந்த திட்டம் முடங்கிப்போனது. அப்துல் கலாமை ஆதரிக்க தயார் என்று கூறி வந்த முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் தன் முடிவில் இருந்து தற்போது பின் வாங்கிவிட்டது. புதிய ஜனாதிபதியை சாதி, மத, இன அடிப்படையில் தேர்வு செய்யக் கூடாது என்று சமாஜ்வாடி கட்சி கருத்து தெரிவித்துள்ளதால் எதிர்க்கட்சிகள் சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்பதில் இன்னமும் ஒருமித்த கருத்து உருவாகவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி ஆகிய இருவரில் ஒருவரை அடுத்த ஜனாதிபதி ஆக்கலாம் என்று கருதுகிறது. பிரணாப் முகர்ஜி தான் வேட்பாளர் அல்ல என்று கூறி வந்த போதிலும் அவரை மையமாக வைத்து காங்கிரஸ் தலைவர்கள் காய்களை நகர்த்தி வருகிறார்கள். ஹமீத் அன்சாரியை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று இடது சாரி கட்சிகள் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. நேற்று இடதுசாரி கட்சித் தலைவர்கள் சரத்பவார், முலாயம்சிங் யாதவை இது தொடர்பாக சந்தித்துப் பேசினார்கள். ஆனால் அவர்களுக்கிடையே அதிகாரப்பூர்வ மாக எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. அன்சாரியை இடது சாரிகள் ஆதரிப்பதால் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அவரை ஆதரிக்குமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே கடன் தள்ளுபடி விஷயத்தில் மத்திய அரசுக்கும், மம்தாவுக்கும் இன்னமும் இணக்கமான சூழ்நிலை ஏற்படவில்லை. ஆன்சாரியை வேட்பாளராக நிறுத்தும்பட்சத்தில் மம்தாவுடனான மோதல் கூட்டணியில் உச்சக்கட்ட பிளவை ஏற்படுத்தி விடக்கூடும் என்று காங்கிரசார் கருதுகிறார்கள். எனவே பிரணாப் முகர்ஜியை முன் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மண்ணின் மைந்தர் என்ற அடிப்படையில் பிரணாவுக்கு மம்தா பானர்ஜி ஆதரவளிப்பார் என்று காங்கிரசார் எதிர்பார்க்கிறார்கள். இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி வெளிப்படையாக பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் கூட்டணியின் முக்கிய கட்சி முதன் முதலாக ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக ஆதரவு அதிகரித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மற்ற முக்கிய கட்சிகளையும் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவாக மாற்றும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது. |
| மதுரை ஆதீனத்தில் வருமானவரித்துறை திடீர் ரெய்டு!! Posted: 04 May 2012 10:57 PM PDT மதுரை ஆதீனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தி வருவதாக கூறப்படுகின்றது. தமிழகத்தில் மொத்தம் 18 ஆதீன மடங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மதுரை ஆதீனமும் ஒன்று. இந்த மதுரை ஆதீனம் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மதுரை ஆதீனத்திற்கு தமிழகம் முழுக்க பல கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளது. இந்த ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக நித்யானந்தா-வை 292 வது மதுரை ஆதீனம் அருணகிரி நியமித்துள்ளார். மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பு ஏற்றதற்கு ரூ.1 கோடி வரை செலவு செய்துள்ளார் நித்யானந்தா. மேலும் ரூ 4 கோடியை மதுரை ஆதீனத்துக்கு காணிக்கையாக தருவதாகவும் அறிவித்துள்ளார். பல்வேறு சர்ச்சைகள் மற்றும் வழக்குகளில் சிக்கியுள்ள நித்யானந்தாவை மடாதிபதியாக நியமித்துள்ளதற்கு தமிழகத்தில் உல்ள பல்வேறு ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை மற்றும் மதுரை நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், மத்திய அரசின் வருமான வரித்துறை மதுரை ஆதீனத்தில் இன்று காலை முதல் திடீர் ரெய்டு நடத்தி வருவதாக தகவல் வெளியானது. விசாரித்ததில், தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள மடத்தில் 5 அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருவது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த ரெய்டால் மதுரை ஆதீனம், நித்யானந்தா ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வருமான வரித்துறையின் அதிரடி சோதனை மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| பின்லேடனை கொல்லச் சென்ற அமெரிக்க படைக்கு ஒபாமா பிறப்பித்த உத்தரவு என்ன?: புதிய தகவல் Posted: 04 May 2012 10:54 PM PDT பாகிஸ்தானில் அபோதாபாத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதியான அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த ஆண்டு மே மாதம் 2-ந் தேதி அமெரிக்க அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வேட்டையை அமெரிக்கா மிகவும் ரகசியமாக திட்டம் தீட்டி வெற்றிகரமாக செயல்படுத்தியது. இந்த வேட்டை முடிந்து அமெரிக்கா அறிவித்த பிறகே இத்தகவல் பாகிஸ்தானுக்கு தெரியவந்து அதிர்ச்சி அடைந்தது. பின்லேடன் கொல்லப்பட்டு ஓராண்டாகி விட்டது. இதன் பிறகும் பின்லேடனை கொல்ல நடந்த வேட்டை குறித்தும், பின்லேடன் தனது கடைசி கால கட்டத்தில் என்னென்ன திட்டங்களை தீட்டினார் என்ற விவரங்களும் பரபரப்பாக வெளிவந்த வண்ணம் இருக்கிறது. பின்லேடன் தங்கிய வீட்டில் கிடைத்த சில முக்கிய ஆவணங்களும் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் வணிக மைய இரட்டை கோபுரம் கட்டிடம் மீது நடந்த தாக்குதல் முதல் பின்லேடன் கொல்லப்பட்டது வரையில் நடந்த 10 ஆண்டு தேடுதல் வேட்டை குறித்து பீட்டர் எல்.பெர்கென் என்பவர் 'மேன்ஹெண்ட்' என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். பின்லேடனின் வேட்டையின் போது அமெரிக்க படைகள் என்ன செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி ஒபாமா பிறப்பித்த உத்தரவு பற்றிய விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- பின்லேடனின் வேட்டையில் ஈடுபட்ட அமெரிக்க சிறப்பு படைக்கு கமாண்டராக வில்லியம் மெராவென் இருந்தார். அவருக்கு ஜனாதிபதி ஒபாமா தெளிவான உத்தரவுகளை பிறப்பித்து இருந்தார். அதில் ஏதாவது எதிர்ப்பு கிளம்பினால் அமெரிக்க படையினர் தங்களின் பாதுகாப்புக்கு தான் முன்னுரிமை கொடுத்த செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் அபோதாபாத்துக்கு சென்று சேர்ந்ததும் அல்லது பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு பாகிஸ்தான் எதிர்த்தால் என்னென்ன செய்ய வேண்டும் என சிறப்பு படையினர் தீவிரமாக ஆலோசனை நடத்தி முடித்து விட்டுதான் புறப்பட்டு சென்றனர். மேலும் பின்லேடனை கொல்ல எடுக்கும் நடவடிக்கை குறித்த திட்டத்தை உயர் அதிகாரிகள் மிகவும் ரகசியமாக தீட்டி அது வெளியே கசிந்து விடாமல் பாதுகாத்து வந்தார்கள். அதனாலேயே பாகிஸ்தானுக்கோ, அந்த பங்களா பகுதியில் வசித்த பொதுமக்களுக்கோ தெரிய வரவில்லை. இந்த நடவடிக்கை மேற்கொண்ட போது சண்டையிடும் சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ளும் ஏற்பாடுகளுடன் தான் அமெரிக்க படை சென்றது. ஒருவேளை பாகிஸ்தான் ராணுவம் எதிர்த்தால் கூட சண்டையிடும் தயார் நிலையிலேயே அமெரிக்கப்படை இருந்தது. ஆனால் அதற்கு அங்கு அவசியம் ஏற்படவில்லை. இவ்வாறு அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
| அபிஷேக் சிங்வியை தூக்கில் போட வேண்டும்: அன்னாஹசாரே Posted: 04 May 2012 10:51 PM PDT காங்கிரஸ் செய்தி தொடர் பாளர் அபிஷேக் சிங்வி செக்ஸ் சி.டி. விவகாரத்தில் சிக்கியுள்ளார். அவர் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றது. இதையடுத்து அவருக்கு எதிராக பாரதீய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க் கொடி உயர்த்தின. இதனால் அபிஷேக் சிங்விக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் அபிஷேக் சிங்வி ஆபாச சி.டி. போலியானது என்று தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்த நிலையில் ஊழல் எதிர்ப்புவாதி அன்னா ஹசாரே அபிஷேக் சிங்வியை கடுமையாக சாடியுள்ளார். மராட்டியத்தில் ஊழலுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அன்னா ஹசாரேயிடம் பீட் என்ற இடத்தில் நிருபர்கள் சந்தித்து அபிஷேக் மீதான செக்ஸ் சி.டி. விவகாரம் குறித்து கருத்து கேட்டனர். அப்போது அன்னாஹசாரே கூறியதாவது:- அபிஷேக் சிங்வி மீதான ஆபாச சி.டி. புகார் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கில் போட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மேலும் கூறியதாவது:- அரசு அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை அரசு இணைய தளத்தில் வெளியிட வேண்டும். ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டால் ஊழல் அதிகாரிகள் ஜெயிலில் தள்ளப்படுவார்கள். இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார். அபிஷேக் சிங்வி டெல்லி மேல்-சபை காங்கிரஸ் எம்.பி. யாக உள்ளார். அவரது பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து மீண்டும் மேல்- சபை எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த நிலையில் தான் அபிஷேக் சிங்வி மீது செக்ஸ் சி.டி. குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது அவர் டெல்லி மேல்-சபையில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்கவில்லை. உடல் நலக்குறைவு மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக தனக்கு ஏப்ரல் 24-ந்தேதி முதல் மே 22-ந்தேதி வரை விடுமுறை கேட்டு மேல்-சபை தலைவருக்கு கடிதம் அனுப்பினார். பாராளுமன்ற கூட்டத் தொடர் மே 22-ந்தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அபிஷேக் சிங்வி பாராளுமன்ற குழு தலைவராக இருந்தார். அதையும் அவர் ராஜினாமா செய்தார். |
| அஜித்ன்னா பயமா! விஜய்ன்னா இளக்காரமா...!! Posted: 04 May 2012 10:45 PM PDT ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் 'துப்பாக்கி' திரைப்படத்தை 'வீ கிரியேன்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. துப்பாக்கி படத்தின் விளம்பர போஸ்டர்கள் 1.5.2012 அன்று விளம்பரப்படுத்தப்பட்டன. இத்திரைப்படம் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனத்தால் விநியோகம் செய்யப்படவுள்ளது. 'துப்பாக்கி' திரைப்படத்தின் இந்த விளம்பரத்தில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி பெரிய அளவிலும், முதன்மையாகவும் இடம்பெற்றுள்ளது.இவ்வாறு புகைப்பிடிக்கும் காட்சி விளம்பரங்களில் இடம் பெற்றுள்ளது இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட இயக்குநர்கள் சங்கம், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், மத்திய திரைப்பட தணிக்கைக்குழு என திரைப்படம் தொடர்பான அனைத்து அமைப்புகளுக்கும் 29.11.2011 அன்று தமிழ்நாடு அரசின் பொதுச் சுகாதாரத்துறை எழுதிய கடிதத்தில் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை கட்டுப்படுத்தும் நடுவண் அரசாணை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.26-03-2012 அன்று கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை கட்டுப்படுத்தும் நடுவண் அரசாணையை செயல்படுத்த உத்தரவிடப் பட்டுள்ளது. இந்நிலையில் பசுமைத்தாயகத்தின் மாநில தலைவர் சௌமியா அன்புமணி கொடுத்துள்ள புகாரில் " இவ்வாறாக, நடுவண் அரசு, தமிழ்நாடு அரசு, மத்திய திரைப்பட தணிக்கைத் துறை, நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அதிகார அமைப்புகளும் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை கட்டுப்படுத்தும் நடுவண் அரசாணையை செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், விளம்பரங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவது சட்டப்படிக் குறறம் என்கிற உண்மையை அறிந்த பின்னரும், 'துப்பாக்கி' திரைப்படத்தின் விளம்பரத்தில் புகைபிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே 'துப்பாக்கி' திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தரும், இயக்குநரும், நடிகரும் இத்திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறாமல் தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய அரசு புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தினை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் பசுமைத் தாயகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" என கூறியுள்ளார். அஜித் நடித்த அசல், மங்காத்தா படங்களில் இதேபோல் புகையிலை பயன்படுத்தும் காட்சிகள் தண்ணி அடிக்கும் காட்சிகள் எக்கச்சக்கமாக இடம்பெற்றிருந்தன. அஜித் படத்திற்கு வராத பிரச்சனை விஜய் நடித்துள்ள படத்திற்கு வந்துள்ளது. விஜய் மீது ஏன் இந்த கொலவெறி............ |
| புதுக்கோட்டை இடைத்தேர்தல்: தே.மு.தி.க.வுக்கு தி.மு.க ஆதரவா? Posted: 04 May 2012 11:05 AM PDT புதுக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க கூட்டனியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு 3101 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எஸ்.பி. முத்துக்குமரன் கடந்த ஏப்ரல் 1ந் தேதி அன்னவாசல் அருகே கார் விபத்தில் மரணம் அடைந்தார். அந்த இடத்திற்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க தலைமை மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கே வாய்ப்பு தரும் என்று தோழர்கள் நினைத்திருந்தனர். கட்சி தலைமையும் அ.தி.மு.க பொது செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கேட்க நேரம் கேட்டிருந்தனர். ஆனால் சி.பி.ஐ தலைமையை சந்திக்க விரும்பாத ஜெயலலிதா தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தனது அ.தி.மு.க சார்பில் புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தை சேர்ந்த நகர சேர்மன் கார்த்திக் தொண்டமான் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவித்துவிட்டார். இதனால் தோழர்களும் தொகுதி மக்களும், முத்துக்குமார் விசுவாசிகளும் மனம் புன்பட்டனர். அ.தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு வந்த நாளில் மாலையில் இடைத் தேர்தல் ஜூன் 12 ந் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் மாநில குழுவை கூட்டிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்துக்குமார் மனைவி சுசிலாவை வேட்பாளராக நிறுத்தி அதற்கு அ.தி.மு.க அல்லாத தி.மு.க, தே.மு.தி.க, மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், பா.ம.க. மற்றும் இதர கட்சிகளை ஆதரவு கேட்பார்கள் என்று தோழர்களும் மற்ற கட்சிகளும் நினைத்திருந்தனர். ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், சி.பி.ஐ இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டார். இந்த அறிவிப்பால் மேலும் கொதிப்படைந்தனர் அடிமட்ட தோழர்கள். இந்த நிலையில் முத்துக்குமரன் படத்திறப்பு விழா அவரது சொந்த கிராமமான நெடுவாசலில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் எம்.பி. ராஜா பரமசிவம் (தி.மு.க) பேசும்போது, முத்துக்குமார் குடும்பத்தில் அல்லது அவரது மனைவியை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியிருந்தால் தி.மு.க வேட்பாளர் நிறுத்த மாட்டார்கள் என்பதை எங்கள் தலைவர் சொன்னார் அதை தோழர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று பேசினார். இந்த பேச்சு அப்போதே சலசலப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு 30ந் தேதி மாலை 7 மணிக்கு தி.மு.க புதுக்கோட்டை தொகுதி பொருப்பளர்களுடன் சென்னை அறிவாலயத்தில் கலந்தாலோசணை நடத்திய கலைஞர் தி.மு.க பேட்டியிடாது என்று அப்போது சொன்னவர். அதன் பிறகு 3 ந் தேதி அறிவிப்பாகவும் வெளியிட்டார். கலைஞரின் இந்த அறிவிப்பு தி.மு.க தொண்டர்களையும் கவலையடைய செய்துள்ளது. தோல்வி பயத்தில் தி.மு.க போட்டிக்கு வரவில்லை என்று அ.தி.மு.க வினர் பேசுவார்களே என்றும் கவலைப்பட்டனர். தலைவர் கலைஞர் ஏன் இந்த முடிவை அறிவித்தார். இதுவரை எந்த இடைத் தேர்தலையும் புறக்கணித்தது இல்லையே புதுக்கோட்டையில் மட்டும் ஏன் புறக்கணிக்க வேண்டும் என்கின்றனர். அப்படியானால் தி.மு.க புதுக்கோட்டை இடைத்தேர்தலில் யாரை ஆதரிப்பது? கட்சி தலைமை யாரை ஆதரிக்க சொல்கிறது? என இன்னும் எதையும் கட்சி தலைமை சொல்லாமல் இருப்பது தி.மு.க தொண்டர்களை கவலைப்பட செய்துள்ளது. ஆனால் விபரம் அறிந்த பல தி.மு.க புள்ளிகள்.. எங்கள் தலைவர் கலைஞர் ஏதோ பெரிய திட்டம் வைத்துக் கொண்டுதான் இந்த முடிவை அறிவித்தள்ளார். அதாவது இடைத்தேர்தலில் தே.மு.தி.க வேட்பாளரை மறைமுகமாக ஆதரிக்க வேண்டும். இந்த மறைமுக ஆதரவு மூலம் எதிர் வரும் எம்.பி தேர்தலுக்கு தே.மு.தி.க வை தி.மு.க கூட்டனிக்கு கொண்டு வரும் எண்ணம் இருப்பதாக தான் தெரிகிறது என்று கூறுகின்றனர். ஆனால், டெல்லி சி.பி.ஐ தரப்பு தலைமை, கலைஞரிடம் பேச்சு நடத்துகிறது. தமிழக சி.பி.ஐ முடிவை மாற்றி வேட்பாளர் அறிவித்தால் தி.மு.க ஆதரித்து எங்கள் வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று பேசி வருவதாகவும் தோழர்கள் மத்தியில் கூறுகின்றனர். ஆனாலும் தி.மு.க தலைமை எந்த முடிவை அறிவிக்கப் போகிறது என்பது போக போகத்தான் தெரியும். |
| ஜனாதிபதி தேர்தலும் சில 'சாஸ்திரங்களும்'! Posted: 04 May 2012 10:01 AM PDT லோக்சபா, ராஜ்யசபா எம்பிக்கள், மாநில சட்டசபைகளின் எம்எல்ஏக்கள் வாக்களித்துத் தான் ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும். இதில் ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகையும் அந்த மாநிலத்தின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வைத்தே ஒரு எம்எல்ஏவின் ஓட்டின் மதிப்பு நிர்ணயிக்கப்படும். உதாரணத்துக்கு 2011 சென்ஸஸ்படி தமிழகத்தின் மக்கள் தொகை 7.2 கோடி. தமிழக சட்டசபையில் உள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 234. இதனால் முதலில் 7.2 கோடியை 234 ஆல் வகுக்க வேண்டும். அப்படி வகுத்தால் வரும் மதிப்பு 307777. இதை 1000 ஆல் வகுக்க வேண்டும். அப்போது கிடைக்கும் மதிப்பு 307. இது தான் தமிழகத்தில் ஒரு எம்எல்ஏவின் ஓட்டின் மதிப்பு. அதே போல எம்பிக்களின் ஓட்டுக்கும் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களின் அனைத்து எம்எல்ஏக்களின் ஓட்டு மதிப்பை கூட்டி, அதை மொத்தமுள்ள 767 எம்பிக்களின் (லோக்சபா 534 + ராஜ்யசபா 233= 767) எண்ணிக்கையால் வகுத்தால் வரும் மதிப்பு தான் ஒரு எம்பியின் ஓட்டு மதிப்பாகும். அந்த வகையில் ஜனாதிபதி தேர்தலில் உள்ள மொத்த ஓட்டுக்களின் மதிப்பு 10,98,882 ஆகும். இதில் ஒருவர் ஜனாதிபதியாக வேண்டுமானால் குறைந்தபட்சம் அதில் பாதி ஓட்டுக்களை, அதாவது 5,49,442 வாக்குகளைப் பெற வேண்டும். இதில் காங்கிரஸ் கட்சியிடம் 3,30,945 வாக்குகள் உள்ளன. இது மொத்த வாக்குகளில் 30 சதவீதமாகும். காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளை எல்லாம் ஒன்றாக சேர்த்தால், 4,46,345 வாக்குகள் உள்ளன. இது மொத்த வாக்குகளில் 41 சதவீதமாகும். இதனால் வெற்றிக்குத் தேவையான 50 சதவீத வாக்குகள் காங்கிரஸ் கூட்டணியிடம் இல்லை. இங்கு தான் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி போன்ற கட்சிகளின் பங்கு முக்கியமாகிறது. இந்தக் கட்சிகளின் ஆதரவும் கிட்டத்தட்ட காங்கிரசுக்கு கிடைத்துவிட்ட நிலையில், அந்தக் கட்சியிடம் இப்போது 5,80,326 வாக்குகள் உள்ளன. அதாவது மொத்த வாக்குகளில் இது 53 சதவீதமாகும். தனது ஜனாதிபதி வேட்பாளரை வெற்றி பெற வைக்க 50 சதவீத வாக்குகளே தேவை என்ற நிலையில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தள், தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் இன்னும் சிறிய கட்சிகளையும் வளைத்துவிட்டால் எளிதான வெற்றியைப் பெற முடியும். இவர்களுடன் இடதுசாரிகளின் ஆதரவும் சந்திரபாபு நாயுடு போன்றவர்களின் கிடைத்துவிட்டால் காங்கிரசுக்கு பிரச்சனையே இல்லை. ஆனால், பாஜகவின் நிலையோ படுமோசம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் மட்டுமல்லாமல் முலாயம் சிங், மாயாவதி, இடதுசாரிகள் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் அனைவருமே சேர்ந்து ஆதரவு தந்தால் மட்டுமே 50 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும். ஆனால், பாஜக கூட்டணியில் உள்ள பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பெரும்பான்மையினர் ஆதரிக்கும் வேட்பாளரை ஆதரிக்கத் தயார் என்று கூறி பாஜக கூட்டணியில் கலகத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனால் இவரும் காங்கிரஸ் பக்கம் வர வாய்ப்பு அதிகம். இப்படிப்பட்ட சூழலில் கூட்டணியில் இருக்கும் அகாலிதளம் மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மட்டுமே நம்பி பாஜக தனது வேட்பாளரை நிறுத்த வேண்டும். இதனால் அந்தக் கட்சி 'சாஸ்திரத்துக்காகவே' போட்டியிடதாக இருக்குமே அல்லாமல் வெற்றி சாத்தியமில்லை. |
| எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் ; சினிமாவுக்கு ஐஸ்வர்யாராய் டாட்டா Posted: 04 May 2012 09:48 AM PDT 1994-ல் உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யாராய் சினிமாவுக்கு வந்து நம்பர் ஒன் நடிகையாக உயர்ந்தார். இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி மொழிப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர் பட்டாளத்தை பெற்றார். வசீகர முக அழகு, ஒல்லி உடம்பில் காட்டிய நடன அசைவுகள். காந்த பார்வை கவர்ச்சி சிரிப்பு அனைத்திலும் ரசிகர்கள் கிறங்கி போய் கிடப்பார்கள். திருமணமான பிறகும் தொடர்ந்து நடித்தார். தமிழில் ராவணன், எந்திரன் படங்கள் அவர் திருமணத்துக்கு பின் நடித்து வெளி வந்தவை. இந்த படங்களிலும் இளமை பொலிவு குன்றாமலேயே இருந்தார். ஐஸ்வர்யாராய்க்கு கடந்த வருடம் பெண் குழந்தை பிறந்தது. கர்ப்பமானதில் இருந்தே சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார். பிரசவத்துக்கு பிறகும் நடிக்கவில்லை. பல மாதங்களாக பொது நிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் இருந்ததால் அவரது இப்போதைய தோற்றம் யாருக்கும் தெரியவில்லை. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு காரில் ஏறிய அவரை புகைப்படக்காரர் படம் பிடித்தார். படத்தில் ஐஸ்வர்யாராய் குண்டாக இருந்தது தெரிய வந்தது. முகத்தில் சதை பிடிப்பு காணப்பட்டது. அதோடு முதிர்ச்சியும் தெரிந்தது. ஐஸ்வர்யாராய்க்கு தற்போது 38 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உடற்பயிற்சிகள் மூலம் உடம்பை பேணாமல் குண்டாகி விட்டதால் அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. |
| ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தை சேர்ந்தவருக்கு 38-வது இடம் Posted: 04 May 2012 08:10 AM PDT மத்திய அரசுப்பணியாளர்கள் தேர்வு மையம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஐ.ஏ.எஸ். மற்றும் இதர தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வுகள் மூன்று நிலைகளாக நடத்தப்படும். சிவில் சர்வீசஸ் தேர்வு முதல்நிலைத் தேர்வு (பிரிலிம்ஸ்), முதன்மைத் தேர்வு (மெயின்), ஆளுமைத் திறன் எனும் நேர்முகத் தேர்வு (இன்டர்வியூ) என்று மூன்று கட்டங்களாக நடைபெறுகின்றது. கடந்த ஆண்டு நடந்த இந்த தேர்வின் கடைசி நிலை தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சினேகா அகர்வால் என்பவர் முதல் இடத்தை பிடித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த சுந்தரேஷ் என்பவர் இந்த தேர்வில் 38-வது இடத்தை பிடித்துள்ளார். முதல்நிலை தேர்வில் 4 லட்சம் பேர் பங்கேற்றனர். இவர்களில் இரண்டாம் நிலை தேர்வான முதன்மைத் தேர்வுக்கு 13, 984 பேர் தகுதிபெற்றனர். இதிலிருந்து நேர்முகத்தேர்வுக்கு 2,414 பேர் தகுதிபெற்றார்கள். இறுதி கட்ட தேர்வு முடிவில் இந்தியா முழுவதும் 910 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தேர்வாணைய முடிவுகள் தெரிவிக்கின்றன. |
| எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம் முதலிடம் Posted: 04 May 2012 08:03 AM PDT இந்தியாவிலேயே எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக, தமிழ்நாடு எய்ட்ஸ் சங்க திட்ட இயக்குனர் மருத்துவர் மோகன்தாஸ் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எய்ட்ஸ் பாதிப்பு விகிதம் 0.25 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 2001ல் 1.31 ஆக இருந்த எய்ட்ஸ் பாதிப்பு விகிதம், 2006ல் 0.38 ஆகக் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2012ம் ஆண்டு புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டில் 2 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு, எய்ட்ஸ் நோய்க் கிருமியான எச்.ஐ.வி தொற்றியுள்ளது எனவும் மோகன்தாஸ் கூறியுள்ளார். எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சார சிவப்பு ரிப்பன் ரெயில், இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த ரெயில் இம்மாதம் 9ம் தேதி முதில் 30ம் தேதி வரை தமிழ்நாட்டில் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்ய உள்ளது. மேலும் சென்னை, வேலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இந்த ரெயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. |
| பிரபு மகனுக்காக தன் 'பாலிஸியை' தளர்த்திய சூப்பர் ஸ்டார்! Posted: 04 May 2012 07:58 AM PDT தனிப்பட்ட முறையில் எந்த நடிகரையும் ப்ரமோட் செய்வது ரஜினிக்குப் பிடிக்காத விஷயம். தன் மகள், மருமகன் என யாரையும் அவர் பெரிதாக உயர்த்திப் பேசியதில்லை, பொது மேடைகளில் அல்லது மீடியாவில். அவரவர் திறமை, அணுகுமுறை, வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் விதம்தான் அவர்கள் கேரியரை தீர்மானிக்கும் என்பது அவர் கருத்து. முதல் முறையாக தனது இந்த நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொண்டுள்ளார். அதுவும் சம்பந்தப்பட்ட நடிகரின் நடிப்புத் திறனைப் பார்த்து! அந்த நடிகர் வேறு யாருமல்ல, நடிகர் திலம் சிவாஜியின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமாக விக்ரம் பிரபு. இவரது கும்கி படத்தின் சில காட்சிகள் ரஜினிக்கு காட்டப்பட்டதாம். கேரளாவில் ' கோச்சடையான்' படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய ரஜினி, கடந்த வாரத்தில் ஒரு நாள் காலை, ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து விக்ரம் பிரபுவைப் பாராட்டி ஒரு வீடியோ பேட்டி கொடுத்தார். சிவாஜியின் பேரன் என்ற கூடுதல் தகுதி வேறு விக்ரமுக்கு இருப்பதால், ரொம்பவே பாராட்டிப் பேசினாராம் ரஜினி! |
| புதிதாக கட்டப்பட்ட சாய்பாபா கோவிலில் அஜித் Posted: 04 May 2012 07:11 AM PDT சென்னை வளசரவாக்கம் காமகோடி நகரில் ஸ்ரீவிஸ்வரூப ஷீரடி சாய்பாபா கோவில் கட்டப்பட்டு உள்ளது. சினிமா தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் இந்த கோவிலை கட்டி உள்ளார். ஆகம விதிகளின்படி இக்கோவில் அமைக்கப்பட்டு உள்ளது. 9 அடி உயர விஸ்வரூப பாபா படமும் அனுகுயாவின் கதையை பறைசாற்றும் தத்தோத்திரா படமும் கோவிலில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று காலை நடந்தது. ஷீரடியில் இருந்து வந்திருந்த சிறப்பு அர்ச்சகர்கள் அங்கிருந்து கொண்டு வந்த விசேஷ நீரினால் சிறப்பு பூஜைகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தினர். இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இயக்குனர்கள் விஷ்ணு வர்த்தன், மனோஜ் குமார், தயாரிப்பாளர்கள் சஞ்சய் வாத்வா, டி.என்.எஸ்., கதாசிரியர் சுபா, சுரேஷ் சந்திரா ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். |
| இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் இந்தியா நாடகமாடுகிறது: நாஞ்சில் சம்பத் பேச்சு Posted: 04 May 2012 06:59 AM PDT திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மே தின விழாவையொட்டி ம.தி.மு.க. கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ராக்கியண்ணன் வரவேற்புரையாற்றினார். முன்னாள் ஒன்றிய செயலாளர் தமிழ்வேந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வராகவன், நகர செயலாளர் சீனிமோகன்ராஜ், மாவட்ட துணை செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய ம.தி.மு.க. கட்சியின் கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:- மற்ற மாநிலங்களில் இடைத்தேர்தல் வந்தால் எந்த கட்சி வேண்டுமானாலும் வெற்றிபெரும் ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஆளும் கட்சி எது உள்ளதோ அந்த கட்சி வெற்றி பெருவது வாடிக்கையாகி விட்டது. ஜெயலலிதா ஒன்றும் பெரிய சக்தி இல்லை வீழ்த்த முடியாது என்று சொல்வதற்கு ஜெயலலிதாவை கடந்த ஆட்சிக் காலத்தில் பர்கூர் தொகுதியில் நின்றபோது அவர் வீழ்த்தப்படவில்லையா என்றார். பால்விலை, பஸ் கட்டணம் பலமடங்கு உயர்ந்து விட்டது. இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் இந்தியா நாடகமாடுகிறது. இவ்வாறு அவர் பேசினார். மேலும் விழாவில் மாவட்ட துணை செயலாளர் நளதமயந்தி, தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் துரை ராஜேந்திரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி, பொதுகுழு உறுப்பினர் எல்.எஸ்.பழனிச் சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட பிரதிநிதி த.பரமானந்தம் நன்றி கூறினார். |
| பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 20 பேர் பலி Posted: 04 May 2012 06:24 AM PDT பாகிஸ்தானின், பஜாவுர் நகரில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் பொருள்கள் வாங்குவதற்காக ஒரு கடையில் பாதுகாப்பு அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன், தன் உடலில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். இந்த திடீர் தாக்குதலில் பொதுமக்கள் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்த 60 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தோரில் பெரும்பாலானோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதியின் உடல் பாகங்கள் சிதறிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. அவனுக்கு 14 முதல் 17 வயது வரை இருக்கலாம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். பாதுகாப்பு படை அதிகாரிகளை குறிவைத்து, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதே பஜாவுர் நகரில் நேற்று நடந்த இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்களில், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உள்பட 5 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது. |
| குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடி இனத்தவரை நிறுத்த தீவிரம் Posted: 04 May 2012 06:10 AM PDT குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதற்கான லாபிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் சபாநாயகருமான பி.ஏ.சங்மா கூறியதாவது: குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடி இனத்தவர் ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதற்காக அனைத்து அரசியல் கட்சிகளின் பழங்குடி பிரிவினரின் ஆலோசனைக் கூட்டம் வரும் 9-ந் தேதி நடைபெற உள்ளது. குடியரசுத் தலைவர் வேட்பாளராக நான் போட்டியிடவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளையும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்த கொள்கை அளவில் ஒப்புக் கொள்ள வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதன் பிறகே வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படும். இந்த கருத்து நாட்டின் ஒட்டுமொத்த பழங்குடி மக்களின் விருப்பம். இது எந்த ஒரு அரசியல் கட்சியினுடைய கருத்தும் அல்ல. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. பாஜக தலைவர் கட்காரி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோருக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் தாழ்த்தப்பட்ட மற்றும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குடியரசுத் தலைவர்களாகிவிட்டனர். நாட்டின் பல கோடி பழங்குடி இன மக்கள் உள்ளனர். ஆனால் எந்த ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரும் இதுவரை குடியரசுத் தலைவரானது இல்லை. இந்த விஷயத்தை தற்போது விவாதிக்கத் தொடங்கியிருக்கிறோம். மே 9-ந் தேதியன்று நடைபெறக் கூடிய கூட்டத்துக்கு முன்பாகவோ அல்லது அதன் பின்போ அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் நாங்கள் சந்திக்க உள்ளோம் என்றார் அவர். குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் யார் என்ற விவாதம் தொடங்கியபோது பி.ஏ.சங்மாவின் பெயரும் அடிபட்டது. வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. பின்னர் பிரணாப் பெயரே அதிகளவில் முன் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சங்மா தமக்கு ஆதரவாக ஒரு லாபியை உருவாக்கத் தொடங்கி உள்ளார். வெல்லுவாரா சங்மா? |
| கோச்சடையானுக்காக தீபிகாவுடன் பரத நாட்டியம் ஆடிய ரஜினி! Posted: 04 May 2012 02:29 AM PDT கோச்சடையான் படத்துக்காக சூப்பர் ஸ்டார் ரஜினியும் தீபிகாவும் பரத நாட்டியம் ஆடியுள்ளனர். இந்தக் காட்சி கேரளாவில் படமாக்கப்பட்டுள்ளது. கோச்சடையான் படம், சரித்திரக் கதை. இதில் ஒரு பரதநாட்டியப் பாடல் இடம்பெற்றுள்ளது. சிவபெருமானின் ருத்ர தாண்டவத்துக்கு நிகரான ஒரு பாடல் இந்தப் படத்தில் இடம் பெறுகிறது. இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கியுள்ள இந்த பாடலுக்கான படப்பிடிப்பு கேரளாவில் நடந்தது. இதில் ரஜினி, தீபிகா படுகோனே இருவரும் பரத நாட்டியம் ஆடினர். இந்தி நடன இயக்குனர் சரோஜ்கான் இதற்கான நடனத்தை அமைத்துள்ளார். ரஜினி, தீபிகா இருவருமே சில தினங்கள் ஒத்திகை செய்து பார்த்த பிறகே இந்த நடனக் காட்சியில் நடித்துள்ளனர். இது குறித்து டான்ஸ் மாஸ்டர் சரோஜ்கான் கூறுகையில், "தமிழில் நீண்ட நாட்களுக்கு பிறகு நான் பணி புரிகிறேன். அதுவும் ரஜினி படத்தில் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. ரஜினி, தீபிகா படுகோனே இருவரும் இந்த நடனத்துக்காக கடுமையாக உழைத்தனர். குறிப்பாக ரஜினி இதற்கா தீவிரமாக ரிகர்சல் செய்து ஆடினார்," என்றார். கோச்சடையான் படம் செப்டம்பர் அல்லது தீபாவளிக்கு ரிலீசாகிறது. |
| You are subscribed to email updates from விழியே பேசு... To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

















