Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





விழியே பேசு...

விழியே பேசு...


விரைவில் கிரிக்கெட் பயிற்சியை தொடங்குகிறார் யுவராஜ் சிங்

Posted: 21 Apr 2012 09:52 PM PDT


கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு, அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய யுவராஜ் சிங் இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் பயிற்சியை தொடங்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
 
விரைவில் இந்திய அணியில் இடம் பெற விரும்புவதாகவும், இதற்காக இன்னும் ஒரு சில வாரங்களில் பயிற்சியை தொடங்கவிருப்பதாகவும் தெரிவித்த அவர்,  தனது உடல் எவ்வாறு பயிற்சிக்கு ஒத்துழைக்கிறது என்பதை பொறுத்தே பயிற்சியை தொடர வேண்டியதிருப்பதால் கால நிர்ணயம் செய்ய முடியாது என மேலும் அவர் தெரிவித்தார்.
 
மருத்துவர்கள் தற்போது எந்த மருந்தும் கொடுக்கவில்லை எனவும், மருந்தின் விளைவு தற்போது தன உடலை விட்டு முழுவதும் வெளியேறிவிட்டதாக தெரிவித்த யுவராஜ் சிங், தற்போது நாளுக்கு நாள் தன உடல் வலிமை பெற்று வருவதாக தெரிவித்தார்.
 
கடந்த ஐ.பி.எல். போட்டித் தொடரில் புனே வாரியர்ஸ் அணியின் தலைவராக வழி நடத்திய யுவராஜ் சிங், தற்போது அப்பொறுப்பை கங்குலி சிறப்பாக செய்து வருவதாக தெரிவித்தார்.
 
மேலும்,  இந்த ஐ.பி.எல். போட்டியில் தனது அணி சிறப்பாக விளையாடி வருவதாகவும், ரசிகனாக இப்போட்டிகளை கண்டு ரசிப்பது மிகவும் சிறப்பான அனுபவமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.



இந்தியில் ரூ.100 கோடி வசூல் செய்த தமிழ்படம்!

Posted: 21 Apr 2012 09:40 PM PDT


தமிழில் ரூ.1 கோடியில் தயாரிக்கப்பட்ட படம், இந்தியில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. பிரபு, கலாபவன் மணி, ரம்பா, மோனிகா ஆகியோர் நடித்து, டி.பி.கஜேந்திரன் டைரக்ஷனில், சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம், பந்தா பரமசிவம். இந்த படத்தை வர்ஷினி பிலிம்ஸ் சார்பில் பி.டி.செல்வகுமார் தயாரித்து இருந்தார். ரூ.1 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு இருந்தது.

`பந்தா பரமசிவம் படத்தை இந்தியில் தயாரிக்கும் உரிமையை நாகித்வாலா என்ற பட அதிபர் வாங்கினார். படத்துக்கு, `ஹவுஸ் புல்-2 என்று பெயர் சூட்டப்பட்டது. பிரபு நடித்த வேடத்தில் அக்ஷய்குமார் நடித்தார். ரம்பா நடித்த வேடத்தில் அசின் நடித்தார். கலாபவன் நடித்த வேடத்தில் ஜான் ஆபிரகாம் நடித்தார். சாஜித்கான் இயக்கினார். இந்த படம், சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் இதுவரை ரூ.100 கோடி வசூல் செய்து இருக்கிறது.

இந்த தகவலை கேள்விப்பட்ட உற்சாகத்தில், பந்தா பரமசிவம் பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தனது அடுத்த படத்தை தொடங்கி விட்டார். புதிய படத்துக்கு அவர், `ஒன்பதுல குரு என்று பெயர் சூட்டியிருக்கிறார். `ஹங் ஓவர் என்ற இந்தி படத்தை தழுவிய கதை இது.



நடிகர் சந்தானம் மீது ரூ.10 லட்சம் மோசடி புகார்

Posted: 21 Apr 2012 09:29 PM PDT


சென்னை உத்தண்டியை சேர்ந்தவர் ரவிக்கிஷன்(வயது 42). ஐஸ் கம்பெனி நடத்தி வரும் இவர், சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை நேற்று சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

எனது பெயரில் விருகம்பாக்கம் தாங்கல் உள்வாய் தெருவில் பங்களா வீடு ஒன்று இருந்தது. நடிகர் சந்தானம் என்னையும், என் தந்தையையும் மிரட்டி ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள சொத்தை ரூ.1 கோடியே 85 லட்சத்திற்கு பேசி 10-3-2010 அன்று கட்டாய பதிவு செய்து கொண்டார்.

ஆனால், பேசிய பணத்தை தராமல், ரூ.1 கோடியே 75 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு, மீதியுள்ள ரூ.10 லட்சம் பணத்தை பிறகு தருவதாக நடிகர் சந்தானம் கூறினார்.

முதலில், ரூ.2 1/2 லட்சத்திற்கான செக்கை என்னிடம் கொடுத்தார். ஆனால், பணம் இல்லாமல் செக் திரும்பிவந்தது. மீதியுள்ள ரூ.7 1/2 லட்சம் பணத்தை கேட்டபோதும், பணத்தை தரமுடியாது என்று கூறிவிட்டார்.

தொடர்ந்து பணம் கேட்டு வந்ததற்கு, இதற்கு மேல் ஒன்றும் தர முடியாது என்றும், மீறி கேட்டால் கொலை செய்து விடுவேன் என்றும் நடிகர் சந்தானம் கூறினார்.

மேலும், வீட்டில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் தூக்கி சென்றுவிட்டார். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  




தேனீர் இந்தியாவின் தேசிய பானம் ஆகிறது

Posted: 21 Apr 2012 08:44 PM PDT


நமது நாட்டில் பாமரர்கள் முதல் கோடீசுவரர்கள் வரை தினமும் ருசித்து பருகும் பானமாக தேனீர் (டீ) இருந்து வருகிறது. உழைப்பாளர்களுக்கு தேனீர்தான் உற்சாகபானமாக உள்ளது.
 
அந்தவகையில் நமது மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிரதான இடத்தை பிடித்த தேனீர் இந்தியாவின் தேசிய பானமாகிறது.
 
இந்த தகவலை மத்திய திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டெக்சிங் அலுவாலியா தெரிவித்தார். அசாம் தேயிலை பயிரிடுவோர் சங்க பவள விழாவில் நேற்று கலந்து கொண்டு பேசிய அவர் அசாமில் முதன்முதலாக தேயிலை பயிரிட்ட மணிராம் தேவனின் 212-ம் ஆண்டு பிறந்த நாளான அடுத்த ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி முதல் தேனீர் இந்தியாவின் தேசிய பானம் ஆகும் என்றார்.
 
இதற்கு இன்னொரு முக்கிய காரணம், தேயிலை தொழிலில் பெருமளவில் பெண் தொழிலாளர்கள் பங்கேற்று இருப்பதும் ஆகும் என்றும் அவர் கூறினார்.   



அடிதடி மோதல்! வேட்டியை இழந்த அதிமுக எம்எல்ஏ ஜட்டியோடு தப்பி ஓட்டம் !

Posted: 21 Apr 2012 08:41 PM PDT


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள இளந்திரைகொண்டான் பகுதியில் விலையில்லா மிக்சி, கிரைண்டர் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் எம்.எல்.ஏ., கோபால்சாமி கலந்து கொண்டு பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.

விழா முடிந்து திரும்பிய போது, ராஜபாளையம் அதிமுக பஞ்சாயத்து யூனியன் சேர்மன் பொன்னுத்தாயின் தந்தையான மேலப்பாட்டகரிசல்குளம் பஞ்சாயத்து தலைவர் அழகாபுரியான் உள்ளிட்ட சிலர், எம்எல்ஏ கோபால்சாமியிடம் எங்கள் யூனியன் கவுன்சிலர்களை ஏன் அழைத்துக்கொண்டு சுற்றுகிறீர்கள் என்று வாக்குவாதம் செய்துள்ளனர்.


அப்போது இருதரப்புக்கும் அடிதடி மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் எம்எல்ஏ கோபால்சாமியின் வேட்டி அவிழ்ந்தது. அடிதடி மோதல் சம்பவங்களில் அனுபவம் இல்லாத எம்எல்ஏ தள்ளுமுள்ளுவில் ஜட்டியோடு காரில் ஏறி உட்கார்ந்துவிட்டார்.


பின்னர், கோபால்சாமி ராஜபாளையம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்ததாகவும், அங்கு டி.எஸ்.பி.,யிடம் தன்னை தாக்கியதாக வாய் மூலம் புகார் கொடுத்தார் என்றும், எழுத்துப்பூர்வ முறையில் புகார் தரவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் எம்.எல்.ஏ., தரப்பில் 2 பேர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.


எதிர்தரப்பினரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து எதிர்தரப்பினர் டி.எஸ்.பி.,யை சந்திக்க விரைந்தனர்.


அழகாபுரியான் கூறுகையில், பொட்டல்பட்டி ராஜேந்திரன் என்னை கத்தியால் குத்தினார். எம்எல்ஏ கோபால்சாமி என்னை ஜாதியைச் சொல்லி திட்டினார் என்றார். உடன் இருந்த அழகாபுரியான் மகள் பொன்னுத்தாயி, என் அப்பாவை எம்எல்ஏ கோபால்சாமி மற்றும் அவருடன் வந்தவர்கள் கடுமையாக தாக்கினார்கள் என்று கண்ணீர் விட்டார்.


இந்த மோதல் சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.


மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவால், எழுத்து மூலமாக புகார் எதுவும் கொடுக்காத கோபால்சாமி எம்எல்ஏ செய்தியாளர்களிடம், நடந்த கேவலமான சம்பவத்தை பத்திரிகையில் போட்டு கட்சியின் பேரை கெடுத்துவிடாதீர்கள் என்று கெஞ்சி இருக்கிறார். ஆனாலும் அழகாபுரியான் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியால், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கும் ராவணனின் சிபாரிசில் எம்எல்ஏ சீட் வாங்கியவர் கோபால்சாமி. ராவணனுக்கு நெருக்கமாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எப்படியும் அமைச்சராவேன் என்று விருதுநகர் மாவட்டத்தில் மார்தட்டி கொண்டிருப்பவர் வேட்டியை இழந்து ஜட்டியோடு தப்பியது கொடுமையிலும் கொடுமை என அதிமுகவினரே 'உச்' கொட்டுகிறார்கள்.



தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட வழக்கு:மத்திய அரசு வக்கீலின் பதில் மனுவால் சர்ச்சை

Posted: 21 Apr 2012 08:38 PM PDT


கேரள கடலில் தமிழக மீனவர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதில் கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து, இத்தாலி கடற்படை வீரர்கள் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.சம்பவம் நடந்த கப்பலையும் போலீசார் கைப்பற்றி, தங்கள் பாதுகாப்பில் வைத்துள்ளனர்.
 
இந்த கப்பலை விடுவிக்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் இத்தாலி கப்பல் கம்பெனி தாக்கல் செய்த மனு ஏற்கப்படவில்லை. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கப்பல் கம்பெனி அப்பீல் மனு தாக்கல் செய்தது.
 
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, இதுகுறித்து மத்திய அரசு, கேரள அரசு, கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினர் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
 
இந்த நிலையில் மத்திய அரசின் சார்பில், அதன் வக்கீல் (கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்) ஹரின் ராவல் நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார்.
 
அதில், சம்பவம் நடுக்கடலில் நடந்துள்ள நிலையில், அதில் விசாரணை நடத்தவோ, கப்பலை பிடித்து வைக்கவோ கேரள போலீசாருக்கு அதிகார வரம்பு இல்லை என்று கூறப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
கேரள முதல்-மந்திரி இதுபற்றி கருத்து கூறும்போது, மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்தே இந்த வழக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், சம்பவம் இந்திய கடல்பகுதியில்தான் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.
 
அதைத்தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்படவும் இல்லை. பதில் மனு தாக்கல் செய்யும்படி அரசு வக்கீலை அறிவுறுத்தவும் இல்லை என்று மத்திய அரசு கப்பல் துறை அமைச்சகம் மறுத்தது.
 
இது தொடர்பாக கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டி கொச்சியில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரின் ராவல் தெரிவித்த கருத்து, மத்திய அரசின் நிலையை எதிரொலிக்கவில்லை.
 
இது தொடர்பாக நான் சொலிசிட்டர் ஜெனரலிடம் பேசினேன். இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரின் ராவல் இனி ஆஜராக அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். அவரும் அதற்கு ஒத்துக்கொண்டார் என தெரிவித்தார்.   



சத்தீஸ்கரில் கலெக்டர் கடத்தல்: மாவோயிஸ்டுகள் அட்டூழியம்

Posted: 21 Apr 2012 09:21 AM PDT


சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டரான அலெக்ஸ் பால் மேனன் என்பவரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றுள்ளனர். கலெக்டருடன் சென்ற பாதுகாவலர்கள் இருவரையும் சுட்டுக்கொன்று விட்டு அவரை கடத்தி சென்றுள்ளனர்.

ஒடிசாவில் மட்டுமின்றி அதனருகே உள்ள மாநிலமான சத்தீஸ்கரிலும் மாவோயிஸ்டுகளின் அட்டூழியம் தொடர்கிறது. முன்னதாக ஒடிசா மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி ஆளும் பிஜூ ஜனதா தளம் எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் இரண்டு இத்தாலியர்கள் கடத்தப்பட்டு ஒவ்வொருவராக விடுவிக்கப்பட்டனர். மாவோயிஸ்டுகள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என கூறியதை தொடர்ந்து மாநில அரசுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் எம்.எல்.ஏ.வை விடுவிப்பதற்கு முன், சத்தீஸ்கர் கலெக்டர் கடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இலங்கைக்குச் சென்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு பேட்டி

Posted: 21 Apr 2012 05:03 AM PDT


இலங்கை தமிழர்கள் நிலை குறித்து ஆய்வு செய்ய பா.ஜனதா எம்.பி. சுஷ்மா சுவராஜ் தலைமையில் சென்ற இந்திய எம்.பி.க்கள் குழு இன்று சுற்றுப் பயணத்தை முடித்தது. இந்த குழுவில் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கிருஷ்ணசாமி, என்.எஸ்.வி. சித்தன், சுதர்சன நாச்சியப்பன், மாணிக்கம் தாகூர் ஆகிய 4 பேர் இடம் பெற்றிருந்தனர். இன்று மாலை சென்னை திரும்பிய அவர்கள் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய சுதர்சன நச்சியப்பன்:

இலங்கையில் தமைழர்களின் நிலையை குறித்து தெரிந்து கொள்ள இந்தியாவில் இருந்து 12 பேர் கொண்ட குழு இலங்கை 4 நாள் சுற்றுப்பயணம் சென்று வந்துள்ளோம். இந்த குழுவில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அங்குள்ள அதிகார வரம்புகளை தெரிந்து கொண்டோம். விதவைகள் மறுவாழ்வுக்காக இந்தியா உதவி வருகிறது. அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.  ராணுவம் எங்களோடு வரவில்லை. நாங்கள் விரும்பிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டோம்.  என கூறினார்.

கிருஷ்ணசாமி கூறுகையில்:

இலங்கையின் வடக்கு, மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் சென்று பார்வையிட்டோம். அங்குள்ள தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டோம். யாழ்ப்பாணத்தில் ராணுவம் அதிகாரம் நடத்தி வருகின்றனர். அங்குள்ள மக்கள் எங்கு சென்றாலும் அவர்களின் விசாரணைக்கு உட்பட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இலங்கை அரசு ராணுவத்தை திரும்ப பெற வேண்டும். மேலும், அந்த பகுதிகளில் உள்ள சாலை உள்ளிட்ட அனைத்து மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.

இந்த பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தப்பட்டது. இன்று காலை அதிபர் ராஜபக்சேவுடம் நடந்த சந்திப்பில் இவை அனைத்தும் குறித்து விவாதம் நடத்தப்பட்டது. 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் எல்லா பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும், இந்த சுற்றுப்பயணம் குறித்த விரிவான அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு என்றும் பாதுகாப்பாக இருக்கும் என கூறினார்.

சித்தன் கூறுகையில்:

இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை 4 குழுவாக சந்தித்து அவர்களின் நிலைகள் குறித்து கேட்கப்பட்டது. 3 வருடங்களாக கஷ்டப்பட்டு வரும் அவர்கள், எப்படியாவது தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். அங்குள்ள கண்ணி வெடிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. அதனை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி உள்ளோம். இந்த பணி முடிந்ததும் இன்னும் 3 மாதங்களில் தமிழர்கள் அங்கே குடியமர்த்தப்படுவர் என கூறினார்.  




கேரளாவில் பயங்கரம் : குளிக்கும்போது ரசித்ததை தட்டி கேட்டதால் முதியவர் ஆத்திரம்

Posted: 21 Apr 2012 04:13 AM PDT

கேரள மாநிலம் எர்ணாகுளம் கும்பழை பகுதியை சேர்ந்தவர் சாம்சன். இவருடைய மனைவி மேழ்சி (வயது 33). இவர்களுக்கு சொந்தமான வீடு அங்குள்ள ஒரு தோட்டத்தின் நடுவே அமைந்துள்ளது. இந்த நிலையில் மேழ்சி தினமும் வீட்டிற்கு வெளியே உள்ள குளியல் அறையில் குளிப்பது வழக்கம். 

இதனை அதே பகுதியை சேர்ந்த ஜோசப் (வயது 75). என்பவர் அடிக்கடி மறைந்து இருந்து ரசித்து வந்தார். வழக்கம்போல நேற்று மாலை வீட்டு வேலைகளை முடித்து விட்டு மேழ்சி குளியல் அறைக்கு சென்றார். இதை மறைந்து நின்ற கவனித்த முதியவர் ஜோசப்பை அவர் பார்த்து விட்டார். இதனால் அவரை கண்டித்தார். 

மேலும் கணவர் சாம்சனிடமும் இதுபற்றி கூறினார். உடனே அவர் முதியவர் ஜோசப்பை எச்சரித்தார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது முதியவர் ஜோசப் தன்னிடம் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து மேழ்சியை நோக்கி சுட்டார். இதில் அவருடைய கன்னத்தில் குண்டுபாய்ந்தது. மயங்கி விழுந்த அவரை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பழை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். 

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜோசப்பை கைது செய்து அவரிடம் இருந்த கைத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.







'சுற்றுலா' முடித்து திரும்பினர் எம்பிக்கள் - இன்று மாலை சென்னையில் விளக்கம்!

Posted: 21 Apr 2012 04:08 AM PDT


இலங்கை தமிழர்கள் நிலை குறித்து ஆய்வு செய்ய பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் சென்ற இந்திய எம்.பி.க்கள் குழு இன்று காலை சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பியது.

இந்த குழுவில் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கிருஷ்ணசாமி, என்.எஸ்.வி. சித்தன், சுதர்சன நாச்சியப்பன், மாணிக்கம் தாகூர் ஆகிய 4 பேர் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் 4 பேரும் இன்று மதியம் சென்னை திரும்புகிறார்கள். மாலை 4 மணிக்கு அவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து தங்கள் இலங்கைப் பயண அனுபவங்கள், அங்கு பார்த்தவற்றை கூற உள்ளனர்.

போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் ஈழத் தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களுக்கு சிங்கள அரசு உண்மையிலேயே உதவிகள் செய்கிறதா? இந்தியா அவர்களுக்கு அளித்த நிதியுதவி எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளது? போன்ற தகவல்களை அவர்கள் நிருபர்களிடம் விளக்கமாக கூற உள்ளனர்.

அதேபோல, இந்தக் குழுவுக்கு தலைமை வகித்துச் சென்ற சுஷ்மா ஸ்வராஜ், இலங்கையில் தாங்கள் பார்த்த நிலவரம் குறித்து அரசுக்கு அறிக்கை தர உள்ளார்.

இலங்கைக்கு நற்சான்று அளிப்பாரா அல்லது உள்ளதை உள்ளபடி சொல்வாரா சுஷ்மா... பார்க்கலாம்!



அம்பத்தூர் பகுதியில் 5 இளம் பெண்கள் திடீர் மாயம்

Posted: 21 Apr 2012 04:06 AM PDT

அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் 7 பேரை காணவில்லை என்று பெற்றோர்களிடம் இருந்து புகார் வந்துள்ளது. இதில் 5 பேர் இளம் பெண்கள் ஆவர். பள்ளிக்கு சென்ற மாணவிகளும், வேலைக்கு சென்ற பெண்களும் திடீரென மாயமானதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

அம்பத்தூர் கள்ளிக்குப்பம் முத்தமிழ்நகர்  17-வது தெருவை சேர்ந்த குமார் என்பவரின் மகள் லட்சுமி (வயது 23). தனியார் நிறுவனத்தில்  வேலை செய்கிறார். கடந்த மாதம் 20-ந்தேதி வேலைக்கு சென்ற லட்சுமி வீடு திரும்பவில்லை. அவரை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்யப்பட்டுள்ளது.

அம்பத்தூர் ஏ.கே.ஏ.நகர் அண்ணா தெருவை சேர்ந்த ராஜேந்திரனின் மகள் சரண்யா (17). 30-ந்தேதி இரவு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. 

இதேபோல ஞானமூர்த்தி நகர்  அண்ணாமலை தெருவில் வசிக்கும்  சேகரின் மகள் பிரியாவை (19) கடந்த மாதம் 19-ந்தேதி முதல் காணவில்லை. உடல்நிலை சரியில்லாமல் இருந்த பிரியா தாயுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு மருந்து கடையில் மருந்து வாங்கியபோது திடீரென அவர் மாயமாகி விட்டதாக பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். 

அம்பத்தூர் சிவானந்தா நகர் முதல் தெருவை சேர்ந்த காசி என்பவரின் மகள் பிரியதர்ஷினி (16). இவர் கடந்த மாதம் 16-ந்தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு வீடு திரும்ப வில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

அம்பத்தூர் கள்ளிக்குப்பம் முத்தமிழ்நகர் குறுக்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் தனலட்சுமி (21). கடந்த மாதம் 14-ந்தேதி கடைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு  சென்றவர் வீடு திரும்ப வில்லை. 

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5 இளம்பெண்கள் அம்பத்தூர் பகுதியில் மாயமாகி உள்ளனர். மேலும் சிவானந்தாநகர் முதல் தெருவை சேர்ந்த சித்து (64) என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். அவரையும் காணவில்லை. புதூர் பானுநகர்  கட்டையா கவுண்டர் (65)  என்பவரையும் திடீரென காணவில்லை. காணாமல் போனவர்கள் குறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.





எங்கும் ஓகே ஓகே ஜூரம்...

Posted: 21 Apr 2012 04:04 AM PDT


தமிழக தியேட்டர்களில் ஒரே சிரிப்பு சத்தம்.... கேன்டீன்களில் கலகலப்பு... பார்க்கிங் பாய்ஸ் கூட சந்தோஷமாக இருக்கிறார்கள். ஒரு கோடைத் திருவிழாவாக மாறிவிட்டது உதயநிதி - சந்தானம் நடிப்பில் வெளிவந்துள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெளியீடு.

வெள்ளிக்கிழமை அமெரிக்காவிலும் படம் வெளியாகிவிட்டது. வேண்டுமென்றேதான் அமெரிக்க ரிலீசை தள்ளிப் போட்டாராம் உதயநிதி.

முதலில் இங்கு படம் வெளியாகி நல்ல 'டாக்' உருவான பிறகு வெளியிட்டால், உலத நாடுகளில் வசூல் அள்ளும் என்ற வர்த்த ஐடியாதான் அது. நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

இப்படியொரு சூழலில் இந்த வாரமும் 4 படங்கள் வெளியாகின. பெரிய எதிர்ப்பார்ப்பில்லாமல் போய் பார்க்க வேண்டிய படங்கள்.

மாட்டுத்தாவணி, மை, அடுத்தது, ஊலலல்லா... ஆகியவைதான் அந்த மூன்று படங்கள்.

இவற்றில் மாட்டுத்தாவணி, ஒரு காலத்தில் ஹிட் இயக்குநராக இருந்த பவித்திரன் இயக்கியது. விமல் நடித்துள்ளார். தக்காளி சீனிவாசன் இயக்கியுள்ள படம் அடுத்தது.

ஏஎம் ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கி நடித்துள்ள படம் ஊலலல்லா.

வேலூரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் மை. அரசியல்தான் மையக்கரு. சே ரா கோபாலன் என்பவர் இயக்கியுள்ளார்.



மு.க.அழகிரி மீது நில அபகரிப்பு புகார்: போலீஸ் கமிஷனரிடம் மனு

Posted: 21 Apr 2012 03:13 AM PDT

மத்திய மந்திரி மு.க.அழகிரி உள்பட தி.மு.க. தலைவர்கள் மீது நில அபகரிப்பு புகார் செய்யப்பட்டு உள்ளது. மதுரை சோலையழகுபுரம், கீழ எம்.கே.புரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி சுந்தரம்பாள் (வயது48). இவர் இன்று காலை மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:- 

பழங்காநத்தம் அருகே உள்ள மாடக்குளம் பகுதியில் எனக்கு சொந்தமான பூர்வீக சொத்து 1 ஏக்கர் 8 செண்ட் நிலம் இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை முன்னாள் தி.மு.க. மேயர் குழந்தைவேலு, தி.மு.க. வட்ட செயலாளர் உதயசூரியன், விவேக், ரவிக்குமார், கண்ணன் ஆகியோர் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து எனக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து விற்று விட்டனர். 

இது குறித்து நான் அவர்களிடம் கேட்டபோது, உனது சொத்தை நாங்கள் மு.க.அழகிரியிடம் ஒப்படைத்து விட்டோம். உன்னால் முடிந்தால் நீ அவரிடம் நிலத்தை வாங்கி கொள் என்று என்னை மிரட்டுகின்றனர். மு.க.அழகிரி தற்போது அதிகார பலத்தில் உள்ளதால் எனது பூர்வீக சொத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார். 

மனுவை பெற்றுக் கொண்ட கமிஷனர் கண்ணப்பன் இது குறித்துஉரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.







வீட்டுப் பாடம் எழுதாத மகனை உயிரோடு புதைத்து கொலை செய்த கொடூர தந்தை

Posted: 21 Apr 2012 03:10 AM PDT


சீனாவில் வீட்டுப் பாடம் எழுதாத பெற்ற மகனை தாக்கி உயிருடன் புதைத்த கொலைகார தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்..

சீனாவின் யுன்னான் மாகாணத்தைச் சேர்ந்தவர் லீ. கூலித் தொழிலாளியான இவரது 6 வயது மகன் வீட்டுப் பாடம் சரியாக எழுதவில்லை என்று பள்ளிக்கூடத்தில் இருந்து புகார் வந்துள்ளது. இதனால் சம்பவ நாளன்று மகனைக் கூப்பிட்டு வீட்டுப் பாடம் எழுதவில்லையா என்று கேட்டியிருக்கிறார்.

ஆனால் லீயின் மகன் தந்தையின் கேள்விக்கு சரியாகப் பதில் சொல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தந்தை லீ மகனை அடித்துள்ளார். ஒரு கட்டத்தில் கோபம் அதிகமாக எட்டி உதைத்திருக்கிறார். பிறகு என்ன நினைத்தாரோ அந்த 6 வயது பாலகனை அப்படியே தூக்கி எறிந்துள்ளார்.

இதில் வீட்டுச் சுவரில் மோதி சரிந்த மகனை ஈவு இரக்கம் ஏதுமின்றி பக்கத்தில் இருந்த மலைக்கு கொண்டு சென்று உயிருக்குப் போராடிய மகனை அப்படியே குழிதோண்டி புதைத்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் லீ.

லீயின் இந்த கொடுஞ்செயலானது மகனின் நண்பர்களுக்கும் தெரியவந்திருக்கிறது. அவர்கள் காவல்துறையிடம் புகார் செய்திருக்கின்றனர். இதையடுத்து லீ கைது செய்யப்பட்டுள்ளார்.



பாதிக்கப்பட்ட தமிழர்கள் பகுதிக்கு இந்திய எம்.பி.க்கள் குழு செல்லவில்லை: உண்மை நிலவரம் மூடி மறைப்பு

Posted: 21 Apr 2012 03:03 AM PDT


இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் இன்னமும் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உண்மை நிலவரங்களை அறிந்து இலங்கைக்கு அறிவுறுத்தல் செய்யவே இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றது.
 
இந்திய எம்.பி.க்கள் குழு தமிழர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுமையான ஆய்வு எதையும் செய்து விடக்கூடாது என்பதில் சிங்கள ராணுவம் தீவிரமாக இருந்தது. தமிழர்கள் மறு குடியேற்றம் செய்த பகுதிகள் மற்றும் தமிழர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்படும் பகுதிகள் ஆகியவற்றுக்கு மட்டுமே இந்திய எம்.பி.க்கள் குழுவை சிங்கள ராணுவம் அழைத்துச் சென்றது.
 
அங்குள்ள தமிழர்களிடம் இந்திய எம்.பி.க்கள் பேசியபோது கூட சிங்கள ராணுவத்தினர் கண்காணித்தப்படி இருந்தனர். சில இடங்களில் ஈழத் தமிழர்களை எம்.பி.க்கள் குழுவினர் சந்திக்க முடியாதபடி சிங்கள ராணுவத்தினர் கெடுபிடி செய்து தடுத்து விட்டனர்.
 
திரிகோணமலை மாவட்டம் சம்பூரில் தமிழர்களின் மிகப்பெரிய முகாம் உள்ளது. அங்கு இந்திய எம்.பி.க்கள் குழு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் திரிகோணமலை மாவட்ட தமிழர்கள் உண்மையில் என்ன நிலையில் உள்ளனர் என்பது திட்டமிட்டு மறைக்கப்பட்டு விட்டது. சம்பூரில் 1260 தமிழ்க் குடும்பங்கள் வசித்து வந்தன. அவர்கள் அனைவரும் துரத்தப்பட்டு அங்கு பெரிய ராணுவ முகாம் கட்டி உள்ளனர். இந்தியா உதவியுடன் அங்கு 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் நிலையம் கட்டப்பட்டுள்ளது.
 
இதற்காக விரட்டப்பட்ட சம்பூர் தமிழர்கள் நிலை என்ன ஆயிற்று என்பதை எம்.பி.க்கள் குழு பார்வையிடவில்லை. சம்பூரில் அடுத்தக்கட்டமாக மிகப்பெரிய பொருளாதார மண்டலம் உருவாக்கும் முயற்சியில் இலங்கை அரசு  ஈடுபட்டுள்ளது. இதனால் தங்களது விளை நிலம் தங்களுக்கு கிடைக்குமா? என்று சம்பூர் பகுதி மக்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இந்திய எம்.பி.க்கள் அவர்களை பற்றி ஒருவார்த்தை கூட கேட்கவில்லை.
 
சிங்கள ராணுவமும் சம்பூர் முகாமை மறைத்துவிட்டு, எம்.பி.க்கள் குழுவை மட்டகளப்பு மாவட்டத்துக்கு அழைத்து சென்றுவிட்டது. அங்கும் ஈழத் தமிழர்களை இந்திய எம்.பி.க்கள் குழு சந்தித்து பேச முடியவில்லை. வெறுமனே வளர்ச்சித் திட்டங்களை மட்டுமே இந்திய எம்.பி.க்கள் குழு பார்வையிட்டது. அதை பார்த்து விட்டுத்தான் பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ் சிங்கள அரசை பாராட்டினார்.
 
உண்மையிலேயே பாதிக்கப்பட்ட தமிழர்களை அவர் பார்த்திருந்தால் இப்படி சொல்லி இருக்கமாட்டார். எனவே எம்.பி.க்கள் குழு பயணம் வீணாகி விட்டதாக தெரியவந்துள்ளது.






Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™