Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





விழியே பேசு...

விழியே பேசு...


மீண்டு உள்ளே வா...: கனிமொழியிடம் மீண்டும் விசாரணை

Posted: 20 Apr 2012 10:53 PM PDT


கலைஞர் தொலைக் காட்சிக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து ரூ.233 கோடி கடன் பெறப்பட்டது. ஸ்பெக்ட்ரம் உரிமம் ஒதுக்கீடு பெறுவதற்காகவே ஸ்வான் டெலிகாம் நிறுவனம், இந்த அளவு பணத்தை கலைஞர் டி.வி.க்கு கொடுத்ததாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன.

ஆனால் ரூ.233 கோடி பணம், கடனாகப் பெற்றது என்றும், அந்த கடன் திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டது என்றும் கலைஞர் தொலைக்காட்சி விளக்கம் அளித்தது.

கலைஞர் தொலைக் காட்சியில் கனிமொழி எம்.பி.க்கு 20 சதவீத பங்குகள் உள்ளன. எனவே ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்கும் இடையே நடந்த பண பரிமாற்றம் குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்தினர்.

சி.பி.ஐ. வழக்கில் கைதான கனிமொழி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு பிறகு ஜாமீனில் விடுதலையானார். இந்த நிலையில் தற்போது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கனிமொழியிடம் விசாரணை நடத்த தயாராகி வருகிறார்கள். ரூ.233 கோடி பணம் எப்படி, எந்த அடிப்படையில் கை மாறியது என்ற விசாரணையை அமலாக்கப்பிரிவு ஏற்கனவே நடத்தி விட்டது.

வங்கி கணக்குகளும் சரிபார்க்கப்பட்டன. இது தொடர்பாக விளக்கம் அளிக்க வருமாறு கனிமொழி எம்.பிக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. வருகிற 26-ந் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி உரிய ஆவணங்களைக் கொடுக்க வேண்டும் என்று அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்றாலும் 26-ந் தேதி கனிமொழி கண்டிப்பாக அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றில்லை. அவரது பிரதிநிதி ஆஜரானால் கூட போதுமானது. அமலாக்கப்பிரிவின் சம்மனை ஏற்று கனிமொழி தனது வங்கி கணக்குகள், கலைஞர் டி.வி.யின் வங்கிக் கணக்குகள் மற்றும் கடன் பணபரிமாற்றத்துக்கான வங்கி கணக்கு விவரங்களை அமலாக்கப்பிரிவிடம் தாக்கல் செய்வார். அதன் அடிப்படையில் கனிமொயிடம் அமலாக்கப்பிரிவு விசாரணையை தொடங்கும்.

தற்போது பாராளுமன்ற கூட்டத் தொடர் நடந்து வருவதால் கனிமொழி அதில் பங்கேற்று வருகிறார். எனவே அடுத்த மாதம் (மே) 3-வது வாரம் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த பிறகு கனிமொழியிடம் அமலாக்கப்பரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்குவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

கனிமொழி தவிர கலைஞர் டி.வி. முன்னாள் நிர்வாக இயக்குனர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளளது. இதற்கிடையே சட்ட விரோத பணப் பரிமாற்றம் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் அமலாக்கப்பிரிவு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

அந்த சட்டத்தின் 4-வது பிரிவின் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. கலைஞர் டி.வி. பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கப்பிரிவு தற்போது தான் முதன்முதலாக வழக்கு பதிவு செய்வது குறிப்பிடத்தக்கது.



'மே-1' பில்லா -2 கண்டிப்பாக ரிலீஸ் - யுவன்!

Posted: 20 Apr 2012 10:20 PM PDT


அஜித் நடிப்பில் சக்ரி டொலட்டி இயக்கிகொண்டிருக்கும் படம் பில்லா-2. இந்த படத்தின் முன்னோட்டம் சில நாட்களுக்கு முன் ரிலீஸானது. ரிலீஸான ஒரு வாரத்திலேயே ஐந்து லட்சம் பார்வையாளர்களை தாண்டியதி. சில டெக்னிக்கல் கோளாறு காரணமாக அந்த முன்னோட்டத்தை எடுத்துவிட்டார்கள்.


இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுனில் கெதர்பல் நேற்று தனது சமூக இணையதளத்தில் "இன்று இரவு அல்லது நாளை முதல் பில்லா-3 படத்தின் டிரெய்லர் சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும். சில பிரச்சினைகள் காரணமாக இணையதளத்தில் வெளியிடுவதில் தாமதமாக வெளியிடுகிறோம்" என்று கூறியுள்ளார்.

இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ட்விட்டரில் " நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பில்லா-2 படத்தின் இசை தல பிறந்த நாளன்று வெளியிடப்படுகிறது. படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் உள்ளன" என்று கூறியுள்ளார்.

இது போன்ற நிகழ்ச்சிகளில் தலை காண்பிப்பதில் தல விருப்பம் கொள்ளமாட்டார். இருந்தாலும் பொருத்திருந்து பார்ப்போம் என்பதே ரசிகர்களின் நிலை. எனவே மே-1 பில்லா-2 படத்தின் பாடல் ரிலீஸ்.



டெல்லி: 120 பேர் கோடீசுவர கவுன்சிலர்கள்- 49 பேர் கிரிமினல்கள்

Posted: 20 Apr 2012 10:16 PM PDT


டெல்லி மாநகராட்சிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களில் 120 பேர் கோடீஸ்வரர்கள் என தெரியவந்து உள்ளது. அதே நேரத்தில் 49 கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள்.

டெல்லி தெற்கு, டெல்லி வடக்கு, டெல்லி கிழக்கு ஆகிய 3 மாநகராட்சிகளுக்கும் அண்மையில் தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது. 3 மாநகராட்சிகளிலும் மொத்தம் 272 வார்டுகள் உள்ளன. 3 மாநகராட்சிகளையும் பாரதிய ஜனதா கைப்பற்றியது.

தன்னார்வ அமைப்பு ஒன்று 272 கவுன்சிலர்களில் 236 பேரின் பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 120 பேர் கோடீஸ்வரர்கள் என்றும் இதில் 68 பேர் பா.ஜ.க.வினர்,, 30 பேர் காங்கிரசார் என்று கூறப்பட்டுள்ளது. சுயேச்சை கவுன்சிலர்களில் 22 பேரும் கோடீஸ்வரர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

பாரதிய ஜனதாவின் கவுர் சிர்சாவுக்கு ரூ.112 கோடிக்கும், சுயேச்சை கவுன்சிலர் நரேஷ் பல்யானுக்கு ரூ.57 கோடியே 23 லட்சத்துக்கும் சொத்து உள்ளது.

மேலும் 29 பாஜக கவுன்சிலர்கள், 14 காங்கிரஸ் கவுன்சிலர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர்களில் கணிசமாக பெண்களும் அடங்குவது என்பது வியப்புக்குரியது.




இது விளையாட்டு அல்ல : விஜய் அப்பா பரபரப்பு பேட்டி

Posted: 20 Apr 2012 09:48 PM PDT


பட அதிபர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.தாணு, தேனப்பன் ஆகியோர் போலீஸ் கமிஷனர் திரிபாதியை நேற்று மாலை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணனையும் சந்தித்து பேசினார்கள். பின்னர் வெளியில் வந்த அவர்கள், நிருபர்களை சந்தித்தார்கள். நிருபர்களிடம், எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியதாவது:-
 
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் நாங்கள். எங்கள் சங்கத்தில் 750 தயாரிப்பாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். நான் 320 ஓட்டுகள் வாங்கி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன்.
 
எங்களை நீக்கி இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். இது விளையாட்டு அல்ல. 15 நாட்களுக்கு முன்பு நோட்டீசு கொடுத்துதான் யாரையும் நீக்க முடியும். சங்கத்தின் செயல்பாடுகள் நடக்க வேண்டும். அது குறித்து கமிஷனரிடம் பேசினோம். நாங்கள் பாதுகாப்பு கேட்கவில்லை. எங்களுக்குள் பகை இல்லை. எங்கள் பிரச்சினையை கோர்ட்டு தீர்த்து வைக்கும்.
 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.   
















தமிழீழத்திற்கு முன் காஷ்மீருக்காக வாக்கெடுப்பு நடத்துங்கள்:இலங்கை

Posted: 20 Apr 2012 09:36 PM PDT

:தனித் தமிழீழத்துக்காக ஐ.நா.வில் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னர், தனித் தமிழ்நாடு மற்றும் காஷ்மீருக்காக பொதுவாக்கெடுப்பு நடத்தலாம் என்று இலங்கை  எரிசக்தித் துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆவேசமாக கூறியுள்ளார்.

தனித் தமிழீழம் அமைய ஐ.நா.வில் பொது வாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க  வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்த திமுக தலைவர்  கருணாநிதி,தமிழர்கள் சிந்திய ரத்தமும்,கொடுத்த உயிர்ப் பலிகளும் வீண் போகாது  என்றும்,இன்றில்லாவிட்டால் நாளை தனித் தமிழ் ஈழம் நிச்சயம் உருவாகும் என்றும் கூறி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க,"தனித் தமிழீழம் அமைப்பது தொடர்பாக ஐ.நா. வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னதாக காஷ்மீர் மற்றும  தமிழ்நாடு ஆகியவற்றுக்காக தேர்தல் நடத்தலாம். 

தனித் தமிழ் நாட்டுக்காக போராடியவர் என்ற ரீதியில் மத்திய அரசிடம் தனித் தமிழ்நாட்டு கோரிக்கையை கருணாநிதி முன்வைக்க முடியும்.

காஷ்மீரை தனிநாடாக அங்கீகரிப்பது தொடர்பாக 1948 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள்  அமைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.எனவே முதலில் காஷ்மீர் தொடர்பான  தீர்மானத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும்"எனக் கூறியுள்ளார்.







அடுத்தகட்ட அரசியல் முடிவு? : அழகிரி அவசர ஆலோசனை

Posted: 20 Apr 2012 09:30 PM PDT


திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரையில் நடந்த கட்சி நிகழ்ச்சிகளை புறக்கணித்தனர் மு.க.அழகிரி ஆதரவாளர்கள்.  இதனால் புறக்கணித்தவர்களில் முக்கியமான 17 பேருக்கும் விளக்கம் கேட்டு கட்சி தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  உரிய விளக்கம் அளிக்காவிட்டால் கட்சியில் நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதனால் ஆத்திரம் அடைந்த அழகிரி,   சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று அவசரமாக திரும்பினார்.  அழகிரி இல்லத்தில்,   நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள 17  பேரும் கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.



கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால்,  கட்சியின் பொதுச்செயலாளர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஆனால் கட்சியின் அமைப்புப்புச்செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எப்படி நடவடிக்க எடுக்க முடியும்.  

''தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் என்ற இடங்களுக்கு பிறகு அமைப்புச்செயலாளர்கள் என்ற இடத்தில் இரண்டு பெயர்கள் உண்டு.  முதலில் என் பெயர்தான் இருக்கிறது.   அதற்கு பிறகுதான் டி.கே.எஸ்.  பெயர்  உள்ளது.

முதல் இடத்தில் இருக்கும் என்னிடம் கேட்காமல், அடுத்த இடத்தில் இருப்பவருக்கு யார் அதிகாரம் தந்தது. என்னை உதாசீனப்படுத்திவிட்டு எனக்கு கீழ் இருப்பவர்களுக்கு எப்படி முன்னுரிமை கொடுக்கலாம்'' என்று அழகிரி கொந்தளித்துள்ளார்.



அது பற்றி எனக்கு தெரியாது:மு.க.அழகிரி பேட்டி

Posted: 20 Apr 2012 09:17 PM PDT


மதுரையில் கடந்த 15-ந் தேதி தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நிகழ்ச்சியை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்தினார். புறநகர் மாவட்டத்திலும், மாநகர் மாவட்டத்திலும் தனித்தனியாக நேர்காணல் நடந்தது.
 
அதன்பின் தமிழக அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து அன்று மாலையில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.இது குறித்து மாவட்ட நிர்வாகிகள் பொறுப்புகளில் உள்ள 17 பேருக்கு விளக்கம் கேட்டு தி.மு.க. தலைமை நோட்டீசு அனுப்பியது.
 
இந்த நிலையில் சீன நாட்டுக்கு சென்று இருந்த மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மு.க.அழகிரி நேற்று மதியம் விமானம் மூலம் மதுரை வந்தார். அவருடன் மனைவி காந்தி அழகிரியும் வந்தார். விமான நிலையத்தில் மத்திய மந்திரி மு.க.அழகிரியிடம் நிருபர்கள் பேட்டி கேட்டனர்.
 
அப்போது அவரிடம் மதுரையில் தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நிகழ்ச்சி நடந்ததே? என்று கேட்டனர். அதற்கு மு.க.அழகிரி அது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நான் அப்போது சீனாவில் இருந்தேன். இப்போதுதான் வருகிறேன். நேர்காணல் பற்றி எனக்கு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்றார்.
 
மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத தி.மு.க. நிர்வாகிகள் 17 பேருக்கு விளக்கம் கேட்டு தலைமை கழகம் நோட்டீசு அனுப்பியுள்ளதே என்று கேட்டதற்கு, இப்போதுதான் மதுரைக்கு வந்துள்ளேன். எனவே அதுபற்றியும் எனக்கு தெரியாது என்று அவர் பதில் அளித்தார்.
 
மதுரையில் தி.மு.க. நிர்வாகிகள் 17 பேரும் ரகசியமாக கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, இதுபற்றியும் எனக்கு எதுவும் தெரியாது. மேலும் விசாரித்த பின்னர் எதுவும் சொல்ல முடியும் என்றார்.
 
மதுரை வந்த மு.க.ஸ்டாலினை தி.மு.க.வினர் யாரும் வரவேற்கவில்லையே என்று கேட்டபோது, யாரையும் வரவேற்க வேண்டும் என்ற சட்டம் தி.மு.க.வில் இல்லை என்றார். அதன்பின் மு.க.அழகிரி வீட்டுக்கு காரில் புறப்பட்டு சென்றனர்.  

 


தமிழீழத் தனி நாடு- கோத்தபாய விமர்சனத்துக்கு கருணாநிதி பதில்

Posted: 20 Apr 2012 09:08 PM PDT


தி.மு.க.தலைவர் கருணாநிதி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:-
 
கேள்வி:- நீங்கள் தனித் தமிழ் ஈழம் பற்றி சொல்லிய கருத்துக்களுக்கு மாறாக இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோத்தபயே ராஜபக்சே, தனித் தமிழ் ஈழத்தை ஆதரிப்பவர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்லியிருக்கிறாரே?
 
பதில்:- தனித் தமிழ் ஈழம் கேட்கின்ற போராட்டத்தில் பயங்கரவாதமோ, தீவிரவாதமோ தலையிடக்கூடாது என்கிற கருத்து உடையவன் நான். என்னைத் தலைவராகக் கொண்ட தி.மு.க.வும் அதே கருத்தைத்தான் கொண்டது.நாங்கள் பயங்கரவாதத்துக்கு தயாராக இல்லை.
 
கேள்வி:- தனித் தமிழ் ஈழம் கேட்பது என்பது இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்று அவர் சொல்லியிருக்கிறாரே?
 
பதில்:- தமிழ் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எதிராக இலங்கையில் சிங்களவர்களால் கடந்த காலத்தில் நடத்தப்பட்ட கொடுமைகளும், எதிர்காலத்தில் நடத்தப்படுமென்று எதிர்பார்க்கின்ற கொடுமைகளும் நடைபெறக் கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் தனித் தமிழ் ஈழம் வேண்டும் என்று கேட்கிறோம்.
 
கேள்வி:- தமிழ்நாட்டில்தான் தமிழர்கள் அதிகமாக இருக்கிறார்கள். எனவே, இலங்கை விவகாரத்தில் தலையிடாமல், இந்தியாவில் தனித் தமிழ்நாடு வேண்டும் என்று கேளுங்கள் என்று கோத்தபயே சொல்லியிருக்கிறாரே?
 
பதில்: இந்தியாவில் இருக்கின்ற மத்திய அரசு, இலங்கையில் இருக்கிற அரசைப்போல தமிழர்களைக் கொடுமைப்படுத்தவில்லை. தமிழர்கள் இங்கே நிம்மதியாகத்தான் இருக்கிறார்கள். ஆகவே, எங்களுக்கு இந்திய அரசை விட்டுப்பிரிந்துபோக வேண்டிய அவசியம் இப்போது இல்லை.
 
இவ்வாறு கருணாநிதி பதில் அளித்தார்.
 
தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. திருவொற்றியூர் மா.வெ.நாராயணசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தி.மு.க.தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
 
அறிவார்ந்த சிறந்த தொழிற்சங்கவாதியும், திருவொற்றியூர் தொகுதியின் முன்னாள் தி.மு.க.சட்டமன்ற உறுப்பினருமான மா.வெ.நா.என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மா.வெ.நாராயணசாமி மறைந்துவிட்டார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
 
'மிசா' கொடுமைக்கு ஆளாகி காராக்கிரகத்தில் அடைபட்டு சித்ரவதைகளுக்கு ஆளான போதிலும், கொண்ட கொள்கையில் உறுதியோடு இருந்து அரும்பணியாற்றியவர் அவர். திருவொற்றியூர் பகுதியிலே உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் தொழிற்சங்க தலைவராக பல ஆண்டு காலம் இருந்து, தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காக பெரிதும் பாடுபட்ட, மா.வெ.நாராயணசாமியின் மறைவுக்காக அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இவ்வாறு கருணாநிதி கூறி உள்ளார்.   



இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

Posted: 20 Apr 2012 09:02 PM PDT


இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் 6.9 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம்.  பப்புவாயில் உள்ள மனோக்வாரியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  நிலநடுக்கத்தில் வீடுகள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
 
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் விவரம் குறித்த உடனடி தகவல் எதுவும் இல்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.






சுஷ்மா சுவராஜுக்கு ராஜபக்சே விருந்து:தனியாக சந்தித்ததால் சர்ச்சை

Posted: 20 Apr 2012 08:59 PM PDT


பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றுள்ளது. அக்குழு தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு சென்று பார்வையிட்டது.
 
இந்நிலையில், குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜுக்கு இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே நேற்று சிறப்பு விருந்து அளித்தார். மற்ற எம்.பி.க்கள் இதில் கலந்து கொள்ளவில்லை.
 
சுஷ்மாவின் மகள் பன்சூரி சுவராஜ் மட்டுமே பங்கேற்றார். ராஜபக்சேவும், சுஷ்மா சுவராஜும் சாப்பிட்டபடியே உரையாடினர். சக எம்.பி.க்களை தவிர்த்து விட்டு, சுஷ்மா மட்டும் போய் ராஜபக்சேவை சந்தித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
ஒருவேளை, மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் சுஷ்மா மட்டும் தனியாக போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்திய எம்.பி.க்கள் இன்று காலை அதிபர் ராஜபக்சேவுடன் காலை உணவு சாப்பிட்டபடியே பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தது. ஆனால், ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிட்டால், தமிழ்நாட்டில் கெட்ட பெயர் ஏற்படும் என்று அஞ்சிய இந்திய எம்.பி.க்கள், அந்த சந்திப்பை ரத்து செய்யுமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டனர்.
 
அதன்படி, அந்தசந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே, சுஷ்மா சுவராஜ் நேற்று மட்டக்களப்பு சென்றார். அங்குள்ள மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தை தேசிய தொழில் கல்லூரியாக தரமுயர்த்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
 
தேசிய தொழில் கல்லூரிக்கான நினைவுப் படிகத்தை திறந்து வைத்து உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
 
இந்தியா-இலங்கையில் 52 திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இவற்றுக்கு இலங்கை அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. அதே நேரம், இலங்கை புதிய உதவிகளுக்கான கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது.இவையனைத்தையும் சாத்தியமான சகல வழிகளிலும் இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
இந்நிகழ்ச்சியில், இலங்கை மந்திரிகள் பசில் ராஜபக்சே, டலஸ் அழகம்பெருமாள், விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண முதல்-மந்திரி சந்திரகாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   




























மு.க.அழகிரிக்கு சொந்தமான 'தயா' சைபர் பார்க்கில் ஆக்கிரமிப்பு பகுதி எவ்வளவு?: மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை

Posted: 20 Apr 2012 07:31 AM PDT


மதுரை மாட்டுத்தாவணியில் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் குடும்பத்திற்கு சொந்தமான 'தயா' சைபர் பார்க் உள்ளது. இந்த கட்டிடம் அமைந்துள்ள சில பகுதிகள் புறம்போக்கு நிலத்தில் உள்ளதாகவும், முன்பகுதியில் சுமார் 8 சென்டு இடம் மதுரை மாநககராட்சிக்கு சொந்தமானது என்றும், இந்த இடத்தை ஆக்கிரமித்து 'தயா' சைபர் பார்க் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது.

இதுதொடர்பாக வருவாய் துறையினர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கலெக்டர் சகாயம் உத்தரவிட்டதன்பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை கொடுத்தனர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்க மதுரை மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் மாநகராட்சி அதிகாரிகளும் சர்வே செய்ததில் கட்டிடத்தில் முன்பகுதியில் சுமார் 8 சென்ட் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்றும், சில பகுதிகள் புறம்போக்கு நிலம் என்பதும் தெரியவந்தது.

மேலும் 'தயா' சைபர் பார்க் கட்டிடத்திற்கு மாநக ராட்சியிடம் வரைபட அனுமதி பெறாததும் கண்டு பிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து மாநகராட்சி ஆக்கிரமிப்பு இடம் தொடர்பாக மு.க.அழகிரி குடும்பத்தினருக்கு நோட்டீசு அனுப்பியது. ஆனால் உரிய பதில் அளிக்கப்படவில்லை. இந்தநிலையில் நேற்று மாநகராட்சி சார்பில் 'தயா' சைபர் பார்க் ஆக்கிரமிப்பு இடத்தில் மாநகராட்சி அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

இதில் இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என கமிஷனர் அறிவித்துள்ளதாக எழுதப்பட்டுள்ளது.



மீனவர்கள் கொலை வழக்கு: இத்தாலிக்கு ஆதரவளிக்கும் மத்திய அரசு

Posted: 20 Apr 2012 07:22 AM PDT


கேரள மாநிலம் கொல்லம் கடற்பகுதியில் கடந்த பிப்ரவரி 15-ந்தேதி மீன்பிடித்து கொண்டிருந்த விசைப்படகு மீது, அந்த வழியாக வந்த இத்தாலி கப்பல் வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழக மீனவர்கள் இருவர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக இத்தாலி கப்பல் வீரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் அவர்கள் திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
இந்நிலையில் இத்தாலி கப்பல் வீரர்கள் இருவரையும் விடுவிப்பதற்காக இத்தாலி அரசு இந்திய உச்ச நீதிமன்றத்தை நாடியது. கப்பல் வீரர்கள் மீதான குற்றவியல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் இத்தாலி அரசு சார்பில் மனு அளிக்கப்பட்டது. இவ்வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இ
 
தற்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு, 'மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு இந்திய கடல் பகுதியில் நடைபெறவில்லை. எனவே இவ்வழக்கை கேரள அரசு விசாரிக்க முடியாது' எனக் கூறியுள்ளது. யாரும் எதிர்பாராத விதமாக மத்திய அரசு இத்தாலியர்களுக்கு ஆதரவான பதிலைக் கூறி, இந்தியர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. மத்திய அரசின் இந்த பதில் துரதிருஷ்டவசமானது என உச்ச நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.
 
முதலில் இவ்வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் கப்பல் வீரர்கள் மீதான குற்றவியல் வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்தது.  எனவே கப்பல் வீரர்கள் மீதான குற்றவியல் வழக்கை தள்ளுபடி செய்வதற்காக, இத்தாலி அரசு தனது ராஜ தந்திரங்கள் மூலம் இந்திய அரசைக் கவர்ந்ததுடன், உச்ச நீதிமன்றத்தை நாடியது.  இத்தாலி அரசின் ராஜ தந்திரங்களுக்கு இந்திய அரசு பணிந்துள்ளது.



சீக்கிரம் என்பெயரை Qamal Hassan என மாற்றப் போகிறேன்!- கலாய்க்கும் கமல்

Posted: 20 Apr 2012 06:51 AM PDT


அமெரிக்காவில் ஷாரூக்கானுக்கு நடந்ததைப் போன்ற அனுபவம் எனக்கும்தான் ஏற்பட்டது. அதற்காக நான் வருத்தப்படவில்லை. அந்த பிரச்சினையை நான் ரசிக்கிறேன். சொல்லப்போனால் என் பெயரையே Qamal Hassan என்று மாற்றப் போகிறேன், என்கிறார் உலக நாயகன் கமல்!

இந்தி நடிகர் ஷாருக்கானை அமெரிக்கர்கள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள் அல்லவா. இதுபற்றி கமலிடம் கருத்து கேட்டபோது, "ஷாரூக்கானை மட்டுமா... என்னையும் கூடத்தான் சந்தேகமா பார்க்கிறார்கள் அமெரிக்கர்கள். அங்கு இது சகஜம்தான். இதுக்காக ஏன் டென்ஷனாகனும்," என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "எனது பெயரை உச்சரிக்கும்போது முஸ்லிம் பெயர்போல் தோன்றும். எனது தந்தை பெயர் வைக்கும் போதே இதுபோன்ற சந்தேகங்கள் வரும் என்று தெரிந்துதான் வைத்தார்.

அடிக்கடி என்னிடம் உனது பெயரை பற்றி யாரேனும் விசாரித்தார்களா? முஸ்லிம் என்று நினைத்தார்களா? என்று கேட்பார் அப்பா.

நான் அமெரிக்கா போகும்போதெல்லாம், எனது பெயரும் அமெரிக்கர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக்கானுக்கு விமான நிலையத்தில் நிகழ்ந்த சம்பவம் எனக்கும் ஏற்பட்டது. கனடா விமான நிலையத்தில் என்னைத் தடுத்து நிறுத்தினார்கள். அரை மணி நேரம் என்னிடம் கேள்விகள் கேட்டார்கள். இப்படியெல்லாம் குழப்பம் வரும் என்று தெரிந்தே எனக்கு இப்பெயரை என் தந்தை வைத்துள்ளார்.

எனது சகோதரர்களுக்கு சந்திரஹாசன், சாருஹாசன் என பெயர் வைத்து விட்டு எனக்கு மட்டும் குறும்புத்தனமாக இந்த பெயரை சூட்டியுள்ளார். எனது பெயரை இதுபோல் சந்தேகமாக பார்த்து குழம்புவதை ஒருவிதத்தில் நான் ரசிக்கிறேன். சந்தோஷமாகவும் இருக்கிறது.

என் பெயரே கியூ என்ற ஆங்கில எழுத்தை முதலில் வரும் வகையில் மாற்றப்போகிறேன். அப்படி பெயர் வைப்பதன் மூலம் பிரச்சினைகள் வரவேண்டும். அவற்றை கண்டு நான் ரசிக்க வேண்டும்.

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட சம்பவத்தினால் அங்குள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்கின்றனர். அதனால்தான் ஷாருக்கானை தடுத்து நிறுத்தியுள்ளார்கள். அது இயல்புதானே. இன்னொன்று அதுபற்றி ஷாருக்கானே கவலைப்படவில்லை. அதற்குள் ஆயிரம் கருத்துகள்.

இதுபோன்ற விஷயங்களுக்கு இந்தியாவிலிருந்து அவசரப்பட்டு கருத்து தெரிவிப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.

ஆப்கானிஸ்தான் மாணவர்கள் நமது நாட்டில் எளிதாக ரூம் எடுத்து தங்கிவிட முடியுமா? இதை யாரும் யோசிக்கிறீர்களா... இதற்கு தீர்வு என்ன என்றாவது யோசிக்கிறோமா... அதனால் நம்மிடம் உள்ள மூடத்தனத்தை முதலில் அகற்றப் பார்க்க வேண்டும்," என்றார்.




உலகை திரும்பி பார்க்க வைத்த 'அக்னி 5'; உலகை மிரள வைக்க வரும் 'ஏ-6'

Posted: 20 Apr 2012 05:47 AM PDT


அக்னி 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துவிட்ட நிலையில், அடுத்தபடியாக வரப் போவது 'ஏ-6' என்று பெயரிடப்பட்டுள்ள ஏவுகணை. இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் பல அணு குண்டுகளை ஏந்திக் கொண்டு 10,000 கி.மீ. வரை சென்று ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது.

17.5 மீட்டர் உயரம் கொண்ட அக்னி 5 ஏவுகணை திட எரிபொருளால் இயக்கக் கூடியதாகும். இதனால், இதை மிக எளிதாக ராணுவ வாகனங்களில் எந்த இடத்துக்கும் கொண்டு சென்று ஏவ முடியும்.

சுமார் 1.5 டன் (1,500 கிலோ) எடை கொண்ட அணு குண்டையோ அல்லது வேறு ஆயுதங்களையோ இந்த ஏவுகணையால் ஏந்திக் கொண்டு 5,000 கி.மீ. வரை பயணிக்க முடியும்.

'இன்டர் காண்டினென்டல் பேலிஸ்டிக் மிஸைல்' (Inter-Continental Ballistic Missile-ICBM) எனப்படும் இந்த ஏவுகணை, ஏவப்பட்டவுடன் முதலில் பூமியிலிருந்து 40 கி.மீ. உயரத்தை அடையும். அத்தோடு அதன் முதல் ஸ்டேஜ் ராக்கெட் தனியே கழன்றுவிடும்.

இதையடுத்து அதன் இரண்டாவது ராக்கெட் செயல்பட்டு அதை மேலும் 150 கி.மீ. உயரத்துக்கு கொண்டு செல்லும். இதன் பின்னர் அதன் 3வது ராக்கெட் இயங்கி அதை மேலும் 800 கி.மீ. உயரத்துக்கு கொண்டு செல்லும்.

இந்த உயரத்தை அடைந்த பின்னர் ஏவுகணையில் உள்ள கம்ப்யூட்டர்கள், செயற்கைக் கோள் மற்றும் ரேடியோ சிக்னல்கள் உதவியோடு, அதை தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தை நோக்கித் திருப்பும்.

இதையடுத்து அடுத்த 18 நிமிடங்களில் இந்த ஏவுகணை 5,000 கி.மீ. தூரத்தைக் கடந்து குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கும்.

3வது கட்ட ராக்கெட் செயல்பட ஆரம்பிக்கும்போது இந்த ஏவுகணையின் வேகம் ஒலியை விட 24 மடங்கு அதிகமானதாக இருக்கும். அதாவது, போர் விமானங்களை விட சுமார் 30 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும்.

இந்த ஏவுகணையால் பாகிஸ்தான், சீனாவின் எந்தப் பகுதியையும், கிழக்கு ஐரோப்பாவையும், வடக்கு-கிழக்கு ஆப்பிரிக்காவைத் தாக்க முடியும்.

நிகோபார் தீவுகளில் இருந்து இதை ஏவினால் ஆஸ்திரேலியாவைக் கூட தாக்கலாம்.

திபெத் பகுதியில் இந்தியாவுக்கு எதிராக ஏவுகணைகளை சீனா நிறுத்தி வைத்துள்ள நிலையில், இந்த அக்னி 5, சீனாவுக்கு எதிரான மிகப் பெரிய தற்காப்பாக இருக்கும்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் மட்டும் தான் இந்த வரை ஐசிபிஎம் ஏவுகணைகள் உள்ளன. இப்போது இந்தத் திறனைப் பெற்றுள்ள 5வது நாடு இந்தியாவாகும்.

இந்தியா முதலில் தயாரித்த அக்னி-1 ஏவுகணை 700 கி.மீ. தூரத்தைக் கடக்க வல்லதாக இருந்தது. இதையடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த ஆராய்ச்சிகளை நடத்தி அதன் தூரம் 5,000 வரை நீடிக்கப்பட்டுள்ளது (அக்னி-5 உண்மையில் 8,000 கி.மீ. தூரத்தை கடக்க வல்லது என்கிறது சீனா).

அக்னி ரகத்தைச் சேர்ந்த முந்தைய ஏவுகணைகளுக்கும் அக்னி- 5 ஏவுகணைக்கும் இடையே மிக மிக முக்கியமான வித்தியாசம் உண்டு. அது re-entry technology எனப்படும் பூமிக்கு வெளியே போய்விட்டு திரும்ப உள்ளே நுழையும் தொழில்நுட்பம்.

மற்ற ஏவுகணைகள் செலுத்தியவுடனே எதிரி நாட்டு திசை நோக்கி பயணித்து குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும். அவை 'க்ரூயிஸ்' (cruise missiles) ரக ஏவுகணைகள். ஆனால், அக்னி-5 பேலிஸ்டிக் மிஸைல் ரகத்தைச் சேர்ந்தது. அதாவது, ஏவப்பட்டவுடன் பூமிக்கு மேலே பல நூறு கிலோ மீட்டர்கள் பயணித்துவிட்டு, பின்னர் வானிலியிருந்து பூமி நோக்கித் திரும்பி, எதிரி நாட்டு இலக்கை நோக்கி பாயும் ஏவுகணை இது.

இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் ஏகப்பட்ட சிக்கல்கள். ஆனால், இந்த தொழில்நுட்ப உதவியை வெளிநாடுகளில் இருந்து பெற சர்வதேச சட்டமான Missile Technology Control Regime தடுக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்றாலும், ரீ-எண்ட்ரி தொழில்நுட்பத்தை பிற நாடுகளிடமிருந்து இந்தியாவால் பெற முடியவில்லை.

இதனால் அந்தத் தொழில்நுட்பத்தை இந்தியாவே உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, அதை செய்தும் காட்டிவிட்டனர் நமது DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பிரிவின் விஞ்ஞானிகள்.

இந்த ஏவுகணைத் தயாரிப்புக்கான பல தொழில்நுட்பங்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவிடமிருந்து வந்துள்ளதை மறுக்க முடியாது. அக்னி ஏவுகணையின் திட எரிபொருள் ராக்கெட்டுகள், செயற்கைக் கோள்களை ஏவ இஸ்ரோ தயாரித்த எஸ்.எல்.வி., பி.எஸ்.எல்.வி. ராக்கெட்களின் அடிப்படையில் அமைந்தவை தான் என்கிறது குளோபல் செக்யூரிட்டி என்ற சர்வதேச பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சி மையம்.

இப்போது உருவாக்கப்பட்டுள்ள அக்னி-5 ஒரே ஒரு அணு அல்லது வேறு குண்டை ஏந்திச் செல்ல வல்லது. அடுத்தகட்டமாக ஒரே ஏவுகணையில் பல குண்டுகளை ஏந்திச் செல்லும் தொழில்நுட்பத்தை (Multiple independently targetable reentry vehicle-MIRVed) இந்தியா உருவாக்கி வருவதாகத் தெரிகிறது. 'A6' என்று கோட் நேம் இடப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஏவுகணையின் தூரமும் 6,000 முதல் 10,000 கி.மீயாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஏவுகணைக்கு 'சூர்யா' எனப் பெயரும் சூட்டப்பட்டுவிட்டது என்கிறார்கள்.

அடுத்த கட்டமாக இந்த ஏவுகணையை நீர் மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் செலுத்தக்கூடியாதவும் (Submarine-launched ballistic missile) மேம்படுத்தும் திட்டத்திலும் டிஆர்டிஓ உள்ளதாகத் தெரிகிறது.

இப்போது இந்தியாவிடம் தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் பிருத்வி குறைந்த தூர ஏவுகணை, தரையிலிருந்தும் கப்பல்களில் இருந்தும் கப்பல்களைத் தாக்கும் திரிசூல், தரையிலிருந்து விமானத்தையோ அல்லது விமானத்திலிருந்து விமானத்தையே தாக்கும் ஆகாஷ், இரவு-பகல் என எந்த நேரத்திலுந் கவச வாகனங்களைத் தாக்க உதவும் நாக் ஆகிய ஏவுகணைகளும், நீண்ட தூரம் சென்று தாக்கும் அக்னி வரிசையில் 1,2,3,4,5 ஆகிய ஏவுகணைகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னி-5 ஏவுகணையை மேலும் கூர்மையாக்க மேலும் 5 முதல் 6 சோதனைகள் வரை தேவைப்படும் என்று தெரிகிறது. இதனால் வரும் காலங்களில் அடிக்கடி அக்னி-5 சோதனைகள் நடக்கலாம்.



நெட்டில் 'செக்ஸைத்' தேடியவர்களில் பாக். நம்பர் 1-இந்தியாவுக்கு 2வது இடம்!

Posted: 20 Apr 2012 05:22 AM PDT


2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேடுதல்கள் தொடர்பான ஆய்வுகளின்படி,கூகுள் இணையத்தளத்தின் மூலம் செக்ஸ் எனும் வார்த்தையை அதிகம் தேடியவர்களைக் கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது.

இணையத்தளத்தில் 'செக்ஸ்' குறித்து அதிகம் தேடுதலை மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தையும் இந்தியா இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளன. வியட்நாம் மூன்றாமிடத்திலும் எகிப்து நான்காமிடத்திலும் இந்தோனேஷியா ஐந்தாமிடத்திலும் உள்ளதாக 'கூகுள் ட்ரென்ட்ஸ்' ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அந்த பட்டியலில் அல்ஜீரியா, மொராக்கோ, மலேசியா, போலந்து, துருக்கி ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

தொடர்ந்து முதலிடம்

2011 ம் ஆண்டு மட்டுமல்லாது கூகுள் தேடல் தளத்தில் இதுவரைக்காலமும் அதிக செக்ஸ் தேடலை மேற்கொண்டோர் உள்ள நாடுகளின் பட்டியலிலும் பாகிஸ்தான் தான் முதலிடத்தில் உள்ளது. இதில் இந்தியாவை 3 ஆம் இடத்திற்கு தள்ளிவிட்டு வியட்நாம் இரண்டாமிடத்தில் உள்ளது.

20 மில்லியன் இணைத்தள பாவனையாளர்களைக் கொண்டுள்ள நிலையில் அந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவரும் நிலையில், அனைத்து வருடங்களுக்குமான உலகளாவிய 'செக்ஸ் தேடல் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தைப் பெற்றுள்ளது' என பாகிஸ்தானின் த எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ரம்ஜான் மாதத்தில் லீவ்

கடந்த 2011 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை பிப்ரவரி, ஆகஸ்ட் மாதம் தவிர்ந்த ஏனைய சகல மாதங்களிலும், செக்ஸ் என்ற வார்த்தையை தேடியவர்களை அதிகம் கொண்ட உலகின் முதல் 10 நகரங்களின் பட்டியலில் பாகிஸ்தானின் லாகூர் நகரம் இடம்பெற்றுள்ளது. பிப்ரவரி, ஆகஸ்ட் ( ரம்ஜான் மாதம் ) மாதங்களுக்கான பட்டியலில் எந்தவொரு பாகிஸ்தான் நகரமும் இடம்பெறவில்லை என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

8 இந்திய நகரங்கள்

செக்ஸ் எனும் வார்த்தையை அதிகம் தேடியவர்களைக் கொண்ட 10 நகரங்களில் 8 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. உலகளவில் இந்தியாவின் லக்னோ முதலிடத்தையும் கொல்கத்தா இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளன. சென்னை உலகளவில் 7 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.பாகிஸ்தானின் லாகூரும் வியட்நாமின் ஹனோயும் முதல் 10 நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவை சாராத நகரங்களாகும்.



தனுஷ், சிம்பு மீண்டும் மோதல்?

Posted: 20 Apr 2012 05:12 AM PDT


தனுஷ், சிம்பு இடையே மீண்டும் பனிப்போர் துவங்கியுள்ளது. சில வருடங்களுக்கு முன் இருவரும் தங்கள் படங்களில் ஒருவரையொருவர் மறைமுகமாக தாக்கி வசனம் வைத்தனர். பொது நிகழ்ச்சிகளிலும் விமர்சித்து பேசினார்கள்.
தனுசின் 'சுள்ளான்' படத்தில் நாயகியாக நடித்த சிந்து துலானியை சிம்பு தனது படத்தில் துணை நடிகையாக்கினார். சிம்புவுடன் காதல் தகராறில் இருந்த  நயன்தாராவை தனுஷ் அழைத்து தனது 'யாரடி நீ மோகினி'  படத்தில் நடிக்க வைத்தார்.

சிம்பு புது ஸ்டைலில் 'எவன்டி உன்ன பெத்தான்... கையில் கிடைச்சா செத்தான்...' என்றும் 'லூசுப் பெண்ணே...' என்றும்  பாடல்கள் பாடினார்.  அதே பாணியில் தனுசும் 'அடிடா அவள... உதடா அவள...' என்றும் 'ஒய்திஸ் கொலை வெறி...' என்றும் போட்டியாக பாடினார். பிறகு இருவரும் சமாதானம் ஆனார்கள். தங்களுக்குள் நல்ல நட்பு இருப்பதாகவும் அறிவித்தனர். ஒருவரையொருவர் பாராட்டியும் பேட்டி  அளித்தனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் தகராறு மூண்டுள்ளது.  சிம்புவை நாயகனாக வைத்து 'வட சென்னை' என்ற படத்தை வெற்றி மாறன் இயக்க தயாரானார்.  கதை, விவாதம், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு எல்லாம் முடிந்து  படப்பிடிப்புக்கு கிளம்பினர். ஆனால் திடீரென்று பட வேலைகள் நிறுத்தப்பட்டு விட்டன. அந்த படத்தை வெற்றிமாறன் கைவிட்டு விட்டதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

சிம்புக்கு பதில் தனுசை வைத்து புதிய படத்தை இயக்கப் போவதாக வெற்றிமாறன் அறிவித்து உள்ளார். வெற்றிமாறன்  படத்தில் மீண்டும் நடிக்கப் போவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தனுஷ் கூறியுள்ளார். 'வட சென்னை' படத்தை கிடப்பில் போட தனுஷ் காரணமாக இருக்கலாம் என்று சிம்பு தரப்பில் சந்தேகம் கிளம்பியுள்ளது. இதனால் சண்டை உருவாகியுள்ளது.   



5000 மீனவர்களுடன் ராமேஸ்வரத்தை நோக்கி படையெடுப்பேன் : 'அக்யூஸ்ட்' டக்ளஸ்!

Posted: 20 Apr 2012 04:59 AM PDT


இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை நிறுத்த எச்சரிக்கை விடுக்கும் வகையில், 5000 மீனவர்களுடன் டக்ளஸ் தேவானந்தா ராமேஸ்வரம் நோக்கி வரப் போகிறாராம்.

ஒரு செய்தியாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த டக்ளஸ் அங்கு தன் இஷ்டத்திற்குப் பல விஷயங்களையும் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழக மீனவர்களை கடுமையாக எச்சரிக்கும் வகையில் பேசினார். 
அவர் கூறுகையில், 

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து இந்தியத் தமிழர்களுக்கு எச்சரிக்கும் வகையில் அடுத்த மாதத்தில், சுமார் 5 ஆயிரம் மீனவர்களுடன் ராமேஸ்வரத்தை நோக்கி சென்று கடலில் வைத்து ஒரு எச்சரிக்கை ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 1000 படகுகளில் அழைத்துச் செல்லப்படுவார்கள். மேலும் இதற்கு நானே தலைமை தாங்குவேன்.

இந்திய அரசாங்கத்திற்குப் பல தடவை மீனவர் பிரச்சினை குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் யாழ் .வந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரிடமும், மகஜர் கையளிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் அவற்றுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அடுத்தகட்டமாக இந்திய அரசாங்கத்திற்கு தந்தியொன்று நான் அனுப்பவுள்ளேன். அதனையும் அரசாங்கம் நிராகரித்தால் ராமேஸ்வரத்தை நோக்கி படையெடுப்பேன் என்றார் டக்ளஸ்.

சென்னையில் கொலை வழக்கில் அக்யூஸ்ட் அதாவது குற்றம் சாட்டப்பட்டவராக உள்ள டக்ளஸ் தேவானந்தா, தேடப்படும் குற்றவாளியாகவும் பிரகனடப்படுத்தப்பட்டனர். இதனால் இந்தியாவுக்குள் குறிப்பாக தமிழகத்திற்குள் கால் கூட வைக்க முடியாமல் இருக்கிறார். இந்த நிலையில்தான் ராமேஸ்வரத்தை நோக்கி அவர் படையெடுக்கப் போகிறாராம்.

தனது பேட்டியின்போது மேலும் அவர் உளறுகையில், சகோதரப் படுகொலைகளை நிறுத்துமாறு தான் பிரபாகரனிடம் கேட்டேன். ஆனால் அவர் என்னை துரோகிகள் பட்டியலில் முதல்வரிசையில் சேர்த்து விட்டார். ஆனால், நான் உயிருடன் இருக்கையில் தான் இறப்பேன் என பிரபாகரன் கனவிலும் நினைத்திருக்க மாட்டார் என்று பேசினார். விடுதலைப் புலிகளின் கை வலுவாக இருந்த நேரத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்தான் இந்த டக்ளஸ். ஆனால் தற்போது மைக்கைப் பிடித்து மனம் போனபடி பேசும் அளவுக்கு அவருக்கு நேரம் வந்து விட்டது.



அரசியலுக்கு வருவது காலத்தின் கையில் உள்ளது - ஆரம்பித்தார் உதயநிதி

Posted: 20 Apr 2012 04:45 AM PDT


நான் அரசியலுக்கு வருவதும் வராததும் காலத்தின் கையில் உள்ளது என்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற ஒரே படத்தில் நடிகராக புகழின் உச்சிக்குப் போய்விட்டார் உதயநிதி.

இவரும் படத்தின் இயக்குனர் ராஜேஷும் கோவையில் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் வெளியிடப்பட்டுள்ள திரையரங்குகளில் இன்று ரசிகர்களை சந்தித்து பேசினர்.

படம் குறித்து ரசிகர்களிடம் கருத்து கேட்ட அவர்கள், பின்னர் நிருபர்களைச் சந்தித்தனர்.

"சினிமாவில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசை. அது இப்போது நிறைவேறிவிட்டது. எனக்கு இது முதல் படம். இயக்குனருக்கு இது மூன்றாவது படம். இந்தப்படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்ப்பார்க்கவில்லை.

எங்கள் படத்தை பார்க்க குடும்பம் குடும்பமாக பார்க்க தியேட்டருக்கு வந்து செல்கின்றனர். ஒரு படம் வரி விலக்கு பெற வேண்டுமானால் அதற்கு மூன்று விஷயங்கள் மட்டும் தேவை. அந்தப்படம் ஆபாசமில்லாத படமாக இருக்க வேண்டும். பிறமொழி கலந்த படமாக இருக்க கூடாது, தமிழ் பெயரில் தலைப்பு இருக்க வேண்டும்.

அனைவரும் பார்க்கும் படம் என்ற சான்றிதழ் வேண்டும். இந்த அம்சங்கள் இருந்தால் அந்த படத்திற்கு வரிவிலக்கு அளிக்கலாம் என்ற சட்டம் உள்ளது. எனது படத்தில் இந்த அம்சங்கள் எல்லாம் இருந்தும் வரிவிலக்கு அளிக்க மறுக்கிறார்கள். இதற்காக உச்சநீதிமன்றம் வரை கூட சென்று நான் படத்திற்கு வரிவிலக்கு பெறுவேன்.

படத்திற்கு ஒரு துளி ஆபாசம் இல்லை என்று கூறி சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கியுள்ளது. சென்னைக்கு அடுத்த படியாக கோவை மக்களிடம் இந்த படத்திற்கான வரவேற்பு அதிகமாக கிடைத்துள்ளது.

படம் தமிழ்நாடு மட்டுமின்றி, வடமாநிலங்களில் 25-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எனக்கு காமெடி ரொம்பவும் பிடிக்கும். அதனால்தான் என்னுடைய முதல் படத்தை காமெடி படமாக தேர்வு செய்தேன்.

நான் முதலில் நடிப்பதாக இருந்த படம் யுத்தம் செய். ஆனால் அது சீரியஸ் கேரக்டர் படம் என்பதால் இந்தப்படத்தை தேர்வு செய்தேன். என்னுடைய படத்தை தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, மனைவி எல்லோரும் பார்த்தார்கள்.

தாத்தா கதை வசனத்தில்...

என் தாத்தா (கருணாநிதி) நான் நன்றாக நடித்திருப்பதாக பாராட்டினார். அவரது கதை, வசனத்தில் நடிக்க அனைவரும் ஆசைப்படுவார்கள். நானும் தாத்தா கதை, வசனத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். என் மனைவி படத்தை பார்த்துவிட்டு சில சீன்களை குறிப்பிட்டு பாராட்டினார். அத எனக்கு சந்தோசமாக இருந்தது.

என் கதைகளை தேர்வு செய்ய 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளேன். அவர்கள் கதையை கேட்டு எனக்கு பொருத்தமாக இருந்தால் தேர்வு செய்வார்கள். அதில் நான் நடிப்பேன். மற்றபடி யாருடைய குறுக்கீடும் அதில் இருக்காது. கேரளாவில் ஒரு கல் ஒரு கண்ணாடி இன்று ரிலீசாகியுள்ளது," என்றார்.

அரசியல் எப்போது...

அவரிடம் நீங்கள் உங்கள் தாத்தா, அப்பா வழியில் அரசியலில் குதிப்பீர்களா? என்று கேட்டபோது, "5 வருடங்களுக்கு முன் நீங்கள் சினிமாவில் நடிப்பீர்களா என்று கேட்டீர்கள். இன்று நடித்துள்ளேன். அது போல் 5 வருடங்கள் கழித்து அரசியலில் குதிப்பேனா என்று தெரியாது. அதை காலம் தான் முடிவு செய்யும்," என்றார்.



ஸ்டாலினை வரவேற்க வேண்டும் என்பது திமுகவில் சட்டமா என்ன?: அழகிரி

Posted: 20 Apr 2012 04:37 AM PDT


மதுரையில் மு.க.ஸ்டாலின் நடத்திய திமுக இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு குறித்தும், அவர் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் குறித்தும் எனக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.

முன்னதாக மதுரையில் திமுக இளைஞரணி நிர்வாகிகளைத் தேர்வு செய்ய அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்திய நேர்காணலையும், ஸ்டாலின் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தையும் மதுரை மாவட்டத்தின் அனைத்து திமுக நிர்வாகிகளும் புறக்கணித்தனர்.

பொதுக் கூட்டத்துக்கு திமுக சார்பில் போலீசாரிடம் அனுமதி வாங்கிய திமுக பிரமுகரே கூட்டத்துக்கு வரவில்லை. மேலும் கூட்ட ஏற்பாடுகளை செய்யக் கூட ஆள் இல்லாமல் தடுமாறிவிட்டனர் இளைஞரணியினர். வெளி மாவட்டங்களில் இருந்து திமுகவினரை வரவழைத்துத் தான் அந்த வேலையை செய்து முடித்தனர்.

அழகிரியின் உத்தரவின் பேரிலேயே திமுகவினர் ஸ்டாலினை புறக்கணித்தனர் என்பது சின்னப் புள்ளைக்குக் கூடத் தெரியும் என்பதால், இந்த விவகாரத்தை திமுகவால் மூடி மறைக்க முடியவில்லை.

கூட்டத்தை புறக்கணித்தது குறித்து விளக்கம் கேட்டு அழகிரி ஆதரவாளர்களுக்கு திமுக அமைப்புச் செயலர் டிகேஎஸ் இளங்கோவன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந் நிலையில், அரசு முறை பயணமாக சீனா சென்று விட்டு மதுரை திரும்பிய அமைச்சர் அழகிரி நிருபர்களிடம் பேசுகையில், திமுக பொருளாளர் ஸ்டாலின் நேர்காணல் மற்றும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்தது குறித்து எனக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்படவில்லை.

அப்படி வருபவர்களை வரவேற்க வேண்டும் என்று திமுகவில் சட்டம் ஏதும் இல்லை. மதுரையில் ‌நேற்று நடைபெற்ற ரகசிய கூட்டம் பற்றிய விபரமும் எனக்குத் தெரியாது. இப்போதுதான் சீனாவில் இருந்து வந்துள்ளேன். கட்சிப் பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணி: அடுத்த மாதம் நடக்கிறது

Posted: 20 Apr 2012 04:34 AM PDT

கூடங்குளம் அணுமின்நிலையத்தை தொடங்க தமிழக அரசு அனுமதியளித்தை தொடர்ந்து அங்கு முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது முதலாவது அணுஉலையில் எரிபொருள் நிரப்ப ஆயத்த கட்ட பணிகள் நடந்து வருகிறது. 

இதற்காக ஹாட்ரன் எனப்படும் வெந்நீர் மூலம் அணுஉலை செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வுகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் முடிவுகள் இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

விரைவில் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் எரிபொருள் நிரப்புவதற்கான தடையில்லா சான்று வழங்கும். இதைத் தொடர்ந்து ரியாக்டர் பாதுகாப்பு பரிசோதிக்கப்பட்டு இந்திய அணுமின் ஒழுங்குமுறை ஆணையம் மற்றொரு கிளியரனஸ் ஒப்புதல் வழங்கும். 

இந்த ஒப்புதல்கள் இன்னும் 4 வாரங்களுக்குள் கிடைத்துவிடும். அதனை தொடர்ந்து அடுத்த மாதம் 20-ந் தேதிக்குள் முதலாவது அணு உலையில் யுரேனியம்" எரிபொருள் நிரப்பப்படும். 

எரிபொருள் நிரப்பி முதலில் பரிசோதனை நடத்தப்படும். இந்த பரிசோதனையையும் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் நேரில் கண்டறிந்து ஒப்புதல் வழங்கவேண்டும். எனவே ஜுன் மாத இறுதியில் முதலாவது யூனிட்டில் மின் உற்பத்தி தொடங்கப்படும். அதன் பிறகு அடுத்த 2 மாதத்தில் 2-வது அணுஉலையில் இருந்தும் மின்உற்பத்தி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்திய- ரஷ்ய விஞ்ஞானிகள் நேற்று நடந்த ஆலோசனையில் மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.





உண்மையைச் சொன்னேன், அது தப்பா?... விஜயதாரணி பொறுமல்

Posted: 20 Apr 2012 04:32 AM PDT


தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கிய அறுசுவை உணவை பாராட்டிய காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணியை சிபிஎம் உறுப்பினர் பாலபாரதி விமர்சித்தார். இதைக் கேட்ட விஜய தாரணி, உண்மையைச் சொன்னேன் இது தப்பா என்று பொறுமித் தள்ளி விட்டார்.

சட்டசபையில் விவசாயத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேசிய விஜய தாரணி, எனது விளவங்கோடு தொகுதியில் நடைபெற்ற உழவர் தின விழாவில் விவசாயிகளுடன் அமர்ந்து நானும் உணவருந்தினேன். விருந்து பிரமாதமாக இருந்தது என்று பாராட்டிப் பேசினார்.

இதைக் கேட்டதும் எழுந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி கூறுகையில், விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு உரங்களின் விலையை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால், இங்கே பேசிய காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி, விவசாயிகளுடன் உணவருந்திவிட்டு பேஷ் பேஷ் என்கிறார். இது நியாயமா என்று கேட்டார்.

அதற்குப் பதிலளித்த விஜய தாரணி, நடந்த உண்மையைச் சொன்னேன். அது தவறா என்றார். இப்படியாக விவாதம் நடந்தது.




எண்ணெய் நிறுவனங்கள் மிரட்டலுக்கு பணிந்தது மத்திய அரசு

Posted: 20 Apr 2012 02:00 AM PDT


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போவதால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளன.
 
ஆனால் பெட்ரோலியம் பொருட்களின் விலையை உயர்த்துவதற்கு மத்திய அரசு தயங்கி வருகிறது. பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தினால் அது மக்களை கடுமையாக பாதிப்பதோடு பணவீக்கத்தையும் அதிகரிக்க செய்துவிடும் என அஞ்சப்படுகிறது.  
 
கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படாததால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பை சந்தித்துள்ளது. இனியும் இழப்பை தாங்க இயலாது என்பதால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 8 உயர்த்தப்போவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.
 
இந்த விலை உயர்வு நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டுமானால் மத்திய-மாநில அரசுகள் வரிகளை குறைத்துக் கொள்ளட்டும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் கூறின. இதனால் பெட்ரோல்-டீசல் விலை உயர்வில் என்ன முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது.  
 
இந்த நிலையில் பெட்ரோல்-டீசல் மீது விதிக்கப்படும் வரிகளை குறைக்கலாமா? என்று மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கோவா மாநில அரசு பெட்ரோல் மீதான விற்பனை வரியை குறைத்தது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 11 குறைந்தது.
 
இதேபோன்று வரி குறைப்பில் ஈடுபடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ. 15 சுங்க வரி வசூலிக்கிறது. மாநில அரசுகள் ரூ. 4 முதல் ரூ. 9 வரை விற்பனை வரி வசூலிக்கின்றன.
 
டீசலை பொறுத்தவரை மத்திய அரசு ரூ. 5 சுங்க வரி வசூலிக்கிறது. மொத்தத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய- மாநில அரசுகள் ரூ. 27 வரை வரிகளாக வசூல் செய்கின்றன.  
 
முதல் கட்டமாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல்-டீசல் மீதான வரி குறைப்பை செய்யும்படி மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. அதே சமயத்தில் மத்திய அரசும் பெட்ரோலியம் பொருட்களின் மீது சுங்க வரி விதிப்பை குறைக்கும்.
 
இந்த நடவடிக்கைக்கு பிறகு காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வரி குறைப்பு செய்ய மத்திய அரசு கேட்டுக்கொள்ளும். இதன் தொடர்ச்சியாக மற்ற மாநிலங்களிலும் பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 
இந்த நடவடிக்கைகளால் பெட்ரோல்-டீசல் விலைகள் கணிசமாக குறையும். எண்ணெய் நிறுவனங்களின் இழப்பும் கட்டுப்பாட்டுக்குள் வரும். ஒருவேளை விலையை உயர்த்த நேரிட்டாலும் அது மக்களையோ எண்ணெய் நிறுவனங்களையோ பாதிக்காது. மாறாக மத்திய-மாநில அரசுகளுக்கு வரி வருவாயில் மட்டுமே இழப்பு ஏற்படும்.



ஈழத் தமிழர்களுக்கு ஒரு அதிகாரமும் தர மாட்டோம்- இலங்கை திமிர் பேச்சு

Posted: 20 Apr 2012 01:53 AM PDT


தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு நிலம் மற்றும் காவல் அதிகாரங்களை வழங்கும் பேச்சுக்கே இடமில்லை, அதற்கு நாங்கள் தயாரும் இல்லை என்று இந்திய எம்.பிக்கள் குழுவிடம் முகத்தில் அடித்தாற் போல கூறியுள்ளது இலங்கை அரசு.

இதுதொடர்பாக இந்திய எம்.பிக்களிடம் இலங்கை அரசின் பிரதிநிதிகள் கூறுகையில்,

இந்திய மாநிலங்களில் அமலில் உள்ள போலீஸ் அதிகாரங்களை போன்று இலங்கையின் மாகாணங்களுக்கு வழங்க முடியாது. இவ்வாறு போலீஸ் அதிகாரங்களை வழங்குவதால் மத்திய அரசாங்கம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும். பயங்கரவாத ஒழிப்பு நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு வெளியிட்டுள்ளதே இதற்கு சிறந்த உதாரணமாகும் என இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளதாம்.

இலங்கைத் தமிழர்களுக்குக் குறைந்தபட்ச அதிகாரத்தைக் கூட தயாராக இல்லை சிங்கள ஆட்சி என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது. இதைக் கூட தர முடியாத, தரத் தயாராக இல்லாத இலங்கை அரசு, தமிழர்களை எப்படி சமத்துவத்துடன் வாழ விடும் என்பது புரியாத புதிராகவே உள்ளது.



விஜயகாந்த் சட்டசபைக்கு வராதது ஏன்?: அமைச்சர்கள்-தே.மு.தி.க. வாக்குவாதம்

Posted: 20 Apr 2012 01:49 AM PDT


சட்டசபையில் இன்று பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை மீது தே.மு.தி.க. உறுப்பினர் முத்துகுமார் பேச தொடங்கினார். அஞ்சா நெஞ்சம் உடைய கேப்டனுக்கு நன்றி தெரிவித்து உரையை தொடங்குகிறேன் என்றார். 

அப்போது அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் எழுந்து, இவரது கட்சி தலைவர் அஞ்சாத நெஞ்சம் உடையவர் என்றால் ஏன் சட்டசபைக்கு வரவில்லை என்றார். உடனே தே.மு.தி.க.வினர் ஒட்டு மொத்தமாக எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். 

சபாநாயகர்:- அமைச்சர் உண்மையைத்தான் சொல்கிறார். 

சந்திரகுமார் (தே.மு.தி.க.):-
எங்கள் கட்சி தலைவருக்கு விதிக்கப்பட்ட 10 நாள் தண்டனையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தீர்ப்பு இன்னும் வர வில்லை. சட்டசபையில் வழங்கப்பட்ட தண்டனையை ஏற்கவில்லை என்பதால்தான் நீதிமன்றம் சென்றிருக்கிறார். தீர்ப்பு வரும் வரை அது சாதகமோ, பாதகமோ அதுபற்றி கவலையில்லை. தீர்ப்புக்கு பிறகுதான் சபைக்கு வருகிறார். எந்தவித அச்சமும் பயமும் எங்களுக்கு கிடையாது. 

ஓ. பன்னீர்செல்வம்:- சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் அப்போது நடந்து கொண்ட விதம் எப்படி என்றால், எங்கள் மதுரைப் பக்கம் நாக்கை துருத்தி கையை காட்டினால் கொன்று புடுவேன் என்று அர்த்தம். அதற்கு 10 நாள் தண்டனை ஏற்கனவே முடிந்து விட்டது. தீர்ப்பு வருவது வரட்டும். ஆனால் அவர் சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாமே. 

சரத்குமார் (ச.ம.க.):- நீதிமன்றத்தில் 5 ஆண்டுகள் வரை வழக்கு நிலுவையில் இருந்து விட்டால் அவர் வராமலேயே இருந்து விடுவாரா? மக்களுக்கு சேவை செய்ய தொகுதி மக்களுக்கு வாக்குறுதி கொடுத்துதான் வந்திருக்கிறோம். இவர் வரவில்லை என்றால் அந்த மக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? 

பண்ருட்டி ராமச்சந்திரன் (தே.மு.தி.க.):- இந்த விவகாரம் எங்கோ திசை திரும்புகிறது. எதிர்க்கட்சி தலைவர் சபைக்கு வரவில்லை என்றால் பயந்து கொண்டு அல்ல. முன்னாள் முதல்-அமைச்சரும், இப்போதைய முதல்-அமைச்சரும் கூட விருப்பப்பட்ட போது சபைக்கு வந்து சென்று இருக்கிறார். எனவே வரவேண்டிய நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் வருவார். 

அமைச்சர் கே.பி. முனுசாமி:- அவர் இப்போதுதான் வரவேண்டும். முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்கள் பற்றி அறிவிக்கிறார். அந்த திட்டங்களை எடுத்துச் சொல்ல, விவாதிக்க அவர் இப்போதுதானே வர வேண்டும். 

பண்ருட்டி ராமச்சந்திரன்:- நான் கூட, ஒருநாள், 2 நாள் சட்டசபைக்கு வரவில்லை. அதற்காக பயந்து கொண்டு வரவில்லை. என்று அர்த்தமா? 

இவ்வாறு விவாதம் நடந்தது.






ராஜபக்சேவை திடீரென சந்தித்த சுஷ்மா சுவராஜ்- 'பிரேக்பாஸ்ட்' சாப்பிட்டபடி பேச்சு!

Posted: 20 Apr 2012 01:45 AM PDT


இந்திய எம்.பி்க்கள் குழு இன்று மாலை ராஜபக்சேவை சந்திக்கவுள்ள நிலையில் இன்று காலை குழுத் தலைவர் சுஷ்மா சுவராஜ் மட்டும் தனியாக போய்ச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அவருக்கு காலை விருந்தளித்துள்ளார் ராஜபக்சே. இருவரும் சாப்பிட்டுக் கொண்டே பேச்சுவார்த்தை நடத்தியதாக ராஜபக்சேவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சேவுடன் சாப்பிட விரும்பவில்லை. அப்படிச் சாப்பிட்டால் தமிழகத்தில் விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என்பதால், நாளை ராஜபக்சேவுடன் நடப்பதாக இருந்த காலை விருந்துடன் கூடிய சந்திப்பை ரத்து செய்யுமாறு தமிழக எம்.பிக்கள் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டதால் நாளைய சந்திப்பு ரத்து செய்யப்பட்டு இன்று மாலை இந்தியக் குழுவினரை ராஜபக்சே சந்திக்க திட்டம் மாற்றியமைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை திடீரென சுஷ்மா சுவராஜ் மட்டும் போய் ராஜபக்சேவை சந்தித்துப் பேசியுள்ளார். அவருக்கு ராஜபக்சே காலை உணவு அளித்து கெளரவித்துள்ளார். இருவரும் சாப்பிட்டபடியே பேசியுள்ளனர்.

இதுகுறித்து இலங்கை அதிபரின் செய்தித் தொடர்பாளர் பந்துல்ல ஜெயசேகரா கூறுகையில், இந்தியத் தூதர் அசோக் காந்தாவும் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர்கள் தவிர இலங்கை அமைச்சர்கள் பெரீஸ், லலித வீரதுங்கா ஆகியோரும் உடன் இருந்தனர் என்றார்.

சக இந்தியக் குழுவினரைத் தவிர்த்து விட்டு சுஷ்மா மட்டும் போய் ராஜபக்சவை பார்த்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் சுஷ்மா மட்டும் தனியாக போயிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.





Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™