Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





விழியே பேசு...

விழியே பேசு...


பில்லா 2 வெளியீட்டு உரிமையை வாங்கினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்!

Posted: 22 Apr 2012 09:44 PM PDT


அஜீத் நடித்த பில்லா 2 படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெரும் விலைக்கு வாங்கினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

படத்தின் தயாரிப்பாளர் சுனீர் கேடர்பால் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். கேரளா தவிர்த்து மற்ற அனைத்துப் பகுதி வெளியீட்டு உரிமைகளும் விற்கப்பட்டு விட்டன என்றார் சுனீர்.

நமக்குக் கிடைத்த தகவல்படி, தமிழக உரிமைக்கு மட்டும் ரூ 24.11 கோடியும், புதுவைக்கு ரூ 2 கோடியும் சேர்த்து, ரூ 26.11 கோடிக்கு ஆஸ்கர் ரவிச்சந்திரன் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

உலக உரிமை, தொலைக்காட்சி உரிமை மற்றும் பிற மாநில உரிமைகள் அனைத்தும் சேர்த்து பெரும் தொகையை இந்தப் படம் தயாரிப்பாளருக்கு பெற்றுத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வரும் மே மாதத்திலிருந்து படத்துக்கான விளம்பர வேலைகளைத் தொடங்குவதாக படத்தைத் தயாரிக்கும் இன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.




எரிமலையாக வெடிக்கும் அழகிரி, ஸ்டாலின் மோதல்-தத்தளிக்கும் கருணாநிதி!

Posted: 22 Apr 2012 09:02 PM PDT


மகன்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் இடையிலான பதவிப் போர் பெரும் உச்சத்தை எட்டியுள்ளது. இவர்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு இரு தலைக் கொள்ளி எறும்பு போல தத்தளித்து வருகிறார் கருணாநிதி.

எத்தனையோ பெரிய பெரிய எதிரிகளை, சவால்களை, சங்கடங்களை, சஞ்சலங்களை, சலசலப்புகளைப் பார்த்தவர் கருணாநிதி. ஆனால் இன்று அவரது பிள்ளைகள் ரூபத்தில் எழுந்து நிற்கும் சவாலை சந்திக்க முடியாமல், முடிவு காண முடியாமல் பெரும் குழப்பத்திலும், கலக்கத்திலும் இருக்கிறார் கருணாநிதி.

தற்போது இந்தப் பிரச்சினை மேலும் ஒரு புதிய மெருகோடு வெடிக்க ஆரம்பித்துள்ளது. மதுரைக்கு வந்த ஸ்டாலினுக்கு உரிய மரியாதையை அழகிரி ஆதரவாளர்கள் கொடுக்கவில்லை என்பதே புதிய சர்ச்சை. இதுதொடர்பாக அழகிரி ஆதரவாளர்களுக்கு தலைமைக் கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு அழகிரி கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் நேற்று திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் பெரும் பிரச்சினை வெடித்ததாக கூறப்படுகிறது. அழகிரி விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலினை சமாதானப்படுத்த கருணாநிதி முயன்றபோதுதான் பிரச்சினை பெரிதாகி விட்டதாக செய்திகள் கூறுகின்றன.

இந்த நிலையில் இன்றுகாலை திடீரென மு.க.அழகிரி சென்னைக்குக் கிளம்பி வந்தார். அவர் கருணாநிதியை சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக பேசவுள்ளார்.

2 நாட்கள் சென்னையிலேயே முகாமிட்டிருக்கப் போகும் அவர் இந்த விவகாரத்தில் ஒரு முடிவைத் தெரிந்து கொண்ட பின்னர் டெல்லி புறப்படப் போவதாக கூறப்படுகிறது.

மேலும், தனது மத்திய அமைச்சர் பதவி, தென் மண்டல திமுக அமைப்பாளர் பதவி ஆகியவற்றை ராஜினாமா செய்யப் போவதாக அவர் ஏற்கனவே கருணாநிதியிடம் கூறி விட்டதாகவும் தெரிகிறது. இதனால் அழகிரியை எப்படி கருணாநிதி சமாதானப்படுத்தி அமைதிப்படுத்துவார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதி வீட்டுக்குள் நடந்து வரும் இந்த சண்டையால், திமுகவினர் அனைவரும் பெரும் அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் உள்ளனர். எதிரிகளுடன்தான் நாம் இத்தனை நாளும் மோதி வந்தோம். ஆனால் இன்று நமக்குள்ளேயே மோதிக் கொண்டிருக்கிறோமே என்று அவர்கள் புலம்புகின்றனர்.

கட்சி நலனை மட்டும் கருத்தில் கொண்டு, கருணாநிதி மிகவும் துணிச்சலோடு, அதிரடியாக சில நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்சினைக்கு முடிவு வரும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.



அழகிரி ஆதரவாளர்கள் நீக்கம் தொடங்கியது... அவைத் தலைவருக்கு முதல் 'ஆப்பு'!

Posted: 22 Apr 2012 08:52 PM PDT


மதுரையில் மு.க.ஸ்டாலின் வருகையின்போது பங்கேற்காத மு.க.அழகிரி ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை தொடங்கியுள்ளது. முதல் நபராக, மதுரை மாநகர் மாவட்ட திமுக அவைத் தலைவர் இசக்கிமுத்துவை நீக்கியுள்ளனர்.

மனப்பால் குடிக்கும் மதோன்மத்தர்கள்

இதுதொடர்பாக தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுரை மாநகர் மாவட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகளை தேர்வு செய்ய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை தலைமைக்கழகம் அனுப்பி வைத்தபோதும், அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஏற்கனவே தலைமைக் கழகத்தின் அறிவிப்பின்படி நடைபெறவிருந்த மதுரை பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டபோதும், மதுரை மாநகர கழக நிர்வாகிகள் சிலர் அவற்றிலே கலந்துகொள்ளவில்லை என்பதை பத்திரிகைகளில் வெளியிட்டிருந்தனர்.

அதைப்பற்றி விவரம் கேட்டு அந்த நிர்வாகிகளுக்கு தலைமைக் கழகத்தின் சார்பில், தலைமைக் கழக அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது. இதற்குள்ளாக தி.மு.கழகத்தை ஏதேதோ காரணங்கள் சொல்லி அழித்துவிடலாம் என்று மனப்பால் குடிக்கின்ற சில மதோன்மத்தர்களும், அவர்களுக்குத் துணையாக வெளியிடப்படுகின்ற ஏடுகளும் கற்பனைச் செய்திகளை வெளியிடுவதன் மூலம் தி.மு.கழகத்தில் பெரும் குழப்பம் இருப்பதை போல பாவனை செய்திருப்பதைக் கண்டு இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.

தலைமைக் கழகத்தின் சார்பில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இளைஞர் அணி பொறுப்பாளர்கள் தேர்வுக்காக மதுரை சென்றபோதும், அங்கு தலைமைக்கழகம் அறிவித்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதும், மதுரை மாநகரக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளாததற்கு என்ன காரணம் என்று விளக்கம் கேட்டு அதற்கான கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அந்தக் கடிதங்களை சிலர் மதிக்கவில்லை என்பதுடன் ஓரிருவர் "எங்களை விவரம் கேட்கவோ விளக்கம் கேட்கவோ தலைமைக்கழகத்தின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவனுக்கு சட்டப்படி உரிமை இல்லை'' என்பதைப் போன்று தெரிவித்து, அதையே தங்களுடைய விளக்கமாக அனுப்பியிருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக மதுரை மாநகர் மாவட்ட அவைத் தலைவர் க.இசக்கிமுத்து எழுதியுள்ள கடிதத்தில் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறார். அவர் தலைமைக் கழகத்தை மதிக்காமல் இவ்வாறு எழுதியிருப்பது கழகத்தின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை மீறிய செயலாகும்.

எனவே மதுரை மாநகர் மாவட்ட அவைத் தலைவர் க.இசக்கிமுத்து கழகத்தின் சாதாரண உறுப்பினர் உள்பட எல்லா பொறுப்புகளில் இருந்தும் விலக்கி வைக்கப்படுவதோடு, அடுத்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் போதும், அவர் உறுப்பினராகச் சேர்ந்திட தகுதியற்றவர் என்று தலைமைக்கழகம் அறிவிக்கின்றது. அவரை தவிர்த்து மற்றவர்களிடம் கேட்கப்பட்டுள்ள விளக்கங்களுக்கு அவர்கள் அனுப்புகின்ற விளக்கத்தைப் பொறுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.



இன்று நடைபெறுவதாக இருந்த பெட்ரோல் பங்க்குகள் ஸ்டிரைக் வாபஸ்

Posted: 22 Apr 2012 08:46 PM PDT


இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் விற்பனை செய்யப்படுகிற ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.49-ம், டீசலுக்கு 91 பைசாவும் டீலர் கமிஷனாக கிடைத்து வருகிறது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கான கமிஷனை உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய பெட்ரோலியத்துறையிடம் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
இது தொடர்பாக அபூர்வ சந்திரா கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி பெட்ரோலியத்துறைக்கு பல்வேறு பரிந்துரைகளை செய்துள்ளன. குறிப்பாக பெட்ரோல் பங்க்குகளில் வாகனங்களுக்கு காற்று நிரப்புவதற்கு கட்டணம் வசூலிக்கவும், அந்த வகையில் இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.2, காருக்கு ரூ.5, பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ரூ.20 வசூலிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. டீலர் கமிஷனைப் பொறுத்தமட்டில் பெட்ரோலுக்கு லிட்டருக்கு 27 பைசாவும், டீசலுக்கு 14 பைசாவும் உயர்த்த கமிட்டி சிபாரிசு செய்துள்ளது.
 
அபூர்வ சந்திரா கமிட்டியின் பரிந்துரைகளை பெட்ரோலியத்துறை அமல்படுத்தக்கோரி, நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து, பெட்ரோல் பங்க்குகளை மூடப்போவதாக அகில இந்திய பெட்ரோலிய வர்த்தகர்கள் சம்மேளனம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த மாத இறுதியிலிருந்து, கோரிக்கைகளுக்கு முடிவு காணும் வரை காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடப்போவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் பெட்ரோலியத்துறை மந்திரி ஜெய்பால் ரெட்டியுடன் 19-ந் தேதியும், 20-ந் தேதியும் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் பல்வேறு கோரிக்கைகள், பிரச்சினைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. டீலர் கமிஷன் பற்றி அபூர்வ சந்திரா கமிட்டி அளித்துள்ள பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்க ஜெய்பால் ரெட்டி ஒப்புக்கொண்டுள்ளார்.
 
பெட்ரோல் பங்க்குகளில் இலவசமாக அளித்து வருகிற காற்று, கழிவறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் போன்றவற்றுக்கும் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்ற அபூர்வ சந்திரா கமிட்டி பரிந்துரையை பரிசீலிக்கவும் மந்திரி ஒப்புக்கொண்டுள்ளார். எனவே 22-ந் தேதி நள்ளிரவு முதல் 23-ந் தேதி (இன்று) நள்ளிரவு வரை நடக்கவிருந்த பெட்ரோல் பங்க்குகளின் ஸ்டிரைக் ஒத்திப்போடப்படுகிறது.




பிரான்ஸ் அதிபர் தேர்தல்: அதிபர் சர்கோசிக்கு பின்னடைவு

Posted: 22 Apr 2012 08:40 PM PDT


பிரான்சில் அதிபராக இருக்கும் நிகோலஸ் சர்கோசி பதவிக் காலம் முடிவடைகிறது. எனவே புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. அதில்,தற்போதைய அதிபர் நிகோலஸ் சர்கோசி, சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரான்கோயிஸ் ஹோலண்ட் உள்பட பலர் போட்டியிடுகின்றனர். அதிபர் தேர்தலுக்குரிய வேட்பாளராக, தற்போது 10 பேர் களத்தில் உள்ளனர்.
 
இந்த தேர்தலில், 50 சதவீத ஓட்டுக்கள் யாருக்கும் கிடைக்காவிடில், மறு தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி, இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெறும். பொருளாதார மந்த நிலை, வேலைவாய்ப்பின்மை, வரி விதிப்பு உள்ளிட்ட விஷயங்களை முன்னிறுத்தி, இத்தேர்தலில் எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்தனர்.
 
தனக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால், பிரான்ஸ் மேலும் வலுவுள்ளதாக மாறும் என, அதிபர் சர்கோசி உறுதியளித்துள்ளார்.நேற்று ஓட்டுக்கள் எண்ணப்பட்ட நிலையில், சர்கோசியை எதிர்த்து போட்டியிட்ட பிராங்காய்ஸ் ஹோலண்ட் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
 
பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகளிலும் நேற்று தேர்தல் நடத்தப்பட்டன. புதுச்சேரியிலும், நான்கு இடங்களில் பிரான்ஸ் அதிபர் தேர்தல் நடந்தது.



எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 ஆண்டுகளில் 11,566 நோயாளிகள் மரணம்

Posted: 22 Apr 2012 07:58 PM PDT


எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளில் சிகிச்சை பலனின்றி 11,566 நோயாளிகள் இறந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி, மும்பையைச் சேர்ந்த அஜய் மராத்தா என்பவர் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து உயிரிழப்புகள் தொடர்பான தகவல்களை பெற்றார்.
 
அதன்படி, மருத்துவமனையின் முதன்மை பிரிவு, இருதயநோய் பிரிவு, நரம்பியல்,அறிவியல் மையம், அவசர சிகிச்சைப் பிரிவு, ஆர்.பி.மையம் ஆகியவற்றில், சிகிச்சை பலனின்றி கடந்த 3 ஆண்டுகளில் 11,566 பேர் இறந்துள்ளனர். இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டபோதும், எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்னமும் உறுப்புதானம் சிறப்பாக இல்லை.
 
இறந்தவர்களின் உடலில் இருந்து சுமார் 8 உறுப்புகளை வரை தானமாக பெற முடியும். ஆனால், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இதில் மிக அஜாக்கிரதையாக உள்ளனர். கடந்த 2008-09ம் ஆண்டில் இறந்த 4,100 பேரில் 797 பேர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வந்தவர்கள். இதில், 2,380 பேர் மருத்துவமனையின் முதன்மை பிரிவிலும், 923 பேர் இருதய நோய் சிகிச்சைப் பிரிவிலும் இறந்தவர்கள்.
 
அதற்கு அடுத்த ஆண்டில், 4,159 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதில் 431 பேர் அவசர சிகிச்சைப் பிரிவிலும், 2,700 பேர் முதன்மை பிரிவிலும், 978 பேர் இருதய நோய் சிகிச்சைப் பிரிவிலும் இறந்தவர்கள்.
 
2010-11ம் ஆண்டில் 738 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் இறந்துள்ளனர். 2,586 பேர் முதன்மை பிரிவிலும், 853 பேர் இருதய நோய் பிரிவிலும் இறந்துள்ளனர். இதுதவிர கடந்த 3 ஆண்டுகளில் சிகிச்சைக்கு வரும்போதே இறந்தவர்களின் எண்ணிக்கை 960.





















வடக்குப் பகுதியிலுள்ள ராணுவத்தை இந்தியாவுக்கா அனுப்ப முடியும்: ராஜபக்சே கிண்டல்

Posted: 22 Apr 2012 07:50 PM PDT


இலங்கையில் தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணிகளைக் குறித்து ஆராயச் சென்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது இலங்கையின் வட பகுதியில் இருந்து ராணுவம் வெளியேறுவதையே அங்குள்ள மக்கள் விரும்புவதாக இந்தியக் குழுவினர் அவரிடம் தெரிவித்தனர்.
 
இதற்கு பதிலளித்த ராஜபக்சே, நாடு முழுவதும் தான் நாங்கள் படைகளை நிறுத்தியுள்ளோம். வடக்கில் நிலைகொண்டுள்ள துருப்புகளை வெளியேற்றுவது சாத்தியமாகாது. அவர்களை அங்கிருந்து வெளியேற்றி இந்தியாவுக்கா அனுப்ப முடியும்? என்று இந்தியக் குழுவினரைப் பார்த்து ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
 
மேலும் குறிப்பிட்ட இடங்களில்தான் படையினர் தளம் அமைத்துள்ளனர். அவர்கள் ஒன்றும் வெளிநாட்டு மண்ணில் நிறுத்தப்படவில்லை. இலங்கையில் தான் நிலைகொண்டுள்ளனர். போர் முடிந்த பின்னர் வடக்கு, கிழக்கில் முன்னர் ராணுவத்தினர் வசம் இருந்த பெருமளவு பகுதிகளை விடுவித்துள்ளோம் என்றும் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.



'அதுலயும்' அமெரிக்காதாங்க 'டாப்'!

Posted: 22 Apr 2012 10:43 AM PDT


Sex Sells.... உலகம் பூராவும் இந்த வார்த்தையை அதிகம் கேட்டிருக்கலாம். அந்த அளவுக்கு உலகில் உடனுக்குடன் ஹிட் அடிப்பது செக்ஸ் சமாச்சாரங்கள் மட்டுமே. பத்திரிகைகளில் விற்பனை டல் அடித்தால் உடனே செக்ஸ் குறித்த கருத்துக் கணிப்பை வெளியிட்டு தூக்கி விடுவார்கள் மார்க்கெட்டை. அதேபோலத்தான் சினிமாக்களிலும், மீடியாக்களிலும் கூட செக்ஸ்தான் முக்கியக் கருவியாக இருக்கிறது.

தாம்பத்யம் பற்றி ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கலாச்சாரம் நடைமுறையில் உள்ளது. ஆங்கிலத்தில் செக்ஸ், பிற மொழிகளில் செஸ்ஸோ, செக்சாஸ், செஸ்க் என பலவித பெயர்களில் அழைக்கப்படுகிறது செக்ஸ் உறவு.

செக்ஸ் விஷயங்கள் ஒவ்வொரு நாட்டிலும் எப்படி உள்ளன என்பதை படித்துப் பாருங்களேன்...

செக்ஸ் வரி

செக்ஸ்சுக்கு வரி என்றதும் ஆச்சரியமாக இருக்கிறதா? இந்தியாவில் அல்ல ஜெர்மனியில்தான் இந்த கூத்து. ஜெர்மன் நகரங்களில் விபச்சாரம் என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. அது மட்டுமல்ல அத்தொழிலில் ஈடுபடுவோர் அரசுக்கு வரி கட்ட வேண்டும். விபச்சார விடுதிகளில் ஈபி மீட்டர் போல மீட்டர் வைத்து கட்டணம் வசூலிக்கின்றனராம்.

200 க்கும் மேற்பட்ட செக்ஸ் தொழிலாளிகள் அங்கு ஆண்டுக்கு 2 லட்சம் ஈரோ சம்பாதிக்கின்றனர். அவர்கள் வருமானத்திற்கு ஏற்ப வரியும் கட்டுகின்றனர். சந்தோஷத்திற்காக வரும் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு அங்கு கையோடு ரசீதையும் கொடுத்து அனுப்பி வைக்கிறார்கள்.

ஆண்மையின் அடையாளம் ரஷ்யா

ரஷ்யர்கள் தங்கள் செக்ஸ் வாழ்க்கையில் பெரிய அளவில் மகிழ்ச்சிகரமாக இல்லை என்று சமீபத்தில்தான் ஒரு கருத்துக் கணிப்பு கூறியது. ஆனால் நிஜத்தில் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்பதை ஒரு பெண்ணின் தாய்மைச் சாதனை கட்டியம் கூறுகிறது.

ரஷ்ய பெண்மணி ஒருவர் 69 முறை தாய்மை அடைந்து பிள்ளை பெற்றுள்ளார். உலகிலேயே அதிக முறை தாய்மையடைந்து குழந்தை பெற்ற சாதனைக்குரியவர் இவர்தான். இதில் 16 முறை இரட்டை குழந்தைகள் பெற்றுள்ளார். 7 முறை தலா மூன்று குழந்தைகளைப் பெற்றுள்ளார். 4 முறை தலா 4 குழந்தைகளைப் பெற்று பிரமிக்க வைத்துள்ளார். இவருக்கு ஓய்வே இல்லையோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது!.

செக்ஸ் பொம்மைக்கு தடை

உலகிலேயே கவர்ச்சிப் பெண்ணாக பெரும்பாலானவர்களால் ஏற்கப்பட்டனர் ஜெனீபர் லோபஸ். அதேபோல ஹாலி பெர்ரி, பிரிட்னி பியர்ஸ் ஆகியோரும் செக்ஸியானவர்களாக கருத்துக் கணிப்புகள் மூலம் அறியப்பட்டவர்கள். இவர்களால் அமெரிக்காவுக்கும் பெருமைதான். ஆனால் அமெரிக்காவில் செக்ஸ் விஷயத்தில் ரொ்ம்பவே இப்போது கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கிறார்கள். குறிப்பாக பாலுணர்வைத் தூண்டும் வகையிலான செக்ஸ் பொம்மைகள் விற்பனைக்கு அலபாமாவில் தடை உள்ளதாம். மற்ற பகுதிகளில் இப்படியெல்லாம் இல்லை.

அமெரிக்கர்கள்தான் டாப்

சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பின் படி அமெரிக்கர்கள் ஆண்டுக்கு 132 முறை செக்ஸ் உறவு கொள்கின்றனராம். செக்ஸ் உறவு கொள்வதில் இவர்கள்தான் உலகிலேயே நம்பர் ஒன்னாக உள்ளனர். இரண்டாவது இடத்தை ரஷ்யர்கள் பிடித்துள்ளனர். அவர்கள் ஆண்டுக்கு 122 முறையும், முத்தத்திற்குப் பெயர் போன பிரெஞ்ச் நாட்டினர் 121 முறையும் உறவில் ஈடுபடுகின்றனராம்.

நான்காவது இடத்தில் கிரீக் நாட்டினர் உள்ளனர். உலகிலேயே குறைந்த அளவில் உறவில் ஈடுபடுவது ஜப்பான், மலேசியா, சீனர்கள்தானம். அவர்களுக்கு அதில் ஈடுபாடு அதிகம் இல்லை போல. இந்தியா இந்த விஷத்தில் ரொம்ப தூரத்தில்தான் உள்ளது.

சீனாவின் சக்தி

செக்ஸ் மூலம் உடலில் எண்ணற்ற சக்தி கிடைக்கிறது என்பது சீனாவில் உள்ள தாவோயிச நம்பிக்கையின் முக்கிய அம்சமாக உள்ளது. செக்ஸ் உறவின்போது பெண்களிடமிருந்து வெளிப்படும் சக்தி தங்களை வந்தடைவதாக அவர்கள் நம்புகின்றனர். இதனாலேயே தாவோயிஸ்டுகள் பலர் பல பெண்களுடன் உறவு கொள்வதை ஊக்கமளித்து வந்தனராம். இதன் மூலம் தங்களுக்கு பெருமளவில் சக்தி கிடைப்பதாக அவர்கள் நம்புகின்றனர். பெண்களே சக்தி என்ற நம்ம ஊர் தத்துவத்தை இவர்கள் இப்படி உல்டாவாக நம்பியுள்ளனர் என்பது சுவாரஸ்யமானதுதான்.

உடம்பே தட்டு

ஜப்பானியர்கள் தாம்பத்ய உறவிற்கு முன்பு வித்தியாசமான முறையில் உணவுகளை உட்கொள்கின்றனர். அதாவது நிர்வாண நிலையில் பெண்களை படுக்க வைத்து தட்டு போல பாவித்து அவர்களின் உடம்பு மீது உணவு வகைகளை பரிமாறி சாப்பிடுகின்றனர். இதன் மூலம் சாப்பிடுபவர்களுக்கு பெரும் கிளர்ச்சி ஏற்படுமாம். இப்படிப்பட்ட செயல்கள் இன்றும் கூட ஜப்பானில் நடைமுறையில் உள்ளதாம்.

ஆண்மை தினம்

ஜப்பானில் கடந்த மார்ச் 15 ம் தேதி ஆண்மை தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த விழாவின் முக்கிய அம்சமே ஆண்குறியைப் போற்றிக் கொண்டாடுவதாம். இந்த விழாவின் ஒரு பகுதியாக 250 ஆண்களும், 250 பெண்களும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் உறவு கொண்டனர். அதுதொடர்பான டிவிடியையும் வெளியிட்டனர்.

இப்படி செக்ஸ் விஷயங்கள் உலகம் பூராவும் வித்தியாசமாகவும், வினோதமாகவும் கொண்டாடப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.




யாரையும் பார்க்க விடாதீங்க... கண்டிஷன் போடும் தமன்னா!

Posted: 22 Apr 2012 10:33 AM PDT


மழைக் காட்சிகளில் கவர்ச்சிகரமாக நனைந்து நடிக்க தமன்னா ரெடியாம். ஆனால் அதற்கு ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போடுகிறார். அதாவது, மழைக் காட்சிகளை படமாக்கும்போது அங்கு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று சொல்லி விடுகிறார். இதற்கு ஒத்துக் கொண்டால், அவருக்கு ஓ.கேதானாம்.

நடிகை தமன்னாவுக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் அவர் தெலுங்கில் கை நிறைய படங்கள் வைத்துள்ளார். படங்கள் தவிர விளம்பர படங்களிலும் நடிக்கும் வாய்ப்புகளும் அதிகரி்த்துள்ளது. விளம்பரப் படங்களில் அவர் எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுக்க முன்னணி நிறுவனங்கள் தயாராக உள்ளன. அதனால் அவர் ரொம்பவே குஷியாக உள்ளார்.

தமன்னாவுக்கும் மழைக்கும் அவ்வளவு ராசி. அவர் நடிக்கும் படங்களில் ஒரு பாட்டுக்காவது அவருக்கு வெள்ளை கலர் டிரஸ் கொடுத்து மழையில் ஆட்டம் போட வைக்கின்றனர். தமிழில் அவர் கார்த்தியுடன் ஆடிய அடடா மழைடா, அடைமழைடா பாட்டை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது.

மழைக் காட்சிகளைப் படமாக்கும்போது ஈரம் சொட்ட சொட்ட ஆடும்போது அங்கு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று அவர் இயக்குனர்களுக்கு உத்தரவு போடுகிறார். அவர் உத்தரவு போடுவது சரி பார்வையாளர்களை இயக்குனர்கள் எப்படி கட்டுப்படுத்தப் போகிறார்களோ?



கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா-சசியும் போவாரா?

Posted: 22 Apr 2012 09:57 AM PDT


முதல்வர் ஜெயலலிதா விரைவில் கொடநாடு செல்லவுள்ளதாக தெரிகிறது. அவருடன் மீண்டும் தோழியாக இணைந்துள்ள சசிகலாவும் போவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ஆண்டுதோறும் சில வாரங்கள் கொடநாடு எஸ்டேட்டுக்குப் போய் ஓய்வெடுத்து விட்டு வருவது ஜெயலலிதாவின் வழக்கம். அவர் போகும்போதெல்லாம் கூடவே தோழி சசிகலாவும் செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஜெயலலிதா கொடநாடு செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால் திடீரென சசிகலா குடும்பத்தினருக்கும், அவருக்கும் பிரச்சினையானதால், தனது பயணத்தை நிறுத்தி வைத்தார். மேலும் சசிகலா குடும்பத்தினரையும் கட்சியிலிருந்து நீக்கினார்.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், 3 மாதங்கள் கழித்து சசிகலாவை மட்டும் மீண்டும் தனது தோழியாக்கிக் கொண்டார். இதையடுத்து வெற்றிப் புன்னகையுடன் சசிகலா, போயஸ் தோட்டத்திற்குத் திரும்பினார்.

இந்த நிலையில் தற்போது கோடைகாலம் வாட்டத்தொடங்கியிருப்பதால், ஜெயலலிதா கொடநாடு செல்லத் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. ஒரு மாதம் வரை அவர் கொடநாட்டில் தங்கியிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து அவர் அங்கிருந்தபடியே தனது அலுவல்களையும், கட்சிப் பணிகளையும் ஆற்றுவதற்கு வசதியாக, அதற்குத் தேவையான ஏற்பாடுகள் கொடநாடு எஸ்ட்டேடில் தொடங்கி நடந்து வருகிறதாம். தகவல் தொடர்பு வசதிகள், முதல்வருடன் வரும் அதிகாரிகள், அலுவலர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளிட்டவை செய்யப்பட்டு வருகிறதாம். வீடியோ கான்பரன்சிங் வசதியும் செய்யப்படுகிறதாம்.

முதல்வர் கொடநாடு எப்போது செல்வார் என்று தெரியவில்லை. ஆனால் அடுத்த மாதத்தில் அவர் போகலாம் என்று கூறப்படுகிறது. இம்முறையும் அவருடன் சசிகலா செல்வாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.



மோத்வானியை 'டிஸ்மிஸ்' செய்த ஹன்சிகா!

Posted: 22 Apr 2012 09:49 AM PDT


நடிகை ஹன்சிகா நியூமராலஜி படி தனது பெயருக்கு பின்னால் உள்ள மோத்வானியை நீக்கியுள்ளார்.

தனுஷின் மாப்பிள்ளை மூலம் தமிழில் அறிமுகமான ஹன்சிகா மோத்வானிக்கு ஆரம்ப காலம் அகோரமாக இருந்தாலும், தற்போது அதிர்ஷ்ட காலம் என்றே சொல்லலாம். அவர் விஜயுடன் நடித்த வேலாயுதம், உதயநிதி ஸ்டாலினுடன் நடித்த ஓ.கே.ஓ.கே. ஆகிய படங்கள் நன்றாக ஓடியதால் அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறதாம்.

சிம்புவுடன் வேட்டை மன்னன், சூர்யாவுடன் சிங்கம் 2 ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் ஒரு புதிய மாற்றத்தை செய்துள்ளார் ஹன்சிகா.

நடிகர், நடிகைகள் நியூமராலஜி படி தனது பெயரில் சில எழுத்துக்களை சேர்ப்பதும், நீக்குவதுமாக உள்ளார்கள். அதற்கு ஹன்சிகாவும் விதிவிலக்கல்ல. நியூமரலாஜிபடி தனது பெயருக்கு பின்னால் இருக்கும் மோத்வானியை நீக்கியுள்ளார். இனி நான் வெறும் ஹன்சிகா தான் என்று தெரிவி்த்துள்ளார்.

தெலுங்கில் ஓ மை பிரண்ட் என்று வெளியான படம் தமிழில் ஸ்ரீதர் என்ற பெயரில் டப் செய்யப்படுகிறது. அதில் சித்தார்த், ஸ்ருதி ஹாசன், நவ்தீப்புடன் ஹன்சிகாவும் நடித்துள்ளார். இந்த பட ஷூட்டிங்கின் உங்களுக்கும் ஸ்ருதிக்கும் லடாய் ஏற்பட்டதாமே என்று கேட்டதற்கு, நாங்கள் ஏன் மோதிக்க வேண்டும். அதெல்லாம் சும்மா யாரோ சொல்றது. அதை எல்லாம் நம்பாதீர்கள் என்றார்.



மீண்டும் போயஸ்கார்டனுக்கு சசிகலா சென்றதன் எதிரொலி

Posted: 22 Apr 2012 07:11 AM PDT


திருச்சி புறநகர் மாவட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகளை மாற்றி, முதல்வர் ஜெயலலிதா நேற்று உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, திருச்சி புறநகர் மாவட்ட, அ.தி.மு.க., துணைச் செயலராக இருந்த ராவணனுக்கு பதில், கும்பக்குடி கோவிந்தராஜ் புறநகர் மாவட்ட புதிய துணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.


மாவட்ட துணைச் செயலர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ராவணன், கடந்த ஒன்றரை ஆண்டாக காலியாக இருந்த திருவெறும்பூர் ஒன்றிய அ.தி.மு.க., செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், திருவெறும்பூர் ஜெ., பேரவை ஒன்றிய செயலர் பதவிக்கு அறிவழகன் என்பவரையும், திருவெறும்பூர் தொகுதி செயலர் பதவிக்கு அய்யம்பட்டி திரிசங்குவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு பேரும், திருச்சி மண்டல அ.தி.மு.க., முன்னாள் பொறுப்பாளரும், இளவரசியின் சம்மந்தியும், கடந்த டிசம்பரில், அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட இன்ஜினியர் கலிய பெருமாளின் தீவிர ஆதரவாளர்கள்.

போயஸ் கார்டனுக்கு சசிகலாவும், இளவரசியும் மீண்டும் பிரவேசித்துள்ள நிலையில், இளவரசியின் சம்மந்தி கலியபெருமாளின் ஆதரவாளர்களுக்கு பதவி கிடைத்துள்ளது.



எம்.ஜி.ஆர். அறையில் உதயநிதிஸ்டாலின்

Posted: 22 Apr 2012 07:02 AM PDT


உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்து வெளிவந்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார் உதயநிதி.  கூடவே படத்தின் இயக்குநர் ராஜேஷ் மற்றும் படத்தில் நடித்திருக்கும் நடிகர் சந்தானம் ஆகியோரும் செல்கின்றனர். இதற்காக கடந்த இரண்டு தினங்களாக தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் உதயநிதி.  


மதுரையில் பாண்டியன் ஓட்டலில் தங்கியிருந்து இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.

மதுரையில் உள்ள பாண்டியன் ஓட்டலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக ஒரு அறை ஒதுக்கப் பட்டிருந்தது.    எம்.ஜி.ஆர்.  எப்போது மதுரை வந்தாலும் இந்த அறையில் தான் தங்குவார்.

எம்.ஜி.ஆர்.  மதுரையில் இல்லாத நாட்களிலும் இந்த அறையை வேறு யாருக்கும் தரமாட்டார்கள்.   இந்த விஷேச அறையை கேட்டு வாங்கி தங்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.



2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு..கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன்!

Posted: 22 Apr 2012 06:58 AM PDT


2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திமுக எம்.பியும், தற்போது ஜாமீனில் விடுதலையாகி வெளியே இருப்பவருமான கனி்மொழியை விசாரணைக்கு வருமாறு கூறி அமலாக்கப் பிரிவு இயக்குநரகம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஏப்ரல் 26ம் தேதியன்று விசாரணைக்கு வருமாறு கூறி கனிமொழிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நேரிலோ அல்லது அவரது பிரதிநிதியோ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்பது சம்மன் உத்தரவின் சாராம்சமாகும்.

திமுக குடும்பத்தினரால் நடத்தப்படும் கலைஞர் டிவிக்கு கடனாக கொடுக்கப்பட்டதாக கூறப்படும் ரூ. 200 கோடி பணம் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் என்பது சிபிஐயின் குற்றச்சாட்டு. இதுதொடர்பாகவே கனிமொழியும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் தற்போது ஜாமீனில் விடுதலையாகி விட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது மீண்டும் கனிமொழியை அமலாக்கப் பிரிவு விசாரிக்கவுள்ளது. சரத்குமாரும் இதுதொடர்பாக விசாரிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.



இந்திய எம்.பிகள் சொல்வதுபோல் ராணுவத்தை திரும்பப் பெற முடியாது: இலங்கை

Posted: 22 Apr 2012 04:03 AM PDT


இலங்கையின் வடக்குப் பகுதியான தமிழர்கள் வாழும் இடங்களில் இருந்து ராணுவம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்ற இந்திய எம்.பிக்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இலங்கை சென்று திரும்பிய இந்திய குழுவில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் எம்.பிக்கள், யாழ்ப்பாணத்தில் சடங்குக்கும் சாவுக்கும் கூட ராணுவத்திடம் அனுமதி கேட்க வேண்டிய நிலை இருக்கிறது. அதை மாற்ற வேண்டும் என்று ராஜபக்சேவிடம் சொன்னோம். அவர் உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு விட்டார் என்று வாய் ஜம்பம் பேசிக் கொண்டு வருகின்றனர்.

ஆனால் அவர்கள் தமிழ்நாட்டில் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போது, வடக்கில் இருந்து ராணுவத்தை விலக்கிக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்ற சிங்களக் கொக்கரிப்பு வந்து விழுந்திருக்கிறது.

இவர்கள் போய் சந்தித்த அதே ராஜபக்சே அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பந்துல ஜெயசேகர இது தொடர்பாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்துக்கு கருத்து தெரிவிக்கையில், "இந்திய எம்.பிக்களிடம் நாடு முழுவதும் தான் ராணுவத்தின் பிரசன்னம் இருக்கிறது. தமிழர்கள் வாழும் வடக்குப் பகுதியில் மட்டும் குவிக்கப்படவில்லை என்றுதான் ராஜபக்சே விளக்கம் அளித்தார்" என்று கூறியுள்ளார்.

மேலும் இந்திய எம்.பிக்கள் கோருவதுபோல் வடக்குப் பகுதியில் இருந்து மட்டும் ராணுவத்தை விலக்கிக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இப்படி இலங்கை மூக்கறுக்கும் நிலையில் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் காங்கிரஸ் எம்.பிக்கள் என்ன பதில் சொல்கிறார்களோ?



சூர்யா நடிப்பில் வெளியான ரத்த சரித்திரத்தின் நிஜ ஹீரோவை சுட்டுக்கொன்றவன் கைது

Posted: 22 Apr 2012 03:41 AM PDT


நடிகர் சூர்யா நடித்த படம் 'ரத்த சரித்திரம்'. ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்ட அரசியல் 'தாதா'க்களின் பழி வாங்கும் கொலையை மையமாக கொண்டு ராம்கோபால் வர்மா இந்த படத்தை தயாரித்தார்.
 
தமிழ், தெலுங்கிலும் 'ரத்த சரித்திரம்' படம் எடுக்கப்பட்டு ஒரே நாளில் ரிலீஸ் ஆனது.  முன்னாள் அமைச்சரின் கொலை வெறியால் குடும்பத்தையே இழந்த சூரி என்கிற சூரிய நாராயணரெட்டி என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து இருந்தார். இவரது மனைவியாக பிரியாமணியும், அரசியல்வாதியாக விவேக் ஓபராயும் நடித்து இருந்தனர். ஆந்திராவில் இந்த படம் பரபரப்பாக ஓடியது. இந்த படம் ரிலீசான சில வாரங்களில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த உண்மையான சூரிய நாராயணரெட்டி அவரது நண்பரும், ரவுடியுமான பானுகிரண் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
 
அவரது குடும்பத்துக்கு நடிகர் சூர்யாவும் இரங்கல் தெரிவித்து இருந்தார்.   சூரியின் லட்சக்கணக்கான சொத்தை பானுகிரண் சுருட்டியதாகவும் இதற்காக அவனை பழிவாங்க நினைத்த சூரியை பானுகிரண் நைசாக காரில் அழைத்துச்சென்று கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் கூறப்பட்டது.
 
பின்னர் ரூ.4 லட்சம் பணத்துடன் அவன் தலைமறைவானான். சூரி கொலைக்கு உடந்தையாக இருந்த மதுசூதனன்ரெட்டி, மன்மோகன் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் பானு கிரண் மட்டும் தலைமறைவாக இருந்தான். அரசியல்வாதிகளின் அரவணைப்பில் அவன் இருப்பதாக ஆந்திராவில் பேசப்பட்டது.   இந்த நிலையில் 14 மாதங்களுக்கு பிறகு பானுகிரண் போலீசில் சிக்கி உள்ளான். ஐதராபாத் நகரில் அவன் பிடிபட்டதாகவும் சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி ரமண மூர்த்தி தெரிவித்தார். ரூ.4 லட்சம் பணத்துடன் அவன் பல்வேறு மாநிலங்களில் தலைமறைவு வாழ்க்கை நடத்தியதாகவும் பணம் காலியானதால் பூராபாத் வந்தபோது போலீசில் சிக்கி கொண்டதாகவும் அவர் கூறினார். கைதான பானுகிரண் ஐதராபாத் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு மே 4-ந்தேதி வரை காவலில் வைக்கப்பட்டான். 




அஜீத்தைப் பற்றி எப்படிச் சொல்றதுன்னே தெரியலே... உருகும் புருனா!

Posted: 22 Apr 2012 03:23 AM PDT


அஜீத் குமாரை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும் என்று பில்லா 2 நாயகிகளில் ஒருவரான புருனா அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பி்ல்லா 2 படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகும் புருனா அப்துல்லா. இவர் ஒரு அரபிய-பிரேசில் கூட்டுத் தயாரிப்பு. ஹைட்டும், கச்சிதமான வெயிட்டும் புருனாவை படு கம்பீரமாக காட்டுகிறது.

அஜீத்துடன் நடித்த அனுபவம் பற்றி கேட்டதற்கு அவர் கூறுகையில்,

அஜீத் குமாருடன் நடித்தது ஒரு சிறப்பான அனுபவம். அதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. ஒரு பெரிய நடிகர் என்ற பந்தாவே இல்லாமல் இயல்பாகப் பழகுவார். அமைதியானவர். அவரோட வேலை செய்வது ரொம்ப ஈசி. அவரிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அவர் எனக்கு தமிழில் பேச கற்றுக் கொடுத்தார். அவரை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும் என்றார்.

கோலிவுட்டில் இருநாட்டு கூட்டுத் தயாரிப்பில் பிறந்த நடிகைகளுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. புருனா அப்துல்லா, நதாலியா கௌர், தற்போது நர்கிஸ் பக்ரி என்று பட்டியல் நீள்கிறது.



கோஷ்டி மோதலில் தி.மு.க.வை காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: கி.வீரமணி அறிக்கை

Posted: 22 Apr 2012 03:16 AM PDT


திராவிடக் கழகத் தலைவர் கி. விரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-  
 
திராவிடர் இயக்க நூறாவது ஆண்டு நடக்கும் இந்த முக்கியமான காலகட்டத்தில், தி.மு.க.வின் பொறுப்பாளர்களாக உள்ள பலரின் நடவடிக்கைகளைப் பற்றி ஏடுகளில், ஊடகங்களில் வரும் பல்வேறு செய்திகள் நம்மைப் போன்ற தாய்க்கழகத்திற்கும், உண்மையான திராவிடர் இயக்கப் பற்றாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் அளவற்ற, வார்த்தைகளில் வடிக்க முடியாத துன்பத்தையும், மனவேதனையும் தருகிறது.
 
ஏற்கனவே தி.மு.க.வை அழிப்பதே தமது பிறவிப்பயன் என்ற ஊடகங்களுக்கு அவல் பாயாசம் சாப்பிட்டதுபோல சில நிகழ்வுகள் கிடைப்பதோடு விரிசல் என்று ஏகமாக விளம்பரப்படுத்தி, கட்டடத்தையே, கட்டுமானத்தையே காணாமல் போகச்செய்ய இத்தருணத்தை விட்டால் வேறு நல்ல தருணம் வாய்க்காது என்று கருதி, பரபரப்புப் பசியைத் தீர்த்துக் கொள்ளுகின்றன.  
 
அய்யா அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் கூறிய அறிவுரை கல்லில் செதுக்கியதாகும். தி.மு.க.வை எதிரிகளால் அழிக்க முடியாது. இவர்களே ஒருவருக்கொருவர் அழித்துக் கொண்டால்தான் முடியும். தி.மு.க. கெட்டியான பூட்டு, அதற்குக் கள்ளச்சாவி போட்டுவிட யாரையும் அனுமதிக்கக்கூடாது.  
 
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதில் முன்னிரண்டும்கூட முக்கியமில்லை. கட்டுப்பாடுதான் முக்கியம். மிகவும் முக்கியம். எனவே இயக்கத்தை கட்சியைக் காப்பாற்ற கட்டுப்பாட்டையே தலைமை காப்பாற்றிட தயவு தாட்சண்யம் காட்டாமல் கட்டுப்பாட்டிற்காக தேவையான நடவடிக்கை எடுக்கத் தயங்கக் கூடாது என்றார்கள்.
 
இனமான பேராசிரியர் அன்பழகன், அப்போது தலைமையை எதிர்த்துக் கூறிய ஒரு கருத்துக்காக அவர் மீதே நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, அவரை கண்டித்து அறிக்கைவிடத் தயங்கவில்லை தந்தை பெரியார்.  
 
அப்போது அவ்வறிக்கையில் குறிப்பிட்டார்கள். எனக்கு அன்பழகன் மீது கோபமோ, வெறுப்போ இல்லை. கழகக் கட்டுப்பாட்டிற்காகத்தான் இப்படி எழுதிட வேண்டியுள்ளது. தலைமை இடத்தில் அன்பழகன் இருந்து கருணாநிதி இப்படி கூறியிருந்தால் அவர்மீதும் கட்டுப்பாட்டை மீறிக் கருத்துக் கூறியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் எழுதியிருப்பேன் என்று விளக்கமாக அவ்வறிக்கையில் குறிப்பிட்டார்கள்.
 
தி.மு.க. என்ற இயக்கம் காப்பாற்றப்பட வேண்டிய அவசியத்தை அன்று 1969-ல் தந்தை பெரியார் விளக்கியதை இப்போது அவர் தம் தொண்டன் என்ற முறையில் அதேபோல் தி.மு.க. என்ற மகத்தான திராவிடர் இயக்கத்தை அதற்கு சோதனை ஏற்படும் கட்டத்தில் அதனை நினைவூட்டும் கடமையும், பொறுப்பும் உண்டு நமக்கு என்பதால் இதனை எழுத நேரிட்டு விட்டது.  
 
ஆளும் கட்சியின் மீது பலவகைகளிலும் அதிருப்திகள் தலை எடுக்கும் இக்காலகட்டத்தில் அவற்றை மனமாற்றம் செய்யும் வகையில் தி.மு.க.வில் உள்கட்சி பிரச்சினை என்பதை ஊடகங்கள் பெரிதுபடுத்துவதை அரசியலில் அனைத்தும் அறிந்த கலைஞருக்கு தெரியாததல்ல.
 
மேலும் அந்த அறிக்கையில் தந்தை பெரியார் குறிப்பிடுகிறார். கலைஞர் தலைமையை நான் ஏற்கமாட்டேன் என்று கூட்டத்திற்கு தலைமை வகித்த க.அன்பழகன் என்று சொல்லியிருப்பதாக பத்திரிகைகளில் படித்தேன். இது மிகவும் கண்டிக்கத்தக்கதோடு, இதற்கு ஒழுங்கு நடவடிக்கையை தி.மு.க. கட்சி எடுத்துக் கொள்ளவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
 
சுவரை வைத்துக் கொண்டுதான் சித்திரம் எழுத வேண்டும் என்பதுபோல கட்சியின் மரியாதை குறையுமானால் தலைக்கு தலை தன் இஷ்டப்படி பேச நடக்க இடம் கொடுத்து வந்தால் பொதுத் தொண்டுக்கு கண்டிப்பாய் அதில் இடம் இருக்காது. கட்சித் தலைவரின் முதற்கடமை கட்சியின் கவுரவத்தை காப்பதுதான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
என் கட்சி சாதாரண கட்சியானாலும் நான் உப தலைவரை நீக்கினேன். காரியதரிசியை நீக்கினேன். அதனால் எனக்கோ, கட்சிக்கோ ஒரு கெடுதியும் ஏற்பட்டு விடவில்லை.  
 
பொதுமக்களுக்கு ஒன்று மட்டும் சொல்கிறேன். தி.மு.கழகத்திற்கு உழுது பயிரிட்டவர் அறிஞர் அண்ணாதான். இதற்கு நீர்பாய்ச்சி நல்ல விளைச்சலை உண்டாக்கியவர் கலைஞர்தான். கட்சிக்கு கலைஞர் இல்லாவிட்டால் பதவிக்கு ஏராளமான மெம்பர்கள் கிடைக்கலாமே ஒழிய, கட்சியை கட்டிக் காக்க கட்சி அங்கத்தினர்களில் பத்து பேர் ஆதரவை உடைய அங்கத்தினர் யாருமில்லை என்பதுதான் என் கருத்து.
 
இதை நான் தி.மு.க. அங்கத்தினர்களுக்கே சொல்கிறேன். எனவே இன்று தி.மு.க. விற்கு வேண்டிய கட்டுப்பாடு, ஒழுங்குமுறை நடவடிக்கைதான். தி.மு.க. வினால் மக்களுக்கு ஆக வேண்டிய காரியம் ஏராளம் இருப்பதால் இதை நானாக எனது சொந்த முறையில் கடமையை முன்னிட்டு எழுதுகிறேன்.   அங்கத்தினர்கள் மன்னிப்பார்களாக.
 
14.3.1969 அன்றைய விடுதலையில் கையொப்பமிட்டு தந்தை பெரியார் அறிக்கையில் காணப்படும் ஒரு சிறு பகுதி இது. மறுநாளும் இதுகுறித்த நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார் பெரியார். தி.மு.க. என்பது வெறும் கண்ணீரால் மட்டுமே வளர்ந்த இயக்கம் அல்ல. செந்நீர் விட்டும், பல்லாயிரம் தொண்டர்கள், தோழர்கள் தியாகத்தால் வளர்ந்தோங்கிய மகத்தான ஆலமரம் ஆகும். விழுதுகள் அதனை காப்பாற்றிட மட்டுமே பயன்பட வேண்டும். அதன் வேரினை அசைக்க என்றும் வீணர்களுக்கு விழுதுகளே துணை போகக்கூடாது.
 
தெரிந்தோ, தெரியாமலோ நோயாளியை காப்பாற்றிட அறுவை சிகிச்சை அவசியம். சில நேரங்களில் இயக்க கட்டுப்பாட்டை காப்பாற்றிட, கடும் சிகிச்சை, அது அறுவை சிகிச்சையானாலும் செய்துதானே தீரவேண்டும். நோயாளியை நோயிலிருந்து காப்பாற்றிட.  
 
இயக்கமே எப்போதும் பிரதானமானது என்பதை அறியாதவர் அல்ல அதன் தலைவர் கலைஞர். இயக்கம் இருந்தால்தான் எவருக்கும் மதிப்பும், மரியாதையும் இந்த எண்ணம் எல்லோருக்கும் புரியும். எனவே கட்டுப் பாட்டை காப்பாற்ற இயக்க பாசம்- கொள்கை பாசத்திற்கு மட்டுமே முக்கியத்தவம் கொடுத்து மற்ற பாசங்கள் குறுக்கிட இடந்தராமல் காப்பாற்றிட முன்வரவேண்டும் என உரிமையுடன் உண்மை உணர்வுடன் தந்தை பெரியாரின் சிந்தனை வழிபட்ட நிலையில் கேட்டுக் கொள்கிறோம்.
 
தி.மு.க. வரலாற்றில் அண்ணாவுக்கு பிறகு அவரது உழைப்பு பல சோதனைகளை வென்று அவ்வியக்கத்தை காப்பாற்றி இருக்கிறது. இப்போதும் விரைந்த விவேகமான முடியும் நடவடிக்கையும்தான் இன எதிரிகளை வாயடைக்க செய்யும் நிலை ஏற்படும்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



கங்குலியின் புனே வெற்றியை கொண்டாடிய யுவராஜ் சிங்

Posted: 22 Apr 2012 03:10 AM PDT


டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான புனே வாரியர்ஸ் அணியின் வெற்றியை அந்த அணியின் முன்னாள் கேப்டன் யுவராஜ் சிங் டிவிட்டரில் கொண்டாடி மகிழ்ந்தார்.

புற்றுநோய் சிகிச்சையை முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ள யுவராஜ் தற்போது முழு ஓய்வில் இருந்து வருகிறார். கடந்த ஐ.பி.எல். போட்டியில் புனே அணியின் கேப்டனாக விளையாடியவர் யுவராஜ்சிங்.

தற்போது ஓய்வில் இருப்பதால் நடப்பு ஐ.பி.எல்.5-வது தொடரில் அவர் பங்கேற்கவில்லை. இருப்பினும் புனே அணியின் ஆட்டங்களை தொடர்ந்து அவர் கவனித்து வருகிறார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடனான போட்டியை பார்த்துக் கொண்டே ஒரு பக்கம் டிவிட்டரில் லைவ் கமெண்ட்ரியும் அடித்துக் கொண்டே இருந்தார் யுவராஜ்.

அதுவும் குறிப்பாக கங்குலியின் பந்துவீச்சை புகழ்ந்துகொண்டே அவரது தலைமுடி பற்றியும் கிண்டலடித்துக் கொண்டு கலாய்த்திருக்கிறார் யுவி.

கங்குலி ஒவ்வொரு முறையும் பந்துவீசும் அதை கலாய்த்துக் கொண்டே , "தாதா! கடந்த 3 மாதமாக என்னுடைய ஹேர் ஜெல்லை யூஸ் பண்ணாம இருக்கேன்.. வேணும்னா தரட்டுமா..." என்று டிவிட்டரில் அடித்து விட்டிருக்கிறார்.

யுவி ரசிகர்களுக்கு இன்னுமொரு செய்தி... உங்க ஆள் இப்ப பயிற்சிக்குத் தயாராகிட்டாராம்... இன்னும் கொஞ்ச நாளில் பீல்டுக்குத் திரும்பி விடுவாராம்...




மக்கள் படிப்பறிவு பெறுவதை லட்சியமாக கொண்டிருந்தார்: கலெக்டரின் மாமனார் உருக்கம்

Posted: 22 Apr 2012 02:46 AM PDT


சத்தீஷ்கார் மாநிலம் சிக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் நேற்று கடத்தப்பட்டார். அவரது மாமனார் வேணுகோபால் வீடு மேற்கு முகப்பேரில் உள்ளது. 
 
கலெக்டர் கடத்தப்பட்ட தகவல் அறிந்ததும் பெற்றோர்- மாமனார் வீடுகளில் சோகம் நிலவியது. எல்லோரும் பதட்டத்துடன் உறைந்து போய் உள்ளனர். எந்த ஆபத்தும் இல்லாமல் கலெக்டர் பத்திரமாக மீட்கப்படவேண்டும் என்று உறவினர்கள் கண்ணீருடன் காத்து இருக்கிறார்கள்.
 
கலெக்டரின் மாமியார் ஆனந்தி மற்றும் குடும்பத்தினர் நேற்று இரவு முழுவதும் தூங்காமல் தவித்தனர். அடிக்கடி சத்தீஷ்கரில் உள்ள புஷ்பபாக்கியத்துடன் பேசி வருகிறார்கள். அவரை தைரியமாக இருக்கும்படி ஆறுதல் கூறி வருகிறார்கள்.
 
மாமனார் வேணுகோபால் கூறியதாவது:-
 
நான் தலைமை என்ஜினீயராக அரசு துறைகளில் பணியாற்றி கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஓய்வு பெற்றேன். எனது மனைவி ஆனந்தியின் சொந்த ஊர் நெல்லை சீதபற்ப்பநல்லூர். எனக்கு ஆனந்தராஜன் என்ற மகனும், புஷ்பபாக்கியம் என்ற மகளும் உள்ளனர்.
 
ஆனந்தராஜன் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். எனது மகள் புஷ்பபாக்கியம் பி.டெக் மற்றும் எம்.பி.ஏ. பட்டம் பெற்று தங்கப்பதக்கம் வாங்கியவள். தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றினாள்.
 
கடந்த 6 மாதத்துக்கு முன்பு மகள் திருமணம் நடந்தது. அதன்பிறகு அவள் வேலைக்கு செல்லவில்லை. கணவருடன் சத்தீஷ்கர் மாநிலம் சென்று விட்டாள். கர்ப்பிணியாக இருக்கும் அவளை நானும், எனது மனைவியும் அங்கு போய் பார்த்துவிட்டு நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பினோம்.
 
எனது மருமகன் பணியாற்றும் இடம் நமது ஊரைப்போல் உள்ளது. மிகமிக பின்தங்கிய பகுதி. அடர்ந்த காடுகளாகவே இருக்கும். பக்கத்தில் ரெயில் நிலையமோ, விமான நிலையமோ கிடையாது. கம்மம் என்ற இடத்தில் ரெயிலில் இறங்கி அங்கிருந்து 200 கி.மீ. தூரம் மலைப்பாங்கான இடம் நோக்கி 12 மணி நேரம் பஸ் பயணம் செய்ய வேண்டும்.
 
பெரும்பாலான மக்கள் படிப்பறிவு இல்லாத நிலையில் இருக்கிறார்கள். பொதுவாக அங்கு வெளியில் நடமாடும்போதே திக் திக் என்று இருக்கும். எனது மருமகன் மிகவும் துணிச்சலானவர். மிகவும் நேர்மையானவர். கலெக்டர் ஆனதும் மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வந்தார்.
 
அடிக்கடி பேசும்போது, சத்தீஷ்கர் மாநிலத்தில் பல பகுதிகளில் மக்கள் படிப்பறிவு இல்லாமல் வாழ்க்கை தரம் மோசமான நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும். என்னால் முடிந்தவரை அவர்களை முன்னேற்றுவேன் என்று சொல்லிக் கொண்டிருப்பார்.
 
அவர் கலெக்டராக பொறுப்பேற்றதும் ஐ.டி.ஐ. ஏற்படுத்தினார். நவோதயா பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தனது சுற்றுப்பயணத்தின்போது ஆதிவாசி மக்களிடமும், ஏழ்மையாக இருக்கும் மக்களிடமும் அவர்களுடைய வீடுகளுக்கு நேரில் சென்று குறைகளை கேட்பார். என்னென்ன தேவை என்பதையும் கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பார்.
 
அவருடைய பணியில் திருப்தியோடு செயலாற்றி வந்தார். நிச்சயமாக தொடர்ந்து அந்த பகுதி மக்களுக்கு இன்னும் பல நல்ல பணிகள் செய்வார். எனவே மாவோயிஸ்டுகள் அவரை பத்திரமாக விடுவிக்க வேண்டும். எனது மகளுக்கு அம்மாநில உயர் அதிகாரிகள், முதல்- மந்திரி ஆகியோர் பேசி அவ்வப்போது எடுக்கப்படும் நடவடிக்கை பற்றி தைரியமூட்டி வருகிறார்கள்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
வேணுகோபால் மனைவி ஆனந்தி இன்று காலை சாமி படத்தின் முன் நின்று விளக்கேற்றி வழிபட்டபடி நின்றிருந்தார். மருமகன் பத்திரமாக மீட்கப்பட வேண்டி அவர் மனம் உருக பிரார்த்தனை செய்து வருகிறார்.



பின்னாடியே வந்து தொல்லை கொடுக்கிறார்...நடிகர் மகள் மீது ஷாஹித் கபூர் புகார்

Posted: 22 Apr 2012 02:32 AM PDT


மறைந்த பாலிவுட் நடிகர் ராஜ்குமாரின் மகள் தான் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து வந்து தொல்லை கொடுப்பதாக இந்தி நடிகர் ஷாஹித் கபூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

மறைந்த பாலிவுட் நடிகர் ராஜ்குமாரின் மகள் வாஸ்தவிக்தா பண்டிட்(33). அவர் பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூருக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளார். அவர் கொடுத்த தொல்லைகளைப் பொறுக்க முடியாமல் ஷாஹித் மும்பையில் உள்ள வெர்சோவா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

கடந்த சில நாட்களாக மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகள் வாஸ்தவிக்தா பண்டிட் நான் தங்கியிருக்கும் இடத்தின் காம்பவுண்டுக்குள்ளே வந்துவிடுகிறார். நான் எங்கு சென்றாலும் அவர் தனது காரில் என்னை பின்தொடர்கிறார். சமயத்தில் எனது காரை வழிமறிக்கிறார். பிறகு எனது பாதுகாவலர்கள் சென்று அவரை அங்கிருந்து போகச் செய்ய வேண்டியுள்ளது. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

கடந்த 6 மாதங்களாக அந்த பெண் ஷாஹிதுக்கு இவ்வாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் பார்ப்பவர்களிடம் எல்லாம் தான் ஷாஹிதின் மனைவி என்றும் சொல்லி வந்துள்ளார். பொறுமையை இழந்த ஷாஹித் போலீசில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அவர் தனது வீட்டை பந்த்ரா பகுதிக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வாஸ்தவிக்தா கடந்த 2006ம் ஆண்டு வெளியான கரண் ராஸ்தானின் எட்டு சனி என்ற படத்தில் அறிமுகமானார். அந்த படமும் ஓடவில்லை, அவருக்கும் அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



புதுக்கோட்டை தேர்தலில் போட்டியா?: விஜயகாந்த் பேட்டி

Posted: 22 Apr 2012 02:25 AM PDT

தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களை சந்தித்து குறைகள் கேட்டு மனுக்கள் பெற்றுக்கொண்டார். பின்னர் விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது- 

நான் இதுவரை சூலூர், ஈரோடு தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற் கொண்டு மக்களிடம் நேரில் சந்தித்து குறைகளை கேட்டேன். இதில் குடிநீர், மின்சாரம், பட்டா தொடர்பான பிரச்சினைகள் அதிக அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. 

குடிநீர் பிரச்சினையை தீர்க்க எனது கட்சியின் எம்.எல்.ஏ.க்களிடம் கூறியுள்ளேன். அவர்கள் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். முதியோர் உதவித்தொகை ஆளுங் கட்சியின்ருக்கு மட்டுமே கொடுப்பதாக பல முதியோர்கள் என்னிடம் புகார் தெரிவித்தனர். சட்டசபைக்கு நான் வருவதில்லை என்று புகார் கூறுகிறார்கள். 

எதிர்கட்சியாக இருக்கும்போது ஜெயலலிதாவும், கருணாநிதியும் சட்ட மன்றத்துக்கு எத்தனை நாள் வந்தார்கள்? சட்ட மன்றத்துக்கு தினமும் வர வேண்டும் என்று சட்டம் ஏதும் உள்ளதா? 6 மாதத்திற்கு ஒரு முறை சட்டமன்றத்துக்கு வந்து கையெழுத்து போட்டால் போதும். 

நான் செல்ல வில்லை என்றாலும் எனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் செல்கிறார்கள். சரி சட்டமன்றத்துக்கு சென்றாலும் அங்கு மக்கள் பிரச்சினைகளை பேச அனுமதிப்பதில்லை. எனவே தான் மக்கள் மன்றத்திற்கு வந்து பேசுகிறேன். 

இலங்கைக்கு எம்.பி.க்கள் குழு அனுப்பியது ஒரு நாடகம். மக்கள் கேட்டதால் தமிழ் வருடப் பிறப்பை மீண்டும் சித்திரைக்கு மாற்றியதாக சொல்லும் ஜெயலலிதா மக்கள் கேட்டதால் தான் மின்கட்டணத்தை உயர்த்தினாரா? 2023 தொலைநோக்கு திட்டத்தால் எந்த பயனும் இல்லை. நதிகள் இணைப்பு தொடர்பான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

அ.தி.மு.க. அரசு தேவையில்லாதவற்றை எல்லாம் இலவசமாக வழங்குகிறது. நாட்டின் முது கெலும்பாக உள்ள விவசாயத்துக்கு எதுவும் செய்ய வில்லை. தே.மு. தி.க.வுடன் கூட்டணி வைத்து ஜெயலலிதா வெற்றி பெற்றதற்கு நான் மட்டும் அல்ல நாடே வருத்தப்படுகிறது. அந்த அளவுக்கு பால் விலை, மின் கட்டணம், பத்திர பதிவு கட்டணம், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்த ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டையில் தேர்தல் தேதி அறிவிக்கட்டும். அதன் பின்னர் போட்டியிடுவது பற்றி கூறுகிறேன். 

இவ்வாறு அவர் கூறினார்.     







Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™