Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





விழியே பேசு...

விழியே பேசு...


மதுரையில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் திருட்டு விசிடி விநியோகம்

Posted: 19 Apr 2012 10:20 PM PDT


மதுரை முழுவதும் நேற்று நள்ளிரவில் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் திருட்டு விசிடியை சிலர் விநியோகித்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் புகார் மனு கொடுக்க உள்ளனர். திருட்டு விசிடியை விநியோகித்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு உதயநிதி சார்பில் திமுக பிரமுகர் மனு கொடுக்க உள்ளார்.




ஈழம் குறித்துப் பேசும் கருணாநிதி பயங்கரவாதி- சொல்கிறார் கோத்தபயா

Posted: 19 Apr 2012 10:05 PM PDT


ஈழம் பற்றி யார் பேசுகிறார்களோ அவர்களை நாம் பயங்கரவாதிகளாகவே கருதுகிறோம். தழீழத்தை அமைக்கும் தனது கனவை, திமுக தலைவர் மு.கருணாநிதி இந்தியாவில் வைத்துக் கொள்ளட்டும், இலங்கையில் அது ஒருபோதும் சாத்தியமாகாது என ராஜபக்சேவி்ன் தம்பி கோத்தபயா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கையில் வாழும் தமிழர்களை விட மிகவும் அதிகமான தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்கின்றனர். அவரால் இலங்கையில் ஈழத்தை உருவாக்க முடியாது. இது ஒரு இறைமையுள்ள நாடு.

ஈழம் பற்றி யார் பேசுகிறார்களோ அவர்களை நாம் பயங்கரவாதிகளாகவே கருதுகிறோம். இலங்கையில் இப்போது போர் இல்லை. இன இணக்கப்பாடு உள்ளது.

எல்லோருடைய வாழ்வும் அமைதியாக உள்ளது. இலங்கையில் உள்ள தமிழ் மக்களை கருணாநிதி தூண்டிவிடக் கூடாது. சர்ச்சைக்குரிய அறிக்கைகளின் மூலம் எமது நாட்டை அழிக்கும் இந்திய அரசியல்வாதிகளில் கருணாநிதியும் ஒருவர். இது அரசியல் ஆதாயத்துக்கான தரம்குறைந்த தந்திரோபாயம்.

எமது நாடு சுதந்திரமான ஒரு நாடு என்பதை கருணாநிதி புரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தை உருவாக்க அவர் முயற்சிக்கக் கூடாது. அவருக்கு ஈழத்தை அமைக்கும் விருப்பம் இருந்தால் அதை பெருமளவு தமிழர்கள் வசிக்கும் தமிழ்நாட்டில் உருவாக்கட்டும் என்றார் கோத்தபயா.



பிளஸ்1 புத்தகத்தில் அம்பேத்கரை இழிவுப்படுத்தி கேலிசித்திரம்

Posted: 19 Apr 2012 09:35 PM PDT


மத்தியக்குழு பாடத்திட்டத்தில் 'பிளஸ்1' புத்தகத்தில் அம்பேத்கரை இழிவுப்படுத்தி கேலிசித்திரம் வெளியிட்டு இருப்பதற்கு தமமுக கண்டனம் தெரிவித்துள்ளது.


இது குறித்து தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,  ''மத்திய அரசின் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக்குழு வடிவமைத்துள்ள மத்தியக்குழு பாடத்திட்ட பிளஸ்1 புத்தகத்தில் அம்பேத்கரை பற்றி கேலிசித்திரம் வெளியிடப்பட்டுள்ளது.


   
இந்திய அரசியலமைப்பு சட்டம் பல்வேறு நாடுகளில் உள்ள அரசியல் அமைப்பு சட்டங்களை கற்றறிந்து அதன் சிறப்பு அம்சங்களை உள்வாங்கி, எந்நிலையிலும் சாகாத வகையில் அம்பேத்கரின் பெரும் உழைப்பால் உருவாக்கப்பட்டது.


ஆனால் மத்தியக்குழு பாடத்திட்டத்தில் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அவர் நத்தை மீது அமர்ந்து செல்வது போலவும், அவருக்கு பின்புறமாக நேரு நின்று கொண்டு அவரை சாட்டையால் அடித்து வேகப்படுத்துவது போலவும் கேலிசித்திரம் வெளியிடப் பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக் கத்தக்கது.


எனவே இச்செயலுக்கு மத்தியில் ஆளுகிற காங்கிரஸ் அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும். பிளஸ்1 பாடத்திட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்ட உருவாக்கம் என்ற பாடத்தின் 18ம் பக்கத்தில் இருக்கும் கேலிசித்திரத்தை நீக்கவேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

எங்கள் கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் தமமுக மாநிலம் முழுவதும் அறப்போராட்டங்களை நடத்தும்'' என தெரிவித்துள்ளார்.



ஈழத்து எம்.ஜி.ஆர். டக்ளஸ் தேவானந்தா : காங். எம்.பி. எழுப்பிய சர்ச்சை

Posted: 19 Apr 2012 08:28 PM PDT


இந்தியா தேடப்படும் ஒரு கொலைக்குற்றவாளியை ஈழத்து எம்.ஜி.ஆர்.  என புகழாரம் சூட்டியுள்ளார் இந்திய எம்.பி. சுதர்சன நாச்ச்சியப்பன்.


இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவினர் நேற்று மாலை 5 மணியளவில் யாழ். மத்திய கல்லூரிக்கு வந்தனர்.

   
இவர்களை இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் வரவேற்றார். அவருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந் தாவும் கலந்து கொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன்,  டக்ளஸ் தேவானந்தாவைப் பார்த்து ஈழத்து எம்.ஜி.ஆர் என அழைத்ததும் அவர் தன்னையே மறந்து சிரித்துக் கொண்டிருந்தார்.

சுதர்சன நாச்சியப்பன் பெயர் சூட்டலின்படி டக்ளஸ் தேவானந்தாவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் போலும் என அங்கிருந்த சிலர் பேசிக் கொண்டி ருந்ததைக் காணமுடிந்தது.


எம்.ஜி.ஆரை ஈழமக்கள் போற்றிவருகின்றனர்.  இந் நிலையில்,  எந்தவகையில் டக்ளஸ் தேவானந்தா ஈழத்து எம்.ஜி.ஆர்.  ஆவார் என கொந்தளித்துள்ளனர் ஈழ ஆதரவாளர்கள்.

தமிழகத்தில் உள்ள எம்ஜிஆர் ரசிகர்களும், அதிமுகவினரும் என்ன செய்யப்போகிறார்கள் ....? 




இந்தியா எதிரி நாடு அல்ல: அக்னி-5 ஏவுகணை சோதனை பற்றி சீனா கருத்து

Posted: 19 Apr 2012 07:56 PM PDT


இந்தியா இன்று அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு, 5 ஆயிரம் கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை துல்லியமாக சென்று தாக்கும் வல்லமை கொண்ட, அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.
 
இதுபற்றி சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லியூ வெய்மின் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது:-
 
இந்தியாவின் ஏவுகணை சோதனை பற்றி சீனா முன் எச்சரிக்கையுடன் கவனத்தில் கொண்டுள்ளது. இரு நாடுகளிடையேயும் நல்ல நட்புறவு நிலவி வருகிறது. ஆசிய கண்டத்தில் சீனாவும், இந்தியாவும் சக்தி வாய்ந்த நாடுகளாக வளர்ந்து வருகின்றன.
 
இந்தியா எங்களுக்கு எதிரி நாடு அல்ல. இரண்டு நாடுகளும் கூட்டுறவு பங்காளிகள். நாங்கள் ஒத்துழைப்புடன் சந்தோஷமாக செயல்படுவோம்.
 
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி இரு நாடுகளிடையேயும் ராஜாங்க ரீதியாக நட்புறவை முன்னெடுத்து செல்வோம்.
 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.



ஐ.பி.எல்.போட்டி: சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Posted: 19 Apr 2012 11:30 AM PDT


ஐ.பி.எல் போட்டித் தொடரின் 24-வது லீக் ஆட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கங்குலி தலைமையிலான புனே வாரியர்ஸ் அணியும் மோதின.
 
சென்னை அணியில் கடந்த போட்டியில் விளையாடிய முரளி விஜய், அல்பி மோர்கெல், யோ மகேஷ் ஆகியோர் நீக்கப்பட்டு, விர்த்திமன் சஹா, பொலிஞ்சர், சதாப் ஜகதி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்.
 
புனே அணியில் கடந்த போட்டியில் விளையாடிய அசோக் திந்தா நீக்கப்பட்டு, முரளி கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.
 
டாஸ் வென்ற புனே வாரியர்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக டு பிளிசிஸ்ஸும் பத்ரிநாத்தும் களமிறங்கினர். இந்த ஜோடி  116 ரன்கள் எடுத்தது. அந்நிலையில் டு பிளிஸ்ஸி 58 ரன்னில் ஆட்டம் இழந்தார்.தொடர்ந்து பத்ரிநாத்தும் 57 ரன்னில் வீழ்ந்தார்.
 
களமிறங்கிய உடனேயே அதிரடியாக ஆட முயன்ற ரெய்னா ரன் ஏதும் எடுக்காமலும், பிராவோ 12 ரன்னிலும் வெளியேறினர்.
 
ஆட்டத்தின் கடைசி பந்தில் ஜடேஜா 7 ரன்னில் அவுட்டாக, சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. டோனி 12 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 
புனே அணி தரப்பில் சாமுவேல்ஸ் 3 விக்கெட்டும், நெக்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய புனே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



தனித்தமிழீழம் நிச்சயம் ஒருநாள் உருவாகும்: கருணாநிதி

Posted: 19 Apr 2012 09:25 AM PDT


இலங்கை தமிழர்களின் லட்சியமான தனித்தமிழீழம் என்றாவது ஒருநாள் நிச்சயம் உருவாகும் என தி.மு.க தலைவர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
இலங்கை தமிழர்களின் எதிர்காலம் பற்றி இன்று பேசிய கருணாநிதி, 'தமிழீழம் என்பது வரலாற்று ரீதியாக தமிழருக்கு வழங்கப்பட வேண்டிய உரிமை. இலங்கை மண்ணில் தமிழர்கள் சிந்திய ரத்தமும், உயிர் பலிகளும் வீண் போகாது. என்றாவது ஒருநாள் நிச்சயம் தமிழீழம் உருவாகும். இலங்கை தமிழர் விவகாரத்தில் ஐ.நா தலையிட்டு, பிற நாடுகளைப் போல் பொது வாக்கெடுப்பு நடத்தி தமிழீழத்தை உருவாக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
 
மேலும் ஐ.நா.வின் தலையீட்டால் கொசாவோ, மாண்டி நீக்ரோ, தெற்கு சூடான், கிழக்கு தைமூர் போன்ற நாடுகள் உருவானதையும் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
 
சமீபத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வுப் பணிகளை பார்வையிட இந்தியாவில் இருந்து சுஷ்மா சுவராஜ் தலைமையில் 14 பேர் கொண்ட அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவை மத்திய அரசு இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்தது. இந்த எம்.பி.க்கள் குழுவில் இருந்து அ.தி.மு.க. விலகிக்கொள்வதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதைத் தொடர்ந்து கடைசி நேரத்தில் தி.மு.க.வும் இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவில் இருந்து விலகியது.  
 
இதுபற்றி பேசிய கருணாநிதி, 'எம்.பி.க்கள் குழு பயணத்தால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதற்கு பழைய கால உதாரணங்கள் இருக்கின்றன. எனவே அந்தப் பயணத்தை தி.மு.க சார்பாக யாரும் மேற்கொள்ளவில்லை' என்றார்.
 
இந்நிலையில் கருணாநிதி தற்போது தமிழீழம் நிச்சயம் உருவாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



அரவிந்த் சாமியின் தங்கை நடிக்கும் 'மதில் மேல் பூனை'

Posted: 19 Apr 2012 07:34 AM PDT


ரோஜா, பம்பாய் போன்ற படங்களில் நாயகனாக நடித்த அரவிந்த் சாமியின் தங்கை விபா 'மதில் மேல் பூனை' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது இப்படத்தின் இயக்குனர் பரணி ஜெயபால் கூறியதாவது:

வளரும் சிறுவர்களுக்கு நல்ல பெற்றோரும், நல்ல ஆசிரியர்களும் அமைந்து விட்டால் அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இதில் ஏதேனும் ஒன்று தவறினால் அதன் விளைவு என்ன என்பதைத்தான் இப்படத்தின் கதையாக்கி இருக்கிறோம்.

படத்தின் இடைவேளைக்கு முன்னால் வரும் 20 நிமிடக் காட்சியை ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு அமைத்திருக்கிறோம். சிறுவர்கள் வாழ்க்கை, காதலர்கள் வாழ்க்கை என இரண்டு தளங்களில் பயணிக்கும் கதை இடைவேளையில் ஒன்றாக சந்திக்கின்றன. அப்போது பிரச்சினை எழுகிறது. அதன் முடிவு என்ன என்பதை படத்தின் இரண்டாம் பகுதி சொல்லும்.

இப்படத்தின் நாயகனாக விஜய் வசந்த, நாயகியாக புதுமுகம் விபா நடித்திருக்கின்றனர். தம்பி ராமையா காமெடி பகுதியை பார்த்துக் கொள்கிறார்.

பரமக்குடி, பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளன. இது ஓர் ஆக்ஷன், திரில்லர் படமாகும். ரேணிகுண்டா படத்தின் இசையமைப்பாளரான கணேஷ் ராகவேந்திரா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்றார்.

இப்படத்தின் நாயகி விபா கூறியதாவது;

நான் சென்னை பொண்ணு. மாடலிங் பண்ணிட்டிருக்கும் போது கன்னடத்துல 'ஆட்டா' என்ற படம் பண்ணினேன். தமிழ்ல இதுதான் எனக்கு முதல் படம். எனது பெரியம்மா மகன் அரவிந்த் சாமி. அதாவது என் அண்ணன்தான் அரவிந்த் சாமி. ''நல்ல படமா பார்த்து பண்ணு. அதுவும் ஹார்ட் வொர்க் பண்ணு''ன்னு அண்ணன் சொன்னார்.

இப்படத்துல நான் ஒரு போல்டான ஹீரோயினா நடிச்சிருக்கேன். ஸ்டண்ட்டும் பண்ணியிருக்கேன். கேரளாவிலுள்ள அடர்ந்த காட்டில் ஒன்றரை மாசம் படப்பிடிப்பு நடைபெற்றது. அந்த அனுபவமே ரொம்ப த்ரில்லிங்கா இருந்தது என்றார்.

இப்படத்தின் இசையமைப்பாளரான கணேஷ் ராகவேந்திரா கூறியதாவது:

இப்படத்துல மொத்தம் 5 பாடல்கள். அதுல இன்டர்வெல் பிளாக்ல ஒரு பாடல் வரும். அதை கவிஞர் தாமரை எழுதியிருக்காங்க. அந்த பாட்டு இப்படத்தின் கதைக்கே உயிர்நாடி. சென்னை பத்தி ஒரு பாட்டு இருக்கு. இதை புதுமுக கவிஞர் அன்சரா பாஸ்கர் எழுதியிருக்கார். இப்பாடலை நடிகர் சிம்பு பாடியிருப்பது இதன் ஹைலைட். படத்தின் இரண்டாம் பாதியில் இரண்டு, மூன்று காடசிகளில் மட்டுமே டயலாக் இருக்கும். மீதமுள்ள காடசிகளை எல்லாம் ரீ ரிக்காடிங் இசையால் நகர்த்தியிருக்கிறோம்.

விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது என்றார்.



அஜீத் பிறந்த நாளில் ஆடம்பரமில்லாமல் 'பில்லா 2' இசை வெளியீடு

Posted: 19 Apr 2012 07:24 AM PDT


பில்லா 2 படத்தின் இசைக்கு நல்ல எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது ரசிகர்கள் மத்தியில்.

ஏப்ரல் இறுதியில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட இந்தப் படத்தின் இசை, மேலும ஒரு வாரம் தள்ளிப் போகிறது.

இதன்படி வரும் மே 1 ம் தேதி அஜீத்தின் பிறந்த நாளில் இசை வெளியீடு நடைபெற உள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பில்லா 2-ன் இசை உரிமையை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது. மொத்தம் ஆறு பாடல்கள். படத்துக்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இசைவெளியீட்டு விழாவை ஆரம்பத்தில் பெரிய நிகழ்ச்சியாகக் கொண்டாடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இப்போது ரஜினி வீட்டில் அல்லது மண்டபத்தில் எளிய நிகழ்ச்சி மூலம் இந்த ஆடியோ வெளியீடு நடக்கும் எனத் தெரிகிறது.

சக்ரி டோலெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள பில்லா 2 மூலம் தென்னிந்திய சினிமாவில் நுழைகிறது பிரபல வர்த்தக நிறுவனமான இந்துஜா குழுமம் என்பது குறிப்பிடத்தக்கது.




சட்டசபையில் அழகிரியை பற்றி விமர்சனம்; திமுக எம்எல்ஏக்கள் அமளி- 4 பேர் சஸ்பெண்ட்!

Posted: 19 Apr 2012 07:09 AM PDT


சட்டசபையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை அதிமுக எம்எல்ஏ விமர்சித்துப் பேசியதால் திமுக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அப்போது சபாநாயகருக்கு எதிராக கோஷமிட்டதால் 4 திமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சட்டசபையில் இன்று வேளாண்மைத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. அப்போது நடந்த விவாதம்,

தமிழரசன் (அதிமுக): கடந்த ஆட்சியின்போது மதுரையில் மு.க. அழகிரி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரால் மதுரைக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. மதுரையில் வெட்டு குத்து போன்றவைதான் நடந்தது.

இதற்கு திமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சபாநாயகர் ஜெயக்குமார்: இது உறுப்பினரின் கன்னிப் பேச்சு. ஒரு உறுப்பினர் முதன் முதலாக பேசும்போது மற்றவர்கள் குறுக்கிடக்கூடாது. அடுத்து உங்கள் கட்சி சார்பில் உறுப்பினர் பேச இருக்கிறார். அவர் பேசும் போது இந்த கருத்துக்கு உங்கள் உறுப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கலாம்.

ஆனாலும் தமிழரசனின் பேச்சுக்கு பதில் தர அனுமதி கோரி திமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று குரல் கொடுத்தனர்.

சபாநாயகர்: திமுக உறுப்பினர்கள் அனைவரும் உட்காருங்கள். உறுப்பினர் தமிழரசன் பேசி முடித்ததும் திமுக கொறடாவுக்கு வாய்ப்பு அளிக்கிறேன்.

(ஆனாலும் தொடர்ந்து திமுகவினர் குரல் கொடுத்தனர்)

சபாநாயகர்: அனைவரும் உட்காருங்கள். இல்லை என்றால் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.

இருப்பினும் திமுகவினர் தொடர்ந்து குரல் எழுப்பியதால் சபையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அப்போது சிலர் சபாநாயகருக்கு எதிராக கோஷமிட்டபடியே வெளியே சென்றனர். மேலும் சட்டமன்ற வளாகத்திற்குள்ளும் சபாநாயகருக்கு எதிராக கோஷமிட்டனர்.

அப்போது சட்டமன்றத்தில் பேசிய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் வாய்ப்பு கொடுக்கிறேன் என்று சொன்ன பிறகும் அவர்கள் மோசமாக நடந்து கொண்டனர். ஒழிக என்று கோஷமிட்டவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், அவை நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவாகியுள்ளது. அதைப் பார்த்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையடுத்து சில அதிமுக உறுப்பினர்கள் கோஷமிட்ட திமுக எம்.எல்.ஏக்களின் பெயர்களை சபாநாயகரிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சபாநாயகருக்கு எதிராக கோஷமிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தீர்மானத்தை அமைச்சர் பன்னீர்செல்வம் கொண்டு வந்தார்.

அந்தத் தீர்மானத்தில், கண்ணியமான இந்த சபையில் அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காகவும் சபாநாயகரின் கண்ணியத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும் கோஷமிட்ட திமுக உறுப்பினர்கள் எ.வ.வேலு, லால்குடி செளவுந்தர பாண்டியன், மைதீன் கான், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோரை அபை நடவடிக்கைகளில் இருந்து 10 நாள் நீக்கி வைக்க வேண்டும் என்று கோருகிறேன் என்று கூறப்பட்டிருந்தது.

இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து 4 திமுக எம்எல்ஏக்களையும் 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார்.

திமுக வெளியேற்றப்பட்டபோது அக் கட்சியின் சட்டமன்றத் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன் ஆகியோர் அவையில் இல்லை.

துரைமுருகன் தலைமையில் திமுக இன்றும் வெளிநடப்பு:

முன்னதாக சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் பேசுகையில், தமிழ்ப் புத்தாண்டை திமுக தலைவர் கருணாநிதி மாற்றியதை விமர்சித்துப் பேசினார்.

இதற்கு திமுக உறுப்பினர் சிவசங்கரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூச்சலிட்டதால் அவருக்கு சபாநாயகர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து பேசவே, அவரை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து காவலர்கள் சிவசங்கரனை வெளியேற்றினர்.

இதன்பிறகு திமுக எம்எல்ஏ துரைமுருகன் விளக்கம் அளித்து பேச முற்பட்டார். ஆனால் அவருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் துரைமுருகன் தலைமையில் திமுகவினர் அனைவரும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.



கெடு முடிந்ததால் மாவோயிஸ்டுகளின் மக்கள் மன்றத்தில் நிறுத்தப்பட்டார் எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா

Posted: 19 Apr 2012 07:02 AM PDT


பிஜு ஜனதா தளத்தை சேர்ந்த எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகாவை, கடந்த மாதம் 24-ந்தேதி மாவோயிஸ்டுகள் கடத்தி சென்றனர். அவரை விடுவிக்க ஜெயிலில் இருக்கும் தங்கள் அமைப்பைச் சேர்ந்த கைதிகள் 29 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்தனர்.

ஆனால் அவர்களிடம் 25 பேரை மட்டும் ஜாமீனில் விடுவிப்பதாக ஒடிசா அரசு முதலில் அறிவித்தது. இதை ஏற்க மாவோயிஸ்டுகள் மறுத்து விட்டனர். ஜெயிலில் இருப்பவர்களை ஜாமீனில் விடுவிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் அரசு வாபஸ் பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தனர்.

இந்நிலையில், எம்.எல்.ஏ.வை விடுதலை செய்ய மாவோயிஸ்டுகள் விதித்திருந்த கெடு, நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.

இதற்கிடையில் மாவோயிஸ்டுகளின் ஆந்திரா- ஒடிசா மாநில எல்லை சிறப்பு மண்டல கமிட்டி தலைவர் அருணாவிடம் இருந்து பத்திரிகைகளுக்கு ஒரு ஆடியோ டேப் வந்தது. அதில் ஒடிசா அரசின் செயல்பாடுகள் சரியில்லை. அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே மக்கள் மன்றம் முன்பாக எம்.எல்.ஏ. ஹிகாகாவின் தலைவிதி தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுபற்றி மாவோயிஸ்டுகளின் வழக்குகளை நடத்தி வரும் வக்கீல் நிஹார் ரஞ்சன் பட்நாயக் கூறுகையில், மாவோயிஸ்டுகள் குறிப்பிட்டுள்ள மக்கள் மன்றம் அநேகமாக இன்று கூடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், எந்த இடம், எப்போது என்பது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கோராபுட் மாவட்டத்தில் நாராயன்பத்னா பகுதியில் காட்டுப்பகுதியில் வைத்து மக்கள் மன்றத்தில் எம்.எல்.ஏ. நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இனி மக்கள் மன்றமே அவர் விதியை தீர்மானிக்கும் என வழக்குரைஞர் நிஹார் ரஞ்சன் பட்நாயக் தெரிவித்தார். இருந்தபோதும் எம்.எல்.ஏ மீதான மக்கள் மன்றத்தில் எந்த விதமான தீர்ப்பு வழங்கப்படும் என்பது குறித்து எந்த தகவலும் தனக்கு தெரியாது என அவர் மேலும் தெரிவித்தார்.





Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™