Tamil Star |
- இன்டர்நெட்டில் வினாடிக்கு 10ஜிபி தகவல் பரிமாற்ற வேகம் கூகுள் முயற்சி!
- விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முர்ரே, நடால் அதிர்ச்சி தோல்வி!
- அதிக ஷாட்களை அடித்த அர்ஜென்டினா வீரர் மரியா சாதனை!
- ஆணைக் குழுவின் பரிந்துரைகள் முழு அளவில் அமுலாக்கப்படவில்லை: பிரித்தானியா குற்றச்சாட்டு!
- இலங்கைக்கு அதிக கடன் வழங்கும் நாடுகளில் ஜப்பான் முதலிடம்!
- அரசு அனுமதி மறுத்தாலும் விசாரணையை முன்னெடுத்துச் செல்ல முடியும்! பிரிட்டன் தூதுவர்
- பௌத்த மக்களை அபகீர்த்திக்கு உள்ளாக்க முயற்சிக்கப்படுகிறது! ஜனாதிபதி
- விம்பிள்டன் டென்னிஸ் வெளியேறினார் ஷரபோவா!
- இந்தியா மீது போர் தொடுக்கப்போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு மிரட்டல்!
- மலைக்கு ‘மவுன்ட் சின்கா’ இந்திய விஞ்ஞானி பெயர்: அமெரிக்கா சூட்டியது!
- இராணுவப் பயிற்சிகளை முடித்த தமிழ்ப் பெண்கள்!
- ராஜபக்ச அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம்! மனோ கணேசன் கருத்து
- மோடியை சந்தித்தாலும் இலங்கை மீது இந்தியா அழுத்தம் பிரயோகிக்காது!
- தென்னாபிரிக்காவின் முயற்சியின் பின்னணியில் இந்தியா, ஜப்பான்!
- பெற்றோர்களின் பிடிவாதத்தால் இரண்டு தலை குழந்தை பரிதப மரணம்!
- பீர் பாட்டிலின் உதவியால் பயோடேட்டாவை பிரிண்ட் செய்த கனடிய பட்டதாரி!
| இன்டர்நெட்டில் வினாடிக்கு 10ஜிபி தகவல் பரிமாற்ற வேகம் கூகுள் முயற்சி! Posted: 02 Jul 2014 11:09 PM PDT
இன்டர்நெட் உலகில் கூகுள் கால்பதித்த பின்னர் பல்வேறு துறைகளில் அசாத்தியங்களை நிகழ்த்தி வருகிறது. ஜி-மெயிலில் களமிறங்கிய போது யாருமே மற்ற நிறுவனங்கள் யாருமே வழங்க முடியாத அளவுக்கு முதலில் ஒரு ஜிபி வரை ஈ-மெயிலில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் வசதியை கொண்டு வந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து தற்பொது சுமார் 25 ஜிபி அளவுள்ள தகவல்களைக்கூட கூகுள் டிரைவ் மூலமாக மற்றவர்களுக்கு இணையதளத்தில் அனுப்பலாம். இந்த வசதியை கூகுள் முதன்முதலில் அறிமுகப்படுத்திய போது, பிற ஈ-மெயில் சேவை நிறுவனங்கள் இது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றனர். ஆனால் இதில் அசத்திய கூகுள் இதன் பின்னர் இன்டர்நெட் உலகில் அசைக்க முடியாக ஒரு இடத்தை பிடித்துவிட்டது. இணையதளம் பயன்படுத்தும் 90 சதவீதம் பேர் இன்று கூகுளில் கணக்கு வைத்துள்ளனர். மேலும் அனைத்து சமூக வளைதளங்களுக்கும் கூகுள் கணக்கையே பயன்படுத்தும் அளவுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்த நிறுவனம், கூகுள் மேப், கூகுள் எர்த் மற்றும் நேவிகேட்டர் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. மேலும் பல எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு புரட்சி செய்துவந்தது. இந்த வரிசையில் தற்போது அதிவேக இன்டர்நெட் வசதியை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்குவதற்காக தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இத்திட்டம் நடைமுறை படுத்தப்பட்டால் ஒரு வினாடிக்கு 10ஜிபி வேகத்தில் தகவல்களை பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்துகொள்ளலாம். இதை வீட்டு கம்ப்யூட்டர்களில் கொண்டுவருவதற்கான தீவிர முயற்சியில் கூகுள் ஈடுபட்டுள்ளது. அடுத்த ஆண்டில் இதை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதில் கூகுள் குறியாக உள்ளது. இந்த முயற்சி வெற்றிபெற்றால் பொதுமக்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் உலகின் ஜாம்பவானாக கூகுள் திகழும் என்பதில் சந்தேகமில்லை.This posting includes an audio/video/photo media file: Download Now |
| விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முர்ரே, நடால் அதிர்ச்சி தோல்வி! Posted: 02 Jul 2014 11:00 PM PDT
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் அடுத்தடுத்த அதிர்ச்சி தோல்விகள் அரங்கேறுகின்றன. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, 11ம் நிலை வீரரான பல்கேரியாவின் டிமிட்ரோவை எதிர்த்து விளையாடினார். சொந்த மண்ணில் மீண்டும் ஒருமுறை கோப்பை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட முர்ரே 1-6, 6-7, 2-6 என நேர் செட்களில் தனது தோல்வி ஒப்புக் கொண்டது உள்ளூர் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதே போல, நேற்று முன்தினம் இரவு நடந்த போட்டியில் 2ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால் 6-7, 7-5, 6-7, 3-6 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் கிர்ஜியாசிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். உலகத் தரவரிசையில் 144வது இடத்தில் இருக்கும் நிக் கிர்ஜியாஸ், வைல்டு கார்டு எனப்படும் சிறப்பு அனுமதியில் முதல் முறையாக விம்பிள்டன் பிரதான சுற்றுக்கு நுழைந்தவர். கடந்த 10 ஆண்டுகளில் வைல்டு கார்டு வீரர் ஒருவர் காலிறுதிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும். அத்துடன், 1992க்குப் பிறகு தரவரிசையில் 100க்கு வெளியில் உள்ள வீரர் ஒருவர் முதல்நிலை வீரரை வீழ்த்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி போட்டியில் ரோமானியாவின் ஹலீப் 6-4, 6-0 என்ற செட்களில் ஜெர்மனியின் லிசிகியையும், கனடாவின் பவுச்சர்ட் 6-3, 6-4 என்ற செட்களில் ஜெர்மனியின் கெர்பரையும் வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அதிக ஷாட்களை அடித்த அர்ஜென்டினா வீரர் மரியா சாதனை! Posted: 02 Jul 2014 10:57 PM PDT
சுவிஸ் அணிக்கு எதிராக அர்ஜென்டினாவின் டி மரியா கோல் அடிப்பதற்காக 12 முறை முயன்றுள்ளார். இதன் மூலம் ஒரே போட்டியில் அதிக ஷாட்களை அடித்த அர்ஜென்டினா வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். சுவிஸ் அணிக்கு எதிராக மெஸ்ஸி 8 கோல் வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்தார். இதன் மூலம் சுவிஸ் அணிக்கு எதிராக அதிக கோல் வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்த அர்ஜென்டினா வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றுள்ளார். அமெரிக்கா, பெல்ஜியம் இடையேயான போட்டியின் போது, உலக கோப்பைக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரேசில் ரசிகர் ஒருவர் திடீரென மைதானத்துக்குள் புகுந்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தனது டிசர்ட்டில் 'சேரி குழந்தைகளுக்கு உதவுங்கள்' என வாசகத்துடன் வந்த அவரை பாதுகாப்பு வீரர்கள் பிடித்து வெளியேற்றினர். தங்க காலணி போட்டியில் கொலம்பியாவின் ரோட்ரிக்ஸ் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். இவர் 5 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார். மெஸ்ஸி (அர்ஜென்டினா), நெய்மர் (பிரேசில்), தாமஸ் முல்லர் (ஜெர்மனி) ஆகியோர் தலா 4 கோல்களுடன் 2வது இடத்தில் உள்ளனர். கேமரூன்-குரோஷியா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது பிரபல சூதாட்ட தகரரும், சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபருமான வில்சன் ராஜ் பெருமாள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த புகாரை பெருமாள் மறுத்துள்ளார். போட்டி முடிந்த பிறகுதான் அதைப்பற்றி பேஸ்புக்கில் தகவல்கள் பரிமாறிக் கொண்டதாகவும், தன்னால் கேமரூன் அணிக்கு அவப்பெயர் ஏற்பட்டதற்காக அந்நாட்டு கால்பந்து சங்கத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறி உள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆணைக் குழுவின் பரிந்துரைகள் முழு அளவில் அமுலாக்கப்படவில்லை: பிரித்தானியா குற்றச்சாட்டு! Posted: 02 Jul 2014 10:42 PM PDT
இலங்கையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பரிந்துரைகள் முழு அளவில் அமுலாக்கப்படவில்லை என பிரித்தானியா குற்றம் சாட்டியுள்ளது. உரிய தரத்தில் இலங்கையில் விசாரணைகள் நடத்தப்படவில்லை என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பில் பிரித்தானிய இராஜ சபையில் பேசும் போது இந்த விடயங்கள் பேசப்பட்டுள்ளன. மேலும் இலங்கை விவகாரம் தொடர்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகள் விவகார சிரேஸ்ட அமைச்சர் பார்னொஸ் வார்சீ (Baroness Warsi) தெரிவித்துள்ளார். யுத்தத்தின் போது இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன பக்கச்சார்பற்ற விசாரணைகளை இலங்கை அரசாங்கம் நடத்தத் தவறியுள்ளது, என்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதாக பார்னொஸ் வார்சீ தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்கான அரசியல் விருப்பம் தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது எனவும், 2009ம் ஆண்டிலிருந்து பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் சர்வதே சுயாதீன விசாரணைகளை வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா இயக்கத்தின் நடவடிக்கைகள் குறித்து அவதானிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக கோரி வருவதாகவும் பார்னொஸ் வார்சீ தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கைக்கு அதிக கடன் வழங்கும் நாடுகளில் ஜப்பான் முதலிடம்! Posted: 02 Jul 2014 10:36 PM PDT
இலங்கைக்கு 2014ம் ஆண்டு அதிக கடன்களை வழங்கிய நாடுகள் வரிசையில் ஜப்பான் முதலிடம் பெற்றுள்ளது. புதிய பாலம் ஒன்றுக்காக 342 .8 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்குவதுடன் இந்த முதல் இடத்தை ஜப்பான் பெறுகிறது. இந்தநிலையில் கடந்த நான்கு மாதங்களில் மாத்திரம் இலங்கை, 678.2 மில்லியன் டொலர்களை பல நாடுகளில் இருந்தும் கடன்களாக பெற்றுள்ளது. இதன்படி சீனாவிடம் இருந்து 300 மில்லியன் டொலர்களும் குவைத்திடம் இருந்து 10 மில்லியன் டொலர்களும் அடங்குகின்றன. ஜப்பானின் கடன்கள் யாவும் வங்கி வட்டியின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. குவைத்தின் கடன் 0.5 வட்டிவீதத்தில் 15 வருட திருப்பிச் செலுத்துகை உடன்படிக்கையில் வழங்கப்படுகின்றன. இதனைத்தவிர ஈரான், ஆசிய அபிவிருத்தி வங்கி, இந்தியா உட்பட்ட நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு கடன்கள் கிடைத்துள்ளன. இதேவேளை 2014ம் ஆண்டு இலங்கை 1279 மில்லியன் டொலர்களை 31சதவீத வட்டியில் திருப்பி செலுத்தவேண்டியுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அரசு அனுமதி மறுத்தாலும் விசாரணையை முன்னெடுத்துச் செல்ல முடியும்! பிரிட்டன் தூதுவர் Posted: 02 Jul 2014 10:30 PM PDT
ஐ.நா. விசாரணைக் குழுவின் அங்கத்தவர்கள் இந்த நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு இலங்கை அரசு அனுமதி மறுத்தாலும் விசாரணையை முன்னெடுத்துச் செல்ல முடியும். இவ்வாறு இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஜோன் ரன்கின் தெரிவித்தார். ஆதாரங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை விசாரணைக்குழு தொடர்ச்சியாக முன்னெடுக்கும். விசாரணைக் குழுவிடம் தமது சாட்சியங்களை அளிப்பதற்கு யாரேனும் முன்வருவார்களேயானால், அவர்கள் எந்தவிதத்திலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படாதிருப்பது மிகவும் முக்கியமானது. இல்லாவிட்டால், செப்டம்பரில் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறும் அமர்வின்போது வாய்மூல அறிக்கையும், அதனைத் தொடர்ந்து எதிர்வரும் மார்ச்சில் இடம்பெறும் அமர்வின்போது முழுமையான அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அடுத்து முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு இலங்கைக்கான பிரிட்டன் பிரதமர் ஜோன் ரன்கின் தெரிவித்தார். கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதுவர் இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவுடன் இலங்கை அரசு ஒத்துழைக்க மறுக்கும் நிலையில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பிரிட்டனில் கடந்த மாதம் இடம்பெற்ற 'மோதல்களின் போது பாலியல் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருதல்' தொடர்பான சர்வதேச மாநாடு குறித்து விளக்கமளிப்பதற்காகவே இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்போதே ஐ.நா. விசாரணைக்குழு தொடர்பான கேள்விகளுக்கும் பிரிட்டன் தூதுவர் பதிலளித்தார். பிரிட்டனில் நடைபெற்ற பாலியல் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருதல் தொடர்பான சர்வதேச மாநாடு குறித்து கருத்து வெளியிட்ட பிரிட்டன் தூதுவர், மோதல்களின் போது பாலியல் ரீதியான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான பிரகடனத்தை இலங்கை அரசு அங்கீகரிக்க வேண்டும் எனப் பிரிட்டன் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருவதாகவும் இது தொடர்பில் அரசை ஊக்குவிப்பதாகவும் குறிப்பிட்டார். "மற்றைய நாடுகளில் உள்ளது போன்றே இலங்கையிலும் மோதல்களின் போது பாலியல் ரீதியான வன்முறைகளில் ஈடுபடும் தரப்பினர் தண்டனையிலிருந்து தப்பித்துச் சுதந்திரமாக நடமாடும் நிலைமை இல்லாமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டியது அவசியமாகும். பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட்ட அனைவருக்கும் ஆதரவும் பாதுகாப்பும் வழங்கப்படுவது அவசியமாகும். மோதல்களின்போது பாலியல் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வரும் உலகளாவிய மாநாடு கடந்த மாதம் 10ம் திகதி முதல் 13ம் திகதி வரையில் லண்டனில் பிரிட்டன் வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹேக் மற்றும் ஐ.நாவின் விசேட பிரதிநிதி நடிகை அஞ்சலீனா ஜோலி ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்டது. இதில் இலங்கை உட்பட 128 நாடுகளைச் சேர்ந்த 300இற்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். யுத்த காலத்தில் இடம்பெறும் பாலியல் வல்லுறவு மற்றும் அதனைச் சூழ்ந்திருக்கின்ற தண்டனையிலிருந்து தப்பித்துச் சுதந்திரமாக திரிகின்ற கலாசாரம் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வரும் அவசியத்தை வலியுறுத்தியே இந்த மாநாடு இடம்பெற்றது. இதில் அடிப்படையான விடயமாக அத்தகைய குற்றங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கும் ஏனையவர்களுக்கும் நீதியைப் பெற்றுக்கொள்ள ஆவன செய்வது வலியுறுத்தப்பட்டது. இந்த மாநாட்டின் போது பாலியல் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்படக்கூடிய ஆணித்தரமானதும் நடைமுறைச் சாத்தியமிக்கதுமான நடவடிக்கைகள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டது. இந்த விடயத்தில் அரசு மட்டுமன்றி, பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்கள், சிவில் அமைப்புகள், மத அமைப்புகள் ஆகியவற்றால் ஆற்றக்கூடிய வகிபாகங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. லண்டன் மாநாடு குறிப்பாக, இரண்டு முதன்மையான நோக்கங்களைக் கொண்டிருந்தது. பாலியல் வல்லுறவை யுத்தத்தின் போது ஆயுதமாகப் பாவிக்கும் துர்ப்பாக்கிய நிலையில் காணப்படும் - தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலையை எதிர்கொள்வதற்கான - நடைமுறை செயற்பாட்டுக்கு இணங்குதல் மற்றும் இந்தக் குற்றங்கள் தொடர்பான உலகின் எண்ணப்பாடுகளை மாற்றியமைத்தல் ஆகியனவே அந்த இரு முதன்மை நோக்கங்களாகும்'' - என்று பிரிட்டன் தூதுவர் விளக்கமளித்தார். மோதல்களின் போது பாலியல் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி மாநாட்டை நடத்தும் பிரிட்டன், பாலியல் வன்முறைக்குள்ளான இலங்கையர்களை நாடுகடத்தும் செயற்பாடானது அதன் இரட்டை வேடத்தைக் காண்பிப்பதாக அமைந்துள்ளதே என வினவியபோது, அரசியல் தஞ்சம் கோருவோர் தொடர்பில் பிரித்தானியா உறுதியான கொள்கையைக் கடைப்பிடித்து வருகின்றதெனக் குறிப்பிட்டதுடன் தமது சாட்சியங்களை சரிவர உறுதிப்படுத்தும் தனிநபர்களுக்கு சர்வதேச நியதிக்கு அமைவாக பிரிட்டன் அரசியல் தஞ்சம் வழங்குவதாகவும் அப்படி நிரூபிக்கத் தவறுபவர்களே மாற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். இலங்கை அரசு மோதல்களின் போது பாலியல் வன்முறைகள் இடம்பெறுவதை முடிவுக்குக் கொண்டுவரும் பிரகடனத்தை அங்கீரிப்பதற்கும், ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவுடன் ஒத்துழைத்துச் செயற்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கும் என்பதில் பிரிட்டன் இன்னமும் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பௌத்த மக்களை அபகீர்த்திக்கு உள்ளாக்க முயற்சிக்கப்படுகிறது! ஜனாதிபதி Posted: 02 Jul 2014 10:23 PM PDT
நாட்டின் நெருப்பை வெளியே கொடுத்து, வெளி நெருப்பை உள்ளே கொண்டு வந்து முழு நாட்டையே தீக்கிரையாக்க சிலர் முயற்சிக்கின்றனர். மதங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி அதனை நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் கருவியாக சிலர் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். பௌத்த மக்களுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையிலான தகவல்களை இணையத்தில் பிரசுரித்து உலக நாடுகளில் பிரசாரம் செய்யும் முயற்சிகளை சிலர் மேற்கொள்கின்றனர். பல வருடங்களாக இரத்தம் சிந்தி ஈட்டிய வெற்றியை இல்லாமல் செய்ய முயற்சிப்பது தவறானதாகும். எந்தவொரு இடத்திலும் மதக் கடும்போக்குவாதத்திற்கு இடமில்லை. நாட்டை கட்டியெழுப்ப ஒரு இன மக்களினால் மட்டும் முடியாது. சிங்கள. தமிழ் முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு அவசியமானது. நாட்டில் கலவரத்தை ஏற்படுத்துவதன் மூலம் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டரங்களில் நேற்ற நடைபெற்ற பௌத்த மத நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| விம்பிள்டன் டென்னிஸ் வெளியேறினார் ஷரபோவா! Posted: 02 Jul 2014 03:21 AM PDT
நான்காவது சுற்றில் ஷரபோவாவுடன் நேற்று மோதிய ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (9வது ரேங்க்) 7-6 (7-4), 4-6, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். சிமோனா ஹாலெப் (ரோமானியா), சேபைன் லிசிக்கி (ஜெர்மனி) ஆகியோரும் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளனர். செக் குடியரசின் லூசி சபரோவா கால் இறுதியில் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் மகரோவாவை (ரஷ்யா) எளிதில் வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் அனுபவ வீரர் ரோஜர் பெடரர் (சுவிஸ்) 6-1, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் டாமி ராப்ரெடோவை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்தியா மீது போர் தொடுக்கப்போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு மிரட்டல்! Posted: 02 Jul 2014 03:16 AM PDT
முஸ்லிம்களின் உரிமைகளுக்காக இந்தியா மீது போர் தொடுக்கப்படும் என ஈராக்கில் கிளர்ச்சி செய்து வரும் சன்னி தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் விடுத்துள்ள எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரமலான் விரதத்தை ஒட்டி இந்த அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் விடுத்துள்ள செய்தியில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா, இந்தோனேசியா, எகிப்த், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக அல் பாக்தாத்தி தமது செய்தியில் கூறியுள்ளார். புனித ரமலான் மாதத்தில் போர் செய்வது தடுக்கப்பட்ட போதிலும், தமது உரிமைகளை காப்பாற்ற முஸ்லிம்கள் ஆயுதங்களை ஏந்த வேண்டும் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நாடுகளில் முஸ்லிம்கள் தேவையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஈராக்கில் ஆட்சியை பிடித்த பிறகு இந்த நாடுகள் மீது போர் தொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இதனிடையே பாக்தாக்கில் இருக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மலைக்கு ‘மவுன்ட் சின்கா’ இந்திய விஞ்ஞானி பெயர்: அமெரிக்கா சூட்டியது! Posted: 02 Jul 2014 03:08 AM PDT
அண்டார்டிகாவில் உள்ள மலைக்கு இந்திய விஞ்ஞானியின் பெயரை சூட்டி அமெரிக்கா கவுரவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டா மாகாணத்தில் அமைந்திருக்கும் பல்கலைக்கழகத்தில் மரபியல், செல் உயிரியல் மற்றும் மேம்பாடு ஆகிய துறையில் பேராசிரியராக பணியாற்றி வரும் இந்தியர் அகோரி சின்கா. இவர் அண்டார்டிகாவில் உள்ள மலையில் வாழும் உயிரினங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். இவரது பணியை கவுரவிக்கும் வகையில் இவர் ஆய்வு செய்த அண்டார்டிகா மலைக்கு 'மவுன்ட் சின்கா' என்று அமெரிக்கா பெயர் சூட்டி கவுரவித்துள்ளது. அண்டார்டிகா, மக்கள் வசிக்க முடியாத அளவுக்கு பனியால் சூழ்ந்திருக்கும் மிகப்பெரிய துருவ பிரதேசமாகும். இங்கு உலகம் முழுவதும் இருந்து விஞ்ஞானிகள் வந்து பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். பனிப்பாறைகளுக்கு மத்தியில் வசிக்கும் சீல், திமிங்கலம், பறவைகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யும் குழுவில் அகோரி சின்காவும் உறுப்பினராக இருந்தார். இந்த குழு அமெரிக்காவின் பனிப்பாறைகளை வெட்டும் கடற்படை கப்பலில் சென்று அங்கு தங்கியிருந்து 1972 மற்றும் 1974ல் இங்கு ஆய்வுகளை நடத்தியது. இந்த மலை அண்டார்டிகாவின் தென்கிழக்கே மிகவும் உள்பகுதியில் அமைந்துள்ளது. இதுகுறித்து அகோரி சின்கா கூறுகையில், யாராவது இந்த மலையை பார்க்க விரும்பினால் கூகுள் மேப் இணையதளத்தில் பார்க்க முடியும் என்று தெரிவித்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இராணுவப் பயிற்சிகளை முடித்த தமிழ்ப் பெண்கள்! Posted: 02 Jul 2014 02:59 AM PDT
இலங்கை இராணுவத்திற்கு அண்மையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் 30 பேர் இன்று புதன்கிழமை தங்களது பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறினர். இந் நிகழ்வு முல்லைத் தீவு இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. பயிற்சிகளை முடித்து வெளியேறிய இந்த யுவதிகள், இராணுவ பெண்கள் படைப்பிரிவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் குறித்த 30 தமிழ் யுவதிகளும் இராணுவத்தில் சேர்த்துகொள்ளப்பட்டதுடன் மூன்று மாத பயிற்சிகளின் பின்னர் இன்று இவர்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் வழங்கிய ஆலோசனைகளின் பேரில், தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ராஜபக்ச அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம்! மனோ கணேசன் கருத்து Posted: 02 Jul 2014 02:56 AM PDT
ஜனாதிபதி அழைப்பு விடுத்தால் தான் அரசியலுக்கு வருவதற்கு தயார் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார். உண்மையில் கோத்தபாய ஏற்கனவே திரைமறைவு அரசியலில் இருக்கிறார். ஆகவே இனிமேல் அவர் பகிரங்க அரசியலில் இறங்க வேண்டும். என என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். அத்துடன், அவரது இந்த கருத்தை நான் சாதகமாக பார்க்கின்றேன். இன்றைய செயலாளர் கோத்தபாய, நாளை அமைச்சர் கோத்தபாயவாக மாறி பகிரங்க அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம். தம்பியின் விருப்பத்தை புரிந்து கொண்டு, உரிய அழைப்பை அண்ணன் விடுக்க வேண்டும் என நான் பகிரங்கமாக கோருகிறேன். இதுவரை கேள்விகளுக்கு பதில் கூறாத திரைமறைவு அரசியல் செய்துவரும் கோத்தபாய, இனிமேல் பகிரங்கமாக பாராளுமன்றத்தில் பதில் கூறும் நிலைமை இதனால் ஏற்படும். இது நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லது என என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, கோத்தபாயவின் பகிரங்க அரசியல் ஆர்வம் இன்று பகிரங்கமாயுள்ளது. அண்ணன் அழைத்தால் வருகிறேன் என்கிறார். ஆகவே தம்பியை அழைத்து வாருங்கள் என அண்ணனை நாம் கோருகிறோம். இன்று பாராளுமன்றத்தில் சும்மா இருக்கும் ஒரு தேசியப்பட்டியலை வீட்டுக்கு அனுப்பி விட்டு கோத்தா உள்ளே வரலாம். இந்த நாட்டில் இன்று திரைமறைவில் நடைபெறும் பல விடயங்களுக்கு இது ஓரளவாவது முடிவு கட்டும். கேள்வி எழுப்ப நான் இன்று அங்கு இல்லை என்பது ஒரு மனக்குறைதான். ஆனாலும், இங்கே இருக்கும் என் நண்பர் சுரேஷ் உட்பட கெட்டிக்கார எதிரணி எம்பீக்கள் நேரடியாக கோத்தபாயவிடம் கேள்விகள் எழுப்பலாம். இன்று கோத்தபாயவை பார்க்கக்கூட முடியாமல் இருக்கும் ஆளும் கட்சி எம்பிக்கள் கூட, கோத்தபாயவிடம் கேள்விகள் எழுப்பலாம் அல்லது நேரடியாக பாராட்டி தேவாரம் பாடலாம். கோத்தா இன்னொன்றையும் சொல்லியுள்ளார். தான் அரசியலுக்கு வந்தால், இன்று அரசியலில் இருக்கும் பல அரசியல்வாதிகளை விட மிக சிறப்பாக பணிபுரிவேன் என அவர் கூறியுள்ளார். இது எதிரணியில் இருக்கும் எங்களை நோக்கி சொல்லப்பட்டது அல்ல. நாங்கள், மக்கள் பிரச்சினைகளை அரங்கத்துக்கு கொண்டு செல்கின்றோம். அதற்காக போராடுகின்றோம். குரல் எழுப்புகின்றோம். ஆனால், அரசு பணியாற்றும் அதிகாரம் எங்களிடம் இல்லை. அது அரசாங்கத்துக்குதான் இருக்கிறது. இன்று அரசில் உள்ள பல அமைச்சர்கள், மந்திரிகள் சும்மா இருக்கின்றார்கள். நாற்காலிகளை சூடாக்குவதற்காகவே பலர் பாராளுமன்றம் போயுள்ளார்கள். ஜனாதிபதி முதல் பிரதமர் உட்பட பல அரசு தரப்பு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை பார்த்துதான், கோத்தபாய ராஜபக்ச இப்படி கூறியுள்ளார் என நான் நினைக்கின்றேன். இலங்கை போலீஸ் நாய் மனிதனை கடித்தால் செய்தி இல்லை. ஆனால், மனிதன் நாயை கடித்தால் செய்தி. சாரசரி குடிமக்களுக்கு துன்பம் வருவது சகஜம்,. ஆகவே அது பெரும் செய்தி இல்லை. ஆனால், போலீஸ்காரருக்கே துன்பம் வந்துவிட்டது. இது செய்தி. வெள்ளை வான் கடத்தலை விசாரிக்க வேண்டிய போலீஸ்காரர்கள், கடந்த மாதம் வானில் வந்த சிலரால் கடததப்பட்டு கொல்லப்பட்டது நமக்கு தெரியும். இன்று தெற்கு கடுகதி சாலையில் ஒரு பிரதியமைச்சரின் வாகனத்தை நிறுத்தி விசாரித்த போலீஸ்காரர், போலீஸ் விசாரணையில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லி தனது பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு போய் விட்டார். இது செய்தி. இந்த போலீஸ்காரரின் தனிப்பட்ட வாகனம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. அவரும் தாக்குதலுக்கு உள்ளானார். இன்று அது சம்பந்தமான விசாரணை நடைபெறுகிறது. அந்த விசாரணைகளில் சம்பந்தப்பட்ட பிரதியமைச்சரின் தலையீடு இருப்பதால், போலீஸ் விசாரணையில் நம்பிக்கையில்லை என போலீஸ்காரரே கூறுகிறார். இந்த அளவில் இலங்கை போலீஸின் தாராதரம் சந்தி சிரிக்கும் நிலையில் உள்ளது. தென்னாபிரிக்க குழுவுக்கும் வீசா இல்லாமல் போகுமா? தென்னாபிரிக்க துணை ஜனாதிபதி ரமபோஷா தலைமையிலான குழு இங்கு வரப்போவதைப் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்ற மாதிரி இன்று இலங்கை அரசு நடந்து கொள்கிறது. கூட்டமைப்புடனும், இலங்கை அரசுடனும் பேசித்தான் அவர்கள் இங்கு வரவுள்ளர்கள். அதனால்தான் தென்னாபிரிக்கா, ஐநா மனிதவுரிமை பேரவை தீர்மானத்தின் போது நடுநிலை வகித்தது. இன்று அரசின் பங்காளிகள் தென்னாபிரிக்காவை தூற்றுகிறார்கள். அரசு தலைமை இதை கண்டு கொள்ளாமல் இருக்கிறது. ரமபோஷா குழுவினர் தங்களுக்கு தெரியாமல் இலங்கை வருவதைப் போல் அரசாங்கம் சிங்கள மக்களுக்கு காட்டுகிறது. கடைசி தருணத்தில், ஐநா மனிதவுரிமை குழுவுக்கு சொல்வதை போல், உள்ளே வர வீசா இல்லை என்று ரமபோஷா குழுவினருக்கும் சொன்னாலும் இவர்கள் சொல்வார்கள். அப்படி சொல்லி, சிங்கள மக்களை தூண்டிவிட்டு ஊவா மாகாணசபை தேர்தலுக்கு போனாலும் போவார்கள்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மோடியை சந்தித்தாலும் இலங்கை மீது இந்தியா அழுத்தம் பிரயோகிக்காது! Posted: 02 Jul 2014 02:51 AM PDT
இலங்கையானது இறைமையுள்ள ஒருமைப்பாட்டைக் கொண்ட நாடு என்பது மோடிக்கு நன்றாகவே தெரியும் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சி என்ற வகையில் உலகில் எந்தவொரு தலைவரையும் சந்தித்துப் பேச்சு நடத்தலாம். அதற்காக இந்தியா எமது உள்நாட்டு விவகாரங்களில் ஒருபோதும் தலையிடாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்மாதம் புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளமை குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த விடயம் குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியல் கட்சி என்ற ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்திய பிரதமரை சந்தித்துப் பேச்சு நடத்தலாம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகின்றனர் என்பதற்காக இந்தியா இலங்கை மீது எவ்வாறான அழுத்தத்தையும் பிரயோகிக்காது. எந்தவொரு நாடும் இன்னொரு நாட்டின் இறைமை பாதிக்கும்படி செயற்படக்கூடாது. அந்த வகையில் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடாது என்பதுடன் அழுத்தங்களையும் பிரயோகிக்காது. இலங்கை இறைமையும் ஒருமைப்பாட்டையும் கொண்ட நாடு என்பது சிரேஷ்ட தலைவராக இருக்கும் நரேந்திர மோடிக்கு நன்றாகவே தெரியும். இலங்கையின் உள்ளக விவகாரங்களில் இந்தியா தலையிடாது. அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவதனை நம்பிக்கொண்டு இந்திய பிரதமர் எவ்வாறான அழுத்தத்தையும் எமக்கு பிரயோகிக்கமாட்டார். அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் நரேந்திர மோடிக்கும் இடையில் இடம்பெறவுள்ளதாகக் கூறப்படும் சந்திப்பு தொடர்பில் எமக்கு எந்த சிக்கலும் இல்லை. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தென்னாபிரிக்காவின் முயற்சியின் பின்னணியில் இந்தியா, ஜப்பான்! Posted: 02 Jul 2014 02:46 AM PDT
இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்தும் தென்னாபிரிக்காவின் முயற்சியின் பின்னணியில் இந்தியா ஜப்பான் மற்றும் அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களான நிமால் சிறிபாலடி சில்வா வாசுதேவ நாணயக்கார உட்பட பலர் உள்ளனர் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொது செயலாளர் டாக்டர் வசந்த பண்டார குற்றஞ்சாட்டியுள்ளார். அதேவேளை, தென்னாபிரிக்காவின் மத்தியஸ்தத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் மக்களை வீதியில் இறக்கி போராடுவோம் என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்; தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி ரமபோஷா தலைமையிலான குழுவினர் இராஜதந்திர விஜயமாக இலங்கை வருவதையும் ஜனாதிபதி உட்பட அரசியல் தலைவர்களை சந்திப்பில் எந்தவிதமான ஆட்சேபனையோ எதிர்ப்போ கிடையாது. ஆனால் இலங்கையில் அரசியல் தீர்வு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு உதவும் தென்னாபிரிக்காவின் குழுவாக இலங்கை வருவதையும் தலைவர்களை சந்திப்பதையும் கடுமையாக எதிர்க்கின்றோம். அவ்வாறானதோர் மத்தியஸ்தம் எமக்கு அவசியமில்லை. ஏற்கனவே ஐதேக ஆட்சிக் காலத்தில் நோர்வேயின் சொல்ஹெய்மை மத்தியஸ்தராக ஏற்றுக்கொண்டதால் விடுதலைப் புலிகள் பலமடைந்து யுத்தம் உக்கிரமடைந்தது. பிரிவினை தலைதூக்கியது. இன்று அரசாங்கம் தென்னாபிரிக்காவின் மத்தியஸ்தத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டால் அன்றைய ஐதேக அரசுக்கும் இன்றைய அரசுக்கும் வித்தியாசமில்லை என்பதாகவே அமையும். அவ்வாறான நிலைமை ஏற்படுமானால் தேசிய அமைப்புக்களின் ஆதரவு இந்த அரசாங்கத்திற்கு இல்லாமல் போகும். அது மட்டுமல்லாது இதற்கெதிராக மக்களை வீதியில் இறக்கி போராடுவோம். தென்னாபிரிக்காவின் பின்னணியில் இலங்கையில் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி பிரிவினையை ஏற்படுத்தும் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளே உள்ளன. அது மட்டுமல்லாது அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களான நிமால் சிறிபாலடி சில்வா வாசுதேவ போன்று வேறும் பலரும் உள்ளனர். எனவே, தென்னாபிரிக்காவின் பொறியில் சிக்கினால் அதிலிருந்து மீள முடியாது போகும் என்றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பெற்றோர்களின் பிடிவாதத்தால் இரண்டு தலை குழந்தை பரிதப மரணம்! Posted: 02 Jul 2014 01:39 AM PDT
இரண்டு தலைகள், ஆனால் ஒரே இதயம், ஒரே கல்லீரல் கொண்ட ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் இரண்டு மாதத்திற்கு பின்னர் பெற்றோர்களின் பிடிவாதத்தால் பரிதாபமாக உயிரிழந்தது. அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள Pittsburgh என்ற நகரில் Michelle Van Horne மற்றும் Kody Stancombe என்ற தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதல் ஒட்டிப்பிறந்த இரண்டு குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு தலை மட்டுந்தான் இரண்டு இருந்தது. கழுத்துக்கு கீழே ஒரே ஒரு மனிதருக்குடைய பாகமும், இரண்டு தலையும் இருந்ததால் மருத்துவர்கள் ஒரு தலையை மட்டும் தனியாக அகற்றினால்தான் மீதமுள்ள ஒரு குழந்தையாவது உயிர் பிழைக்கும் என்றும், இல்லாவிட்டால் இரண்டு குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்து என்று கூறியும் பெற்றோர்கள் தலையை தனியாக எடுக்க அனுமதி கொடுக்கவில்லை. Andrew மற்றும் Garrett Stancombe, என்று பெயரிடப்பட்ட அந்த இரண்டு குழந்தைகளும் தங்களுக்கு உயிருடன் வேண்டும் என்று அவர்கள் பிடிவாதமாக இருந்தனர். இந்நிலையில் நேற்று இரண்டு குழந்தைகளும் மூச்சுவிட சிரமப்பட்டு சிறிது நேரத்தில் பரிதாபமாக மரணம் அடைந்தது. இரண்டு தலைகளில் உள்ள பாகங்கள் அனைத்தும் மிகவும் சரியாக அமைந்து உடல் மட்டும் ஒன்று அமைந்த இந்த குழந்தைகளில் சரியான நேரத்தில் சர்ஜர் செய்து ஒரு குழந்தையை அகற்றியிருந்தால் கண்டிப்பாக ஒரு குழந்தையை காப்பாற்றியிருக்கலாம் என்றும், பெற்றோர்களில் வீண் பிடிவாதத்தால் இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டன என்றும் மருத்துவர்கள் வருத்தத்துடன் பேட்டியளித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதக கூறப்படுகின்றது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பீர் பாட்டிலின் உதவியால் பயோடேட்டாவை பிரிண்ட் செய்த கனடிய பட்டதாரி! Posted: 02 Jul 2014 01:35 AM PDT
கனடாவில் உள்ள ஒரு பட்டதாரி பீர் பாட்டிலின் உதவியால் தனது பயோடேட்டாவை பிரிண்ட் எடுத்து கொடுத்து வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். இதனால்தான் தனக்கு உடனடியாக வேலை கிடைத்ததாகவும் அவர் நம்புகிறார். இதுகுறித்து தெரிய வருவதாவது! கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியை சேர்ந்த Brennan Gleason என்பவர் University of the Fraser Valley என்ற பல்கலைக்கழகத்தில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார். அதன்பின்னர் வேலைக்கு சேருவதற்காக தன்னுடைய பயோடேடாவை தயார் செய்த அவர், பயோடேட்டாவை வித்தியாசமான முறையில் பிரிண்ட் செய்ய முடிவு செய்தார். அதன்படி பிரிண்டரில் கலக்கப்படும் மையுடன் பீர் கலந்து தன்னுடைய பயோடேட்டாவை பிரிண்ட் செய்து வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். அவருடைய விண்ணப்பத்தை கையில் எடுத்து பார்ப்பவருக்கு பீர் வாசனை வரும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவருக்கு வான்கூவர் நகரில் உள்ள டெக் ஒன் என்ற நிறுவனத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிரிவில் கிரியேட்டிவ் டைரக்டர் வேலை கிடைத்துவிட்டது. தன்னுடைய வித்தியாசமான யோசனையால்தான் தனக்கு உடனடியாக இந்த வேலை கிடைத்துவிட்டதாக அவர் கூறுகின்றார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |















