Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


சென்னையில் கைதான பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

Posted: 05 May 2014 08:51 AM PDT

சென்னை,

சென்னையில் கடந்த மாதம் 28–ந் தேதி அன்று இலங்கையைச் சேர்ந்த முகமது ஜாகீர் உசேன் (வயது 37) என்பவர் கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளால், சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டவர் என்றும், உளவுபார்ப்பதற்காக சென்னையில் 6 மாதங்கள் தங்கி இருந்தார் என்றும் கியூ பிரிவு போலீசார் தெரிவித்தனர். ஜாகீர் உசேன், நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவரோடு தொடர்பு வைத்திருந்ததாக, இன்னொரு இலங்கை ஆசாமி சிவபாலன், சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சலீம் ஆகியோரையும் கியூ பிரிவு போலீசார் மீண்டும் கைது செய்தனர். அவர்களும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 பாகிஸ்தான் உளவாளி என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள, ஜாகீர் உசேனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திட, கியூ பிரிவு போலீசார் முடிவு செய்தனர். பாகிஸ்தான் உளவாளியை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து, விசாரணை நடத்திட கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. சென்னை ரெயில் குண்டு வெடிப்பு தீவிரவாதிகளுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்று போலீசார் அவரிடம் அதிரடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

category:

News Group Category:

‘மோடியை கைது செய்ய வேண்டும்’ தேர்தல் ஆணையத்திற்க்கு மம்தா பானர்ஜி கோரிக்கை

Posted: 05 May 2014 08:47 AM PDT

கொல்கத்தா,

பைசாபாத்தில் ராமர் மற்றும் கோவில் படத்தை வைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நரேந்திரமோடியை கைது செய்ய வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கான கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் டெரக்–ஓ–பிரைன் தெரிவித்தார்.

வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பாங்கன் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்காள முதல்–மந்திரியுமான மம்தாபானர்ஜி இதே கருத்தை வலியுறுத்தினார். அவர் பேசுகையில், 'அவர் (மோடி) காற்றடைத்த பலூன் மாதிரிதான். காற்று வெளியேறிவிட்டால் ஒன்றுமே இருக்காது. தேர்தல் பிரசாரத்துக்கு மதத்தை பயன்படுத்திய அவர், பிரதமர் பதவியை ஏற்க தகுதியற்றவர் ஆகிறார். எனவே அவரை கைது செய்து சிறையில் தள்ள வேண்டும்' என்றார்.

category:

News Group Category:

வரதராஜபெருமாள் கோவிலில் கருடசேவை: காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு 14–ந்தேதி உள்ளூர் விடுமுறை

Posted: 05 May 2014 08:39 AM PDT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் வருகிற 14–ந்தேதி கருடசேவை நடைபெறுவதால் அன்று காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கா.பாஸ்கரன், வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

காஞ்சீபுரத்தில் பிரசித்திபெற்ற வரதராஜபெருமாள் கோவிலில் வருகிற 14–ந்தேதி(புதன் கிழமை) கருடசேவை வீதி உலா நடைபெறுகிறது. இதையொட்டி காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறை நாளை ஈடுசெய்திட அடுத்த மாதம்(ஜூன்) 14–ந்தேதி(சனிக்கிழமை) பணி நாளாக இயங்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

News Group Category:

பாராளுமன்றத்துக்கு 8–வது கட்ட தேர்தல் 64 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்ந்தது

Posted: 05 May 2014 08:37 AM PDT

புதுடெல்லி,

பாராளுமன்றத்துக்கு 8–வது கட்டமாக புதன்கிழமை 64 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்ந்தது.

8–வது கட்ட தேர்தல்

543 இடங்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு 9 கட்ட தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இதுவரை 7 கட்டங்களாக 437 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது. 8–வது கட்டமாக ஏழு மாநிலங்களில் பரவியுள்ள 64 தொகுதிகளில் நாளை மறுதினம் புதன்கிழமை ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. மாநில வாரியாக தேர்தலை சந்திக்கிற தொகுதிகளின் எண்ணிக்கை வருமாறு:–

ஆந்திரா – 25

பீகார் – 7

இமாச்சல் – 4

காஷ்மீர் – 2

உத்தரபிரதேசம் – 15

உத்தரகாண்ட் – 5

மேற்கு வங்காளம் – 6

முக்கிய வேட்பாளர்கள்

8–வது கட்ட தேர்தலில் 64 தொகுதிகளில் 897 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் முடிவு செய்யப்படுகிறது. இந்த தேர்தலை சந்திக்கிற தலைவர்களில் மிக முக்கியமானவர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி. அவர் உத்தரபிரதேச மாநிலம், அமேதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் டி.வி. நடிகை ஸ்மிருதி இரானியும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் குமார் பிஸ்வாசும் போட்டியில் உள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த தொகுதியில் கடும் போட்டியை ராகுல் காந்தி எதிர்கொள்கிறார்.

தேர்தலை சந்திக்கிற பிற தலைவர்கள் பா.ஜனதா பொதுச்செயலாளர் வருண் காந்தி (சுல்தான்பூர்), மத்திய உருக்கு மந்திரி பெனி பிரசாத் வர்மா (கோண்டா), கிரிக்கெட் வீரர் முகமது கைப் (பூல்பூர்), காஷ்மீர் முன்னாள் முதல்–மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி மூத்த தலைவருமான முசாபர் உசேன் பெய்க் (பாரமுல்லா), ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் விஜயாம்மா (விசாகப்பட்டினம்) உள்ளிட்டவர்கள் அடங்குவார்கள்.

சீமாந்திரா

ஆந்திராவில் சீமாந்திரா பகுதியில் உள்ள 25 பாராளுமன்ற தொகுதிகளுடன், 175 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. சட்டசபை தேர்தலை பொறுத்தமட்டில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்குதேசம் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதியிலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி புலிவந்துலா தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். இரு தலைவர்களும் மாநிலம் முழுவதும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஓட்டுப்பதிவு நடக்க உள்ள தொகுதிகளில் தலைவர்கள் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்ந்தது. நாளை மறுதினம் புதன்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி ஓட்டுப்பதிவு நடக்கிறது.

News Group Category:

நாகர்கோவில் குமரி அணை

Posted: 05 May 2014 08:27 AM PDT

நாகர்கோவில் குமரி அணையில் தண்ணீர் செல்லும் காட்சி.

6

தேர்தலில் போட்டியிடுவதால் திருமணத்தை தள்ளி வைத்த திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்

Posted: 05 May 2014 08:24 AM PDT

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் பிஷ்ணுபூர் பாராளுமன்ற தொகுதியில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 34 வயதான சுவுமித்ராகான் போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிடுவதால் இவர், தனது திருமணத்தை தள்ளி வைத்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், 'பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏப்ரல் மாதம் எனக்குத் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. எனது தொகுதியில் வருகிற 7–ம் தேதி தேர்தல் நடக்கவிருப்பதால் திருமணத்தைத் தேர்தலுக்குப் பிறகு தள்ளி வைக்க வேண்டியதாயிற்று' என்றார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான சவுமித்ராகான், கடந்த டிசம்பரில் அக்கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

News Group Category:

சோனியாகாந்தி உத்தரபிரதேச மாநிலம் முஷாபர்பூர் நகரில் தேர்தல் பிரசாரம்

Posted: 05 May 2014 08:19 AM PDT

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி  உத்தரபிரதேச மாநிலம் முஷாபர்பூர் நகரில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, கூட்டத்திற்கு வந்திருந்த பெண்களை பார்த்து அவர் உற்சாகமாக கையை அசைத்த காட்சி.

5

பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் லாலுசிங்கை ஆதரித்து நரேந்திரமோடி தேர்தல் பிரசாரம்

Posted: 05 May 2014 08:14 AM PDT

உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் நகரில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் லாலுசிங்கை ஆதரித்து நரேந்திரமோடி தேர்தல் பிரசாரம் செய்தார். மேடையின் பின்னணியில் அமைக்கப்பட்ட பேனரில், ராமர் படம் மற்றும் மாதிரி கோவில் படம் இடம் பெற்றுள்ளதை படத்தில் காணலாம்.

3

மத்தியில் காங்கிரஸ் 3–வது முறையாக ஆட்சியை அமைக்கும் மத்திய மந்திரி நாராயணசாமி பேட்டி

Posted: 05 May 2014 08:13 AM PDT

ஆலந்தூர்,

மத்தியில் காங்கிரஸ் 3–வது முறையாக ஆட்சியை அமைக்கும் என்று மத்திய மந்திரி நாராயணசாமி கூறினார்.

பேட்டி

மத்திய மந்திரி நாராயணசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். முன்னதாக அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பாராளுமன்ற தேர்தல் நடக்கும்போது தீவிரவாதிகள் நம் நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக மத்திய அரசுக்கு உளவுத்துறை தகவல் அளித்தது. இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி 'உஷார்'படுத்தியது.

இந்த நிலையில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. மத்திய அரசு தரும் எச்சரிக்கைகளை மாநில அரசுகள் புரிந்து கொண்டு உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மீனவர்கள் பேச்சுவார்த்தை

இந்தியா–இலங்கை இடையிலான மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக வருகிற 12–ந்தேதி அன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை கொழும்பு நகரில் நடக்கிறது. இந்த முறை பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஒத்துழைப்பு அளிக்கும் என நம்புகிறேன். தமிழக மீனவர்கள் நலன் கருதி மாநில அரசு இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

மத்தியில் காங்கிரஸ் 3–வது முறையாக ஆட்சியை அமைக்கும். மதவாத சக்திகள் மத்தியில் ஆட்சி அமைப்பதை தடுப்பதற்காக காங்கிரஸ் கட்சிக்கு மூன்றாவது அணி ஆதரவு அளிக்கும். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

category:

News Group Category:

சென்னை போரூர் ஏரியில் துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்டவர் சென்னை புதுப்பெண்; ஒருதலை காதலில் வாலிபர் வெறிச்செயல்

Posted: 05 May 2014 08:06 AM PDT

பூந்தமல்லி,

கொலை செய்து துண்டு, துண்டாக வெட்டி போரூர் ஏரியில் வீசப்பட்ட பெண், சென்னையைச் சேர்ந்த புதுப்பெண் என்பது தெரியவந்துள்ளது. ஒருதலைக் காதல் தகராறில் கொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஏரியில் பெண் பிணம்

சென்னை அருகே உள்ள போரூர் ஏரியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்ட ஒரு பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரித்தனர். அந்த உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அதனை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் இறங்கினார்கள்.

கடந்த சில நாட்களில் சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் காணாமல் போனவர்களின் பட்டியலை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை செய்தனர்.

சென்னை பெண்

அப்போது சென்னை அசோக்நகரை அடுத்த நெசப்பாக்கம், அன்னை சத்யா நகர், 10–வது தெருவில் வசித்து வந்த ஸ்ரீராமின் மனைவி ரேகா (வயது 25) என்பவர் வேலைக்கு சென்று 2 நாட்களாகியும் காணவில்லை என்பது தெரியவந்தது. ரேகா கிண்டியில் உள்ள ஒரு கால் சென்டரிலும், நெசப்பாக்கத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராகவும் வேலை பார்த்து வந்தார்.

இதையடுத்து ரேகாவின் கணவர் மற்றும் உறவினர்களை அழைத்து சென்று போலீசார் உடலை காட்டினார்கள். ஸ்ரீராம் அது தனது மனைவி ரேகா தான் என்று அடையாளம் காட்டி கதறி அழுதார்.

காதல் திருமணம்

ஸ்ரீராம் சில வருடங்களுக்கு முன்பு தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது தன்னுடன் பணிபுரிந்த ரேகாவை அவர் காதலித்தார். இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு இருவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது ஸ்ரீராம் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

திருமணத்திற்கு முன்பு ரேகா கால்சென்டரில் வேலை செய்தபோது, அவரை வீட்டில் இருந்து நிறுவனத்திற்கு அழைத்து செல்ல கார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ரேகா உள்ளிட்ட ஊழியர்களை காரில் ஏற்றிச் செல்லும் பணியை மாதவரம், சீத்தாபதி நகரை சேர்ந்த டிரைவர் சாம்சன்(25) செய்து வந்தார். ரேகாவை சாம்சன் ஒரு தலையாக காதலித்து வந்தார்.

கடத்திக்கொலை

தனது காதலை அவர், ரேகாவிடம் பல முறை தெரிவித்துள்ளார். ஆனால், தான் வேறு ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறி ரேகா மறுத்து வந்துள்ளார். ஆனால் தொடர்ந்து சாம்சன், ரேகாவை காதலிக்க சொல்லி தொல்லை கொடுத்தார். இதுகுறித்து ரேகாவின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சாம்சனை எச்சரித்து அனுப்பினர்.

இதற்கிடையே ரேகாவிற்கும், ஸ்ரீராமுக்கும் திருமணம் நடந்ததால் ஆத்திரத்தில் இருந்த சாம்சன் 'தனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்கக் கூடாது' என்று நினைத்து, சம்பவத்தன்று வேலைக்கு சென்ற ரேகாவை கடத்திச் சென்று கொலை செய்து கொடூரமாக உடலின் கை, கால்களை துண்டு, துண்டாக வெட்டி மூட்டை கட்டி போரூர் ஏரியில் வீசிவிட்டு சென்றார். மேற்கண்ட தகவல்கள் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

வாலிபருக்கு வலைவீச்சு

மேலும், ரேகா கொலை செய்யப்படுவதற்கு முன்பு கற்பழிக்கப்பட்டாரா? என போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். தலைமறைவாக உள்ள சாம்சன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கூட்டாளிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து ரேகாவின் உறவினர்கள் கூறுகையில், 'சம்பவத்தன்று வேலைக்கு சென்ற ரேகா, நான் லேட்டாக வேலைக்கு போகிறேன். இரவு லேட்டாக தான் வருவேன் என்று கூறிவிட்டு சென்றாள். ஆனால் இந்த கொலைகாரன் ரேகாவை இப்படி கொடூரமாக கொலை செய்து துண்டு, துண்டாக வெட்டி ஏரியில் வீசிவிட்டு சென்று விட்டானே?' என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.

ஒருதலைக் காதலால் நேர்ந்த இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™