Daily Thanthi |
- ரியல் எஸ்டேட், மின் துறை நிறுவன பங்குகள் விலை உயர்வு ‘சென்செக்ஸ்’ 76 புள்ளிகள் அதிகரிப்பு
- புதுமையில் ஆர்வமுள்ள கம்பெனிகளின் பட்டியலில் ஒன்பது இந்திய நிறுவனங்கள்
- இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் தங்க ஆபரண நிறுவன பங்குகள் விலை உயர்வு தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு
- சர்வதேச வளர்ச்சியை விஞ்சியது உருக்கு பொருள்கள் உற்பத்தி 5.3% வளர்ச்சி
- மின்னணு காப்பீட்டு பாலிசிகளை கட்டாயமாக்க இரிடா பரிசீலனை
- அனைத்து கோரிக்கைகளுக்கும் 20 தினங்களில் தீர்வு காண வேண்டும் கள அலுவலகங்களுக்கு இ.பி.எப்.ஓ. உத்தரவு
- இந்த ஆண்டு இறுதிக்குள் மின்னணு முறை கட்டணங்கள் ரூ.1.20 லட்சம் கோடியாக உயரும்
- சோயாபீன் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
- ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிகர லாபம் ரூ.621 கோடி
- கடந்த 2013–14–ஆம் நிதி ஆண்டில் அன்னிய நேரடி முதலீடு 8 சதவீதம் உயர்ந்தது
| ரியல் எஸ்டேட், மின் துறை நிறுவன பங்குகள் விலை உயர்வு ‘சென்செக்ஸ்’ 76 புள்ளிகள் அதிகரிப்பு Posted: 22 May 2014 01:10 PM PDT மும்பை பங்கு வர்த்தகம் வியாழக்கிழமை அன்று நன்றாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 76 புள்ளிகள் அதிகரித்தது. முதல் பட்ஜெட் மத்தியில் புதிதாக பொறுப்பு ஏற்கும் பா.ஜனதா அரசு முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறையை 3.9 சதவீதமாக குறைக்கும் வகையில் திட்டம் ஒன்றை நிதி அமைச்சகம் தயாரித்து வருவதாக செய்தி வெளியானது. இது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. சீனாவின் தொழில்துறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக எச்.எஸ்.பீ.சி. தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமெரிக்க ரிசர்வ் வங்கியும் தற்போதைக்கு வட்டி விகிதத்தை உயர்த்த போவதில்லை என்று அறிவித்தது. இதனையடுத்து, சர்வதேச அளவில் பங்கு வியாபாரம் நன்றாக இருந்தது. நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், மின்சாரம், நுகர்வோர் சாதனங்கள், உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் என்.டி.பி.சி., கோல் இந்தியா, மாருதி சுசுகி, சேசா ஸ்டெர்லைட், டாட்டா பவர், கெயில் இந்தியா, பாரத ஸ்டேட் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாட்டா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி, டி.சி.எஸ்., பஜாஜ் ஆட்டோ உள்பட 17 நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது. அதேசமயம் ஹிண்டால்கோ, பீ.எச்.இ.எல்., பார்தி ஏர்டெல் உள்ளிட்ட 13 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. வர்த்தகம் முடியும்போது 'சென்செக்ஸ்' 76.38 புள்ளிகள் அதிகரித்து 24,374.40 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 24,524.76 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 24,326.48 புள்ளிகள் வரையிலும் சென்றது. தேசிய பங்குச் சந்தை தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிஃப்டி' 23.50 புள்ளிகள் உயர்ந்து 7,276.40 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 7,319.55 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 7,258.15 புள்ளிகளுக்கும் சென்றது. image: category:Tagging: |
| புதுமையில் ஆர்வமுள்ள கம்பெனிகளின் பட்டியலில் ஒன்பது இந்திய நிறுவனங்கள் Posted: 22 May 2014 01:05 PM PDT பிரபல அமெரிக்க வணிக பத்திரிகையான போர்ப்ஸ், புதுமையில் அதிக ஆர்வம் காட்டும் உலக நிறுவனங்களின் பட்டியல் ஒன்றை தயாரித்துள்ளது. இதில் ஒன்பது இந்திய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. புதுமையில் நிறுவனங்களின் நாட்டம் என்பது புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அறிமுகம் செய்தல், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய சந்தைகளில் களம் இறங்குதல் போன்றவற்றை குறிக்கிறது. பங்கின் விலை முதலீட்டாளர்கள் ஒரு நிறுவனப் பங்கின் தற்போதைய விலையைக் காட்டிலும் அதற்கு எவ்வளவு அதிகமாக விலையை குறிப்பிடத் தயாராக உள்ளனர் என்பதன் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தப் பட்டியலில் எரிசக்தி மற்றும் சுரங்கத் தொழில் நிறுவனங்கள் சேர்க்கப்படவில்லை. ஏனென்றால் இந்த துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பை நிர்ணயம் செய்வது சிரமமாகும். மேலும் 1,000 கோடி டாலருக்கு குறைவான மதிப்புள்ள நிறுவனங்கள், மொத்த சொத்து மதிப்பில் ஒரு சதவீதத்தை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக செலவிடும் நிறுவனங்கள் மற்றும் ஏழு ஆண்டுக்கால பங்குச் சந்தை வரலாறு கொண்ட நிறுவனங்கள்தான் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. போர்ப்ஸ் பட்டியலில் 100 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் நியூசிலாந்தை சேர்ந்த ஜீரோ முதலிடத்தைப் பிடித்துள்ளது. புதுமைக்காக இந்நிறுவனத்தின் பங்கு ஒன்றுக்கு முதலீட்டாளர்கள் 91.70 சதவீத அதிக விலை குறிப்பிட தயாராக இருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இந்த பட்டியலில் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் 31–வது இடத்தில் உள்ளது. அதே சமயம் இந்திய நிறுவனங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்நிறுவனப் பங்கிற்கு 58.7 சதவீத உயர்மதிப்பு அளிக்க முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர். பிற இந்திய நிறுவனங்கள் ஏ.பீ.பீ. இந்தியா (37), மாரிக்கோ (53), யுனைடெட் புரூவரிஸ் (60), சீமென்ஸ் இந்தியா (63), ஏஷியன் பெயிண்ட்ஸ் (76), நெஸ்லே இந்தியா (78), கோல்கேட் பாமாலிவ் (87), திவிஸ் லாப்ஸ் (99) ஆகிய இந்திய நிறுவனங்களும் போர்ப்ஸின் பெருமைமிகு பட்டியலில் இடம் பிடித்துள்ளன. category:Tagging: |
| Posted: 22 May 2014 01:02 PM PDT கொல்கத்தா தங்கம் இறக்குமதி மீதுள்ள கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியதையடுத்து ஆபரணங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் பங்கு விலை நேற்று மிகவும் உயர்ந்தது. அதே சமயம், ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை ரூ.80 குறைந்தது. டைட்டான் கம்பெனி டைட்டான் கம்பெனி பங்கின் விலை வர்த்தகத்தின் இடையே 52 வாரங்களில் இல்லாத அளவிற்கு ரூ.353.10–ஆக உயர்ந்திருந்தது. முடிவில் முந்தைய தினத்துடன் ஒப்பிடும்போது 6.7 சதவீதம் அதிகரித்து ரூ.331.40–ல் நிலை கொண்டது. ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பங்கின் விலை 13 சதவீதம் உயர்ந்து ரூ.145.35–ல் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே 52 வாரங்களில் இல்லாத அளவிற்கு ரூ.149–ஆக உயர்ந்து இருநதது. கீதாஞ்சலி ஜெம்ஸ் உள்பட பல நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது. கடந்த 2012–13–ஆம் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை வரலாறு காணாத அளவிற்கு 8,820 கோடி டாலராக உயர்ந்து இருந்தது. தங்கம் இறக்குமதியே இதற்கு முக்கிய காரணமாகும். எனவே, தங்கம் இறக்குமதி மீதான வரியை மத்திய அரசு 10 சதவீதமாக உயர்த்தியது. இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 20 சதவீதத்தை ஆபரணங்களாக மாற்றி ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை ரிசர்வ் வங்கி விதித்தது. இந்த நிபந்தனை 20:80 என்ற விதிமுறை என்று அழைக்கப்படுகிறது. இதுபோன்ற கட்டுப்பாடுகளால் 2013–14–ஆம் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 64 சதவீதம் குறைந்து 3,200 கோடி டாலராக குறைந்து இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தங்க ஆபரண நிறுவனங்களுக்கு போதுமான அளவில் தங்கம் கிடைக்காததால் தங்க ஆபரண ஏற்றுமதி குறைந்துள்ளது. எனவே, தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என இத்துறை நிறுவனங்கள் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தன. இதனை ஏற்று ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் மாதம் 20:80 விதிமுறையின் கீழ் கூடுதலாக ஐந்து வங்கிகளுக்கு தங்கம் இறக்குமதி செய்ய அனுமதி அளித்தது. வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகத்தில் பதிவு பெற்றுள்ள எஸ்.டி.எச். மற்றும் பி.டி.எச். ஆகிய சிறப்பு முகமை அமைப்புகளுக்கும் 20:80 விதிமுறையின் கீழ் தங்கம் இறக்குமதி செய்ய நேற்று முன்தினம் (புதன்கிழமை) ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. தங்கம் மீது கடன் ஆக, தங்கம் இறக்குமதி செய்வதற்கு அதிக நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் உள்நாட்டில் தங்கம் அளிப்பு அதிகரிக்கும் என வர்த்தக பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார். தங்க ஆபரண தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு தங்கம் மீது கடன் வழங்க நியமிக்கப்பட்ட வங்கிகளுக்கு அனுமதி அளிக்க ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் தங்கம் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. image: category:Tagging: |
| சர்வதேச வளர்ச்சியை விஞ்சியது உருக்கு பொருள்கள் உற்பத்தி 5.3% வளர்ச்சி Posted: 22 May 2014 12:56 PM PDT புதுடெல்லி இந்தியாவில் உருக்கு பொருள்கள் உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 5.3 சதவீதம் அதிகரித்து 66.60 லட்சம் டன்னிலிருந்து 70.15 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. உலக உருக்கு சங்கம் இந்த புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில்... ஏப்ரல் மாதத்தில் சர்வதேச அளவில் உருக்கு உற்பத்தி 1.7 சதவீதம் மட்டுமே அதிகரித்து 13.43 கோடி டன்னிலிருந்து 13.66 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது உலக அளவில் பொருளாதாரம் மந்தமாக உள்ளதை எடுத்துக்காட்டுகிறது. அதேசமயம் இந்தியாவின் உருக்கு உற்பத்தி வளர்ச்சி இதைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இது, இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப தொடங்கியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது உருக்கு பொருள்கள் பயன்பாடு 1.1 மடங்கு அதிகரிக்கும் என்பது பொருளியல் கோட்பாடாகும். நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இனிவரும் மாதங்களிலும் உருக்கு பொருள்கள் பயன்பாடு மற்றும் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உருக்கு பொருள்கள் உற்பத்தியில் சர்வதேச அளவில் நம் நாடு நான்காவது இடத்தில் உள்ளது. சீனாவின் பங்கு பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தில் உள்ள சீனா ஏப்ரல் மாதத்தில் 6.88 கோடி டன் உருக்கு பொருள்களை உற்பத்தி செய்துள்ளது. இதில் 2.1 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. உலகின் மொத்த உருக்கு உற்பத்தியில் சீனாவின் பங்கு 50 சதவீதமாக உள்ளது. ஜப்பான் நாட்டின் உருக்கு பொருள்கள் உற்பத்தி 2.5 சதவீதம் குறைந்து 89 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது. ரஷ்யாவில் உற்பத்தி 0.7 சதவீதம் அதிகரித்து 58 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் ஏப்ரல் மாதத்தில் உருக்கு பொருள்கள் உற்பத்தி 1.6 சதவீதம் குறைந்து 70 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. image: category:Tagging: |
| மின்னணு காப்பீட்டு பாலிசிகளை கட்டாயமாக்க இரிடா பரிசீலனை Posted: 22 May 2014 12:54 PM PDT நடப்பு ஆண்டு முடிவடைவதற்குள் காப்பீட்டு பாலிசிகளை மின்னணு வடிவில் வழங்குவதை கட்டாயமாக்க காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் (இரிடா) பரிசீலனை செய்து வருகிறது. ஒருங்கிணைப்பு திட்டம் 2013 செப்டம்பர் மாதம் இரிடாவின் காப்பீட்டு ஒருங்கிணைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, காப்பீடு செய்பவர்கள் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை மின்னணு வடிவில் (டீமேட் அக்கவுண்ட்) மாற்றி கொள்ளலாம். இதற்காக இரிடாவால் அங்கீகரிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளரிடம் (ரிபாசிட்டரி) மின்னணு காப்பீடு கணக்கு ஒன்றை பாலிசிதாரர் தொடங்க வேண்டும். மின்னணு காப்பீட்டு கணக்கை தொடங்குவதற்கு அல்லது மின்னணு வடிவில் பாலிசியை வைத்துக் கொள்வதற்கு பாலிசிதாரர் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. காப்பீட்டு ரிபாசிட்டரிகள் அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்குகின்றன. ஏற்கனவே உள்ள பாலிசிகளை மாற்றுவதற்கும் கட்டணம் செலுத்த தேவையில்லை. என்.எஸ்.டீ.எல்., டேட்டா பேஸ் மேனேஜ்மெண்ட், சென்ட்ரல் இன்சூரன்ஸ் ரிபாசிட்டரி, கார்வி இன்சூரன்ஸ் ரிபாசிட்டரி, எஸ்.எச்.சி.ஐ.எல். புராஜக்ட்ஸ், சி.ஏ.எம்.எஸ். ரிபாசிட்டரி சர்வீசஸ் ஆகிய ஐந்து ரிபாசிட்டரிகளுக்கு மின்னணு கணக்கை நிர்வகிக்க இரிடா அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டம் அறிமுகம் செய்து பல மாதங்கள் ஆன பிறகும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஒரு லட்சம் மின்னணு கணக்குகள் உள்ள நிலையில் சுமார் 1,000 காப்பீட்டு பாலிசிகளே மின்னணு வடிவில் வழங்கப்பட்டுள்ளன. எல்.ஐ.சி., எஸ்.பீ.ஐ., லைஃப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் இன்னும் இந்த திட்டத்தில் பங்கேற்காததே இதற்கு காரணமாகும். 10 நிறுவனங்கள் சம்மதம் தற்போது வரை 24 காப்பீட்டு நிறுவனங்களில் 10 நிறுவனங்கள் மட்டுமே பாலிசிதாரர்களுக்கு மின்னணு வடிவில் பாலிசிகளை வழங்க சம்மதித்துள்ளன. பாலிசிகளை மின்னணு வடிவில் வழங்குவது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி காப்பீட்டு நிறுவனங்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும். ஏனென்றால், பாலிசி முதிர்வு அடையும்போது மற்றும் இறப்பு இழப்பீட்டு கோரிக்கைகளின் போது ஒரிஜினல் பாலிசி தேவைப்படாது. இதனால் பாலிசிதாரர் டாக்குமெண்ட் காணாமல் போவது போன்ற இடர்பாடுகளால் பாதிக்கப்பட மாட்டார்கள் என சி.ஏ.எம்.எஸ். இன்சூரன்ஸ் ரிபாசிட்டரியின் தலைமை செயல் அதிகாரி எஸ்.வி.ராமனன் தெரிவித்தார். category:Tagging: |
| அனைத்து கோரிக்கைகளுக்கும் 20 தினங்களில் தீர்வு காண வேண்டும் கள அலுவலகங்களுக்கு இ.பி.எப்.ஓ. உத்தரவு Posted: 22 May 2014 12:50 PM PDT பி.எஃப். பணத்தை எடுப்பது உள்பட அனைத்து கோரிக்கைகளுக்கும் 20 தினங்களில் தீர்வு காண வேண்டும் என கள அலுவலகங்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இ.பி.எப்.ஓ) உத்தரவிட்டுள்ளது. மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் கே.கே.ஜலான் வெளியிட்டுள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்புகளின் செயல்திறன் குறித்த ஆய்வறிக்கையில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனுதாரர்களின் குறைகள் விரைவாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம். கோரிக்கையில் ஏதேனும் குறை இருக்கும் பட்சத்தில் அந்த மனு கிடைத்த தேதியிலிருந்து 30 தினங்களில் விண்ணப்பதாரருக்கு எழுத்துப்பூர்வ பதில் அனுப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். விதிமுறைகளின்படி சரியான காரணமின்றி ஒரு கோரிக்கை 30 நாட்களுக்குள் நிறைவேற்றப்படவில்லை என்றால், அதற்கு ஆணையரே பொறுப்பு ஆவார். இதற்காக ஆண்டு ஒன்றுக்கு அபராதமாக 12 சதவீத வட்டியை மனுதாரரின் கணக்கில் சேர்க்க வேண்டியிருக்கும். இந்த தொகை ஆணையரின் ஊதியத்திலிருந்து கழித்துக் கொள்ளப்படும். தற்போது 120 கள அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த நிதி ஆண்டில் இ.பி.எஃப். அமைப்பு 1.21 கோடி கோரிக்கைகளை நிவர்த்தி செய்துள்ளது. இவற்றுள், பி.எஃப். பணத்தை எடுப்பது, கணக்கை மாற்றுவது மற்றும் ஓய்வூதிய விண்ணப்பங்கள் அடங்கும். image: category:Tagging: |
| இந்த ஆண்டு இறுதிக்குள் மின்னணு முறை கட்டணங்கள் ரூ.1.20 லட்சம் கோடியாக உயரும் Posted: 22 May 2014 12:47 PM PDT புதுடெல்லி 2014–ஆம் ஆண்டு இறுதிக்குள் மின்னணு முறையில் செலுத்தப்படும் கட்டணங்களின் மதிப்பு ரூ.1.20 லட்சம் கோடியை எட்டும் என இந்திய இணையதள மற்றும் மொபைல் சங்கம் தெரிவித்துள்ளது. இணையதளம் மற்றும் செல்போன்களில் கடன் மற்றும் ரொக்க அட்டைகள் பயன்பாடு அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என்று கூறியுள்ள இச்சங்கம், 2013 டிசம்பர் இறுதியில் இவ்வகை கட்டணங்கள் ரூ.85,800 கோடியாக இருந்தது என குறிப்பிட்டுள்ளது. டிஜிட்டல் பேமென்ட் எனப்படும் மின்னணு முறை கட்டணத்தில் கடன் மற்றும் ரொக்க அட்டை பரிவர்த்தனைகள், இணையதள வங்கிச்சேவை, செல்போன் வாயிலாக செலுத்தப்படும் தொகை, பிரீபெய்டு ரொக்க அட்டைகள் மற்றும் இணையதளம் வாயிலான உடனடி செலுத்துகை முறைகள் அடங்கும். டெபாசிட் தொகைகள் இதில் சேர்க்கப்படவில்லை. 2013–ல் ஆன்லைனில் 8 கோடி பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றன. இதில் 53 சதவீத அளவிற்கு கடன் மற்றும் ரொக்க அட்டைகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. கடன் அட்டைகளின் பங்கு 21 சதவீதமாகவும், ரொக்க அட்டைகளின் பங்கு 32 சதவீதமாகவும் இருந்தது. பயணச்சீட்டு (ரயில், விமானம் உள்பட), ஓட்டல் அறை முன்பதிவு, சுற்றுலா போன்றவை மின்னணு கட்டண முறைகளில் 60 சதவீத பங்கினைக் கொண்டுள்ளன. அடுத்து நிதிச் சேவைகள் மற்றும் மின்னணு வர்த்தகம் அதிக பங்கினைக் கொண்டுள்ளன. நிதிச்சேவையில் வருமான வரி கணக்கு தாக்கல், காப்பீட்டு பிரிமியம், மின்சாரம் போன்ற பயன்பாட்டு கட்டணங்கள் அடங்கும். image: category:Tagging: |
| சோயாபீன் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் Posted: 22 May 2014 12:44 PM PDT சோயாபீன் விலை உயர்ந்து வருகிறது. இதனால் எதிர்காலத்தில் அதிக ஆதாயம் வேண்டி பல விவசாயிகள் சோயாபீன் சாகுபடியில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். எனவே எதிர்வரும் வேளாண் பருவத்தில் (2014 ஜூலை – 2015 ஜூன்) சோயாபீன் பயிரிடும் பரப்பளவு கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோயாபீன் ஒரு முக்கியமான எண்ணெய் வித்து. கோடை கால சாகுபடியில் இதன் பங்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது. கடந்த ஆண்டில் சோயாபீன் சாகுபடி பரப்பளவு வரலாறு காணாத அளவிற்கு 1.22 கோடி ஹெக்டேராக உயர்ந்தது. எனினும் கனமழையால் உற்பத்தி குறைந்து 1.02 கோடி டன்னாக சரிந்தது. இந்நிலையில் எதிர்வரும் பருவத்தில் சோயாபீன் சாகுபடி பரப்பளவு 4 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோயாபீன் உற்பத்தி அதிகரிப்பதால் சமையல் எண்ணெய் இறக்குமதி குறையும். மேலும் புண்ணாக்கு ஏற்றுமதியும் அதிகரிக்கும். இந்த இரண்டு அம்சங்களுமே நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுச்சேர்ப்பதாக அமையும். உலக அளவில் சமையல் எண்ணெய் இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. நடப்பு எண்ணெய் பருவத்தில் (2013 நவம்பர்– 2014 அக்டோபர்) சமையல் எண்ணெய் இறக்குமதி 4 சதவீதம் உயர்ந்து 1.08 கோடி டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இறக்குமதியாகும் சமையல் எண்ணெயில் பாமாயில்தான் அதிகமாக உள்ளது. image: category:Tagging: |
| ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிகர லாபம் ரூ.621 கோடி Posted: 22 May 2014 12:41 PM PDT ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ஒட்டுமொத்த நிகர லாபமாக ரூ.621 கோடியை ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.721 கோடியாக இருந்தது. ஆக, நிகர லாபம் 14 சதவீதம் குறைந்துள்ளது. மொத்த செயல்பாட்டு வருவாய் 24 சதவீதம் குறைந்து ரூ.6,187 கோடியிலிருந்து ரூ.4,708 கோடியாக குறைந்துள்ளது. நிகர வருவாய் ரூ.3,692 கோடியிலிருந்து ரூ.3,600 கோடியாக குறைந்துள்ளது. category:Tagging: |
| கடந்த 2013–14–ஆம் நிதி ஆண்டில் அன்னிய நேரடி முதலீடு 8 சதவீதம் உயர்ந்தது Posted: 22 May 2014 12:40 PM PDT புதுடெல்லி இந்தியாவில் கடந்த 2013–14–ஆம் நிதி ஆண்டில் அன்னிய நேரடி முதலீடு அதற்கு முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் 8 சதவீதம் அதிகரித்து 2,240 கோடி டாலரிலிருந்து 2,430 கோடி டாலராக உயர்ந்துள்ளது. உச்சவரம்பு அன்னிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 2013 ஆகஸ்டு 1–ந் தேதி தொலைத் தொடர்பு உள்ளிட்ட 12 துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை உயர்த்தியது. இந்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க தொடங்கியுள்ளது. மார்ச் மாதத்தில் இந்த முதலீடு சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்து 152 கோடி டாலரிலிருந்து 353 கோடி டாலராக உயர்ந்துள்ளது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் முறையே 1.5 சதவீதம் மற்றும் 12.29 சதவீதம் உயர்ந்துள்ளது. சேவைத்துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடுவதில் சுற்றுலா, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், விருந்தோம்பல் உள்ளிட்ட சேவைகளின் பங்கு 55 சதவீதமாக உள்ளது. கடந்த 2013–14–ஆம் நிதி ஆண்டில் 222 கோடி டாலர் அன்னிய நேரடி முதலீட்டை ஈர்த்து இத்துறை முதலிடத்தில் உள்ளது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. எனவே, நடப்பு நிதி ஆண்டில் மோட்டார் வாகனங்கள் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இத்துறையில் முதலீடு செய்வதில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. இதனை உறுதிப்படுத்துகின்ற வகையில் கடந்த நிதி ஆண்டில் மோட்டார் வாகனத் துறை ஈர்த்த அன்னிய நேரடி முதலீடு 151 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, வாகனத் துறை இரண்டாவது இடத்தில் உள்ளது. 130 கோடி டாலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்த்து தொலைத் தொடர்புத் துறை மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மருந்து துறைக்கு வளமான வர்த்தக வாய்ப்பு உள்ளது. இதனால், இத்துறை நிறுவனங்களுக்கிடையில் இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. மருந்து துறை ஈர்த்த அன்னிய நேரடி முதலீடு 127 கோடி டாலராக உள்ளது. கட்டுமானத் துறையில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு 122 கோடி டாலராக உள்ளது. சிங்கப்பூர் முதலிடம் 'கார்' எனப்படும் பொது வரி தவிர்ப்பு எதிர் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளதால், மொரிஷியஸ் நாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் முதலீடு மேற்கொள்வதில் ஆர்வம் குறைந்துள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் அதிக அளவில் அன்னிய நேரடி முதலீட்டை மேற்கொள்வதில் மொரிஷியஸ் நாடு இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளது. இந்நாட்டு நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு 485 கோடி டாலராக குறைந்துள்ளது. 598 கோடி டாலர் முதலீட்டை மேற்கொண்டு சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் மேற்கொண்ட முதலீடு முறையே 321 கோடி டாலர் மற்றும் 227 கோடி டாலராக உள்ளது. அன்னிய நேரடி முதலீட்டை பெறுவதில் உலகின் முன்னணி மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. அடிப்படை கட்டமைப்பு தங்கு தடையற்ற பொருளாதார வளர்ச்சிக்கு சாலை போக்குவரத்து, துறைமுகம், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நன்றாக இருக்க வேண்டும். 12–வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012–17) இதற்காக 1 லட்சம் கோடி டாலர் முதலீடு தேவைப்படுகிறது. இதில் கணிசமான அளவை வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு வாயிலாக ஈர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் அன்னிய முதலீடு குறைந்ததையடுத்து தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. பாரதீய ஜனதா அரசு மத்தியில் ஆட்சி பொறுப்பு ஏற்கும் பா.ஜனதா அரசு இந்த முதலீட்டை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நடப்பு நிதி ஆண்டில் இந்த முதலீடு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத னால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயரும். வெளிநாட்டு நிறுவனங்களின் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ள முடியும். image: category:Tagging: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |