Daily Thanthi |
- தமிழக அமைச்சர்கள் எஸ்.தாமோதரன், கே.டி.பச்சைமால், பி.வி.ரமணா நீக்கம்: 3 புதிய அமைச்சர்கள் நியமனம்; அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி.வேலுமணி, கோகுல இந்திரா இன்று பதவி ஏற்பு
- ஐ.பி.எல். கிரிக்கெட் சென்னை–கொல்கத்தா அணிகள் இன்று மோதல் இன்னொரு ஆட்டத்தில் பெங்களூர்–ஐதராபாத்
- ஐ.பி.எல். கிரிக்கெட் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ராஜஸ்தான் தோல்வி
- ஐ.பி.எல். கிரிக்கெட் பஞ்சாப் அணியின் ஆதிக்கம் தொடருகிறது டெல்லியை விரட்டியடித்தது
- உலக பேட்மிண்டன் போட்டி இந்திய பெண்கள் அணிக்கு 2–வது வெற்றி
- ‘பார்முலா–1’ கார் பந்தய முன்னாள் சாம்பியன் மரணம்
- வங்காளதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராக இலங்கை முன்னாள் வீரர் ஹதுருசிங்கா நியமனம்
- அடிக்கட்டுமானம் அசைக்க முடியாததாக இன்றும் உள்ளது திட்டமிட்டு செயல்பட்டால் 6 மாதத்தில் தி.மு.க. புத்துணர்ச்சி பெறும் கி.வீரமணி அறிக்கை
- அல்போன்சா மாம்பழம் மீதான தடைக்கு பிரிட்டனில் உள்ள இந்தியர்கள் எதிர்ப்பு
- பல பங்குகள் 52 வார கால உயர்வை எட்டின பொதுத்துறையைச் சேர்ந்த நிறுவன பங்குகளின் விலை ‘கிடுகிடு’ உயர்வு
| Posted: 19 May 2014 01:39 PM PDT சென்னை, தமிழக கவர்னர் மாளிகையில் இருந்து நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– அமைச்சரவை மாற்றம் தமிழக அமைச்சரவையில் இருந்து வேளாண்மைத்துறை அமைச்சர் எஸ்.தாமோதரன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமால், வருவாய்த்துறை அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரை நீக்க வேண்டும் என்ற முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையை தமிழக கவர்னர் ஏற்றுக்கொண்டுள்ளார். இதுபோல, அமைச்சரவையில் கலசபாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ. எஸ்.பி.வேலுமணி, அண்ணாநகர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.கோகுல இந்திரா ஆகியோரை சேர்க்க வேண்டும் என்ற முதல்–அமைச்சரின் பரிந்துரையை கவர்னர் ஏற்றுக்கொண்டுள்ளார். அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு வேளாண்துறை அதன்படி, முதல்–அமைச்சர் பரிந்துரையின் பேரில் கீழ்க்கண்ட இலாகாக்கள் புதிய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இதுவரை எஸ்.தாமோதரன் பொறுப்பில் இருந்த வேளாண்மை, வேளாண் பொறியியல், வேளாண் பணி கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத்தீர்வை, கரும்பு பயிர் மேம்பாடு மற்றும் தரிசுநில மேம்பாடு ஆகிய துறைகள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கு ஒதுக்கப்படுகிறது. அவர் வேளாண்மை துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார். இதுவரை அமைச்சர் கே.பி.முனுசாமி பொறுப்பில் இருந்த நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து யூனியன்கள், வறுமை ஒழிப்பு திட்டங்கள், ஊரக கடன்கள், நகர்ப்புற மற்றும் ஊரக குடிநீர் வழங்கல், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தம், லஞ்ச ஒழிப்பு ஆகிய துறைகள் எஸ்.பி.வேலுமணிக்கு ஒதுக்கப்படுகிறது. இனி அவர் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார். கே.பி.முனுசாமிக்கு தொழிலாளர் நலன் இதுவரை கே.டி.பச்சைமால் பொறுப்பில் இருந்த தொழிலாளர் நலன், மக்கள்தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, பத்திரிகை காகித கட்டுப்பாடு மற்றும் ஊரக, கிராமிய வேலைவாய்ப்பு ஆகிய துறைகள் கே.பி.முனுசாமிக்கு ஒதுக்கப்படும். அவர் இனி தொழிலாளர் நலன் அமைச்சர் என அழைக்கப்படுவார். இதுவரை பி.வி.ரமணா பொறுப்பில் இருந்த வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை கலெக்டர்கள், எடைகள் மற்றும் அளவைகள், கடன் வழங்கல் குறித்த சட்டம் உள்பட கடன் நிவாரணம், சீட்டுகள், கம்பெனிகள் பதிவு ஆகிய துறைகள் இனி ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கப்படும். அவர் வருவாய்த்துறை அமைச்சர் என அழைக்கப்படுவார். கோகுல இந்திராவுக்கு கைத்தறித்துறை இதுவரை டாக்டர் எஸ்.சுந்தர்ராஜ் பொறுப்பில் இருந்த கைத்தறி மற்றும் ஜவுளித்துறை எஸ்.கோகுல இந்திராவுக்கு ஒதுக்கப்படுகிறது. அவர் இனி கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் என அழைக்கப்படுவார். இதுவரை ஆர்.பி.உதயகுமார் பொறுப்பில் இருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை டாக்டர் எஸ்.சுந்தர்ராஜூக்கு ஒதுக்கப்படும். அவர் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையின் அமைச்சர் என அழைக்கப்படுவார். இன்று பதவி ஏற்பு புதிய அமைச்சர்களின் பதவி ஏற்பு விழா இன்று (செவ்வாய்கிழமை) மாலை 4.40 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெறும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது. தமிழக அமைச்சரவையில் இது 13–வது முறையாக மேற்கொள்ளப்படும் மாற்றமாகும். கடந்த 9–12–2013 அன்று அமைச்சர் கே.வி.ராமலிங்கம் நீக்கப்பட்டு, புதிய அமைச்சராக ஆர்.பி.உதயகுமார் நியமனம் செய்யப்பட்ட அறிவிப்பு வெளியாகியது. அதே நேரத்தில், அமைச்சர் பி.வி.ரமணா, எம்.சி.சம்பத், தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோருக்கு இலாகாக்கள் மாற்றப்பட்டன. உதயகுமார் 11–ந் தேதி பதவியேற்றார். News Category:Hot Topic Icon : News Group Category: |
| ஐ.பி.எல். கிரிக்கெட் சென்னை–கொல்கத்தா அணிகள் இன்று மோதல் இன்னொரு ஆட்டத்தில் பெங்களூர்–ஐதராபாத் Posted: 19 May 2014 01:23 PM PDT கொல்கத்தா, ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்–ஐதராபாத் சன் ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ்–கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூர்–ஐதராபாத் 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கிறது. ஐதராபாத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் 46–வது லீக் ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்–டேரன் சேமி தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. அடுத்த சுற்று வாய்ப்பு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5–வது இடத்துடன் அடுத்த சுற்று (பிளே–ஆப்) வாய்ப்பில் நீடிக்கிறது. அந்த அணி கடைசி லீக் ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி இருந்தது. ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 6–வது இடத்தில் உள்ளது. முந்தைய லீக் ஆட்டங்களில் கொல்கத்தா, பஞ்சாப், மும்பை அணிகளிடம் முறையே அடுத்தடுத்து தோல்வி கண்டதன் மூலம் ஐதராபாத் அணியின் அடுத்த சுற்று கனவு கலைந்து போனது. அதிரடியை சமாளிக்குமா? அதிரடி பேட்ஸ்மேன்களான கெய்ல், டிவில்லியர்ஸ், யுவராஜ்சிங் ஆகியோரையும், அபாயகரமான பந்து வீச்சாளர்களான ஸ்டார்க், முரளிதரன் ஆகியோரையும் உள்ளடக்கிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது அடுத்த சுற்று வாய்ப்பை தொடர்ந்து தக்கவைத்து கொள்ள முழு வேகத்தையும் களத்தில் காட்டும். பேட்டிங்கில் ஷிகர்தான், ஆரோன் பிஞ்ச், நமன் ஓஜா, லோகேஷ் ராகுலையும், பவுலிங்கில் ஸ்டெயின், புவனேஷ்வர்குமார், அமித்மிஸ்ரா, டேரன் சேனி ஆகியோரையும் நம்பி இருக்கும் ஐதராபாத் அணி இன்றைய ஆட்டத்தில் தாக்குப்பிடிப்பது கடினமான காரியமாக இருக்கலாம். ஐ.பி.எல். போட்டியில் இரு அணிகளும் இதுவரை 3 முறை மோதி இருக்கின்றன. இதில் 2 முறை பெங்களூர் அணி வெற்றி கண்டது. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. இந்த சீசனில் நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வென்று இருந்தது. அதற்கு பழிவாங்கி பெருமை கொள்ள ஐதராபாத் அணி முயற்சிக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. சென்னை–கொல்கத்தா மோதல் கொல்கத்தாவில் இரவு 8 மணிக்கு நடைபெறும் இன்னொரு லீக் (47–வது) ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2–வது இடத்தில் இருப்பதுடன், அடுத்த சுற்று வாய்ப்பையும் ஏற்கனவே உறுதி செய்து விட்டது. கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை அணி, பெங்களூரிடம் தோல்வி கண்டு இருந்தது. கொல்கத்தா அணி 11 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4–வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி 4 லீக் ஆட்டங்களிலும் தொடர்ந்து வெற்றி கண்டு அடுத்த சுற்று வாய்ப்பில் தன்னை தக்கவைத்து கொண்டு இருப்பதுடன் வலுவானதாகவும் உருவெடுத்து வருகிறது. நேரடி ஒளிபரப்பு சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களை கொண்ட இந்த இரு அணிகளும் மோதும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது எனலாம். ஐ.பி.எல். போட்டியில் இரு அணிகளும் இதுவரை 13 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் சென்னை அணி 9 முறையும், கொல்கத்தா அணி 4 முறையும் வென்று இருக்கின்றன. இன்றைய ஆட்டங்கள் சோனி சிக்ஸ் மற்றும் சோனி செட்மேக்ஸ் சேனலில் நேரடியாக ஓளிபரப்பு செய்யப்படுகிறது. image: category:Tagging: |
| ஐ.பி.எல். கிரிக்கெட் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ராஜஸ்தான் தோல்வி Posted: 19 May 2014 01:23 PM PDT ஆமதாபாத், ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி கண்டது. ஐ.பி.எல். கிரிக்கெட் 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே–ஆப்' என்ற இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெறும். இந்த போட்டியின் 44–வது லீக் ஆட்டம் ஆமதாபாத்தில் நேற்று நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ்–ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ஷேன் வாட்சன் காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் விளையாடாத ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஷேன் வாட்சன் களம் இறங்கினார். கடந்த ஆட்டத்தில் இடம் பெற்ற பென் கட்டிங் நீக்கப்பட்டார். ரஹானே, ஸ்டீவன் சுமித், பிரவின் தாம்பே ஆகியோருக்கு பதிலாக உன்முக்சந்த், பிராட் ஹாட்ஜ், அங்கித் ஷர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் கோரி ஆண்டர்சன், மலிங்கா ஆகியோருக்கு பதிலாக மைக் ஹஸ்ஸி, கிரிஷ்மர் சான்டோகி ஆகியோர் இடம் பிடித்தனர். சிதம்பரம் கவுதமுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பணியை ஆதித்ய தாரே கவனித்தார். ஸ்ரீரியாஸ் கோபால் அறிமுக வீரராக களம் கண்டார். நல்ல தொடக்கம் 'டாஸ்' ஜெயித்த மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் ஷர்மா தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக மைக் ஹஸ்ஸி, சிம்மோன்ஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து ஆடி ரசிகர்களுக்கு விருந்து படைத்ததுடன் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினார்கள். இந்த ஜோடியை விரைவில் பிரிக்க முடியாமல் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சாளர்கள் திணறினார்கள். 12.2 ஓவர்களில் மும்பை அணி 100 ரன்னை எட்டியது. மைக் ஹஸ்ஸி அரை சதத்தை கடந்தார். அவரை தொடர்ந்து சிம்மோன்ஸ்சும் அரை சதத்தை தாண்டினார். அணியின் ஸ்கோர் 14.3 ஓவர்களில் 120 ரன்னாக இருந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. சிறப்பாக ஆடிய சிம்மோன்ஸ் 62 ரன்னில் (51 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன்) அங்கித் ஷர்மா பந்து வீச்சில் கெவோன் கூப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதே ஓவரில் கடைசி பந்தில் மைக் ஹஸ்ஸியும் 56 ரன்னில் (39 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன்) நடையை கட்டினார். மும்பை 178 ரன்கள் இதனை அடுத்து பொல்லார்ட்டுடன் ஜோடி சேர்ந்த ரோகித் ஷர்மா அதிரடி காட்டினார். ஒரு ரன்னில் இருக்கையில் ரன்–அவுட்டில் இருந்து தப்பிய பொல்லார்ட் நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்தார். கடைசி பந்தில் ரோகித் ஷர்மா (19 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 40 ரன்கள்) ரன்–அவுட் ஆனார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. பொல்லார்ட் 12 பந்துகளில் ஒரு சிக்சருடன் 14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மும்பை அணி வெற்றி பின்னர் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்த வண்ணம் இருந்தன. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் கருண் நாயர் 48 ரன்னும் (24 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன்), பிராட் ஹாட்ஜ் 40 ரன்னும் (30 பந்துகளில் 3 சிக்சருடன்) எடுத்து ஆட்டம் இழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார்கள். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பவுல்க்னெர் 21 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 31 ரன்னும், ரஜத் பாட்டியா 4 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 6 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கெவோன் கூப்பர் அடித்த பந்தை பொல்லார்ட் பவுண்டரி எல்லையில் கோட்டை தொடாமல் சமயோகிதமாக சமாளித்து அருமையாக கேட்ச் செய்து ஆட்டம் இழக்க வைத்து அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தார். மும்பை வீரர் மைக் ஹஸ்ஸி ஆட்டநாயகன் விருது பெற்றார். 5–வது தோல்வி 12–வது ஆட்டத்தில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சந்தித்த 5–வது தோல்வி இதுவாகும். 11–வது ஆட்டத்தில் விளையாடிய மும்பை அணிக்கு இது 4–வது வெற்றியாகும். ஸ்கோர்போர்டு மும்பை இந்தியன்ஸ் டேவிட் ஹஸ்ஸி (சி) கெவோன் கூப்பர் (பி) அங்கித் ஷர்மா 56 சிம்மோன்ஸ் (சி) கெவோன் கூப்பர் (பி) அங்கித் ஷர்மா 62 பொல்லார்ட் (நாட்–அவுட்) 14 ரோகித்ஷர்மா (ரன்–அவுட்) 40 எக்ஸ்டிரா 6 மொத்தம் (20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு) 178 விக்கெட் வீழ்ச்சி: 1–120, 2–122, 3–178. பந்து வீச்சு விவரம்: அங்கித் ஷர்மா 4–0–23–2 குல்கர்னி 4–0–27–0 பவுல்க்னெர் 4–0–47–0 கெவோன் கூப்பர் 3–0–27–0 ஸ்டூவர்ட் பின்னி 1–0–12–0 ரஜத்பாட்டியா 4–0–39–0 ராஜஸ்தான் ராயல்ஸ் கருண்நாயர் (சி) கிரிஷ்மர் சான்டோகி (பி) ஹர்பஜன் 48 உன்முக்சந்த் (சி) மைக் ஹஸ்ஸி (பி) பிரக்யான் ஓஜா 2 ஷேன் வாட்சன் (சி) அம்பத்திராயுடு (பி) பிரக்யான் ஓஜா 5 சஞ்சு சாம்சன் (சி) அம்பத்தி ராயுடு (பி) சான்டோகி 2 கெவோன் கூப்பர் (சி) பொல்லார்ட் (பி) ஹர்பஜன் 5 அங்கித் ஷர்மா (சி) அம்பத்திராயுடு (பி) ஸ்ரீரியாஸ் கோபால் 4 ஸ்டூவர்ட் பின்னி (ஸ்டம்பிங்) ஆதித்ய தாரே (பி) ஸ்ரீரியாஸ்கோபால் 2 பிராட் ஹாட்ஜ் (சி) ரோகித்ஷர்மா (பி) சான்டோகி 40 பவுல்க்னெர் (நாட்–அவுட்) 31 ரஜத்பாட்டியா (நாட்–அவுட்) 6 எக்ஸ்டிரா 8 மொத்தம் (20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு) 153 விக்கெட் வீழ்ச்சி: 1–17, 2–38, 3–42, 4–61, 5–66, 6–69, 7–75, 8–144. பந்து வீச்சு விவரம்: ஜஸ்பிரித் பம்ரா 3–0–23–0 சான்டோகி 4–0–50–2 பிரக்யான் ஓஜா 4–0–30–2 பொல்லார்ட் 1–0–11–0 ஹர்பஜன் 4–0–13–2 ஸ்ரீரியாஸ்கோபால் 4–0–25–2 image: category: |
| ஐ.பி.எல். கிரிக்கெட் பஞ்சாப் அணியின் ஆதிக்கம் தொடருகிறது டெல்லியை விரட்டியடித்தது Posted: 19 May 2014 01:12 PM PDT புதுடெல்லி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை விரட்டியடித்து தனது ஆதிக்கத்தை தொடர்கிறது. 4 வீரர்கள் மாற்றம் 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு டெல்லியில் நடந்த 45–வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்–டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் சந்தித்தன. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஜான்சனுக்கு பதிலாக ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டார். டெல்லி டேர்டெவிஸ் அணியில் ராஸ் டெய்லர், ஷபாஸ் நதீம், ராகுல் சுக்லா, சித்தார்த் கவுல் ஆகியோருக்கு பதிலாக பார்னல், முககது ஷமி, உனட்கட், எம்.விஜய் இடம் பெற்றனர். கெவின் பீட்டர்சன் 49 ரன்கள் 'டாஸ்' ஜெயித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் ஜார்ஜ் பெய்லி, டெல்லி அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக எம்.விஜய், கேப்டன் கெவின் பீட்டர்சன் ஆகியோர் களம் இறங்கினார்கள். விஜய் 5 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து தினேஷ் கார்த்திக், கெவின் பீட்டர்சனுடன் இணைந்தார். இருவரும் அடித்து ஆடினார்கள். இதனால் அணியின் ரன் விகிதம் வேகமாக உயர்ந்தது. அதிரடியாக ஆடிய கெவின் பீட்டர்சன் 32 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 49 ரன் எடுத்த நிலையில் அக்ஷர் பட்டேல் பந்து வீச்சில் போல்டு ஆனார். தினேஷ் கார்த்திக் 69 ரன்கள் இதனை அடுத்து களம் கண்ட டுமினி (17 ரன்கள்), கேதர் ஜாதவ் (0), மயங்க் அகர்வால் (6 ரன்கள்) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள். நிலைத்து நின்று ஆடிய தினேஷ் கார்த்திக் 44 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 69 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த பார்னல் 2 ரன்னில் வெளியேறினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. மனோஜ் திவாரி 10 ரன்னுடனும், முகமது ஷமி ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணி தரப்பில் சந்தீப் ஷர்மா, ஹென்ரிக்ஸ் தலா 3 விக்கெட்டும், அக்ஷர் பட்டேல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பஞ்சாப் அணி வெற்றி பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் மனன் வோரா 42 ரன்னிலும் (19 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன்) ஷேவாக் 23 ரன்னிலும், மேக்ஸ்வெல் 14 ரன்னிலும், டேவிட் மில்லர் 2 ரன்னிலும், விரித்திமான் சஹா 13 ரன்னிலும், ஜார்ஜ் பெய்லி 6 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அக்ஷர் பட்டேல் 35 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 42 ரன்னும், ரிஷி தவான் 5 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 8 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 11–வது ஆட்டத்தில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 9–வது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டெல்லி அணி 10–வது தோல்வி கண்டு கடைசி இடத்தில் நீடிக்கிறது. image: category:Tagging: |
| உலக பேட்மிண்டன் போட்டி இந்திய பெண்கள் அணிக்கு 2–வது வெற்றி Posted: 19 May 2014 01:07 PM PDT புதுடெல்லி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக ஆண்கள் (தாமஸ் கோப்பை) மற்றும் பெண்கள் (உபேர் கோப்பை) அணிகளுக்கான பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. போட்டி 3 ஒற்றையர் மற்றும் இரண்டு இரட்டையர் ஆட்டங்களை கொண்டதாகும். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 16 அணிகள் கலந்து கொண்டுள்ளன. அவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும். இதன் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி, கொரியாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2–3 என்ற கணக்கில் கொரியாவிடம் தோல்வி கண்டது. இந்திய அணி தொடர்ந்து சந்தித்த 2–வது தோல்வி இதுவாகும். முதல் ஆட்டத்தில் மலேசியாவிடம் வீழ்ந்து இருந்தது. இந்திய வீரர்களில் காஷ்யாப், குருசாய்தத் வெற்றி கண்டனர். ஸ்ரீகாந்த் தோல்வியால் இந்திய அணி வெற்றி வாய்ப்பு பறிபோனது. பெண்கள் பிரிவில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி, ஹாங்காங்கை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3–2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து, ஜூவாலா கட்டா–அஸ்வினி ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் வெற்றி கண்டனர். இந்திய அணி தொடர்ந்து பெற்ற 2–வது வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் கனடாவை தோற்கடித்து இருந்தது. category:Tagging: |
| ‘பார்முலா–1’ கார் பந்தய முன்னாள் சாம்பியன் மரணம் Posted: 19 May 2014 01:03 PM PDT சிட்னி, ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் பார்முலா–1 கார் பந்தய சாம்பியனான ஜாக் பாப்ஹம் நேற்று தனது வீட்டில் மரணம் அடைந்தார். 88 வயதான பாப்ஹம் 1959, 1960, 1966 ஆகிய ஆண்டுகளில் பார்முலா–1 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 126 கிராண்ட்பிரீ பந்தயங்களில் பங்கேற்று இருக்கும் பாப்ஹம் 14 பந்தயங்களில் முதலிடம் பிடித்துள்ளார். பாப்ஹம்மின் மகன்கள் ஜெப், கேரி, டேவிட் ஆகியோரும் கார் பந்தயங்களில் பங்கேற்று இருக்கிறார்கள். தனது சொந்த பெயரில் கார் பந்தய அணியை நடத்தி சாம்பியன் பட்டத்தை வென்ற ஒரே வீரர் பாப்ஹம் என்பது குறிப்பிடத்தக்கது. image: category:Tagging: |
| வங்காளதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராக இலங்கை முன்னாள் வீரர் ஹதுருசிங்கா நியமனம் Posted: 19 May 2014 12:54 PM PDT டாக்கா, வங்காளதேசத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி மோசமான தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து தலைமை பயிற்சியாளராக இருந்த ஷேன் ஜூர்ஜென்சென் கடந்த மாதம் தனது பதவியை விட்டு விலகினார். இந்த நிலையில் வங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சன்டிகா ஹதுருசிங்கா நியமிக்கப்பட்டு இருக்கிறார். அடுத்த மாதம் அவர் பயிற்சியாளர் பணியை ஏற்க இருக்கிறார். ஹதுருசிங்கா 1990–ம் ஆண்டுகளில் 26 டெஸ்ட் மற்றும் 35 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். தற்போது நியூ சவுத் வேல்ஸ் அணியின் (ஆஸ்திரேலியா) உதவி பயிற்சியாளராக இருந்து வருகிறார். category: |
| Posted: 19 May 2014 12:23 PM PDT சென்னை, தி.மு.க.வின் அடிக்கட்டுமானம் அசைக்க முடியாததாக இன்றும் உள்ளது என்றும், திட்டமிட்டு செயல்பட்டால் 6 மாதத்தில் தி.மு.க. புத்துணர்ச்சி பெற்று விட முடியும் என்றும் கி.வீரமணி கூறியுள்ளார். இது குறித்து திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தி.மு.க.வுக்கு தோல்வி ஏன்? பாராளுமன்ற தேர்தலில் 24 சதவிகித வாக்குகள் பெற்றும் தி.மு.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத நிலை. தி.மு.க.வுக்கு இது ஒன்றும் முதன் முறை அல்ல. ஏற்கெனவே நடந்த சில பொது தேர்தல்களில் தி.மு.க.வுக்கு இப்படி நிகழ்ந்துள்ளது என்பது உலகறிந்த உண்மை. பிறகு அதிலிருந்து மீண்டு, விழுந்த வேகத்திலேயே எழுந்தும் வந்துள்ளது. தற்போது தி.மு.க. அடைந்த தோல்வியை போலவே, அ.தி.மு.க.வும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது, பிறகு மாறிய நிலையில் இப்படி வெற்றியும் பெற்றுள்ளது. எனவே, இந்த முடிவுகளை மட்டும் முன்னிறுத்தி கொண்டு 'தி.மு.க.வின் கதையே முடிந்துவிட்டது' என்று கூவுவது, குதூகலிப்பது, கும்மாளமிடுவது ஒரு தற்காலிக மகிழ்ச்சி படலமே தவிர, நிரந்தரமாகி விடாது. காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு தணியாத கோபம், வெறுப்பு நாளும் வளர்ந்ததே தவிர, குறையவே இல்லை. காங்கிரசோடு கூட்டு சேர்ந்தவர்கள் மீதும் கோபம் இதுதான் அவர்களை எதிர்க்கட்சி தகுதியுடன் கூட வராத அளவுக்குத் தாழ்த்தி விட்டது. தி.மு.க.விற்கு உள்ள வாக்கு வங்கி சரியா விட்டாலும் கூட, புதிதாக அவர்களை ஆதரிக்க வேண்டிய மக்கள் காங்கிரசுக்கு உதவியவர்கள் என்ற கோபத்தில் தி.மு.க.வையும் தண்டித்துள்ளனர். 6 மாதத்தில் புத்துணர்ச்சி புதிய இணையதள இளையர்களான வாக்காளர்கள் மேலெழுந்த வாரியான திட்டமிட்ட வளர்ச்சிப் பேச்சு, மாற்றம் தேவை, ஊழல் ஒழிப்பு என்பது போன்றவைகளுக்கே முன்னுரிமை கொடுத்தனர். காங்கிரஸ், தி.மு.க.வை அவர்கள் பிரித்துப்பார்க்கவே தயாராக இல்லை. தி.மு.க. அடிக்கட்டுமானம் அசைக்க முடியாததாக இன்றும் உள்ளது என்பதில் அய்யமில்லை. இந்த முடிவுகளை அறை கூவலாக எடுத்துக்கொண்டால், திட்டமிட்டுச் செயல்பட்டால் நிச்சயம் ஆறு மாதங்களில் இயக்கம் புத்தெழுச்சி பெற்று விட முடியும். தி.மு.க. தனது அணுகுமுறையிலும், அமைப்பு ரீதியாகவும், ஆழ்ந்து சிந்தித்து இப்போதே முடிவுகளை அவை யாருக்கு எவ்வளவு கசப்பானவைகளாக இருந்தபோதிலும் எடுக்க தவறக்கூடாது என்பதே உரிமையுடன் நாம் விடுக்கும் வேண்டுகோள் ஆகும். நட்டம் யாருக்கு? தி.மு.க.வை திட்டமிட்டு பலவீனப்படுத்தினால், அதனால் ஏற்படும் நட்டம் தி.மு.க.வுக்கு அல்ல. திராவிடர் இன நலத்திற்கும், எதிர்கால வளர்ச்சிக்கும், சமூக நீதிக்கும், பண்பாட்டு படையெடுப்பை முறியடிக்கும் முனைப்புடன் போராட வேண்டி உணர்வுகளுக்கும் ஏற்படுவதாக அமையும். இவ்வாறு அறிக்கையில் கி.வீரமணி கூறியுள்ளார். image: category:News Group Category: |
| அல்போன்சா மாம்பழம் மீதான தடைக்கு பிரிட்டனில் உள்ள இந்தியர்கள் எதிர்ப்பு Posted: 19 May 2014 12:15 PM PDT இந்தியாவின் அல்போன்சா மாம்பழங்களுக்கு ஐரோப்பாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் உள்ள இந்தியர்கள் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய யூனியன் 28 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய யூனியன், கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவின் உயர்தர அல்போன்சா மாம்பழ இறக்குமதி மே மாதத்திலிருந்து நிறுத்தப்படும் என தெரிவித்தது. இந்திய மாம்பழங்களில் பூச்சித் தொற்று இருப்பதாக கூறி 2015 டிசம்பர் மாதம் வரை தடை விதிக்கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்தது. மே 1–ந் தேதி இந்த தடை அமலுக்கு வந்தது. அதற்கு முன்பே மாம்பழம் இறக்குமதி மீதான தடையை நீக்குமாறு இந்திய அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் ஐரோப்பா செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள இந்தியர்கள் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்காக அங்கு ஒரு கையெழுத்து இயக்கமே நடைபெற்றுள்ளது. 2,300–க்கும் அதிகமான இந்தியர்கள் கையொப்பமிட்ட மனு ஒன்று பிரிட்டன் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் அல்போன்சா மீதான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஐரோப்பாவிலேயே இங்கிலாந்தில்தான் இந்திய மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அந்த நாட்டின் 6 கோடி மக்கள்தொகையில் 14 லட்சம் இந்தியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2013–ஆம் ஆண்டில் மட்டும் இந்தியர்கள் உள்பட இங்கிலாந்து குடிமக்கள் அனைவரும் 1.20 கோடி மாம்பழங்களை ருசித்து மகிழ்ந்ததாக தெரிகிறது. இந்த ஆண்டில் இந்தியாவில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நேரத்தில் அங்கு தடை அமலுக்கு வந்துள்ளது. 2015 டிசம்பர் வரை நீடிக்க உள்ள தடையால் பிரிட்டனில் உள்ள பழ விற்பனையாளர்களுக்கு 1.68 கோடி டாலர் அளவிற்கு நஷ்டம் ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. உற்பத்தியில் முதலிடம் சர்வதேச அளவில் மாம்பழ உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலகின் மொத்த மாம்பழ மகசூலில் இந்தியாவின் பங்கு சுமார் 50 சதவீதமாகும். 2014–ஆம் ஆண்டில் நம் நாட்டில் 16 லட்சம் டன் மாம்பழங்கள் விளையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த அளவில் 60 ஆயிரம் டன் மாம்பழங்கள் ஏற்றுமதியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்றுமதியாகும் மாம்பழங்களில் 80 சதவீதம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கிறது. category:Tagging: |
| பல பங்குகள் 52 வார கால உயர்வை எட்டின பொதுத்துறையைச் சேர்ந்த நிறுவன பங்குகளின் விலை ‘கிடுகிடு’ உயர்வு Posted: 19 May 2014 12:13 PM PDT மும்பை திங்கள்கிழமை பங்கு வர்த்தகத்தில் பொதுத் துறையைச் சேர்ந்த நிறுவன பங்குகளின் விலை 'கிடுகிடு'வென உயர்ந்தது. பல நிறுவனங்களின் பங்கு விலை 52 வார கால உயர்வை எட்டின. நீண்ட காலம் பங்குச் சந்தைகளில் சுணங்கியிருந்த பொதுத் துறை பங்குகளுக்கு தற்போது விடிவு காலம் பிறந்து விட்டதாக பங்குச் சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். எம்.எம்.டி.சி. கடந்த ஆண்டில் எம்.எம்.டி.சி. நிறுவனப் பங்கின் விலை அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடந்தது. ரூ.600–க்கு மேல் இருந்த இப்பங்கின் விலை மிக குறுகிய காலத்தில் இரட்டை இலக்க அளவிற்கு வீழ்ச்சி கண்டது. நீண்ட காலம் ரூ.45 என்ற அளவிலேயே இருந்து வந்த இப்பங்கு அண்மைக் கால பங்கு வர்த்தக எழுச்சியில் படிப்படியாக ஏற்றம் காணத் தொடங்கியது. நேற்றைய தினம் வர்த்தகம் முடியும்போது இப்பங்கின் விலை ரூ.74.10–ல் நிலை பெற்றது. முந்தைய வர்த்தக தினத்தில் விலை ரூ.61.75–ஆக இருந்தது. என்.எம்.டீ.சி. நிறுவனப் பங்கின் விலை வர்த்தகத்தின் தொடக்கத்தில் ரூ.161.10–க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.171.65–க்கு சென்றது. இது 52 வார கால உயர்வு ஆகும். குறைந்தபட்சமாக ரூ.159.25–க்கு சென்றது. இறுதியில் ரூ.169.25–ல் நிலை கொண்டது. செயில் செயில் நிறுவனப் பங்கின் விலை வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.87.40–க்கு சென்றது. இது 52 வார கால உயர்வு ஆகும். குறைந்தபட்சமாக ரூ.79–க்கு சென்றது. இறுதியில் ரூ.86.25–ல் நிலை கொண்டது. கோல் இந்தியா பங்கின் விலை தொடக்கத்தில் ரூ.349.75–க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.394.25–க்கு சென்றது. இது 52 வார கால உயர்வு ஆகும். இறுதியில் ரூ.388.95–ல் நிலை கொண்டது. ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி. நிறுவனப் பங்கின் விலை வர்த்தகத்தின் தொடக்கத்தில் ரூ.393.95–க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.420–க்கு சென்றது. இது 52 வார கால உயர்வு ஆகும். குறைந்தபட்சமாக ரூ.389.35–க்கு சென்றது. கெயில் இந்தியா நிறுவனப் பங்கின் விலை தொடக்கத்தில் ரூ.411.10–க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே 52 வார உயர்வை எட்டி ரூ.435.90–க்கு சென்றது. குறைந்தபட்சமாக ரூ.411.10–க்கு சென்றது. இறுதியில் ரூ.429.85–ல் நிலை கொண்டது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனப் பங்கின் விலை வர்த்தகத்தின் தொடக்கத்தில் ரூ.559–க்கு கைமாறியது. அதிகபட்சமாக ரூ.589–க்கு சென்றது. இது 52 வார கால உயர்வு ஆகும். இறுதியில் ரூ.575.90–ல் நிலை கொண்டது. இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனப் பங்கின் விலை வர்த்தகத்தின் இடையே ஒரு கட்டத்தில் ரூ.439.80–க்கு சென்றது. இது 52 வார கால உயர்வு ஆகும். குறைந்தபட்சமாக ரூ.409.05–க்கு சென்றது. இறுதியில் ரூ.434.30–ல் நிலை கொண்டது. நேஷனல் அலுமினியம் நால்கோ எனப்படும் நேஷனல் அலுமினியம் கம்பெனி பங்கின் விலை வர்த்தகத்தின் தொடக்கத்தில் ரூ.45.90–க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே 52 வார உயர்வை எட்டி ரூ.49.50–க்கு சென்றது. குறைந்தபட்சமாக ரூ.45.40–க்கு சென்றது. இறுதியில் ரூ.48.90–ல் நிலை கொண்டது. நீர்மின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் என்.எச்.பி.சி. நிறுவனப் பங்கின் விலை வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.23.50–க்கு சென்றது. இது 52 வார கால உயர்வு ஆகும். குறைந்தபட்சமாக ரூ.20.65–க்கு சென்றது. இறுதியில் ரூ.23.30–ல் நிலை கொண்டது. பீ.எச்.இ.எல். பீ.எச்.இ.எல். நிறுவனப் பங்கின் விலை வர்த்தகத்தின் தொடக்கத்தில் ரூ.231.10–க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.273–க்கு சென்று 52 வார கால உயர்வை எட்டியது. குறைந்தபட்சமாக ரூ.231.05–க்கு சென்றது. இறுதியில் ரூ.266.55–ல் நிலை கொண்டது. ஆயில் இந்தியா நிறுவனப் பங்கின் விலை வர்த்தகத்தின் தொடக்கத்தில் ரூ.570–க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.614.65–க்கு சென்றது. குறைந்தபட்சமாக ரூ.570–க்கு சென்றது. இறுதியில் ரூ.604.15–ல் நிலை கொண்டது. image: category:Tagging: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |