Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


‘தி.மு.க. ஆட்சியின் திட்டங்களுக்கு மூடுவிழா நடத்துகிறார் ஜெயலலிதா’ திருச்சி சிவா எம்.பி. குற்றச்சாட்டு

Posted: 04 Apr 2014 01:10 PM PDT

நெல்லை,

தி.மு.க. ஆட்சியின் திட்டங்களுக்கு மூடுவிழா நடத்துகிறார் ஜெயலலிதா என்று திருச்சி சிவா எம்.பி. குற்றம் சாட்டினார்.

தி.மு.க. பொதுக்கூட்டம்

நெல்லை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சி.தேவதாச சுந்தரத்தை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நெல்லை டவுன் தேரடி திடலில் நேற்று இரவு நடந்தது. மாநகர பொறுப்பாளர் மு.அப்துல்வகாப் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வீ.கருப்பசாமிபாண்டியன், தங்கவேலு எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி என்.சிவா கலந்து கொண்டு வேட்பாளர் சி.தேவதாச சுந்தரத்தை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த பாராளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாகும். 120 கோடி மக்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கவும், வறுமையை ஒழிக்கவும், திட்டம் தீட்டுகிற இடத்திற்கு வருகிறவர்களை தேர்ந்து எடுக்கின்ற தேர்தல். இந்த நேரத்தில் நாம் தேர்ந்து எடுக்கிறவர்கள் நாட்டின் நலனில் அக்கறை உள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டின் மீது அக்கறை கொண்டவர்களை தேர்ந்து எடுக்க வேண்டும்.

திட்டங்களுக்கு மூடுவிழா

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அண்ணாவின் பெயரை வைத்து கட்சி நடத்தி வருகிறார். ஆனால் தேர்தல் பிரசாரத்துக்காக காஞ்சிபுரம் சென்ற அவர், அண்ணா வாழ்ந்த வீட்டிற்கு செல்லவில்லை. ஆனால் பிரசாரத்துக்காக காஞ்சிபுரம் சென்ற தளபதி ஸ்டாலின், அண்ணா வீட்டிற்கு சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது தான் தி.மு.க.வின் கொள்கை.

தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்திய மின்திட்டங்களை இந்த 3 ஆண்டுகளில் ஜெயலலிதா சரியாக நடைமுறைப்படுத்தினால் மின்சார தட்டுப்பாடு இல்லாமல் தமிழகம் விளங்கி இருக்கும். ஆனால் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தாமல் அதற்கு மூடுவிழா நடத்தி வருகிறது. தலைமை செயலகத்தை இழுத்து முடியது. செம்மொழி பூங்காவை பட்டு போக செய்தது. அண்ணா நூலகத்தை மாற்ற முயற்சி செய்தது. இப்படி பல திட்டங்களை செயல்படுத்தாமல் முடக்கிப் போட்டு வருகிறார். இது தான் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அரசின் சாதனை.

எந்த ஆட்சியில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும், அதனை மக்களுக்கான திட்டங்களாக தொடர்ந்து செயல்படுத்தியவர் தான் கலைஞர். ஆனால் ஜெயலலிதா எந்த ஒரு தொலை நோக்கு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்த்து பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தது தி.மு.க. தான். இதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

இலங்கை தமிழர்களுக்கு

இலங்கை தமிழர்களுக்கு தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்ற இயக்கம் தி.மு.க., முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ராஜீவ்காந்தி, கொலையாளிகளை விடுதலை செய்வதில் நிதானம் இல்லாமல் செயல்பட்டதால் அவர்களுடைய விடுதலை தள்ளிக்கொண்டு செல்கிறது. தேர்தலுக்காக தான் இலங்கை தமிழர் பிரச்சினையை அ.தி.மு.க. கையில் எடுத்து உள்ளது. இதனை மக்கள் நன்கு புரிந்து கொள்ளவேண்டும். தமிழுக்காகவும், தமிழர் நலனுக்காகவும் பாடுபட்டு வருகின்ற கலைஞரின் கரத்தை இந்த தேர்தலில் வலுப்படுத்த உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு திருச்சி சிவா எம்.பி. பேசினார்.

கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சியினர் இளைஞர் அணி செயலாளர் சரத்மணி, மகளிர் அணி செயலாளர் ராணி, டேவிட்ராஜ், பாலமுருகன் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் அந்த கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.

கூட்டத்தில் முன்னாள் மேயர் உமாமகேசுவரி, மும்பை ஆரியசங்கரன், பகுதி செயலாளர்கள் உலகநாதன், தச்சை சுப்பிரமணியன், வக்கீல் ரவீந்திரநாத், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ், மாணவர்அணி அமைப்பாளர் அருண்குமார், ஒன்றிய செயலாளர் ஆ.க.மணி, போர்வெல் கணேசன், வி.கே.பி.சங்கர், மனிதநேய மக்கள் கட்சி பொறுப்பு குழு தலைவர் மில்லத் இஸ்மாயில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வர்த்தக ஆதரவு திரட்டும் நடவடிக்கைக்கு இந்தியாவிலும் அனுமதி அளிக்க வேண்டும் அசோசெம் வலியுறுத்தல்

Posted: 04 Apr 2014 01:08 PM PDT

புதுடெல்லி

அமெரிக்காவைப் போல் இந்தியாவிலும் வர்த்தக ஆதரவு திரட்டும் நடவடிக்கைக்கு சட்டப்பூர்வ அனுமதி அளிக்க வேண்டும் என அசோசெம் அமைப்பின் பொதுச்செயலாளர் டீ.எஸ்.ரவாத் தெரிவித்துள்ளார்.

வால்மார்ட் நிறுவனம்

ஒரு நிறுவனம் தனது சார்பில் அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொள்வதற்கு ஒரு நிறுவனத்தையோ அல்லது தனிநபரையோ நியமிக்கும் நடவடிக்கைக்கு வர்த்தக ஆதரவு திரட்டுதல் என்று பெயர். அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் நிறுவனம் சில்லறை வர்த்தகத்தில் உலக அளவில் கொடிகட்டி பறக்கிறது. இந்நிறுவனம் இந்திய சில்லறை வர்த்தக துறையில் கால் பதிப்பதற்காக வர்த்தக ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் இறங்கியதாக கூறப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்த கடந்த 2012 டிசம்பர் மாதத்தில் மத்திய அரசு உத்தரவிட்டது.

வால்மார்ட் நிறுவனம் இந்த நடவடிக்கையில் இறங்கியதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை என்று ஒரு நபர் விசாரணைக் குழு 2014 பிப்ரவரியில் பாராளுமன்ற மக்களவையில் அறிக்கையை சமர்ப்பித்தது.

அமெரிக்கா, கனடா

அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இந்த நடவடிக்கைக்கு சட்டப்பூர்வ அனுமதி உள்ளது. எனினும், அமெரிக்காவில் இதற்கான விதிமுறைகள் கடுமையாக உள்ளன. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் சிறைத் தண்டனையும் வழங்கப்படும். கனடா நாட்டில் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் தரகு நிறுவனங்கள் வர்த்தக ஆதரவு நடவடிக்கை ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

category:

16 லட்சம் பேர் பயன் அடைவார்கள் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு ரூ.1,000 முதல் ரூ.6 ஆயிரம் வரை கூடுதலாக கிடைக்கும்

Posted: 04 Apr 2014 12:46 PM PDT

சென்னை,

அகவிலைப்படி உயர்வுக்கான உத்தரவை தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டு உள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்த முடிவு செய்தது. இதற்கான ஒப்புதலை மத்திய மந்திரிசபை கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி அறிவித்தது.

அதன் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அகவிலைப்படி, ஜனவரி 1-ந் தேதியில் இருந்து முன்தேதியிட்டு உயர்த்தப்பட்டுள்ளது.

ஜனவரி 1-ந் தேதி முதல்

இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அதே அளவில் அகவிலைப்படியை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது. இந்த தொகையை 1.1.14 அன்றைய தேதியில் இருந்து கணக்கிட்டு பணமாக கொடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அகவிலைப்படியை உயர்த்தி, முன்தேதியிட்டு கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதால், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களுக்கான அகவிலைப்படியின் பாக்கித்தொகை உடனடியாக பணமாக வழங்கப்படும். அதாவது, ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இந்த அகவிலைப்படி உயர்வு உத்தரவு அமலுக்கு வருகிறது.

யார்-யாருக்கு கிடைக்கும்?

தமிழ்நாடு அரசுத் துறைகளில் முழு நேர பணியாளர்களாக இருந்து, அகவிலைப்படியை பெற்றுவரும் அனைவருக்குமே இந்த அகவிலைப்படி உயர்வுக்கான உத்தரவு பொருந்தும்.

ஆசிரியர்கள் மற்றும் அரசுத் துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுடன், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்கள், பல்கலைக்கழக மானியக்குழுவின் அல்லது அகில இந்திய கல்வி குழுமத்தின் நிர்வாகத்துக்குள் வரும் ஊழியர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறப்பு டிப்ளமோ கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், நூலகர்கள், உடல்கல்வி இயக்குனர்கள் ஆகியோருக்கு இந்த உத்தரவு பொருந்தும்.

அங்கன்வாடி ஊழியர்கள்

மேலும் வருவாய்த்துறையின் கீழ் வரும் கிராம உதவியாளர்கள், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், குழந்தை நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சமையலர்கள், உதவியாளர்கள், பஞ்சாயத்து உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வரும் கிராம பஞ்சாயத்து கிளார்க்குகள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

உயர்த்தப்பட்ட அகவிலைப்படி பாக்கியை எந்த வித காலதாமதமும் இல்லாமல் அரசுக் கருவூல அதிகாரிகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரூ.6 ஆயிரம் வரை கிடைக்கும்

இந்த அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அகவிலைப்படி உயர்வினால் அரசுத் துறைகளில் பணியாற்றும் கடைநிலை ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை, ஆயிரம் ரூபாய் முதல் ஆறாயிரம் ரூபாய் வரை கூடுதலாக பெறுவார்கள் என்று தலைமைச் செயலக வட்டாரம் தெரிவித்தது.

அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 16 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.

தேர்தல் கமிஷன் அனுமதி

பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால், இதுபோன்ற உத்தரவுகளை எந்த மாநில அரசும் தானாக பிறப்பித்துவிட முடியாது.

அதுபற்றி கேட்டபோது, இந்திய தேர்தல் கமிஷனின் அனுமதியை பெற்ற பிறகே இந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1 பி செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி.-சி24 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது இந்திய விஞ்ஞானிகள் சாதனை

Posted: 04 Apr 2014 12:44 PM PDT

ஸ்ரீஹரிகோட்டா,

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1பி என்ற செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி-சி24 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து விஞ்ஞானிகள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

பி.எஸ்.எல்.வி-சி24 ராக்கெட்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும் அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகின்றன.

கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ என்ற செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து அதை பி.எஸ்.எல்.வி .ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்பியது.

அதன் தொடர்ச்சியாக கடல் வழி ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1பி என்ற செயற்கைகோள் தயாரிக்கப்பட்டு அது பி.எஸ்.எல்.வி-சி24 ராக்கெட் மூலம் நேற்று மாலை 5-14 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

வெற்றிகரமாக பாய்ந்தது

இதற்கான, இறுதிகட்ட ஆயத்த பணிகள் எனப்படும் ''கவுண்ட்டவுன்'' முடிந்து, நேற்று மாலை 5.14 மணிக்கு ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1பி என்ற செயற்கைகோளை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி-சி24 ராக்கெட் தீப்பிழம்பை கக்கியபடி விண்ணை நோக்கி வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது.

3 நிலைகளை கொண்ட பி.எஸ்.எல்.வி-சி24 ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும், நிரப்பப்பட்டு இருந்தது. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி-சி24 ராக்கெட்டின் எடை 320 டன் ஆகும். செயற்கைகோள் 1,432 கிலோ எடையை கொண்டது.

செயற்கை கோள் பிரிந்தது

புறப்பட்ட 19 நிமிடம் 41 வினாடிகளில் ராக்கெட் பூமியில் இருந்து 20 ஆயிரத்து 650 கிலோ மீட்டர் உயரத்தை எட்டியது. திட்டமிட்ட அந்த உயரத்தை அடைந்ததும், 320 டன் எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1பி என்ற செயற்கைகோள் ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது. இந்த 19 நிமிடம் 41 வினாடி பயணத்தில் முதல் இரண்டு நிலைகள் எரிந்து முடிந்ததும், மூன்றாவது மற்றும் நான்காவது நிலையில் பொருத்தபட்டு இருந்த என்ஜின் வெற்றிகரமாக இயங்கி செயற்கை கோளை விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்துக்கு கொண்டு சென்று புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது.

விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

ராக்கெட் வெற்றிகரமாக பறந்ததும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள கட்டுப்பாட்டு அறை யில் கூடி இருந்த விஞ்ஞானிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்ட இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்களுடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அவர்களும் கே.ராதாகிருஷ்ணனுடன் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை பார்வையிட ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ அலுவலக கட்டிடங்களின் மாடியில் இஸ்ரோ அதிகாரிகளின் குடும்பத்தினரும், பத்திரிகையாளர்களும் கூடிநின்றனர். அவர்களும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

இந்தியா சாதனை

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் உதவியுடன் பி.எஸ்.எல்.வி-சி24 ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதன் மூலம், விண்வெளி தொழில்நுட்பத்தில் நிபுணராக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்து உள்ளது. இது ஒரு சாதனை நிகழ்வாகும்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஏற்கனவே 23 பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி உள்ளது. தற்போது 24-வது ராக்கெட்டும் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது.

category:

பாகிஸ்தானில் மேலும் 10 நாட்கள் சண்டை நிறுத்தம் தலீபான் தீவிரவாதிகள் அறிவிப்பு

Posted: 04 Apr 2014 12:38 PM PDT

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் தலீபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவ்வப்போது அவர்கள் நடத்திவந்த தாக்குதல்கள் பாகிஸ்தானின் சட்டம்–ஒழுங்குக்கு சவாலாக அமைந்தது.

இதையடுத்து நவாஸ் ஷெரீப் அரசு, தலீபான்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையையொட்டி தலீபான்கள் கடந்த மாதம் 1–ந்தேதி ஒருமாத காலத்துக்கு சண்டை நிறுத்த அறிவிப்பு வெளியிட்டனர்.

பேச்சுவார்த்தையின் போது அரசிடம் தலீபான்கள் தங்களது இயக்கத்தை சேர்ந்த 800 கைதிகளை விடுவிக்க வேண்டும், ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து ராணுவம் திரும்ப பெறப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கிடையே நல்லெண்ணம் ஏற்படுத்தும் விதமாக பாகிஸ்தான் அரசு, 16 தலீபான்களை சிறையிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் தலீபான்கள் தங்களது சண்டை நிறுத்தத்தை மேலும் 10 நாட்களுக்கு (ஏப்ரல் 10–ந்தேதி வரையில்) நீட்டித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

 

category:

News Group Category:

தேர்தல் விதிமுறையை மீறியதாக நடிகை ஹேமமாலினிக்கு தேர்தல் கமிஷன் கண்டனம்

Posted: 04 Apr 2014 12:07 PM PDT

மதுரா,

 பாரதீய ஜனதா கட்சி வேட்பாளரான நடிகை ஹேமமாலினி, ராஷ்டிரீய லோக்தளம் கட்சி வேட்பாளர் ஜெயந்த் சவுத்ரி ஆகிய 2 முக்கிய வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக அவர்களுக்கு தேர்தல் கமிஷன் கண்டனம் தெரிவித்து உள்ளது.

 ஜெயந்த் சவுத்ரி மற்றும் ஹேமமாலினி ஆகியோர் ஊடக சான்றிதழ் மற்றும் ஊடக கண்காணிப்புக்குழுவின் முன்அனுமதி பெறாமல் 3 வெவ்வேறு பத்திரிகைகளில் தங்களுக்கு ஆதரவாக விளம்பரம் கொடுத்து உள்ளனர். இதுபற்றி வந்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய மாவட்ட மாஜிஸ்திரேட்டும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான விஷால் சவுத்ரி அவர்கள் இருவருக்கும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, எதிர்காலத்தில் இதுபோன்று அனுமதி இல்லாமல் விளம்பரம் பிரசுரிக்க கூடாது என எச்சரித்து உத்தரவிட்டனர்.

 

category:

News Group Category:

குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது குறித்த ஆய்வு இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் பேட்டி

Posted: 04 Apr 2014 12:02 PM PDT

சென்னை,

குலசேகரப்பட்டிணத்தில் 2–வது ராக்கெட் ஏவுதளம் அமைப்பது குறித்து ஆய்வு நடக்கிறது என்று இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1பி செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி24 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து நேற்று மாலை விண்ணில் ஏவப்பட்டது. இந்த விழாவில் சத்தீஷ்கர் மாநில கவர்னர் சேகர் தத் கலந்து கொண்டு விஞ்ஞானிகளை வாழ்த்தினார். பின்னர் இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3

ரூ.ஆயிரம் கோடி மதிப்பில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1பி என்ற செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி24 ராக்கெட் திட்டமிட்டபடி, விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. மீதமுள்ள ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1சி மற்றும் 1டி ஆகிய இந்த செயற்கைகோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் அனுப்பப்பட உள்ளது. அதே போல் ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 ராக்கெட் வரும் ஜூன் மாதம் சோதனை அடிப்படையில் விண்ணில் அனுப்பப்பட உள்ளது.

 இந்த ராக்கெட் முற்றிலுமாக உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே அனுப்பப்பட இருக்கிறது. இதே போன்று பி.எஸ்.எல்.வி. சி23 என்ற ராக்கெட் 4 வெளிநாட்டு செயற்கை கோளுடன் அனுப்புவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகிறது. செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் ராக்கெட் அதன் பயணத்தை சீராக அமைத்துள்ளது.

2–வது ராக்கெட் ஏவுதளம்

 ஒரு நாளைக்கு 7 லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்கிறது. இதனுடைய பணிகள் நல்ல படியாக கிடைத்து வருகிறது. இதே போன்று 2–வது ராக்கெட் ஏவுதளம் குலசேகரப்பட்டிணத்தில் அமைப்பது குறித்து போதிய சாத்தியகூறுகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வுக்கு பின்னரே ஏவுதளம் அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

 ராக்கெட்டுகளுக்கு தேவையான உதிரிபாகங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே கொள்முதல் செய்து வருகிறோம். அவற்றை உள்நாட்டிலும் கொள்முதல் செய்வது குறித்து உயர்மட்ட குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பி.எஸ்.எல்.வி. ராக்கெட் இதுவரை 26 அனுப்பப்பட்டு இருக்கின்றது.

பெரிய வெற்றி

 முதல் ராக்கெட் தோல்வியை தழுவியது. தொடர்ந்து 25 ராக்கெட்டுகளும் திட்டமிட்டப்படி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு கிடைத்த பெரிய மைல் கல் வெற்றி என்றே கூறலாம். மேலும் 12–வது ஐந்தாண்டு திட்டத்தில் விண்வெளி துறைக்கு 39 ஆயிரத்து 250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் 13 ஆயிரத்து 650 கோடி செலவிடப்பட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் 16 ராக்கெட்டுகள் ஏவ திட்டமிட்டுள்ளோம். சி.எஸ்.எல்.வி. சி24 ராக்கெட் விண்ணில் அனுப்புவதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

category:

மராட்டிய தேர்தல் பிரசாரத்தில் மாவோயிஸ்டுகளுக்கு நரேந்திரமோடி அழைப்பு ‘‘மக்களின் ரத்தத்தால் பூமியை சிவப்பு ஆக்காமல் பயிர் சாகுபடியால் பச்சை ஆக்குவோம்’’

Posted: 04 Apr 2014 11:58 AM PDT

சந்திராப்பூர்,

நரேந்திரமோடி, மராட்டிய தேர்தல் பிரசாரத்தில், ''அப்பாவி மக்களின் ரத்தத்தால் இந்த பூமியை சிவப்பு ஆக்காமல், பயிர் சாகுபடியால் பச்சை ஆக்குவோம், வாருங்கள்'' என மாவோயிஸ்டுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, மராட்டிய மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த சந்திராப்பூரில் நேற்று பிரசாரம் செய்தார். அங்கு நடந்த பிரசாரகூட்டத்தில் பங்கேற்று பேசுகையில் அவர் கூறியதாவது:–

சோனியா அம்மையாரே, நீங்கள் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, இந்த நாட்டின் பெண்களை தவறாக வழிநடத்திக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அரசின்கீழ், எத்தனை பெண்கள் மீது வன்கொடுமை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது என்று இந்த நாடு அறிந்து கொள்ள விரும்புகிறது.

இளைஞர் காங்கிரசை சேர்ந்த ஒரு இளம்பெண் தலைவர் மாயம் ஆனார். பின்னர் அவரது உடல் தான் கிடைத்தது என்று பத்திரிகைகளில் வாசித்தேன். இதில், காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். உங்கள் சொந்தக்கட்சியிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொன்னால், இந்த நாட்டின் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பார்கள்?

நிர்பயா நிதி

டெல்லியில் ஒரு அப்பாவிப்பெண், கும்பலால் பலாத்காரம் செய்து, கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தால் உலக அரங்கில் இந்தியா அவமானத்தை சந்தித்தது.

பெண்களை பாதுகாப்பதற்கென்று மத்திய அரசின் பட்ஜெட்டில் நிர்பயா நிதி என்ற பெயரில் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்தத்தொகையில் ஒரு ரூபாயைக்கூட நீங்கள் செலவிடவில்லை.

மாவோயிஸ்டுகளுக்கு அழைப்பு

மராட்டியத்தில் விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். ஆனால் அரசு கவலைப்படவில்லை. விவசாயிகள் எதை சாகுபடி செய்தாலும், அதை வாங்குவதற்கு ஆட்கள் வேண்டும். அதை நல்ல விலைக்கு வாங்கும் நிலை வரவேண்டும்.

மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, சமூகத்துக்குள் வரவேண்டும். இந்தப்பூமியை அப்பாவி மக்களின் ரத்தத்தால் சிவப்பாக்குவதற்கு பதிலாக பயிர்கள் சாகுபடியால் பச்சை ஆக்குவோம், வாருங்கள்.

இவ்வாறு நரேந்திரமோடி கூறினார்.

தீங்குகளின் உறைவிடம் காங்கிரஸ்

ஒடிசா மாநிலத்தில் வறுமை கோரத்தாண்டவமாடும் நுவாபாடா–பாலாங்கிர் பகுதியில் நடந்த பிரசாரகூட்டத்திலும் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் காங்கிரசை கடுமையாக சாடினார்.

''கடந்த தேர்தலுக்கு முன்பாக, ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் விலைவாசியை குறைப்போம் என்று வாக்குறுதி வழங்கிய காங்கிரஸ், சொன்ன சொல்படி நடக்காமல், மக்களுக்கு துரோகம் செய்து விட்டது. காங்கிரஸ் கட்சி அனைத்து தீங்குகளின் உறைவிடமாக உள்ளது. ஊழல், விலைவாசி உயர்வு, மோசமான நிர்வாகம் என எதைப்பற்றி பேசினாலும், அதில் காங்கிரஸ் வந்துவிடுகிறது'' என நரேந்திரமோடி குறிப்பிட்டார்.

தண்டிப்பார்கள்

மேலும், ''இந்திய நாட்டின் மக்கள் சகிப்புத்தன்மை உடையவர்கள். யாராவது ஒரு தவறு செய்தால் மன்னிப்பார்கள். ஆனால் அவர்களுக்கு யாராவது துரோகம் செய்து விட்டால் அவர்களை நிச்சயம் தண்டிப்பார்கள்'' என கூறினார்.

நரேந்திரமோடி தனது பேச்சின் போது, ''நான் ஒரு சேவகன். நாட்டுக்கு இந்த தருணத்தில் தேவை நிர்வாகி அல்ல, சேவகன் தான். பாரதீய ஜனதாவுக்கு நீங்கள் (மக்கள்) வாக்களித்து, உங்களுக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும்'' என கேட்டுக்கொண்டார்.
 

image: 

category:

News Group Category:

முஸ்லிம்கள் காங்கிரசை ஆதரிக்க வேண்டும் டெல்லி இமாம் புகாரி வேண்டுகோள்

Posted: 04 Apr 2014 11:53 AM PDT

புதுடெல்லி,

முஸ்லிம்கள் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கும்படி டெல்லி இமாம் சையது அஹமது புகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சோனியாவுடன் சந்திப்பு

டெல்லி ஜும்மா மஸ்ஜித் இமாம் சையது அஹமது புகாரி சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். இதற்கு பாரதீய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. மதத்தை அரசியலுக்கு பயன்படுத்துவது தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் என்றும் பா.ஜனதா குற்றம்சாட்டியது.

இந்த சந்திப்பு நடந்த 3–வது நாளான நேற்று டெல்லியில் இமாம் புகாரி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

காங்கிரசை ஆதரியுங்கள்

நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் நான் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கிறேன். நாம் மதவாத சக்திகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட வேண்டும். முஸ்லிம்களுக்கு காங்கிரசின் மீது சில குறைகள் இருக்கிறது. அப்படி இருந்தும் அந்த கட்சியை ஆதரிப்பதற்கு காரணம், இந்த நாடு மதவாத சக்திகளின் கைகளுக்கு சென்றுவிடக்கூடாது என்பது தான்.

முஸ்லிம்கள் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இதன் மூலம் மதசார்பற்ற ஓட்டுகள் சிதறாமல் தடுக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். மதவாத சக்திகளிடம் இருந்து நாடு அபாயத்தை எதிர்நோக்கி உள்ளது. நாட்டை துண்டாட மதவாத சக்திகள் ஒவ்வொரு நாளும் வேலை செய்து வருகிறார்கள்.

மம்தாவுக்கு ஆதரவு

ஆனால் மேற்கு வங்காளத்தில் காங்கிரசுக்கு ஆதரவு இல்லை, அங்கு திரிணாமுல் காங்கிரசை ஆதரிக்கிறேன். மம்தா பானர்ஜி தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரமாட்டேன் என்று ஏற்கனவே உறுதியாக கூறிவிட்டதால் அவரை ஆதரிக்கிறேன். மத்தியில் ஆட்சி அமைப்பதில் அவரது பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். எனவே மேற்கு வங்காள வாக்காளர்கள் மம்தாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

கடந்த 65 ஆண்டுகளாக எந்த அரசியல் கட்சியும் முஸ்லிம்களின் நலனுக்காக வேலை செய்யவில்லை. நமக்கென சொந்தமாக ஒரு கட்சி இருந்திருந்தால் நமக்கு இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டிருக்காது. மற்ற சமுதாயங்களான அகாலி, யாதவர்கள் போன்றவர்களுக்கு சொந்தமான கட்சி இருக்கிறது.

முடிவு மக்களிடமே

சமாஜ்வாடி கட்சி முஸ்லிம்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. முசாபர்நகர் கலவரத்துக்கு இதுவும் ஒரு காரணம். பகுஜன் சமாஜ் கட்சி ஒரு சந்தர்ப்பவாத கட்சி. அந்த 2 கட்சிகளையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. பீகாரில் காங்கிரசின் கூட்டணியான ராஷ்டிரீய ஜனதா தளத்தையும் முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும்.

நான் முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் தான் விடுக்கிறேன். ஆனாலும் முடிவு எடுக்க வேண்டியது அவர்கள் தான். நான் ஒரு வாக்காளர் என்ற முறையில் எனது கருத்தை கூறுகிறேன். எனது கருத்தை கூற எனக்கு உரிமை இருக்கிறது. எந்த சட்டமும் அதை தடுக்க முடியாது. எனது கருத்தை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்று முடிவு எடுப்பது மக்கள் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

category:

News Group Category:

கருணாநிதி மீதான அவதூறு வழக்குகளின் விசாரணை தள்ளிவைப்பு

Posted: 04 Apr 2014 11:51 AM PDT

சென்னை

தி.மு.க. தலைவர் கருணாநிதி, கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முரசொலியில் எழுதிய கேள்வி பதில் கட்டுரையில், முதல்-அமைச்சர் பேசும்போது, அமைச்சர்கள் எல்லாரும் தூங்குகின்றனர் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து, அவர் மீது சென்னை மாவட்ட சென்னை கோர்ட்டில், முதல-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

அதேபோல, 2012-ம் ஆண்டு முரசொலி பத்திரிகையில், அமைச்சர்களின் குடும்ப உறுப்பினர்கள் குறித்து கருணாநிதி கட்டுரை எழுதியிருந்தார். இதையடுத்து, அவர் மீது அமைச்சர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் ஆகியோர் சார்பில் அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் கிரிமினல் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்தார்.

இந்த 3 வழக்குகளும் நீதிபதி ஆதிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் எம்.கே.அசோகன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, 3 வழக்குகளையும் வருகிற ஜூன் 9-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
 

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™