Daily Thanthi |
- 7–வது ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு முதல் வெற்றி டெல்லியை தோற்கடித்தது
- கடைசி நேரத்தில் ஆட்டத்தை மாற்றிய கிறிஸ் லின் பிடித்த கேட்ச்சை நம்ப முடியவில்லை கொல்கத்தா கேப்டன் கம்பீர் சிலிர்ப்பு
- சர்வதேச கைப்பந்து பயிற்சியாளர்கள் பயிற்சி முகாம் சென்னையில் தொடங்கியது
- மேல்மலையனூரில், பனைமரத்தில் கார் மோதி விபத்து நிதிநிறுவன அதிபர் உள்பட 3 பேர் பலி
- கடந்த 2013–14–ஆம் நிதி ஆண்டில் பெரிய துறைமுகங்கள் கையாண்ட நிலக்கரி 21 சதவீதம் அதிகரிப்பு
- வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு
- ஏப்ரல் மாதத்தின் முதல் 2 வாரங்களில் முன்பேர சந்தைகளின் வர்த்தகம் 70 சதவீதம் சரிவடைந்தது
- கோழிக்கடை உரிமையாளரை ஓட, ஓட விரட்டி குத்திக் கொலை 4 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
- நடப்பு சந்தை பருவத்தில் கோதுமை கொள்முதல் இலக்கை விட குறையும்
- கோவையில் சம்பவம்: சிலிண்டர் வெடித்து குழந்தைகள் உள்பட 5 பேர் படுகாயம்
| 7–வது ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு முதல் வெற்றி டெல்லியை தோற்கடித்தது Posted: 25 Apr 2014 01:10 PM PDT துபாய், 7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டெல்லியை தோற்கடித்து ஐதராபாத் அணி முதலாவது வெற்றியை பதிவு செய்தது. வந்தார், பீட்டர்சன் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ள 7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே–ஆப்' என்ற இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெறும். இந்த நிலையில் துபாயில் நேற்று நடந்த 12–வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்சும், டெல்லி டேர்டெவில்சும் மோதின. விரல் காயத்தால் முதல் 3 ஆட்டங்களில் ஆடாத டெல்லி கேப்டன் கெவின் பீட்டர்சன் குணமடைந்து அணிக்கு திரும்பினார். டெல்லி அணியில் மயங்க் அகர்வால், ராஸ் டெய்லர், ஜிம்மி நீஷம், கவுல்டர் நிலே ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக லட்சுமி ரத்தன் சுக்லா, குயின்டான் டீ காக், வெய்ன் பார்னல் மற்றும் கெவின் பீட்டர்சன் இடம் பெற்றனர். ஐதராபாத் அணியில் ஒரே ஒரு மாற்றமாக இர்பான் பதானுக்கு பதிலாக நமன் ஓஜா சேர்க்கப்பட்டார். நழுவிய 3 கேட்ச் டாஸ் ஜெயித்த ஐதராபாத் சன் ரைசர்ஸ் முதலில் பேட் செய்தது. கேப்டன் ஷிகர் தவானும், ஆரோன் பிஞ்சும் இன்னிங்சை அதிரடியாக ஆரம்பித்தனர். பார்னலின் ஓவரில் பவுண்டரி, சிக்சர், பவுண்டரி என்று தொடர்ச்சியாக விரட்டிய தவான் அடுத்த பந்தில் அதாவது 26 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து (விட்டவர், மனோஜ் திவாரி) தப்பினார். அணியின் ஸ்கோர் 56 ரன்களாக உயர்ந்த போது, தொடக்க ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் பிரித்தார். தவான் 33 ரன்களில் (22 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து டேவிட் வார்னர் ஆட வந்தார். சந்தித்த 2–வது பந்தில் அவர் வெளியேறி இருக்கவேண்டியது. பேட்டின் விளிம்பில் உரசிக் கொண்டு சென்ற கேட்ச் வாய்ப்பை, விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தவற விட்டார். இந்த வாய்ப்பை வார்னர், கெட்டியாக பிடித்துக் கொண்டார். வார்னர்–பிஞ்ச் ஜோடி தொடக்கத்தில் நிதானமாக ஆடினாலும் போக போக நொறுக்கி தள்ளினர். குறிப்பாக ஆரோன் பிஞ்ச், சுக்லாவின் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர், உனட்கட்டின் ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என்று ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இந்த கூட்டணியை கடைசி வரை டெல்லி பவுலர்களால் உடைக்க முடியவில்லை. இதற்கிடையே, டேவிட் வார்னர் 31 ரன்களில் கொடுத்த கேட்ச் வாய்ப்பையும் மனோஜ் திவாரி வீணடித்தார். மூன்று கேட்ச்சுகளை நழுவ விட்டதன் விளைவு, ஐ.பி.எல். வரலாற்றில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி தனது சிறந்த ஸ்கோரை எட்டியது. 20 ஓவர்களில் ஐதராபாத் அணி ஒரு விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்தது. இதில் கடைசி 6 ஓவர்களில் மட்டும் 85 ரன்களை சேகரித்தனர். ஐ.பி.எல். போட்டியில் இதற்கு முன்பு கடந்த ஆண்டு மும்பைக்கு எதிராக 3 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்ததே ஐதராபாத்தின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. ஐதராபாத் வெற்றி பின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக முரளிவிஜயும், குயின்டான் டீ காக்கும் களம் புகுந்தனர். மிதமான வேகத்தில் விளையாடிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் (11.2 ஓவர்) திரட்டி அருமையான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். டீ காக் 48 ரன்களிலும் (30 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), முரளிவிஜய் 52 ரன்களிலும் (40 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அடுத்தடுத்து ஓவர்களில் வெளியேறினர். ஆனால் மிடில் வரிசை பேட்ஸ்மேன்களால் ரன்வேகத்தை அதிகரிக்க முடியவில்லை. இதனால் ரன்தேவை அதிகரித்து கொண்டே போனது. எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் (15 ரன், 14பந்து), கேப்டன் கெவின் பீட்டர்சன் (16 ரன், 17 பந்து) இருவரும் ஸ்டெயினின் ஒரே ஓவரில் வீழ்ந்ததால் நெருக்கடி முற்றியது. கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டன. 20–வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் வீசினார். இந்த ஓவரில் டுமினி–மனோஜ் திவாரி ஜோடி சிக்சர், பவுண்டரி உள்பட 15 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றிக்கனியை பறித்தது. டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்தது. தனது முதல் இரு ஆட்டங்களில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளிடம் தோற்ற ஐதராபாத் அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். அதே சமயம் 4–வது லீக்கில் விளையாடிய டெல்லிக்கு இது 3–வது தோல்வியாகும். ஸ்கோர் போர்டு ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஷிகர் தவான் (சி) பீட்டர்சன் (பி) நதீம் 33 ஆரோன் பிஞ்ச் (நாட்–அவுட்) 88 டேவிட் வார்னர் (நாட்–அவுட்) 58 எக்ஸ்டிரா 5 மொத்தம் (20 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு) 184 விக்கெட் வீழ்ச்சி: 1–56 பந்து வீச்சு விவரம் ஷபாஸ் நதீம் 4–0–24–1 முகமது ஷமி 4–0–36–0 பார்னல் 4–0–38–0 உனட்கட் 4–0–43–0 டுமினி 2–0–19–0 சுக்லா 2–0–21–0 டெல்லி டேர்டெவில்ஸ் டீ காக் (சி) பிஞ்ச் (பி) கரண் ஷர்மா 48 விஜய் (சி) ஸ்டெயின் (பி) சேமி 52 கெவின் பீட்டர்சன் (சி) சேமி (பி) ஸ்டெயின் 16 தினேஷ் கார்த்திக் (சி) லேகேஷ் ராகுல் (பி) ஸ்டெயின் 15 டுமினி (நாட்–அவுட்) 20 மனோஜ் திவாரி (நாட்–அவுட்) 23 எக்ஸ்டிரா 6 மொத்தம் (20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு) 180 விக்கெட் வீழ்ச்சி: 1–99, 2–103, 3–135, 4–135 பந்து வீச்சு விவரம் புவனேஷ்வர்குமார் 4–0–40–0 ஸ்டெயின் 4–0–33–2 வேணுகோபால் ராவ் 1–0–9–0 கரண் ஷர்மா 4–0–23–1 டேரன் சேமி 3–0–34–1 அமித் மிஸ்ரா 4–0–38–0 image: category:Tagging: |
| Posted: 25 Apr 2014 01:06 PM PDT ஷார்ஜா, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 2 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்சை தோற்கடித்தது. இதில் 151 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணி ஒரு கட்டத்தில் எளிதில் வெற்றி பெற்று விடும் என்றே தோன்றியது. ஆனால் கடைசி நேரத்தில் ஆட்டம் கொல்கத்தா பக்கம் திரும்பியது. அதற்கு காரணம், கொல்கத்தாவின் அறிமுக வீரர் கிறிஸ் லின் தான். 3 பந்துகளில் 6 ரன் தேவைப்பட்ட போது, டிவில்லியர்ஸ் 'டீப் மிட்' விக்கெட் திசையில் சிக்சரை நோக்கி பலமாக தூக்கி அடித்தார். எல்லைக்கோடு அருகே நின்ற கிறிஸ் லின், உடலை வில்லாக வளைத்து பின்னோக்கி பாய்ந்தபடி பந்தை பிடித்தார். அவர் கேட்ச் செய்த நிலைமையை பார்த்த போது, எப்படியும் பவுண்டரி எல்லையில் விழுந்து சிக்சராக மாறி விடும் என்று தான் அனைவரும் நினைத்தனர். ஆனால் அவர் 'நான் ஒன்றும் சாதாரண பீல்டர் கிடையாது, ஆஸ்திரேலியாவில் இருந்து வந்தவன்' என்பதை சொல்லாமல் சொல்வது போல், கண்ணிமைக்கும் நேரத்தில் சரிவில் இருந்து உடலை மீட்டுக் கொண்டு மயிரிழையில் எல்லைக்கோட்டிற்கு உள்பகுதியில் விழுந்தார். கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கேட்ச் இது என்று பேஸ்புக், டுவிட்டரில் பாராட்டுகள் குவிகின்றன. இந்த கேட்ச்சை ரசிகர்களால் எளிதில் மறந்து விட முடியாது. பரவசப்படுத்திய இந்த கேட்ச்சுக்கு பிறகு, வீசப்பட்ட இரு பந்துகளில் 3 ரன் மட்டுமே எடுக்கப்பட, 2 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவுக்கு வெற்றி கிடைத்தது. பின்னர் கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர் கூறுகையில், 'இந்த வெற்றி மகத்தானது. ஏற்கனவே இது போன்று கடைசி பந்துகளில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறோம். இதற்கு அதிர்ஷ்டமும் தேவை. டிவில்லியர்சின் கேட்ச்சை கிறிஸ் லின் பிடித்த விதம் நம்பவே முடியவில்லை. அவர் கேட்ச் செய்ய தவறியிருந்தால், பெங்களூர் வீரர் டிவில்லியர்ஸ் ஆட்டத்தை முடித்திருப்பார். இதுவே ஆட்டத்தின் திருப்பு முனை. இந்த கேட்ச்சுக்காகவே அவர் ஆட்டநாயகன் விருது பெறுவதற்கு தகுதியானவர்' என்றார். image: category:Tagging: |
| சர்வதேச கைப்பந்து பயிற்சியாளர்கள் பயிற்சி முகாம் சென்னையில் தொடங்கியது Posted: 25 Apr 2014 01:00 PM PDT சென்னை, சென்னை நேரு ஸ்டேடியத்தில் செயல்பட்டு வரும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சர்வதேச கைப்பந்து சம்மேளன மண்டல வளர்ச்சி மையம் சார்பில் சர்வதேச கைப்பந்து பயிற்சியாளர் (லெவல்–1) பயிற்சி முகாம் சென்னையில் நேற்று தொடங்கியது. பயிற்சி முகாமை வருமான வரி துணை இயக்குனர் எஸ்.அன்புசெல்வம் தொடங்கி வைத்தார். இதில் இந்தியா மற்றும் கென்யாவை சேர்ந்த பயிற்சியாளர்கள், வீரர்கள் மொத்தம் 40 பேர் கலந்து கொண்டுள்ளனர். பயிற்சி முகாமின் அறிவுரையாளர்களாக தாட்சுயா அடாசி (ஜப்பான்), ஸ்ரீதரன் (இந்தியா), பானிஸ்லாவ் மோரே (செர்பியா) ஆகியோர் இருந்து பயிற்சி அளிக்கிறார்கள். இந்திய கைப்பந்து சம்மேளன தலைமை செயல் அதிகாரி கே.முருகன் உள்பட பலர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். இந்த முகாம் மே 6–ந் தேதி வரை நடக்கிறது. image: category:Tagging: |
| மேல்மலையனூரில், பனைமரத்தில் கார் மோதி விபத்து நிதிநிறுவன அதிபர் உள்பட 3 பேர் பலி Posted: 25 Apr 2014 12:41 PM PDT மேல்மலையனூர், பனை மரத்தில் கார் மோதிய விபத்தில் நிதி நிறுவன அதிபர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். இந்த கோர விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- நிதிநிறுவன அதிபர் திண்டுக்கல் மாவட்டம் கூத்தப்பட்டியை சேர்ந்தவர் திருமலை. இவருடைய மகன் சுரேஷ்(வயது 33). இவர் சென்னை பம்மலில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அவருடன் சேர்ந்து நிதி நிறுவனம் நடத்தி வரும் தங்கவேல் தனது குடும்பத்தினருடன், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு நேற்று காலையில் வந்தார். தங்கவேலின் அழைப்பின் பேரில் சுரேஷ் தனது உறவினர்களான வரதராஜன் மகன் சின்னராஜ்(வயது 25), உலகநாதன் மகன் ராஜசேகர்(28), பார்த்திபன் மகன் கார்த்திகேயன்(29), சுந்தரம் மகன் ஆனந்தன்(33), கருப்பண்ணசாமி மகன் விசு(27) ஆகியோருடன் மற்றொரு காரில் சென்னையில் இருந்து மேல்மலையனூருக்கு புறப்பட்டு வந்தார். 3 பேர் பலி அவர்கள் கார் நேற்று மதியம் 2.50 மணியளவில் மேல்மலையனூர் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது திடீரென காரின் முன்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அதனால் கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் நின்ற பனை மரம் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த சின்னராஜ் ரோட்டில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். நிதிநிறுவன அதிபர் சுரேஷ் உள்பட 5 பேரும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவனைக்கு செல்லும் வழியிலேயே ராஜசேகர் பரிதாபமாக இறந்தார். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் சுரேஷ் இறந்தார். 3 பேர் படுகாயம் இதையடுத்து கார்த்திகேயன், ஆனந்தன், விசு ஆகிய 3 பேரையும் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வளத்தி போலீசார், விபத்தில் பலியான சின்னராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து செஞ்சி ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்த உறவினர்கள், 3 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. விபத்து குறித்து வளத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். image: category: |
| கடந்த 2013–14–ஆம் நிதி ஆண்டில் பெரிய துறைமுகங்கள் கையாண்ட நிலக்கரி 21 சதவீதம் அதிகரிப்பு Posted: 25 Apr 2014 12:18 PM PDT புதுடெல்லி கடந்த 2013–14–ஆம் நிதி ஆண்டில் பெரிய துறைமுகங்கள் கையாண்ட நிலக்கரி 21 சதவீதம் அதிகரித்து 8.70 கோடி டன்னிலிருந்து 10.50 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இறக்குமதி அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணமாகும். சாதாரண நிலக்கரி அனல் மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் 'தெர்மல் கோல்' எனப்படும் சாதாரண நிலக்கரி வரத்து பெரிய துறைமுகங்களில் 22 சதவீதம் அதிகரித்து 5.87 கோடி டன்னிலிருந்து 7.16 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. சாதாரண நிலக்கரி தேவைப்பாட்டில் சுமார் 80 சதவீதம் பொதுத்துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனத்தால் ஈடுசெய்யப்படுகிறது. கடந்த 2013–14–ஆம் நிதி ஆண்டில் உள்நாட்டில் இந்நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி இலக்கை விட (48.20 கோடி டன்) 2 கோடி டன் குறைந்து 46.20 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது. 2012–13–ஆம் நிதி ஆண்டிலும் உற்பத்தி நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை காட்டிலும் 2.5 சதவீதம் குறைந்து 45.25 கோடி டன்னாக குறைந்திருந்தது. தேவை – உற்பத்தி நடப்பு 2014–15–ஆம் நிதி ஆண்டில் 50.70 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய கோல் இந்தியா நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. 2016–17–ஆம் நிதி ஆண்டில் தேவைப்பாட்டிற்கும், உற்பத்திக்கும் உள்ள இடைவெளி 18.55 கோடி டன்னாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கோல் இந்தியாவிற்கு கூடுதலாக 30 கோடி டன் நிலக்கரியை சப்ளை செய்யும் திறன் உள்ள நிலையிலும் போக்குவரத்து வசதி குறைவாக உள்ளது ஒரு தடையாக உள்ளது என அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ்.நரசிங் ராவ் தெரிவித்துள்ளார். ஆக, உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி குறைந்துள்ளதால் இறக்குமதி அதிகரித்து துறைமுகங்களால் கையாளப்படும் சரக்கு அளவு உயர்ந்துள்ளது. இறக்குமதி அதிகரிப்பால் அன்னியச் செலாவணி வெளியேற்றத்திற்கும், வரவுக்கும் இடையில் உள்ள வித்தியாசமான நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் கடந்த நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதற்கு முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் 50 சதவீதம் குறைந்துள்ளது. அனல் மின் நிலையங்கள் நாட்டின் மின் உற்பத்தியில் 70 சதவீதம் அனல் மின் நிலையங்கள் வாயிலாக நிறைவேற்றப்படுகிறது. எனவே, நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம் என பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நிலக்கரி உற்பத்தியில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. உருக்கு தயாரிப்பில் 'கோக்கிங் கோல்' எனப்படும் சிறப்பு வகை நிலக்கரி எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. கடந்த நிதி ஆண்டில் பெரிய துறைமுகங்களுக்கு வந்து இறங்கிய இந்த நிலக்கரி 18.26 சதவீதம் அதிகரித்து 3.31 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. உருக்குத் துறை நிறுவனங்கள் உற்பத்தி அதிகரிப்பில் கவனம் செலுத்தியதால் இவ்வகை நிலக்கரி இறக்குமதி உயர்ந்துள்ளது. 12 பெரிய துறைமுகங்கள் நம் நாட்டில் தற்போது 12 பெரிய துறைமுகங்கள் உள்ளன. சென்னை, கொச்சி, எண்ணூர், ஜவஹர்லால் நேரு துறைமுக பொறுப்பு கழகம், கண்ட்லா, கொல்கத்தா (ஹால்டியா உள்பட) மர்மகோவா, மும்பை, புதிய மங்களூர், பரதீப், தூத்துக்குடி மற்றும் விசாகப்பட்டினம் ஆகியவையே இந்த 12 துறைமுகங்களாகும். இந்தியாவில் கையாளும் சரக்குகளில் 61 சதவீதம் இந்த துறைமுகங்கள் வாயிலாக கையாளப்படுகிறது. துறைமுக வளர்ச்சி திட்டங்களுக்கான முதலீடு மூன்று மடங்கு உயர்ந்தது கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கடந்த 2013–14–ஆம் நிதி ஆண்டில் ரூ.20,709.93 கோடி மதிப்பில் 30 துறைமுக வளர்ச்சி திட்டங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கியது. இது, முந்தைய நிதி ஆண்டின் (2012–13) முதலீட்டை (ரூ.6,765.63 கோடி) காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாகும். 2013–14–ஆம் நிதி ஆண்டில் துறைமுக மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் (ரூ.20,709.93 கோடி) வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால், துறைமுகங்களின் ஆண்டு சரக்குகள் கையாளும் திறன் 21.76 கோடி டன் அதிகரிக்கும். image: category:Tagging: |
| வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு Posted: 25 Apr 2014 12:15 PM PDT திருவாரூர், நாகை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக் குப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் நாகை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நேற்றுமுன்தினம் அமைதி யான முறையில் நடைபெற்றது. நாகை தொகுதி முழுவதிலும் வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந் திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான திருவாரூர் திரு. வி.க. அரசு கலை கல்லூரி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள அறைக்கு சீல் வைக் கப்பட்டுள்ளது. அறை முன் பாக போலீசார் 24 மணிநேர மும் தொடர்ந்து கண்காணிப்பு பணி செய்து வருகிறார்கள். இந்த மையத்தைச் சுற்றிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக நாகை தொகுதி முழுவதிலும் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந் திரங்களை வாக்கு எண் ணிக்கை மையத்துக்கு கொண்டு வரும் பணி நேற்று முன்தினம் இரவு தொடங்கி காலை வரை நடைபெற்றது. பல்வேறு தொகுதிகளில் இருந்து வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கட்டிடங்களில் வைக்கப்பட் டது. அறைகளில் வாக்கு சாவடி எண் எழுதப்பட்ட பகுதியில் மின்னணு வாக்கு பதிவு எந்திரம் வரிசைப்படி அடுக்கி வைக்கப்பட்டுள் ளது. ஆய்வு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை களின் பாதுகாப்பு வசதி தொடர்பாக நாகை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான நட ராசன், தேர்தல் பார்வையாளர் அனுபம்ராஜன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்த னர். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு காளிராஜ்மகேஷ்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி மணிமாறன், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண் டல மேலாளர் அழகிரிசாமி, மாவட்ட கலெக்டரின் நேர் முக உதவியாளர் ரவிச்சந்திரன், தேர்தல் தாசில்தார் காமராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். image: category: |
| ஏப்ரல் மாதத்தின் முதல் 2 வாரங்களில் முன்பேர சந்தைகளின் வர்த்தகம் 70 சதவீதம் சரிவடைந்தது Posted: 25 Apr 2014 12:15 PM PDT புதுடெல்லி ஏப்ரல் மாதத்தின் முதல் 2 வாரங்களில் முன்பேர சந்தைகளின் வர்த்தகம் 70 சதவீதம் குறைந்து ரூ.2.36 லட்சம் கோடியாக சரிவடைந்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில் ரூ.7.87 லட்சம் கோடியாக இருந்தது. வேளாண் விளைபொருள்கள் தங்கம் மற்றும் வெள்ளி, வேளாண் விளைபொருள்கள் ஆகிய துறைகளின் வர்த்தகத்தில் ஏற்பட்ட அதிகப்படியான வீழ்ச்சியால் முன்பேர வர்த்தகம் சரிவடைந்துள்ளது. கணக்கீடு செய்ய எடுத்துக் கொண்ட காலத்தில், கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள்கள் மீதான முன்பேர வர்த்தகம் 71 சதவீதம் சரிவடைந்து ரூ.1.85 லட்சம் கோடியிலிருந்து ரூ.54,647 கோடியாக குறைந்துள்ளது. தாமிரம் போன்ற உலோகங்கள் மீதான வர்த்தகம் 64 சதவீதம் சரிவடைந்து ரூ.1.31 லட்சம் கோடியிலிருந்து ரூ.47,234 கோடியாக குறைந்துள்ளது. வேளாண் விளைபொருட்கள் மீதான வர்த்தகம் 46 சதவீதம் சரிவடைந்து ரூ.85,853 கோடியிலிருந்து ரூ.46,760 கோடியாக குறைந்துள்ளது. தங்கம், வெள்ளி தங்கம், வெள்ளி மீதான வர்த்தகம் 77 சதவீதம் சரிவடைந்து ரூ.3.84 லட்சம் கோடியிலிருந்து ரூ.87,997 கோடியாக குறைந்துள்ளது. தற்போது தேசிய அளவிலும், பிராந்திய அளவிலும் மொத்தம் 17 முன்பேர வர்த்தக சந்தைகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் எஃப்.எம்.சி. என்று அழைக்கப்படும் முன்பேர வர்த்தக ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. முன்பேர வர்த்தக சந்தைகளின் மொத்த வர்த்தகத்தில் எம்.சி.எக்ஸ். சந்தையின் பங்களிப்பு பெரிய அளவில் உள்ளது. கணக்கீட்டு காலத்தில் இந்த சந்தையில் நடைபெற்ற வர்த்தக மதிப்பு ரூ.1.94 லட்சம் கோடியாகும். என்.சி.டீ.இ.எக்ஸ்., ஏ.சி.இ., யு.சி.எக்ஸ்., என்.எம்.சி.இ. மற்றும் ஐ.சி.இ.எக்ஸ். ஆகிய சந்தைகளில் நடைபெற்ற வர்த்தகம் முறையே ரூ.38,218 கோடி, ரூ.2,291 கோடி, ரூ.915 கோடி, ரூ.571 கோடி மற்றும் ரூ.29 லட்சமாக உள்ளது. வளர்ச்சி அதிகரிக்க... முன்பேர வர்த்தகத்தின் வளர்ச்சியை அதிகரிக்க எஃப்.எம்.சி. தேசிய அளவிலான சந்தைகளுக்கு மாறுபட்ட பரிவர்த்தனை வரி விதிப்பிற்கு அனுமதி அளித்துள்ளது. சென்ற 2013–14–ஆம் நிதி ஆண்டில் முன்பேர சந்தைகளின் ஒட்டுமொத்த வர்த்தகம் 41 சதவீதம் குறைந்து ரூ.101.41 லட்சம் கோடியாக சரிவடைந்தது. இது, அதற்கு முந்தைய நிதி ஆண்டில் ரூ.170.46 லட்சம் கோடியாக உயர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. image: category:Tagging: |
| கோழிக்கடை உரிமையாளரை ஓட, ஓட விரட்டி குத்திக் கொலை 4 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு Posted: 25 Apr 2014 12:10 PM PDT திண்டுக்கல், பட்டிவீரன்பட்டி அருகே கோழிக்கடை உரிமையாளரை ஓட, ஓட விரட்டி குத்திக் கொலை செய்த 4 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோழிக்கடை அதிபர் திண்டுக்கல் மாவட்டம் பட்டி வீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவுவை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மகன் சலீம் (வயது 34). இவர் அதே பகுதியில் கோழிக்கறிக்கடை நடத்தி வந்தார். இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இரவு 10 மணிக்கு மேல் தனது நண்பர்களுடன் சேர்ந்த நடுரோட்டில் கேரம் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மஸ்தான் (32), ஜெய்னுலாபுதீன் (30) ஆகியோர் ரோட்டில் நடந்து வந்தனர். நடுரோட்டில் கேரம் விளையாடிக் கொண்டு இருந்ததால் இவர்களால் ரோட்டை கடந்து செல்ல முடியவில்லை. இதையொட்டி சலீமை இவர்கள் தட்டிக் கேட்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில் சலீம் தனது நண்பர்களுடன் சேர்ந்து மஸ்தான், ஜெய்னுலாபுதீன் இரண்டு பேரையும் சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. கொலை இதில் பலத்த காயம் அடைந்த ஜெய்னுலாபுதீன் பரிதாபமாக செத்தார். மஸ்தான் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பினார். ஜெய்னுலாபுதீன் கொலை குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சலீமை கைது செய்தனர். இந்த கொலையில் தொடர்புடைய குத்புதீன், அப்பாஸ், அபுதாகீர், சாதிக் ஆகிய 4 பேரும் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் சலீம் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் சித்தரேவு பகுதியில் வழக்கம் போல் கோழிக்கறி கடை நடத்தி வந்தார். நேற்று காலை 10.30 மணி அளவில் அவர் சித்தரேவு டோல்கேட் பகுதியில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்றார். ஓட, ஓட விரட்டி கொலை அப்போது மஸ்தான் மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் சேர்ந்து இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் சலீமை திடீரென்று கத்தியால் சரமாரியாக குத்தினார்கள். உடனே சலீம் உயிர் பிழைப்பதற்காக அங்கிருந்த ரத்தக் காயத்துடன் தப்பி ஓடி வந்தார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி வந்தது. சுமார் 100 அடி தூரம் விரட்டி வந்த அந்த கும்பல் அவரை வழிமறித்து மீண்டும் சரமாரியாக கத்தியால் குத்தினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த சலீம் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பலியானார். உடனே அந்த கும்பல் ஒரு மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு, மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டனர். இந்த நிலையில் வாலிபர் ஒருவரை ஒரு கும்பல் விரட்டுவது குறித்து பட்டிவீரன்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்புசாமி போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். ஆனால் அதற்குள் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. பரபரப்பு தகவல் அறிந்ததும் வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோஜி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். சித்தரேவு பகுதியில் பட்டப்பகலில் கோழிக்கடை உரிமையாளரை ஓட, ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. image: category: |
| நடப்பு சந்தை பருவத்தில் கோதுமை கொள்முதல் இலக்கை விட குறையும் Posted: 25 Apr 2014 11:58 AM PDT புதுடெல்லி நடப்பு 2014–15 சந்தை பருவத்தில் (ஏப்ரல்–மார்ச்) கோதுமை கொள்முதல் நிர்ணயித்த இலக்கை விட குறையும் என்று மத்திய உணவுத்துறை செயலாளர் சுதிர் குமார் தெரிவித்தார். இந்திய உணவுக் கழகம் இந்திய உணவுக் கழகம் மத்திய அரசு சார்பில் கோதுமையை கொள்முதல் செய்கிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படுகிறது. கோதுமை கொள்முதல் பருவம் ஏப்ரல் 1–ந் தேதி தொடங்கி மார்ச் 31–ந் தேதி நிறைவடைகிறது. எனினும் ஜூன் மாதத்திற்குள் இந்திய உணவுக் கழகம் அநேகமாக கொள்முதலை நிறைவு செய்து விடுகிறது. இந்திய உணவுக் கழகம் கடந்த பருவத்தில் (2013–14) மொத்தம் 2.50 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்தது. நடப்பு பருவத்தில் இக்கழகமும், மற்ற அரசு முகமை அமைப்புகளும் சேர்ந்து இதுவரை 75 லட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்துள்ளன. இது கடந்த பருவத்தின் இதே காலத்தை விட ஏறக்குறைய மூன்று மடங்கு (1.20 கோடி டன்) குறைவாகும். இந்த நிலையில் இந்திய உணவுக்கழகத்தின் கொள்முதல் சென்ற ஆண்டின் 2.50 கோடி டன்னை விட குறையும் என சுதிர் கூறினார். மாவு ஆலைகள் சந்தித்து வரும் சவால்கள் தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இதனை தெரிவித்தார். நடப்பு பருவத்தில் ஒட்டுமொத்த அளவில் 3.10 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இலக்கை விட கொள்முதல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவம் தவறி பெய்த மழையால் பஞ்சாப் மாநிலத்தில் அறுவடை தாமதம் ஆனது. இதன் விளைவாக கோதுமை கொள்முதலும் அங்கு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மேலும் அங்குள்ள முகமை அமைப்புகள் ஈரப்பதம் அதிகம் உள்ளதாக கூறி கோதுமையை வாங்க மறுப்பதாக அம்மாநில விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். அந்த மாநிலத்தில் இந்திய உணவு கழகம் இந்த ஆண்டில் 9.41 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளது. கடந்த பருவத்தில் அங்கு 43 லட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அரியானா, மத்தியபிரதேசம் அரியானாவில் கோதுமை கொள்முதல் 37 லட்சம் டன்னிலிருந்து 32 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. மத்தியபிரதேசத்திலும் 36 லட்சம் டன்னிலிருந்து 32 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது. image: category:Tagging: |
| கோவையில் சம்பவம்: சிலிண்டர் வெடித்து குழந்தைகள் உள்பட 5 பேர் படுகாயம் Posted: 25 Apr 2014 11:43 AM PDT பேரூர், கோவையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் குழந்தைகள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். கியாஸ் அடுப்பை சரி செய்த போது மண்எண்ணெய் அடுப்பை பற்ற வைத்ததால் ஏற்பட்ட இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– கியாஸ் கசிவு கோவையை அடுத்த சுண்டக்காமுத்தூர், பட்டிசெட்டி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 40). இவர் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ருக்குமணி(35). இவர்களுக்கு பாலாஜி (11) என்ற மகனும், லாவண்யா (8) என்ற மகளும் உள்ளனர். நேற்று காலை ருக்குமணி வீட்டில் வழக்கம்போல் சமையல் செய்ய சென்றார். அப்போது சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்தது தெரியவந்தது. இது குறித்து உடனே அவர், சம்பந்தப்பட்ட கியாஸ் ஏஜென்சி ஊழியர் ரங்கராஜ் என்பருக்கு செல்போனில் தகவல் கொடுத்துள்ளார். பழுது பார்த்தார் இதைத்தொடர்ந்து ஊழியர் ரங்கராஜ், சிலிண்டர் மற்றும் அடுப்பை சரி செய்யும் உபகரணங்களுடன் அங்கு விரைந்து வந்தார். பின்னர் அவர் சிலிண்டரில் இருந்து வெளியேறிக்கொண்டிருந்த கியாஸ் கசிவை நிறுத்துவதற்காக அதனை பழுது பார்த்தார். அவர் சரி செய்வதை வீட்டுக்குள் இருந்தவாறு ருக்மணி, அவரது கணவர் சிவக்குமார், மற்றும் அவர்களுடைய 2 குழந்தைகளும் பார்த்துக்கொண்டிருந்தனர். 5 பேர் படுகாயம் இதற்கிடையில் சமையல் செய்வதற்கு கியாஸ் சிலிண்டரில் பிரச்சினை என்பதால், குழந்தைகளுக்கு அவசரமாக உணவு தயாரிக்க வேண்டி ருக்குமணி வீட்டில் இருந்த மண்எண்ணெய் ஸ்டவ் அடுப்பை எடுத்து அதனை பம்பிங் செய்தார். இதனால் அதில் இருந்து பரவிய தீ, அருகில் இருந்த சிலிண்டரில் கசிந்த கியாசுடன் கலந்து குபீரென பற்றியது. கண் இமைக்கும் நேரத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் வீட்டின் கூரைப்பகுதி சேதம் அடைந்தது. வீட்டின் உள்ளே இருந்த ரங்கராஜ் உள்பட சிவக்குமார், ருக்குமணி மற்றும் 2 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். தீவிர சிகிச்சை பின்னர் அவர்கள் கோவை தீயணைப்பு நிலையத்துக்கும், பேரூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் தீயில் கருகி படுகாயம் அடைந்த ரங்கராஜ் உள்பட 5 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். image: category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |