Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


நாட்டின் பரிதாப நிலைக்கு சோனியா, ராகுல் தான் காரணம் நரேந்திரமோடி குற்றச்சாட்டு

Posted: 15 Apr 2014 01:56 PM PDT

ஹசாரிபாக்,

நாட்டின் பரிதாப நிலைக்கு சோனியா, ராகுல் ஆகியோர் தான் காரணம் என்று நரேந்திரமோடி குற்றம் சாட்டினார்.

ராகுலுக்கு பதிலடி

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, மராட்டிய மாநிலம், லாத்தூரில் நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர், "குஜராத் 'மாதிரி' அரசு பற்றி நரேந்திரமோடி பேசி வருகிறார். குஜராத் 'மாதிரி', 'டாபி' (இனிப்பு மிட்டாய்) மாதிரி ஆகும். அவுரங்காபாத் நகரம் மாதிரி ஒரு நிலத்தை 'டாபி'யை பார்சல் செய்து கொடுத்ததுபோல தொழில் அதிபர் அதானிக்கு சதுர மீட்டர் ஒரு ரூபாய் என்ற விலையில் மோடி கொடுத்துள்ளார். எனவே 'குஜராத் மாதிரி' என்பது 'டாபி மாதிரி' என விமர்சித்தார்.

இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலம், ஹசாரிபாக்கில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நரேந்திரமோடி, ராகுலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.

சிறுபிள்ளைத்தனம்

அப்போது அவர் கூறியதாவது:-

இந்த தேர்தலில் சில முக்கியமான பிரச்சினைகள் விவாதிக்கப்படும் என நான் கருதினேன். ஒரு பக்கம் பாரதீய ஜனதாவின் முன்னணி தலைவர்கள் அத்வானி, அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், யஷ்வந்த் சின்கா ஆகியோர் நாட்டின் நலனை குறித்து சிந்தித்து வருகிறார்கள். மற்றொரு பக்கமோ, சிறுபிள்ளைத்தன மான நிலையிலிருந்து வெளிவராத தலைவர்தான் உள்ளார்.

நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கிற தேர்தல் நடக்கிறது. ஆனால் 10 நாட்களாக அவர் (ராகுல் காந்தி) பலூன் என்ற வார்த்தையையே திரும்பத்திரும்ப பேசி வந்தார். ஆனால் குழந்தைகள் ஒரே பொம்மையை வைத்து தொடர்ந்து விளையாடுவதில்லை. அதேபோன்றுதான் இப்போது அவர் 'டாபி' என்ற வார்த்தையை பிடித்துக்கொண்டார்.

தீர்மானியுங்கள்

இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். நான் பலூன்களை வைத்து விளையாடும் வயதில் இல்லை. 'டாபி'யை சுவைக்கும் வயதில் இல்லை. எனது குழந்தைப்பருவத்திலும் எனக்கு 'டாபி' கிடைத்தது இல்லை. ரெயில்களில் டீதான் விற்றுக்கொண்டிருந்தேன். எனது பார்வை, வெற்றி பெறுவதில் தான் இருந்தது.

பலூன்களுடன் விளையாடுபவர் வேண்டுமா? 'டாபி'யை விரும்புகிறவர் வேண்டுமா? தீர்மானிக்க வேண்டியது நீங்கள்தான்.

நாட்டின் பரிதாப நிலை

பாராளுமன்ற தேர்தல் முடிந்தபின்னர், பாராளுமன்ற மக்களவையில் ரகசிய கண்காணிப்பு கேமராக்களுக்கு பதிலாக மக்களவையில் காங்கிரஸ் கட்சி எந்த மூலையில் அமர்ந்திருக்கும் என்பதை கண்டுபிடித்து சொல்ல அதிக சக்திவாய்ந்த கேமராக்களை பொருத்தவேண்டிய தேவை ஏற்படும்.

நாட்டின் பரிதாப நிலைக்கு சில நேரங்களில் தாயும், மகனும்தான் (சோனியா, ராகுல்) பொறுப்பு. சில நேரங்களில் மகளும், மருமகனும் (பிரியங்கா, ராபர்ட் வதேரா) பொறுப்பு.

தாக்கி இருக்கக்கூடாது

கடந்த 10 ஆண்டுகளாக நான் பிரதமரை கடினமான வார்த்தைகளால் தாக்கி வந்துள்ளேன். ஆனால் இப்போது அந்தப் புத்தகத்தை (சஞ்சய் பாரு எழுதிய புத்தகம்) வாசித்தபின்னர், நான் அவரை தாக்கி இருக்கக்கூடாது என உணர்கிறேன். ஏனெனில் தப்பு அவருடையது அல்ல. ஒட்டுமொத்த தப்பும் தாயும், பிள்ளையும் செய்ததுதான்.

இப்போது உள் அரங்கத்தில் நடந்தவற்றை சஞ்சய் பாரு அம்பலப்படுத்தி விட்டதில் மகள் (உபேந்தர் சிங்) கோபம் அடைந்திருக்கிறார். இதன் அர்த்தம், சஞ்சய் பாரு எழுதியது எல்லாம் சரி என்பதுதான்.

இளைஞர்களுக்கு முக்கிய பங்கு

இந்தத் தேர்தல் 18-28 வயதினருக்கு மிக முக்கியமான தேர்தல். இது உங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல். இந்த வாய்ப்பை நீங்கள் தவற விட்டுவிட்டால், இன்னும் 5 வருடங்கள் நீங்கள் காத்திருக்க வேண்டியது நேரிட்டு விடும். ஆனால் வேலைவாய்ப்பை நாடி காத்திருக்கிற இந்த வயதினர், இந்த வாய்ப்பை நழுவ விட்டுவிடக்கூடாது.

நோயாளியான, பலவீனமான, 'ரிமோட் கண்ட்ரோலில்' இயக்கப்படுகிற அரசை மக்கள் விரும்பவில்லை. எனவே டெல்லியில் ஒரு வலிமையான அரசை ஏற்படுத்துவதில் இளைய தலைமுறையினரின் பங்கு மிக முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

category:

News Group Category:

மராட்டிய தேர்தல் பிரசாரத்தில் மோடி மீது ராகுல் பரபரப்பு புகார் “பெண்களின் தொலைபேசி பேச்சை பதிவு செய்கிறார்”

Posted: 15 Apr 2014 01:51 PM PDT

புனே,

மராட்டிய தேர்தல் பிரசாரத்தில், பெண்களின் தொலைபேசி பேச்சை பதிவு செய்வதாக நரேந்திர மோடி மீது ராகுல் காந்தி பரபரப்பு புகார் கூறினார்.

மராட்டியத்தில் ராகுல்

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, மராட்டிய மாநிலத்தின் கலாசார தலைநகரான புனேயில் போட்டியிடும் கட்சி வேட்பாளர் விஷ்வஜித் கதத்துக்கு ஆதரவாக நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி பெண்களின் தொலைபேசி பேச்சுக்களை பதிவு செய்கிறார். மாநில போலீசார் பெண்களை பின்தொடர்ந்து செல்கின்றனர் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்து பேசுவதற்கு முன்பாக அவர்கள் முதலில் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா

காங்கிரசுடன் ஒப்பிடுகையில் பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களில் பெண்கள் நிலை மோசமாக உள்ளது. சத்தீஷ்காரில் 20 ஆயிரம் பெண்கள் காணாமல் போய் உள்ளனர். நாங்கள் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காக கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை பாரதீய ஜனதா எதிர்க்கிறது.

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் ஒரு பொதுக்கூட்டத்துக்கு சுமார் ரூ.10 கோடி செலவிடப்படுகிறது. இதற்கு பணம் 'டாபி மாதிரி' குஜராத்திலிருந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

category:

News Group Category:

பாராளுமன்றத்துக்கு 5-வது கட்ட தேர்தல் 121 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது

Posted: 15 Apr 2014 01:47 PM PDT

புதுடெல்லி,

பாராளுமன்றத்துக்கு 5-வது கட்டமாக 12 மாநிலங்களில் பரவி உள்ள 121 தொகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது. அங்கு அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது.

5-வது கட்ட தேர்தல்

பாராளுமன்றத்துக்கு கடந்த 7-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 12-ந்தேதி வரை 9 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 4 கட்டங்களில் 109 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

5-வது கட்டமாக 12 மாநிலங்களில் பரவியுள்ள 121 தொகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) தேர்தல் நடக்கிறது. மாநிலவாரியாக ஓட்டுப்பதிவு நடக்கிற தொகுதிகள் எண்ணிக்கை வருமாறு:-

பீகார் - 7

சத்தீஷ்கார் - 3

காஷ்மீர் - 1

ஜார்கண்ட் - 5

கர்நாடகம் - 28

மத்தியபிரதேசம் - 10

மராட்டியம் - 19

மணிப்பூர் - 1

ஒடிசா - 11

ராஜஸ்தான் - 20,

உத்தரபிரதேசம் - 11

மேற்குவங்காளம் - 4

1,739 வேட்பாளர்கள்

இந்த தேர்தலில் 121 தொகுதிகளில் மொத்தம் 1,739 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி 101 தொகுதிகளிலும், ஆட்சியைப் பிடிக்க பகீரதப்பிரயத்தனம் செய்யும் பாரதீய ஜனதா 105 தொகுதிகளிலும், புதிதாக களம் இறங்கியுள்ள ஆம் ஆத்மி கட்சி 108 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.

இவர்களில் மொத்தம் 465 வேட்பாளர்கள் கோடீசுர வேட்பாளர்கள் ஆவார்கள். காங்கிரஸ் வேட்பாளர் நந்தன் நிலகேனி (பெங்களூர் தெற்கு), ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் அனில் குமார் சர்மா (ஜெகனாபாத்), மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர் பிரபாகர ரெட்டி (பெங்களூர் ஊரகம்) ஆகிய மூவரும் தான் மிகப்பெரும் பணக்காரர்கள் என்ற பெயரைப் பெற்றுள்ளனர்.

முக்கிய தலைவர்கள்

121 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலை 6 மணிக்கு முடிந்தது. இந்தத் தொகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு முடிகிறது.

நாளை தேர்தலை சந்திக்கிற தலைவர்களில் மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவான் (நாந்தெட் காங்கிரஸ்), லாலு பிரசாத் மகள் மிசா பாரதி (பாடலிபுத்திரம் ராஷ்ட்ரீய ஜனதாதளம்), பா.ஜனதாவிலிருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் (பார்மர்), மேனகா காந்தி (பிலிப்பிட் பா.ஜனதா), மத்திய மந்திரி வீரப்பமொய்லி (சிக்பல்லப்பூர் காங்கிரஸ்), கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி (சிக்பல்லப்பூர் மதசார்பற்ற ஜனதாதளம்) உள்ளிட்டவர்கள் அடங்குவார்கள்.

5-வது கட்ட பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் நாளை ஓட்டுப்பதிவு நடப்பது குறிப்பிடத்தக்கது.

நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள பீகார், ஜார்கண்ட், சத்தீஷ்கார், ஒடிசா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

category:

News Group Category:

பிரசாரத்தின்போது வன்முறை பேச்சு மீது கடும் நடவடிக்கை எடுங்கள் மாநில, மாவட்ட அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு

Posted: 15 Apr 2014 01:42 PM PDT

புதுடெல்லி,

தேர்தல் பிரசாரத்தின்போது வன்முறையை உருவாக்கும் விதமாக பேசுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாநில, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வன்முறை பேச்சு

16-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் 9 கட்டங்களாக நடக்கிறது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் கட்சித் தலைவர்கள் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி வெறுப்பூட்டி பேசுவதும், இரு தரப்பினரிடையே வன்முறையை உருவாக்கும் வகையில் பேசுவதும் நாடு முழுவதும் பரவலாக காணப்படுகிறது.

அண்மையில் நரேந்திர மோடியின் வலது கரமாக கருதப்படுபவரான அமித் ஷா, சமாஜ்வாடி தலைவர்களில் ஒருவரான அசம் கான் ஆகியோரது வெறுப்பூட்டும் பேச்சுக்கள் காரணமாக அவர்கள் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்தது. மேலும், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமைய்யா, மத்திய மந்திரி பெனி பிரசாத் வர்மா ஆகியோரை அவர்களது பேச்சுகளுக்காக தேர்தல் கமிஷன் கடுமையாக எச்சரித்தது.

தற்போது தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரசாரம் குறித்து மாநில மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை தலைமை தேர்தல் கமிஷன் நேற்று அதிரடியாக பிறப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

முடுக்கிவிட வேண்டும்

சில இடங்களில் தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த முடியாத அளவிற்கு பேசிய அரசியல் கட்சியினர் மீது தேர்தல் அதிகாரிகள் சரிவர தலையிட்டு நடவடிக்கை எடுக்காததும், சில இடங்களில் இதன் பின்னான பணிகளை இவர் கள் தொடராததும் தலைமை தேர்தல் கமிஷனின் கவனத்திற்கு வந்துள்ளது.

தேர்தலை சீர்குலைக்கும் வகையில் வெறுப்பூட்டும் விதமாக பேசுபவர்கள் மீது மாநில மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சட்ட ரீதியான நடவடிக்கைகளை தவறாமல் முடுக்கிவிடவேண்டும். அரசியல் கட்சிகளின் அனைத்து தேர்தல் பிரசாரங்கள் குறித்தும் மாநில, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கவேண்டும்.

அதேபோல் பிரசாரத்தின் வீடியோ காட்சிகளை பார்த்து தேர்தல் களப் பணியாளர்கள் அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுகிறார்களா? என்பதையும் பார்க்கவேண்டும். இதில் எந்தவிதமான மாறுபாடும் இருக்கக் கூடாது.

வழக்கு பதிவு செய்யுங்கள்

கோபமூட்டும் வகையிலோ, ஆத்திரமூட்டும் வகையிலோ யாராவது பிரசாரத்தின்போது பேசினால், மாவட்ட தேர்தல் அதிகாரியும், போலீஸ் சூப்பிரண்டும் அது தொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கவேண்டும்.

அதில் இருக்கும் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, அதன்பின்னர் அவர்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுப்பதை உறுதி செய்து வழக்குப் பதிவு செய்வது, பொருத்தமான சட்டப்பிரிவுகளில் வழக் குப் பதிவு செய்வது போன்ற நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்கவேண்டும்.

தெரிவிக்கவேண்டும்

மேலும் இது தொடர்பான தகவல்களை உடனடியாக மாநில தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்கவேண்டும். அத்துடன் ஊடகங்களுக்கு இது பற்றி தேர்தல் அதிகாரிகள் பேட்டியளித்து பொதுமக்களின் கவனத்துக்கும் இதனை கொண்டு செல்லவேண்டும். ஊடகங்களில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் குறித்து செய்திகள் வெளியானால் அதற்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும் உரிய மதிப்பளிக்கவேண்டும்.

தேர்தல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர்களிடம், தலைவர்களின் முழுமையான பேச்சு அடங்கிய 2 சி.டி. நகல்களை ஒப்படைப்பதை தேர்தல் களப் பணியாளர்கள் எழுத்துப்பூர்வமாக பெறவேண்டும். இதில் எந்த தாமதமும் இருக்கக் கூடாது.

இவ்வாறு தேர்தல் கமிஷனின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
 

category:

News Group Category:

திருநங்கைகளை ‘மூன்றாம் இனத்தவராக’ அங்கீகரித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கல்வி, வேலை வாய்ப்பில் சம உரிமை வழங்கவும் உத்தரவு

Posted: 15 Apr 2014 01:36 PM PDT

புதுடெல்லி,

திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவர் என அங்கீகரித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் சம உரிமை வழங்கவும் உத்தரவிட்டது.

பொது நல வழக்கு

இறைவனின் படைப்பில் ஆண்கள், பெண்கள் என இரு பாலினத்தவருடன், திருநங்கைகள் என்ற தனி இனத்தவரும் உள்ளனர். இவர்களது பாலின அடையாளம் குறித்து எந்தவொரு அங்கீகாரமும் சட்டப்படி கிடைக்காத நிலை இருந்து வந்தது.

இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில், தேசிய சட்டப்பணிகள் ஆணையம் ஒரு பொது நல வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில், திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவர் என ஏற்று அங்கீகரிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

இந்த வழக்கை நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

விசாரணை முடிவில் திருநங்கையரை மூன்றாம் பாலினத்தவராக அங்கீகரித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். தீர்ப்பில், ஆண்கள், பெண்களை அடுத்து திருநங்கைகளை தனியாக மூன்றாம் பாலினத்தவராக அங்கீகரிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்

தீர்ப்பில் நீதிபதிகள் கூறி இருக்கும் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* திருநங்கைகளும் இந்த நாட்டின் குடிமக்கள்தான். அவர்களுக்கும் கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்புகள் போன்றவற்றில் ஆண்களைப்போன்று, பெண்களைப்போன்ற சம உரிமை உண்டு.

* சமுதாயத்தில் திருநங்கைகள் துன்புறுத்தப்படுவது, பாகுபாடு பார்க்கப்படுவது வருத்தம் அளிக்கிறது. முன்பு சமுதாயத்தில் திருநங்கைகள் மதிக்கப்பட்டு வந்துள்ளனர். ஆனால் அந்த சூழ்நிலை மாறிவிட்டது. இப்போது அவர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுகிறது. அவர்கள் துன்புறுத்தவும்படுகிறார்கள்.

* திருநங்கைகளுக்கு எதிராக இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377-ஐ போலீசாரும், மற்ற அதிகாரிகளும் தவறாக பயன்படுத்துகின்றனர். அவர்களது சமூக, பொருளாதார நிலைமை மிக மோசமாக உள்ளது. அவர்களும் சமுதாயத்தில் ஒரு அங்கம்தான். அவர்களை சமூகத்தின் பிரதான இடத்துக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* இந்த உத்தரவு, திருநங்கைகளுக்கு மட்டுமே பொருந்தும். ஓரினச்சேர்க்கையாளர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு பொருந்தாது.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

திருநங்கைகள் வரவேற்பு

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை திருநங்கைகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

category:

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மன்மோகன்சிங் அதிகாரமிக்க பிரதமர் சஞ்சய்பாருவின் குற்றச்சாட்டுக்கு பிரியங்கா பதில்

Posted: 15 Apr 2014 01:33 PM PDT

அமேதி,

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மன்மோகன்சிங் மட்டுமே அதிகாரமிக்க பிரதமர் என்று பிரியங்கா கூறினார்.

சந்தர்ப்பவச பிரதமர்

பிரதமர் மன்மோகன்சிங்குடன் இணைந்து பணியாற்றிய பிரதமர் அலுவலக உதவியாளரும், ஊடகத்துறை ஆலோசகருமான சஞ்சய் பாரு 'சந்தர்ப்பவசமாக வந்த பிரதமர்' என்ற தலைப்பில் அண்மையில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.

அதில், தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2-வது பதவி காலத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தான் உண்மையான பிரதமராக திகழ்ந்தார். சோனியாவின் பக்க வாத்தியம்தான் மன்மோகன்சிங். சோனியாவின் சொல்படிதான் மன்மோகன்சிங்கால் ஆட்சி நடத்த முடிந்தது... என்று பல்வேறு தகவல்களை தனது புத்தகத்தில் அவர் கூறியிருந்தார். பிரதமரின் செயல்பாடுகள் குறித்து அவரது உதவியாளர் ஒருவரே பகிரங்கமாக புத்தகம் வாயிலாக விமர்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் மறுப்பு

இது முற்றிலும் தவறான தகவல், சஞ்சய்பாருவின் கற்பனை என்று காங்கிரஸ் தரப்பில் மறுக்கப்பட்டது.

பிரதமர் அலுவலகமும் சஞ்சய் பாருவின் குற்றச்சாட்டுகளை மறுத்தது.

எனினும் இது குறித்து சோனியாகாந்தி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் தனது சகோதரர் ராகுல் காந்திக்காக அமேதி தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் 42 வயது பிரியங்காவிடம் சஞ்சய் பாருவின் புத்தகம் குறித்து நிருபர்கள் கேட்டபோது அதற்கு அவர் சுருக்கமாக பேட்டியளித்தார்.

மன்மோகன்சிங் மட்டுமே பிரதமர்

அப்போது, தனது தாயார் சோனியா பிரதமர் போல செயல்பட்டார் என்பதை அவர் மறைமுகமாக மறுத்தார். இது குறித்து பிரியங்கா கூறுகையில் 'மன்மோகன்சிங் மட்டுமே அதிகாரமிக்க பிரதமர்' என்று தெரிவித்தார்.

சோனியா காந்தி நேற்று முன்தினம் தொலைக்காட்சியில் பேசுகையில், 'நாட்டு மக்களை துண்டாட நினைப்பவர்களிடம் இருந்து இந்தியாவின் இதயத்தையும், ஆன்மாவையும் பாதுகாக்கவே தற்போதைய தேர்தல் நடக்கிறது. நாங்கள் ஒற்றுமையை விரும்புகிறோம். அவர்கள் பிரித்தாள நினைக்கிறார்கள். என்னை நம்புங்கள்' என்று குறிப்பிட்டது குறித்து பிரியங்காவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த பிரியங்கா, 'பா.ஜனதா என்னவேண்டும் என்றாலும் சொல்லட்டும். ஆனால் இந்தியாவின் இதயத்தை பாதுகாப்பதற்கான சண்டை தொடர்ந்து நடக்கிறது' என்று கூறிய, அவர் மேற்கொண்டு அது குறித்து விரிவாக எதையும் கூறவில்லை.

category:

ரூபாய் மதிப்பு உயர்வு எதிரொலி பெட்ரோல் விலை 89 காசுகள் குறைந்தது டீசல் விலையில் மாற்றம் இல்லை

Posted: 15 Apr 2014 01:26 PM PDT

புதுடெல்லி,

ரூபாய் மதிப்பு உயர்ந்து வருவதால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 89 காசுகள் குறைக்கப்பட்டது. ஆனால், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

விலை நிர்ணயம்

பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போதிருந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மாதந்தோறும் 1 மற்றும் 16-ந்தேதிகளில் பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

தற்போது, ரூபாய் மதிப்பு உயர்ந்து வருவதால், கடந்த 1-ந்தேதி பெட்ரோல் விலை 99 காசுகள் குறைக்கப்பட்டது.

2-வது முறையாக குறைப்பு

இந்நிலையில், ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக நேற்றும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. உள்ளூர் வரிகளைத் தவிர்த்து, பெட்ரோல் விலை 70 காசுகள் குறைக்கப்படுவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. இந்த விலை குறைப்பு, நேற்று நள்ளிரவு அமலுக்கு வந்தது.

உள்ளூர் வரி குறைப்பையும் சேர்த்து, முக்கிய பெரு நகரங்களில் விலை குறைப்பில் சிறிதளவு வேறுபாடு காணப்பட்டது.

சென்னை

அதன்படி, சென்னையில் ரூ.75 ரூபாய் 49 காசுகளாக இருந்த பெட்ரோல் விலை, ரூ.74 ரூபாய் 60 காசுகளாக குறைந்தது. அதாவது, லிட்டருக்கு 89 காசுகள் குறைந்தது.

டெல்லியில், ரூ.72.26 ஆக இருந்த பெட்ரோல் விலை, 85 காசுகள் குறைந்து, ரூ.71.41 ஆனது.

கொல்கத்தாவில், ரூ.80.13 ஆக இருந்த பெட்ரோல் விலை, 88 காசுகள் குறைந்து, ரூ.79.25 ஆனது.

மும்பையில், ரூ.80.89 ஆக இருந்த பெட்ரோல் விலை, 89 காசுகள் குறைந்து, ரூ.80 ஆனது.

டீசல் விலை

ஆனால், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டீசலுக்கான நஷ்டத்தை ஈடுகட்டும்வரை, மாதந்தோறும் 50 காசுகள் விலையை உயர்த்திக்கொள்ளுமாறு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அனுமதி அளிக்கப்பட்டது. அப்போதிருந்து, இதுவரை 14 தவணைகளாக டீசல் விலை ரூ.8.33 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், டீசல் இன்னமும் லிட்டருக்கு ரூ.5.49 நஷ்டத்தில் விற்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறி வருகின்றன.

தற்போது, தேர்தல் நேரம் என்பதாலும், ரூபாய¢ மதிப்பு உயர்ந்து வருவதாலும், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என்று கருதப்படுகிறது.

category:

News Group Category:

7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் மும்பை–கொல்கத்தா அணிகள் மோதல்

Posted: 15 Apr 2014 01:22 PM PDT

அபுதாபி,

7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் கொண்டாட்டம் அபுதாபியில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் மும்பை–கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008–ம் ஆண்டு முதல், ரசிகர்களின் அமோக ஆதரவுடன் நடந்து வருகிறது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியை முழுமையாக இந்தியாவில் நடத்த முடியவில்லை. இதையடுத்து முதல் 20 ஆட்டங்களை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களிலும், எஞ்சிய ஆட்டங்களை மே 2–ந்தேதி முதல் ஜூன் 1–ந்தேதி வரை இந்திய நகரங்களிலும் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி 7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா அபுதாபியில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர், ஐதராபாத் சன் ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே–ஆப் என்ற அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.

முதல் ஆட்டத்தில் யார்–யார்?

இன்றைய தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சும், 2012–ம் ஆண்டு சாம்பியன் கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதையொட்டி இவ்விரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் தெண்டுல்கர், மும்பை இந்தியன்ஸ் அணியின் 'அடையாளம்' என்ற சிறப்பு அந்தஸ்துடன் அந்த அணியில் தொடருகிறார். வீரர்களுக்கு பல்வேறு யுக்திகளை கற்று கொடுத்து வரும் அவர், நேற்றைய பயிற்சியின் போது சிறிது நேரம் பேட்டிங் செய்தார்.

கடந்த ஆண்டில் தடுமாறிய கொல்கத்தா அணி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் முனைப்புடன் தயாராகி வருகிறது. பந்து வீச்சு ஆலோசகர் வாசிம் அக்ரம் மறுபடியும் இணைந்திருப்பது கொல்கத்தா அணிக்கு கூடுதல் தெம்பை அளிக்கிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 12 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 10–ல் மும்பையும், 2–ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும் தற்போது இவ்விரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது.

வீரர்கள் விவரம்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

கொல்கத்தா: கவுதம் கம்பீர் (கேப்டன்), ராபின் உத்தப்பா, காலிஸ், மனிஷ் பாண்டே அல்லது மன்விந்தர் பிஸ்லா, யூசுப் பதான், கிறிஸ் லின் அல்லது ஷகிப் அல்–ஹசன், பியுஷ் சாவ்லா, வினய்குமார், சுனில் நரின், மோர்னே மோர்கல் அல்லது கம்மின்ஸ், உமேஷ் யாதவ்.

மும்பை: மைக் ஹஸ்சி, ஆதித்ய தாரே, ரோகித் ஷர்மா (கேப்டன்), அம்பத்தி ராயுடு, சிதம்பரம் கவுதம் அல்லது ஜலஜ் சக்சேனா, பொல்லார்ட், கோரி ஆண்டர்சன், ஹர்பஜன்சிங், ஜாகீர்கான், மலிங்கா, பிரக்யான் ஓஜா.

இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இந்த போட்டிக்கான முதல் வார டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன. 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வீரர்களின் ஆட்டத்தை நேரில் பார்க்கும் தரிசனம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மக்களுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கறை மறையுமா?

கடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சூதாட்ட கறை படிந்ததால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி இந்த ஆண்டு போட்டியை நடத்தும் பொறுப்பு முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எந்த பிரச்சினையும் இன்றி போட்டியை நடத்துவதே அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு அவர் முன் நிற்கும் கடுமையான சவாலாகும். அன்னியர்கள் யாரும் நெருங்க முடியாதபடி இந்த முறை வீரர்களுக்கு கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

category:

8 ஐ.பி.எல். அணிகளின் பலம், பலவீனம் என்ன?

Posted: 15 Apr 2014 01:18 PM PDT

அபுதாபி,

இன்று தொடங்கும் 7–வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 8 அணிகள் பங்கேற்கின்றன. வழக்கமாக ஒவ்வொரு அணிகளிலும் பல வெளிநாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிக்காக பாதியில் பெட்டியை கட்டி புறப்பட்டு விடுவார்கள். ஆனால் இந்த முறை பெரும்பாலான அணிகளுக்கு அந்த பிரச்சினையே கிடையாது. ஐ.பி.எல். காலத்தில் மே மாதம் 2–வது வாரத்தில் இலங்கை அணி மட்டும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. ஆனால் இவ்விரு அணிகளை சேர்ந்த வீரர்கள் ஒரு சிலர் மட்டுமே இந்த தடவை ஏலத்தில் எடுக்கப்பட்டதால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.

இனி ஒவ்வொரு அணிகள் பற்றிய ஓர் அலசல் வருமாறு:–

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ஐ.பி.எல்–ல் வெற்றிகரமான அணி என்ற பெருமைக்குரியது சென்னை சூப்பர் கிங்ஸ். 2 முறை கோப்பையை கைப்பற்றியதுடன், 3 முறை இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்டுள்ளது. ஐ.பி.எல். சூதாட்ட விவகாரத்தில் சென்னை அணி சிக்கியதால், அதன் பாதிப்பு களத்திலும் எதிரொலிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கவனத்தை சிதறடிக்ககூடிய வகையில் களத்திற்கு வெளியே பல விஷயங்கள் நடந்துள்ளதாக ஒப்புக் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் மேலும் கூறும் போது 'மைக் ஹஸ்சி இல்லாதது எங்களுக்கு இழப்பு தான் என்றாலும் அதிரடி காட்டக்கூடிய சில வீரர்களை வாங்கி இருக்கிறோம். கடந்த 6 ஆண்டுகளில் நாங்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளோம். இப்போது சென்னை சூப்பர் கிங்சை சக்திவாய்ந்த அணியாக உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்' என்றார்.

சர்ச்சைகள் ஒருபக்கம் வலம் வந்தாலும், ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் வாய்ப்பில் சென்னை அணிக்கே கிரிக்கெட் நிபுணர்கள் முதலிடத்தை வழங்கியுள்ளனர். எந்த நெருக்கடியான சூழலிலும் சாதுர்யமாக செயல்படக்கூடிய கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா, பிரன்டன் மெக்கல்லம், வெய்ன் சுமித், பாப் டு பிளிஸ்சிஸ், வெய்ன் பிராவோ உள்ளிட்டோர் பேட்டிங்கில் வெளுத்துக்கட்டக்கூடியவர்கள். இங்குள்ள ஆடுகளங்கள் பொதுவாக சுழற்பந்து வீச்சுக்கு உகந்தது என்பதால் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பத்ரீ தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதே போல் வேகப் வீச்சிலும் மொகித் ஷர்மா, ஈஸ்வர் பாண்டே, ஆஷிஸ் நெஹரா, ஹில்பனாஸ் போன்ற நல்ல பவுலர்கள் அங்கம் வகிப்பதால், இப்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் பலம் பொருந்திய அணியாகவே தென்படுகிறது. ஹஸ்சி–விஜய் கூட்டணி வேறு அணிக்கு தாவி விட்டதால், இந்த முறை சென்னை அணி புதிய தொடக்க ஆட்டக்காரர்களை அடையாளம் காண வேண்டி உள்ளது. சர்வதேச போட்டிக்காக பாதியில் ஓடி விடும் வீரர்கள் யாரும் சென்னை அணியில் இல்லை.

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்:

2009, 2011–ம் ஆண்டுகளில் இறுதி ஆட்டத்தில் தோற்று சாம்பியன் பட்டத்தை நழுவ விட்ட பெங்களூர் அணி, 'இந்த ஆண்டு எங்களுக்குரிய ஆண்டு, கோப்பை எங்களுக்கே' என்று சூளுரைத்துள்ளது. கிறிஸ் கெய்ல், கேப்டன் விராட் கோலி, டிவில்லியர்ஸ், யுவராஜ்சிங் ஆகிய 4 பேர் தான் பெங்களூர் அணியின் தூண்கள். 20 ஓவர் உலக கோப்பையில் கெய்லின் ஆட்டத்தில் அனல் பறக்காவிட்டாலும், ஐ.பி.எல். என்றால் அவருக்கு அல்வா மாதிரி. இதுவரை இங்கு 180 சிக்சர்கள் பறக்க விட்டுள்ளார். சமீபத்தில் 20 ஓவர் உலக கோப்பையில் 4 அரைசதத்துடன் 319 ரன்கள் குவித்த விராட் கோலியை, 'ரன் திரட்டும் எந்திரம்' என்று வர்ணிப்பதே சாலப்பொருத்தம். விதவிதமான ஷாட்டுகளை அடிப்பதில் கில்லாடியான டிவில்லியர்ஸ், சிறிது நேரம் என்றாலும் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தி விடுவார். ரூ.14 கோடிக்கு ஏலம் போன யுவராஜ்சிங் தான், ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு விற்கப்பட்டவர். 20 ஓவர் உலக கோப்பையில் 21 பந்துகளில் வெறும் 11 ரன் மட்டுமே எடுத்து ரசிகர்களை வெறுப்பேற்றி கடுமையான விமர்சனங்களை சந்தித்த அவர், ஐ.பி.எல்.–ல் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற வெறியுடன் உள்ளார். ஆனால் இந்த 4 பேரும் ஒரு சேர சொதப்பினால், அது தான் பெங்களூர் அணியின் பலவீனமாக பளிச்சிடும். மற்றபடி பந்து வீச்சில் அல்பி மோர்கல், மிட்செல் ஸ்டார்க், வருண் ஆரோன், அசோக் திண்டா, முரளிதரன், ரவி ராம்பால் என்று தரமானவர்கள் வரிந்து கட்டி நிற்கிறார்கள்.

மும்பை இந்தியன்ஸ்:

2013–ம் ஆண்டு முதல் முறையாக கோப்பையை ஏந்திய மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின் தெண்டுல்கர் ஓய்வு பெற்று விட்டாலும், அந்த அணியின் அடையாளமாக அவர் இருப்பார் என்று மும்பை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் அவர் ஏதாவது ஒரு வகையில் மும்பை அணியின் உந்துசக்தியாக தொடருவார். கால் முட்டி காயத்தில் இருந்து குணமடைந்த வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ஆல்–ரவுண்டர் கீரன் பொல்லார்ட் மும்பை அணிக்கு திரும்புவது அந்த அணிக்கு உற்சாகம் அளிக்கக்கூடியதாகும். தொடர்ந்து சீராக ரன் சேர்ப்பதில் வல்லவரான மைக் ஹஸ்சி, ஒரு நாள் கிரிக்கெட்டில் 36 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்த கோரி ஆண்டர்சன், 'யார்க்கர் மன்னன்' மலிங்கா ஆகியோர் மும்பை அணியின் முதுகெலும்பாக அழைக்கப்படுகிறார்கள். கேப்டன் ரோகித் ஷர்மாவுடன், அம்பத்தி ராயுடு, ஜாகீர்கான், ஹர்பஜன்சிங், பிரக்யான் ஓஜா, கிரிஷ்மர் சான்டோகி ஆகிய குறிப்பிடத்தக்க வீரர்களும் இருக்கிறார்கள். உள்ளூர் கிரிக்கெட்டில் கலக்கி வரும் விக்கெட் கீப்பர் சிதம்பரம் கவுதம், ஆதித்ய தாரே, ஜலஜ் சக்சேனா ஆகியோரும் மும்பை அணிக்கு கைகொடுக்கலாம்.

ஆனால் மே மாதம் தொடக்கத்தில் இலங்கை அணி இங்கிலாந்துக்கு செல்கிறது. இதனால் மலிங்கா பாதியில் ஓட வேண்டி இருக்கும். அதன் பிறகு தான் அவரது இடத்தில் யாரை நிரப்புவது என்ற தலைவலி மும்பை அணிக்கு ஏற்படும்.

டெல்லி டேர்டெவில்ஸ்:

கடந்த சீசனில் 13 தோல்விகளுடன் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட டெல்லி அணி 80, 83 ரன்களில் கூட சுருண்டது. இதனால் பழைய வீரர்களை கழற்றி விட்டு விட்டு முழுக்க முழுக்க புதிய அணியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் டெல்லி அணி நிர்வாகம் ஏலத்தின் போது எந்த வீரர்களையும் தக்க வைத்துக் கொள்ளவில்லை. ஷேவாக் கூட விடுவிக்கப்பட்டார். ஏலத்தில் ரூ.9 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் டெல்லி அணியின் கேப்டனாகியிருக்கிறார்.

இந்திய அணி 2011–ம் ஆண்டு உலக கோப்பையை வெல்வதிலும், டெஸ்டில் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதிலும் முக்கிய பங்கு வகித்த முன்னாள் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் இப்போது டெல்லி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருப்பது அவர்களுக்கு சாதகமான அம்சமாகும். ரூ.12½ கோடிக்கு ஏலம் போய் வாய் பிளக்க வைத்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், முரளிவிஜய், ராஸ் டெய்லர், டுமினி, சவுரப் திவாரி, மனோஜ் திவாரி, ரஞ்சி கிரிக்கெட்டில் இந்த சீசனில் அதிக ரன்கள் (11 ஆட்டம், 1,223 ரன்) குவித்தவரான கேதர் ஜாதவ் உள்ளிட்டோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் முகமது ஷமி, ஆல்–ரவுண்டர் நியூசிலாந்தை சேர்ந்த ஜிம்மி நீஷம், சுழற்பந்து வீச்சாளர்கள் ராகுல் ஷர்மா, ஷபாஸ் நதீம் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். இதுவரை இறுதி சுற்றை எட்டிபார்க்காத டெல்லி அணி அதிகபட்சமாக 2008, 2009–ம் ஆண்டு அரைஇறுதி வரையும், 2012–ம் ஆண்டு பிளே–ஆப் சுற்று வரையும் விளையாடியுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

2012–ம் ஆண்டு, முதல் முறையாக கோப்பையை ருசித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த ஆண்டு முதல் சுற்றுடன் நடையை கட்டியது. கேப்டன் கவுதம் கம்பீர், ராபின் உத்தப்பா, காலிஸ், முகமது யூசுப், மன்விந்தர் பிஸ்லாவை ஆகியோரைத் தான் அந்த அணி அதிகமாக நம்பி இருக்கிறது. அவர்களின் நடுவரிசை வழக்கம் போல் சற்று பலவீனமாகவே காணப்படுகிறது. ஆல்–ரவுண்டர் ஷகிப் அல்–ஹசனை முழுமையாக பயன்படுத்தினால், அந்த குறையை போக்கலாம். பந்து வீச்சில் கட்டுக்கோப்புடன் சுழற்பந்து வீசுவதில் கெட்டிக்காரரான சுனில் நரின் மற்றும் வினய்குமார், மோர்னே மோர்கல், உமேஷ் யாதவ், பேட் கம்மின்ஸ், பியுஷ் சாவ்லா ஆகியோர் மிரட்ட காத்திருக்கிறார்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ஆரம்பத்தில் குறைத்து மதிப்பிடப்பட்டு, பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் எழுச்சி பெறும் ஒரு அணி ராஜஸ்தான் ராயல்ஸ். கிரிக்கெட்டில் இருந்து டிராவிட் விடைபெற்று விட்டதால் அவருக்கு பதிலாக ஆல்–ரவுண்டர் ஷேன் வாட்சன் இந்த முறை ராஜஸ்தான் அணியை வழிநடத்துகிறார். ரஹானே, சஞ்சு சாம்சன், உன்முக் சந்த், ஸ்டீவன் சுமித், ஆல்–ரவுண்டர்கள் ஸ்டூவர்ட் பின்னி, பிராட் ஹாட்ஜ், ஜேம்ஸ் பவுல்க்னெர், 42 வயதான சுழற்பந்து வீச்சாளர் பிரவின் தாம்பே, டிம் சவுதி, கெவோன் கூப்பர் என்று திறமையான வீரர்களுக்கு இவ்வணியில் பஞ்சமில்லை. ஒருங்கிணைந்து விளையாடுவதை பொறுத்தே இவர்களின் வெற்றி வாய்ப்பு அமையும். 2008–ம் ஆண்டு முதலாவது ஐ.பி.எல். கோப்பையை ராஜஸ்தான் அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

ஐதராபாத் சன் ரைசர்ஸ்:

அறிமுகமான முதல் ஆண்டிலேயே 'பிளே–ஆப்' சுற்று வரை முன்னேறி பிரமிக்க வைத்த அணி சன் ரைசர்ஸ். பவுலர்களை நையபுடைத்து நொறுக்கக்கூடிய கேப்டன் ஷிகர் தவான், ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் ஆகியோரையே ஐதராபாத் அணி பேட்டிங்கில் மலைபோல் சார்ந்து இருக்கிறது. நெருக்கடியான நேரத்தில் அணியை கரை சேர்ப்பதில் கைதேர்ந்தவரான டேரன் சேமி, மிடில் வரிசையில் இருப்பது பலம். இதே போல் அமித் மிஸ்ரா, இஷாந்த் ஷர்மா, பர்வேஸ் ரசூல், இர்பான் பதான், புவனேஷ்வர்குமார், ஆல்–ரவுண்டர் கரண் ஷர்மா போன்ற இந்தியாவை சேர்ந்த சிறந்த பவுலர்கள் இருப்பது இந்த அணிக்கு இன்னொரு பிளஸ் பாயிண்டாகும். அது மட்டுமின்றி உலகின் அபாயகரமான பவுலரான தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த ஸ்டெயினையும் அந்த அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த முறையும் ஐதராபாத் அணி பல அதிர்ச்சி நிகழ்வுகளை பதிவு செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

முதலாவது ஐ.பி.எல்.–ல் அரைஇறுதி வரை வந்ததோடு சரி. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டுகளிலும் பஞ்சாப் அணி முதல் சுற்றையே கடந்ததில்லை. இந்த முறை அந்த நிலைமையை மாற்றுவதற்கு தான் பெரும் நட்சத்திர பட்டாளத்தையே அந்த அணி ஒன்றிணைத்து இருக்கிறது. டெல்லி அணி கழற்றி விட்ட அதிரடி பேட்ஸ்மேன் ஷேவாக், பஞ்சாப் அணிக்கு வந்திருக்கிறார். இழந்த பார்மை மீட்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பேன் என்று ஷேவாக் நெத்தியடியாக கூறி வருகிறார். இது தவிர ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேப்டன் ஜார்ஜ் பெய்லி, கிளைன் மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், ஷான் மார்ஷ், திசரா பெரேரா, புஜாரா, மனன் வோரா ஆகியோர் பேட்டிங்கிலும், 'ஆஷஸ் ஹீரோ' மிட்செல் ஜான்சன், எல்.பாலாஜி, ரிஷி தவான், முரளிகார்த்திக், பர்விந்தர் அவனா உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் மிரட்ட தயாராக நிற்கிறார்கள். இந்த அணியில் இலங்கையை சேர்ந்த திசரா பெரேராவினால் மட்டும் முழுமையாக பங்கேற்க முடியாது.

category:

மீண்டும் வருகிறார், நீச்சல் மன்னன் பெல்ப்ஸ்

Posted: 15 Apr 2014 01:13 PM PDT

நியூயார்க்,

அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ். ஒலிம்பிக் விளையாட்டில் நீச்சலில் 18 தங்கம் உள்பட 22 பதக்கங்கள் வென்று உலக சாதனை படைத்தவர். 2012–ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்குடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு 28 வயதான மைக்கேல் பெல்ப்ஸ் தனது ஓய்வு முடிவில் இருந்து விடுபட்டுள்ளார். மீண்டும் நீச்சல் போட்டியில் அவர் பங்கேற்க இருப்பதாக அவரது நீண்ட கால பயிற்சியாளர் பாப் பவ்மேன் அறிவித்து இருக்கிறார். அமெரிக்காவின் மெசா நகரில் வருகிற 24–ந்தேதி முதல் 26–ந்தேதி வரை நடக்கும் நீச்சல் போட்டியில் அவர் 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் பிரீஸ்டைல், 100 மீட்டர் பட்டர்பிளை ஆகிய பிரிவுகளில் களம் இறங்குகிறார். இது 2016–ம் ஆண்டு ரியோடி ஜெனீரோ ஒலிம்பிக்கில் அவர் பங்கேற்பதற்கான முதல் படிக்கட்டாக கருதப்படுகிறது. 'நீச்சலில் தனது திறமையை அவர் பரிசோதிக்கிறார் என்று நினைக்கிறேன். இதில் அவரது செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். இதன் மூலம் மீண்டும் நீச்சல் வீரராக போட்டிகளில் அவர் தொடர்ந்து பங்கேற்பாரா? என்பதை என்னால் சொல்ல முடியாது' என்றும் பாப் பவ்மேன் தெரிவித்தார்.

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™