Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் சாலை மறியல் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அறிவிப்பு

Posted: 24 Mar 2014 02:14 PM PDT

கடலூர்,

பண்ருட்டி அருகே எஸ். ஏரிப்பாளையத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கக்கோரி கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர். மேலும் அவர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அறிவித்தனர்.

அடிப்படை வசதிகள் இல்லை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா சேமக்கோட்டை அருகே எஸ். ஏரிப்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வன்னியர், ஆதிதிராவிடர், குயவர், செட்டியார் உள்பட பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 500 பேர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் எஸ். ஏரிப்பாளையத்தில் உள்ள ஒரு பகுதி சிறுவத்தூர் ஊராட்சியிலும், மற்றொரு பகுதி சேமக்கோட்டை ஊராட்சி பகுதியிலும் இருந்து வருகிறது. இதன் காரணமாக நிர்வாக ரீதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் தங்களுக்கு கிடைப்பதில்லை என்று நீண்ட காலமாக இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

தனி ஊராட்சியாக பிரிக்க வேண்டும்

இது தவிர குடும்ப அட்டையில் ஏரிப்பாளையம் என்ற பெயரே குறிப்பிடப்படவில்லை. இது போன்ற பல்வேறு நிர்வாக சிக்கலால் அரசின் நலத்திட்ட உதவிகள் எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். இதனால் ஏரிப்பாளையம் கிராமத்தை தனி ஊராட்சியாக பிரித்து தர வேண்டும் என்று கடந்த 2011 சட்டசபை தேர்தலின் போதே மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ஆனால் இந்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று உள்துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு மனு அனுப்பினார்கள். ஆனால் இதுவரை அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

முற்றுகை- சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த எஸ். ஏரிப்பாளையம் கிராம மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அதையடுத்து அவர்கள் அனைவரும் கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக ஊர்வலமாக வந்தனர். இது பற்றி தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஊர்வலமாக சென்ற பொதுமக்களை தடுத்து நிறுத்தி, குறைகளை கேட்டதுடன், அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர்.

ஆனால் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி, ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இருப்பினும் முற்றுகையிட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் அதை கேட்காமல், திடீரென கலெக்டர் அலுவலக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தேர்தல் புறக்கணிப்பு

அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். சிலர் தனி ஊராட்சியாக மாற்றாவிட்டால் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று கூறினர். இதற்கிடையில் தகவல் அறிந்த தாசில்தார் செழியன் சம்பவ இடத்துக்கு விரைந்து, முக்கிய நிர்வாகிகள் 5 பேர் மட்டும் கலெக்டரை சந்தித்து மனு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி முக்கிய நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவித்ததுடன், மனுவாகவும் கொடுத்தனர். மனுவை பெற்ற கலெக்டர் கிர்லோஷ்குமார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அப்போது, பொது மக்கள் தேர்தலுக்கு முன்பாக எங்கள் கோரிக்கை ஏற்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்று கூறிவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை பனகல் கட்டிடம்

Posted: 24 Mar 2014 02:10 PM PDT

தஞ்சை  பனகல் கட்டிடம் முன்பு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பொது மக்களிடம் திறந்த வேனில் நின்றபடி வாக்குகள் சேகரித்த போது எடுத்த படம்.

4

சமண மதத்துறவிகள்

Posted: 24 Mar 2014 01:48 PM PDT

சமண மதத்துறவிகள் மதுரை வந்தனர். அவர்களை சமணமதத்தினர் வரவேற்று மதுரையில் உள்ள சமண மத ஆலயங்களுக்கு ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

10

தி.மு.க. வேட்பாளர்

Posted: 24 Mar 2014 01:35 PM PDT

விழுப்புரத்தில் தி.மு.க. வேட்பாளர் முத்தையனை ஆதரித்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசிய போது எடுத்த படம்.

3

17 நாட்களாக நீடித்த மர்மம் விலகியது: 239 பேருடன் மாயமான மலேசிய விமானம் கடலில் விழுந்து மூழ்கியது உறுதியானது; மலேசிய பிரதமர் அதிகாரபூர்வ அறிவிப்பு

Posted: 24 Mar 2014 01:33 PM PDT

கோலாலம்பூர்,

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் புறப்பட்ட விமானம், கடந்த 8–ந் தேதி அதிகாலையில் திடீரென்று மாயமானது.

17 நாட்களுக்குப் பிறகு

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த போயிங் ரக விமானத்தில், சென்னையை சேர்ந்த சந்திரிகா சர்மா உள்ளிட்ட 5 இந்தியர்களுடன் மொத்தம் 239 பேர் பயணம் செய்தனர். தெற்கு சீனா கடலுக்கு மேலே பறந்து கொண்டு இருந்தபோது, அந்த விமானத்துடனான தொடர்புகள் முழுமையாக துண்டிக்கப்பட்டது.

மாயமான அந்த விமானத்தை தேடும் பணியில் இந்தியா உள்பட 26 நாடுகளின் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. இருப்பினும் விமானம் குறித்த மர்மம் தொடர்ந்து நீடித்து வந்தது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா அருகே விமானத்தின் சிதறிய பாகங்கள் மிதப்பதாக, நேற்று முன்தினம் தகவல் வெளியானது.

அதைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு போர்க்கப்பல்கள் விரைந்தன. இதற்கிடையில், இங்கிலாந்து செயற்கைகோள் நிறுவனம் மற்றும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு அளித்த தகவலின் அடிப்படையில், 17 நாட்களுக்கு பிறகு அந்த விமானம் குறித்து நேற்று உறுதியான தகவல் கிடைத்தது.

கடலில் விழுந்து மூழ்கியது

அதன்படி, இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து ஏறத்தாழ 2500 கிலோமீட்டர் தூரத்தில் அந்த விமானம் கடலுக்குள் நொறுங்கி விழுந்து மூழ்கியது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற பத்திரிகையாளர்களின் சிறப்பு கூட்டத்தில் பேசிய அவர், ஆழ்ந்த துயரத்துடன் இந்த தகவலை அறிவிப்பதாக குறிப்பிட்டார். ''இன்மர்சாட் என்ற இங்கிலாந்து செயற்கை கோள் நிறுவனம் அளித்த தகவலின்படி கடைசியாக அந்த விமானம் தெற்கு இந்திய பெருங்கடலின் மத்திய பகுதிக்கு மேல் பறந்தபோது கடலுக்குள் விழுந்திருக்கும் என்ற முடிவுக்கு வந்து இருப்பதாக'' அவர் தெரிவித்தார்.

குடும்பத்தினர் மன உணர்வு

அவர் மேலும் கூறும்போது, ''அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏறத்தாழ 8 மணி நேரம் ஆகாயத்தில் பறந்த அந்த விமானம் அதன் பிறகு கடலில் விழுந்து மூழ்கி உள்ளது. விமானங்கள் இறங்கும் வசதி உள்ள இடங்களுக்கு வெகு தொலைவான இடத்தில் விமானம் விழுந்து இருக்கிறது'' என்றும் அவர் தெரிவித்தார்.

மேற்கொண்டு விவரங்கள் எதையும் தெரிவிக்க மறுத்த அவர், விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினரின் மன உணர்வுகளை மதித்து நடந்து கொள்ளும்படி செய்தியாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். கடந்த சில வாரங்களாக மனம் உடைந்த நிலையில் உள்ள அவர்களுக்கு இந்த தகவல் மேலும் மோசமானதாக அமையும் என்றும் ரசாக் குறிப்பிட்டார்.

மிகவும் சோகமாக காணப்பட்ட பிரதமர் ரசாக், செவ்வாய்க்கிழமை (இன்று) மீண்டும் செய்தியாளர்களை சந்திப்பதாக கூறி, தனது பேட்டியை முடித்துக் கொண்டார். இதனால், இன்றைய பேட்டியின்போது அவர் மேலும் சில விவரங்களை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமானத்தில் இருந்து 'சிக்னல்'கள்

கடலுக்குள் விழுந்த அந்த விமானத்தில் இருந்து தொடர்ந்து சமிக்ஞைகள் (சிக்னல்) வந்து கொண்டு இருப்பதால் அதன் தகவல் தொடர்பு கருவிகளில் ஒன்று செயல்பட்டு வருவதாக, இங்கிலாந்தின் இன்மர்சாட் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

அது குறித்து அந்த நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, எந்த நேரங்களில், எத்தனை தகவல்கள் அதுபோல் வந்தன என்பதை தெரிவிக்க மறுத்து விட்டனர். அனைத்து விவரங்களையும் உலகம் முழுவதிலும் உள்ள புலனாய்வு பிரிவுகளுக்கு வழங்கி இருப்பதாகவும், அதன் அடிப்படையில் விமானம் விழுந்த இடத்தை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

குடும்பத்தினர் கதறல்

மலேசிய பிரதமர் ரசாக் பேட்டி அளிப்பதற்கு முன்பாக, விமான நிறுவனம் சார்பில் அதில் பயணம் செய்த அனைவருடைய குடும்பத்தினருக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அதில், ''விமானத்தில் இருந்தவர்கள் ஒருவர் கூட உயிர் பிழைக்கும் வாய்ப்பு இல்லை என்பது சந்தேகத்துக்கு இடமின்றி தெரிய வந்திருப்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிப்பதாக'' குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த தகவல் அறிய வந்ததும் பீஜிங்கை சேர்ந்த பல பயணிகளின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

மலேசிய விமானம் மாயமான நாளில் இருந்து அந்த விமானம் என்ன ஆனது? தீவிரவாதிகள் அதை கடத்தி இருக்கலாமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தகவல்கள் வெளியாகி வந்தன. அவற்றில் எதையுமே உறுதி செய்ய முடியாத நிலை இருந்தது. தற்போது இங்கிலாந்து செயற்கை கோள் நிறுவனம் அளித்த தகவலின்படி மாயமான விமானம் குறித்த மர்மம் விலகி உள்ளது. ஆனால், எதனால்–எப்படி அந்த விமானத்துக்கு இந்த கதி ஏற்பட்டது? என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

நெதர்லாந்தை 39 ரன்னில் எளிதில் சுருட்டி வீசியது இலங்கை அணிக்கு 2–வது வெற்றி

Posted: 24 Mar 2014 01:19 PM PDT

சிட்டகாங்,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் இலங்கை அணி, நெதர்லாந்து அணியை 39 ரன்னில் எளிதில் சுருட்டி 2–வது வெற்றியை ருசித்தது.

சூப்பர்–10 சுற்று

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்றிரவு சிட்டகாங்கில் நடந்த (குரூப்1) லீக் ஆட்டம் ஒன்றில் வலுவான இலங்கை அணி, தகுதி சுற்றின் மூலம் முன்னேறிய நெதர்லாந்து அணியை சந்தித்தது.

'டாஸ்' ஜெயித்த இலங்கை அணி கேப்டன் தினேஷ் சன்டிமால், நெதர்லாந்து அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக மைபர்க், ஸ்வார்ட் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் ரன் கணக்கை தொடங்காமல் ஆட்டம் இழந்தனர்.

39 ரன்னில் சுருண்டு மோசமான சாதனை

அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 19 சிக்சர்கள் அடித்து உலக சாதனை படைத்த நெதர்லாந்து அணியினர், இந்த ஆட்டத்தில் இலங்கை அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வந்தவேகத்தில் ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள். டாம் கூபர் (16 ரன்) மட்டுமே இரட்டை இலக்க ரன்னை எட்டினார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினார்கள். இதில் 5 பேர் டக்–அவுட் ஆனதும் அடங்கும்.

நெதர்லாந்து அணி 10.3 ஓவர்களில் 39 ரன்னில் சுருண்டது. இது சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஒரு அணி எடுத்த மிகவும் குறைந்தபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு 2013–ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கென்யா 56 ரன்னில் ஆல்–அவுட் ஆனதே குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது. 20 ஓவர் உலக கோப்பை வரலாற்றில் 2010–ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அயர்லாந்து எடுத்த 68 ரன்களே குறைந்தபட்சமாக இருந்தது. இலங்கை அணி தரப்பில் அஜந்தா மென்டிஸ், மேத்யூஸ் தலா 3 விக்கெட்டும், மலிங்கா 2 விக்கெட்டும், குலசேகரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இலங்கை எளிதில் வெற்றி

பின்னர் 40 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் குசல் பெரேரா 14 ரன்னில் ஆட்டம் இழந்தார். இலங்கை அணி 5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றியை ருசித்தது. தில்ஷன் 12 ரன்னுடனும், மஹேலா ஜெயவர்த்தனே 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை வீரர் மேத்யூஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இலங்கை அணி பெற்ற 2–வது வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை சாய்த்து இருந்தது. நெதர்லாந்து அணி சூப்பர்10 சுற்றில் தனது முதல் ஆட்டத்திலேயே படுதோல்வியை சந்தித்துள்ளது.

--–

அணிகளின் குறைந்தபட்ச ஸ்கோர்

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அணிகளின் முதல் ஐந்து குறைந்தபட்ச ஸ்கோர்கள் வருமாறு:–

அணி ஸ்கோர் எதிரணி ஆண்டு

நெதர்லாந்து 39 இலங்கை 2014

கென்யா 56 ஆப்கானிஸ்தான் 2013

கென்யா 67 அயர்லாந்து 2008

அயர்லாந்து 68 வெஸ்ட் இண்டீஸ் 2010

ஹாங்காங் 69 நேபாளம் 2014

category:

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தென் ஆப்பிரிக்க அணி ‘திரில்’ வெற்றி 2 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது

Posted: 24 Mar 2014 01:19 PM PDT

சிட்டகாங்,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.

20 ஓவர் கிரிக்கெட்

5–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் தற்போது சூப்பர்–10 சுற்று நடக்கிறது. சூப்பர்–10 சுற்றில் ஆடும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப்1–ல் தென்ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகளும், குரூப்2–ல் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேச அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

இந்த நிலையில் சிட்டகாங்கில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தென் ஆப்பிரிக்கா–நியூசிலாந்து (குரூப்–1) அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டுபிளிஸ்சிஸ்

தசைப்பிடிப்பு காரணமாக முதல் ஆட்டத்தில் விளையாடாத தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுபிளிஸ்சில் இந்த ஆட்டத்தில் களம் திரும்பினார். 'டாஸ்' ஜெயித்த நியூசிலாந்து அணி கேப்டன் பிரன்டன் மெக்கல்லம், தென் ஆப்பிரிக்க அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டீ காக், ஹாசிம் அம்லா ஆகியோர் களம் இறங்கினார்கள்.

தொடக்க ஆட்டக்காரர் டீ காக் 4 ரன்னிலும், அடுத்து களம் கண்ட கேப்டன் டுபிளிஸ்சிஸ் 13 ரன்னிலும், டிவில்லியர்ஸ் 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

டுமினி அதிரடி

4–வது விக்கெட்டுக்கு அம்லாவுடன், ஜோடி சேர்ந்த டுமினி அதிரடி காட்டினார். அவரது அசுர வேக ஆட்டத்தில் அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. நிலைத்து நின்று ஆடிய ஹசிம் அம்லா 40 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 41 ரன் எடுத்த நிலையில் கோரி ஆண்டர்சன் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அதன் பின்னர் வந்த வீரர்கள் மில்லர் (6 ரன்), அல்பி மோர்கல் (13 ரன்) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்கள். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. டுமினி 43 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 86 ரன்னும், ஸ்டெயின் ஒரு பந்தில் 1 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

171 ரன்கள் இலக்கு

கடைசி 5 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 70 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சவுதி, கோரி ஆண்டர்சன் தலா 2 விக்கெட்டும், மில்ஸ், நாதன் மெக்கல்லம் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ட்டின் கப்தில், கனே வில்லியம்சன் ஆகியோர் களம் கண்டனர். இருவரும் அடித்து ஆடினார்கள். 5–வது ஓவரில் வில்லியம்சன் 2 பவுண்டரியும், ஒரு சிக்சருடன் விரட்டினார். 6–வது ஓவரில் மார்ட்டின் கப்தில் 3 பவுண்டரிகள் விளாசினார்.

டெய்லர் அசத்தல்

அணியின் ஸ்கோர் 7.1 ஓவர்களில் 57 ரன்னாக இருந்த போது மார்ட்டின் கப்தில் 22 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து களம் கண்ட கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் 4 ரன்னில் அவுட் ஆனார்.

அடுத்து களம் கண்ட ராஸ் டெய்லர், தென் ஆப்பிரிக்க அணியின் அபார பந்து வீச்சை அசத்தலாக அடித்து ஆடினார். மோர்னே மோர்கல் வீசிய 12–வது ஓவரில் ராஸ் டெய்லர் தொடர்ந்து 3 சிக்சர்கள் தூக்கி ரசிகர்களை குஷிப்படுத்தினார். சிறப்பாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர் கனே வில்லியம்சன் 35 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 51 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

முட்டுக்கட்டை போட்ட ஸ்டெயின்

15 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 133 ரன்னை தொட்ட நியூசிலாந்து அணி அதன் பின்னர் அந்த உத்வேகத்தை தொடர முடியாத அளவுக்கு, தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர், ஸ்டெயின் ஆகியோர் தங்களது அபார பந்து வீச்சின் மூலம் முட்டுக்கட்டை போட்டதுடன், விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

கடைசி ஓவரில் நியூசிலாந்து அணி வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. அந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் வீசினார். முதல் பந்தில் லுக் ரோஞ்ச் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த 2 பந்துகளை ரன் எடுக்காமல் வீணடித்த நாதன் மெக்கல்லம் 4–வது பந்தில் பவுண்டரி அடித்தார். 5–வது பந்தில் நாதன் மெக்கல்லம் அவுட் ஆனார்.

தென் ஆப்பிரிக்கா வெற்றி

இதனால் கடைசி பந்தில் நியூசிலாந்து வெற்றிக்கு 3 ரன் தேவையாக இருந்தது. கடைசி பந்தில் ராஸ் டெய்லர் ரன்–அவுட் ஆனார். எனவே நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. 'திரில்'லான இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 37 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஸ்டெயின் 4 விக்கெட்டும், இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டும், அல்பி மோர்கல் ஒரு விக்கெட்டும் சாய்த்தனர். தென் ஆப்பிரிக்க வீரர் டுமினி ஆட்டநாயகன் விருது பெற்றார். நியூசிலாந்து அணி கடைசி 5 ஓவர்களில் 35 ரன்களை மட்டுமே எடுத்ததுடன் 5 விக்கெட்டுகளையும் இழந்தது.

முதல் வெற்றி

தென் ஆப்பிரிக்க அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் 5 ரன் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வி கண்டு இருந்தது. முதலாவது ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 9 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்று இருந்த நியூசிலாந்து அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

ஸ்கோர்போர்டு தென் ஆப்பிரிக்கா

டீ காக் (சி) ரோஞ்ச் (பி) மில்ஸ் 4

ஹசிம் அம்லா (சி)அண்ட் (பி) ஆண்டர்சன் 41

டுபிளிஸ்சிஸ் (சி) நாதன் மெக்கல்லம் (பி) டிம்சவுதி 13

டிவில்லியர்ஸ் (பி) நாதன்மெக்கல்லம் 5

டுமினி (நாட்–அவுட்) 86

மில்லர் (சி) அண்ட் (பி) ஆண்டர்சன் 6

அல்பி மோர்கல் (பி) டிம்சவுதி 13

ஸ்டெயின் (நாட்–அவுட்) 1

எக்ஸ்டிரா 1

மொத்தம் (20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு) 170

விக்கெட் வீழ்ச்சி:

1–16, 2–32, 3–42, 4–97, 5–131, 6–159.

பந்து வீச்சு விவரம்:

மில்ஸ் 4–0–29–1

மெக்லகன் 4–0–30–0

டிம்சவுதி 4–0–46–2

நாதன்மெக்கல்லம் 4–0–24–1

ஆண்டர்சன் 3–0–28–2

வில்லியம்சன் 1–0–13–0

நியூசிலாந்து

மார்ட்டின் கப்தில் (சி) டீ காக் (பி) அல்பிமோர்கல் 22

வில்லியம்சன் (சி) டிவில்லியர்ஸ் (பி) ஸ்டெயின் 51

பிரன்டன் மெக்கல்லம் (ஸ்டம்பிங்) டீ காக் (பி) இம்ரான் தாஹிர் 4

ராஸ் டெய்லர் (ரன்–அவுட்) 62

காலின் முன்ரோ (சி) அம்லா (பி) இம்ரான் தாஹிர் 7

ஆண்டர்சன் (சி) மில்லர் (பி) ஸ்டெயின் 7

லுக் ரோஞ்ச் (சி) டீ காக் (பி) ஸ்டெயின் 5

நாதன் மெக்கல்லம் (சி) டுபிளிஸ்சிஸ் (பி) ஸ்டெயின் 4

டிம் சவுதி (நாட்–அவுட்) 0

எக்ஸ்டிரா 6

மொத்தம் (20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு) 168

விக்கெட் வீழ்ச்சி:

1–57, 2–66, 3–117, 4–140, 5–148, 6–164, 7–168, 8–168.

பந்து வீச்சு விவரம்:

டுமினி 3–0–30–0

சோட்சோப் 4–0–29–0

ஸ்டெயின் 4–0–17–4

மோர்னேமோர்கல் 3–0–50–0

அல்பிமோர்கல் 2–0–13–1

இம்ரான் தாஹிர் 4–0–27–2

category:

20 ஓவர் உலக கோப்பையில் இன்றைய ஆட்டம்

Posted: 24 Mar 2014 01:19 PM PDT

வெஸ்ட் இண்டீஸ்–வங்காளதேசம் (குரூப்2)

இடம்: மிர்புர்

நேரம்: இரவு 7 மணி

தர வரிசை 6/ 10

கேப்டன்கள்: டேரன் சேமி/ முஷ்பிகுர் ரஹிம்

நட்சத்திர வீரர்கள்: கெய்ல், வெய்ன் பிராவோ, சுனில்நரின், சாமுவேல்ஸ், வெய்ன்சுமித்/தமிம் இக்பால், ஷகிப் அல்–ஹசன், அனமுல் ஹக், அப்துர் ரசாக், மக்முதுல்லா.

இதுவரை நேருக்கு நேர்: 4 வெற்றி 2, வெற்றி 2

நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வி கண்டது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறவிட்டால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அடுத்த கட்ட வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும் என்பதால் அந்த அணி, வங்காளதேசத்தை மிகவும் கவனத்துடன் எதிர்கொள்ளும். வங்காளதேச அணியின் ஆட்டத்தை எளிதில் கணித்து கூறிவிடமுடியாது. ஒருநாள் அபாரமாக விளையாடும் அந்த அணி மற்றொரு நாளில் மட்டமாகவும் செயல்படும். தகுதி சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளத்தை தோற்கடித்த வங்காளதேச அணி, குட்டி அணியான ஹாங்காங்கிடம் தோல்வி கண்டு ரன் விகிதாச்சார அடிப்படையில் தான் 'சூப்பர்–10' சுற்றுக்குள் நுழைந்தது. சுழலுக்கு சாதகமான இந்த மைதானத்தில் வங்காளதேச வீரர்களின் சுழற்பந்து வீச்சை, வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ளும் ஆற்றலை பொறுத்தே அணியின் வெற்றி அமையும் என்று கருதப்படுகிறது. வங்காளதேச அணியில் ருபெல் ஹூசைன், மோர்தசா ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வருவது அந்த அணிக்கு பின்னடைவாக இருக்கிறது. இன்றைய ஆட்டம் குறித்து வங்காளதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் கூறுகையில், 'சர்வதேச 20 ஓவர் போட்டியில் நாங்கள் இரண்டு முறை வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இருக்கிறோம். அது மீண்டும் நடக்காது என்பதற்கு எந்தவித காரணமும் இல்லை. ஹாங்காங்குக்கு எதிரான ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு எங்களுக்கு அதிர்ச்சி அளித்தாலும், இந்த போட்டியில் இது புதிய நிலை. மற்ற அணிகளை போல் எங்களுக்கு நெருக்கடி எதுவும் கிடையாது. மோர்தசா 10 சதவீதம் உடல் தகுதி பெற்றால் கூட இந்த ஆட்டத்தில் களம் இறங்குவார்' என்று தெரிவித்தார்.

category:

வங்கி சேவையில் குளறுபடி: இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகாவுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு சென்னை நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவு

Posted: 24 Mar 2014 01:19 PM PDT

சென்னை,

வங்கி சேவையில் நேர்ந்த குளறுபடிக்காக இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பலிக்கலுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வங்கி நிர்வாகத்துக்கு, சென்னை நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

வங்கி சேவையில் குளறுபடி

இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்குவாஷ் வீராங்கனையான சென்னையை சேர்ந்த தீபிகா பலிக்கல் உலக தர வரிசையில் 11–வது இடத்தில் இருந்து வருகிறார். அர்ஜூனா மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள தீபிகா பலிக்கல் கடந்த 2012–ம் ஆண்டில் நெதர்லாந்து நாட்டில் உள்ள ரோட்டர்டாமில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு அதற்கான பில் தொகையை (ரூ.5 ஆயிரம்) செலுத்துவதற்காக தான் கணக்கு வைத்து இருக்கும் ஆக்ஸிஸ் வங்கியின் டெபிட் கார்டை பயன்படுத்தினார்.

ஆனால் கார்டை 'ஸ்விப்' செய்கையில் தீபிகா பலிக்கலின் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லை என்று தகவல் கிடைத்தது. ஆனால் பில் தொகையை விட 10 மடங்கு அதிகமான தொகை அவரது வங்கி கணக்கில் இருப்பில் இருந்தது. இதேபோல் அதற்கு அடுத்த மாதத்தில் மத்திய விளையாட்டு அமைச்சகம் அளித்த ரூ.1 லட்சத்துக்கான செக்கை தீபிகா பலிக்கல் தனது கணக்கில் டெபாசிட் செய்தார். அதனையும் அந்த வங்கி ரிட்டர்ன் செய்தது. இதற்கான காரணம் என்ன? என்று தீபிகா பலிக்கல் விளக்கம் கேட்டதற்கு, 'இது டெக்னிக்கல் பிரச்சினை. தங்கள் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட விவகாரம் இல்லை' என்று வங்கி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரூ.5 லட்சம் இழப்பீடு

இதனால் அதிருப்தி அடைந்த தீபிகா பலிக்கல், வங்கி சேவையில் தனக்கு நேர்ந்த குளறுபடியால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு தர வங்கிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி தென் சென்னை மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயத்தின் தலைவர் ஜெயபாலன், உறுப்பினர்கள் தீனதயாளன், அமலா ஆகியோர் நேற்று தீர்ப்பளித்தனர். அந்த தீர்ப்பில் 'தீபிகா பலிக்கலுக்கு இழப்பீடாக ரூ. 5 லட்சத்தையும், வழக்கு செலவு தொகையாக ரூ.5 ஆயிரத்தையும் வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.

தீர்ப்பு குறித்து தீபிகா பலிக்கல் சார்பில் ஆஜரான வக்கீல் சஞ்சய் பின்டோ கருத்து தெரிவிக்கையில், 'இது இந்திய நுகர்வோருக்கு கிடைத்த வெற்றியாகும். நுகர்வோர் தீர்ப்பாயம் மீதான நம்பிக்கையை இது உறுதிசெய்வதாகும். சேவை குளறுபடியால் பாதிக்கப்படும் நுகர்வோர்கள் நீதிக்காக போராட இந்த தீர்ப்பு உத்வேகம் அளிக்கும்' என்றார்.

category:

மியாமி ஓபன் டென்னிஸ் பெடரர், லீ நா 4–வது சுற்றுக்கு தகுதி

Posted: 24 Mar 2014 01:18 PM PDT

மியாமி,

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் 3–வது சுற்றில் சுவிட்சர்லாந்து வீரர் பெடரர், சீன வீராங்கனை லீ நா ஆகியோர் வெற்றி பெற்று 4–வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

4–வது சுற்றில் பெடரர்

அமெரிக்காவின் மியாமி நகரில் சோனி ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டம் ஒன்றில் 5–ம் நிலை வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6–3, 6–3 என்ற நேர்செட்டில் டீ பாக்கரை (நெதர்லாந்து) தோற்கடித்து 4–வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 6–4, 6–1 என்ற நேர்செட்டில் பெலிசியானோ லோபெஸ்சை (ஸ்பெயின்) விரட்டி 4–வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் 4–ம் நிலை வீரர் டேவிட் பெரர் (ஸ்பெயின்) 6–3, 6–2 என்ற நேர்செட்டில் ஆந்த்ரே செபியை (இத்தாலி) எளிதில் தோற்கடித்து 4–வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

ரோகன் போபண்ணா ஜோடி தோல்வி

உலக தர வரிசையில் 2–வது இடத்தில் இருக்கும் நோவக் ஜோகோவிச்சை (செர்பியா) எதிர்த்து ஆட வேண்டிய புளோரியன் மேயர் (ஜெர்மனி) காயம் காரணமாக விலகியதால் விளையாடாமலே ஜோகோவிச் வெற்றி கண்டு 4–வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் நிஷிகோரி (ஜப்பான்), டாமி ராப்ரெடோ (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி கண்டு 4–வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ரோகன் போபண்ணா (இந்தியா)–குரேஷி (பாகிஸ்தான்) ஜோடி 2–6, 4–6 என்ற நேர்செட்டில் கொலம்பியாவின் ஜூயன் காபல்–ராபர்ட் பாராக் ஜோடியிடம் தோல்வி கண்டு வெளியேறியது.

வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2–ம் நிலை வீராங்கனை சீனாவின் லீ நா 7–6 (7–3), 6–3 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் மாடிசன் கெய்யை விரட்டி 4–வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற ஆட்டங்களில் வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), சிபுல்கோவா (சுலோவக்கியா), அக்னிஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து), எலினா சிடோலினா (உக்ரைன்) வர்வரா லெப்சென்கோ (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்று 4–வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™